பாபாசாகேப் பேசுகிறார்

தீண்டத்தகாதோரின் இரண்டாவது அரசியல் கோரிக்கை - சட்டமன்றத்தில் மட்டுமன்றி, நிர்வாகத் துறையிலும் தங்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதாகும். இந்தக் கோரிக்கையையும் இந்துக்கள் எதிர்க்கிறார்கள். இது தொடர்பாக இந்துக்கள் இரண்டு விதமான வாதங்களை முன்வைக்கிறார்கள் : நிர்வாகத் துறையானது சட்டமன்றத்திலுள்ள பெரும்பான்மையினரையே பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பது அவர்களது முதல் வாதம். நிர்வாகத் துறையில் இருப்பவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது, அவர்களது இரண்டாவது வாதம். முதலில் இரண்டாவது வாதத்தைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.

இந்த வாதம் அடிப்படையில் சரியானதாக இருக்கலாம். ஆனால் ஒரு பிரதிநிதித்துவ அரசாங்கத்தைப் பொருத்தவரையில், இந்த வாதத்தை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்த முடியாது என்பதையும் உணர்வது அவசியம். இது குறித்து பேராசிரியர் டைசே பின்வருமாறு கூறுகிறார் : “அறிவாற்றலில் மிகச் சிறந்த நாடாளுமன்றத்தை உருவாக்குவது முதன்மையான குறிக்கோளாக ஒருபோதும் இருந்ததில்லை. உண்மையில், தேசத்தின் எளிய மக்களின் அறிவாற்றலைவிட மிகவும் மேம்பட்டதொரு நாடாளுமன்றத்தை உருவாக்கும் முயற்சி, ஒரு பிரதிநிதித்துவ அரசாங்கம் என்ற கருத்துக்கு முரண்பட்டதாகவே இருக்கும்.''

தகுதியையும் திறமையையும் அளவுக்கு அதிகமாக வலியுறுத்துவது தேவையற்றது. தீண்டத்தகாத மக்கள் என்பதற்காக, அறிவற்றவர்களை அமைச்சர்களாக்க வேண்டும் என்று எவரும் கூறவில்லை. அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் பெறும் உரிமை வழங்கப்படுமாயின், தீண்டத்தகாதோர் தங்களில் மிகச் சிறந்தோரை இவ் உயர் பதவிகளுக்குத் தேர்ந்தெடுப்பர் என்பதில் அய்யமில்லை; இந்த இடங்களை நிரப்புவதற்கு ஒவ்வொரு மாகாணத்திலும் ஏராளமானோர் இருக்கின்றனர்.

மேலும், இந்த நிபந்தனையை தீண்டத்தகாதோருக்கு மட்டும் ஏன் பொருத்த வேண்டும்? அமைச்சரவையில் இடம் பெறும் உரிமை தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தீண்டத்தகாதோரைப் போன்றே முஸ்லிம்களும் கோரி வருகின்றனர். முஸ்லிம்கள் விஷயத்தில் இந்த நிபந்தனையை இந்துக்கள் ஏன் வலியுறுத்தவில்லை? இந்துக்களின் ஆட்சேபமும் எதிர்ப்பும் நியாயத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதையே இது காட்டுகிறது. இது வெறும் சாக்குப் போக்குதான்.

இனி இரண்டாவது வாதத்தை எடுத்துக் கொண்டால், பெரும்பான்மை, சிறுபான்மை என்ற சொற்களை இந்துக்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்றே கூற வேண்டும். பெரும்பான்மை, சிறுபான்மை என்பது அரசியல் வகையைச் சேர்ந்தது என்பதை அவர்கள் மறந்துவிட்டதாகத் தோன்றுகிறது. அரசியல் வகைப்பட்டவை என்ற அடிப்படையில் பார்க்கும்போது, நிலையான பெரும்பான்மை என்றோ, நிலையான சிறுபான்மை என்றோ எதுவும் இல்லை. அரசியல் பெரும்பான்மைகளும் சிறுபான்மைகளும் அடிக்கடி மாறக்கூடியவை. இன்று பெரும்பான்மையாக இருப்பது நாளை சிறுபான்மையாக மாறக்கூடும்; இவ்வாறே இன்று சிறுபான்மையாக இருப்பது நாளை பெரும்பான்மையாக மாறும் சாத்தியம் உண்டு. ஆனால் இந்துக்களுக்கும் தீண்டத்தகாதோருக்கும் இடையிலான வேறுபாடு, இவ்வகையான வேறுபாட்டைச் சேர்ந்தது என்று கூற முடியாது.

பெரும்பான்மையினருக்கும் சிறுபான்மையினருக்கும் இடையிலான வேறுபாடு போன்று - தீண்டத்தகாதோருக்கும் இந்துக்களுக்கும் இடையில் இல்லை. பெரும்பான்மையினருக்கும் சிறுபான்மையினருக்கும் இடையிலான உறவின் மற்றொரு சிறப்பு அம்சம், இந்துக்களுக்கும் தீண்டத்தகாதோருக்கும் இடையில் நிலவும் உறவுக்குப் பொருந்தாது. பெரும்பான்மையினரும் சிறுபான்மையினரும் ஒரே ஒரு வேறுபாட்டால்தான் பிரிந்துள்ளனர்; கண்ணோட்டங்களில் நிலவும் வேறுபாடுதான் அது. இந்துக்கள் தீண்டத்தகாதோர்பால் காட்டுவது போன்ற கடுமையான, கொடுமையான பகைமை உணர்வால் - பெரும்பான்மையினரும் சிறுபான்மையினரும் பிரிந்திருக்கவில்லை. இந்துக்களுக்கும் தீண்டத்தகாதோருக்கும் இடையிலான உறவில் காணப்படாத மூன்றாவதொரு அம்சம், பெரும்பான்மையினருக்கும் சிறுபான்மையினருக்கும் இடையிலான உறவில் காணப்படுகிறது.

சிறுபான்மை சிறுபான்மையாகவே வளர்கிறது; ஒரு பெரும்பான்மை பெரும்பான்மையாகும்போது சிறுபான்மையின் உணர்வுகளைப் பெருமளவுக்குத் தன்னுள் ஈர்த்துக் கொள்கிறது. இதனால் சிறுபான்மையும் திருப்தியடைகிறது. இதன் விளைவாக, எந்தப் பிரச்சினை குறித்தும் பெரும்பான்மையுடன் போராட வேண்டிய நிலைக்கு அது உள்ளாவதில்லை. ஆனால் இத்தகைய அம்சங்களை இந்து பெரும்பான்மைக்கும் தீண்டத்தகாதோர் இனச் சிறுபான்மைக்கும் இடையே காண முடியாது.

அவை இரண்டுமே நிரந்தர சமூகங்களாக நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன. அவை வேறுபட்டிருப்பதோடு, பகைமை சக்திகளாகவும் ஆகிவிடுகின்றன. அவர்களைப் பெரும்பான்மையினர் என்றும் சிறுபான்மையினர் என்றும் குறிப்பிடுவது, ஜெர்மானியர்களைப் பெரும்பான்மையினர் என்றும் பிரெஞ்சுக்காரர்களை சிறுபான்மையினர் என்றும் குறிப்பிடுவது போன்றதாகவே இருக்கும்.

Pin It