இன்குலாப் முதலாம் ஆண்டு நினைவு நாளை இன்குலாப் அறக்கட்டளை சார்பில் இன்குலாப் கவிதைகள், கட்டுரைகள், நாடகங்களை ஆய்வு செய்து பரப்பும் நாளாக சென்னையில் சிறப்புடன் நடத்தியது.

சங்க இலக்கியங்களை கட்டுடைத்து அதில் அடங்கியுள்ள பெண் விடுதலைக் கருத்துகளை நாடகங்களாக கவிஞர் இன்குலாப் எழுதினார். அதில் ஒன்று அவ்வை நாடகம். சங்க இலக்கியங் களில் அவ்வை என்ற பெயரில் பல பெண் புலவர்கள் இருந்தாலும், வயது முதிர்ந்த தோற்றத்தில் அவ்வையார் என்ற ஒருவரை மட்டுமே முன் நிறுத்தியது இலக்கிய உலகம். ஆணாதிக்கத்தை நியாயப் படுத்தும் அந்த அவ்வையாரின் குரலை ஏனைய அவ்வைகளின் கருத்தாக திணிக்கப்பட்டது. அதியமானுடன் நட்பும் தோழமையும் கொண்டிருந்த அவ்வை ஒரு சுதந்திரப் பெண் என்பதை முன் வைத்து கவிஞர் இன்குலாப் தீட்டியது அவ்வை நாடகம். 2006ஆம் ஆண்டில் மரப்பாச்சி குழுவினர் அ.மங்கை நெறியாள்கையில் அரங்கேறியது அவ்வை. மீண்டும் இன்குலாப் நினைவாக  கடந்த டிசம்பர் 2ஆம் தேதி சென்னையில் ‘ஸ்பேசஸ்’ அரங்கில் நிகழ்த்தப்பட்டது. அரங்கம் நிரம்பி வழிந்தது. நாடகம் பார்க்க இடமின்றி தவித்த பார்வையாளர் களுக்காக மீண்டும் இரண்டாவது காட்சியாக நாடகம் நடிக்கப்பட்டது. நிகழ்வில் முற்போக்கு சிந்தனை யாளர்கள் ஏராளமாக பங்கேற்றனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர், கழகத் தோழர்களும் பார்வையிட்டனர்.

இரண்டாம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் சென்னை அடையாறு தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அரங்கில் காலை 10 மணியளவில் தொடங்கியது. மக்கள் மன்றக் குழுவினரும், தோழர் அகிலாவும் இன்குலாப் பற்றிய பாடல்களைப் பாடினர். இன்குலாப் கவிதைகளை முழுமையாகத் திரட்டி, ‘ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்’ எனும் கவிதைத் தொகுப்பும், ‘அதிர்வுகள்’ என்ற தலைப்பில் இன்குலாப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பும் வெளி யிடப்பட்டன. எழுத்தாளர் பா.ஜெயப் பிரகாசம், இந்த நூலைத் தொகுத் திருந்தார். நிகழ்வில் பேராசிரியர் சரசுவதி, கவிஞர் ஈரோடு தமிழன்பன், கவிஞர் இன்குலாப் படைப்புகள், இலட்சிய உறுதி, களச் செயல்பாடுகளை நினைவுகூர்ந்து பேசினர்.

நூலின் பிரதிகளை கவிஞர் அறிவுமதி, டிராட்ஸ்கி மருது, பொழிலன், பேராசிரியர் கல்விமணி, பேராசிரியர் மணிகண்டன், இதழாளர் முத்தையா, க. சுந்தர், அ.பா. பாலசுப்பிரமணியம் பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து நினைவேந்தல் கவியரங்கம் ஈரோடு தமிழன்பன் தலைமையில் சிறப்புடன் நடந்தது. கவிஞர்கள் திண்டுக்கல் தமிழ்ப் பித்தன், அப்துல் ரசாக், கவின்மலர், சல்மா, ஹாஜாக்கனி, தமிழச்சி தங்கபாண்டியன், கனல் மைந்தன் ஆகியோர் இன்குலாப் குறித்த எழுச்சிக் கவிதைகளை அரங்கேற்றினர்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு எழுத்தாளர் பா. செயப் பிரகாசம் தலைமையில் நடந்த ஆய்வரங்கத்தில் இன்குலாப் கவிதைகள் குறித்து செ. சண்முக சுந்தரம், நாடகங்கள் குறித்து பிரளயன், சிறுகதைகள் குறித்து ‘புலியூர் முருகேசன்’ கட்டுரைகள் குறித்து ஜென்ராம் ஆய்வுரை வழங்கினர். தொடர்ந்து நிழல் திருநாவுக்கரசு உருவாக்கிய இன்குலாப் குறித்த ஆவணப் படம் திரையிடப்பட்டது. இறுதி நிகழ்வாக ‘இன்குலாப்’ நாடகங்கள் வாசிப்பு நிகழ்வு நடந்தது. குறிஞ்சிப் பாட்டு, யாது எம் ஊர் ஆகிய நாடகங்களை முறையே முனைவர் சி. பார்த்திப ராஜா, ஸ்ரீஜித் சுந்தரம் நெறி யாள்கையின் கீழ் வாசிப்பு நிகழ்ந்தது.

காலையில் நிகழ்வு தொடக்கம் முதல் இறுதி வரை அரங்கம் நிரப்பி வழிந்தது. பெரியாரிய - மார்க்சிய - அம்பேத்கரிய சிந்தனையாளர்கள், இளைஞர்கள், பெண்கள் பெரு மளவில் திரண்டு வந்திருந்தனர். இன்குலாப் மகள் அமீனா, மகன்கள் இன்குலாப், செல்வம் மற்றும் அறக்கட்டளை தோழர்கள் நிகழ்ச்சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். திராவிட இயக்கத் தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவராக தொடங்கிய இன்குலாப் பயணம், பிறகு மார்க்சியம் நோக்கியும், மார்க்சிய - லெனினியம் நோக்கியும், பெரியாரியம் நோக்கியும் பயணித்தது.

அனைத்து கோட்பாடு களிலும் அடங்கி உள்ள தலித் மற்றும் பெண்ணிய விடுதலை, ஜாதி பார்ப்பனிய எதிர்ப்பு, தமிழ்த் தேச தன்னுரிமை, பன்னாட்டுச் சுரண்டல் எதிர்ப்புகளை உள்வாங்கி, காலத்தின் பிரதிபலிப்பாக அவரது கொள்கைப் பயணம் நடந்தது. எளிமை, உண்மை, நேர்மை, கனிவுக்கு சொந்தக்காரரான கவிஞர் இன்குலாப், பெரியாரின் பெண்ணியம், மொழி மற்றும் தேசியம் குறித்த கருத்துகளை தீவிரமாக ஆதரித்து பேசினார்; எழுதினார்; கவிதைகளை வடித்தார். 1996ஆம் ஆண்டு பெரியார் திராவிடர் கழகம் தொடங்கப்பட்ட போது இன்குலாப், பெரியார் திராவிடர் கழக மேடைகளிலும் ஆர்ப் பாட்டங்கள், போராட்டங்களிலும் பங்கேற்றுப் பேசினார். பெரியார் திராவிடர் கழகத்துக்காக முதன் முதலாக இராயப்பேட்டை சைவ முத்தையா தெருவில் அலுவலகம் திறக்கப்பட்டது. அந்த அலுவலகத்தை திறந்து வைத்தவர் கவிஞர் இன்குலாப்.

Pin It