மேலை நாடுகளைப்பற்றி பலவற்றை நாம் பேசுகிறோம். அவர்களுடைய நேரம் தவறாமையைப் பற்றி பேசு கிறோம், அவர்கள் உடுத்திக் கொள்கிற நாகரிகம் பற்றிப் பேசுகிறோம், நாமும் அவர்களைப்போல் உடுத்திக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறோம், அவர்கள் மாதிரியே அவர்கள் மொழியைப் பேச வேண்டும் என்று நினைக்கிறோம், அதிலே எல்லாம் மேலை நாட்டவர்களைப் பின்பற்றுகிற நாம், உடல் உழைப்பை அவர்கள் எப்படி மதிக்கிறார்கள் என்று பார்க்கத் தவறிவிட்டோம்.

Painter_370சரியாக படிக்காத பிள்ளைகளையோ அல்லது கொடுத்த வேலையை ஒழுங்காகச் செய்யாத மனிதர்களையோ பார்த்து நீயெல்லாம் மாடு மேய்க்கத்தான்யா லாயக்கு என்று வசைபாடுவதை நாம் கேட்டிருக்கிறோம். மாடு மேய்ப்பது என்பது அவ்வளவு எளிதானதா? மாடுமேய்ப்பதில் எவ்வளவு துன்பங்களும், எவ்வளவு சிரமங்களும் இருக்கின்றன என்பதை மாடு மேய்த்துப் பார்த்தால்தான் தெரியும். மாடு மேய்ப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அன்று.

ஆனால் அதை அப்படித்தான் குறைத்து இழிவாகச் சொல் கிறோம். இன்றைக்கு அதிகாரியாக இருக்கிற என்னுடைய நண்பர் ஒருவர் என்னிடத்திலே சொன்னார் நான் சிறுவனாக இருந்தபோது மாடு மேய்த்திருக்கிறேன். ரொம்ப கடினமான வேலையண்ணா அது என்று அவர் சொன்னார். எப்படி என்று கேட்டேன்? அவர் சொன்னார், ஒவ்வொரு மாடும் ஒவ்வொரு திசையிலே போகும். அதுவும் சினையான மாடுகள் இருக் கின்றனவே அவை திடீரென்று எங்காவது ஓடிப்போய்விடும். பிறகு அதைக் கண்டுபிடித்துக் கொண்டு வருவதற்குள் பெரும்பாடு. எங்காவது காணாமல் போய்விட்டால் அவ்வளவுதான் அன்றைக்கு முதுகுத் தோலை உரித்து விடுவார்கள். ஆடு மேய்ப்பதிலே இன்னும் சிரமங்கள் இருக்கின்றன. ஆடு உருவத்தில் சின்னதாக இருக்கிறது. எங்கே வேண்டுமானாலும்தாவும். யாருடைய தோட்டத்துக்குள்ளே வேண்டுமானாலும் போய் விடும். பிறகு அந்தத் தோட்டக்காரனைப் போய்க் கெஞ்சிக் கேட்டு அங்கே இருந்து அந்த ஆட்டை மீட்டு வரவேண்டும். அது உள்ளே போனால் சும்மா இருக்காது. எல்லாச் செடிகளிலேயும் வாய் வைக்கும். பெரும்பாலும் ஆடு தொடாத இலைகளே இல்லை, எல்லா இலைகளையும் ஆடு உண்ணும். ஆடே தொட முடியாத கசப்பான இலை என்பதனாலே தான் அதை ஆடா தோடை என்கிறார்கள். அப்படிப்போய் எந்தத் தோட்டத்திலாவது எந்தச் செடியிலாவது அது வாய் வைத்து விட்டால் பிறகு அந்தத் தோட்டக்காரனுக்கு நாம் பதில் சொல்லவேண்டும். மிகவும் சிரமமான வேலை என்று அவர் சொன்னார்.

நாம் இந்த மாடு மேய்க்கும் தொழிலை மட்டுமல்ல, இன்னும் பல தொழிலையும் இழிவாகத்தான் பார்க்கிறோம். இழிவாகத்தான் பேசுகிறோம். சலவைத் தொழிலாளர்களை, முடிவெட்டுகிற தோழர்களை, சாக்கடை சுத்தம் செய்கிறவர்களை, மலம் எடுக்கிறவர்களை நாம் இழிவாகப் பேசுகிறோம். ஆனால் அவையெல்லாம்தான் மிகச் சிரமமான வேலை.

மலம் எடுப்பது என்பதை எண்ணிப் பாருங்கள். அந்த அசுத்தத்தைப் பொறுத்துக் கொண்டு, நாற்றத்தைச் சகித்துக்கொண்டு, அது தொழிலே அல்ல. அது ஒரு இழிவு. அதை நாம் நம்முடைய சொந்தச் சகோதரர்கள் மீது சுமத்தியிருக்கிறோம். அதையெல்லாம் இயந்திரங்களை வைத்துத் தான் நாம் செய்யவேண்டும்.

மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ? என்று கேட்டான் பாரதி. மனிதர் கழிவை மனிதர் சுமக்கும் வழக்கமே இன்னும் நம்மிடத்திலே இருக்கிறது என்றால் நாம் எப்படி நாகரிமானவர்கள் என்று சொல்ல முடியும். இப்போதுதான் அந்த மக்களுக்கு மாற்றுப் பணி கொடுத்து விட்டு அதனை இயந்திரம் மூலமாகச் செய்வதற்கான முயற்சியைத் தமிழக அரசு எடுத்திருக்கிறது. அது ஒரு சமூகத் தொண்டு என்று சொல்ல வேண்டும். ஆனாலும் இன்னும் பல உடல் உழைப்புச் செய்கிற மக்களை நாம் மதிக்கவில்லை என்பது ஒரு உண்மை. ஏன் நீ மாடு மேய்க்கத்தான் போக வேண்டும் என்று சொல்கிறோம். நீ சவரம் செய்யத்தான் லாயக்கு என்று சொல்லுகிறோம் என்று கேட்டால் மூளை உழைப்பை மிகப் பெரிதாக, அதற்குரிய மதிப்பைக் காட்டிலும் கூடுதலாக மதிக்கிறோம்.

ஆனால் உடல் உழைப்பை அதற்கு உரிய நிலையிலேகூட வைத்து நாம் பாதுகாக்கவில்லை. நம் முடைய நாட்டில் தொழிலிலும் இருக்கிற மிகப்பெரிய ஏற்றத் தாழ்வுக்கு இது ஒரு உதாரணம். மேலை நாடுகளைப்பற்றி பலவற்றை நாம் பேசுகிறோம். அவர்களுடைய நேரம் தவறாøமையைப் பற்றி பேசுகிறோம். அவர்கள் உடுத்திக் கொள்கிற நாகரிகம் பற்றி பேசுகிறோம், நாமும் அவர்களைப்போல் உடுத்திக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறோம், அவர்கள் மாதிரியே அவர்கள் மொழியைப் பேச வேண்டும் என்று நினைக்கிறோம், அதிலே எல்லாம் மேலை நாட்டவர்களைப் பின்பற்றுகிற நாம், உடல் உழைப்பை அவர்கள் எப்படி மதிக்கிறார்கள் என்று பார்க்கத் தவறிவிட்டோம்.

இன்றைக்கும் மேலை நாட்டுக்குப் போய் வந்த பல நண்பர்கள் மூலம் நாம் அறிந்திருக்கிறோம். நாமும் பார்த்திருக்கிறோம், அங்கு எல்லா உழைப்புக்கும் மதிப்பு இருக்கிறது. அது எந்தத் தொழில் என்பது முக்கியமில்லை. தொழில் செய்கிறாயா என்பதுதான் முக்கியம். பல நேரங்களிலே வீட்டையெல்லாம் கழுவிச் சுத்தம் செய்கிற இளைஞர்கள் யாரென்று பார்த்தால், திங்கள் முதல் வெள்ளி வரையிலே கணிப்பொறித்துறையிலே வேலை பார்க்கின்றனர். அந்தப் பிள்ளைகள். சனி, ஞாயிறு ஓய்வு நாள்களிலே இப்படி வீட்டைச் சுத்தம் செய்து அதற்கான ஊதியத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். மிகச் சாதாரணமானவேலை என்று நாம் கருதுகிற அந்த வேலையைக் கூட மேலை நாட்டிலே செய்கிறவர்கள் மகிழ்வுந்திலே.... காரிலே வந்திறங்கிச் செய்கிறார்கள்.

நான் ஆஸ்திரேலியாவில் சிட்னியிலே ஒரு மிகப் பெரிய மருத்துவர் வீட்டுக்குப் போயிருந்த போது, அவர் தன் வீட்டுக்குப் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். அவரை ஏன் இதற்கு ஒரு ஆளை வைத்துக் கொள்ளக் கூடாதா என்று கேட்டால், அவர் சொன்னார், வைத்துக் கொள்ளலாம். இதுவும் மிக நுட்பமான வேலை, அவர்கள் செய்வதைப்போல இதிலேயும் பல நுட்பங்கள் இருக்கின்றன. அப்படி அதிலே தேர்ந்தவர்களை அழைக்கிறபோது, நான் ஓர் அறுவை சிகிச்சைக்கு வாங்குகிற பணத்தை இதற்குக் கொடுத்தாக வேண்டும். எனவே மிச்சமாக இருக்கட்டுமே என்றுதான் நான் செய்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னார். எனவே அந்த நிலையும் இந்த நிலையும் வேறு வேறு என்று கருதிப் பார்க்காமல், அது ஒரு தொழில் இது ஒரு தொழில் என்று பார்கிற ஒரு பார்வை மேலை நாட்டில் இருக்கிறது. அந்த நாடுகள் முன்னேறியதற்கு அதுகூட ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம்.

உடல் உழைப்பை மதிக்காத ஒருதேசம் முன்னேறாது. இந்தநாடு இன்றைக்கு வரைக்கும் உடல் உழைப்பைக் குறைவாகவே மதிப்பிடுகிறது. மூளை உழைப்புச் சிறந்ததுதான். படிப்பாளிகளும், அறிவாளிகளும் நமக்கு வேண்டும். நன்றாகப் படித்திருக்கிறார், நன்றாக கவிதை எழுதுகிறார் என்று நாம் பாராட்டுகிறோம். நன்றாக மாடு மேய்க்கிறார் என்று யாரையும் பாராட்டுவதில்லை. பாராட்டாவிட்டால்கூட குற்றமில்லை, அவர்களை இழிவுபடுத்தாமல் இருக்கிறோமா என்றால் தொடர்ந்து இந்தச் சமூகம் அவர்களை இழிவுபடுத்துகிறது. எனவே நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று சொன்னால், அவர்களை இரண்டு நாட்களுக்காவது மாடு மேய்க்க அனுப்பி வைக்க வேண்டும். இரண்டு உழைப்பையும் அது மூளை சார்ந்ததாக இருந்தாலும், உடல் சார்ந்ததாக இருந்தாலும் இரண்டையும் மதிப்பது இரண்டையும் சமமாக நடத்துவது என்கிற நிலைதான் ஒருநாட்டினுடைய முன்னேற்றத்திற்கு உதவும். இரண்டு கால்களால் நடப்பதுதான் எப்போதும் எளிது. நல்லது!

Pin It