Kamarajar_pho_292மாணப் பெரிய படிப்பறியார்
மக்களை அறிவார்: மக்கள் நாம்
காணப் பெரிய ஒருதலைவர்
காம ராசப் பெருந்தலைவர்
கோட்டை தன்னில் இருந்தாலும்
குடிசை வாழ்வோர் நலமெண்ணி
ஆட்சி நடத்திய அன்பாளர்
அதிகம் பேசாப் பண்பாளர்

கல்வி தொழில்வளம் வேளாண்மை
கடுவிசை யோட தமிழ்நாட்டில்
பல்கிப் பெருகிட வைத்திட்டார்
பாரமர் ஆட்சிக்கு வித்திட்டார்

தந்தை பெரியார் உட்கருத்தைத்
தலையாய் எண்ணிப் போற்றியவர்
எந்தப் பதவியும் பார்ப்பனர்க்கே
என்றிருந்த நிலை மாற்றியவர்

எளிமை நேர்மை இவரிடத்தில்
எழுந்து நின்று கைகட்டும்
தெளிந்தே பிரதமர்கள் தெரிந்தெடுப்பால்
தில்லிவரை இவர் புகழ் எட்டும்

எனினும் தமிழைத் தமிழனத்தை
எதிரியிடம் போய் அடகுவைத்தார்
பணிந்து தில்லிப் பார்ப்பனர்க்குப்
பற்பல வழிகளில் குடைபிடித்தார்

இந்திக் காரன் நமைஏய்க்க இவர்
கொடுத்த இடமோ தராளம் இவர்
இந்தியத் தேசிய மாயையிலே நம்
தமிழகம் இழந்தது ஏராளம்

குறைகள் சிற்சில இருந்தாலும்
குணத்தில் இவர்போல பிறர் இல்லை
கறையே இல்லா நிலவில்லை
காம ராசர்க்கும் நிகரில்லை

Pin It