தலைவர் அவர்களே! நண்பர்களே!! *இத்தீர்மானத்தை எதிர்த்துப் பேசியவர்களால் தான் இத்தீர்மானத்திற்கு பெருத்த ஆதரவளிக்கப் பட்டதாக கருதுகின்றேன். திரு.சிவஞானம் எதிர்த்ததால் தான் அத் தீர்மானத்தை உங்களுக்கு விளக்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. இல்லாவிட்டால் ஒரு சமயம் ஒருவர் இருவராவது தாக்ஷண்ணியத்திற்காக கைதூக்க வேண்டியிருக்கும். ஆதலால் நான் சொல்வதை நன்றாய் கவனித்து உங்கள் இஷ்டத்தை தெரிவியுங்கள். தீர்மானத்தை எதிர்ப்பவர்கள் மீது கோபிப்பது கோழைத்தனமாகும். தீர்மானத்தில் உண்மையும், வீரமும் இல்லை என்று கருத வேண்டியதாகும்.
தவிர எதிர்ப்பவர்கள் அநேகர் உண்மையாகவே அவர்களுக்கு விளங்காமல் எதிர்த்தாலும் எதிர்க்கலாம். அவர்களுக்கு விளங்கவைக்க வேண்டியது நமது கடமை. அதனால் மற்றவர்களுக்கும் விளங்கும். அன்றி யும் அவ்விளக்கம் மற்றவர்களுக்கு பிரசாரம் செய்யவும் உதவும்.
நண்பர்களே! கள்ளுக்கடை மறியலானது குடி நிறுத்துவற்காக செய்யப்படுவதில்லை என்பது எனது அனுபவ ஞானமான முடிவு.
நான் தென்னாட்டில் மறியலை நடத்தி இருக்கின்றேன். என் மனைவி யையும், சகோதரியையும், என் பந்து சிநேகிதர்களின் தாயார், மகள் முதலியவர்களையும் கொண்டு நடத்தினேன். அநேக கடைகளை மூடினேன். எனது 600 தென்னை மரங்களை வெட்டினேன். 300,400 மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சாமல் தானகவே காய்ந்து போகும்படி செய்தேன். மறியலுக்காக நானும் எனது ஈரோட்டு நண்பர்கள் சுமார் 100 பேரும் ஜெயிலுக்குப் போனோம். திருச்சியில் நூற்றுக்கணக்கான பேர்களை எம்.ஏ., பி.எல்., உட்பட சிறைக்கு அனுப்பினேன். கையில் 500 தொண்டர்களை வைத்துக் கொண்டு, ஆயிரம் தொண்டர்களை லிஸ்டில் வைத்துக் கொண்டு நானும் நண்பர் திரு.இராமநாதனும் மதுரையில் தினம் நான்கு நான்கு பேர்களாக 100 தொண்டர்கள் வரை ஒவ்வொரு வருஷ தண்டனைக்கு அனுப்பினேன். மதுரை சர்க்காரார் தினறினார்கள்.
அந்த சமயத்தில் திடீரென்று திரு.சி.இராஜ கோபாலாச்சாரியார் மறியலை நிறுத்தும்படி உத்திரவு செய்தார். அடிதடி, வசவு, பலாத்காரம் ஒன்றுமே நாங்கள் செய்யவில்லை. தொண்டர்கள் தண்டிக்கப்பட்டவுடன் அதிகாரி என்னிடம் வந்து பேசுவார். போலீசார் எனக்கு வெகுமரியாதை செய்வார்கள். அதிகாரிகள் வெட்கப்படுவார்களே யொழிய நம்மீது குரோதமோ, துவேஷமோ இல்லை. அப்படிப்பட்ட சமயத்தில் மறியலை நிறுத்த நானும் திரு.இராமநாதனும் சம்மதிக்க வில்லை. அப்படியிருக்க நாங்கள் மறியலை நிறுத்த சம்மதிக்காவிட்டால் தான் இராஜினாமா செய்து தனது தலைவர் பதவியை திரு.எஸ்.சீனிவாசய்யங்காருக்கு அளித்து விடப் போவதாய்ச் சொல்லி பயமுறுத்தி மறியலை நிறுத்தி விட்டார். 100 பேர் சிறையில் ஒரு வருஷம் தண்டிக்கப்பட்டிருக்க, 500 பேர் தயாராய் இருக்க மறியலை நிறுத்திய உடன் எங்கள் மனம் கஷ்டப் பட்டு விட்டது.
காரணம் என்ன என்று பார்த்தபோது நாகப்பூர் கொடி சத்தியாக்கிரகத்திற்கு தொண்டர்கள் போதவில்லை என்றும் ஜமநாத பஜாஜ் ஆரம்பித்த சத்தியாக்கிரகம் தோல்வி அடைந்ததால் அவருக்கு அவமானம் என்றும், அவர் வேலையை விட்ட வக்கீல்களுக்கு பல லக்ஷ ரூபாய் கொடுத்தவர் என்றும் திரு.இராஜகோபாலாச்சாரியார் சமாதானம் சொன்னார். அந்தக் காரணமாக எல்லா மறியலும் நிறுத்தப்பட்டது. இதனால், மறியலுக்கு பயந்து கள்ளுக்கடை ஏலமெடுக்காதவர் நஷ்டப்படவும், துணிந்து குறைந்த துகைக்கு ஏலத்தில் எடுத்தவர் கொள்ளை லாபம் சம்பாதிக்கவும் சர்க்காரார் இந்த நஷ்டத்தின் சாக்காய் இந்திய மக்களின் ஆரம்பக் கல்வியின் வாயில் மண்ணைப் போடவுமே ஏற்பட்டது. மற்ற பெரிய கல்வி இலாகா அதிகாரிகள் சம்பளம் சிறிதும் குறையவில்லை. மறியலால் கள்குடி குறைபாடு குறையாது, முக்காலும் குறையாது என்று உறுதி கூறுவேன்.
இத்தீர்மானத்தை எதிர்த்தவரே தான் பேசும் போது ஒரு வார்த்தை சொன்னார். அதாவது தங்கள் மறியலால் கடையில் வியாபாரம் குறைந்து விட்டதாகவும், ஆனால் தெருக்களில் பலகாரம் விற்பதுபோல் பாட்டல் பாட்டல்களாய் எடுத்துச் சென்று விற்கப்படுகிறதென்றும் சொன்னார். ஆகவே மறியல்காரர்களை நான் ஒன்று கேட்கின்றேன், அதாவது தங்கள் மறியலின் காரணமாக கள்ளுக்கடைகளில் கள்ளு விற்பதைத் தடுத்து, வீதி வீதியாய் விற்கும்படியான நிலைமை ஏற்பட்டதற்கு மறியல் தொண்டர் களோ அவர்களது “உலகம் போற்றும்” ஒப்பற்ற தலைவரோ என்ன பரிகாரம் செய்ய போகிறார்கள்? என்று கேட்கின்றேன். கள்ளு இலாகாவை நடாத்தும் மந்திரியையாவது, கள்ளு இலாகா அதிகாரிகளையாவது வீதியில் கள் விற்கும் மக்களையாவது இந்த மறியலின் மூலமாக அசைக்க முடியுமா? என்று கேட்கின்றேன்.
கள்ளுக்கடை மூடிவிட்டால் தெரு விற்பனைகள் எங்கு போய்விடும்? லைசென்சு இல்லாமல் மரம் கட்டி இறக்கும் கள் எங்கு போய்விடும்? ஆகவே, மறியல் குடியை நிறுத்துவதற் காகவா? அல்லது வயிற்றுப் பிழைப்புக்கோ விளம்பரத்திற்கோ, கள்ளுக் கடைக்காரரிடம் வியாபாரம் பேசி, ஆச்சிரமம் வைத்து, கொடி தூக்கிக் கொண்டு திரிந்து, பார்ப்பனர்களுக்கும் அவர்களது அடிமைகளுக்கும் ஓட்டு வாங்கி கொடுப்ப தற்காகவா? என்று உங்களை கேட்கின்றேன். மறியலால் கள் குடி நிறுத்த முடியாது என்று நான் மாத்திரம் சொல்ல வரவில்லை, திரு. இராஜகோபாலாச்சாரியார் சொன்னதையும் இப்போது நான் சொல்ல வரவில்லை. ஆனால் திரு.காந்தி- உங்களால் ‘மகாத்மா’ என்று சொல்லப் படும் உங்கள் தலைவரான திரு.காந்தி அவர்கள் திருவாய் மலர்ந்தருளியதை சொல்லுகின்றேன் கேளுங்கள்.
அதாவது “குடிகாரர்கள் தாங்களாகவே குடியை விட்டாலொழிய குடியை நிறுத்த முடியாது. கள்ளுக்கடைகளை மூடிவிடச் செய்வது நம் வேலை அல்ல. மூடினாலும் திருட்டுத்தனமாக இப்பொழுது இருப்பது போலவே வியாபாரமும், குடியும் இருந்துதான் வரும். சரீரத்தால் தொழில் செய்கிற மிருகங்களைப்போன்ற உழைப்பாளிகட்கு கள்ளு அவசியமானது. நானே வாங்கிக் கொடுத்திருக்கிறேன்” என்று திரு.காந்தியே சொல்லியிருக் கிறார். இதிலிருந்து சட்டங்களின் மூலம் கூட மதுபானத்தை நிறுத்தி விட முடியாது என்பதே அவரது அபிப்பிராயமாகும்.
இப்படியிருக்க இந்த மறியல் என்பது நாடகம் என்றும், பாமரமக்களை ஏய்ப்பதின் மூலம் தாங்கள் தலைவர்களாகவும், தேசபக்தர்களாகவும் ஆவதற்கு செய்யப்படும் சூக்ஷி என்பதல்லாமல் வேறு என்ன வித உண்மையோ, நாணையமோ இந்த மறியலில் இருக்கின்றதா? என்று யோசித்துப் பாருங்கள். இப்பொழுது அநேக ஊர்களில் கள்ளு குத்தகைக்காரர்களுடன் வியாபாரம் பேசிக் கொண்டு மறியலை நிறுத்திக் கொண்டார்கள். சிலர் பலாத்காரத்திற்கு பயந்து கொண்டு நிறுத்தி விட்டார்கள். சிலர் பொதுஜனங்களிடம் வாங்கிய பணத்தை பங்கு போடுவதில் சண்டை போட்டு கொண்டு நிறுத்தி விட்டார்கள். சிலர் தேர்தலில் ஓட்டு பெற கூலி கொடுத்து நடத்துவதால் எதிர் அபேக்ஷகர்கள் உண்மையை வெளிப்படுத்துவதால் நிறுத்தப்பட்டு விட்டது. இந்த நிலைமையில் ‘மறியல், மறியல்’ என்று ஏன் இளம் வாலிபர்களை அயோக்கியர்களாகவும் வாழ்க்கைக்கு உதவாதவர்களுமாகவும் ஆக்க வேண்டும்? என்று கேட்கின்றேன்.
தவிரவும் இந்துமதக் கடவுள்களில் சிலவற்றிற்கு குடம் குடமாய் கள் வைத்துப் படைத்து குடிப்பவர்களை எப்படி நிறுத்தி விட முடியும்? தவிர வட்டமேஜை மகாநாடு திரு.காந்தி இஷ்டப்படி முடிவு பெற்று விட்டால் மறியல் நடக்குமா? என்று யோசித்துப் பாருங்கள். அப்பொழுது இவர்கள் என்ன சொல்லுவார்கள்? “சர்க்காரா ரோடு ராஜி ஏற்பட்டு விட்டது. ஆதலால் மறியல் வேண்டாம். மறியலால் மது நின்று விடாது. ஒன்றோ சட்டத்தாலோ அல்லது வேறு உபாயத்தாலோ நிறுத்தலாம்” என்று தானே சொல்லுவார்கள். மற்றும் சமூக சம்பந்தமான குறைகளைப் பற்றி பேசி காங்கிரசுக்காரர் ஏன் அவ்விஷயத்திற்குப் பொது ஜனங்களிடம் வசூலிக்கும் 10 லக்ஷக்கணக்கான பணத்தில் ஒரு காசும் செலவு செய்வதில்லை என்றும், ஒரு வேலையும் காங்கிரஸ் தொண்டர்கள் வேலை திட்டத்தில் இல்லை என்றும் கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்லுகின்றார்கள் என்பதை கவனியுங்கள். “அதெல்லாம் சுயராஜ்ஜியம் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்றும் “ஒரு வரியில் சரிப்படுத்தி விடலாம்” என்றும் சொல்லுகின்றார்கள். அப்பேற்பட்ட சமூக சம்பந்தமான பழக்க வழக்கங்களை சுயராஜ்ஜியம் வந்த பிறகு ஒரு வரியில் சரிப்படுத்தி விடுவதானால், அது சாத்தியமானால் - உண்மையானால் கள்ளு குடியை நிறுத்த மாத்திரம் தானா பல வரிகளாலும் முடியாமல் போய் விடும்? என்று கேட்கின்றேன்.
தவிரவும் தீர்மானமானது யாரையும் குடிக்கும்படி சொல்லவில்லை. கள்ளுக்கடைக்கு குடிகாரர்களை கூட்டிக் கொண்டு போகும்படியும் சொல்லவில்லை. மறியல் மறியல் என்று சொல்லிக் கொண்டு செய்யும் முட்டாள்தனமான காரியத்தால் கள்ளு வியாபாரிகளை கொள்ளையடிக் கும்படியாகவும், தெருக்களில் எல்லாம் கள்ளு சாராயம் விற்கும்படியாகவும், பாமர ஜனங்கள் இந்த முட்டாள் தனமும் சூட்சி நிரம்பியதுமான வார்த்தைகளை நம்பி பொறுத்தமும், நாணயமும், யோக்கியப் பொறுப்பும் அற்ற சுயநலமிகளை ஜனப் பிரதிநிதியாக்க விடாமலும் செய்ய வேண்டுமென்பதுதான் இத்தீர்மானத்தின் தத்துவமாகும். நமது மக்கள் பாமர மக்களானதினாலும், 100 க்கு 90 பேர் எழுத்து வாசனை அறியாத மக்களான தினாலும், அவர்களை மூட நம்பிக்கையிலும், பகுத்தறிவற்ற தன்மையிலும் பார்ப்பனர்களும், அரசாங்கத்தாரும் வைத்திருக்கின்றார்களானதினாலும், காந்தி, காங்கிரஸ், கதர், பகிஷ்காரம், தேசீயம், மறியல் முதலிய காரியங்களால் ஏமாந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இத் தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கின்றதே தவிர வேறில்லை என்று சொல்லுகின்றேன். நமது வாலிபர்களிடமிருக்கும் அபிமானமே என்னை இப்படிச்சொல்லச் செய்கின்றது.
எழுச்சியான - வேடிக்கையான - பரபரப்பை உண்டாக்கத் தக்க எதுவானாலும் இளம் வாலிபர்களின் மனதைக் கவர்வது இயற்கை. புரட்டாசி மாதம் வந்தால் அநேக வாலிபர்கள் நாமம் போட்டு, பஜனைக்குப் போய் விடுவார்கள். அல்லா பண்டிகை வந்தால் அநேக வாலிபர்கள் தங்களை மிருகமாக்கி புலிவேஷம் போட்டுக் கொள்ளுவார்கள். வேடிக்கைப் பார்த்த ஒன்றுமறியா சிறு குழந்தைகளும் பண்டிகை நின்று ஒரு மாதம் வரை இவர்களைப் போல் ஆடிக் கொண்டே இருப்பார்கள். ஆதலால் ஒவ்வொருவரும் தங்கள் அறிவைக் கொண்டு யோசித்துப் பார்த்து சரியென்று தோன்றியபடி நடவுங்கள்
(குறிப்பு : 03,04.10.1931 நாட்களில் நடைபெற்ற நாகை வட்ட முதலாவது சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இரண்டாவது தீர்மானத்தை விளக்கி ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 18.10.1931)
* தீர்மானம்
பார்ப்பனர்களும், சுயநலக்காரர்களும், வயிற்றுப் பிழைப்புக்காரர்களும் காங்கிரஸ் மறியல் பகிஷ்காரம் என்ற வார்த்தைகளால் பாமரமக்களை ஏமாற்றி தேசத்தைப் பழைய அதாவது பார்ப்பன ஆதிக்க காலத்திற்கும், சோம்பேரிகள், பணக்காரர்கள் ஆதிக்கத்திற்கும் கொண்டு போகப் பார்க்கின்றபடியால் அவ்விதம் நடைபெறாதபடி பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும், ஆங்காங்குள்ள சுயமரியாதைக்காரர்கள் கவனித்துக் கொள்ள வேண்டுமென்றும் இம்மகாநாடு கேட்டுக் கொள்ளுகிறது.