செம்பு, பித்தளை உருவங்களைப் பிணம்போல் தூக்கிச்   சுமந்தால் மக்கள் பசி தீருமா? ஒழுக்கம் ஏற்படுமா?

மதமே மக்களுடைய நாகரிக வாழ்க்கையை வெளிப்படுத்துங் கருவி, மதமே மக்களைச் சிறந்த வாழ்க்கையில் வாழச் செய்வது; மதமே மக்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பிப்பது. மதமே மக்கட் சமூகத்தை ஒழுங்கு படுத்தி ஒரு கட்டுத் திட்டத்தில் அடங்கி நடக்கும்படி செய்திருக்கின்றது. மதமின்றேல் மக்கள் வாழ்க்கை மிருக வாழ்க்கையாகிவிடும். ஒருவரும் கட்டுக்குள் அடங்க மாட்டார்கள். நன்மை தீமைக்குப் பயன்பட மாட்டார்கள். மனிதனை மனிதன் அடித்துச் சாப்பிடக் கூடிய அலங்கோல நிலை தாண்டவமாடும்.

Vinayagar_stratue_370ஆதலால் மனித சமூகத்தின் வளர்ச்சியை கட்டுப்பாட்டை, ஒழுக்கத்தை, முன்னேற்றத்தைக் கருதுபவர்கள் மதத்தைப் பரவச் செய்ய வேண்டியது அவசியமாகும் என்று உண்மையில் மதத்தைக் கொண்டு பாமர மக்களை அடிமைப்படுத்தி வயிறு பிழைக்க எண்ணும் ஒவ்வொரு போலிப் புரோகிதக் கூட்டமும் கூறுகின்றது. இக்கூற்று எவ்வளவு தூரம் உண்மையென்பதைச் சிறிது ஆராய்வோம்!

மனித சமூகத்தில் குற்றங்கள் நிகழ்வதற்குக் காரணம் என்ன வென்பதை ஆராய்ந்தால், மதம், மனித சமூகத்தைக் காப் பாற்றி வருகின்றது என்பதன் உண்மை நன்கு வெளியாகும்.

திருட்டு என்பது எல்லா நாட்டினராலும், எல்லா சமூகத்தாராலும் இப்பொழுது குற்றமாகக் கருதப்படுகிறது. ஆனால் திருட்டுக்குக் காரணம் என்னவென்று கண்டு அக்காரணத்தை ஒழித்தால் திருட்டு நிகழாமல் இருக்க முடியும் அல்லவா?

"மற்றவரைப்போல் தானும் வாழ வேண்டும்' என்பதே பொதுவான மனித உணர்ச்சியாகும். மற்றவன் அனுபவிக்கும் சுகத்தைப் போல் தானும் சுகமனுபவிக்க வேண்டும் என்றே ஒவ்வொரு மனிதனும் நினைக்கின்றான். "தன்னைக் காட்டிலும் கீழ் நிலையிலிருந்து துன்புறுவர்களைக் கண்டு தனது நிலையும் இன்பமும் உயர்ந்ததென்னு மகிழ்ச்சியடைய வேண்டும்' என்று நீதி நூல்களும், மதக் கொள்கைகளும் கூறுகிறதாயினும் அதை அனுசரிப்பார் அறிவுடையார் கூட்டத்தில் ஒருவரும் இருக்க முடியாதென்பது திண்ணம். ஏனெனில் இதை நம்பி எந்த அறிவுடையாரும் "போதும்' என்ற திருப்தியுடன் சும்மாவிருப்பதையோ, தமது முயற்சியை இன்னும் விரிவுபடுத்தாமலிருப்பதையோ நாம் பார்ப்பதில்லை. ஆனால் அக்கொள்கை சிந்தனா சக்தியற்ற பாமர மக்களை முன்னேற வொட்டாமல் அடக்கிவைத்து அவர்களுடைய உழைப்பின் பயனை அறிவுடைய கூட்டம் நோகாமல் அடைவதற்கு மாத்திரம் ஓரளவு ஏன் முழுவதும் உபயோகமாகிறது என்று சொல்லிவிடலாம்.

அறிவு படைத்த கூட்டமே சுகவாழ்க்கை மோகத்தால், எவ்விதமான பொய், பித்தலாட்டங்களைச் செய்தாவது பொருள் சேர்த்து வாழ வேண்டும் என்று நினைக்கின்றபோது அம்மாதிரியே அறிவுடைய மக்களில் பெரும்பாலானவர்கள் வியாபாரம் கைத்தொழில் உத்யோகம், அரசியல் பொது ஊழியம் ஆகிய எல்லாக் காரியங்களிலும் சுயநலத்தை முதன்மையாக வைத்து அவைகளை நடத்திப் பொருள் சம்பாதித்து வரும்போது சாதாரண நிலைமையில் உள்ள சோற்றுக்கும் வழியில்லாத தரித்திரங்கள் கல்வி அறிவற்ற பாமர ஏழைகள் என்ன செய்ய முடியும்?          

தங்கள் வயிற்றுப் பசியைத் தணித்துக் கொள்வதற்கு வேறு வழியில்லாதபோது "திருட வேண்டும்'. அதாவது பிறர் பொருளை அவர்கள் அறியாமல், அவர்களை ஏமாற்றிக் கவர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றுவது இயல்புதானே, இந்த இடத்தில் அவர்கள் வயிற்றுணவுக்கு நேரிய முறையில் வழியில்லாத வகையில் மதம் எவ்வாறு அவர்கள் குற்றத்தைத் தடுக்க முடியும் என்பதைச் சிந்தியுங்கள்!

இதுபோல, பொய், கொலை, சூது முதலான கெட்ட காரியங்கள் என்று கருதப்படுபவைகள் பலவும் நடைபெறுவதற்குக் காரணம். மேற்போக்காகப் பார்ப்போர் வேறுபல காரணங்களைக் கூறினும், வறுமையே, அதாவது உணவுக்கு சுகவாழ்வுக்கு வழியில்லாமையே முதற் காரணம் என்பதை யாரும் மறந்து விடுதல் கூடாது. இன்று குற்றங்கள் செய்து, அக்குற்றங்கள் உண்மையென மெய்ப் பிக்கப்பட்டுச் சிறைத் தண்டனை பெறுவோரின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால் அவர்களில் ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணுற்றொன்பது பேர் வறிய நிலையில் வாழும் மூன்றாந்தர வகுப்பைச் சேர்ந்தவர்களே என்பதை அறியலாம். இப்படிப்பட்ட மூன்றாந்தர வகுப்பினர்க்கும் நாம் எந்த வகையிலும் உதவி செய்வதாகக் கூற முடியாது.

மக்கட் சமூகத்தில் உயர்தர வகுப்பினராகக் கருதப்படுகின்ற பணக்கார வகுப்பினர் செய்யுங் குற்றங்கள் சட்டத்தில் அகப்படாதவை, சட்டத்திற்குக் கட்டுப்பட்ட குற்றங்களை அவர்கள் மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ செய்தாலும், அவற்றினின்றும் தப்பித்துக் கொள்வதற்குப் பல வசதிகள் இருக்கின்றன. மனிதனுடைய உடலையும் உயிரையும் வைத்துவிட்டு இரத்தத்தை மாத்திரம் உறிஞ்சுவது போல,

ஏழை மக்களின் உழைப்பையும் அதன் பயனையும் கொண்டு அவர்களை நடமாடும் பிணங்களாகத் திரியச் செய்யும் பணக்காரர்களின் செயல் சட்ட சம்பந்தமானதாகவும், மத சம்பந்தமானதாகவும் கருதும்படி செய்யப்பட்டிருக்கிறது.

"வேலைக்குத் தகுந்த கூலி' என்ற கருத்துக் கொண்ட "கர்மபலன்' என்ற சொல்லை முற்பிறப்பில் அனுபவிப்பது என்ற பெயரில் மதவாதிகள் அமைத்துக் கொண்டதால் வந்த ஆபத்து இது. இதனாலேயே பணக்கார வகுப்பினர் நோகாமல் உலக இன்பங்களையெல்லாம் ஆண்டு அனுபவிக்கும் வாழ்வைப் பெற்றிருக்கின்றனர்.

இனி நடுத்தர வகுப்பினரோ முதல்தர வகுப்பினரின் ஆதிக்கத்துக்கு அடங்கி நின்று, தங்கள் காரியங்ளைச் சாதித்துக் கொள்ளுபவர்களாயிருக்கிறார்கள். தாங்களும் முதல்தர வகுப்பினராக அதாவது முதலாளிகளாக ஆக வேண்டுமென்ற ஆசையினால் அவர்கள் மூன்றாந்தர வகுப்பினரை அடக்கி வைப்பதற்கும், காட்டிக் கொடுப்பதற்கும், அவர்களுடைய உழைப்பைக் கொள்ளை கொள்வதற்கும் முதல்தர வகுப்பினரின் கையாட்களாக இருக்கின்றனர். இவர்கள் தங்கள் நிலையிலிருந்து சுலபதத்தில் மாறாதவர்களாக இருப்பதற்குக் காரணம் மதமும், மதக்கோட்பாடுகளும் என்பதில் அய்யமில்லை பெரும்பாலும் நடுத்தர வகுப்பினராலேயே மதங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்று கூறி விடலாம். இந்த நடுத்தர வகுப்பினரே எந்த நாட்டிலும் மூன்றாந்தர வகுப்பினரின் எழுச்சிக்குத் தடைக்கல்லாக இருக்கிறவர்கள் என்பதை யாரும் மறக்க முடியாது.

ஆகவே, முதல்தர வகுப்பினரும் இரண்டாந்தர வகுப்பினரும் தங்கள் சுயநலத்திற்காகப் போற்றிப் பாதுகாத்து வரும் மதங்களால் மூன்றாந்தர வகுப்பினர் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது பகுத்தறிவாளர்களின் கொள்கையாகும். இது ஆராய்ந்து பார்ப்போருக்கு உண்மையென்று தோன்றாமற் போகாது.

இந்த நிலைமையில் வறிய நிலையில் வாழும் சமூகத்தில் எப்படிக் குற்றங்கள் நிகழாமல் எதிர்பார்க்க முடியும்?

மதம் ஒன்றுதான் மனித சமூகத்தின் வறுமையைப் போக்க உதவி செய்கிறது? பெரும்பாலான சமூகத்தின் உழைப்பை ஒரு சிறிய கூட்டத்தின் கையில் ஒப்படைப்பதற்காக மாத்திரம் மதம் உதவிசெய்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

மதம் மக்களின் பசித் துன்பத்தை நீக்க உதவி செய்யவில்லை என்பதை சிக்காகோ நகரில் சுவாமி விவேகானந்தர் "ஏழை அஞ்ஞானிகளைப் பற்றிய' பிரசங்கத்தில் மிகவும் தெளிவாகக் கூறியிருப்பதை இங்கு நினைவூட்ட விரும்புகிறோம். அவர் கூறியதாவது:

 "ஓ கிருஸ்தவர்களே! நீங்கள் அஞ்ஞானிகளென்று பெயர் சொல்லியழைக்கும் எங்கள் மதத்தவர்களின் ஆத்மாக்களைக் காப்பாற்றுவதற்காக அன்புடன் பாதிரியார்களை அனுப்புகிறீர்களே! பசியினால் வருந்தும் அவர்களுடைய உடம்புகளைக் காப்பாற்றுவதற்கு நீங்கள் ஏன் யாதொரு முயற்சியும் செய்வ தில்லை? இந்தியாவில் பயங்கரமான பஞ்ச காலங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வயிற்றிற்குச் சோறில்லாமல் மாண்டு மடிந்தார்களே! அவர்களைக் காப்பாற்ற கிருஸ்தவர்களாகிய நீங்கள் என்ன செய்தீர்கள்?

இந்தியாவில் எங்கு பார்த்தாலும் நீங்கள் கிருஸ்துவக் கோயில்களைக் கட்டுகிறீர்கள். ஆனால் கீழ் நாட்டார் மதமில்லாத குறையினால் கஷ்டப்படவில்லை: அவர்களுக்கு மதம் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. அவர்களுக்குக் கஞ்சி இல்லாமையே பெருங் கஷ்டமாயிருக்கிறது. இந்தியாவிலேயே கீழுஞ்சுட, மேலுஞ்சுட நெஞ்சுலர்ந்து, நாவறண்டு கஞ்சி! கஞ்சி! என்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கதறுகிறார்களே! அவர்கள் கஞ்சி கேட்டால் அதற்குப் பதிலாக நாம் கல்லைக் கொடுக்கலாமா? வயிற்றுப் பாட்டுக்குக் கஞ்சியில்லாமல் வருந்துவோர்க்கு மதப் பிரசாரத்தைச் செய்வது அவர்களை அவமானப்படுத்துவதாக ஆகுமல்லவா?' இது, சுவாமி விவேகானந்தர் கிறிஸ்துவ மதத்தைக் குறித்துப் பேசிய பேச்சாகும்.

கிறிஸ்துவர்கள் மதத்தின் பெயரால் செலவழிக்கும் பொருளில் ஓரளவு மக்களுடைய கல்விக்கும், வைத்திய உதவிக்கும் செலவழித்து வருகிறதை நாம் பார்க்கிறோம். ஆனால் இந்துக்கள் என்று சொல்லுகிறவர்கள் தங்கள் மதத்தின் பெயரால் செலவிடுவதில் ஒரு காசும் கூட ஏழைகளுக்குப் பயன்படுவதில்லை!

நாட்டின் நன்மைக்கு உபயோகப்படுத்துவதில்லை என்பது உண்மையாகும். ஆகவே விவேகானந்தர் கிருஸ்தவ மதத்தைப் பற்றிக் கூறியிருக்கும் வார்த்தை எல்லா மதத்துக்கும் பொருந்தும் என்பதை மறுக்க முடியாது. ஆதலால் மக்களின் பசித் துன்பத்தைப் போக்க உதவி செய்யாத வரையில் உலகில் எந்த மதம் இருந்துதான் என்ன பயன் என்று கேட்கின்றோம். இப்படிப்பட்ட உலக நன்மைக்கு எள்ளளவும் உதவி செய்யாத மதங்களைக் கட்டிக் கொண்டு அழுவதில் ஏன் மக்கள் இன்னும் தங்கள் கவனத்தைச் செலுத்திக் கொண்டியிருக்க வேண்டும்?

இதுவரையிலும் மதங்களைக் கட்டிக் கொண்டு அழுதது போதும். இனியாவது அவைகளைத் தகர்த்தெறிய முன் வருவது நன்றல்லவா? கஞ்சி! கஞ்சி! என்று பரிதவிக்கும் பரிதாபத்திற்குரிய மக்களின் துயரைக் களைந்து அவர்களின் சந்தோஷ ஆரவாரத்தைக் கண்டு, உள்ளங்களிக்க மனங்கொண்டு ஒன்று கூடி உழைப்பது அறிவாளர் கடமை அல்லவா?

மக்கள் கஞ்சி! கஞ்சி! என்று கதறி மடியும் போது, கோவில் கட்டுவதும், கல்லுத் தலையில் அரும் பண்டங்களைக் கொட்டி வீணாக்குவதும் உற்சவம் நடத்துவதும், செம்பு பித்தளை உருவங்களை, மதப் பிரதிநிதிகளைப் பல்லக்கில் வைத்துப் பிணத்தைச் சுமப்பதுபோல் சுமந்து திரிவதும் அறிவுடைய கூட்டம் செய்யக் கூடிய காரியமா?

Pin It