‘ஈழம் அமையும்’ நூல் வெளியீட்டு நிகழ்வில் விடுதலை இராசேந்திரன் உரை
ஊடகவியலாளர்கள் அய்யநாதன் எழுதிய ‘ஈழம் அமையும்’ நூல் வெளியீட்டு நிகழ்வும் கருத்தரங்கமும் அக்.2, 2015 அன்று சென்னை ‘கவிக்கோ’ அரங்கில் காலை முதல் இரவு வரை ஒரு நாள் நிகழ்வாக நடந்தது. காலை அமர்வில் அந்நூலை பழ. நெடுமாறன் வெளியிட, வைகோ பெற்றுக் கொண்டார். வழக்கறிஞர் பானுமதி, டி.எஸ்.எஸ். மணி, பேராசிரியர் இராமு மணிவண்ணன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் அறிமுகவுரை நிகழ்த்தினர். இரண்டாம் கட்ட அமர்வாக பிற்பகல் 3 மணியளவில் “அய்.நா. மனித உரிமை மன்றத் தீர்மானம்: தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா?” என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி. தேவசகாயம் தலைமை யில் நடந்தது. நிகழ்வில் பங்கேற்று, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரை:
எனது நீண்டகால நண்பர் அய்யநாதன் மிகச் சிறந்த பத்திரிகையாளர். ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் உந்தப்பட்ட அவர், தனது பத்திரிகையாளர் பணியையும் உதறிவிட்டு, செயல்களத்துக்கு வந்தவர். தமிழ் ஈழப் போராட்டம் குறித்த வரலாறுகளை மட்டுமல்லாது, அந்த நிகழ்வுகளின் ஊடாக நடந்த அரசியல். இந்தியா-நார்வே-அமெரிக்கா இழைத்த துரோகங்களை மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். உலக விடுதலைப் போராட்டங்களின் வரலாறுகள் குறித்து ஊடகவியலாளர்கள் பலரும் பதிவு செய்த வரலாறுகள்தான் உலக அளவில் பேசப்படுகின்றன. இந்த நூலும் அந்த வரிசையில் நிற்கும் சிறப்பைப் பெற்றிருக்கிறது.
அய்.நா.வில் அமெரிக்கா முன் மொழிந்து ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம். தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டது என்பதில் இரண்டு கருத்துகளுக்கு இடமில்லை. ஈழத் தமிழர்கள் இனியும் சிங்களர்களோடு இணைந்து வாழ முடியாது. தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு என்ற கருத்தில் நாம் உலகத் தமிழர்களும் உறுதியாக இருக்கிறோம். பன்னாட்டு விசாரணை - இனப்படுகொலை - பொது வாக்கெடுப்பு என்ற முழக்கங்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சர்வதேச சமூகம் இதை ஏற்கும் வரை அதற்கான போராட்டங்கள் கருத்துருவாக்கங்கள் அழுத்தங்களை நாம் தொடர்ந்து நடத்திக் கொண்டேதான் இருக்க வேண்டும். இந்த இலட்சியத்தை நாம் எப்படி எட்டப் போகிறோம்? இந்த முழக்கங்களை நாம் வலியுறுத்திக் கொண்டே இருந்தால் மட்டும் போதுமா? இன்றைய சர்வதேச துரோகத்தை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பது குறித்து நாம் பரிசீலிக்க வேண்டும்.,
அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு இலங்கை அரசு முன்மொழிந்து, அய்.நா.வில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம், போர்க் குற்றம் குறித்த விசாரணையை முன்மொழிகிறது. இலங்கையிலேயே இந்த விசாரணை நடக்கும். அந்நாட்டு நீதிபதிகளோடு காமன்வெல்த் நாடுகளின் நீதிபதிகள் வெளிநாட்டு சட்ட அறிஞர்கள். இந்த விசாரணையை நடத்து வார்கள் என்று தீர்மானம் கூறுகிறது. இந்தத் தீர்மானத்தை இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்கட்சியாக இருக்கும் தமிழ் தேசிய கூட்டணி வரவேற்றிருக்கிறது. எதிர் பார்த்ததுபோல் தீர்மானம் இல்லை என்றாலும், வரவேற்கத்தக்க அம்சங்களும் இடம் பெற்றுள்ளதாகக் கூறியிருக்கிறது. உண்மையில் ஈழத்தில் வாழும் தமிழர்களின் கருத்தாக இதை ஏற்க முடியாது. அங்கே உள்ள பிளாட், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். உள்ளிட்ட 40 தமிழர் அமைப்புகள், அமெரிக்கத் தீர்மானம் துரோகமிழைத்துவிட்டது என்ற கருத்தையே வெளிப்படுத்தி யுள்ளனர். இவர்களோடு வடக்கு மாகாண முதலமைச்சரும் இணைந்து நிற்கிறார். எனவே, தமிழ் தேசிய கூட்டணியின் கருத்து அங்கே வாழும் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது என்றே நாம் கருத வேண்டியிருக்கிறது.
அரசு பயங்கரவாதத்துக்கு எதிராக ஆயுதம் தாங்கி நடக்கும் ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டம், அந்நாட்டின் விடுதலையை அரசியல் பாதையை நோக்கி விரைவுபடுத்துவதுதான். ஆயுதப் போராட்டத்தினால் மட்டுமே அரசியல் நகர்வுகளை தவிர்த்து விட்டு, ஒரு நாட்டின் விடுதலையைப் பெற முடியும் என்பது மன்னர்கள் ஆட்சிக் காலத்தில்தான் சாத்தியமாக முடியும். நாம் மன்னர்கள் ஆட்சி காலத்தில் வாழவில்லை.
அதன் காரணமாகத்தான் தமிழ் ஈழ விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுத்த தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம், போராட்டக் காலங்களிலேயே அரசியல் நகர்வுகளுக்கு முகம் கொடுத்து வந்திருக்கிறது. இந்த வரலாறுகளை தோழர் அய்யநாதன் இந்த நூலில் விரிவாக்கப் பதிவு செய்திருக்கிறார். தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் அரசியல் நகர்வுகளை எப்படி நகர்த்தலாம் என்பதற்கு தமிழ் ஈழ விடுதலைப் புலிகள், போராட்ட வரலாற்றிலேயே பதிவுகள் இருக்கின்றன. இன்று நாம் முன்னெடுக்க வேண்டிய அரசியல் நகர்வுகளுக்கு இவை வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன என்றே கருதலாம். சுருக்கமாக மூன்று நிகழ்வுகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
2002ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்குமிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது, தமிழ் ஈழக் கோரிக்கைகளுக்கு மாற்றாக ஒரு திட்டத்தை முன் வைக்க சர்வதேச நாடுகள் வலியுறுத்தின. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் சர்வதேச சட்ட நிபுணர்களே வியந்து பாராட்டும் ஒரு அரசியல் தீர்வை முன் வைத்தது. ‘உள்ளக சுய நிர்ணய உரிமை’ (Internal Self Determination) அப்போது போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்கு தமிழன் பகுதிகளுக்கும், சிங்கள பகுதகளுக்கும் ஆண்டுக்கு ரூ.100 கோடி ரூபாய் அளவுக்கு நிதி உதவி செய்ய அமெரிக்கா, ஜப்பான், நார்வே ஆகிய நாடுகள் முன் வந்தன. வாஷிங்டனில் கொடையாளர்கள் கூட்டம், 2003இல் நடக்க விருந்தது. அதுவரை இந்த சமரச நடவடிக்கைகளில் முற்றாக ஒதுக்கி நின்ற இந்தியா, இந்த கூட்டத்தில் பார்வையாளராக பங்கேற்க முன் வந்தது. அதற்கு தடைசெய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளை இந்தக் கூட்டத்துக்கு அழைக்கக் கூடாது என்று அமெரிக்காவை வலியுறுத்தியது. விடுதலைப் புலிகள் அரசியல் தீர்வுக்கு தயாராக இருப்பதை சர்வதேசத்துக்கு இதன் வழியாக உணர்த்தினார்கள்.
சுனாமி பேரழிவால் இலங்கையில் தமிழர்களும் சிங்களர் களும் கடும் உயிரிழப்புக்கும் பாதிப்புக்கும் உள்ளானபோது, விடுதலைப்புலிகள் இயக்கம் போரை நிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு நடவடிக்கைகளில் இறங்கியது. மனித நேயத்துடன் பாதிக்கப்ப்டட சிங்களர்களுக்கும் விடுதலைப் புலிகள் உதவினார்கள். இலங்கை அரசோட கைகோர்த்து, மறுவாழ்வுப் பிணகளை மேற்கொள்ள புலிகள் இயக்கம் தயாராக இருந்தது. அதன் விளைவாக இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் இணைந்து ‘சுனாமி மறு கட்டமைப்பு நிர்வாக அமைப்பு’ ஒன்றை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. சுனாமி மறுவாழ்வுக்காக வெளிநாடுகள் நிதி உதவி செய்ய முன் வந்தன. இந்த நிதியைக் கையாள இதை எதிர்த்து சிங்கள வெறியர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து திட்டத்தை முடக்கினர். இந்த அரசியல் வெளிச்சத்தில் நாம் பிரச் சினைகளை அணுக நாம் முயற்சிக்க வேண்டும்.
இப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு, அய்.நா. மனித உரிமைக் குழுவுக்கு இருக்கிறது. ஏற்கெனவே அய்.நா. மனித உரிமைக் குழு அளித்த அறிக்கை ஈழத்துக்கு நேரடியாகச் சென்று மக்களை சந்தித்து உருவாக்கப்பட்டது அல்ல. அதற்கு இலங்கை அரசு மறுத்து விட்டது. இந்த நிலையில் அய்.நா. மனித உரிமைக் குழு தமிழ் ஈழப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகளை காட்சிகளை பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாம் வலியுறுத்த வேண்டும். அப்போது போர்க் குற்றங்கள், பாலுறவு வன்முறைகள், காணாமல் போனவர்கள் போன்ற குற்றங்கள் எல்லாமுமே தமிழர்கள் வாழும் பகுதிகளில் மட்டுமே நடந்திருக்கின்றன என்ற உண்மை வெளி வரும். ஒன்றை முக்கியமாக கவனிக்க வேண்டும். இப்போது அய்.நா.வின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள போர்க் குற்றங்கள் இலங்கையில் சிவில் சமூகத்தில் நடந்த குற்றங்கள் என்ற கண்ணோட்டத்திலேயே பதிவு செய்யப்பட்டிருக் கின்றனவே தவிர, தமிழர்கள் மீதான குற்றங்களாக பதிவாக வில்லை.
இலங்கையின் சிவில் சமூகத்தில் போர்க் குற்றங்கள் நடந்ததாகவே சித்தரிக்கப்படும் சூழ்ச்சிகளை முறியடிக்க அது தமிழர்கள் மீதான போர்க் குற்றங்கள் என்று உண்மைகள் அம்பலமாகும்போதுதான் தேசிய இனப் பிரச்சினையாக இது மாற்றப்படும். கடந்த முறை அமெரிக்கா அய்.நா.வில் கொண்டு வந்த தீர்மானத்தின்போதுகூட தமிழர்களை ‘மத மைனாரிட்டிகள்’ என்று மிகுந்த எச்சரிக்கையுடன் கூறியது.
வீர மரணமடைந்த விடுதலைப் புலிகள் தளபதி கிட்டுவிடம் ஒரு அயல்நாட்டுக்காரர் தமிழ் ஈழத்தின் எல்லை எது என்று கேட்டபோது, கிட்டு ஒரு வரைபடத்தை எடுத்துப் போட்டார். அதில் சிங்கள விமானங்கள் குண்டு வீசிய பகுதிகளை மட்டும் எடுத்துக்காட்டி, இதுவே தமிழீழத்தின் பிரதேசம் என்று பதிலளித்தார்.
அதேபோல், 13ஆவது சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பேசி வரும் மோடி ஆட்சியை நோக்கி நாம் போராட வேண்டிய முக்கிய கோரிக்கை இருக்கிறது. 13ஆவது சட்டத் திருத்தத்தின்படி முதலில் வடக்கு-கிழக்கு மாநிலங்களை இணைப்பதற்கு இலங்கை அரசை வற்புறுத்து - என்று நாம் போராட வேண்டும்.
இப்போது அமைக்கப்பட இருக்கும் விசாரணை மன்றத்தில் மனித உரிமைக் களத்தில் போராடிக் கொண்டிருக்கும் சர்வதேச சட்ட நிபுணர்களை பங்கேற்பாளர்களாக கண்காணிப்பாளர் களாக நியமிக்க வேண்டும் என்ற அழுத்தத்தை தர வேண்டும். இவைகளுக்கான போராட்டக் களங்களை முன்னெடுக்க வேண்டும். சிங்களப் பேரினவாதம் இதற்கு செவி சாய்க்காத நிலையில் சிங்களப் பேரினவாதத்தின் உண்மையான முகம் அம்பலமாகும். அதற்கு தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை பொது மக்கள் வாக்கெடுப்பு - பன்னாட்டு விசாரணை என்ற இலட்சியத்தை இடைவிடாது வலியுறுத்திக் கொண்டே அதை நோக்கி முன்னேறிச் செல்ல தற்போது சர்வதேசம் வழங்கியுள்ள வாய்ப்புகளை ஆயுதங்களாக மாற்றி, முன்னெடுப்பதே இன்று நம்முன் உள்ள கடமை என்று கருதுகிறோம்.