மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அமைப்பான டி.ஆர்.டி.ஓ. (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம்) வில் பணியாற்றி வந்த இளம் விஞ்ஞானி அஜாஸ் மிர்ஸாவைப் பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாக கூறி பெங்களூரு போலீஸ் வழக்கு பதிவு செய்ததையும், டி.ஆர்.டி.ஓ.விலிருந்து அஜாஸ் அஹமது பணி நீக்கம் செய்யப்பட்டதையும் கடந்த மார் 15-21, 2013 தேதியிட்ட இதழில் விரிவாக எழுதியிருந்தோம்.

இந்தப் பிரச்சினை குறித்து அப்போதே பாராளுமன்றத்தில் பேசிய அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசத்துத்தீன் உவைசி, “மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளியான கர்னல் புரோஹித்துக்கு 4 ஆண்டுகளாக பாதுகாப்பு அமைச்சகம் ஊதியம் வழங்கி வருகிறது. ஆனால், பயங்கரவாத வழக்கில் பொய் குற்றம்சாட்டப்பட்ட அஜாஸ் மிர்ஸாவிற்கு ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளது. அவரை பணியிலிருந்து நீக்கியிருக்கிறது டி.ஆர்.டி.ஓ. இதென்ன இடைநிலை?” என சரமாரியாக கேள்வி கேட்டு பாராளுமன்றத்தை திணறடித்தார்.

உவைசியின் பேச்சு அனைத்து மீடியாக்களிலும் வெளிப்பட்டது.  இதன்  விளைவாக டி.ஆர்.டி.ஓ.வில் விசாரணைக்கு உத்தரவிட் டிருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம்.

அஜாஸ் மிர்ஸா பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி டி.ஆர்.டி.ஓ. வில் துறைரதியான விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் விவகாரத்திற்கான ஆலோசகரும், டி.ஆர்.டி.ஓ.வின் இயக்குனருமான வி.கே. ரஸ்வத்திடம், அஜாஸ் மிர்ஸாவின் பணி நீக்கம் குறித்து துறைரீதியான விசார ணையை மேற்கொள்ளுமாறு ஏ.கே. அந்தோணி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

டி.ஆர்.டி.ஓ. மூலம் தவறு நிகழ்ந்துள்ளதா? ஆம் என்றால் அதற்கு யார் காரணம்? என்ற இரண்டு பிரதான விஷயங்கள் இந்த விசாரணையில் முக்கியத் துவப்படுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதக் குற்றச்சாட்டிலிருந்து மார்ச் முதல் வாரத்தில் விடு தலையான அஜாஸ் மிர்ஸாவின் கனவு டி.ஆர்.டி.ஓ.வில் விஞ்ஞானியாக பணியாற்றுவது என்பதாகவே இருந்துள்ளது. அதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். அவரது உழைப்பின் பலன் அவருக்கு கிடைத்தது. ஆயினும், அது நீடிக்காமல் போய் விட்டது. மீண்டும் அதே பணியில் அமருவேன் என்று மட்டும் உறுதி குறையாமல் சொல்கிறார் அஜாஸ்.

டி.ஆர்.டி.ஓ. அஜாஸ் மிர்ஸாவை பணி நீக்கம் செய்ததற்கு அது எவ்வித காரணமும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி விரிவான விசாரணையை மேற்கொள்ளச் சொல்லியிருப்பதன் மூலம், அஜாஸின் பணி நீக்கத்திற்கு காரணம் யார்? என்று கண்டறியப்பட்டால் அவருக்கு தண்டனை வழங்குவது மட்டுமல்ல... அஜாஸ் மீண்டும் பணியில் அமர்த்தி, பணி நீக்கம் செய்யப்பட்ட காலத்திற்கு உரிய ஊதியத்தையும் அவருக்கு வழங்குவதோடு, டி.ஆர்.டி.ஓ. அவரிடம் பகிரங்கமாக மன்னிப்பையும் கேட்க வேண்டும். இதுதான் சரியான நீதியாகவும், அந்த இளம் விஞ்ஞானியின் காயத்திற்குகளிம் பாகவும் அமையும்.

Pin It