கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

calidoniaதென் பசிபிக்கில் பிரெஞ்சு ஆட்சிப்புலமும் தீவுத் தொடரியுமாகிய புதுக் காலிடோனியா சுதந்திரம் பெறுவது குறித்துப் பொது வாக்கெடுப்பு நடத்த அனுமதித்தமைக்காக பிரான்சின் குடியரசுத் தலைவர் இமானுவேல் மாக்ரோனுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.

பிரான்சின் பகுதியாகவே நீடித்திருக்கும் வழியைத் தேர்வு செய்த புதுக் காலிடோனியர்களுக்கு அதிபர் மாக்ரோன் நன்றி தெரிவித்திருப்பது புதுக் காலிடோனிய மக்களுக்கும் குடியாட்சியத்துக்கும் மாந்த உரிமைகளுக்கும் மதிப்பளிப்பதாகும் என்றும் நாகதஅ பாராட்டியுள்ளது.

புதுக் காலிடோனியர்கள் 2020 அக்டோபர் 4ஆம் நாள் வாக்கெடுப்பில் பிரான்சின் பகுதியாகவே நீடித்திருக்க சிறியதொரு பெரும்பான்மையில் வாக்களித்தார்கள் என்றாலும், அதனை அதிபர் மாக்ரோன் ஏற்றுக் கொண்டிருப்பது உலக வல்லரசு ஒன்று ஒரு மக்களினத்தின் அடிப்படை உரிமையை அது ஆளும் அரசின் சுயநிர்ணய உரிமைக்கு எதிராக அமைந்த போதிலும் அறிந்தேற்கும் நல்ல திருப்புமுனைச் செயலாகும் என்பதால் முக்கியத்துவம் உடையதாகிறது.

வேறு நாடுகளில் ஒரு மக்களினம் தன் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டிக் கொள்வது அரசுகளால் மதிக்கப்படவில்லை, ஏன், மூர்க்கமாக அடக்கியொடுக்கப்பட்டும் உள்ளது. புவிசார் அரசியல் நோக்கிலோ பொருளியல் நலன் கருதியோ அல்லது இரு வகையிலும் இது நடைபெறக் காண்கிறோம். இலங்கைத் தீவில் வாழும் அல்லது அங்கிலிருந்து வெளியேறியுள்ள ஈழத் தமிழர்கள் தொடர்பில் நடந்திருப்பது இதுதான்.

பிரான்சு 1853ஆம் ஆண்டு புதுக் காலிடோனியாவைத் தன் குடியேற்ற நாடாக்கிக் கொண்டது. அப்போதிருந்தே இந்தத் தீவுக்கூட்டம் சுதந்திரம் வேண்டும் சுதேசி கானக்குகளுக்கும் குடியேறிகளின் வழிவந்த சுதந்திர எதிர்ப்பாளர்களுக்கும் இடையே பிரிந்து கிடக்கிறது. பிரெஞ்சுக் குடியேறிகள் கானக்கு மக்களை சேமப் பகுதிகளில் மட்டும் கட்டுப்படுத்தி வைத்துள்ளனர். நாட்டின் பொருளியலிருந்தும் அவர்கள் விலக்கி வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஞாயிறன்று நடந்த பொதுவாக்கெடுப்பு நூமியா ஒப்பந்தம் அனுமதிக்கிற மூன்று வாக்கெடுப்புகளில் இரண்டாவதாகும். குடியேற்ற நீக்கத்தை நோக்கிய 20 ஆண்டுத் திட்டம் ஒன்றை வகுத்தளிக்கும் வகையில் 1998ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் பிரெஞ்சு அரசமைப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளது. தென் பசிபிக்கில் ஒரு தீவுத் தொடரி என்ற முறையில் புதுக் காலிடோனியா இவ்வட்டாரத்தில் சீனத்தின் பிடியை எதிர்ப்பதற்கான மேற்குலக இருப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஆனால் சிறிலங்கா அரசின் சிங்களத் தலைவர்களிடம் இவ்வாறான அரசாண்மைப் பண்புகளோ அறத் துணிவோ இல்லை என்பதை நாமறிவோம். மாறாக, அடுத்தடுத்து வந்துள்ள ஆட்சியாளர்கள் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயத்துக்கும் அதன் தொடர்ச்சியான பொதுவாக்கெடுப்புமான கோரிக்கைகளை நெரித்தழித்தே உள்ளனர். பல முறை மூர்க்கமான வன்செயல் கொண்டு இதைச் செய்துள்ளனர்,

பொதுவாக்கெடுப்புகள் பூசலுக்கு அமைதித் தீர்வுகள் காண வழியமைத்துக் கொடுக்கின்றன. மாறாக சிறிலங்காவோ தன் புவிசார் அரசியல் வலிமையைக் காத்துக் கொள்ள 2009ஆம் ஆண்டு (ஐநா கணக்குப்படி) ஆறு மாதக் காலத்தில் சற்றொப்ப 70 ஆயிரம் தமிழர்களின் உயிரிழப்பும் போருமே வழியெனத் தேர்வு செய்து கொண்டது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒழுங்கு செய்த 2020 தமிழர் துக்க நாள் நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் நோபல் பரிசாளர் ரமோஸ் ஹோர்த்தா குறிப்பிட்டது போல், “உருப்படி ஒன்று இப்போதுள்ள அரசியல் ஏற்பாட்டிலிருந்து பிரிந்து செல்ல விரும்புவது ஏன்?” என்ற கேள்வியை கொழும்பு (சிறிலங்க ஒற்றையாட்சி அரசாங்கத்தின் தலைமைச் செயற்புள்ளி) தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும்.

திரு விசுவநாதன் உருத்திரகுமாரன்

தலைமையமைச்சர்,

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்