ஒரு வேடன். அவன் தன் உணவுக்குத் தினமும் பல பிராணிகளை வேட்டையாடி கொன்று தின்பது வழக்கம், அந்தப்படி ஒரு நாள் காட்டில் வேட்டையாடி இரை தேட சென்றதில் அவனுக்குக் கொல்ல ஒரு பிராணியும் கிடைக்கவில்லை. அவன் மனக் கலக்கமடைந்து சோர்ந்து திரிந்தான். அந்நேரத்தில் அந்தக் காட்டில் ஒரு புலி, அவன் கண்ணுக்குத் தென்பட்டது. நேரமும் சற்று இருட்டி விட்டது. என்றாலும் வேடன் புலியைக் கண்டு ஓடினான். புலி விரட்டிற்று. வேடன் உடனே அங்கு இருந்த ஒரு மரத்தின்மீது அவசரமாக ஏறிக் கொண்டான்.
புலி அவனைப் பார்த்த வண்ணமே மரத்தடியில் சிறிது நின்று கொண்டிருந்து படுத்துக் கொண்டது. வேடன் அந்தப் புலியை விரட்டுவதற்காக ஆக மரத்திலிருந்த சிறு கிளைகள் தழைகள் முதலியவற்றைப் பிடுங்கி கீழே எறிந்தான். அப்போது சிறு மழைத்தூரல் விழுந்து கொண்டு இருந்ததால் அத்தழைகள் சிறிது நனைந்து விழுந்தன. இப்படியே பயந்து கொண்டு இரவு முழுதும் தூங்காமல் செய்து கொண்டு இருந்தான். சிறிது வெளிச்சம் படும்படி வானம் வெளுக்க ஆரம்பித்தவுடன் புலி ஓடிவிட்டது. இந்த நிலையில் வேடன் கீழிறங்கி வீட்டிற்குப் போய்விட்டான். பிறகு அதேதொழிலாக இருந்து சில நாள் பொறுத்துச் செத்தான். சிவன் உடனே அவனுக்குக் கைலாயத்தில் இடம் கொடுத்துவிட்டார். காரணம் என்னவென்றால்,
அந்த வேடம் தினம் உயிர்களைக் கொன்று வதை செய்து சாப்பிடுபவனாகவும், விற்பவனாகவும் இருந்தாலும், அவன் அன்றிரவு தான் பறித்துப் போடுகின்ற தழை, வில்வத்தழை என்று அறியாதிருந்தாலும், அப்போது அந்த மரத்தடியில் இருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது விழுகிறது என்பது தெரியாமல் போட்டிருந்ததாலும், அவனுக்குச் சிவ பக்தி, ஒழுக்கம் என்பவை சிறிதும், இல்லாமல் இருந்தாலும், அவனுக்குத் தெரியாமல் வில்வத்தழை நீரில் நினைந்து சிவலிங்கத்தின் மீது பட்டிருப்பதால், அவனுக்குக் கைலாயத்தில் இடம் கொடுக்க வேண்டியது அவசியம் என்று சிவன் கருதி மோட்சம் கொடுத்தான் என்பது இதன் கருத்து.
எதற்கு ஆக இக்கதை கற்பிக்கப்பட்டது என்றால், எவ்வளவு அயோக்கியனானாலும் இந்த விரதத்தை கொண்டாடினால் மோட்சம் கிடைக்கும் என்று மக்கள் கருதி இந்த விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்பதேயாகும். இதனால் நாம் அறியக்கிடப்பது என்னவென்றால், எவ்வளவு அயோக்கியனும் ஆரியமதத்தில் சேர்ந்தால் நன்மை அடைவான் என்கின்ற அளவுக்கு இது மதப்பிரசாரமாகும் என்பதுதான்.
இப்படியானால் ஆரிய (இந்து) மதம் காரணமாக எவனுக்காவது ஒழுக்கமேற்பட முடியுமா? எவனாவது ஒழுக்கத்தைப் பற்றிக் கவலைப்பட முடியுமா?
ஆரிய மதமும் ஒன்றே தான் என்பது அறியத்தக்கது. ஆதலால் திராவிட மக்கள், இந்த முட்டாள் தனமானதும் அயோக்கியத் தனமானதுமான இப்படிப்பட்ட மதம், சாஸ்திரம், கடவுள், பக்தி, விரதம், பூசை முதலியவற்றை நன்றாய் வெறுக்க வேண்டுமென்பது, இதனால் விளங்குகிறது.
-------------------
தந்தை பெரியார் - “விடுதலை”, 9.2.1953