மதவாதிகள் என்று இருப்பவர்கள் ஏதேனும் ஒரு ‘கடவுள்’ என்பதன் பெயரைச் சொல்லிக் கொண்டு பாமர மக்களை ஏமாற்றுவது எவ்வாறு உலக இயல்பாக ஆகி விட்டதோ, அவ்வாறே அரசியல்வாதிகளாக இருக்கின்றவர்கள் மிதவாதிகளானாலும் சரி, அமிதவாதிகளானலும் சரி, மற்றும் எந்த வாதி பிரதிவாதிகளானாலும் சரி எல்லோரும் ‘சுயராஜ்யம்’ என்று சொல்லிப் பாமர மக்களை ஏமாற்றுவது சகஜமாக இருந்து வருகிறது. இதன் உண்மையை அறிவதற்கு நமது நாட்டின் தற்கால அரசியல் நிலைமையைக் கவனித்துப் பார்ப்பது ஒன்றே போதுமானதாகும்.

periyar 600நமது நாட்டில், இப்பொழுது உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் ஐக்கிய ஆட்சி என்பதைப் பற்றியே எங்கும் பேசிக் கொண்டு வருகிறார்கள். இந்தியாவுக்கு எத்தகைய சீர்திருத்தம் ஏற்படுத்துவது என்பதைப் பற்றி யோசனை செய்வதற்காகக் கூட்டப்பட்ட வட்டமேசை மாநாடுகளின் பயனால் உண்டான வார்த்தையே இந்த “ஐக்கிய ஆட்சி” என்பதாகும்.

காங்கிரசின் சர்வாதிகாரியான திரு. காந்தியுள்பட மற்ற எல்லா அரசியல் கட்சிக்காரர்களும், இந்தியாவுக்கு “ஐக்கிய ஆட்சித் திட்டம்” ஏற்படுத்துவதை ஒப்புகொண்டு விட்டனர். ஆனால் இதை எவ்வாறு ஏற்படுத்துவது என்பதைப் பற்றித்தான் இப்போது ஆலோசனை செய்யப் பட்டு வருகிறது.

இந்த ஐக்கிய ஆட்சி முறையை நமது நாட்டில் சரியான முறையில் அமைப்பதற்கு எவ்வளவு இடையூறுகள் இருக்கின்றன என்பதையும், அந்த இடையூறுகளுக்குக் காரணங்கள் என்ன என்பதையும் ஆராய்ந்துப் பார்ப்பவர்களுக்கு, ஐக்கிய ஆட்சி அமைப்பில் உள்ள கஷ்டமும், சிரமமும் விளங்காமற் போகாது. ஆகையால், தற்கால நிலைமையில், ஐக்கிய ஆட்சித் திட்டத்தை ஏற்படுத்துவதற்கு முடியாமலிருக்கும் சங்கடங்களைப் பற்றியும், ஏற்படுத்தினாலும், அவ்வாட்சியை எல்லா மக்களும் சுகமடையும்படி நடத்த முடியாது என்பதற்குள்ள காரணங்களையும் ஆராய்வோம்.

மாகாணங்களும், சுதேச அரசாங்கங்களும் சேர்ந்து இருக்கும் ஆட்சியே ஐக்கிய ஆட்சியாகும். மாகாணங்களின், பிரதிநிதிகளும், சுதேசி சமஸ்தானங்களின் பிரதிநிதிகளும் கூடிய ஒரு மத்திய சபைக்கே ஐக்கிய அரசாங்க சபை என்று பெயர்.

இந்த ஐக்கிய மத்திய சபையின் அதிகாரங்கள் எப்படி இருக்க வேண்டும், அதன் பிரதிநிதிகள் யார் யாராக இருக்க வேண்டும், எந்தெந்த வழிகளில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்னும் விஷயமும், மாகாண சட்டசபைகளுக்கு என்னென்ன அதிகாரங்கள் இருக்க வேண்டும்,. அவைகளின் பிரதிநிதிகள் யார் யாராக இருக்க வேண்டும், அவர்கள் எந்த முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்னும் விஷயமும் சமஸ் தானங்களின் நிலைமைகள் எப்படி இருக்க வேண்டும் என்னும் விஷயமும் தீர்மானிக்கப்பட்ட பின்னரே ஐக்கிய ஆட்சியை ஸ்தாபிக்க முடியும். இவைகளே ஐக்கிய ஆட்சிக்கு அடிகோல வேண்டிய அடிப்படையான வேலைகள்.

ஆனால் இந்த விஷயத்தில் நமது இந்திய அரசியல்வாதிகளிடத்தில் எந்த விதமான ஏகோபித்த அபிப்பிராயமும் இது வரையிலும் உண்டாக வில்லை. மத சம்பந்தமான காரணங்களாலும், வகுப்பு உணர்ச்சி சம்பந்தமான காரணங்களாலும், ஒவ்வொரு வகுப்பினரும், கட்சியினரும், மதத்தினரும், சட்டசபைப் பிரதிநிதித்துவம் சம்பந்தமாக ஒற்றுமையடைய முடியாத வேறு வேறு அபிப்பிராயங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

உதாரணமாக, முதலில் சமஸ்தான மன்னர்களை எடுத்துக் கொள்ளுவோம். சமஸ்தான மன்னர்கள் ஐக்கிய ஆட்சியின் மத்திய சட்டசபையில் தங்களுக்குப் பிரதிநிதித்துவம் நூற்றுக்கு 51வீதம் இருக்க வேண்டுமென்றும், தங்கள் சமஸ்தானத்தில், தங்களுக்குள்ள உரிமைகளில் ஐக்கிய சட்டசபை தலையிடக் கூடாதென்றும், கிழக்கிந்திய கம்பெனியாருக்கும், சமஸ்தானங்களுக்கும் ஏற்பட்டுள்ள உடன்படிக்கை காப்பாற்றப்பட வேண்டுமென்றும் விரும்புகின்றனர்.

சமஸ்தான மன்னர்களின் இந்த அபிப்பிராயத்தை அனுசரித்து ஐக்கிய ஆட்சி ஏற்படுமானால் அந்த ஐக்கிய ஆட்சியினால் இந்தியாவுக்கு ஒரு நன்மையும் இல்லை என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. பிரிட்டிஷாருக்குப் பதிலாக சுதேச மன்னர்களே இந்திய ஏழை மக்களை ஆளுகின்றவர்களாக ஏற்பட்டு விடுகின்றார்கள். ஆகையால் இந்த மாதிரியான ஐக்கிய ஆட்சியை இந்திய அரசியல்வாதிகள் எவரும் ஒப்பு கொள்ளவும் மாட்டார்கள். சுதேச மன்னர்களோ தங்கள் கோரிக்கையை அங்கீகரிக்காத ஐக்கிய ஆட்சியை ஒப்புக்கொண்டு அதில் சேருவார்களா என்பது சந்தேகம். ஆகவே, சுதேச மன்னர்கள் சேராத ஒரு ஆட்சியைச் சரியான ஐக்கிய ஆட்சியென்று கூறவும் முடியாது. ஆகையால் ஐக்கிய ஆட்சி ஏற்படுவதற்குச் சமஸ்தானங்களின் பிரச்சினை ஒரு முக்கியமான சங்கடமாக இருந்து வருகிறது என்பதை அறியலாம்.

இனி அடுத்தபடியாக வகுப்புப் பிரச்சினை எவ்வளவு பெரிய தடை யாக இருக்கிறது என்பதைச் சிறிது பார்ப்போம். வகுப்புப் போராட்டம் காரணமாகவே இந்தியா அடிமை நாடாக இருப்பதாகக் கூறுகின்ற அபிப்பிராயத் தைத் தவறானதென்று கூற முடியாது. இந்த வகுப்புப் பிரச்சினையில் ஒரு முடிவுக்கும் வர முடியாத காரணத்தாலேயே வட்ட மேஜை கூட்டங்களால் ஒரு பயனும் கிடைக்காமல் போயிற்று என்பது நமக்குத் தெரியாத செய்தியல்ல.

முதலில் முஸ்லீம்களுக்கும், இந்துக்களுக்கும் சட்டசபைப் பிரதிநிதித் துவ விஷயத்தில் ஒரு வகையான சமரச முடிவும் ஏற்படுவதற்கு வழி யில்லாமல் இருக்கின்றது.

முஸ்லீம்கள் ஐக்கிய சட்டசபையில் தங்களுக்கு மூன்றிலொருபங்கு பிரதிநிதித்துவம் இருக்க வேண்டுமென்றும், பாஞ்சாலம், சிந்து முதலிய மாகாண சட்டசபைகளில் தங்களுக்கு மெஜாரிட்டி ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்கப்படவேண்டுமென்றும் விரும்புகின்றார்கள். இவர்களுடைய அபிப்பிராயத்தை முஸ்லீம்களைத் தவிர வேறு எந்த அரசியல்வாதிகளும் ஆதரிக்க வில்லை. ஆகையால் இந்த விஷயத்தில் இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் ஏகோபித்த அபிப்பிராயம் உண்டாவதற்கு இடமில்லாமலிருக்கிறது.

அடுத்தபடியாகத் தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினையும் இவ்வாறே ஒற்றுமையடைவதற்கு வழி இல்லாமல் இருந்து வருகிறது. தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு சார்பார் தனித் தொகுதி வேண்டுமென்றும், ஒரு சார்பார் பொதுத் தொகுதி வேண்டுமென்றும் கேட்கின்றனர். இவ்வகையில் அவர்கள் தங்களுக்குள்ளேயே ஒற்றுமையான அபிப்பிராயமில்லாமல் சண்டை போட்டுக் கொண்டு எதிரிகளுக்கு இடங்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களும் தங்களுடைய ஜனத் தொகைக்கு தகுந்தவாறு பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டுமென்றும் கேட்கின்றனர். இதை இந்து மகா சபையாரும் காங்கிரஸ்காரர்களும் ஆட்சேபித்து தாழ்த்தப்பட்டவர்களும் இந்துக்கள் தானென்றும் அவர்களை இந்துக்களினின்றும் தனியாகப் பிரிப்பது கூடாது என்றும் கூறி அவர்கள் கேட்கும் உரிமைகளை மறுக்கின்றனர்.

மற்றும் இந்தியக் கிறிஸ்துவர், சீக்கியர், ஆங்கிலோ இந்தியர், வெள்ளையர் முதலிய வகுப்பு சம்பந்தமான பிரச்சினைகளும் இருக்கின்றன. ஆனால் முஸ்லீம்கள், தாழ்த்தப்பட்டவர்கள் பிரச்சினைகள் சமரசமான முடிவுக்கு வந்து விடுமானால் மற்றவைகளைப் பற்றிய கஷ்டமில்லை. சுலபமாகவே முடிவு செய்து விடலாம்.

ஆகவே ஐக்கிய ஆட்சித் திட்டத்தை முடிவு செய்ய வேண்டுமானால் முதலில் சமஸ்தான பிரச்சினையும், வகுப்புப் பிரச்சினைகளும் முடிவடைய வேண்டியதே அவசியமானதாகும். இவை ஒரு சமரசமான முடிவுக்கு வருமானால் மற்ற வரவு செலவு சம்பந்தமாகவும், உத்தியோகம் சம்பந்த மாகவும், வியாபார சம்பந்தமாகவும், அதிகார சம்பந்தமாகவும், வாக்குரிமை சம்பந்தமாகவும் முடிவு செய்வது ஒரு கஷ்டமான காரியமல்லவென்பதே நமது அபிப்பிராயமாகும்.

சமஸ்தானப் பிரச்சினை, வகுப்புப் பிரச்சினை ஆகிய இவ்விரண்டுள் வகுப்புப் பிரச்சினை விஷயம் இந்திய அரசியல்வாதிகளையே பொறுத்த விஷயமாக இருக்கிறது. இவ்விஷயத்தில் இந்துக்களும், முஸ்லீம்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களும் மற்ற சிறுபான்மை வகுப்பினர்களும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.

இந்தியாவுக்கு நான்தான் பிரதிநிதி என்று பறையடித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் ஸ்தாபனமும், அதன் சர்வாதிகாரியாகிய திரு. காந்தியும் இந்த வகுப்புப் பிரச்சினையைத் தீர்க்கச் சரியான நடவடிக்கை ஒன்றும் எடுத்துக் கொள்ளவில்லை. வகுப்புப் பிரச்சினை சம்பந்தமாகத் திரு. காந்தியோ, அல்லது காங்கிரசோ கொண்டிருக்கும் அபிப்பிராயத்தை தாழ்த் தப்பட்டவர்களும், முஸ்லீம்களும் மற்ற வகுப்பினர்களும் ஆதரிக்கவே யில்லை; அவர்களுக்குக் காங்கிரசினிடம் ஒரு சிறிதும் நம்பிக்கையேயில்லை.

ஆனால் திரு. காந்தியார் “எங்களிடம் இந்தியாவை ஒப்பித்து விட்டால் அதன் பின் நாங்கள் வகுப்புப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளுவோம். பிரிட்டிஷார் இருப்பதனால்தான் வகுப்புப் பிரச்சினையை முடிவு செய்ய முடியவில்லை” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டு வருகிறார். இது காங்கிரஸ்காரர்களாலும் திரு. காந்தியாலும் வகுப்புப் பிரச்சினையை முடிவு செய்ய முடியாது என்பதையே தெளிவாகக் காட்டுகிறதல்லவா? இப்பொழுது இதை முடிவு செய்வதற்கு ஆற்றல் இல்லாதவர்கள் சுயராஜ்யம் வந்த பின் எவ்வாறு சமரசமாக வகுப்புப் பிரச்சினையை முடிவு செய்யும் ஆற்றலுடைய வர்களாவார்கள்? என்று தான் கேட்கின்றோம்.

இந்த விஷயம் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குத் தெரியாததொன்றல்ல. ஆயினும் இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டில் திரு. மெக்டனால்டு அவர்கள், “வகுப்புப் பிரச்சினையை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், உங்களால் முடியாவிட்டால் அரசாங்கமே முடிவு செய்யும்” என்று கூறிக் கொஞ்சம் காலமும் கொடுத்திருந்தார். கொடுத்திருந்தும் இவ்விஷயத்தில் இந்திய அரசியல்வாதிகளால் ஒரு முடிவுக்கும் வர இயலவில்லை.

ஆகவே இனி அரசாங்கத்தாரே வகுப்புப் பிரச்சினை சம்பந்தமாக ஒரு முடிவு செய்யப் போகின்றனர். முடிவும் எல்லோராலும் ஒத்துக் கொள்ளக் கூடியதாக இருக்குமா? என்பது சந்தேகம்.

முஸ்லீம்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், மற்ற சிறுபான்மை வகுப்பினர்களுக்கும் தனி உரிமைகள் அளிக்கும் எந்த முடிவையும் காங் கிரஸ் கட்சியினரும், இந்து மகா சபையினரும் ஒப்புகொள்ளப் போவதில்லை. காங்கிரஸ், இந்து மகாசபை இவைகளின் கோரிக்கைகளை அனுசரித்ததாக அரசாங்கத்தாரின் முடிவு இருக்குமாயின் அதை மற்றவர்கள் ஒப்புக் கொள்ளப்போவதில்லை.

இரண்டாவது வட்ட மேஜை மகாநாடு நடந்தபோது முஸ்லீம்களும், தாழ்த்தப்பட்டவர்களும் மற்ற சிறுபான்மை வகுப்பினரும் சட்டசபை ஸ்தானங்கள் சம்பந்தமாகத் தங்களுக்குள் ஒரு ஏற்பாடு செய்து கொண்டனர். அதைக் காங்கிரஸ்காரர்களும், இந்து மகாசபைக்காரர்களும் தவிர மற்ற எல்லோரும் அனேகமாக ஆதரித்தனர். முதல் மந்திரி திரு. மெக்டனால்டு அவர்களும் ‘வகுப்புப் பிரச்சினை. சம்பந்தமாக முடிவு செய்யப்படும்போது இவ்வொப்பந்தம் கவனிக்கப்படும்’ என்று கூறியுள்ளார். அந்த ஒப்பந்தத்தைக் கூட முஸ்லீம்களில் பலர் ஒப்புக் கொள்ளவில்லை.

ஆகவே அரசாங்கத்தார் செய்யும் எந்த முடிவும் எல்லோருக்கும் திருப்தியளிக்கக் கூடாததாகவே யிருக்கக்கூடும் என்பதில் ஐயமில்லை.

மேலே நாம் கூறிவந்த காரணங்களையெல்லாம் யோசிக்கும் போது ஐக்கிய ஆட்சிக்கே ஆபத்து வருமோ என்று சந்தேகப்படுவதற்கே இடமிருக்கிறதென்பதை யறியலாம்.

இந்தச் சங்கடங்களையெல்லாம் உத்தேசித்துச் சில அரசியல்வாதிகள் முதலில் மாகாண சுயாட்சி அளித்து விட்டு அதன்பின் ஐக்கிய ஆட்சித் திட்டத்திற்கான வேலையைச் சாவகாசமாகச் செய்து கொண்டு செல்லலாம். என்று கூறுகின்றனர். இது ஒரு நல்ல யோசனை என்றுதான் நாமும் அபிப்பிராயப் படுகிறோம்.

ஆனால் எந்த ஆட்சியானாலும் சரி, ஐக்கிய ஆட்சியாக இருக்கட்டும், அல்லது மாகாண சுயாட்சியாக இருக்கட்டும், அல்லது பூரண சுயேச்சையாகவே இருக்கட்டும் அவற்றை நமது நாட்டில் உள்ள எல்லா வகுப்பினரும் சமாதானத்துடன் ஒப்புக் கொள்ளும்படியான முறையிலும், அத்தகைய ஆட்சியால் எல்லா வகுப்பினரும் சௌகரியம் பெறும்படியான முறையிலும் அமைப்பது கஷ்டமான காரியம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. நமது நாட்டில், சுயநலம் விரும்புகின்ற சுதேச மன்னர்களும், சுதேச ராஜ்யங்களும், பல வேறுபட்ட மதங்களும், வகுப்புக்களும் இருக்கும் வரையிலும், இந்தக் கஷ்டம் தீருவதற்குக் கொஞ்சமும் வழியே இல்லை. ஆகையால் தான் நாம் வகுப்புச் சங்கடங்களும், மதத் தொல்லைகளும் ஒழிவதற்குப் பாடு படவேண்டுமென்றும், இவை யொழிந்தால் சுயராஜ்யம் தானே வருமென்றும் ஆதி முதல் சொல்லிக் கொண்டு வருகின்றோம். நமது நாட்டு அரசியல் கட்சிகள் இதைக் காதிற் போட்டுக் கொள்ளாமல் வீணே, ஐக்கிய ஆட்சி யென்றும், சுயராஜ்யமென்றும் கூச்சலிடுவதிலும், பிரச்சாரம் பண்ணுவதிலும், சட்ட மறுப்புச் செய்வதிலும் என்ன பயன் உள்ளது? என்று கேட்கின்றோம்.

ஒரு சமயம், ஐக்கிய ஆட்சியோ அல்லது மாகாண ஆட்சியோ ஏற்பட்டாலும் அதனால் நாட்டின் ஏழை மக்களுக்கு ஒரு பயனுமில்லை என்பதையும், பணக்காரர்களும், ஜமீன்தாரர்களும், சுதேச ராஜாக்களும் ஆதிக்கம் பெற்று, ஏழைகளையும், தொழிலாளர்களையும், கொடுமைப்படுத்த வசதியும், சந்தர்ப்பமும் உடையதாகத்தான் அவ்வாட்சி இருக்குமென்பதையும் நாம் இப்பொழுது புதிதாக எடுத்துக் காட்ட வேண்டியதில்லை என்றே கருதுகின்றோம்.

ஆதலால் யாரும், அரசியல் கிளர்ச்சிக்காரர்களின் பசப்பு வார்த்தைகளைக் கேட்டு ஏமாறாமல், நமது தேசமக்களைப் பிடித்து வாட்டிக் கொண்டிருக்கின்ற சாதி, மத பேதங்களை ஒழித்துச் சமதர்மத்தை உண்டாக்கப் பாடுபட வேண்டியதே நமது கடமையாகுமென்பதையும், இதுவே தேச நன்மையை உண்மையாகவே கருதுகின்ற ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய முதல் வேலை என்பதையும் எடுத்துக் காட்ட விரும்புகின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 24.04.1932)

Pin It