பகுத்தறிவு கருத்துக்களை பரப்பி வரும் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழக பா.ஜ.கவின் வழக்கறிஞர் பிரிவுத் தலைவரான பால்கனகராஜ். புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில்,
"நாத்திகக் கருத்துகளை பரப்புவது போல சிலர், 'கருப்பர் கூட்டம்' என்ற யூ டியூப் சேனலை நடத்தி வருகின்றனர். அதில், ஆபாசப் புராணம் என்ற பெயரில், கந்தசஷ்டி கவசத்தை கேவலமாக சித்தரித்து, இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து இது போன்ற கருத்துகளைப் பரப்பி வருகின்றனர்.
இந்து கடவுளான முருகப் பெருமானை போற்றி, 19ம் நுாற்றாண்டில் கந்தசஷ்டி கவசம் பாடப்பட்டுள்ளது. முருகப் பெருமானிடம் மனம் உருக பாடப்படும் பாடல்களை, அருவருக்கத்தக்க வகையில் கொச்சைப்படுத்தி இருப்பது தண்டனைக்குரிய குற்றம். அந்த சேனலை நடத்துபவர்களின் நோக்கம், இந்துக்களையும், அவர்கள் வழிபடும் கடவுள்களையும் கொச்சைப் படுத்துவதாகவே உள்ளது. மத மோதல்களை ஏற்படுத்தி, சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க முயலும் மர்ம நபர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த யூ டியூப் சேனலை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும். அதன் நிர்வாகிகளைக் கைது செய்ய வேண்டும்”
எனக் கூறப்பட்டுள்ளது.
இதைவிட கேலிக்கூத்து என்ன இருக்க முடியும்?. ஆபாசப் புத்தகங்களையும், ஆபாச இணையதளங்களையும் தடை செய்யாமல் அதைப் படிப்பவர்களையும், பார்ப்பவர்களையும் விமர்சிப்பவர்களையும் தண்டிக்க வேண்டும் என்று சொல்வது எவ்வளவு பெரிய கேலிக்கூத்து? டன் கணக்கில் குவிந்து கிடக்கும் இந்துமத ஆபாசப் புராணங்களை எல்லாம் இதற்கு முன் யாருமே விமர்சித்தது இல்லையா? ஏன், இன்று அம்பேத்கரை எப்படியாவது இந்துமயமாக்க வேண்டும் என பாஜக துடிக்கின்றதே அந்த அம்பேத்கரே மிகக் கடுமையாக அதன் ஆபாசங்களை விமர்சித்துள்ளாரே, தன்னுடைய 'இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர்கள் ' என்ற கட்டுரையில் ராமனின் யோக்கியதையைக் கிழித்து தொங்க விட்டிருக்கின்றாரே...
ஆனாலும் அப்படியான எதையும் அம்பேத்கர் எழுதாதது போல வெட்க மானமே இல்லாமல், இன்றும் சங்கிகள் அம்பேத்கரை சொந்தம் கொண்டாடிக் கொண்டுதானே இருக்கின்றார்கள். அந்த நூலில் அம்பேத்கர் சொல்கின்றார்:
“இராமயணக் கதையின் தொடக்கத்திலேயே தசரதனின் மகன் இராமனாகப் பிறப்பதற்கு உடன்பட்டும் அதன்படி விஷ்ணுவே இராமனாக அவதரித்ததாக வால்மீகி கூறுகின்றார். இதனைப் பிரம்மதேவன் அறிகின்றான். விஷ்ணு இராமாவதாரம் எடுத்துச் சாதிக்கவிருக்கும் காரியங்கள் யாவும் வெற்றியுடன் முடிய வேண்டுமானால் அவனோடு ஒத்துழைத்து உதவக்கூடிய வல்லமை மிக்க துணைவர்கள் இருக்க வேண்டும் என்பதையும் பிரம்மன் உணர்கின்றான். ஆனால் அத்தகைய துணைவர்கள் எவரும் அப்போது இருக்கவில்லை”.
“இந்தத் தேவையை நிறைவேற்றுவதற்காகக் கடவுள்கள், பிரம்ம தேவனின் கட்டளையை ஏற்று விலைமாதர்களான அப்சரசுகள் மட்டுமன்றி, யக்ஷர்கள், நாகர் ஆகியோரின் மணமாகாத கன்னிப் பெண்கள் மட்டுமன்றி, முறையாக மணமாகி வாழ்ந்து கொண்டிருந்த ருக்ஷா,வித்யாதர், கந்தர்வர்கள், கின்னரர்கள், வானரர்கள் ஆகியோரின் மனைவியரையும் கற்பழித்து, இராமனுக்குத் துணையாக அமைந்த வானரர்களை உருவாக்கினர்”.
“இத்தகைய வரம்பு மீறிய ஒழுக்கக் கேடானாது இராமனுடைய பிறப்பு அல்ல என்றாலும், அவனுடைய துணைவர்கள் பிறப்பு அருவெறுப்புக்குரியது. இராமன் சீதையை மணந்ததும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல. பெளத்தர்களின் இராமாயணத்தின் படி சீதை, இராமனின் சகோதரியாவாள். சீதையும், இராமனும் தசரதனுக்குப் பிறந்த மக்கள். பெளத்த இராமாயணம் கூறும் இந்த உறவு முறையை வால்மீகி இராமாயணம் ஏற்கவில்லை. வால்மீகியின் கூற்றுப்படி விதேக நாட்டு மன்னனான ஜனகனின் மகள் சீதை என்றும், அவள் இராமனுக்குத் தங்கை உறவு உடையவள் அல்ல என்றும் ஆகின்றது. சீதை ஜனகனுக்குப் பிறந்த மகள் அல்லவென்றும், உழவன் ஒருவன் தன் வயலில் கண்டெடுத்து ஜனகனிடம் அளித்து வளர்க்கப்பட்ட வகையிலேயே சீதை ஜனகனுக்கு மகளானாள் என்றும் கூறப்பட்டிருப்பதால் வால்மீகி இராமாயணத்தின் படியே கூட சீதை ஜனகனுக்கு முறையாகப் பிறந்த மகள் அல்ல என்றாகின்றது. எனவே பெளத்த இராமாயணம் கூறும் கதையே இயல்பானதாகத் தோன்றுகின்றது. அண்ணன் தங்கை உறவுடைய இராமனும், சீதையும் திருமணம் செய்து கொண்டதும், ஆரிய திருமண வழக்கத்திற்கு மாறானதுமல்ல. ஆயின் இந்தக் கதை உண்மையானால் இராமன், சீதை திருமணம் பிறர் பின்பற்றுவதற்குத் தக்கது அல்ல எனலாம்."
"இராமன் ஏக பத்தினி விரதன் என்பது ஒரு சிறப்பாகக் கூறப்படுகின்றது. இத்தகையதொரு அபிப்ராயம் எவ்வாறு பரவியது என்பது புரிந்து கொள்ள முடியாததாக உள்ளது. வால்மீகியே கூட தன் இராமாயணத்தில் இராமன் அனேக மனைவியரை மணந்து கொண்டதைக் குறிப்பிடுகிறார். மனைவியர் மட்டுமல்ல வைப்பாட்டியர் பலரையும் இராமன் வைத்திருந்தான்”. (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 8: ப. எண் 451 - 452).
இன்று கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலைத் தடை செய்ய வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கதறும் சங்கிகளும் அவர்களின் பாதம் தாங்கிகளான பார்ப்பனிய அடிமைகளும் குறைந்த பட்சம் இந்த நூலைத் தடை செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு தைரியம் இருக்கின்றதா? ஆபாசப் படம் பார்ப்பதை கேவலமானது, அருவருப்பானது எனச் சொல்லும் அதே வாய்கள் ஆபாசப் புராணங்களைப் படிப்பதை எப்படி புனிதம் என்கின்றன?
கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அது இந்துக்களின் மனதைப் புண்படுத்துகின்றது என்று சொல்லும் ஒரு யோக்கியனாவது தன்னுடைய குழந்தைகளுக்கு கந்தனின் பிறப்புக் கதையை சொல்லித் தர முடியுமா? சொல்லித் தருவேன் என்று ஒருவனும் சொல்லத் துணிய மாட்டான். சரோஜா தேவி புத்தகங்களுக்கும் பார்ப்பனிய புராண புரட்டுக்களுக்கும் ஏதாவது அடிப்படை வித்தியாசம் இருக்கின்றதா?
இந்து மதம் என்ற பார்ப்பனிய மதம் ஆபாசமாக உள்ளது, அதன் இலக்கியங்கள் ஆபாசமாக உள்ளன, அதன் கடவுள்கள் ஆபாசமாக உள்ளார்கள், எல்லாவற்றுக்கும் மேலாக அதன் சாதியக் கட்டமைப்பு இந்த நாட்டின் உழைக்கும் கோடான கோடி மக்களை சூத்திரர்கள் (பார்ப்பானின் வைப்பாட்டி மகன்) என இழிவு செய்கின்றது. தன்மானமும், சுயமரியாதையும் உள்ளவர்கள் அதை எதிர்க்கின்றார்கள். “நீ யாரடா நாயே எங்களைப் பார்த்து சூத்திரன் என்று சொல்ல” எனக் கேள்வி எழுப்புகின்றார்கள்.
அதைத்தான் வள்ளுவர் கேட்டார், சித்தர்கள் கேட்டார்கள், பெரியார் கேட்டார், அம்பேத்கர் கேட்டார். அவர்களின் மொழியும் தொனியும் வேண்டுமானால் வேறுபடலாம். ஆனால் குரல் ஒன்றுதான். அந்தக் குரல் தான் கருப்பர் கூட்டத்தின் குரலும். இது புதிய குரலல்ல, பல நூற்றாண்டுகளாக சாதிய அடக்குமுறையை எதிர்த்து திமிறி எழுந்து கொண்டிருக்கும் மானமுள்ள மனிதர்களின் குரல். பதவிக்காகவும், பணத்திற்காகவும் நக்கிப் பிழைப்பவர்களுக்கு அது ஒருபோதும் புரியாது, புரிந்து கொள்ளவும் முடியாது.
பார்ப்பன புராணங்களை அம்பலப்படுத்தினால் உடனே இந்து மதத்தை கேவலப்படுத்தி விட்டார்கள் என தனது அடிமைகளைத் தூண்டிவிட்டு தனது ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வதை ஒரு உத்தியாகவே வரலாறு முழுவதும் பார்ப்பனியம் கடைபிடித்து வருகின்றது. மிகப் பழைய உத்தியாக இருந்தாலும் பார்ப்பனிய அடிமைகள் இருக்கும்வரை அந்த உத்தி பயனளித்துக் கொண்டே தான் இருக்கின்றது.
உண்மையில் கருப்பர் கூட்டம் அம்பலப்படுத்தியது வடமொழி பார்ப்பன ஆபாச கந்தனைத்தான் என்பதையும், தமிழர்கள் வணங்கிய முருகனை அல்ல என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ளும் போதுதான் பார்ப்பன, பார்ப்பன அடிமைகளின் சதிக்கு இரையாகாமல் நம்மால் தப்பிக்க முடியும்.
சங்க இலக்கியங்களின்படி முருகன் குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவான். அவனது பூசாரியின் பெயர் வேலன் ஆகும். இந்த வேலனுக்கு என்ன வேலை என்றால் வெறியாடி குறி சொல்வது. தலைவியின் காதல் நோயால் மெய்ப்பாடு தோன்றும் பொழுது தாயும் செவிலியும் அந்நோய் இன்னது என்று அறிய வேலனை அழைத்து வெறியாட்டம் நிகழ்த்தி வினவுவர். இச்சமயங்களில் ஆடறுத்து, ஆடுகளத்தை மெழுகி, வேலனைத் தருவித்து வெறியாட வைப்பார்கள். வேலன் வருங்காலம் பற்றி குறி சொல்வதோடு மந்திர மருத்துவனாகவும் இருப்பான். இந்த வேலன் மீது ஏறி இவனைக் குறி சொல்ல வைக்கும் தெய்வத்தின் பெயரே முருகு ஆகும்.
முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேல! சினவேல் ஓம்புமதி: வினவுவது உடையேன்; பல்வேறு உருவின் சில்அவிழ் மடையொடு, சிறுமறி கொன்று, இவள் நறுநுதல் நீவி வணங்கினை கொடுத்தி ஆயின், அணங்கிய விண்தோய் மாமலைச் சிலம்பன் ஒண்தார் அகலமும் உண்ணுமோ, பலியே?
இந்தக் குறுந்தொகை பாடலில் வேலன் வெறியாடுவதைப் பற்றி கூறப்படுகின்றது.
"முருகனை வழிபட்டு, இங்கு வெறியாடுவதற்கு வந்தவனாகிய அறிவு முதிர்ச்சியுடைய வேலனே! கோபித்துக் கொள்ளலைப் பாதுகாப்பாயாக. நின்னிடத்தே கேட்பது ஒன்று உடையேன். பலவாக வேறுபட்ட உருவினைக் கொண்டதும், சில சோற்றையுடையதுமான படையலோடு, சிறிய ஆட்டுக் குட்டியையும் கொன்று, இவளது நாறிய நெற்றியைத் தடவி, முருகனை வணங்கிப் பலியாகக் கொடுத்தனை. ஆனால் இவளை வருத்திய வானளாவிய பெரிய மலைப்பக்கத்தைக் கொண்ட தலைவனது ஒள்ளிய மாலையணிந்த மார்பும், நீ கொடுக்கும் பலியை ஏற்று உண்பதாகுமோ?" என்று தலைவி கூறுவதாகப் பாடல் உள்ளது.
இந்தப் பாடலில் நாம் கவனிக்க வேண்டியது முருகனுக்கு பலி கொடுக்கப்படுவதைப் பற்றி குறிப்பிடப் படுகின்றது. மேலும் இங்கே எந்த மந்திர வழிபாடும் இல்லை. மிகச் சாதாரணமாகவே தங்களுடைய வழிபாட்டை சங்க கால மக்கள் செய்துள்ளார்கள். கூழைக்கும்பிடு போடும் வழிபாட்டு முறை அப்போது இல்லை என்பதும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். முருகனது வேலை என்பது தலைவியின் நோய்க்கான காரணத்தைக் கூறுவது மட்டுமே. மேலும் ஒரு அகநானூற்றுப் பாடல் முருகனை இகழ்ந்து பேசும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
வெறிபுரி ஏதில் வேலன் கோடை துயில் வரத்தூங்கும் ஆயின், மாரிக்குரல் அறுத்து, தினைப்பிறப்பு இரீஇ, சொல்லாற்றுக் கவலை பயம் கறங்கு தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா! வேற்றுப் பெருந்தெய்வம் போருடன் வாழ்த்தி
வேலன் வெறியாடல் தலைவி நோய்க்கு மருந்தாகாது. இச்சிறு தெய்வத்தின் சக்தி தனக்குக் காதல்நோய் தந்த பெருந்தெய்வமான மலைநாட்டுத் தலைவனின் சக்திமுன் வெல்லாது. இங்கு வேலனையும் அவன் வணங்கும் முருகனையும் அற்பச் சக்தியுடைய சிறு தெய்வமெனத் தலைவி இகழ்ந்து பேசுகிறாள்.
மேலும் “மடையம் மன்ற வேலன்” போன்ற சொற்கள் வேலனையும் அவனது தெய்வமான முருகனையும் மடையர்கள் என்றே கூறிப்பிடுகின்றன.
அப்போது இருந்த முருக வணக்கத்தின் நிலை இதுதான். தங்களுக்கு எதாவது பிரச்சினை என்றால் வேலனை வரவழைத்து ஆடுபலி கொடுத்து அவனிடம் குறி கேட்பார்கள். இதுதான் நிலை. முருகனுக்கு என்று கோவில் தனித்து இருந்ததாக பெரிய அளவில் சான்றுகள் இல்லை. ‘அணங்கு உடை முருகன் கோட்டத்து’ என்ற புறநானூற்று வரியால் சில இடங்களில் இருந்திருக்கலாம் என்று ஊகிக்க முடிகின்றது.
பரிபாடல் காலத்திலும் திருமுருகாற்றுப் படை காலத்திலும் முருகனுக்கு என்று ஆறுபடை கோவில்கள் உருவாகிவிட்ட நிலையைக் காண முடிகின்றது. மேலும் பரிபாடலிலும், திருமுருகாற்றுப் படையிலும் குறிப்பிடப்படும் முருகன் தமிழக மக்கள் வணங்கிய முருகன் அல்ல; அது வட நாட்டு மக்கள் வணங்கிய ஸ்காந்தன் என்பது இந்த நூல்கள் வழி அறிய முடிகின்றது.
தமிழ்நாட்டு மக்கள் வணங்கிய முருகனுக்கு அப்பன் பெயர் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. பழையோள் சிறுவன், கொற்றவை செல்வன் என்றே முற்பட்ட சங்க இலக்கியங்களில் அழைக்கப்படுகின்றான். பின்நாளில் வந்த பரிபாடல், திருமுருகாற்றுப் படை போன்ற நூல்களிலேயே முருகனின் அப்பன் சிவன் என்று குறிப்பிடப் படுகின்றது. மேலும் அவனது பிறப்பைப் பற்றிய புராணமயமாக்கப்பட்ட கதைகளும் வருகின்றது.
வட மொழி நூல்களில் ஸ்காந்தனுக்கு அப்பன் அக்கினிதான். பின்நாளில் அக்கினி செல்வாக்கு இழந்த போது அவன் ருத்திரனின் மகனாக்கப்பட்டான். இப்போதோ அவன் சிவனின் மகன் ஆவான். ஸ்காந்தனின் அப்பன் யாரென்று ஸ்காந்தனுகே தெரியாத நிலையே நீடிக்கின்றது. அப்படிப்பட்ட ஸ்காந்தனை தமிழ் முருகனுடன் இணைத்ததுதான் பரிபாடல் மற்றும் திருமுருகாற்றுப் படையின் வேலை.
தமிழ்நாட்டில் உள்ள முருகனுக்கு வள்ளி என்ற ஒரு மனைவி மட்டுமே முற்பட்ட சங்க இலக்கியங்களில் குறிப்பிடப் படுகின்றது. ‘முருகு புணர்ந்தியன்ற வள்ளி போல’ என்று நற்றிணை வரி மூலம் இதை அறியலாம். ஆனால் பரிபடால், திருமுகாற்றுப் படை போன்றவை முருகனுக்குத் தெய்வானை என்ற மனைவியும் இருப்பதாக குறிப்பிடுகின்றன. இந்தத் தெய்வானை ஒரு பாப்பாத்தி ஆவாள்.
அசுரர்களை (தமிழர்களை) அழித்து தேவலோகத்தை மீட்டதற்காக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணமுடித்து வைக்கின்றான். இதில் வள்ளி களவு மணத்தின் பிரதிநிதி ஆவாள். தெய்வானை கற்பு மணத்தின் பிரதிநிதி ஆவாள். தமிழ்ச் சமூகம் கொண்டாடிய களவு மணம் தெய்வானையின் கற்பு மணத்தால் கேவலப்படுத்தப் படுகின்றது.
பார்ப்பன அடிமைகளாக இருந்த தமிழ்ப் புலவர்கள் முருகனை பார்ப்பன மயமாக்கி, பைங்கட் பார்ப்பனன் சிவனை அவனுக்கு அப்பனாக மாற்றினர். சிவன் வழிபாடு தமிழ்நாட்டில் முற்பட்ட சங்க இலக்கியக் காலத்தில் அவ்வளவு பிரபலமாகவில்லை. சேயோன் ஒரு நிலத்தின் கடவுளாக மட்டுமே குறிப்பிடப் பட்டான். வடநாட்டு இலக்கிய படைப்பில் தான் ஸ்காந்தன் மயில், சேவல், பாம்பு போன்ற விலங்குகளோடு தொடர்புபடுத்தப் படுகின்றான். தமிழ்நாட்டு வழிபாட்டு மரபில் அவனுக்கு மயில், மண்ணாங்கட்டி எல்லாம் கிடையாது. திருப்பரங்குன்றத்தில் இருந்த முருக வழிபாட்டை குறிப்பிடும் பரிபாடல், திருப்பரங்குன்ற மக்கள் முருகனை இரு வழியாக வழிபட்டதைக் குறிப்பிடுகின்றது. கோயிலில் சிலை உருவில் செவ்வேலையும், கோயிலுக்கு வெளியே கடம்ப மரத்தடியில் வேலன் வெறியாட, பொதுமக்கள் வேலையும் கடம்ப மரத்தையும் வழிபட்டதாகக் கூறப்படுகின்றது.
இலக்கியங்களின் துணைகொண்டு பார்க்கும் போது முருகனுக்கான வழிபாடு என்பது நாட்டார் வழிபாட்டு மரபை முழுவதுமாகப் பின்பற்றியதாகவே இருந்திருக்கின்றது. ஆட்டு ரத்தத்தில் தினை வகைகளைப் பிசைந்து முருகனுக்குப் படைக்கும் வழக்கம் இருந்துள்ளது. இப்போது முருகன் சுத்த சைவமாகி விட்டான்.
முற்பட்ட சங்க இலக்கியங்களில் முருகனுக்கு இரண்டு கைகள் மட்டுமே இருக்கின்றது. ஆனால் பிற்கால இலக்கியங்களான பரிபாடல், திருமுருகாற்றுப் படை போன்றவை முருகனுக்கு ஆறுதலைகளும், பன்னிரெண்டு கைகளும் உள்ளது போல குறிப்பிடுகின்றன. மேலும் முருகனின் அண்ணன் கணேசன் என்பதும், அவர்களின் அப்பன், அம்மா சிவன், பார்வதி தம்பதிகள் என்பதும், உலகைச் சுற்றி வந்து ஞானப்பழத்தை வாங்கும் கதையும் இந்து மதத்தின் புனித சொல்லான ‘ஓம்’ என்பதும் எந்த முற்பட்ட சங்க இலக்கியத்திலும் உறுதியாக இல்லை.
இப்போது சொல்லுங்கள் கருப்பர் கூட்டம் அம்பலப் படுத்தியது தமிழர்கள் வணங்கிய முருகனையா? இல்லை பார்ப்பன ஆபாச கந்தனையா? என்று. மானமற்ற மனிதர்களுக்கு வேண்டுமானால் கந்தன் முருகனாக இருக்கலாம். ஆனால் தன்மானமும் சுயமரியாதையும் உள்ளவர்களுக்கு முருகன் ஒரு போதும் கந்தனாக மாட்டான்.
- செ.கார்கி