சரியாக இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த கொடூரம் அது! போர் நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்ட பாதுகாப்பு வளையத்திற்குட்பட்ட பகுதிகளில் தமிழர்களை நம்ப வைத்து ஒன்று திரட்டி துரோகத்தனமாக தாக்குதல்களை மேற்கொண்டு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் உயிர்களை பறித்தது சிங்கள இராணுவம்.

இது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என அழைக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தைத்தான் ஐ.நா. அறிக்கையில் பிரதானப்படுத்தி இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது போர்க்குற்றம் நிகழ்ந்திருக்கிறது என்று அடித்துச் சொல்கிறது ஐ.நா. நிபுணர் குழு.

தமிழகத்தில் தமிழ் இயக்கங்களின் வேகம் குறைந்து விட்ட நிலையில், முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படு கொலை, தமிழக மீனவர் படுகொலைகளை கண்டித்தும், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி போர்க்குற்ற விசாரணையை தொடங்க வலியுறுத்தியும் கண்டனப் பொதுக் கூட்டத்தை கடந்த 17ம் தேதி சென்னை காசிமேடு பகுதியில் நடத்தின நாடு கடந்த தமிழீழ அரசின் தோழமை மையமும், இந்திய மீனவர் சங்கமும்.

இக்கண்டனக் கூட்டத்தில் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். அவர்களின் குரல்கள் ஆவேசத்துடனே ஒலித்தன.

பேரா. ஜவாஹிருல்லாஹ் (தலைவர், தமுமுக & சட்டமன்ற உறுப்பினர், ம.ம.க) :

நான் இராமநாதபுரம் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் பேசும் முதல் கூட்டம் இது!

இரண்டு வருடங்களுக்கு முன் முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது நிகழ்ந்த அந்தக் கொடுமை மறக்க முடியாதது. அந்தப் படுகொலையின் உச்ச கட்டத்தில் இங்கே கருணாநிதி உண்ணாவிரத நாடகமாடினார்.

நான் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு பரிசீலனை முடித்து விட்டு வெளியே வந்த போது, "தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டி உண்ணா விரதம் இருக்கிறாரே' என்று செய்தியாளர்கள் என்னிடம் பேட்டி கண்டனர்.

அப்போது, "சூரிய அஸ்தமனத்திற்குப்பின் சூரிய நமஸ்காரம்' என்பதாக இருக்கிறது முதல்வரின் நடவடிக்கை! இலங்கையிலே இனப்படுகொலை நடந் திருக்கிறது. ராஜபக்ஷே சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப் பட வேண்டும்...'' என்று பதிலளித்தேன்.

போர் நடவடிக்கைக்கு அப்பாற்பட்ட அபயமான இடத்தில் குண்டு வீசியது போர்க் குற்றம் என்கிறது ஐ.நா.வின் அறிக்கை. மீன் பிடிக்கச் சென்ற 4 தமிழக மீனவர்களை படுகொலை செய்திருக்கிறது இலங்கை இராணுவம். குட்டி நாடான இலங்கைக்கு அடிமைப்பட்ட நாடு இந்தியா என்பதைப் போன்று இந்திய நடந்து கொள்கிறது. மீனவ மக்களாகிய உங்களின் உரிமைக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

அய்யநாதன் (பத்திரிகையாளர்) :

சர்வதேச அளவில் மீனவர்கள் சில நேரம் கடல் எல்லைத் தாண்டிச் சென்று மீன் பிடிப்பதுண்டு. அவர்களையெல்லாம் சம்பந்தப்பட்ட நாடுகள் படுகொலை செய்வதில்லை. விசாரித்து - கைது செய்து பின்னர் விடுதலை செய்து விடுகிறார்கள். குஜராத் - மஹராஷ்டிரா பகுதி மீனவர்களை கைது செய்யும் பாகிஸ்தான் கடற்படை அவர் களை விசாரித்து விட்டு விடுகிறது.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் என்பது ஒரு சதித் திட்டம். கடற்கரைப் பகுதிகளிலிருந்து மீனவ மக்கள் விரட்டியடிக்க சதித் திட்டம் நடைபெற்று வருகிறது. அதனால் மீனவர் பிரச்சினையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

தோழர் தியாகு :

தமிழக மீனவர்களை 30 ஆண்டுகளாக கொடுமைப் படுத்தி வருகிறது சிங்கள அரசு. உலகில் எங்கும் இது போன்ற கொடுமை நடப்பதில்லை. மீனவர்கள் பேராசை படக்கூடாது என்கிறார் கருணாநிதி. அதை யார் சொல்வது?

தமிழகத்திற்கு ஈழத்திற்குமிடையே சம்மந்தம் செய்திருக்கிறார்கள். இங்கே திருமணம் என்றால் அங்கே வர வேற்பு. இதனை யாரும் தடை செய்ததில்லை.

1980களில்தான் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடங்கியது. தனது மொழி, வேலை வாய்ப்பு, உரிமைகளைக் கேட்டு ஈழத் தமிழர்கள் போராடியபோது அவர்கள் மீது அடக்கு முறைகளை ஏவியது சிங்கள அரசு.

அதனால் தங்களைக் காத்துக் கொள்ள, தன் பெண்களை, குடும்பத்தினரைக் காத்துக் கொள்ள ஆயுதத்தைக் கையிலேந்தி போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் ஈழ மக்கள்.

இனப்படுகொலைகளை நடத்தத் துவங்கிய சிங்களப் பேரினவாதத் தாக்குதலை எதிர் கொண்டதால்தான் - அதை எதிர்த்துப் போரிட்டதால்தான் வங்கக் கடலிலும் மீனவர் படு கொலை நிகழத் தொடங்கியது.

பாதுகாப்பு வளையம் என்று அறிவித்து - உங்களுக்கு பாதுகாப்பு தருகிறோம் என தமிழ் மக்களை வரவழைத்து முள்ளி வாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட துரோகப் படுகொலை வரலாற்றில் எங்கும் நிகழாதது.

தமிழக மீனவர்கள், மீனவர்கள் என்பதற்காக - கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிப்பதற்காக கொல்லப்படுகிறார்களா? இல்லை! அவர்கள் தமிழர்கள் என்பதற்காக கொல்லப்படுகிறார்கள்.

பேரா. சரஸ்வதி (அமைப்பாளர், நாடு கடந்த தமிழீழ தோழமை மையம்) :

எந்த இனத்திலும் இப்படிப்பட்ட சோக வரலாறு நிகழ்ந் திருக்க முடியாது. இலங்கை முள்ளி வாய்க்காலில் அது நிகழ்ந்திருக்கிறது. அதை கண்டிக்கும் கூட்டம்தான் இது. தமிழகம் இந்தியாவில் ஒரு பகுதியாக இந்திய அரசு நினைக்கிறதா என்று கருதும் வகையில் தமிழக மீனவர்களின் படுகொலைகள் நிகழ்ந்து கொண்டி ருக்கின்றன.

இலங்கை பிரச்சினையில் அடுத்த கட்ட நிகழ்வாக அரசியல் களத்திற்கு கொண்டு செல்ல - சர்வதேச ஆதரவை திரட்டி வெற்றி பெற இந்த நாடு கடந்த தமிழீழ அரசு ஏற்படுத் தப்பட்டிருக்கிறது.

ஈழ மக்களின் கோரிக்கைகள், நியாயங்கள் ஐ.நா.வில் ஒலிக்கும். அப்போது உலக நாடுகள் இலங்கையை நிர்ப்பந்திக்கும் தேசிய இனத்திற்கு ஒரு விடிவு பிறக்கும். சிங்கள மக்களுக்குத் தனியரசும், தமிழர்களுக்கு தனியரசும் ஏற்படுத்துவது எந்த வகையில் நியாயமற்றது?

ராஜபக்ஷே அரசை தட்டிக் கேட்கும் திராணி இந்தியாவுக்கு இல்லை. அது ஏன் என்று கேட்கத்தான் நாடு கடந்த தமிழீழ அரசு.

நமது மீனவ மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டாலும் அதை கண்டு கொள்ளாமல் இருக்கும் ஒரு நாட்டில் நாம் குடிமக்களாக இருக்கிறோம் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம். ஈழத்திலே நடந் தது இனப்படு கொலைதான். அதற்காக எல்லாவித ஆயுத - ஆலோ சனை உதவிகளை செய்தது இந்தியா.

ஐ.நா.வின் அறிக்கையை நீர்த்துப்போக செய்யவே மத்திய அரசின் மூன்று பேர் கொண்ட குழு இலங்கைக்கு சென்றிருக்கிறது.

எஸ்.எம். பாக்கர் (தலைவர், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்)

முள்ளிவாய்க்கால் படுகொலை கண்டனக் கூட்டம் இது! இதுவே தமிழன் எதற்கும் லாயக்கற்றவன் என்பதாக இருக்கிறது. ஒரு இனப் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கக் கூட நமக்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்படு கிறது. போராடினால் சிறைக்கு செல்ல வேண்டி வரும் என்கிற பயம்!

ஒரு இனம் கருவறுக்கப்பட் டுள்ளது. நாம் கதைகளைப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

அமெரிக்கா சம்மதித்தால் ஐ.நா. நடவடிக்கை எடுக்கிறது. பாகிஸ்தானில், அந்நாட்டின் அனுமதி பெறாமல் பின்லேடனை கொல்ல நேட்டோ இராணுவத்தை அனுப்ப முடிகிறது என்றால் இலங்கையில் இனப்படுகொலைதான் நடந்தது என்று அறிக்கை தரும் ஐ.நா. சபை ராஜபக்ஷேவை தூக்கிக் கொண்டு வர ஏன் நேட்டோ படையை அனுப்பவில்லை? செத்தவன் தமிழன் என்பதால் அனுப்ப மறுக்கிறதா?

தமிழகத்தின் பெரிய கட்சிகலெல்லாம், தலைவர்கலெல்லாம் அமைதி காத்துவரும் வேளையில் ஒரு சிறு கூட்டம் நியாயம் கேட்டு புறப்பட்டு வந்திருக்கிறது. இறைவன் திருமறைக் குர்ஆனில் சிறு கூட்டம்தான் வெற்றி பெறும் என்று கூறுகிறான். நாம் வென்று காட்டுவோம் இன்ஷா அல்லாஹ்.

"தமிழக மீனவர்களுக்காக சட்டசபையில் குரல் கொடுப்பேன்' என்று சகோதரர் ஜவாஹிருல்லாஹ் சொன்னபோது உள்ளபடியே சந்தோஷமாக இருந்தது. முஸ்லிம், கிறிஸ்தவன், இந்து என்று பிரித்துப் பார்க்காமல் தமிழன் என்று உரத்துச் சொல்லுங்கள்.

நான்கு மீனவர்கள் செத்த பின்னர் தங்கச்சி மடத்தில் கொஞ்சம் பேர் ரோட்டில் உட்கார்ந்தார்கள். தமிழன் உணர்வற்றவனாக இருக்கிறான். நீ போராடாதவரை நடக்காது!

நீ ரோட்டில் இறங்கிப் போராடு! அதிகாரிகள் உங்களைத் தேடி ஓடி வருவார்கள்!

மீனவர் படுகொலைகளுக்காக தமிழக முதல்வர் தீர்மானம் போட வேண்டும். அது மத்திய அரசின் காதுகளில் விழ வேண்டும். என் இனத் தமிழ் மக்கள் பாதி நேரம் டாஸ்மாக் கடைகளில் செலவிடுகிறார்கள். என் இனப் பெண்கள் பாதி நேரம் தொலைக்காட்சி சீரியல்களில் செலவிடுகிறார்கள்.

சகோதரி சரஸ்வதி தொடர் ந்து போராட்டக் களத்தை காண வேண்டும். ரோட்டில் இறங்குங்கள். மக்களிடம் நியாயங்களை எடுத்துச் சொல்லுங்கள்.

டி.எஸ்.எஸ். மணி (பத்திரிகையாளர் & அரசியல் விமர்சகர்) :

இந்திய அரசின் முழுமையான வழிகாட்டுதலில்தான் முள்ளி வாய்க்கால் படுகொலை நடைபெற்றது. சிங்கள இராணுவம் இன அழிப்புப் போரைத்தான் நடத்துகிறது. முள்ளிவாய்க்கால் - ரெட்டை வாய்க்கால் பகுதிகளில் ஒ(டு)துங்கி நின்ற அப்பாவி மக்கள் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தியது சிங்கள இராணுவம்.

இதில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். இதை நாம் சொல்லவில்லை; ஐ.நா. சொல்கிறது. இந்தச் செய்தி மத்திய அரசை உலுக்கவில்லை. தமிழகத்தில் ஆட்சி செய்தவர்களுக்கு மனசாட்சி உறுத்தவில்லை. ஆனால் ஏழரை கோடி தமிழக மக்களுக்கு மனசாட்சி இருந்தது. அதனால் தமிழக மக்கள் காங்கிரஸை விரட்டியடித்தனர். திமுகவை தூக்கியெறிந்தனர்.

தற்போதைய முதல்வர், ராஜபக் ஷே மாறவில்லை என்பதற்கு நிரூபணம் நான்கு மீனவர்களின் படுகொலைகள் எனச் சொல்லியிருக்கிறார். அதோடு, ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவேன் என்கிறார்.

இந்த வார்த்தைகளைத் தீர்மானமாக சட்டமன்றத்தில் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் மக்கள் நம்புவார்கள். தோழர் பாக்கர் சொன்னதுபோல வீதிக்கு வந்து போராடத் தயாராகவே இருக்கிறோம்.

- தொகுப்பு : ஃபைஸல்

Pin It