கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

நரேந்திர மோடி நாடாள வந்தபின், மதுகுடித்த குரங்குகள் போல் மதவெறிக் கும்பல்கள் ஆட்டம் போடுகின்றன. காந்தியார் கொலைக்கு முன்பே கத்தி யைக் கூர்தீட்டத் தொடங்கியவர்கள், இப்போது தங்கள் ஆட்சி அமைந்துவிட்டதால், சூலத்தைக் கையிலேந்திச் சுற்றி வருகிறார்கள். திரிசூலத்தின் ஒருமுனை கிருத்து வர்களை நோக்கி, இன்னொன்று இசுலாமியர்களுக்கு; மற்றது மதச்சார்பின்மைக் கொள்கையைப் போற்றும் மானுடப் பற்றாளர் கழுத்துக்கு!

அப்படித்தான் அண்மையில் கன்னட அறிஞர் எம்.எம். கல்புர்க்கி, தன் 77ஆம் வயதில் இந்துமத வெறியர்களின் இரத்தப்பசிக்கு இரையாகிவிட்டார். பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்த பல்கலை வித்தகர். சாகித்திய அகாதெமி விருதுபெற்ற சாதனையாளர், கன்னட உரைநடை இலக்கியத்தில் கரைகண்டவர். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர், மாற்றா ரையும் போற்றுகின்ற மாந்தநேய மாண்பாளர்.

ஆயினும் தான் கொண்ட கொள்கையைக் குன்றிமணி அளவும் விட்டுக் கொடுக்காதவர். மடமைப் பழக்கவழக்கங்கள் மீது அவர் தொடுத்த போரானது மதவாதிகளை எரிச்ச லுறச் செய்தது. எதிரிகள் அவருக்கு மிரட்டல் விடத் தொடங்கினர். இதனால் அவருக்குக் கடந்த 2014 சூன் முதல் காவல்துறை பாதுகாப்புத் தந்தது.

ஆனால் அஞ்சா நெஞ்சினராகிய கல்புர்க்கி சில மாதங்களுக்கு முன்புதான் தனக்கு எந்தப் பாதுகாப்பும் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டார். நேரம் பார்த்துக் காத்திருந்த வன்னெஞ்சக் கயவர்கள் 30.8.2015 அன்று அவரிடம் அய்யம் கேட்க வந்த மாணவர்கள் போல் வீட்டின் உள்ளே புகுந்து சுட்டுக்கொன்றுவிட்டனர். மாணவர்கள், பல்துறை அறிஞர், வணிகர்கள், பொது மக்கள் என எல்லாத் தரப்பாரும் மறைந்த கல்புர்க்கி உடலுக்கு நேரில் வந்து வீரவணக்கம் செலுத்தினர். கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள் அடைக் கப்பட்டன. முழு அரசு மரியாதையுடன் அவரின் நல் லடக்கம் நடந்தது.

அதுமட்டுமல்ல கர்நாடகாவில் கல்புர்க்கி கொல்லப் பட்டதைத் தொடர்ந்து மற்றொரு கன்னட எழுத்தாளர் கே.எஸ். பகவான் என்பவருக்கு இந்துத்துவா அமைப் பினர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின் றனர்.

கடந்த செப்டம்பர் 10ஆம் நாள் பகவான் பெய ருக்கு வந்த ஒரு மொட்டைக் கடிதத்தில், “எத்தனை காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்தாலும் உன் னைக் கொலை செய்தே தீருவோம்” என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த மிரட்டலுக்கெல்லாம் பகவான் அஞ்சவில்லை. “கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், மடாதிபதிகளுக்கு எதிராகவும் பேசி வருகிறேன். சங்கராச்சாரியாரைக் கண்டித்து நூல் எழுதிய போது அடிப்படைவாதிகளால் தாக்கப்பட்டேன்.

அவர்கள் கல்புர்க்கியைச் சுட்டுக் கொன்றதைப் போல் என்னையும் கொல்லத் திட்டமிட்டுள்ளனர். ட்விட்டரில் கொலை மிரட்டல் விடுத்த பஜ்ரங்தளம் அமைப்பைச் சார்ந்தவருக்குப் பிணை வழங்கப்பட் டுள்ளது. முகநூல், மின்னஞ்சல், மர்ம தொலைபேசி அழைப்புகள் மூலம் இந்துத்துவா அமைப்பினர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் இந்துத்துவா அமைப்பின் செயல்பாடுகளுக்கு எதிராகவும் பேசியதை நான் ஒருபோதும் திரும்பப் பெறமாட்டேன். அதேபோல் சகமனிதரைக் கொல்லத் துடிக்கும் விலங்குகளின் மிரட்டலுக்கு நான் எப்போதும் அஞ்சமாட்டேன்” என்று தி. இந்து ஏட்டிற்கு அவர் நேர்காணல் அளித்துள்ளார் (தி இந்து (தமிழ்) 15.9.15, பக்.11).

இதற்கிடையில் கல்புர்க்கியின் கொலையை வரவேற்றும், அக்கொலையாளிகளைப் பாராட்டியும் தன் முகநூலில் பதிவிட்டுள்ள மங்களூரு மாவட்ட ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரசாத் அட்டவார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஆள்தான் கடந்த 2009 ஆம் ஆண்டு மங்களூரு விடுதி ஒன்றின் விருந்தில் பங்கேற்ற ஆண்களையும் பெண்களையும் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட முதன்மைக் குற்றவாளி. இவர் மும்பை மற்றும் கடலோரக் கர்நாடகாவில் பெரிய நிழலுலக தாதாவாக வலம் வரும் ரவி பூசாரியின் வலக்கரம் என்று இந்து ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது நாட்டில் நடப்பது பா.ச.க. ஆட்சி. பாரதிய சனதா கட்சி பாசிச வெறி பிடித்த மதவாதக் கட்சியாகும். குசராத்தில் நரேந்திர மோடியின் கீழ் அமைச்சராய் இருந்து நரபலி வேட்டையில் நன்கு பயிற்சி பெற்ற அமித்ஷா தான் அக்கட்சியின் தற்போதைய தலைவர் என்பது எவ்வளவு பெரிய பொருத்தம்! கடந்த நாடாளு மன்றப் பொதுத் தேர்தலின் போது பிரதமர் வேட்பா ளராய் முன்நிறுத்தப்பட்ட நரேந்திர மோடி மிகுந்த நாவடக்கத்துடன் பேசினார்.

நாட்டின் வளர்ச்சி, ஊழலற்ற ஆட்சி, ஒவ்வொரு ஏழையின் சட்டைப் பையி லும் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள பணக்காரர் களின் கருப்புப் பணம் வெளிக்கொண்டு வரப்பட்டு நிரப்பப்படும் என்றெல்லாம் வாய்ச் சவடால் அளித்தார். இன்றோ, நம்பி வாக்களித்த மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு, நாட்டையே பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலை கூவி விற்கிறார். மறுபுறம் இவருடைய இந்து மதவாத சக்திகள் கையில் எரிதழல் ஏந்திச் சூறாவளி யாய் வலம் வருகின்றன. நாட்டைச் சுடுகாடாய் மாற்றுகின்றன.

ஆரவாரத்தோடு ஆட்சிக்கட்டில் ஏறிய அடுத்த நொடியே இந்தித் திணிப்பு, சமஸ்கிருத வாரம், குரு உத்சவ், பாடத் திட்டங்களைப் புராணக் குப்பைகளால் நிரப்புதல், கிருஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குத் தடை போட்டு, அதே நாளில் வயதான கிழவர் வாஜ்பாய் பெயரில் நல்லாட்சி நாள் கொண்டாட்டங்கள், மாணவர் களுக்குக் கட்டுரைப் போட்டிகள்.

மோடி நாகாலாந்து பயணம் போகிறார். கிருத்து வப்பாதிரிகள் அடுக்கடுக்காய்த் தமக்கு நேர்ந்துவரும் கேடுகள் பற்றி அவரிடம் முறையிடுகிறார்கள். மறு நாளே தில்லியில் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடக்கிறது.

‘இராமனை ஏற்காதவர்கள் முறைதவறிப் பிறந்த வர்கள்’ என்று சாடுகிறார் சாத்வி நிரஞ்சன் ஜோதி என்பவர். அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். இப் படிப் பேசும் துணிவு அவருக்கு எப்படி வந்தது? எல் லாம் நம் மோடியால்தான்! 200 ஆண்டுக்கால ஆங்கில அடிமைத்தனத்தை 1200 ஆண்டுக்கால இசுலாமிய அடிமைத்தனமாக நீட்டி நாடாளுமன்றத்திலே முழங்கி யது இந்த நரிதானே! தாய் எட்டடி பாய்ந்தால் குட்டிகள் பதினாறு அடி பாய்கின்றன. கர்வாப்சி என்கிற பெயரில் மதமாற்றக் கலவரத்தில் இறங்குகின்றன. பா.ச.க. நாடாளுமன்ற உறுப்பினர் மகாராஜ் ‘இந்துப் பெண்கள் குறைந்தது நான்கு குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்று இலக்கு வைக்கிறார். விசுவ இந்து பரிசத் தலைவர் பிரவீண் தொகாடியா “குழந் தைப் பேறு இல்லாத இந்துப் பெண்களுக்கு ‘Helpline" போன்ற அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் வழங்கி எப்பாடுபட்டேனும் நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ள நாங்கள் உதவுவோம்” என்று மார்தட்டுகிறார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சோழவந்தான் பார்ப்பான் சுப்பிரமணியசாமி பள்ளிக் கல்லூரி வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் இருந்து அக்பர், பாபர் போன்ற அழுக்குப் பிடித்த பெயர்களை நீக்கிவிட்டு, இந்து மன்னர்களின் பெயர்களை ஏராளமாகச் சேர்க்க வேண்டும் என்கிறார். நாட்டின் தலைநகரான புதுதில்லியில் இசுலாமிய மன்னனான அவுரங்கசீப் பெயரை எடுத்துவிட்டு, அந்தச் சாலைக்கு, இந்துமதத் தொண்டர் அடிப்பொடியாழ்வார் அப்துல் கலாம் பெயர் சூட்டப்படுகிறது.

எல்லா இடத்தி லும் இசுலாமிய எதிர்ப்பே குறி! ‘யோகா நாள்’ என்ற பெயரில் மோடி நடத்திய ஒருநாள் கூத்தில் கூட முசுலீம் கள் ஏற்காத ‘சூரிய நமஸ்கார’ முறை வற்புறுத்தப் பட்டது! ‘சூரிய நமஸ்காரத்தை ஏற்றுக்கொள்ளாத வர்கள் கடலில் குதித்துச் சாகட்டும்’ என்று கருணை யோடு திருவாய்மலர்ந்தார் ‘யோகி ஆதித்ய நாத்’ என்கிற அருளாளர்.

நாட்டில் உள்ள அறிவுப் புலங்கள் அனைத்தும் காவிப் பெருச்சாளிகளால் இட்டு நிரப்பப்படுகின்றன. இந்திய வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவராக சுதர்சனராவ் என்கிற துளிகலப்புக்கூட இல்லாத தூய பார்ப்பனர் ஒருத்தர் நியமிக்கப்படுகிறார்.

‘சாதி அமைப்பு என்பது நமது பன்னெடுங்காலப் பண்பாடு. அதனை மீட்டெடுப்பதே நம் கோட்பாடு என்கிற கருத்துக் கொண் டவர் இவர். இராமாயணமும், மகாபாரதமும் புராணக் கற்பனைகள் அல்ல; அப்பட்டமான வரலாற்று உண் மைகள் என்று அமித்ஷாவின் வழுக்கை மண்டையில் அடித்துச் சத்தியம் செய்கிறார்.

சில மாதங்களுக்குமுன் அம்பேத்கர் விழா ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய மோடி, தனது தலைவர் அம்பேத்கர் என்றும், அம்பேத்கர் சித்தாந்தங்களே தன்னை வாழ்வின் சிறந்த நிலைக்கு உயர்த்தியதா கவும் கூசாமல் மேடையில் புளுகினார்.

சென்னை ஐ.ஐ.டி.யில் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்திற்கு எதிராக மதவெறிக்கும்பல் எழுப்பிய கூச்சலை எல் லோரும் அறிவர். “பகவத்கீதை பைத்தியக்காரனின் உளறல்” என்று சாடியவர், அம்பேத்கர். அந்தப் பகவத் கீதையை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று இவர் அமைச்சரவையில் முதன்மை யான பொறுப்பிலுள்ள சுஷ்மா சுவராஜ் என்கிற பார்ப்பனப் பெண் அமைச்சரே ஓயாமல் பல்லவி பாடுகிறார்.

இந்துத்துவாவின் உயிர்க் கொள்கைகளுக்கு முற்றி லும் எதிராக நின்ற நெறி, புத்த நெறி. சாதி வேற்றுமை களைச் சாடியவர், புத்தர். வருணாசிரமக் கோட்பாடு களுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போரிட்டவர் அவர். கடந்த 5.9.2015 அன்று பாட்னா அருகில் உள்ள புத்தகயாவில் நடந்த அனைத்துலக புத்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய மோடி புத்தரையும், புத்த நெறிகளையும் வானளாவப் புகழ்ந்தார். என்னுடைய அரசு புத்தகயாவை நாட்டின் ஆன்மிகத் தலைநகர மாக வளர்த்தெடுக்கும் என்று வாயாரப் பொய் சொன்னார்.

ஊரை ஏய்க்க, புத்தகயா கோயிலின் முன் மண்டி யிட்டு யோகாசனப் பயிற்சிகள் செய்தார். ஒரு காலத்தில் உலகமே போற்றும் அறிவுத் திருக்கோயிலாய்த் திகழ்ந்த நாலந்தா பல்கலைக்கழகத்தை எரித்து, அங்கிருந்த ஆயிரக்கணக்கான பல்துறை சார்ந்த ஓலைச்சுவடி களைக் கொளுத்திக் குரங்காட்டம் போட்டவர்கள் இந்துமத வெறியர்கள்தான் என்பதை வரலாறு மறக்காது.

ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் எளிய-சத்தான உணவு மாட்டுக்கறி. குறைந்த விலைக்குக் கிடைக்கக் கூடிய பண்டம். பசுவைக் கொல்லக் கூடாது என்பது பார்ப்பன மனுநீதி. மனுநீதிப்படி அரசாளும் சத்தீஸ்கர், இராஜஸ்தான், குசராத், மகாராட்டிரம் போன்ற மாநிலங் களில் மாட்டுக்கறிக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை பா.ச.க.வுடன் கூடிக்குலவிய கட்சி சிவசேனா. கடந்த தேர்தலில் பா.ச.க., சிவசேனாவின் முதுகில் குத்தி, மகாராட்டிர மாநிலத்தில் அதிக இடங்களைப் பெற்றுவிட்டது. அந்த எரிச்சலில் இப்போது இரண்டு கட்சிகளும் எலியும் பூனையுமாக இருக்கின்றன.

மும்பையில் சிவசேனா இறைச்சிக் கடைகளை மூட எதிர்ப் புத் தெரிவிக்கிறது. ‘இந்துப் பெண்கள் அதிகக் குழந் தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்ற கருத்தைக் கண்டிக்கிறது. இதற்கும் பலபடி தாண்டி சிவசேனாவின் சாம்னா ஏடு கன்னட அறிஞர் கல்புர்க்கியின் கொலை யைக் கண்டித்துத் தலையங்கம் எழுதுகிறது. ‘வயதான ஒரு நிராயுதபாணியைக் கொல்வது கோழைத்தனம்’ என்றும், அடுத்தவர் கருத்துச் சுதந்தரத்தில் தலையிட உரிமை இல்லை என்றும் எழுதும் சாம்னா, சிவசேனா தலைவர் பால்தாக்கரே இறந்தபோது, அவரின் கருத்து களைத் திறனாய்வு செய்து இணையதளத்தில் கருத்து வெளியிட்ட இளம்பெண் ஒருவர்மீது தாக்குதல் தொடுத் ததை மறக்க முடியுமா? சிவசேனா கொல்லாமை பேசுவது புலி புல்லை மட்டுமே தின்னும் என்னும் பொய்யுரையைப் போன்றதே!

வாஜ்பாய் ஆண்டபோது, இந்துத்துவவாதிகளுக்கு நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை இல்லை. அதனால்தான் நடந்துமுடிந்த தேர்தலில் நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராய் முன்நிறுத்தினர். ஆர்.எஸ்.எஸ். தானே களத்தில் இறங்கி, நாடு முழு வதும் தொண்டர்களைப் பரப்புரையில் ஈடுபடுத்தி மாபெரும் வெற்றியைக் குவித்தது. எனவேதான், இனி நடுவண் ஆட்சியின் குடுமி நம் கையில் என அது ஆட்டம் போடுகிறது.

அண்மையில் புதுதில்லியில் நடந்த ஆர்.எஸ்.எஸ்.-பா.ச.க. சந்திப்பு நிகழ்ச்சியில் மோடி உட்பட நடுவண் அமைச்சர்கள் அத்தனைபேரும் ஆர்.எஸ்.எஸ். முன் கைகட்டி வாய்பொத்தி, மதவாதி கள் முன் கால்பணிந்து மண்டியிட்டார்கள். இனிப் பட்டொளி வீசிப் பறக்கப் போகிறது, காவிக்கொடி! பாட்டா ளித் தோழர்களே! உழைக்கும் மக்களே! என்ன செய்யப் போகிறோம், நாம்?