2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வீழ்த்தப்பட வேண்டும் என்று ஒரு வழிகாட்டுதலை தேர்தலில் பங்கேற்கும் மக்களுக்கு தமிழக மக்கள் முன்னணி வழங்கியதற்கு ஒரு ஆழமான காரணம் இருக்கிறது. இப்போது 303 உறுப்பினர்களை மக்களவையில் பெற்றிருக்கக் கூடிய பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் நரேந்திர மோடி கிட்டத்தட்ட ஒரு முடிசூடா மன்னரைப் போல, ஒரு சர்வாதிகாரியைப் போல, தான் நினைத்ததெல்லாம் செய்து வந்திருக்கிறார். காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது சனநாயகத்தின் போதாமைகள், தாக்குதல்கள், அத்துமீறல்கள் போன்றவை பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் 2014 -இலிருந்து நடந்து கொண்டிருப்பதே வேறு. அரசு நடைபெற்றது என்று கூறுவதை விட, மோடியின் எதேச்சதிகாரம் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். எந்த சனநாயக முறைமைக்குள்ளும் அடங்காத ஒரு இந்து மதவாத எதேச்சதிகார ஆட்சி 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்திருக்கிறது. இஸ்லாமியர்களும், பிற சிறுபான்மையினரும், தலித்துகளும் கடுமையானத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்.

அசாமில் 40 லட்சம் பேர் குடியுரிமை பறிக்கப்பட்டு முகாம்களிலும், வெளியிலுமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். நரேந்திர மோடியின் ஆட்சி மீண்டும் ஏற்படுமானால் இவர்கள் நாட்டை விட்டு வெளியே துரத்தப்படுவார்கள். இந்திய நாடாளுமன்றத்தில் கார்ப்பரேட் முதலாளிகளே இப்போது உறுப்பினர்கள். கனிமவள சூறையாடலும் இயற்கை வள அழிப்பும் வளர்ச்சி என்ற பெயரில் இனி முழுவீச்சில் நடைபெற இருக்கிறது. இதுவரை நடந்த, நடத்தப்பட்ட பேரழிப்புகள் மட்டுமின்றி, வரும் காலத்தில் நடைபெற இருக்கின்ற பேரழிப்புகள் கூடுதலானவை. திகிலூட்டும் சட்டங்கள், திடீர் சட்டங்கள் போன்றவற்றை முன்னறிவிப்பு இன்றி நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார். எதிர்க்கட்சிகள் அனைத்தும் கையை பிசைந்து கொண்டு நின்றன, அல்லது அவையை விட்டு வெளியேறி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தன. இது இப்போது உள்ள நிலை.

ஆனால் இன்னொரு முறை பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் வெற்றி பெறுமானால், இந்திய அரசியல் சட்டத்தை முற்றிலுமாக மாற்றி அமைத்து, இதுவரை போற்றப்பட்ட பாராளுமன்ற சனநாயக அடித்தளமே அடித்து நொறுக்கப்பட்டு விடும். மாற்றாக குடியரசு தலைவர் முறை என்ற பெயரில் இந்துத்துவ சர்வாதிகாரத்தை ஏற்படுத்திக் கொள்ளும் திட்டத்தை முன்னமே தயார் நிலையில் வைத்துக் கொண்டுதான், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அது ஈடுபடுகிறது. அதனால்தான், மக்களுக்கு ஆழ்ந்த கவலையோடு ஒரு வழிகாட்டுதலை காட்ட வேண்டி இருந்தது.modi and seemanஎதிர்காலத்திட்டமும், மூன்று நடைமுறைகளும்

இந்துராஷ்டிரப் படைப்புக்கு இன்னும் 15 ஆண்டுகளே உள்ளன என்று ஆர்.எஸ்.எஸ் கெடு நிர்ணயித்து வேலை செய்து கொண்டு வரும் வேளையில்தான் 2024 -நாடாளுமன்றத் தேர்தல் குறுக்கே வந்தது. ஆர்.எஸ்.எஸ் தன் நீண்டகால இந்துராஷ்டிரத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மூன்று நடைமுறை திட்டங்களை கடைபிடித்து வருகிறது.

(1). பார்ப்பன எதிர்ப்பு கருத்தியல் தகர்ப்பு

கடந்த கால பார்ப்பனியத்தை, இந்துத்துவத்தை, மதவாதத்தை, சாதியத்தை எதிர்த்து கருத்துருவாக்கம் செய்தவர்களின் கருத்தியலையும் அவர்களது தத்துவத்தையும் தகர்த்து விடுவது. அதற்கான ஆள் பலம், பண பலம், அதிகார பலம் -அவ்வளவையும் ஆர் எஸ் எஸ் கடந்த சில ஆண்டுகளாகக் களமிறக்கி வேலை செய்து வருகிறது. ஒருபுறம் திருவள்ளுவர், வள்ளலார் போன்ற பல்வேறு தேசிய இனங்களின் அறிவுச் சான்றோர்களை உள்வாங்கிச் செரிப்பது. இந்துத்துவத்தால் ஏற்க முடியாத, செரிக்க முடியாத பெரியார் போன்ற சிந்தனாவாதிகளின் கருத்தியல்களைச் சிதைப்பது; மக்களிடம் அவர்களை அன்னியப்படுத்தி அப்புறப்படுத்த முயற்சிப்பது. பார்ப்பனிய சமூகக் கட்டமைப்பான வர்ணாச்சிரம சாதியக் கட்டமைப்பைத் தளர்ச்சி நீக்கி மீட்டுருவாக்கம் செய்வது. அதே நேரம் சாதியத்தை எதிர்ப்பவர்களை தமிழர் எதிரிகளாகக் காட்டுவது. எழுதாத சிலேட்டுகளாக இருக்கும் இளைஞர்களிடம் தங்களுடைய எடுபிடிகள் மற்றும் முகவர்கள் மூலம் ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பாளர்களை எதிரிகளாகத் காட்டிப் பிரச்சாரம் செய்வது. இதுவரை தமிழ்ச் சமூகத்துக்கு அரணாகவும் பார்ப்பனியத்துக்கு எதிராகவும் இருந்த கருத்தியலை தமிழர்களுக்கு எதிரான கருத்தியலாக அவதூறு பேசுவது. இப்பணி பல்வேறு மாநிலங்களில் நடந்து கொண்டிருக்கிறது.

ஆரியத்தால் செரிக்க முடியாத கருத்தியலாளராகவும், பார்ப்பன எதிர்ப்பு அரசியல் வழிகாட்டியாகவும் இருந்தவர் தந்தை பெரியார். அவருடைய பெயரை சிதைப்பது என்ற பணியில் பார்ப்பன அமைப்புகளும், வட இந்தியச் சார்பு அமைப்புகளும், இந்துத்துவ அமைப்புகளும், பார்ப்பன - பனியா வணிக - முதலாளிய நிறுவனங்களும், சாதிவெறி அமைப்புகளும், தமிழ்த் தேசியம் அல்லாததை தமிழ்த் தேசியம் என்று புரட்டல் வேலைகளைச் செய்யும் அமைப்புகளும் ஒன்றுபட்டு வேலை செய்கின்றன. இவர்களுக்கு ஆகும் அவ்வளவு செலவுகளையும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பின்புலமாக இருக்கும் உள்நாட்டு வெளிநாடு வாழ் இந்துத்துவ அமைப்புகளும் ஏற்றுக் கொள்கின்றன. எதிர்ப்பு இல்லாத எதிர்காலச் சந்தையை மனதில் கொண்டு மார்வாடி -பனியா முதலாளிகள் கொட்டிக் கொடுக்கிறார்கள்.

1927 -ஆம் ஆண்டு பெரியார் தன் சுயசாதிப் பெயர் பின்னொட்டை கழற்றி விட்டெறிந்ததைத் தொடர்ந்து ஒட்டுமொத்த தமிழகமுமே பெயருக்கு பின்னால் சாதியை போட்டுக் கொள்வதைப் புறக்கணித்தது. இப்போது 97 ஆண்டுகளுக்குப் பிறகு, "என் பெயருக்கு பின்னால் என் சாதியை போட்டுக் கொள்வதில் உனக்கென்ன பிரச்சனை?" என்று ஆர்.எஸ்.எஸ் முகவர்கள் குரல் எழுப்புகிறார்கள். எழுந்து கொண்டிருக்கும் இந்துராஷ்டிரத்தின் முன்னறிவிப்பாக இத்தகைய குரல்களைக் கருதலாம். தமிழினத்தின் உரிமையை, சுயத்தை, ஓர்மையைப் பாதுகாக்க வேண்டிய இளைஞர்கள் எந்தத் தெளிவும் பெறாதவர்களாக இருக்கிறார்கள். சாதிப் பெருமை பேச முற்படுகிறவர்களை எதிர்க்க வேண்டிய இவர்கள் சாதியே தமிழினத்தின் அடையாளம் என்று பார்ப்பன பண்பாட்டு மீட்டுருவாக்கத்திற்குத் துணை நிற்கிறார்கள். பெரியார் என்ற கவசம் தமிழ்ச் சமூகத்தை எவ்வளவு காலம் காத்துவிடும் என்று நாம் கூற முடியாது. ஏனெனில் திராவிட தேர்தல் கட்சிகள் பெரியாரியல் வரைமுறைகளில் சரியாக ஊன்றி நிற்கவில்லை. பலர் சாதியத்தையும் கைவிடவில்லை. பெரியாரையும் திராவிடக் கருத்தியலையும் உடைக்கும் பார்ப்பன சேவையில் இன்று பல்வேறு சாதி அமைப்புகளும், தமிழ்த் தேசிய சிதைப்பு அமைப்புகளும் தீவிரப் பங்காற்றி வருகின்றன.

(2) இந்துத்துவ ஒருங்கிணைப்பு

இரண்டாவதாக, நாட்டின் அனைத்து அமைப்புகளும் கட்சிகளும் சாதிக் கட்சிகளும், சாதி அமைப்புகளும், ஆன்மீக அமைப்புகளும், இந்து மதவாத அமைப்புகளும், கிராம பூசாரிகள் அமைப்புகளும், பல்வேறு பெயர்களில் இயங்கும் கலைக் குழுக்களும், உள்ளூர் விளையாட்டுக் கழகங்களும், இலக்கிய அமைப்புகளும், "பாரதமாதா பஜனை, ஷெய்ஸ்ரீராம்" முழக்கத்தை முன்வைத்து ஒருங்கிணைக்கப்படுகின்றன, பல்வேறு சமயச் சிறுபான்மையருக்கும் தாங்கள் சிறுபான்மை மதத்தில் இனிமேலும் இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்று இந்துத்துவ வெறியர்களால் உணர்த்தப்படுகிறது. தாய் மதம் திரும்பு என்று வெளிப்படையாக ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றன. "சாத்தானின் பிள்ளைகளே. என்று இஸ்லாமிய, கிறித்தவரை அன்பொழுக அழைக்கிறார்களாம்.

ஈரோடு மாவட்டத்தில் வள்ளிக்கும்மி பல்லாயிரம் பெண்களை உள்ளடக்கியதாக விரிவடைந்திருக்கிறது. கொங்கு மண்டலமான ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் தொடர்ந்து வள்ளிக்கும்மி என்ற பெயரில் கவுண்டர் சமூகப் பெண்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். தன் சாதியிலேயே திருமணம் செய்வோம் என்று பெண்களை உறுதிமொழி எடுக்கச் செய்கின்றனர். சாதியப் பாதுகாப்பு, இந்துத்துவ வளர்ச்சி, ஆர்.எஸ்.எஸ் இலக்கு நோக்கிய நகர்வு என இதில் பங்கேற்கும் பெண்கள் அறிந்ததும், அறியாததுமாக பல இலக்குகள் உள்ளன.

 "சத்தியம் சத்தியமே,

 சின்னமலை சத்தியமே!

 கல்யாணம் செய்துக்கிறோம், கவுண்டர் வீட்டு பையனையே!

 இது போதும், இது போதுமே,

 எனக்கு வேறு ஏதும் வேண்டாம், அம்மா!"

என்ற உறுதிமொழி வீடியோ இந்துத்துவ வர்ணாச்சிரம கட்டமைப்பை மீட்டுறுதி செய்யும் முயற்சிகளுக்கு சான்றுகள் ஆகும். வள்ளிக்கும்மி போன்ற கலைகளை சாதியப் போர்வைக்குள் அடக்கும்போக்கு இந்துராஷ்டிரம் நோக்கிய பயணத்தின் ஒரு பகுதியாகும். குறிப்பிட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே இதில் சேர்க்கப்படுகிறார்கள். சமூகநீதி பேசும் கட்சிகள் இதைக் கண்டும் காணாமலும் இருப்பது இந்த போக்கை வளர்த்தெடுக்க உதவுகிறது. மங்கை வள்ளி கலைக்குழு, மகாமாரியம்மன் வள்ளிக் கும்மி கலைக்குழு, கொங்குநாடு கலைக்குழு போன்றவை மட்டுமே பல்லாயிரம் பெண்களின் மூளையை சாதிய மயப்படுத்தி இருக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இந்தியா முழுவதும் ஷாகாக்களை நடத்துவது போலவே, பல்வேறு கலை அமைப்புகள் மூலமும், சிலம்பாட்டம் உடற்பயிற்சி கழகங்கள் மூலமும், ஆண்களும் பெண்களும் இந்துத்துவ இந்தியாவுக்கு ஏற்றவர்களாக பதப்படுத்தப்படுகிறார்கள்.

(3). இந்துத்துவ, சனாதனக் கருத்துப் பரவல்

மூன்றாவதாக, மோடியின் இந்திய ஒன்றிய அரசு வகைதொகை இல்லாமல் கருவூலத்தை இந்துத்துவ இந்தியாவைப் படைக்க திறந்து விட்டிருக்கிறது. சனாதன இந்தியாவை வளர்த்தெடுக்கும் பணி பல்வேறு அரசியல் அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும், சாதி அமைப்புகளுக்கும், மத அமைப்புகளுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து தூர்தர்ஷனில் ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. தனியார் வலைதளங்கள், சமூக ஊடகங்கள், முகநூல்கள், யூ-டியூப் வலைதளங்கள் தொடர்ந்து இத்திசையில் பயணித்துக் கொண்டிருக்கின்றன. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாடுகள் முன்பை விட தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்துள்ளன. மகாபாரதம், இராமாயணம் ஆகிய தொடர்கள் ஒளிபரப்பப்பட்ட பிறகு மதக் கலவரங்களும், மசூதி இடிப்புகளும், இந்துத்துவ சார்பு வன்முறைகளும் அதிகரித்தன. இப்போது மீண்டும் அந்த உத்தி பின்பற்றப்படுகிறது. மதச்சார்பற்ற கட்சிகள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஏற்றுக் கொண்டுள்ளன. பிரெண்ட்ஸ் ஆஃப் இந்தியா, விஷ்வ ஹிந்து பரிஷத் போன்றவை வெளிநாட்டில் இருந்து செயல்படுகின்றன.

நரேந்திர மோடி அரசு அமைந்த பிறகு பல மாநிலங்கள் பசுவதைத் தடுப்புச் சட்டங்களைக் கடுமையாக்கின. இப்போது பசுக்காவலர்கள் படுகொலைகளை நிகழ்த்த முடிகிறது. இஸ்லாமியர் மீது அவதூறுகளை நரேந்திர மோடி என்ற பிரதமரும் தடையின்றி அள்ளி வீசுகிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ராஜஸ்தானிலும் மற்றும் பல மாநிலங்களிலும் நரேந்திர மோடி பேசிய வெறுப்பை உமிழும் பிரச்சாரத்தை உலகமே அதிர்ச்சியோடு கண்டனம் செய்திருக்கிறது.

2023 -இல், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு தமிழ்நாட்டில் 16 இடங்களில் ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தது. ஆர்.எஸ்.எஸ்- இன் செயல்பாடுகளை எந்த அரசும் தடுத்துவிட முடியாத சூழ்நிலை எழுந்துள்ளது. தமிழக ஊடகங்கள் ஆர்.எஸ்.எஸ்-க்குச் சார்பாக செயல்படாவிட்டால் அவை கடும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன. தமிழக ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. வீரபாண்டியன் என்ற மூத்த ஊடகவியலாளர் சன் டிவியில் இருந்து வெளியே அனுப்பப்பட்டார். இந்து பத்திரிக்கை சித்தார்த்த வரதராஜனை வெளியேற்றியது. ஊடக விவாதங்களில் சங்கிகளுக்கு முன்னுரிமை தரப்பட்டு உரையாடல்கள் நிகழ்த்தப் படுகின்றன. சங்கி ஊடகவியலாளர் மாரிதாஸ் கொடுத்த பட்டியல்படி ஊடகங்களில் இருப்பவர்கள் வேலை நீக்கம் செய்யப்படுகிறார்கள். புதிய தலைமுறை, வேந்தர் டிவி, காவிரி டிவி, கேப்டன் டிவி முதலியவற்றிலிருந்து பலர் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். 2014 -இல் நரேந்திர மோடி ஊடக மேலாளர்களை டெல்லிக்கு அழைத்துப் பேசி, உபசரித்து அனுப்பி வைத்தது, தொந்தரவுகளின் தொடக்கமாக அமைந்தது.

ஆர். எஸ்.எஸ். என்ற பயங்கரவாத அமைப்பின் பிடியில் இந்தியா

எந்த பயங்கரவாத அமைப்பும் பயங்கரவாத அமைப்பு என்று பெயர் சூட்டிக் கொண்டதில்லை. ஆர் எஸ் எஸ் அமைப்பும் அப்படிப் பெயர் சூட்டிக் கொண்டதில்லை. ஆனால் இன்று உலக அளவில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட பயங்கரவாத அமைப்பாக ஆர்எஸ்எஸ் வளர்ந்திருக்கிறது. ஆனால், அதை நிரந்தரமாகத் தடை செய்ய முடியவில்லை. இதுவரை மூன்று முறை தடை செய்யப்பட்டாலும், இந்தியாவில் குறுகிய காலத்தில் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டிருக்கிறது. 1962 குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க பிரதமர் ஜவஹர்லால் நேருவே அனுமதித்து அழைத்தார். 1971 -இல் இந்தியா - பாகிஸ்தான் போரின் போது ஆர்எஸ்எஸ் செய்த பணிகளை இந்திரா காந்தி ஏற்றுக் கொண்டார். காங்கிரஸ் கட்சியின் தலைமைகள் ஆர் எஸ் எஸ் எதிர்ப்பாளர்களாக இருக்கவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் பலர் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள்; இப்போதும் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் நிலை மிகவும் பரிதாபகரமானதாக இருக்கிறது. சனாதனத்தையும், ஆர்.எஸ்.எஸ் -ஐயும் எதிர்க்க வேண்டும் என்று ஓரளவு புரிதல் இருந்தாலும்கூட, பெரியாரின் பெயரைச் சொல்லும் கட்சிகளாலும் 100 விழுக்காடு சரியாக தங்கள் கொள்கைப்படி நடந்து கொள்ள முடியவில்லை. மாநிலத்தில் நயந்தும், பயந்தும், அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டியிருக்கிறது.

இந்திய அளவில், அனைத்துத் துறைகளும் ஆர்எஸ்எஸ் மயமாக்கப்பட்டிருக்கின்றன. 1986 முதல், தேசியவாதிகள் என்று கூறிக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஐ.ஏ.எஸ் பயிற்சி நிறுவனம் சங்கல்ப் பவுண்டேஷன் என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. 2020 -இல் தேர்ச்சி பெற்றவர்களில் 61% இதில் பயிற்சி பெற்றவர்கள். கடந்த ஆண்டுகளிலும் ஆர் எஸ் எஸ் சித்தாந்தம் புகட்டப்பட்டவர்கள் ஆட்சிப்பணி தேர்வுகளில் வெற்றி அடைந்திருக்கிறார்கள். 2018 -இல் தேர்ந்தெடுக்கப்பட்ட 990 பேரில் 649 பேர் இந்த அமைப்பால் தயார் செய்யப்பட்டவர்கள். 2017 -இல் 1999 பேரில் 689 பேரும், 2016 -ஆம் ஆண்டு 178 பேரில் 648 பேரும், 2015 -ஆம் ஆண்டு 1236 பேரில் 670 பேரும், ஆர் எஸ் எஸ் அமைப்பால் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு தொடர்ந்து வழிகாட்டும் குருமார்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்கள்தான். இராணுவத்தில் ஆர்எஸ்எஸ் காரர்கள் முழுவதுமாக ஊடுருவியிருக்கிறார்கள்.

2020 -இல் உத்தரப்பிரதேசத்தில் முதல் இராணுவப் பள்ளியை ஆர்எஸ்எஸ் தொடங்குவதாக அறிவித்தார்கள். இராணுவப் பள்ளிகளாகிய சாய்னிக் (Sainik) பள்ளிகள் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இந்திய இராணுவத்தை இந்து மதவெறி இராணுவமாகக் கட்டமைக்கிறார்கள். 1961 - முதல், அரசு கட்டுப்பாட்டில் இயங்கிய இப்பள்ளிகள் இப்போது 63% ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஒரு பள்ளி அதானியிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்ற சாத்வி ரிதம்பரா கட்டுப்பாட்டில் இரண்டு பெண் குழந்தைகளுக்கான சாய்னிக் பள்ளிகள் இருக்கின்றன. இவை மட்டுமல்ல; எத்தனை நிர்வாகத் துறைகள் இருக்கின்றனவோ, அத்தனையிலும் ஆர்எஸ்எஸ் -இடம் களப்பயிற்சியும் தத்துவார்த்த பயிற்சியும் பெற்றவர்கள் ஊடுருவி விட்டார்கள். இந்துத்துவ இந்தியாவுக்கான மொழியாக இந்தியும் வளர்த்தெடுக்கப்படுகிறது.

தமிழ் உள்ளிட்ட மொழிகளைப் பின்னுக்குத் தள்ளி சமஸ்கிருதத்திற்கும் இந்திக்கும் மிக அதிகமாக இந்திய ஒன்றிய அரசு செலவிட்டு வருகிறது. 'காசித் தமிழ் சங்கமம்' என்றும் பல்வேறு வகையிலும் தமிழை விழுங்கவும், சமஸ்கிருதத்தை தமிழர்கள்மீது திணிக்கவும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் தொடங்கப்படுகிறது.

2014 முதல் 2022 வரை தமிழுக்கு 74 கோடிகளும், சமஸ்கிருதத்துக்கு 1488 கோடியும் செலவிடப்பட்டிருக்கிறது. 2019 -20 நிதியாண்டு பட்ஷெட்டில், இந்தி ஆசிரியர்கள் நியமனத்திற்கு 50 கோடி ஒதுக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடையும் வரை வெளியிடப்பட்ட பணத்தாள் ஒரு ரூபாய் முதல் 500 ரூபாய் வரை, இந்தி மொழி பணத்தாள்களில் இடம் பெற்றதே இல்லை. ஆனால், இந்தியா விடுதலை பெற்ற பிறகு அனைத்துத் துறைகளிலும் இந்தியே ஆட்சி செய்கிறது.

இந்துத்துவக் கூட்டணிகள்

 2024-க்கு முன்பாகவே, ஆர்எஸ்எஸ் பல மாநிலங்களிலும் பல்வேறு கட்சிகளுடன் இந்துத்துவக் கூட்டணி அமைத்திருக்கிறது. பாஜகவுடன் கூட்டு சேரத் தயாரான கட்சிகளையும், சாதி அமைப்புகளையும் விலைக்கு வாங்குகிறது. மாநிலங்களில் தேர்தலுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கிறது. தேர்தல் கட்சிகளையே விலைக்கு வாங்குகிறது. "ரூபாய் 1000 கோடி, 15 மக்களவை இடங்கள், 2026 இல் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவி" என்றெல்லாம் பா.ஜ.க.பேரம் பேசியதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் ஊடகங்களில் கூறினார். (தினகரன் 3 ஏப்ரல் 2024).

ஆர்.எஸ். எஸ். தலைவர்களால் தமிழ்நாட்டின் தலைவர்களிடம் இப்படி நெருங்கிப் பேச முடிகிறது. ஆர் எஸ் எஸ். உடன் தொடர்ந்து பல தலைவர்கள் உறவில் இருந்து வருகிறார்கள். என்ன பேசுகிறார்கள், என்ன திட்டமிட்டிருக்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியாது. பாஜகவுக்கு எதிரான மனநிலை தமிழ்நாட்டில் உள்ளதால், பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சி நாம் தமிழர் என்று காட்டுவதற்காக அதிக முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் நாம் தமிழர் கட்சியின் திட்டங்கள் அனைத்தும் ஆர்எஸ்எஸ் திட்டங்களாகவே இருந்து வருவது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது.

 "இந்தியா முழுவதும் இந்து முகத்தோடு போ" என்று கூறும் ஆர்எஸ்எஸ் "தமிழ்நாட்டிற்கு தமிழ் முகத்தோடு போ" என்று கூறுகிறது. இந்தியா முழுவதும் இராமன் என்ற அடையாளத்தை உயர்த்திப் பிடிக்கும்போது, தமிழ்நாட்டில் முருகன் மற்றும் வேல் என்ற அடையாளத்தை உயர்த்திப் பிடிக்கக் கூறுகிறது. திட்டங்கள் அனைத்தும் ஆர் எஸ் எஸ் வகுத்தளித்தபடியே நடத்தப்படுகின்றன.

ஆர்.எஸ். எஸ் அரசியல் திட்டம்

இந்திய அரசியல் சட்டத்திற்குப் பதில் இந்து ராஷ்டிர அரசியல் சட்டம்

 இவர்களுக்கு ஓர் அரசியல் திட்டம் தொடக்கக் காலம் முதல் இருந்து வருகிறது. அதுதான் இந்திய அரசியலமைப்பை ஒழித்துக் கட்டிவிட்டு, இந்துராஷ்டிரத்திற்குப் புதிய அரசியலமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது. 2019 செப்டம்பர் 17-ஆம் நாள் சத்தியம் நியூஸ் தொலைக்காட்சியில் நெல்லையில் அமித் ஷா பேசிய பேச்சு காட்டப்பட்டது .

"70 ஆண்டுகளாக பல கட்சி சனநாயக ஆட்சி முறை நடைமுறையில் உள்ளது. பல கட்சி நாடாளுமன்ற ஆட்சி முறை தோல்வி அடைந்து விட்டது" - என்று அமித்ஷா பேசுகிறார்.

பல கட்சிகள் மற்றும் பல்வேறு தேசிய இனங்களுக்கான கட்சிகள் தனித்தனியே இருப்பதை ஆர்எஸ்எஸ் அமைப்பு விரும்பவில்லை. பல தேசிய இனங்கள், பல மொழிகள், பல்வேறு பண்பாடுகள் இருக்கக்கூடிய ஒரு நாட்டிற்கு, நாடாளுமன்ற சனநாயக முறை மட்டுமே பொருந்தும் என்பதால்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுதியபோது நாடாளுமன்ற சனநாயக முறையை வகுத்தளித்தார்கள். அந்த நாடாளுமன்ற சனநாயகம் என்பது முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பது ஆர் எஸ் எஸ் அரசியல் திட்டம். 2019 செப்டம்பர் மாதம், டெல்லியில் பேசும் போது, அமித்ஷா,

"70 years after Independence, the people of the nation had doubts in their mind, if the multi-party parliamentary democratic system has failed" (இந்தியா விடுதலை அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தேசத்தின் மக்களுடைய சிந்தனையில், பல கட்சி நாடாளுமன்ற சனநாயக முறை தோற்றுவிட்டதோ என்ற சந்தேகங்கள் இருந்தன" - Deccan Herald, 20 November 2022

குஜராத், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் முறையை உருவாக்க வேண்டும் என்று பேசினார். இதுபோல கடந்த எட்டு ஆண்டுகளாகப் பேசி வந்திருக்கிறார். "ஒரு தேசம், ஒரு தேர்தல்" என்ற முறையை வலியுறுத்தும் மோடி வகையறாக்களின் திட்டம் இப்போது இருக்கும் நாடாளுமன்ற சனநாயகத்தை ஒழித்துக்கட்டிவிட்டு ஓர் இந்து வெறியன், ஓர் இந்திக்காரன் மட்டுமே எப்போதும் அதிகாரம் செலுத்தும் வகையில், குடியரசுத் தலைவர் முறையைக் கொண்டு வருவதுதான். இதை அவர்கள் மறைத்துப் பேசவில்லை. "வெஸ்ட்மின்ஸ்டர் முறையாகிய பாராளுமன்ற சனநாயகம் குடியரசுத் தலைவர் முறையாக மாற்றியமைக்கப்பட வேண்டும்" என்று மோடி பேசியிருக்கிறார். அதாவது, இன்று பின்பற்றப்படும் முறை இங்கிலாந்திலிருந்து வந்ததாம். அது கூடாதாம். இப்படிப் பேசுவது பாஜகவுக்குப் புதிதல்ல. கடந்த காலத்தில் பா.ஜ.க.வின் முந்தைய வடிவமான சனசங்கம் காலத்திலும் இதே கருத்து முன் வைக்கப்பட்டது,

இதே நோக்கத்துடன், முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயி வழி நடத்திய இந்துத்துவ அரசு ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி எம்.என். வெங்கடாசலயா தலைமையில் ஒரு தேசிய ஆணையத்தை அமைத்தது. இந்திய அரசியல் சட்டத்தின் செயல்பாட்டை மீள்ஆய்வு செய்வதற்காக அது அமைக்கப்பட்டது. முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் உள்ளிட்ட முக்கியமானவர்கள் அந்த ஆணையத்தைப் பற்றி, அதன் நோக்கம் பற்றி விமர்சித்தனர். ஆகவே, எடுத்துக்கொண்ட வேலை குறித்து வெங்கடாசலையாக கமிஷன் நேரடியாக எதுவும் பேசவில்லை.

 பாரதிய ஜனதா கட்சி குடியரசுத் தலைவர் முறையைக் கொண்ட ஒரு புதிய அரசியல் சட்டத்தை ஆதரிப்பது பற்றிய கட்டுரையை பிஸினெஸ் ஸ்டாண்டர்டு இதழ் (Business Standard, August 21 2023) வெளியிட்டது. இது, இந்திய நாடாளுமன்ற சனநாயகத்தை ஒழித்துக் கட்டி விட்டு ஆர். எஸ். எஸ்-இன் திட்டமான குடியரசுத் தலைவர் முறையைக் கொண்டு வருவது பற்றிய விவாதத்தை மீண்டும் தொடங்கி வைத்தது. ஆர். எஸ். எஸ். மற்றும் பா.ஜ.க.வுடன் தொடர்புடையவர்கள் எழுதிய இரண்டு கட்டுரைகள் விரிவான விவாதத்தைத் தொடங்கி வைத்தது. ஒரு கட்டுரையை எழுதியவர் இந்தியா பவுண்டேஷனின் இயக்குநர்; மற்றொருவர் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் உள்ளவர்.

2019 ஜூன் 21 அன்று presidential system.org வெளியிட்ட செய்திக்கட்டுரை கவனத்தில் கொள்ளத்தக்கது. பானு தமிஜா என்பவர் Why India needs the presidential system? (இந்தியாவிற்கு குடியரசுத் தலைவர் முறை ஏன் அவசியம்?) என்ற நூலை எழுதியவர்.

11.4.2019 அன்று நடைபெற்ற ஜஸ்வந்த் மேத்தா எழுதிய "குடியரசுத் தலைவர் முறை சனநாயகம்" (Presidential Democracy) நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில், 1998 -இல் வாஜ்பாயி பிரகடனம் செய்த செய்திகளை பானு தமிஷா குறிப்பிட்டார். 1998 -இல் வாஜ்பாய் குடியரசுத் தலைவர் முறையின் நல்ல கூறுகளை நாம் விவாதிக்க வேண்டும் என்று அறிவித்தார். அவர் "இங்கிலாந்தின் சிறந்த அமைச்சரவை மாதிரி" என்பது இந்தியாவில் உண்மையான இருப்பால் (Indian Reality) தோற்கடிக்கப்பட்டு விட்டது என்று நான் கருதுகிறேன்" என்றார். இதே நோக்கத்துடன், ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி வெங்கடாசலையா தலைமையில் ஓர் ஆணையத்தையும் நியமித்தார்.

தீன்தயாள் உபாத்தியாயா பாஜகவின் கொள்கை முன்னோடி; பாரதீய ஜனசங்கக்காரர்; கோல்வால்கரை வழிகாட்டியாகக் கொண்டவர். இராஷ்டிர தர்மா எனும் மாத இதழை 1940-இல் லக்னோவில் தொடங்கினார். பின்னர் பஞ்சஜன்யா என்னும் வார இதழையும், சுதேசி எனும் நாளிதழையும் தொடங்கினார். அவர் ஆர்.எஸ். எஸ்.இல் பயிற்சி பெற்றவர். அதில் ஒரு முக்கிய பொறுப்பாளர். அவர் இந்திய அரசியல் சட்டத்தை கடுமையாக விமர்சித்திருக்கிறார்; வாழ்நாள் முழுவதும் விமர்சித்தார். 1965இல் இந்திய அரசியல் சட்டத்தை மாற்றி அமைப்பதற்கான திட்டத்தை வகுத்தளித்தார். ஒரு புதிய இந்தியாவுக்கான திட்டம் அது. "தர்மராஜ்யா" எனப்படும் இத்திட்டம் பாஜகவின் இலக்காக ஏற்கப்பட்டது. உபாத்தியாயா வகுத்தளித்த பாதையில் ஒரு புதிய இந்தியாவைத் கட்ட பாஜக விரும்புவதாக இந்துத்துவவாதிகள் பதிவு செய்கின்றனர்.

கே. என்.கோவிந்தாச்சாரியா மற்றொரு ஆர் எஸ் எஸ் இன் கொள்கை வகுப்பாளர்; பாஜகவின் சக்தி வாய்ந்த பொதுச் செயலர்.

தம்முடைய ஒரு நேர்காணலில் "we will rewrite the constitution to reflect Bharathiyata" (பாரதீயதாவை பிரதிபலிக்கும் ஓர் அரசியலமைப்பாக மாற்றி எழுதுவோம்) என்று குறிப்பிட்டார். பாரதீயத்தை பிரதிபலிக்கும் அரசியலமைப்பாக மாற்றி எழுதுவோம் என்று பிரகடனம் செய்தார்.

2017-இல், பாஜக ஒன்றிய அமைச்சர் ஆனந்த் குமார் ஹெக்டே இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்காகவே தாங்கள் இருப்பதாக கூறினார்:

"இந்திய அரசியல் சட்டம் கூறுகிறபடி பாரதம் ஒரு கூட்டாட்சி; அது மாநிலங்களின் ஒன்றியம்," என்றும், "பீகார் மாதா, பஞ்சாபி மாதா, கன்னட மாதா, தமிழ் மாதா -எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து பாரதமாதா என்று இருப்பது கேலிக்குரியது. நாம் பாரதமாதாவின் உறுப்புகளாகவே மாநிலங்களைக் கருதுகிறோம் ஒவ்வொன்றையும் தனித்தனி தாயாகக் கருதமில்லை. ஆகவே நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் கூட்டாட்சியாக இருக்கக் கூடாது. ஓர் ஒற்றை ஆட்சி அமைப்பாகவே இருக்க வேண்டும்."

1925 முதல், இந்தியாவை ஓர் அகண்ட பாரதமாக, இந்துராஷ்டிரமாக படைத்து விட வேண்டும் என்ற குறிக்கோளோடு ஆர் எஸ் எஸ் தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறது. 1946 முதல் 1949 வரை இந்திய அரசியல் சட்டம் எழுதப்பட்ட காலத்தில், அதை ஓர் இந்துராஷ்டிரமாகப் படைத்து விடுவதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொண்டு, அதில் தோற்றது. இந்நிலையில் இந்தியக் குடியரசு உருவாக்கத்திற்குப் பிறகும் தன்னுடைய பணிகளைத் தொடர்கிறது. 1960 -களிலிருந்து குடியரசு தலைவர் முறையை எப்படியாவது கொண்டு வந்துவிட வேண்டும் என்ற கருத்தைத் தீவிரமாகப் பரப்பி வருகிறது. இந்தியாவில் நிலவும் பன்மொழிச் சூழல், பல்வேறு மதங்கள் நிலவும் சூழல், பன்மைப் பண்பாட்டுச் சூழல் -என்ற வேறுபட்ட சூழல்களில், இந்துராஷ்டிரம் படைப்பதற்கும் குடியரசுத் தலைவர் முறைக்கும் அதிக வேறுபாடு இல்லை. ஆளுக்கு ஒரு வாக்கு என்ற வகையில் தேர்தலில் ஒற்றை மனிதனை அனைத்து அதிகாரங்களோடு தேர்ந்தெடுக்கும்போது, அம்மனிதன் தவிர்க்க வியலாதவாறு ஓர் இந்திக்காரனாகவும், இந்து மதத்தவனாகவும் மட்டுமே இருக்க முடியும் என்பதால், குடியரசுத் தலைவர் முறையை இவர்கள் தொடர்ந்து ஆதரிக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த 15 அல்லது 20 ஆண்டுகளாக இந்தத் திட்டத்தை ஏற்குமாறு மாநில அளவில் பல்வேறு கட்சிகளைத் தன்வயப்படுத்தி இருக்கிறார்கள். குடியரசுத் தலைவர் முறை என்றால் என்ன? நாடாளுமன்ற சனநாயக முறை என்றால் என்ன? என்று அறியாத மக்களிடம் குடியரசுத் தலைவர் முறையைப் பற்றி ஓர் ஆர்வத்தையும், அதை ஆதரிக்கும் உளவியலையும் வளர்த்தெடுக்கும் பொறுப்பை மாநில அளவில் செயல்படும் பல்வேறு கட்சிகளிடம், பல்வேறு மாநிலங்களில் பல்வேறு தலைமைகளிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். "இந்திய குடியரசு தலைவரையே நீ நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுத்தால் எப்படி இருக்கும்?" என்று கேட்கும் போது, அப்பாவியான மக்கள் அவ்வளவு அதிகாரத்தை நமக்குத் தருகிறார்களே என்று குதுகலித்துப் போகிறார்கள். இந்த அபாயத்தை மக்கள் இன்னமும் உணரவில்லை. சனநாயக நடைமுறைகளில் நம்பிக்கை உள்ள தலைவர்கள் இதை உணர்த்தவும் இல்லை.

தலைவர்கள் மேடையில் பேசுவதைக் கண்டு புல்லரித்துப் போகாதீர்கள்! அவர்கள் கொள்கை திட்டம் என்னவென்று பாருங்கள்!

உதடுகள் தமிழர் உரிமை பேசுகின்றன! ஆனால், திட்டங்கள் இந்துராஷ்டிர உருவாக்கத்திற்கானவை!

ஆர். எஸ். எஸ். இந்தியாவை இந்துராஷ்டிரமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை முன்வைத்து செயல்பட்டு வருகிறது. இந்திக்காரர்கள், இந்து மதத்தவர்கள் (பார்ப்பனர்கள்) கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் வரவேண்டும் என்பதுதான் இந்துத்துவவாதிகளின் ஆசை.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நேரடியாக பாஜக கட்சியையும், மறைமுகமாக பல்வேறு கட்சிகளையும் இயக்கி வருகிறது.

பா.ஜ.க.வின் தாய் அமைப்புதான். ஆர்.எஸ்.எஸ். இன்னும் 15 ஆண்டுகளில் இந்துராஷ்டிரம் அமைக்கப்படும் என்று ஆர்.எஸ்.எஸ்.-இன் தலைவர் மோகன் பகவத் அறிவித்திருக்கிறார். இந்திராஷ்டிர அரசியல் சட்டம் 32 பக்க அளவிற்கு 14.08.2023 அன்று வரைவு செய்து சாமியார்கள் அறிவித்திருக்கிறார்கள். இந்திய அரசியல் சட்டம் நீக்கப்பட்டு இந்து ராஷ்டிர அரசியல் சட்டம் கொண்டுவரப்படும்; முஸ்லிம், கிறிஸ்தவர் இங்கு வாழ முடியாது; வாழ்வதாக இருந்தால் இந்து மதத்திற்குத் திரும்பி சூத்திரர்களாக பஞ்சமர்களாக இருக்க ஒப்புக் கொள்ள வேண்டும் என அறிவித்திருக்கிறார்கள்.

இந்துத்துவ பா.ஜ.க. அதிகாரத்தில் தொடர்ந்தால் இதே அரசியலமைப்புச் சட்டம் தொடரும் என்று கூற முடியாது. தமிழ்நாடு என்ற மாநிலம் இருக்குமா? என்பது சந்தேகம்தான். காஷ்மீருக்கு என்ன நடந்ததோ, மணிப்பூருக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறதோ, அது தமிழ்நாட்டுக்கு நடக்காது என்று எவரும் கூற முடியாது.

இந்நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பு தன்னுடைய மறைமுக கட்சிகள் மூலமாகவும், சுவீகார புத்திர அமைப்புகள் மூலமாகவும், இந்தியாவின் அரசியலமைப்பை மாற்றி விட்டு "ஒரே நாடு, ஒரே தலைமை, ஒற்றை ஆட்சி" என்பதை நிலை நிறுத்தும் வகையில், இந்திக்காரர்கள் தலைமையையும் இந்துத்துவத்தின் தலைமையையும் நிரந்தரப்படுத்தும் வகையில், "குடியரசுத் தலைவர் முறை"யை ஆதரித்து கருத்து பரவலை மேற்கொண்டு வருகிறது. குடியரசுத் தலைவர் முறையை ஆதரிக்கும் வகையில் மக்களை தயார்படுத்துவதற்கான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக பல்வேறு கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன. மேடையில் அவர்கள் தேனொழுகப் பேசுவது, தமிழர் உரிமை பற்றி உணர்ச்சிகரமாக பேசுவது,

வீரவசனங்களை அதிரடியாகப் பேசுவது -என்பதெல்லாம் மேடைகளில் நடந்தது. அதிகம் விபரம் அறியாத இளைஞர்களுக்கு இவையெல்லாம் வாயைப் பிளக்க வைக்கின்றன. ஆனால் மேடைகளில் பேசுவது வேறு; அவர்களின் வேலைத்திட்டம் வேறு. உண்மையில் அவர்களின் வேலை திட்டம் என்ன? என்பது ஆர்ப்பரித்துக் கொண்டிருக்க கூடிய இளைஞர்களுக்குத் தெரியாது.

ஒரு நிகழ்ச்சியைக் கூறுவது பொருத்தமாக இருக்கும். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நாடறிந்த தமிழறிஞர் ஒருவர் தினமணி இதழில் நடுப்பக்கக் கட்டுரை எழுதி இருந்தார். அதன் கரு இந்தியாவுக்கு "குடியரசு தலைவர் முறை" கொண்டு வரப்பட வேண்டும் என்பது. இதை படித்துவிட்டு பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள். குடியரசுத் தலைவர் முறை என்றால் என்ன என்று அறிந்தவர்களுக்குதான் அது அதிர்ச்சியாக இருந்தது.

(மொழி வேற்றுமைகள் இல்லாத, பல்வேறு மத வேறுபாடுகள் இல்லாத, கலாச்சார பன்மைத்துவம் இல்லாத நாடுகளில் குடியரசு தலைவர் முறை இருப்பதில் சிக்கல் இல்லை. ஆனால் இந்தியாவுக்கு குடியரசுத் தலைவர் முறை என்பது பல்வேறு தேசிய இனங்களையும், மொழியின அடையாளத்தையும், பல்வேறு மதத்தவர்களையும், மாறுபட்ட பண்பாடுகளையும், ஒடுக்குவதற்கான மோசமான உத்தி. இதைத்தான் ஆர்எஸ்எஸ் காரர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். )

சென்னை பிரசிடென்சி கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்த என்னுடைய மாணவர் எனக்குத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார். அந்த மாணவர் "இந்த ஆள் என்ன கிறுக்கனா? குடியரசுத் தலைவர் முறை என்றால் என்னவென்று அவருக்குத் தெரியுமா? அவருக்கு அறிவே கிடையாதா?" என்றெல்லாம் ஆத்திரத்துடன் புலம்பினார். ஏனென்றால், அம்மாணவருக்கு அரசியல் அறிவியல் தெரியும்.

அரசு முறைகள் பற்றி தேவையான தெளிவு

சனநாயக அரசுமுறைகளில் (1) பாராளுமன்ற சனநாயகம் (Parliamenary Democracy) (2) குடியரசுத் தலைவர் சனநாயக முறை (Presidential Democracy) என்று இரண்டு உண்டு. பாராளுமன்ற சனநாயக முறை இங்கிலாந்தில் இருந்து நமக்கு கிடைத்தது. பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் மொழி பிரச்சனையில்லாத, பல மதங்கள் முரண்படும் பிரச்சனை இல்லாத, தேசிய இனங்களின் பன்மைத்துவம் இல்லாத, பல்வேறு பண்பாட்டுக் கூறுகளில் முரண்பாடு இல்லாத நாடுகளில் குடியரசுத் தலைவர் முறை என்பது இருக்கலாம். அதில் சிக்கல் வருவதில்லை. ஆனால் இந்தியா போன்ற மொழிப் பன்மைத்துவம், பண்பாட்டுப் பன்மைத்துவம், பல்வேறு தேசிய இனங்களின் இருப்பு கொண்ட ஒரு நாட்டிற்குக் குடியரசுத் தலைவர் முறை ஏற்புடையது அல்ல என்பதால்தான் பாராளுமன்ற சனநாயக முறையைத் தெரிவு செய்தார்கள்.

பாராளுமன்ற சனநாயக முறையில் பல்வேறு கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்கிறார்கள். இத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் யாரை அல்லது எந்த கட்சியை அதிக உறுப்பினர்கள் ஆதரிக்கிறார்களோ, அவர் அமைச்சரவையை (Cabinet) அமைக்கிறார். பல்வேறு கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் அமைச்சரவை தற்போது அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு மொழியினமும், ஒவ்வொரு மதத்தவரும் தங்கள் குரலை எழுப்பவும், தங்களுடைய தேசிய இன மக்களின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், ஒரு வாய்ப்பை அளிக்கிறது. நாடாளுமன்ற சனநாயக முறையில் கேபினட் என்று சொல்லக்கூடிய "அரசு" நாடாளுமன்றத்திற்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டது (answerable to the House). பிரதமருக்கு எவ்வளவு காலம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறதோ அதுவரைதான் பிரதமரும் அவருடைய அமைச்சரவையும் பதவியில் இருக்க முடியும்.

ஆனால் குடியரசுத் தலைவர் முறை என்பது அப்படி அல்ல. நாட்டில் உள்ள மக்கள் நேரடியாக அல்லது வாக்காளர் குழுவால் (Electoral College) தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒட்டுமொத்த நிர்வாக அதிகாரங்களையும் கைக்கொண்டு ஆளுகிறார். நாடாளுமன்றத்திற்கும் அவருக்கும் தொடர்பில்லை. நாடாளுமன்றத்திற்கு அவர் பதில் சொல்லக் கடமைப்பட்டவர் இல்லை. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவியில் இருக்கும் நான்கு/ ஐந்து ஆண்டுகளுக்கு எந்த முடிசூடாமன்னரை விடவும் அதிகாரம் மிக்கவராக இருப்பார்.

பாராளுமன்ற சனநாயக முறையில், எத்தனையோ மோசமான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் தடுக்கப்பட்டிருக்கின்றன. பிரதமர் என்பவர் நாடாளுமன்றத்தின் தயவில்தான் பதவி வகிக்கிறார்.

இந்த வாய்ப்புகள் குடியரசுத் தலைவர் முறையில் இருக்காது. நன்கு விவாதித்து, இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்படும் மசோதாக்களை குடியரசுத் தலைவர் என்பவர் "வீட்டோ" (மறுபாணை) அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்த்துக் கட்டுவார்; அல்லது திருப்பி அனுப்பிவிடுவார். இரண்டு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் (2/3) ஆதரவு இருந்தால்தான் அதை மீண்டும் நிறைவேற்றிக் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும். மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு என்பது இருப்பதே இல்லை. பெரும்பாலும் குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பினால் அந்த மசோதா இறந்து போனதாகவே பொருள்.

இந்தியச் சூழல்

இந்தியாவில் 2011 -ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில், இந்தி பேசுகிறவர்கள் 57%, பெங்காலி பேசுகிறவர்கள் 8.9%, மராத்தி பேசுகிறவர்கள் 8.2%, தமிழ் பேசுகிறவர்கள் 6.3.

அதுபோன்றே இந்தியாவில் இந்துக்கள் 79.80%, இஸ்லாமியர் 14.23%, கிறித்தவர்கள் 2.3%, சீக்கியர் 1.72%.

இச்சூழ்நிலையில், குடியரசுத் தலைவர் முறையை ஏற்றுக்கொண்டால், இந்தியாவுக்கு ஓர் இந்திக்காரர்தான் குடியரசுத் தலைவராக (நிரந்தரமாகவே) வர முடியும்; ஓர் இந்து மதத்தவர்தான் நிரந்தரமாக குடியரசுத் தலைவராக வர முடியும். இதையெல்லாம் ஆலோசித்துத்தான் பாராளுமன்ற ஜனநாயக முறையை அரசியல் சான்றோர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.

குடியரசுத் தலைவர் முறை என்பதில், மக்கள் நேரடியாக வாக்களித்து ஒரு தலைவரை தேர்ந்தெடுத்து விட்டு, ஐந்து ஆண்டு காலம் காத்திருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ்-இன் எதிர்பார்ப்பு இதுதான்: குடியரசுத் தலைவரின் ஆணைகள் மூலம் கச்சிதமாக இந்துத்துவத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி விட முடியும். அதை தடுத்து நிறுத்தி விட முடியாது. குடியரசுத் தலைவர் மீது குற்றவிசாரணை செய்வது என்பது எப்போதாவது நிகழ்வது உண்டு. அது எளிதானதல்ல.

அதிபர் ஆட்சி முறை என்பதும் குடியரசுத் தலைவர் ஆட்சி முறை என்பதும் ஒன்றுதான். சமீப காலமாகக் குடியரசுத் தலைவர் ஆட்சிமுறை பற்றி அதிகம் பேசப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ்-இன் நேரடி அரசியல் கட்சியான பாஜகவும், பல மாநிலங்களில் மறைமுகமாக ஆர்.எஸ்.எஸ் இயக்கி வரும் கட்சிகளும், குடியரசுத் தலைவர் முறையை ஆதரித்து மக்களிடையே கருத்துப் பரவல் செய்து வருகின்றன. பலருக்கு நாடாளுமன்ற முறைக்கும் குடியரசுத் தலைவர் முறைக்கும் இடையிலான வேறுபாடு என்பது தெரியாததால், பலருக்கு சனநாயக விரோதிகளை அடையாளம் காண முடியவில்லை.

தமிழ்நாட்டில் வேறு எந்த கட்சியும் ஏற்காத ஆர்.எஸ்.எஸ் -இன்திட்டமான குடியரசுத் தலைவர் அதிபர் முறையை நாம் தமிழர் கட்சி தன் தேர்தல் அறிக்கையில் ஏற்றுப் பேசியிருக்கிறது

இந்திய ஒன்றியம் என்பது ஒரு குடியரசு நாடு. ஆனால் இந்நாட்டின் முதல் குடிமகனை குடியரசு தலைவரையே குடிமக்களால் நேரடியாகத் தேர்வு செய்ய முடியாத நம் அமைப்பு முறை குடியரசுக் கோட்பாட்டிற்கு நேர் எதிரானதாகும். அனைத்து சட்டங்களும் குடியரசுத் தலைவரின் கையொப்பத்தினாலேயே செயலாக்கம் பெறுகின்றன. மக்களால் தேர்வு செய்யப்படக்கூடிய ஒருவர் மீண்டும் மக்களைச் சந்தித்துத்தான் வெற்றி பெற வேண்டும் என்ற தேவை இருக்கின்ற வரையில்தான் அம்மக்களின் நலனுக்காகச் செயலாற்றுவார். எனவே ‘தலைவர் மக்களால் நேரடியாகத் தேர்தலின் வழியே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சியின் கொள்கை முடிவாகும்.’

குடியரசுத் தலைவரை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதாக இருந்தால், இந்தியாவில் இந்தி பேசுகிற ஒருவர்தான் குடியரசுத் தலைவராக வர முடியும்; இந்து மதத்தைச் சேர்ந்தவர் தான் குடியரசுத் தலைவராக வர முடியும். அவர்களுக்கு வேறு மதத்தவரின், வேறு மொழியினத்தவரின் ஆதரவு தேவையில்லை; எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் இந்திக்காரர்களும் இந்து மதத்தவரும் மட்டுமே போதும்.

இது ஆர்.எஸ்.எஸ். இன் வேலைத்திட்டங்களில் மிக முக்கியமானது. தமிழ்நாட்டில், இந்த சூழ்ச்சிகரத் திட்டத்தைத் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தங்களுடைய கொள்கை முடிவாக அறிவித்திருக்கும் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே. இந்த அபாயத்தை உணராதவர்கள்தான் கைத்தட்டுகிறார்கள்; ஆர்ப்பரிக்கிறார்கள்; குதூகலம் அடைகிறார்கள்; தமிழ்நாட்டை, தமிழினத்தை, தமிழ் மொழியைக் காக்க வேண்டும் என்று நினைக்கும் எவரும் குடியரசுத் தலைவர் முறை என்ற திட்டத்தை எவர் கைக் கொண்டாலும் அவர்களைப் புறக்கணிக்க வேண்டும்.

ஆர் எஸ் எஸ் அமைப்பு தலைவர்கள் அறிவாளிகள்தான். பேச்சிலும், எழுத்திலும் வல்லவர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு தங்கள் நாசகார திட்டங்களை இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்த முயன்று வருகிறார்கள்.

காங்கிரசும், திமுகவும் பேசிய மாநில சுயாட்சி! அதையே திரும்பப் பேசுவது தமிழ் தேசியமா?

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் முன்வைக்கும் தேர்தல் அறிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. எதிர்காலத்தில் இந்தியா என்னவாக இருக்கும்? மாநிலங்கள் என்னவாக இருக்கப் போகின்றன? -என்பது குறித்த புரிதலைப் பெற இந்திய தேசிய மற்றும் மாநில அளவிலான கட்சிகள் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கைகள் ஊன்றி கவனிக்கப்பட வேண்டியவை.

பாஜக தேர்தல் அறிக்கை -2024

பாஜ.க. தன் இந்துராஷ்டிர இலக்கில் குறியாக இருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறது. ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற இருந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியிட்டார்கள். அதற்கு சங்கல்ப் பத்ரா அல்லது மோடியின் உத்தரவாதம் என்று பெயரிட்டிருந்தார்கள். இதன் சாரம் "ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்பதுதான். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதன் உள்ளீடு இந்தியாவுக்கு ஒரே அதிபரைத் தேர்ந்தெடுப்பது, அதாவது குடியரசுத் தலைவர் முறையைக் கொண்டு வருவது என்பதுதான். குடியரசுத் தலைவர் முறையை நீண்ட காலமாக அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். பொது சிவில் சட்டம், ஒரே தேர்தல், முத்ரா கடன் அதிகரிப்பு, ரேசனில் இலவச உணவு தானியம் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பு -என்பவை மட்டுமே அதன் முக்கியக் கூறுகள். இந்திராஷ்டிரம் நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தும் கூறுகள் இதில் உள்ளன.

திமுக -வின் தேர்தல் அறிக்கை

தன் 64 பக்க தேர்தல் அறிக்கையில் மாநிலங்களில் உண்மையான சுயாட்சி பெறுகின்ற வகையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்படும்; ஆளுநர்கள் நியமனம் முதலமைச்சர்களின் ஆலோசனையை பெற்று செய்யப்பட வேண்டும்; ஒன்றிய அரசுப் பணிகளுக்கு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படும்; ஒன்றிய அலுவலகங்களில் தமிழ் விளங்கும்; அனைத்து மாநில மொழிகளின் வளர்ச்சிக்கு சம அளவு நிதி ஒதுக்கப்படும்; திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்; தாயகம் திரும்பிய இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்; புதிய கல்விக் கொள்கை இரத்து; மாநில முதலமைச்சர்களைக் கொண்ட மாநில வளர்ச்சி குழு அமைக்கப்படும்; குடியுரிமை திருத்தச் திருத்தச் சட்டம் -2019 இரத்து செய்யப்படும்; தொகுதி மறு சீரமைப்பில் தமிழ்நாட்டின் முக்கியத்துவம் குறையாமல் பாதுகாக்கப்படும்; பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது; ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும் ­என்பவை முக்கியக் கூறுகள்.

இதில் மாநிலங்களின் உரிமை, தமிழ் மொழிக்கு முன்னுரிமை, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நீக்குவது, முதலமைச்சர்கள் ஒன்று கூடி முடிவெடுக்கக்கூடிய மாநில வளர்ச்சி குழு அமைப்பது -என்பவை குறிப்பிடத்தக்கக் கூறுகள். ஆளுநர் பதவியே இருக்கக் கூடாது என்று கூறுவதற்குப் பதிலாக சர்க்காரியா கமிஷன் பரிந்துரைத்தது போல முதலமைச்சர்களின் ஒப்புதலோடு ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதை திமுக தன் தேர்தல் அறிக்கையில் பேசியிருக்கிறது.

திமுக வின் தேர்தல் அறிக்கை மாநில சுயாட்சிக்கு முக்கியத்துவம் தருகிறது. 1974இல் மாநில சுயாட்சித் தீர்மானத்தைத் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி 50 ஆண்டுகளாக அது கிடப்பில் கிடக்கிறது.

தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் தமிழ்த் தேசிய இறையாண்மை உள்ள குடியரசு அமைத்து விட வேண்டும் என்ற இலக்கை நெஞ்சில் ஏந்தி, அதே நேரம் பாஜகவின் ஒட்டுமொத்த பேரழிவுத் திட்டத்தை வீழ்த்தி விட வேண்டும் என்ற நோக்கோடு மக்களுக்கு 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது வழிகாட்டுதல்களை வழங்கினார்கள்.

தமிழ்த் தேசியம் என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்தக்கூடிய நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை குழப்பங்களின் தொகுப்பாக விளங்குகிறது.

தமிழ்த் தேசிய ஆதரவு கூறுகளான ஆரிய -பார்ப்பனிய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பார்ப்பன -பாசிச -கார்ப்பரேட் முதலாளிய கட்டமைப்பின் தகர்ப்பு -ஆகியவை பற்றி எதுவுமே பேசப்படவில்லை. இந்தியப் பாசிசம், பாசிச பார்ப்பனியத்தை வீழ்த்துவது குறித்து ஒரு வரிகூட இல்லை. ஆனால், ஆர்.எஸ்.எஸ் -இன் நூற்றாண்டு கால நோக்கத்தை தன் கொள்கை முழக்கமாக, கொள்கை முடிவாக அறிவித்து இருக்கிறது. பொதுவாக தேர்தல் அறிக்கைகளை நம்மில் பலர் ஊன்றிப் படிப்பதில்லை. உதட்டளவில் பேசப்படுவதைக் கேட்டு, கைதட்டி விட்டு, ஆரவாரித்து விட்டு செல்வதைப் பெரியவர்களும், இளைஞர்களும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

திமுக மாநில சுயாட்சி பேசுகிறது; நாம் தமிழர் கட்சி ஒருபுறம் குடியரசுத் தலைவர் முறையை ஆதரித்துவிட்டு, மறுபக்கம் மாநில உரிமைகளைப் பேசுகிறது. இதில் வியப்புக்குரியது என்னவெனில், திமுக எந்த மாநில சுயாட்சியைப் பேசுகிறதோ அதே மாநில சுயாட்சி தீர்மானத்தின் சாரத்தைத்தான் நாம் தமிழர் கட்சியும் பேசுகிறது. ஆனால் மாநில சுயாட்சி என்ற சொல்லை மட்டும் பயன்படுத்தவில்லை.

கூட்டாட்சி பற்றிய குழப்பமான புரிதல்கள்!

மத்திய -மாநில உறவுகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் அறிக்கை திகைப்பை உருவாக்கும் வகையில் இருக்கிறது. "மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து ஒன்றியத்திலே ஒரு கூட்டாட்சியை அமைப்பது" என்றும், அது ஒன்றியத்தின் தேசிய இனங்கள் இடையிலான ஒருமைப்பாட்டிற்கும் மாநிலங்களின் நலன்களுக்கும் ஏற்றதாகும் என்றும் அது குறிப்பிடுகிறது. ஒவ்வொரு மாநிலத்தையும் மாநிலக் கட்சிகள் ஆள்வதும், "மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் கூடிப்பேசி ஒன்றிணைந்து ஆள்வதும்தான் சரியான கூட்டாட்சி" என்றும் கூறுவது அறிவியல் பூர்வமான வரையறை அல்ல. ஒவ்வொரு மாநிலத்திலும் ஏராளமான மாநில கட்சிகள் உண்டு. பல மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் "கூடிப் பேசி ஒன்றிணைந்து ஆள்வது", என்பது கூட்டாட்சி (Federation) அல்ல.

கூட்டாட்சி முறையானது பொதுவான நன்மையை அடைய விரும்பிய நாடுகள் (states) ஒன்றிணைவதன் மூலம் உருவாக்கப்படுகிறது.

கூட்டாட்சியில், நடுவண் அரசாங்கமும் மாநில அரசாங்கமும் சமமான இறையாண்மை உரிமையும் அதிகாரமும் கொண்டவை. நாடுகள் (மாநிலங்கள்) தன்னுரிமை கொண்டவை. மத்திய அரசு அதற்கு ஒதுக்கப்பட்ட ஆட்சிப் பொறுப்பு நிர்வாக எல்லைக்குள் (அதிகாரப் பிரிவுகளில் மட்டும்) இறையாண்மை கொண்டது. ஒரு கூட்டாட்சியில், உறுப்பு வகிக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் - மைய அரசுக்கும் அதிகாரங்கள் தனித்தனியே வரையறுக்கப்பட்டு, அரசியல் சட்டத்தால் உறுதி செய்யப்படுகிறது.

ஒரு கூட்டாட்சி என்பது எவ்வாறு இருக்கும் என்பதை பற்றி நாம் தமிழர் கட்சி அறிக்கை கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. மாநில கட்சிகள் ஒருமித்து ஒன்றியத்திலே ஒரு ஆட்சி அமைப்பது என்றால், அது கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்குமே ஒழிய கூட்டாட்சியாக இருக்காது.

இந்தியாவிற்கு குடியரசுத் தலைவர் முறைதான்; அதுதான் கட்சியின் கொள்கை முடிவு என்று அறிவித்து விட்ட பிறகு, மத்திய அரசிடம் "நாட்டின் பாதுகாப்பு, பணம் அச்சிடுதல், வெளியுறவுத்துறை" ஆகியவை ஒன்றிய கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும், மீதி அதிகாரங்கள் மாநிலங்களுக்கு என்றும் கூறுவது முரண்பாடுகள் உள்ளதாகும். நாட்டின் பாதுகாப்பு பணம் அச்சிடுதல், வெளியுறவுத்துறை ஆகியவை ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் என்றால், அந்த ஒன்றியம் எப்படிப்பட்டதாக, யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது? என்ற கேள்விகள் எழுகின்றன. ஏன், தமிழ்நாடு தன்னுடைய வெளி உறவுக் கொள்கையை வகுத்துக் கொள்ளக் கூடாதா? இலங்கையுடன் இந்தியாவோ அல்லது பிற இந்திய மாநிலங்களோ நட்புறவு பேணும்போது, தமிழ்நாடு ஈழத்துடன் நட்புறவுப் பேணக் கூடாதா? வெளியுறவுத்துறை என்று மொத்த அதிகாரத்தையும் ஒன்றியத்திடம் கொட்டிக் கொடுத்து விட வேண்டுமா?

 ஒட்டுமொத்தமாக இந்தி தேசிய இனத்தின் கையிலும், பார்ப்பன ­பனியா கட்டமைப்பின் கையிலும், இந்துக்களின் கையிலும், இந்துக்கள் என்ற பெயரில் இந்துத்துவ சாமியார்களின் கையிலும் அதிகாரங்களை அளித்துவிட்டு, என்ன வகை சனநாயகம் இங்கே இருக்க முடியும்?

சுழற்சி முறையில் பிரதமர் பதவி ! தேசிய இனங்களுக்கான காத்திருப்பு விளையாட்டு!

இந்தியாவின் பிரதமர் பதவியில் வட இந்தியர்களே பெரும்பான்மையாக இந்திய தேசிய கட்சிகளால் அமர்த்தப்பட்டுள்ளனர் என்றும், தமிழ்நாடு, கேரளா, வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், இது இந்திய கூட்டாட்சியில் உள்ள பெரும் குறைபாடு என்றும், ஆகவே "சுழற்சி முறையில் பிரதமர்" தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சித் தேர்தல் அறிக்கை கூறுகிறது. 28 மாநிலங்களும் 8 ஒன்றியப் பகுதிகளும் இருக்கக்கூடிய இந்தியாவில் ஒரு பிரதமரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்று வைத்துக் கொண்டால், 180 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் ஒரு மாநிலத்திற்கு அல்லது யூனியன் பிரதேசத்திற்கு பிரதமரை நியமிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டது 200 ஆண்டுகள்தாம். சுழற்சிமுறை பிரதமர் என்ற முறையில் 180 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் ஒரு மாநிலத்துக்குப் பிரதமர் பதவி என்ற வாய்ப்பு வரும் என்றால், இது எள்ளி நகையாடத் தக்கது; நடைமுறை சாத்தியமில்லாதது என்பது மட்டுமல்ல; நூறாண்டுக் காலத்தில் மாநிலங்களின் அத்தனை உரிமைகளும் களவாடப்பட்டு விடும். மாநிலங்களில் நிலவும் மொழிகள் அழிக்கப்பட்டுவிடும். தேசிய இனத்தாயகங்கள் சிதைக்கப்பட்டு விடும். பல தேசிய இனங்களின் தாயகப் பகுதிகள் கலப்பினங்கள் வாழும் பகுதியாக மாற்றி அமைக்கப்பட்டுவிடும். சுழற்சி முறையில் பிரதமர் என்ற சிந்தனை முதிர்ச்சியான அரசியல் சிந்தனை அல்ல.

நாம் தமிழர் கட்சி கோரிக்கையின் தந்தை கலைஞர் கருணாநிதி!

"நாட்டின் பாதுகாப்பு, பணம் அச்சிடுதல், வெளியுறவுத்துறை ஆகியவை ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்; மீதி மாநிலங்களுக்கு" என்று நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை கூறுவது நாம் தமிழர் கட்சி முன்வைக்கும் புதிய திட்டமா என்றால் அதுவும் இல்லை.

1974-இல், கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போது சட்டமன்றம் நிறைவேற்றிய மாநில சுயாட்சி தீர்மானம் என்ன கூறுகிறதோ, அதைத்தான் இவர்களும் தங்கள் திட்டமாகக் கூறுகிறார்கள்.

ஒருவர் தமிழ்த் தேசியரா, இல்லையா என்பதை, தன் தேசத்தின் பிரச்சினைகளுக்கு அவர் முன்வைக்கும் தீர்வைப் பொறுத்தே அவரை அடையாளப்படுத்த முடியும். திமுக பேசுவது தமிழ்த் தேசியம் இல்லை என்றால், இவர்கள் பேசுவது மட்டும் எப்படித் தமிழ்த் தேசியம் ஆகும்?

1974-இல் மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றப்படும் நிலையில் சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு. கருணாநிதி ஆற்றிய உரை:

“இந்திய மாநிலங்கள் உள்நாட்டுக் காலனிகளாக இருக்கின்றன” என்று சச்சிதானந்தா சின்கா தன் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். பத்தாண்டு காலத்தில் 1,700 கோடி ரூபாயை மத்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டு நாம் வாட்டத்தோடு உட்கார்ந்துகொண்டிருக்கிறோம். இந்த உள்நாட்டுக் காலனி முறை ஒழிக்கப்பட வேண்டாமா? எனவேதான் மாநில சுயாட்சி கேட்கிறோம்!

இப்போது இருக்கிற முறைக்கும், நாம் கேட்கிற மாநில சுயாட்சிக்கும் என்ன ஒரே ஒரு சிறிய வேறுபாடு என்றால், இப்போது அதிகாரங்களைக் கொடுத்தால் திரும்ப எடுத்துக்கொள்கிற உரிமை அவர்களுக்கு உண்டு; மாநில சுயாட்சியிலே அது இல்லை. அதிகாரங்கள் கொடுத்துவிட்டால் மறுபடியும் தொட முடியாது. ஆகவேதான், கொடுக்கப்பட்ட அதிகாரங்களைத் திரும்ப எடுத்துக்கொள்ள முடியாத மாநில சுயாட்சியை நாம் கோருகின்றோம்.

இது எந்தக் கட்சிக்கும் உரிய தீர்மானம் அல்ல. தமிழகத்திலே இருக்கிற எல்லாக் கட்சிகளுக்கும், இந்தியாவில் இருக்கிற எல்லாக் கட்சிகளுக்கும் உரிய தீர்மானம். இது எங்கள் கட்சிக்கு மட்டுமே உரியது என்று நாங்கள் வாதிட மாட்டோம். இது அனைவருக்கும் பொதுவான தீர்மானம். தமிழ்ச் சமூகத்தைக் காக்க, இந்தியாவிலுள்ள தேசிய இனங்களைக் காக்க, இந்தியாவிலுள்ள மாநிலங்களின் உரிமைகளைக் காக்க, இந்தியாவிலே இருக்கிற மாநிலங்கள் சுயமரியாதையோடு வாழ இந்தத் தீர்மானம் பயன்படும்."

1974 -ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாநில சுயாட்சி தீர்மானம் இவ்வாறு பேசுகிறது:

"நாட்டின் பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள், மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து தொடர்புகள், நாணய செலாவணி ஆகியவை தொடர்பான அதிகாரங்களை மட்டும் கொண்ட மத்திய அரசும், எஞ்சிய அதிகாரங்கள் உட்பட ஏனைய அதிகாரங்கள் அனைத்தும் கொண்டுள்ள மாநில அரசுகளும் உள்ள உண்மையான கூட்டாட்சியை நிறுவும் இலட்சியத்துடன் தமிழ்நாடு அரசு அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளிலும், அதிகாரப் பட்டியல்களிலும் செய்யப்பட வேண்டிய திருத்தங்களை வகுத்துத் தொகுத்துள்ளது"

என்று தீர்மானம் பேசுகிறது.

இராணுவம், நாணயம் அச்சடிப்பு, வெளியுறவு, உள்நாட்டுத் தொடர்புகள் என்ற நான்கு தவிர, மற்ற அனைத்தும் மாநில உரிமை என்பதே, திமுகவின் மாநில சுயாட்சி.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை, "நாட்டின் பாதுகாப்பு, பணம் அச்சிடுதல், வெளியுறவுத்துறை ஆகியவை ஒன்றியக் கட்டுப்பாட்டில் இருக்கும்; மீதி மாநிலங்களுக்கு" என்று குறிப்பிடுகிறது.

குறிப்பிட்ட சில அதிகாரங்கள் மட்டும் ஒன்றியக் கட்டுப்பாட்டில், மீதி மாநிலங்களுக்கு என்ற தீர்வைத்தான் 1974இல் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய மாநில சுயாட்சித் தீர்மானமும் குறிப்பிடுகிறது.

 தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றிய மாநில சுயாட்சி தீர்மானத்தை 50 ஆண்டுகளாகக் கிடப்பில் வைத்திருக்கிறது இந்திய ஒன்றிய அரசு. திமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மாநில சுயாட்சி தீர்மானம் என்றால், அதையே மற்றொரு கட்சி தன் தேர்தல் அறிக்கையில் திரும்பக் கூறுவது மாநில சுயாட்சி கோரிக்கை அல்லாமல் தமிழ்த் தேசியக் கோரிக்கையாக ஆகி விடுமா?

2024 -இல் நாம் தமிழர் கட்சி முன் வைக்கும் திட்டத்தின் தந்தையார் கலைஞர் மு கருணாநிதி அவர்கள் தான்.

ஆங்கிலேயர் காலத்திலும் முன்வைக்கப்பட்ட அதே கோரிக்கை!

 இவற்றுக்கெல்லாம் முதாதையாக ஆங்கிலேய காலனி ஆட்சி காலத்தில் தே கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுப் பரிசீலிக்கப்பட்டன. மத்திய அரசிடம் மூன்று அல்லது நான்கு அதிகாரங்கள் மட்டும் தரப்பட வேண்டும் என்பது ஆங்கிலேயர்களின் காலனி ஆட்சி காலத்திலேயே, காங்கிரஸ் கட்சி மற்றும் பல அறிவாளர்கள் முன்வைத்த ஒன்றுதான்.

1937 -39 ஆண்டுகளுக்கு இடையே மாகாண சுயாட்சி என்பது நடைமுறையில் இருந்தது. 1935 -ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசுச் சட்டம், "பட்டியலில் சொல்லப்படாத" அதிகாரங்கள் மத்திய அரசுக்கு என்று வரையறுத்தது. ஆனால் காங்கிரஸ் இது மாநிலங்களுக்கே அளிக்கப்பட வேண்டும் என்று பிரச்சனையை எழுப்பியது.

1940 முதல் பாகிஸ்தான் கோரிக்கை வலுப்பெற்ற நிலையில், அதற்கு மாற்றாக மாகாண சுயாட்சியைக் கொண்டு வந்து பிரச்சினையைத் தீர்க்க முயற்சிகளை முன்னெடுத்தனர்.

1943 -இல் பேராசிரியர் கூப்லாண்டு திட்டம் மூன்றடுக்கு அரசாங்கங்கள் அமைப்பு பற்றிக் குறிப்பிட்டது. மையத்தில் ஒரு ஏஜென்சி சென்டர் (முகவர் அமைப்பு) மட்டுமே இருக்கும் என்றும், அந்த மைய அரசுக்கு வெளிநாட்டு விவகாரம், பாதுகாப்பு, அந்நிய நாட்டு வணிகம், நாணயம் வெளியிடுதல் ஆகியவை மட்டுமே அதிகாரங்கள் என்றும் அத்திட்டம் குறிப்பிட்டது.

1945 -இல் சட்ட நிபுணர்கள் குழுவான சாப்ரு குழு திட்டம் முன்வைக்கப்பட்டது. வெளியுறவு, பாதுகாப்பு, வணிகம் -சுங்கம், தபால் தந்தி, நாணயம் மற்றும் நெருக்கடி கால அதிகாரங்கள் ஆகியவை மைய அரசுக்கு இருக்கும் என்று கூறியது.

1942ல் கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியாவுக்கு டொமினியன் என்ற தகுதி நிலை அளிக்க வந்தது. அதன்படி ஒவ்வொரு மாகாணமும் தனி அரசியலமைப்புப் சட்டங்களை இயற்றிக்கொள்ளலாம் என்றும், இந்திய யூனியன் என்பது சமமான அதிகாரங்கள் கொண்ட மாகாணங்களாக இருக்கும் என்றும் கூறியது. இந்த அளவிற்காவது அதிகாரங்கள் படைத்த மாநிலங்கள் பற்றி இப்போது எவராவது பேசியதுண்டா?

காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான அபுல் கலாம் ஆசாத் முன்வைத்த ஆசாத் திட்டம் பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரம், போக்குவரவு, இவை தவிர மாகாணங்களே விரும்பித் தரும் அதிகாரங்கள் ஆகியவை மட்டுமே மத்திய அரசிடம் இருக்கும் என்றது.

1946 -இல் காபினட் தூதுக்குழு இந்தியாவிற்கு வந்தது. இது இந்தியாவில் உள்ள மாகாணங்களில் ஏ-பி-சி என்று மூன்று தொகுப்புகளாகப் பிரிக்க வலியுறுத்தியது. இதில், மத்திய அரசிடம் வெளியுறவு, பாதுகாப்பு, செய்தி தொடர்பு ஆகிய மூன்று அதிகாரங்கள் மட்டும் இருக்க வேண்டும் என்று கூறியது. ஆனால் இவையெல்லாம்கூட அப்போது ஏற்கப்படாமல்போயின.

1947 -இல் இஸ்மே பிரபு திட்டம் மாகாணங்கள் கூட்டரசுக் குழுக்களாக உருவாக்கப்பட வேண்டும் என்றும், அவற்றுக்கு சகல அதிகாரங்களும் உரித்தானது என்றும் கூறியது. இஸ்மேபிரபு திட்டப்படி இந்தியத் துணைக் கண்டம் 11 நாடுகளாக அமைக்கப்பட்டிருக்கும். இதைக் கண்டு அலறிய காங்கிரஸ் கட்சி பாகிஸ்தான் பிரிவினைக்கு ஒத்துக் கொண்டது. பாகிஸ்தான் பிரிவினையைக் காங்கிரஸ் ஏற்று பாகிஸ்தான் பிரித்து விடப்பட்ட பிறகு, மீதியுள்ள மாகாணங்கள் அதிகாரம் அற்றவையாகப் படைக்கப்பட்டன.

வரலாற்றில் எதையும் ஊன்றிப் படிக்க விரும்பாத அல்லது படிக்கும் நோக்கம் இல்லாதவர்களுக்கு எல்லாமே புதியதாகத்தான் இருக்கும். முன்பு ஆங்கிலேயக் காலனிய ஆட்சி காலத்தில் பல்வேறு குழுக்கள் பரிந்துரைத்த, அதன் பின்னால் தமிழ்நாடு சட்டமன்றம் மாநில சுயாட்சி தீர்மானம் என்ற பெயரில் இயற்றிய, பலமுறை மென்று துப்பிய அதே விஷயத்தைத் தான் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் கூறி இருக்கிறார்கள். இது எப்படி தமிழ்த் தேசிய இலக்காக இருக்க முடியும்? இது தமிழ்த் தேசிய இலக்குக்கானதுதான் என்றால், 1974 மாநில சுயாட்சி தீர்மானமும், அதற்கு முன்னால் காலனியாதிக்கக் காலத்தில் கேபினட் தூதுக் குழுவும், கிரிப்ஸ் குழுவும், கூப்லாந்து தொடங்கி இஸ்மே பிரபு வரை வழங்கிய திட்டங்கள் தமிழ் தேசியத்திற்கானவையா?

தமிழ் தேசியம் பற்றி பேசக்கூடிய பலர், தமிழ்த் தேசியம் அல்லாதவை தமிழ்த்தேசிய இலக்கு போலக் காட்டப்படுவதைப் பற்றி வாய் திறக்காமல் இருப்பது சரியானதுதானா?

ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கான இறையாண்மையுள்ள குடியரசைப் படைத்துக் கொள்ள வேண்டும். இந்தியா என்பது இறையாண்மையுள்ள தேசிய இனக் குடியரசுகளின் கூட்டமைப்பாக மாற வேண்டும். இந்தியாவிற்கு என்று மக்களவைத் தேவையில்லை தேசிய இனங்களின் பேரவை மட்டுமே இருக்க வேண்டும், அதில் அனைத்து தேசிய இனங்களுக்கும் சமமான உறுப்பான்மை அளிக்கப்பட வேண்டும். தேசிய இனங்களுக்கு இடையேயான பிரச்சனைகள், இந்தியாவுக்கான பொதுப்பிரச்சனை ஆகியவை குறித்து இப் பேரவையின் உறுப்பினர்கள் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். இந்தியாவுக்குப் பொதுவான, மாநிலங்களே விரும்பி அளிக்கும் அதிகாரங்களைக் கொண்ட முகமை அமைப்பு ஒன்றிய அளவில் அமைய வேண்டும். தேசிய இன இறையாண்மை அரசியல் நோக்கி அனைத்து தேசியஇனங்களும் நகர வேண்டும். இந்தப் புரிதலுடன் தமிழ்த் தேசியஇனம் தனக்கான அரசியலை இப்போதே வடிவமைத்துக் கொண்டு பயணிக்க வேண்டும். இந்திய ஏகாதிபத்தியத்திற்கு உட்பட்டு இணக்க அரசியல் செய்ய விரும்புகின்ற கட்சிகள் தமிழ்த்தேசிய முக்காட்டை நீக்கிக்கொண்டு, ஏனைய கட்சிகளைப் போல பதவி அரசியலில் ஈடுபடுவதை எவரும் எதிர்க்கவில்லை.

பேராசிரியர் த.செயராமன், நெறியாளர், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்

Pin It