ஒரு காலத்தில் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக நடைபெற்ற மது விற்பனை தற்போது, நகரத்தின் நடுவிலே பிரதான தெருக்களில் கடை பரப்பி நிலைத்து விட்டது. மது விற்பனை என்பது சட்டவிரோதமான தொழில் என்பது மாறிப்போய் அரசாங்கத்தால் நடத்தப்படும் அங்கீகரிக்கப்பட்ட அரசு நிறுவனமாக மாறிவிட்டது.

உள்ளூர் ரவுடி உரிமையாளராகவும், சமூக விரோதிகள் பணியாளர்களாகவும், நடத்தப்பட்ட மது கடைகள் தற்போது பட்டம் படித்த பட்டதாரிகளை ஊழியர்களாகவும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நிர்வாகிகளாகவும் கொண்டு இயங்கும் வகையில் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது.

மதுவை ஒழிப்பதற்கு திட்டங்கள் தீட்ட வேண்டிய அரசுத் துறை அதிகாரிகள் மது விற்பனையை அதிகரிப்பதற்கு திட்டங்கள் தீட்டிக் கொண்டுள்ளனர். மது ஒழிப்பு அரசின் கொள்கை என்பது மாறி அரசின் பொருளாதாரத்தையும், மக்கள் நலத் திட்டத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக மது விற்பனை உயர்வு பெற்றுள்ளது.

பண்டிகை காலங்களிலும், புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போதும் மது விருந்துகளுக்கு வருமாறு வெளிப்படையாக விடுக்கும் அழைப்புகள் பத்திரிகைகளில் பகட்டாக வெளியிடப்படுகின்றன.

தடுக்க வேண்டிய அரசாங்கமோ வருமானத்தை மட்டுமே கணக்கில் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறது. "குடி குடியைக் கெடுக்கும் குடிப் பழக்கம் நாட்டைக் கெடுக்கும்', "மது வீட்டிற்கும் நாட்டிற்கும் உயிருக்கும் கேடு' என்கிற மது விலக்கிற்கு ஆதரவான கோஷங்கள் வெற்றுக் கோஷங்களாக மாறிப்போய் விட்டது.

அரசின் தவறான மது விலக்குக் கொள்கைகள் மக்களை சீரழித்துக் கொண்டிருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னால் நடுத்தர வயதுக்காரர்களில் ஒரு சிலர் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி இருந்தார்கள். இப்போதோ அரசு மது விற்பனையை தாராளமயமாக்கியதால் பள்ளிக்கூட மாணவர்கள் கூட டாஸ்மாக் பார்களில் மது அருந்திக் கொண்டிருப்பது சாதாரண ஒன்றாகி விட்டது. பெண்களை மொடாக் குடிமகள்களாக மாற்றும் பார்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன.

குடும்பத் தலைவர்களின் குடிப்பழக்கத்தால் குடும்பம் தள்ளாட ஆரம்பித்து விடுகிறது. கணவன் சம்பாதிக்கும் பணம் அனைத்தும் மதுவுக்கே செல்வதால் பெண்கள் குடும்பம் நடத்த பணமில்லாமல் திண்டாடுகின்றனர். பிள்ளைகள் தங்கள் படிப்பைத் தொடர முடியாமல் கூலி வேலைக்கு செல்லும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

மதுப்பழக்கம் ஒரு நோய் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குடிப்பழக்கம் மனிதனின் உடல்நலத்தை கெடுத்துவிடும். மதுப் பழக்கத்தினால் மூளை பாதிக்கப்படும். நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு ஆண்மைக் குறைவை ஏற்படுத்திவிடும். மனநோய்க்கு ஆளாகும் அபாயமும் உள்ளது. மது பகுத்தறிவை இழக்கச் செய்து விடும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 7434 மதுக் கடைகள் உள்ளன. இது அரசாங்கம் நடத்தும் பள்ளி, கல்லூரிகளின் எண்ணிக்கையைவிட, மருத்துவமனைகளை விட பல மடங்கு அதிகமானதாகும்.

நாள் முழுவதும் உடம்பு வலிக்க உழைத்து சம்பாதித்த பணத்தை தங்களுடைய உடல் நலத்தை கெடுக்கும் செயலில் வீணடிப்பது அறிவு பூர்வமானதுதானா? குடிமக்களை மெல்லக் கொல்லும் விஷத்திற்கு பழக்கி விட்டு அவர்களுக்கு இலவசங்களை கொடுப்பதனால் என்ன பலன்? கண்ணை விற்று யாராவது சித்திரம் வாங்குவார்களா?

டி.டி.டி. விஷம், கார் பேட்டரி ஆகியவற்றை யாராவது சாப்பிடுவார்களா? அதிலுள்ள விஷப்பொருளான கேட்மின்தான் மதுவிலும் உள்ளது என்பதை ஏன் உணர மறுக்கிறார்கள்?

அரசியல்வாதிகளுக்கு தங்கள் பதவிதான் குறி! சாராய உற்பத்தியாளர்களுக்கு தங்கள் லாபம்தான் குறி! அதிகாரிகளுக்கு ஆள்பவர்களை குஷிப்படுத்தி ஆதாயம் அடைவதே குறி! இவர்கள் எங்கே வருங்காலத் தலைமுறையைப் பற்றி சிந்திக்கப் போகிறார்கள்? இந்தக் கொடியவர்களிடமிருந்து மக்களைக் காக்க சமூக ஆர்வலர்கள்தான் களப்பணியாற்ற வேண்டும்.

மதுவினால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். மது அரக்கனால் ஏற்படும் கேடுகளை அனைவருக்கும் எடுத்துரைக்க வேண்டும்.

மதுக்கடைகளை மூடுமாறு அரசை மக்கள் நிர்பந்திக்கும் அளவிற்கு நம்முடைய பிரச்சாரம் அமைய வேண்டும். சமுதாய சொந்தங்களே... புறப்படுங்கள் பிரச்சாரப் போர் முரசை முழங்குவோம்.

மது அரக்கனை மாய்ப்போம், மானுடத்தைக் காப்போம்.

Pin It