21 ஆம் நூற்றாண்டிலும் சுதந்திர இந்தியாவில் நடைபெறும் காதல் திருமணங்களை (கலப்புத் திருமணங்கள்) எதிர்ப்பவர்களை நாம் காண முடிகிறது.

“இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி

இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே”

என்று பாடிய பாவேந்தரின் பாடல் நினைவுக்கு வருகிறது. “சாதி இருக்கின்றது” என்று சொல்பவர்களும் இருக்கின்றார்களே என்று மனம் வருந்திப் பாடினார். இப்படிப்பட்ட சாதிவெறியர்களின் நடவடிக்கைகள் உலக அளவில் இந்தியாவுக்கு ஒரு அவப்பெயரையே உருவாக்கும். மேலும் காதல் திருமணங்களை எதிர்ப்பது என்பது, இந்திய அரசியல் சட்டத்தின் தனி மனித உரிமைக்கு எதிரானதாகும்.

சாதி வெறி பிடித்தவர்களால் “இளம் தளிர்கள்” தங்கள் இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாமல் வாழ்க்கையைப் பாதியிலேயே முடித்துக் கொள்கின்றனர். அதோடு அந்த இரண்டு குடும்பங்களும் சிதைந்து போகின்றன.

ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் பிழைப்புத்தேடி எங்கிருந்தோ வந்த ஆரியர்கள் நமது முன்னோர்களை வஞ்சனையால் வென்று, நமது நாட்டின் அரசியல் செல்வாக்கைப் பெற்று, மடமை மலிந்த சமயக் கொள்கைகளையும், சாதி முறைகளையும் திணித்துத் தம்மை வளப்படுத்திக் கொண்டனர்.

சாதிப் பிளவுகள் மக்களிடையே பெரும் பிளவுகளை ஏற்படுத்திவிட்டதால் அவர்கள் ஒன்றுபட்டு என்றென்றும் ஆரியக் கொள்கைகளை எதிர்க்க முடியாதவர்களாயினர். அதே நேரத்தில் தம்சாதி உயர்ந்தது அவர் சாதி தாழ்ந்தது என்ற மனோபாவம் தலைதூக்கித் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் நிலையும் உருவாகியது.

“சாதி” எந்தெந்த மதத்தில் உண்டு என்று கேட்டால் "சாதி' இந்து மதத்தில் மட்டுமே உண்டு என்று அடித்துச் சொல்லலாம். கிறித்துவ மதத்தில் சாதி இல்லை, இசுலாம் மதத்தில் சாதி இல்லை. பவுத்த மதத்தில் சாதி இல்லை ஆனால் பிரிவுகள் உண்டு.

உலகில் மதச் சண்டைகள் உண்டு. ஆனால் சாதிச் சண்டைகள் இல்லை. சாதிச் சண்டைகள் நடைபெறும் ஒரே நாடு இந்தியாதான் என்ற பெருமை நமக்குண்டு.

நாம் எதைக் கண்டுபிடித்தோம் பெருமைபடுவதற்கு? நாம் கண்டுபிடித்தது எல்லாம் கடவுள், மதம், சாதி, மூட நம்பிக்கைகள், தெருவிற்கு இரண்டு கோயில்கள் இவைகள் தானே.

சாதிக்கு எதிராகப் புத்தர் தொடங்கி, திருவள்ளுவர், அவ்வையார், வள்ளலார், மகாத்மா புலே, நாராயண குரு, அயோத்திதாசப் பண்டிதர், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன், ம. சிங்கார வேலர், திரு.வி.க, பாரதி, பாவேந்தர், காமராசர், அறிஞர். அண்ணா போன்ற பல தலைவர்கள் போராடியும் சாதியை அழிக்க முடியவில்லை. சாதி ஒரு ஆக்டோபஸ் போல் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

உலகில் எந்த நாட்டிலும் ஆண் பெண் இருபாலரும் தமக்குப் பிடித்தவர்களோடு இணைந்து வாழ உரிமை உண்டு. திருமணம் செய்தும் வாழலாம், திருமணம் செய்யாமலும் வாழலாம். அரசு இதில் தலையிடாது. ஏன் அவர்களின் பெற்றோர்களுக்கும் இதில் தலையிட உரிமை இல்லை.

திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் முறை மேலை நாடுகளில் அதிகரித்து வருகிறது. பிடிக்கவில்லை என்றால் அமைதியாக பிரிந்து போகலாம். முகத்தில் ஆசிட் ஊற்றுவது அல்லது அடித்துக் கொலை செய்வது போன்ற கொடுமைகள் அங்கு இல்லை.

வயதுக்கு வந்த ஆண் – பெண் இருபாலருக்கும் பாலியல் கல்வி போதிக்கப்படுகிறது தனித்து வாழப் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். பெற்றோரைச் சார்ந்து வாழ வேண்டிய நிலை அவர்களுக்கு இல்லை. படித்து முடித்து வேலைக்குச் செல்கின்றனர். வாழ்க்கையைத் தாங்களே அமைத்துக் கொள்கின்றனர். அங்கு 100 விழுக்காடு காதல் திருமணங்களே. மொழி, மதம், இனம், நாடு இவைகள் எதுவும் இவர்களின் வாழ்க்கைக்குக் குறுக்கே நிற்பதில்லை. இருவரும் புரிந்து கொள்கிற மொழியில் பேசி இணைந்து கொள்கிறார்கள்.

இந்தியாவில் 90 விழுக்காடு திருமணங்கள் பெற்றோர் பார்த்து அல்லது பெற்றோர் வலியுறுத்தி நடத்தும் திருமணங்களே. அதனால்தான் விவாகரத்துகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் அதிக விவாகரத்துகள் நடைபெறுவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அதாவது 8.8 விழுக்காடு திருமணங்கள் மணமுறிவில் முடிகின்றன.

சென்னை குடும்ப வழக்குகள் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரும் வழக்குகள் அதிகரித்துக் கொண்டு போவதையும் கீழ்கண்ட புள்ளி விபரம் மூலம் நாம் அறிய முடிகிறது.

                 ஆண்டு                            பதிவான வழக்குகள்

                                2010                       –             4643

                                2011                       –             4600

                                2013                       –             4735

இதற்கு என்ன அடிப்படைக் காரணம் என்று விசாரித்தால், அதற்கு நமக்குக் கிடைக்கும் ஒரே பதில் பெற்றோர்களால் நிர்பந்தித்து நடைபெறும் திருமணங்களே இதற்குப் பெரிதும் காரணம் என்று கூறுகிறார்கள். ஜாதகத்தையும், சோதிடத்தையும் நம்பியே ஆண் பெண்ணை இணைக்கின்றனர். மனப்பொறுத்தம், உடல் பொறுத்தம் ஆகியவைகளுக்கு இடம் கொடுப்பதில்லை.

விவாகரத்து கோரும் விண்ணப்பங்களில் பல காரணங்கள் தெரிவித்தாலும், பெரும்பாலான வழக்குகளில் உண்மையான காரணம் தாம்பத்திய உறவில் திருப்தியின்மையே. முன்பெல்லாம் பெண்கள் விவாகரத்து கோர முன்வரமாட்டார்கள். தங்கள் "தலைவிதி' என்று நினைத்து வாழ்ந்து மடிவர். இப்போது நிலைமை அப்படியல்ல, பெண்கள் நன்கு படித்துச் சுயமாகச் சம்பாதிக்கத் தலைபட்டு விட்டனர். பெற்றோர்களின் நிர்பந்தத்தில் திருமணம் செய்து கொண்டாலும், ஒத்துப்போகவில்லை என்றால் விவாகரத்து கோருவதில் தயக்கம் காட்டுவதில்லை. எனவே காதல் திருமணங்களை எதிர்ப்பதைப் பெற்றோர்கள் கைவிட வேண்டும். "சாதி', "கவுரவம்' இவைகள் ஒருபோதும் அவர்களுடைய வாழ்க்கைக்குப் பயன்படாது.

காதல் திருமணங்களுக்குப் பல தடைகள் இருந்தாலும் காதல் திருமணங்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

1967 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், சாதிகளை ஒழிக்கப் பல வழிகள் இருந்தாலும் அதில் கலப்புத் திருமணங்களும் ஒன்று என்பதால் கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்கக் கலப்புத் திருமணத் தம்பதிகளுக்குத் தங்கப் பதக்கமும், சான்றிதழ்களையும் வழங்கிப் பெருமைப்படுத்தினார்.

2010 ஆம் ஆண்டு மத்திய அரசு சாதியின் கொடுமைகளை மனதில் கொண்டு கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்கக் கலப்புத் திருமணத் தம்பதியினருக்கு ரூ. 50,000/ நிதி உதவி வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அந்த திட்டத்தின்படி மாநில அரசு ரூ. 25,000/ மத்திய அரசு ரூ. 25,000/ ஆக ரூ. 50,000/ கலப்புத் திருமணத் தம்பதியினருக்கு வழங்கி, பின்னர் மாநில அரசுகள் மத்திய அரசிடமிருந்து ரூ. 25,000/ அய் பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்டம் 10 மாநிலங்களில் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், தமிழ்நாடு இந்தப்பட்டியலில் இல்லை என்பது வேதனைக்குரியது. 2012 ஆம் ஆண்டு மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கிய தொகை ரூ.29,26 கோடி. இதில் மராட்டிய மாநிலம் ரூ.12.09 கோடியும், கேரளம் ரூ.5.37 கோடியும் ஆந்திரா ரூ.4.25 கோடியும் பெற்றுள்ளது. மத்திய அரசு அறிவித்ததே ரூ. 50,000/ ஆனால் கோவா அரசு ரூ. 1,00,000/ வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி கலப்பு மண நிதி உதவி திட்டத்தின் மூலம் ரூ. 20,000/ வரை வழங்கி வருகிறது. மத்திய அரசு திட்டத்தை நிறைவேற்றி ரூ. 50,000/ வழங்கினால் இளவரசன் – திவ்யா போன்ற கலப்பு மண இணையர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வழி ஏற்படும். கலப்பு மணத் தம்பதியினர்களுக்கு உடனடித் தேவை பொருளுதவியே.

சனநாயக நாட்டில் ஆட்சி செய்வது என்பது மக்களுக்காகத்தான் என்பது உண்மை என்றால், மனித சமூகத்தைக் காப்பாற்ற வேண்டிய மிகப் பெரிய கடமை ஆட்சியாளர்களுக்கு உண்டு. எனவே சாதிவெறியர்களைப் பற்றி கவலைப்படாமல் பாரதி சொன்ன "காதல்' எனும் பயிரைக் காத்திட மத்திய மாநில அரசுகள் புரட்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்த முன்வர வேண்டும். குறிப்பாக,

கலப்புத் திருமணத் தம்பதியினர்களுக்கெனத் தனி வாரியம் அமைத்துத் தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்.

கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வாய்ப்பு என்று அறிவிக்க வேண்டும்.

கலப்பு மணங்களை ஊக்குவிக்க காவல் நிலையங்களில் தனிப்பிரிவு உருவாக்க வேண்டும். அந்தப் பிரிவில் கலப்பு மணம் புரிந்தவர்களையே நியமிக்க வேண்டும்.

கலப்புத் திருமணத் தம்மதியினர்களுக்காக வழங்கப்படும் நிதி உதவியை ரூ.1,00,000/ ஆக உயர்த்த வேண்டும். அதனையும் ஒரு வார காலத்தில் வழங்கிட வேண்டும்.

தொழில் செய்ய விரும்பும் கலப்புத் திருமணத் தம்பதியினருக்கு ரூ. 5 இலட்சம் வரை வட்டி இல்லாக் கடன் வழங்க வேண்டும்.

இப்படிப் பல திட்டங்களை அறிவிக்கலாம். அதற்குப் பின்பும் கலப்புத் திருமணங்களுக்கு எதிர்ப்பு இருந்தால் அகமண முறையைத் (சாதிக்குள் சாதி திருமணம்) தடை செய்திடல் வேண்டும்.

மத்திய மாநில அரசுகள் முன்வருமா?

Pin It