jeyaranjanதரவுகளுடன் ஆய்வாளர் ஜெயரஞ்சன் விளக்கம்

திராவிட விழுதுகள் சார்பில் கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழகப் பொருளாதாரம் கடந்த 50 ஆண்டுகளில் வளர்த்தெடுக்கப்பட்ட வரலாறுகள் குறித்து பொருளியல் ஆய்வாளர் ஜெயரஞ்சன் ஆற்றிய உரை.

தலைப்பை என்னையே வைத்துக் கொள்ள சொன்னதால் முதல் பகுதியை ‘தமிழக பொருளாதாரம்’ என்றும் தமிழகப் பொருளாதார கட்டமைப்பு வளர்ச்சிக்கு என்ன காரணம் என்பதை இரண்டாவது பகுதியாகவும் பேசலாம் என்று நினைக்கிறேன். பலரும் பொய்யான தகவல்களைப் பதிவு செய்கிறார்கள்.

அவர்கள் அவ்வாறு பேசியாக வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் இருப்புக்கு அர்த்தம் இருக்காது. அவர்களின் இருப்பை நியாயப்படுத்த தமிழ்நாடு சீரழிந்துவிட்டது. அதிலும் குறிப்பாக 50 ஆண்டு காலமாக சீரழிந்துவிட்டது. இந்த 50 ஆண்டுகாலமாக என்பதை ஆரம்பித்து வைத்தது 'சோ இராமசாமி'. நாம் பள்ளிகளில் படித்தோமே கிறிஸ்து பிறப்பதற்கு முன், பின் என்பதைப் போல 1967ற்கு முன், பின் என்று சோ இராமசாமி தான் உருவாக்குகிறார்.

சரி தமிழ்நாடு அப்படி என்ன சீரழிந்து விட்டது என்று 1967ற்குப் பிறகு அவரால் ஒரு ஆதாரத்தைக் கூட காட்ட முடியாது. மிகக் கேவலமாக பேசுவதற்கும், கேவலமாக சித்தரிப்பதற்கும் தான் நேரத்தை செலவிட்டிருக் கிறார். நம்மவர்களுக்கு சொரிந்து கொள்வது மிகவும் பிடிக்குமே அது போல சோ இராமசாமியின் கதை யாடல்களை ஏன் என்று கேள்விகளே கேட்காமல் ஒருவரைப் பற்றி குறை சொல்வதற்கு இந்த கதையாடல்கள் பயன்படுத்தப்பட்டன.

“பிராமணிய”த்தால் இதுவரை என்ன செய்ய முடியவில்லை என்றால் இந்தத் தத்துவத்தை நேரடியாக எதிர்கொள்ளவே முடியவில்லை. நேரடியாக எதிர்க்க முடியாத காரணத்தினால் ‘cheap tactics’ சேறை வாரி இறைப்பது, புழுதி வாரி தூற்றுவது போன்று சோ. இராமசாமி முன்னெடுத்துச் செல்லும் போது  அதை ஆதரித்து சென்றார்கள். இது டெல்லியை ஆளும் வர்க்கத்தினருக்கு வசதியாக இருந்தது.

அதனால் பல முறை ஊடகங்களால் பேசப்பட்டது. நமது கருத்துக்களை டெல்லிக்குக் கூற வேண்டுமென்றால் ஆங்கிலத்தில் தான் கூற வேண்டும். ஆங்கிலத்தில் கூற சோ வகையறாக்கள் தான் இருந்தார்கள். எனக்குத் தெரிந்து ஆங்கில ஊடகத்தில் நமது கருத்துக்களை பேசியது எனது நெருங்கிய நண்பரான ஏ.எஸ் பன்னீர் செல்வம் தான். அவர் தான் முதன் முதலில் நமது கருத்துக்களை ஆங்கில ஊடகத்தில் பதிவு செய்தார்.

அதன் பிறகு தான் நாங்களும் ஆங்கிலத்தில். கருத்துக்களை பேச ஆரம்பித்தோம். அப்போதும் எங்களுடைய குரல்கள் பெரும்பான்மையற்றவை யாகவே இருந்தது. இப்பவும் அந்த குரல்கள் யார் கையில் உள்ளதென்றால் அவர்கள் கையில் தான் உள்ளது. அவர்கள் நமது கருத்துக்களை நிராகரிப்பார்கள் அல்லது சிறிய அளவிலான செய்திகளை மட்டும் வெளியிடுவார்கள் முழுதாக வெளியிடாமல். இந்த இடத்தை அடைவதற்கே நமக்கு இத்தனை ஆண்டுகள் எடுத்துள்ளன.

நான் கடந்த 30 வருடங்களாக தமிழகத்தை பல்வேறு துறைகளில் பல ஆய்வுகளை மேற் கொண்டு பார்த்திருக்கிறேன். நான் மட்டுமல்ல என்னைப் போன்று நான்கைந்து பேர் இதே போன்று ஆய்வுகளை செய்துள்ளனர். அந்த ஆய்வுகளை இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழில் கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன்.  அதற்கான பணிகள் துவங்கியிருக்கிறது. அதற்கான முன்னோட்டமாக எனது இந்த பேச்சை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்.

கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாடு எப்படி வளர்ச்சியடைந்துள்ளது. தற்போது எந்த இடத்தில் உள்ளது. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், இந்திய பொருளாதாரம்  3 ட்ரில்லியன் டாலர். அந்த 3 ட்ரில்லியன் டாலரில் 1 ட்ரில்லின் டாலர் சுழற்றி மொத்தமாக நான்கு மாநிலங்களில் தான். நான்கு தென் மாநிலங்கள். நான்கு தென் மாநிலங்களும் சேர்ந்து 1 ட்ரில்லியன் டாலர் உள்ளது. மீதமுள்ள 27 மாநிலங்கள் சேர்ந்து தான் 2 ட்ரில்லியன் டாலர் உள்ளது. அது தான் பொருளாதாரத்தில் நமது பலம்.

இரண்டாவதாக தொழில்துறை. என்னுடைய தஞ்சை மாவட்டத்தில் நிலப் பத்திரங்களில் பெயருக்குப் பின்னால் ‘சுகஜீவனம்' என்று எழுதியிருக்கும். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரென்றால் சுக ஜீவனம் என்றிருக்கும். பட்டியலின சமுதாயத்தை  'கஷ்ட ஜீவனம்' என்று குறிப்பிடுவார்கள். நிலத்தை விற்பான். ஆனால் சுகஜீவன மாம். இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம் தஞ்சை மாவட்ட சமுதாயங்கள் எப்படிப்பட்ட சமுதாயம் என்று.

கோயம்புத்தூரில் இப்படி யாராவது பெயருக்குப் பின் சுகஜீவனம் என்று எழுதுவார்களா? மாட்டார்கள். அதன் விளைவு என்னவென்றால் 50 வருடங்களுக்கு முன்பு பணக்கார மாவட்டம் என்றால் அது தஞ்சை மாவட்டம் தான். தற்போதுகூட அங்கே இருக்கும் கோவில்களைப் போன்று கட்ட முடியாது. அதில் எனக்கும் ஒரு மாற்றுக் கருத்து உள்ளது. தஞ்சை பெரிய கோவில் வெளி நாடுகளில் கொள்ளையடித்த செல்வத்தால் கட்டப்பட்டதாக இருக்கலாம் என்று எனக்கு ஒரு எண்ணம் உள்ளது.

அந்த ஓரிடத்தில் இருந்து அவ்வளவு செல்வங்களை வைத்துக் கட்டுவது என்பது நடக்காத ஒன்று. அவ்வளவு கோயில்களை கட்டியிருக்கிறார்கள். அதிகமான நிலங்களை பார்ப்பனர்களுக்கு தானமாக கொடுத் துள்ளார்கள். இவையெல்லாம் பழைய வரலாறு. ஆனால் தற்போது தமிழகத்திலேயே மிக மிக ஏழ்மையான மாவட்டமாக தஞ்சை மாவட்டம் மாறியிருப்பதற்கு காரணம் இந்த சுகஜீவன மாதிரி ‘போலிப்’ பெருமை தான். ஆனால் மொத்த தமிழ்நாட்டை எடுத்துப் பார்த்தோமானால் சுகஜீவனம் இல்லை. கஷ்ட ஜீவனத்தில் தான் நிற்கிறது. அதன்படி தொழில் துறையில் பல தளங்களில் முன்னோடியான மாநிலம் தமிழ்நாடு.

தொழில்களில் பெருந்தொழில்கள், சிறுத் தொழில்கள் என்று உள்ளது. அப்படி இந்திய அளவில் பெரும் தொழில்கள் அதிக அளவில் இருக்கக் கூடிய மாநிலம் தமிழ்நாடு தான்.

சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்

சிறு மற்றும் நடுத்தர தொழில்களை பல்வேறு விதமாக அளந்து பார்க்கலாம். அதில்  ஒரு அளவீட்டு  முறை எத்தனை நிறுவனங்கள் இருக்கின்றன என்பதாகும். அதிக அளவில் பெரும் தொழில்கள் இருக்கும் மாநிலமும் தமிழ்நாடு தான், சிறு, நடுத்தர தொழில்கள் அதிகமாக இருப்பதும் தமிழ்நாடு தான்.

அடுத்ததாக சிறு, நடுத்தர, பெரு நிறுவனங்களில் எத்தனை ஆட்களை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்கள் என்று பார்த்தோமானால் அதிலும் தமிழ் நாடு தான் அதிகப்படியான ஆட்களை வேலையில் அமர்த்தியுள்ளது. அடுத்ததாக நாம் பார்க்க வேண்டியது  வேலையாட்களுக்கு எவ்வளவு ஊதியம் கொடுக்கிறார்கள் என்பது. அதிலும்  வேலையாட் களுக்கு மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகம் தான் அதிகமான ஊதியத்தைக் கொடுத்து வருகிறது.

நான்காவதாக ஒரு துறைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வளர்ப்பது கிடையாது. நம்முடன் போட்டி போடுகிற மாநிலங்கள் என்னவெல்லாம் இருக்கிறது. மகராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்கள் இருக்கிறதென்றால் மகராஷ் டிராவை ஒப்பிட்டோமானால் தமிழ்நாட்டிலுள்ள பெருநிறுவனங்களை விட மகராஷ்டிராவில் பத்தாயிரம் பெரு நிறுவனங்கள் குறைவாக உள்ளது. சிறு தொழில்களை ஒப்பிட்டோமானால் நம்மை விட 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை குறைவு. ஆனால் எது அவர்களிடம் அதிகமாக இருக்குமென்றால் முதலீடு  அதிகமாக இருக்கும்.

நாம் சிறிய அளவிலான பணத்தை முதலீடு செய்து அதிக அளவிலான வேலையாட்களை அமர்த்தி வேலை செய்கிறோம். மற்ற மாநிலங்களான மகராஷ்டிரா, குஜராத்தில் பெரிய அளவிலான முதலீடுகளை செலுத்தி குறைவான ஆட்களை வைத்து வேலை செய்வார்கள். அதன் விளைவு என்னவென்றால் அவர்களுடையது ‘capital intensive’ (தீவிர மூலதனம்) ஆக இருக்கும். தமிழ்நாடு ‘labour intensive’ (அதிக தொழிலாளர்கள்) ஆக இருக்கும். நான் முன்கூட்டியே கூறியதைப் போல் நமது மாநிலம் அனைத்து துறைகளிலும் சமமாக முன்னேறுகிறது.

குஜராத்தை எடுத்துக்கொண்டோமானால், பெட்ரோல் சுத்திகரிப்பை எடுத்துவிட்டோமானால் தொழில்துறையில் 10 ஆவது இடத்திற்கு சென்று விடும். ஏனென்றால் ரிலையன்சும், எஸ்ஸார்  குழுமம் (Essar) குஜராத் என்பதால் அங்கே அதிகமான முதலீடுகளை செலுத்தியுள்ளனர். இந்த இரண்டு நிறுவனங்களை தவிர்த்தால் குஜராத் ஒன்றுமில்லை. தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் பன்முகத் தன்மையுடன் வளர்ந்திருப்பதால் ஏதோ ஒன்று நஷ்டம் ஆனாலும் பொருளாதாரம் சரிவைக் காணாது. தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு துறை சரிவை காண்கிறதென்றால், மாநிலத்தின் மொத்த பொருளாதாரமும் பாதிப்படையாது.

ஆனால், பெட்ரோல் சுத்திகரிப்பு பாதிப்படைகிறதென்றால் குஜராத்தின் பொருளாதாரம் உடனடியாக சரிவைக் காணும். அதே போல ஆட்டோ மொபைல்ஸ் எடுத்து பார்த்தோமானால் தமிழ்நாடு அதிலும் முதன்மையாகத் தான் இருக்கிறது. ஆனால் மகாராஷ்டிரா ஆட்டோ மொபைல்ஸை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். இது போல ஒரே துறைகளை மட்டும் அந்த மாநிலங்கள் நம்பியிருப்பதால் ஒரு சிறு இடையூறு வந்தாலும் அவர்களால் தாக்குப் பிடிக்க முடியாது. அதனால் தமிழ்நாடு என்ன செய்திருக்கிற தென்றால் கவனமாக பன்முகத்தன்மையுடன் துறைகளை வளர்த்துள்ளது.

இதைவிட ஆச்சரியமான தகவல் என்ன வென்றால் தொழில்துறையின் வளர்ச்சியை வரைபடமாக வரைந்தால் பரவலாகக் காணப்படும். சென்னையில் ஒரு பெரிய குவியலாக இருக்கிற தென்றால் இது சென்னை முதல் கோயம்புத்தூர் வரை இருக்கும். இது முழுவதும் தொழில்துறை சரியான விகிதத்தில் வளர்ந்திருக்கும். இங்கு மட்டும் தான் இருக்கிறதென்றால் இல்லை ஒரு சுழற்சியாக அனைத்து இடங்களிலும் தொழில் துறைகள் இருக்கிறது.

ஆனால் தொழில்துறைகளே இல்லாத இடம் எதுவென்றால் ? அது தஞ்சை மாவட்டம் தான். மற்ற அனைத்து மாவட்டங் களிலும் இருக்கும். அடுத்து கன்னியாகுமரியில் இருக்காது. கன்னியாகுமரி சிறிய மாவட்டம். இது போன்று வரைபடம் நாங்கள் தயாரிக்கும் போது இரண்டு மாவட்டங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டோம். ஒன்று கன்னியாகுமரி மற்றொன்று நீலகிரி. நீலகிரி மலைகள் அதிகமுள்ள பகுதியாக இருக்கும்.

கன்னியாகுமரி எதற்கும் சேராததாக இருக்கும். அதனால் இந்த இரண்டு மாவட்டங்களை விட்டு விடுவோம். அதைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தொழிற்சாலைகள் பரவலாக இருக்கும். ஆனால் மகாராஷ்டிராவை எடுத்துப் பார்த்தோமானால் ஒரே ஒரே ‘corridor’ மட்டுமே இருக்கு. பாம்பே முதல் பூனா corridor. அந்த corridorக்குள் தான் மகராஷ்டிராவின் அனைத்து தொழில்துறைகளும் அடங்கியிருக்கும். அந்த  வளர்ச்சியை குறிப்பாக உணரவேண்டுமானால், எத்தனை பேர் வேளாண் துறைகளில் இருக்கிறார்கள். எத்தனை பேர் வேளாண் துறைகளை விட்டு வெளியேறியிருக்கிறார்கள் என்பதைத் தான் முதலாவதாக பார்ப்போம். அடுத்து தான் தொழில் துறைக்கு வருவோம்.

நகர மயமாதலில்

அடுத்து சிறு மாநிலங்கள் தவிர, சிறு மாநிலங்களென்றால் பாண்டிச்சேரி, கோவா இவையெல்லாம் சிறு மாநிலங்கள். இவையெல்லாம் ஒரு மாவட்ட அளவிற்குக் கூட பெரியதாக இருக்காது. அந்த மாநிலங்களை விட்டுவிட்டு அடுத்த பெரிய மாநிலங்களை கணக்கிலெடுத்துப் பார்த்தால் மிக அதிகமான அளவில் நகர்மயமான மாநிலங்களில் தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக உள்ளது. கிட்டத்தட்ட 55 விழுக்காடு மக்கள் நகரங்களில் வசிக்கிறார்கள் தமிழ்நாட்டில் மட்டும். அநேகமாக வரப்போகிற ‘சென்செஸ்சில்’ 60 யை தொட்டுவிடும் என்று நினைக்கிறேன்.

இப்படி மக்கள் அதிகமாக நகரங்களில் வந்து குடியேறுவது என்பது எதைக் காட்டுகிறது என்றால் மக்களின் வாழ்வாதாரம் வேளாண் துறையை நம்பி இல்லை என்பதற்கான ஒரு குறியீடு. வேளாண் துறையை நம்பி இல்லாதது என்பது எதனால் நல்ல செய்தி என்றால், அதிலுள்ள உற்பத்தித் திறன் என்பது மிக மிகக் குறைவு.

தொழில்துறைகள் போன்று உற்பத்தித் திறன் அதில் கிடையாது. உற்பத்தித் திறன் அதிகமாக இருப்பதால் தான் அதிக இலாபம் பார்க்க முடிகிறது அதிக ஊதியமும் கொடுக்க முடிகிறது. வேளாண் துறையில் உற்பத்தித் திறன் குறைவாக உள்ளதால் அதிகமான ஊதியத்தை அத்துறையில் வழங்க முடியவில்லை.

ஒரு ஏக்கர் நிலத்தை வைத்துக் கொண்டு எவ்வளவு உற்பத்தி செய்து விட முடியும் ? மன்மோகன் சிங் கூறினார் அதிகமான மக்கள் வேளாண் துறையை நம்பி இருக்கிறார்கள்; வேளாண்மையை விட்டு வாருங்கள் என்று கூறினார். அனைவரும் கிண்டலடித்தார்கள் என்ன இவர் 'பைத்தியம்' போல கூறுகிறாரே என்று. அதற்கான காரணமென்னவென்றால் வரவில்லையென்றால் அதே இடத்தில் தேங்கி இருக்க வேண்டியது தான்.

எனது ஊரிலிருந்து வெளியூருக்கு வேலைக்குச் சென்றவர்களிடம் நான் கூறுவது என்னவென்றால் ஊருக்கு வராதீங்க. அங்கேயே இருங்கள் என்று தான் கூறுவேன். காரணம் என்னவென்றால், இங்கே உற்பத்தி மிகவும் குறைவு. இது ஒரு ‘பொறி' போன்றது அதில் சிக்கிவிட்டீர்களென்றால் மீண்டு எழவே முடியாது.

அது உங்களைத் திரும்ப திரும்ப அதனுள்ளேயே வைத்துக் கொள்ளும். அதனால் அதை விட்டு நீ வெளியேறனும். அப்படி வெளியேறிய சமுதாயம் தான் தமிழ் சமுதாயம் ! இந்தியாவிலேயே இது போல வேறெந்த சமுதாயங்களும் இன்னமும் வெளியேறவில்லை. பாண்டிச்சேரி போன்ற சிறு மாநிலங்களுடன் நீங்கள் ஒப்பிடவேக்கூடாது. ஏனென்றால் அங்கு விவசாய நிலங்களே கூட நகர்ப்புறத்தைச் சார்ந்ததாக இருக்கும். நீங்கள் கர்நாடகா, ஆந்திராவுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது மிகப் பெரும்பான்மையான மக்கள் தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களை நோக்கி நகர்ந்து விட்டார்கள்.

(தொடரும்)

- ஜெயரஞ்சன்

Pin It