மருத்துவர் சட்வா சாக்யா அவர்கள்  2016 அக்டோபர் 22-ஆம் நாளன்று வெளிவந்த விடுதலை நாளேட்டின் தலையங்கம் ஒன்றினைக் குறித்து மறுப்புக் கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார். கீற்று இணைய இதழில் "பௌத்தம் குறித்த 'விடுதலை' இதழின் கட்டுரைக்கு மறுப்பு" என்ற தலைப்பில் அக்கட்டுரை வெளிவந்துள்ளது.  

இதில் "குழப்பமான பொருள்படும்படி" எழுதப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கும் விடுதலை (அக்-22) தலையங்கம், 'அக்டோபர் 16 அன்று மருத்துவர் சட்வா சாக்யா உள்ளிட்ட 46 மருத்துவர்கள் இந்து மதத்திற்கு முழுக்குப் போட்டு பௌத்த மதத்தைத் தழுவியதை' வரவேற்று எழுதப்பட்ட ஒன்றாகும். 

மிக நீண்ட மறுப்பை எழுதியிருக்கும் மருத்துவர் அவர்கள், அத் தலையங்கத்தினை முழுமையாக வெளியிட்டிருந்தாலோ, அல்லது அதற்கான இணைப்பை முழுமையாகத் தந்திருந்தாலோ நாம் இப்போது இதற்கொரு விளக்கத்தை எழுத வேண்டியிருந்திருக்காது. 

இன்னும் சொல்லப் போனால் மருத்துவர் தனது மறுப்பில்  குறிப்பிட்டிருக்கும் முதல் 15 புள்ளிகளுக்கான (points) தேவையும் இருந்திருக்காது. அவற்றோடு முழுக்க உடன்பாடு நமக்கு உண்டு. எனவே மற்றவற்றைப் பேசும் முன் அத் தலையங்கத்தினை அப்படியே இங்கு தருவது அனைவரின் புரிதலுக்கும் உதவும் என்று கருதுகிறேன்.

பவுத்த மார்க்கம் தழுவினர் 47 டாக்டர்கள்

மகாராஷ்டிர மாநிலத்தின் நாகபுரியில் 1956ஆம் ஆண்டு அக்டோபர்  14ஆம் தேதி,  60 ஆண்டுகளுக்கு முன்பு, அண்ணல் அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து புத்த மார்க்கத் துக்கு 6 இலட்சம் பேருடன் சென்றார். 

இதை நினைவுகூரும் வகையில், கடந்த 16ஆம் தேதி சென்னையில் 47 மருத்துவர்கள் பவுத்த மதத்துக்கு மாறி இருக்கின்றனர். திருச்சியைச் சேர்ந்த பிரபல புற்றுநோய் மருத்துவர்  ஜி.கோவிந்தராஜ், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் எம்.வி. தம்பையா,  மயக்கவியல் நிபுணர் மருத்துவர் ஜானகிராமன் உள்ளிட்ட 47 பேர் பவுத்த மார்க்கத்தில் இணைந்துள்ளனர்

இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த மக்கள் மருத்துவக் குழுவைச் சேர்ந்த ஆனந்து கூறியதாவது:

“நாங்கள் அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்று கின்றோம். அவருடைய கோட்பாடுகளை மதிப்பதன் மூலம், ஏற்றுக்கொள்வதன் மூலம் பவுத்த மார்க்கத்துக்கு மாறுகின்றோம். கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் புஷ்ய மித்திர சுங்கன் என்ற மன்னன்,  ஆரியர்களின் சதுர்வருணக் கோட்பாட்டை, சதுர்வருண முறையை இந்தியாவில் ஏற்படுத்தினான். அப்போது பவுத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அவரின் சதுர்வருண முறையை ஏற்றுக்கொள்ளவில்லை. 

எனவே, ஏற்றுக்கொள்ளாதவர்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தனர். அவர்களின் வழிவந்தவர்கள்தான் இப்போது தலித்துகள் என்று அழைக்கப்படுகின்றனர். இதை வரலாற்றுப் பூர்வமாக அம்பேத்கர் நிரூபித்துள்ளார்.

இதன் காரணமாகத்தான், இப்போது தலித்துகள் பவுத்த மதத்துக்கு மாறுகின்றனர். நாங்கள் வரலாற்று ரீதியாக பவுத்தத்தைச் சேர்ந்தவர்கள்தான். அம்பேத்கர் இதனை தாய்மதம் திரும்புதல் என்று கூறுகிறார். எனவே நாங்கள் மதம் மாறவில்லை. தாய் மதத்துக்குத் திரும்புகின்றோம்.

ஒரு கோவிலின் அர்ச்சகராகவோ ஆகும் உரிமை இந்து மதத்தில் தலித்துகளுக்கு இல்லை. ஆனால், எங்களுடைய தாய் மதமான பவுத்தத்தில் எல்லா உரிமைகளும் உள்ளன. இந்து மதத்தில் இருந்து தீண்டாமை அனுபவிப்பதில் இருந்து விடுபட வேண்டும் என்று நினைக்கின்றோம்.

தலித்துகள் மீது  அனைத்துவிதமான தீண்டாமைகளும் கடைபிடிக்கப்படுகின்றன. நவீன தீண்டாமை, பொருளா தாரத் தீண்டாமை இன்னும் இருக்கின்றன. கிராமப்புறங்களில் மருத்துவராகப் பணிபுரியும்போது, தங்குவதற்கு வீடு கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். தலித்துகள்மீது கடைபிடிக்கும் தீண்டாமை எங்கள்மீதும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. இதனால்தான் நாங்கள் தாய் மதத்துக்குத் திரும்பினோம்‘’ என்று குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர்கள் 47 பேர் இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டு விட்டு புத்த மார்க்கம் தழுவியது குறிப்பிடத்தக்கதாகும் - அவர்கள் பாமரர்கள் அல்ல.

இந்து மதத்தில் இன்னும் தீண்டாமை இருக்கிறது. கோவில் கருவறைக்குள் செல்லுவதற்கு இங்கு ஜாதி தடையாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அரசமைப்புச் சட்டத்தில்கூட தீண்டாமை ஒழிக்கப்படு கிறது என்று (சட்டப் பிரிவு 17) சொல்லப்படுகிறதே தவிர, தீண்டாமைக்கு மூலகாரணமான ஜாதியை ஒழிக்க வழி செய்யப்படவில்லை. மதப் பாதுகாப்புப் பிரிவின்கீழ் சமூகத்தில் ஜாதி பாதுகாக்கப்பட்டுள்ளது. மனித சமூகத்தில் ஜாதி என்பது அருவருப்பானது, அநாகரிகமானது.

பூரி ஜெகந்நாதர் கோவிலுக்குள் மவுண்ட்பேட்டனை அனுமதித்தார்கள் (அவர் கிறிஸ்தவர்). இந்துவாக இருந்தாலும் அண்ணல் அம்பேத்கர் அனுமதிக்கப்பட வில்லை - இதுதான் இந்த அர்த்தமுள்ள(?) இந்து மதம்!

கருவறைக்குள் அனுமதிக்கப்படாதது குறித்து புத்த மார்க்கம் மாறிய மருத்துவர்கள் கூறுவது மிகவும் முக்கியமானது.

இதுகுறித்துத் தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தொடங்கிய போராட்டம் - தொடர்ந்து திராவிடர் கழகத்தால் முன்னெடுக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியும் உச்சநீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டது. இப்பொழுது உச்ச நீதிமன்றம் சாதகமாக தீர்ப்புக் கூறியும்கூட மாநில அரசு பாராமுகமாக இருக்கிறது.

இந்த நேரத்தில் பவுத்தம் மாறிய மருத்துவர்கள் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். 1956 அக்டோபர் 14 ஆம் தேதியன்று நாக்பூரில் அண்ணல் அம்பேத்கர் 6 லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களோடு பவுத்தம் தழுவியபோது எடுத்துக்கொண்ட அந்த 22 உறுதி மொழிகளும் முக்கிய மானவை.

இன்னொன்று அம்பேத்கர் கூறிய புத்த மார்க்கம் வேறு - இப்பொழுதுள்ள புத்த மதம் வேறு; மார்க்கம் மதமானதால் அதிலும் ஏராளமான மூடநம்பிக்கைகள் குடியேற்றப்பட்டு விட்டன. இலங்கையில் புத்தம் வெறியாகி புத்தர் சிலையைத் தமிழர்களின் குருதியால் குளிப்பாட்டுகிறார்கள்.

மார்க்கத்துக்கும், மதத்துக்கும் உள்ள வேறுபாட்டை உணரவேண்டும் என்று மதம் மாறிய மருத்துவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

- விடுதலை தலையங்கம் (26.10.2016)

அவ்வளவு தான். இதில் அநேகமாக கடைசி இரண்டு பத்திகளைத் தவிர, மற்றவற்றில் தோழர்களுக்குக் கருத்து மாறுபாடிருக்காது என்று கருதுகிறேன். அண்ணல் அம்பேத்கர் ஏற்றுக் கொண்ட 22 உறுதிமொழிகளையும் வலியுறுத்துவதிலும் தோழர்களுக்கு மாற்றுக் கருத்தில்லை என்பதையும் நாம் அறிவோம். ஏனெனில் அவை தான் அம்பேத்கரின் மதமாற்றச் சிந்தனையின் உயிர்நாடி. அம்பேத்கர் மதம் மாறும் சிந்தனைக்கு வந்த காலத்திலேயே (1930-களின் பிற்பகுதியில்) "தனித்து மதம் மாறாதீர்கள், பெரும் மக்கள்திரளுடன் செல்லுங்கள்" என்று அக்கறையோடு ஊக்குவித்தவர் பெரியார். அதே அக்கறையும் ஊக்கமும் இப்போதும் உண்டு. அதனால் பவுத்தத்திற்குத் திரும்புதல் குறித்து எந்த விமர்சனமும் நமக்குக் கிடையாது.

கடைசி இரண்டு பத்திகள் சொல்வதென்ன?

"அம்பேத்கர் கூறிய புத்த மார்க்கம் வேறு - இப்பொழுதுள்ள புத்த மதம் வேறு; மார்க்கம் மதமானதால் அதிலும் ஏராளமான மூடநம்பிக்கைகள் குடியேற்றப்பட்டு விட்டன. இலங்கையில் புத்தம் வெறியாகி புத்தர் சிலையைத் தமிழர்களின் குருதியால் குளிப்பாட்டுகிறார்கள்." என்பதேயாகும்.

அம்பேத்கர் வலியுறுத்திய நவயானாவும், இன்றைக்கு உலகின் பிற பகுதிகளிலும், இந்தியாவின் பெரும் மடங்களிலும் பின்பற்றப்படுவதும் ஒன்று தானா என்ற கேள்வி தோழர்களுக்குரியது. 

புத்த 'மதத்தி'ல் இருக்கும் மூடநம்பிக்கைகள் இலங்கை, மியான்மார் போன்ற நாடுகளில் எப்படி விரவியிருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுவதும் அது குறித்து எச்சரிக்கை தருவதும் அவசியமான கடமை என்று நாம் கருதுகிறோம். கவனமாகப் போகும் தோழர்கள் எனினும், 'பார்த்து கவனமாகப் போ' என்று சொல்வதில் தவறுமில்லை; அது அவர்களைக் குறைத்து மதிப்பிடுவதுமில்லை. நம் அக்கறையின் விழைவு!

இலங்கையில் எழுந்தது இனப்பிரச்சினையா? மதப் பிரச்சினையா? என்பதற்கெல்லாம் பக்கம் பக்கமாக எழுதியும், பேசியும் விளக்கம் தந்துள்ளோம். அங்கே நடக்கும் கொடுமைகளை முதலில் மனிதப் பிரச்சினையாகவும், அடுத்து ஆதரவுக் குரலற்று செத்து மடிந்த எம் தமிழ்ச் சொந்தங்களின் தொப்புள் கொடி என்ற உணர்வோடும் தான் திராவிடர்கழகம் பார்க்கிறது. இவையெல்லாம் பழங்காலத்திலிருந்து தரப்படும் விளக்கங்கள். ஆனால், அங்கு கொடுமை புரிந்த சிங்கள இன வெறிக்கு தூபமிட்டு வளர்த்த பௌத்தபிக்குகளைக் குறித்துச் சொல்லாமலிருக்க முடியுமா? அவர்களுக்கு மதத்தின் அடிப்படையில் கிடைத்திருக்கும் பின்புலத்தில் இன அழிப்பில் அவர்கள் ஏற்ற பங்கினைக் குறித்து சிந்திக்காமலிருக்க முடியுமா? என்பதையும் தோழர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறோம்.

இலங்கையில் அதை இந்துமதப் பிரச்சினையாகக் காட்டி, பிணத்தின் மீது மதவெறியூட்ட முயலும் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் கும்பலை, திராவிடர் கழகம் வீதிதோறும் கிழித்துத் தொங்கவிட்ட செய்திகளை, பேச்சுகளை, மக்களுக்கு விழிப்புணர்வூட்டிய முழக்கங்களை மருத்துவர் அவர்களே அறிவார் என்று நம்புகிறோம். 

இந்தியாவில் பௌத்தத்தை இந்து மதத்துடன் இணைக்கும் அயோக்கியத் தனத்துக்கும், புத்தரை விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒன்றாகக் குறிப்பிட்டுப் பேசிய அத்வானியின் புரட்டுக்கும் எத்தகைய கடும் மறுப்பை திராவிடர்கழகமும் விடுதலையும் தெரிவித்தன என்பதையும், இன்றைக்கும் புத்தரை அவதாரமாக்கும் அயோக்கியத்தனத்தை பட்டி தொட்டிகள் தோறும் போட்டுடைத்துக் கொண்டிருக்கும் திராவிடர் கழகப் பேச்சாளர்களின் உரையினையும் நினைவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.

மேலும், இதற்கு, அதற்கு என்று எழுப்பப்பட்டிருக்கும் சில கேள்விகளுக்கு வரிக்கு வரி விளக்கம் சொல்வதோ, மறுப்பு சொல்வதோ இங்கு தேவையற்றது. 

ஏனெனில் மத நம்பிக்கை ஒழிய வேண்டுமா, ஜாதி ஒழிய வேண்டுமா என்றால் முதலில் ஜாதி ஒழிய வேண்டும்; மத நம்பிக்கை குறித்தெல்லாம் பிறகு பேசிக் கொள்ளலாம் என்பதுதான் பெரியாரியல். நாத்திகமா? ஆத்திகமா? போன்ற கேள்விகளெல்லாம் 'இங்கு' தேவையற்றவை. அதை விடுதலையும் எழுப்பவில்லை. அது குறித்து விவாதிக்கவும் நான் வரவில்லை. 

ஏனெனில், நாம் இப்போதும் எப்போதும், ஜாதி-வர்ணக் கொடுமைகளை வலியுறுத்தும் இந்து மதத்திற்கெதிராக, இந்துத்துவாவிற்கு எதிராக அணி திரளும் தோழர்களுடன் நிற்கிறோம். இந்தப் பிரச்சினைகள் முடிந்த பின், மதங்களின் தேவை குறித்து மதம் வேண்டுவோருடனும், பிற மதத்தவருடனும் இணைந்தோ, தனித்தோ தோழர்கள் விவாதிக்க வந்தால், அதைப் பிறகொரு காலத்தில் வைத்துக் கொள்வோம். ரத்தம் குடிக்க அலையும் ஓநாய்கள் உற்றுநோக்கியபடி இருக்கின்றன என்ற கவலை எங்களுக்கு உண்டு. 

உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்.. ஆன மட்டும் ஒடுக்கப்பட்டோரை இந்து மதத்திலிருந்து வெளியே எடுங்கள். ஜாதியைப் பாதுகாக்கும் இந்து வர்ணாசிரமச் சிந்தனைகளைப் போட்டு உடைத்து நொறுக்குங்கள். அப்போதும் அந்த கடைசி இரண்டு பத்திகளைச் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு எங்களுக்கிருக்கும். 

நம்மைப் பிரிப்பவற்றை விலக்குவோம்; நம்மை இணைப்பவற்றை விரிவாக்குவோம்.

ஜாதி ஒழிக்கும் பணியில் ஒன்றிணைவோம்.

வேண்டுகோள் குறிப்பு: விடுதலைக்கு மறுப்பாக எழுத தேவையிருந்திருக்காது என்று நான் குறிப்பிட்டிருக்கும் முதல் 15 புள்ளிகளையும், தனியே ஒரு கட்டுரையாக்கி வெளியிட்டால், பவுத்த மார்க்கம் தழுவ வேண்டியதன் வரலாற்றுக் காரணத்தை உணர்த்துவதாக அமையும். புரிதலுக்கு நன்றி!

Pin It