"மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு" நிற்க. சிறிய திருத்தம். மது வீட்டுக்கும் உடலுக்கும் கேடு - நாட்டுக்கல்ல, தமிழக அரசுக்கல்ல. எந்த அரசாகிலும் மது உற்பத்தியில், விநியோகத்தில் குறைப்பதற்கான அல்லது முற்றிலுமாகக் கைவிடுவதற்கான திட்டத்தையோ அல்லது மாற்றுத் திட்டத்தையோ முன்வைப்பதாக இல்லை. மது உற்பத்திக் குறைப்பு பற்றியோ மது விற்பனை கைவிடல் பற்றியோ எந்த அரசிடமும் இனி நாம் எதிர்பார்க்க முடியாது. மதுக்கடைகளை மூடுங்கள் என்கிற கோஷம் எழுவதைப்போல மதுக்கடைகளைத் திறங்கள் என்கிற கோஷமும் மதுபிரியர்களால் கேட்கப்படும் சூழல் தமிழகதில் வெகுவேகமாகப் பரவிவருகிறது.
குடிமகன்களின் கூட்டமைப்பின் கோரிக்கை
திண்டுக்கல்: மூடப்பட்ட மதுக்கடைகளை உடனடியாகத் திறக்க வேண்டும் எனக் குடிகாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு மதுக்கடைகளை மூடினால் திறக்கச்சொல்லிப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தமிழகத்தில் மட்டும் 3000க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன.
இதனால் திறந்திருக்கும் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. பல கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து நீண்ட வரிசையில் கால் கடுக்க நின்று குடிமகன்கள் சரக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
டாஸ்மாக் திறக்க வேண்டும்
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் உள்ள குடிகாரர்கள் சங்கத் தலைவர் முத்துச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது குடிகாரர்கள் சிரமப்படாத வகையில் வழக்கம் போல் மதுக்கடைகளைத் திறக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்
அவர் மேலும் பேசியதாவது, 'கடைகள் குறைவாக இருப்பதால் அந்தக் கடைகளில் குடிமகன்கள் அதிகமாகப் போய் சரக்கு வாங்கி வருவதைக் கண்டு ஒரு குவாட்டருக்குப் பத்து ரூபாய் முதல் பதினைந்து ரூபாய் வரை கூடுதலாக வாங்குகிறார்கள். அதுபோல் ஊர் ஊருக்கு இருந்த டாஸ்மாக் கடைகளில் இருந்த பார்களிலேயே சில்லிங் போட்டுக் கொண்டு ஒரு குவாட்டருக்கு 40ரூபாய் முதல் 50ரூபாய் வரை கூடுதலாக எங்கள் குடிமக்களிடம் பகல் கொள்ளை அடித்து வருகிறார்கள்
அதை முதலில் அதிகாரிகள் தடுத்து வழக்கம்போல் குவாட்டருக்கு உண்டான பணத்தை டாஸ்மாக் கடைகளில் வாங்க சொல்ல வேண்டும். அதுபோல் சில்லிங் போட்டுக்கொண்டு குடிமக்களிடம் பகல் கொள்ளை அடித்து வருபவர்கள் மீது அதிகாரிகளும், போலீசாரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எப்போதும் போல் குடித்துக் கொள்கிறோம்
இல்லையென்றால் வழக்கம்போல் கடைகளைத் திறந்து விடுங்க. அந்தந்த பகுதிகளில் எப்பொழுதும் போல் எங்கள் குடிமகன்கள் குடித்துக் கொள்வார்கள். இதில் ஏதாவது அரசும், அதிகாரிகளும் மெத்தன போக்கை கடைபிடித்து வந்தால் கூடிய விரைவில் குடிமகன்கள் சங்கமும் போராட்டத்தில் குதிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள குடிமக்களை ஒன்று திரட்டி டாஸ்மாக் கடைகளைப் பொதுமக்கள் மூடச்சொல்லி எப்படிப் போராட்டத்தில் குதித்து வருகிறார்களோ அதுபோல் நாங்களும், டாஸ்மாக் கடைகளைத் திறக்கச் சொல்லிப் போராட்டத்தில் குதிப்போம் என்று கூறினார் ஏப்ரல் 16 - 2017 இணையத்தில் வெளியான செய்தி இது. மேற்கண்ட ஆண்டிலிருந்து ஏழாண்டுகள் கடந்து வந்திருக்கிறோம். இப்போது இந்த அமைப்பும் தமிழ்நாடு முழுதும் பரவியிருக்கும் குடிகாரர்களின் நிலையும் அவர்களின் வாழ்வாதாரமும், குடும்பத்தின் நிலையும் என்னவாக இருக்கும். எண்ணிப்பார்க்கவே அத்தனை துயரத்தைக் கொண்டுவந்து சேர்க்கிறது. குடிமகன்களின் செயல்பாடு.
வேதனையின் உச்சம்
இப்போது மது அருந்துவது என்பது எல்லோரும் விரும்பத்தகு பொழுது போக்குக் கேளிக்கை போல மாறிவருகிறது. "சோசியல் ட்ரிங்கர்" என்ற புதிய சொல்லாடலை உச்சரிக்காத இளைஞர்களே இல்லை. எண்பதுகளில் எல்லாம் குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து குடிக்காதவர்களின் எண்ணிக்கை கூடியும் இருக்கும். இன்றைய காலம் அப்படியல்ல குடிக்காதவர்களை விரல்விட்டு எண்ணிவிட முடியும்.
குடிப்பதற்கான வழிமுறைகளைப் பார்ட்டி என்கிற பெயரில் அரங்கேற்றுகிறார்கள். பிறந்தநாள் , திருமணம், காதுகுத்து, மஞ்சள்நீராட்டுவிழா, இறுதிச் சடங்கு என இந்தப் பட்டியல் மிக நீளமானது. மனித வாழ்வில் என்ன நிகழ்ந்தாலும் கூடிக் குடிப்பதற்கு வயது வேறுபாடு இல்லாமல் ஒரு பெருங்கூட்டம் இன்றைக்கு உருவாகி இருக்கிறது.
முன்பெல்லாம் கண் மறைய குடித்தார்கள் இன்றைக்கு அப்படியல்ல மக்கள் புழங்குகின்ற பொதுவெளியிலேயே குடிக்கும் காட்சியை நாம் பார்க்க முடிகிறது. மறைந்து மறைந்து குற்ற உணர்ச்சியோடு குடித்த தலைமுறையிலிருந்து வேறுபட்டு இன்றைக்கு எல்லோரும் பார்க்கும் வண்ணம் குடிக்கிறார்கள். பெருமிதம் கொள்கிறார்கள் இச்செயல் இழிவு என்பது கடந்து பெருமிதப் பட்டியலுக்குள் சேர்க்கப்பட்டுவிட்டதைப் போன்ற மாயத் தோற்றம் உருவாகி இளைய தலைமுறையினரை மயக்கமடையச் செய்திருப்பது வேதனை.
முரண்
மாண்புமிகு தமிழக முதல்வர் குடிப்பவர்களை எண்ணி அத்தனை துயருகிறார். குடிக்கு எதிரான பிராச்சாரத்தை விளம்பரத்தின் வழி முன்னெடுக்கிறார். என்ன சொல்கிறார்.
தமிழ்நாட்டின் இளைஞர் மாணவர் சமுதாயத்திற்கு உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனாக, உங்கள் தந்தையாக கேட்டுக்கொள்கிறேன். போதையின் பாதையைக் கைவிடுங்கள் என்று உருக்கமான வேண்டுகோள் வைக்கிறார். இத்தனை புரிதல் கொண்ட முதல்வரை நாம் வணங்குகிறோம். மதித்துப் போற்றுகிறோம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. தமிழகம் போதையிலிருந்து விடுபட படிப்படியாக மதுவைக் கைவிட நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கலாம், மது விற்பனையைக் குறைத்திருக்கலாம். உற்பத்தி , கொள்முதலின் வேகத்தைப் படிப்படியாகக் குறைத்திருக்கலாம். அப்படி இல்லையே இதற்கு நேர் எதிர்த்திசையில் அல்லவா மது உற்பத்தியும் கொள்முதலும் விற்பனையும் இருக்கிறது.
அரசியலின் அடிநாதமாகிவிட்டது மது. இன்றைக்கு அதன் மீதுதான் அரசு பொருளாதாரப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறது. பல குடும்பங்கள் நாசமாக அதன் வழி வரும் வருமானம் அரசுக்கு அவமானம் எனக் கருதாமல் நன்மை பயக்கிறது என்று கருதி ஆள்பவர்கள் எந்தக் கட்சியானாலும் இலாபக் கணக்கு பார்க்கிறார்கள்.
" குடிசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும்"
என்பதை ஆளும் முதல்வர்கள் எப்படிப் புரிந்து கொள்கிறார்கள் என்பது ஐயமாகவே இருக்கிறது.
பள்ளிக்கும் கேடு
"மது வீட்டுக்கும் நாட்டிற்கும் கேடு" என்றோம். மது விழுங்காத மனிதர்களே இல்லை வயது வித்யாசம் இன்றி எல்லோரையும் விழுங்கி முடித்துவிட்டுத் தற்போது பள்ளிக்குள் புகுந்துவிட்டது. புகுந்ததோடு மட்டும் அல்ல மாதா, பிதா, குரு, தெய்வம் என்று மூன்றாம் இடத்தில் வைத்து வணங்க வேண்டிய ஆசிரியரையே பதம் பார்த்திருப்பது வேதனையின் உச்சம். நல்வழி படித்தி வாழ்வில் வெளிசம் கூட்டும் ஆசிரியர் மதுவால் சீரழிந்த பள்ளி மாணவரால் தாக்கப்பட்டிருக்கிறார். பள்ளி மாணவர்கள் வரையில் மது என்ற நஞ்சு பரவிவிட்டது.
இல்லாம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் என ஆயிரம் திட்டங்கள் இருக்கலாம் ஆனால் இந்த மதுவிலிருத்து மக்களைக் காத்து நல்வழிபடுத்த அரசிடம் என்ன திட்டம் இருக்கிறது என்ற கேள்வியை அரசைப் பார்த்து யார் கேட்பது.இதற்குமேலும் அரசு எந்தத் திட்டத்தைத்தீட்டி இந்தச் சமூகத்தை மதுவின் பிடியிலிருந்து காப்பற்றப் போகிறது.
- மகா.இராஜராஜசோழன்,
குழந்தைகளுக்கான தமிழ் பயிற்றுநர், இயக்குநர், செம்மொழி தமிழ்க்கூடம், சீர்காழி