மேல்நிலைக் கல்வியில் சாதி சார்பு குறித்த முதல் பார்வை, எனக்கு 1999இல் ஏற்பட்டது. "மருத்துவ அறிவியலுக்கான பல்கலைக்கழக கல்லூரி'யைச் சேர்ந்த தலித் மாணவர்களின் ஒரு குழுவினர், நான் தலையங்க எழுத்தாளராகப் பணிபுரிந்த ஆங்கிலப் பத்திரிகையின் அலுவலகத்தில் என்னைச் சந்தித்தனர். அம்மாணவர்கள் அக்கல்லூரி விடுதியில் தங்கியிருந்தனர். அங்கு நடைபெற்ற சாதிய இழிவுகளையும், வேறுபாடுகளையும் அமைதியாகப் பொறுத்துக் கொண்டு வந்திருந்தனர். தலித் மாணவர்கள் தற்செயலாகவோ, திட்டமிட்டோ, விடுதியின் இரு தளங்களில் மட்டுமே தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு வேறு எங்கும் அறைகள் ஒதுக்கப் படுவதில்லை. உணவு அருந்தும் அறையில் இவர்கள் அனைவரும் ஒன்றாக ஒரு ஓரமாக, பெரும்பான்மையினராக இருக்கும் முற்பட்ட சாதி மாணவர்களால் கட்டாயப்படுத்தி அமர வைக்கப்பட்டனர். ஒரு தலித் மாணவர் வேறு எங்கும் அமர்ந்தால் அவர் இழிவுபடுத்தப்படுவார். "கேவலமான ஷட்டு'' தவறுதலாகப் பிறருடன் அமர்ந்த ஒருவரை நோக்கி சொல்லப்பட்ட வார்த்தை இது. "நீ எங்களுடன் சேர்ந்து சாப்பிட முடியாது.''

Newspaper
தலித்துகள், இந்த அவமானங்களையும் கொடுமைகளையும் ஒரே ஒரு காரணத்துக்காகப் பொறுத்துக் கொண்டனர். அவர்களில் ஒருவரின் பெற்றோர், "நீங்கள் எப்படியாவது மருத்துவராக வேண்டும்' என்று அவர்களை அமைதிப்படுத்தி இருந்தார். ஆனால், இத்தகைய இழிவுகள், ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறின. ஒரு மாணவர் மிக மோசமாக அடித்து காயப்படுத்தப்பட்டார். மற்றொருவரின் அறை சூறையாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மறியல் செய்ய முடிவு செய்தனர். இத்தருணத்தில் தான் அவர்கள் எனது அலுவலகத்திற்கு வந்தனர்.

அவர்கள் கூறியதைக் கேட்ட பிறகு, நான் பணியாற்றிய நாளேட்டின் நகர செய்திப் பிரிவின் தலைவரைத் தொடர்பு கொண்டு, இது குறித்து முழு விவரம் அறிந்து வர யாரேனும் ஒருவரை "மருத்துவ அறிவியலுக்கானப் பல்கலைக்கழகக் கல்லூரி'க்கு அனுப்புமாறு கூறினேன். ஒரு செய்தியாளர் விரைவில் அனுப்பி வைக்கப்படுவார் என்று எனக்கு உறுதியளிக்கப்பட்டது. பல நாட்கள் கடந்தன. ஆனால், ஒரு செய்தியும் அச்சில் வரவில்லை. ஒரு செய்தியாளர் கூட அந்தப் பணிக்கு ஒதுக்கப்படவில்லை என்பது எனக்குத் தெரிய வந்தது. நான் மீண்டும் முயற்சி செய்தேன். இம்முறை ஆசிரியர் குழுவில் ஒருபடி மேலிருப்பவரை அணுகினேன். மீண்டும் எந்த பதிலும் இல்லை. ஒரு கட்டத்தில் நானே அச்செய்தியை எழுத முடிவெடுத்தேன். இதற்காக அரை நாளை அக்கல்லூரியில் செலவிட்டேன். கல்லூரி நிர்வாகிகள், போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் மற்றும் பொதுப் பிரிவு மாணவர்கள் அனைவரையும் சந்தித்துப் பேசினேன்.

நான் அக்கட்டுரையை முடித்து நிர்வாகத்திடம் அளித்தேன். அது, மறுநாளோ அதற்கடுத்த நாளோ வரவில்லை. அக்கட்டுரை ஆர்வமூட்டுவதாக இல்லை என்றோ, தரமாக இல்லை என்றோ அவர்கள் யாரும் கூறவில்லை. ஆனால், எப்படியோ அதற்கு மட்டும் அவர்களால் இடம் ஒதுக்கவே முடியவில்லை. தலித் மாணவர்கள் போராட்டம் தொடங்கி முழுமையாக ஒரு மாதத்திற்குப் பிறகு அக்கட்டுரை வெளிவந்தது; ஆனால் வெட்டப்பட்டு சிதைக்கப்பட்ட நிலையில். மருத்துவ அறிவியலுக்கான பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த தலித் மாணவர்களின் வேதனை, வேறு பத்திரிகைகளுக்கோ, தொலைக்காட்சிகளுக்கோ ஒரு செய்தியாகவே படவில்லை என்பதை சொல்லத் தேவையில்லை.

நான் இந்த நிகழ்வைக் கூறுவதற்குக் காரணம், இது இன்று அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் மற்றும் பிற கல்லூரிகளைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்தி வரும் இடஒதுக்கீட்டிற்கு எதிரானப் போராட்டத்திற்கு ஊடகங்கள் கொடுத்து வரும் அசாதாரணமான முக்கியத்துவத்திற்கு - எவ்வாறு நேர் முரணாக இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டத்தான்.

வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் சுழன்று கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் படக்கருவிகளுக்கு இடையேயும், "சம உரிமைக்கான மருத்துவர்கள் அமைப்பின்' இடஒதுக்கீட்டிற்கு ஆதரவான போராட்டம் மட்டும் அப்பட்டமாக இருட்டடிப்புச் செய்யப்பட்டது. ஒரு தொலைக்காட்சி அலைவரிசை மட்டும் எதிர்ப்புக்கு எதிர்ப்பை கடந்த வாரம் ஒளிபரப்பியது. அதுவும் ஒரு செய்தியாளர், அவர் எடுத்த பல காட்சிகளுள் ஒன்றாக அதை அளித்தபோது மட்டுமே.

பல நேரங்களில் இப்படியான தொலைக்காட்சி செய்தியாளர்களை, இடஒதுக்கீட்டிற்கு எதிரான மருத்துவர்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்ப்பது கடினமாக இருக்கிறது. சிலர் பயன்படுத்திய அறிவற்ற, சாதிய அடிப்படையிலான எதிர்ப்பு முறைகள் தெருக்கூட்டுவது, காலணிக்கு மெருகேற்றுவது, பிற்படுத்தப்பட்டவர்களும் பிறரும் தங்கள் இடத்தை நினைவில் வைத்துக் கொள்ள வலியுறுத்தியும் பாடல்களைப் பாடுவது இவை அனைத்தும் எவ்வித விமர்சனமும் இன்றி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன.

நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மீது, இத்தகைய வெறுப்பையும் வேறுபாட்டையும் கொண்டிருக்கும் "திறமை'யான மாணவர்கள், என்ன மாதிரியான மருத்துவர்களாக உருவெடுப்பார்கள் என்பது குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை. பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டங்களை போக்குவரத்துக்கு இடையூறாகவும், நடைமுறை வாழ்க்கைக்கு இடையூறு செய்பவையாகவும் மட்டுமே ஊடகங்கள் காட்டுகின்றன. ஆனால், அதே நேரத்தில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் வேலை நிறுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஏழை நோயாளிகளின் நிலை பின்னுக்குத் தள்ளப்பட்டு, மருத்துவ மாணவர்களின் போராட்டம் "வீரஞ்செறிந்த' ஒன்றாக முன்னிறுத்தப்படுகிறது.

ஊடகங்களினால் உருவாக்கப்பட்ட இந்த கட்டுப்பாடற்ற கூச்சல்களுக்கு நடுவே, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் அதிகாரிகளே எந்த அளவிற்கு இடஒதுக்கீட்டிற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்ட எவரும் இல்லை. சில காலத்திற்கு முன்பு, ஏழை நோயாளிகளிடமிருந்து வாங்கப்படும் கூடுதலான கட்டணத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்த முயன்ற மருத்துவர்கள், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டார்கள். உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் புல்வெளிகளை ஆக்கிரமித்து, குளிரூட்டப்பட்ட "ஷாமியானா'க்களை அமைத்த போது எவரும் எதிர்ப்புக் காட்டவில்லை. மாறாக, அவர்களுக்கு வியாபாரிகள், உயர் மேலாளர்கள் மற்றும் கணிப்பொறித் துறையின் ஊழியர்கள் (இவர்களின் முதலாளிகள் பொதுவாக, தங்கள் சொந்த ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதைத் தடை செய்திருக்கிறார்கள்) ஆகியோரின் "பேராதரவைப்' பெற்றனர்.

கவுரவமான விதிவிலக்குகளான "அவுட்லுக்', "இந்து', "பிரண்ட்லைன்' மற்றும் சில தனிப்பட்ட இதழியலாளர்களைத் தவிர, வேறு எவரும் நடுநிலையாக செய்திகள் வெளியிடவில்லை. நம் ஊடகங்களின் செய்திப் பிரிவில் பல சாதியினரின் பங்களிப்பும் பெருமளவில் இருந்திருந்தால், ஊடகங்களின் செய்திகள் சற்றேனும் நடுநிலையாக இருந்திருக்கலாம் அல்லவா? வேறு வகையில் கூற வேண்டுமானால், முன்னேறிய சாதி மாணவர்களை எவ்வகையான இடஒதுக்கீட்டையும் எதிர்க்கத் தூண்டுவதன் மூலம், முன்னேறிய சாதியினைச் சேர்ந்த செய்தி ஆசிரியர்களும், ஊடகவியலாளர்களும், இடஒதுக்கீட்டிற்கு எதிரான தங்கள் சொந்த பொறுமையின்மையை தான் வெளிப்படுத்தினார்களா? அப்படியெனில் இது குறித்த ஊடக செய்திகள், வசதி வாய்ப்புள்ளவர்களின் "தொழிற்சங்க' ஒற்றுமையைக் காட்டுகிறதா?

அதிகாரப்பூர்வமான அல்லது தொழில் ரீதியான புள்ளிவிவரங்கள் இல்லாதபோதும், முன்னேறிய சாதியினர் எந்தளவுக்கு ஊடகத் துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பதை ஒவ்வொரு ஊடகவியலாளரும் அறிவர். 1996இல் பி.என். உன்னியால் இது குறித்து ஆராய்ந்தபோது, தில்லியில் அங்கீகரிக்கப்பட்ட தலித் ஊடகவியலாளர் ஒருவர் கூட இல்லை என்பதைக் கண்டறிந்தார். இன்று அதைவிட மேம்பட்ட நிலை ஒன்றும் இல்லை. "ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்' கூட்டம் ஒன்றில் ஓர் அதிகாரப்பூர்வமற்ற ஆய்வு நிகழ்த்தப்பட்டதில், வட இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த ஊடக வியலாளர்களின் எண்ணிக்கை, பத்துகூட இல்லை என்பது தெரிய வந்தது. நானே தனிப்பட்ட முறையில் "பத்திரிகை தகவல் மய்ய'த்தில் அங்கீகரிக்கப்பட்ட இசுலாமிய பத்திரிகையாளர்களை எண்ணிய போது, அது மூன்று சதவிகிதத்தைக் கூட தாண்டவில்லை என்பதை அறிந்தேன்.

சட்டிஷ்கரில் பழங்குடியின ஊடகவியலாளர்களுக்கானப் பயிற்சித் திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, பின்னர் அது கைவிடப்பட்டது. காரணம், அப்பயிற்சியைப் பெற யாரும் இல்லை. தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இல்லாதிருப்பது, திட்டமிட்ட ஒதுக்குமுறை என்று எவரும் கூறவில்லை. இருப்பினும், அந்தக் காரணத்தையும் ஒதுக்கிவிட முடியாது. ஆனால், இதற்கான உண்மையான காரணத்தை ஒப்புக்கொள்ள ஊடகத் துறைக்கு துணிச்சல் தேவை.

இன்றைய உலகில் தொழில் முறை திறன் என்பதற்கு முக்கியத்துவம் அதிகம் உள்ள சூழலில், ஒரு ஊடகவியலாளரின் சாதி அல்லது மதம் ஒரு சிக்கலாக இருக்க முடியாது. ஆனால், பெரும்பான்மை மக்களுக்கு குறைவான அல்லது முற்றிலும் இடமளிக்காத ஊடகவியல் என்பது, அது எந்தச் சமூகத்தைப் பிரதிபலிக்க நினைக்கிறதோ, அதன் நுணுக்கமான சிக்கல்களைத் தவறவிட்டுவிடும். செய்திக் களங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், ஒரு கோணத்திலிருந்து மட்டுமே பார்க்கப்படும். ஊடுகவியலில் நிலவும் பெரும்பான்மை மோசமான அம்சங்களான இடப்பற்றாக்குறை, கிராமப்புற செய்திகள் மற்றும் ஏழை இந்தியர்களின் சிக்கல்கள் இடம் பெறாத தன்மை, கதை பாணியிலான செய்தி முறை, பங்குச் சந்தை கலாச்சாரம், உணர்வுப் பூர்வமானவற்றிற்கான முக்கியத்துவம் ஆகியவை நிச்சயமாக தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் இசுலாமிய ஊடகவியலாளர்கள் பெருமளவில் வருவதால் சரியாகாது. ஆனால், செய்தி அறையில் பல தரப்பினரும் இருக்கும் போது, அவர்களின் பல தரப்பட்ட வாழ்வனுபவங்களும், பெரும்பான்மை ஊடகவியலாளர்களின் நகர்ப்புற, பணக்கார, முன்னேறிய சாதியினரின் இந்து நம்பிக்கைகளின் உறுதியை மோதித் தகர்த்து, ஒரு புது அறிவூக்கத்தை அளிக்கும்.

இடஒதுக்கீட்டை ஓர் அச்சுறுத்தலாகப் பார்க்காமல் - இந்த ஊடகத்துறை, தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட சாதியினர் மற்றும் இசுலாமிய ஊடகவியலாளர்களின் நுழைவை தங்கள் ஊடகவியலை விரிவுபடுத்தி அதை மேலும் தொழில் முறை திறன் மிக்கதாகவும், நம்பகத் தன்மையுடையதாகவும் மாற்றும் ஒரு வாய்ப்பாகக் கருத வேண்டும். சென்ற ஆண்டு, "அங்கூர் மற்றும் சராய் - சி.எஸ்.டி.எஸ்.' என்ற அமைப்புகள், அண்மையில் இடிக்கப்பட்ட நாக்லா மாச்சி குடிசைப் பகுதிகளின் இளைஞர்களுக்கு கணினிகளை அளித்தது. அவ்விளைஞர்களின் வீடுகள் "புல்டோசர்'களால் தரைமட்டமாக்கப்பட்ட நேரத்திலும் எழுதியிருக்கக் கூடிய நாட்குறிப்புகளும், அவர்களின் பிற எழுத்துகளும் - இந்தியாவில் இன்று எவரும் காணக் கூடிய மிகத் தரமான எந்த ஊடகவியலுக்கும் குறைந்தது அல்ல. நிச்சயமாக அவர்களின் எழுத்துகள், நமது தொலைக்காட்சி அலைவரிசைகள் சொல்லக் கூடியதைவிடத் தெளிவாக, குடிசை மாற்று குறித்த உண்மைகளை விளக்குகின்றன. அவர்களின் எழுத்து வடிவம், நாம் பொதுவாக நமது செய்தித்தாள்களில் படிப்பதைவிட சிறப்பானதாக இருக்கிறது.

மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் ஆக விரும்பும் பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் கூறுவது போல, திறமை என்பது தங்கள் குழந்தைகளுக்கு மிக விலை உயர்ந்த கல்வியைத் தர, முதலீடு செய்ய வேண்டிய பணம் வைத்திருக்கும் பெற்றோர்களால் விலைக்கு வாங்கப்படும் வெறும் மதிப்பெண் அல்ல; அது சாதி மற்றும் சமூக - பொருளாதாரப் பின்னணிகளைக் கடந்து, அனைத்துக் குழந்தைகளிடமும் இருக்கக் கூடிய தனித்திறனையும் குறிக்கும். எந்தச் சமூகமும் அல்லது ஊடகத் துறை போன்ற எந்தத் துறையும் - இந்தத் திறனை சரியான விதத்தில் வெளிக்கொணர்ந்து பயன்படுத்தவில்லையெனில், அது அத்துறையின் வளர்ச்சிக்குப் பின்னடைவையே தரும். குறிப்பாக ஊடக நிறுவனங்கள் - ஊடகவியல் துறைக்கு வர விரும்பும் தலித், பழங்குடியின, இசுலாமிய மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினை சேர்ந்த மாணவர்களுக்குப் பயிற்சி வழங்குவது குறித்தும், பயிற்சி வேலைவாய்ப்புகள் அளிப்பது குறித்தும் சிந்திக்க வேண்டும்.

இடஒதுக்கீடு, சமூக நீதிக்கான சட்டப்படியான நடவடிக்கைகள், திட்டமிட்ட செலவு மற்றும் முதலீடு ஆகியவை அனைத்தும் - மக்கள் தங்களது நுட்பத் திறன்களை வெளிக்கொணர, சமூகம் செய்யும் முயற்சிகளேயாகும். அண்மையில், அநாகரீகமான கூச்சல் பிரச்சாரத்தை நடத்தியதன் மூலமும், கீழ்த்தரமான நோக்கமுடைய போராட்டத்தை நடத்த முற்பட்ட சாதி மாணவர்களைத் தூண்டியதன் மூலமும், அனைவருக்குமான சிறந்த கல்வி முறையை அமைப்பதற்கான வழிமுறைகள் குறித்த ஓர் ஆரோக்கியமான விவாதத்தை நடத்தும் வழிகளை ஊடகத்துறை அடைத்து விட்டது.

இந்த பரபரப்புகள் அடங்கிய பிறகு ஊடகத்துறை ஓர் அகத்தாய்வை நடத்தி, சமூகத்தை மேலும் அனைவருக்குமானதாக ஆக்குவதற்கு என்ன செய்ய இயலும் என்பதை சிந்திக்க வேண்டும். மிரட்டல்களைக் கைவிட்டு, கலந்துரையாடல்களை ஊக்கப்படுத்துவது என்பது ஒரு வகை. மற்றது, செய்தி அறையை பலருக்குமானதாக ஆக்க, இது வரை விடுபட்ட வகுப்பினரை இணைத்துக் கொள்வது. கோடிக்கணக்கான செய்திகள் - சொல்லப்படுவதற்காக வெளியே காத்திருக்கின்றன. நாம் சொல்லத் துடிப்பவர்களை சொல்ல அனுமதிக்க வேண்டியது மட்டுமே தேவை.

தமிழில் : பூங்குழலி
நன்றி : "தி இந்து'

தில்லியை அடிப்படையாகக் கொண்ட 40 தேசிய ஊடக நிறுவனங்களில் சூன் 2006இல் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அனில் சமாரியா, ஜிதேந்திர குமார், யோகேந்திர (யாதவ்) ஆகிய சமூக ஆய்வாளர்களால் நடத்தப்பட்ட இவ்வாய்வில் கண்டறியப்பட்ட முக்கிய முடிவுகள்:

* இந்தியாவின் தேசிய ஊடகத் துறை, சமூகப் பன்முகத் தன்மை அற்றதாக உள்ளது. அது, நாட்டின் சமூக இயல்பைப் பிரதிபலிக்கவில்லை.

* சாதி இந்துக்களே ஊடகத் துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அவர்கள் இந்திய மக்கள் தொகையில் 8 சதவிகிதம் உள்ளனர். ஆனால், தேசிய ஊடகத்தின் முக்கிய முடிவெடுக்கும் பொறுப்புகளில், அவர்களது பங்கு 71 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கிறது.

* பாலின வேறுபாடுகள் : முக்கிய முடிவெடுக்கும் பொறுப்பாளர்களில் 17 சதவிகிதத்தினர் மட்டுமே பெண்கள் இருக்கின்றனர். அவர்களது பிரதிநிதித்துவம், ஆங்கில மின்னணு ஊடகத் துறையில் அதிகமாக உள்ளது (32 சதவிகிதம்).

* ஊடகத்தின் சாதிய இயல்பும் - பிரதிநிதித்துவம் அற்றதாகவே உள்ளது. பார்ப்பனர்கள், காயஸ்தர்கள், ராஜபுத்திரர்கள், வைசியர்கள் மற்றும் காத்ரிக்கள் இந்திய மக்கள் தொகையில் 16 சதவிகிதமாக உள்ளனர். ஆனால், ஊடகத் துறையின் முக்கிய முடிவெடுக்கும் பொறுப்புகளில் - இவர்கள் 86 சதவிகிதமாக இருக்கின்றனர். "பூமிகார்'கள், "தியாகி'கள் ஆகியோரை உள்ளடக்கிய பார்ப்பனர்கள் மட்டும், முக்கிய ஊடகப் பொறுப்புகளில் 49 சதவிகிதம் உள்ளனர்.

* தலித்துகளும் பழங்குடியினரும் முக்கியப் பொறுப்புகளில் இல்லை என்பது வெளிப்படையான ஒன்றாக இருக்கிறது. 315 முக்கியப் பொறுப்பாளர்களில், ஒருவர்கூட தலித் மற்றும் பழங்குடியினர் இல்லை.

* பிற்படுத்தப்பட்ட சாதியினரின் பங்களிப்பு, மிக மோசமான அளவு குறைவாக உள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் 40 சதவிகிதம் இருக்கும் அவர்கள், வெறும் 4 சதவிகிதம் மட்டுமே ஊடகத் துறையின் முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர்.

* இசுலாமியர்கள், தேசிய ஊடகத்துறையில் மிக மோசமாக குறைவான பிரதிநிதித்துவம் பெற்றிருக்கின்றனர். நாட்டின் மக்கள் தொகையில் 13.4 சதவிகிதமாக இருக்கும் அவர்கள், வெறும் 3 சதவிகிதம் மட்டுமே உள்ளனர்.

* இரட்டை ஒடுக்குமுறைக்கு ஆளாகும் சமூகத்தினர், முக்கிய பொறுப்புகளில் அறவே இல்லை எனக் கூறலாம். முக்கிய பொறுப்புகளில் இருக்கும் பிற்படுத்தப்பட்டவர்களிலும் பெண்கள் யாரும் இல்லை. முக்கியப் பொறுப்புகளில் உள்ள இசுலாமியர்கள் மற்றும் கிறித்துவர்களில் - அவர்களிலேயே பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இல்லை.

-சித்தார்த் வரதராசன்
Pin It