மத்தியக் கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பெரும்பாலான அரபு நாடுகளில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வரும் இஸ்லாமிய வங்கிமுறை, இந்தியா மட்டுமின்றி வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார, விவசாயப் பிரச்சினைகளுக் குத் தீர்வாக இருக்கும் என்று பிரபல பொருளியல் வல்லுநர் இர்பான் ஷாகித் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிரபல பொருளியல் வல்லுனர்களால் பொருளியல் தீர்வுக்கான சிறந்த மாற்று என ஒப்புக் கொள்ளப்பட்ட இஸ்லாமிய வங்கி முறை (Islamic Banking) என்பது வட்டியில்லா வங்கி முறையாகும்.
கடன் வாங்குபவரையும், கொடுப்பவரையும் கடனாளி, கடன்காரர் என்ற நிலையிலிருந்து முதலீட்டாளர்களாக மாற்றி இருவரின் பொருளாதார தேவைகளிலும் வங்கி தலையிட்டுத் தீர்க்கும் வங்கியல் முறை, பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளன.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடந்த இஸ்லாமிய வங்கியல் குறித்த கருத்தரங்கில் பிரபல பொருளியல் வல்லுனர் இர்பான் ஷாகித் பேசும்போது, நமது நாட் டின் விவசாயிகளின் பிரச்சினை களைத் தீர்க்க இஸ்லாமிய வங்கி யியல் முறையே சரியான தீர்வாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2001 செப்டம்பர்11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவில் முதலீடு செய்துள்ள அரேபிய வணிகர்களின் நிதியாதாரங்கள், அல்காயிதாவுடன் தொடர்புபடுத்தப்பட்டு முடக்கப்பட்டதைத் தொடர்ந்து 600 பில்லியன் டாலர் மதிப்பிலான அவர்களின் முதலீடுகளை அமெரிக்கா தவிர்த்து ஏனைய ஐரோப்பிய நாடுகளில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

சேமிப்புகளுக்கும், முதலீடுகளுக்கும் வட்டி வசூலிப்பதை இஸ்லாம் தடை செய்திருப்பதால் தங்களது சேமிப்புகளும், முதலீடுகளும் பாதுகாப்பாக இருப்பதற்கு இஸ்லாமிய வங்கிகளே காரணம் என்று அரபு நாடுகளில் மட்டுமின்றி உலகெங்கும் சுமார் 75 நாடுகளில் 500க்கும் அதிகமான கிளைகளைக் கொண்டுள்ள இஸ்லாமிய வங்கிகளில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இஸ்லாமிய வங்கியியல் என்ற பெயரிருந்தாலும் அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் பயன் பெறத்தக்க வங்கியியல் முறையே இஸ்லாமிய வங்கி முறையாகும் என்பது இதன் கூடுதல் சிறப்பம்சம்.

மாற்று வங்கியியல் (Alternative Banking), ஷரியா பைனான்ஸ் (Sharia Finance) என்றெல்லாம் அறியப்படும் இஸ்லாமிய வங்கியியல் முறையை உலகெங்கும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் பின்பற்றி வருகின்றன.

சர்வதேச வங்கிகளான Standard Chartered, HSBC ஆகியவை தங்களின் பழைய வங்கியியல் நடைமுறையுடன் (Conventional Banking) இஸ்லாமிய வங்கியியல் முறைக்கு கடந்த ஐந்தண்டுகளுக்கு முன்பே மாறத் தொடங்கி விட்டன. 

உலகெங்குமுள்ள முதலீட்டாளர்களை ஈர்த்துள்ள இஸ்லாமிய வங்கியல் முறையை இந்தியாவில் கேரள அரசு சமீபத்தில் நடை முறைப்படுத்தியுள்ளது.  முன்னாள் மத்திய அமைச்சரும், ஜனதா கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி வருபவருமான சுப்ரமணிய சுவாமி இதற்கு எதிராகத் தொடர்ந்திருந்த வழக்கிற்கு எதிராக உச்ச நீதி மன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து கேரளாவில் கடந்த பிரவரி முதல் இஸ்லாமிய வங்கியியல் முறைக்கான ஆயத்த ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.

கடந்த இருவருடங்களாக உலகெங்கும் நிலவும் பொருளாதார மந்தநிலையைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச வங்கிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்த போதும், இஸ்லாமிய வங்கிகளின் வளர்ச்சி 200% அதிகரித்தன் மூலம் தற்கால பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான சரியான மாற்றுத் தீர்வு இஸ்லாமிய வங்கியியல் முறையே என்ற கருத்து உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

- நூருல் ஆமீன்

Pin It