இந்திய சமுதாய அமைப்பு நூதனமானது. இன்றைய இந்திய மக்கள் தொகை 120 கோடி. இவர்களுள் 85 விழுக்காட்டினர், இந்து மதத்தினர். இந்து மதத்தில் மட்டுந் தான் பிறவி சாதிகள் நான்கு உண்டு; இந்த நான்கு சாதிகள் 6700 உள்சாதிகளாகப் பிரிக்கப்பட்டன. இச்சாதிகளுள் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் - வருணத் திற்கு வெளியே வைக்கப்பட்ட தீண்டப்படாத உள்சாதிகள் அடக்கம்.

இந்துக்கள் 100 பேரில் 15 பேர் மேல்வருணங்களையும், சூத்திர மேல் சாதிகளையும் சேர்ந்தவர்கள்; 85 பேர் கீழ்வருணம் - கீழ்ச்சாதிகளாக வைக்கப்பட்டவர்கள். இந்த 85% மக்கள் நல்ல சோறு, நல்ல துணி, நல்ல வீடு, நல்ல கல்வி பெறக் கூடாதவர்களாகத் தடுக்கப்பட்டவர்கள்; இவற்றைப் பெறுவதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள். இந்த ஏற்பாடு வேத - சாஸ்திர - புராண அடிப்படைகளில் செய்யப்பட்டது. இது 2011இலும் செல்லும். அதனால் தான் கீழ்வருண சூத்திரர்களான பிற்படுத்தப்பட்டவர்கள் 55% பேரும், தீண்டப்படாத பட்டியல் வகுப்பினர் 17% பேரும், பழங்குடியினர் 7.5% பேரும் - ஆக 80% பேரில் அதிகம் பேர் கடந்த 2010ஆம் ஆண்டு வரையில் கூட எழுத்தறிவு பெறாதவர்களாக இருக்கிறார்கள்.

எழுத்தறிவே பெற முடியாமல் தடுக்கப்பட்ட சாதிகள் - 1951க்குப் பிறகுதான் பல்கலைக் கழக உயர் கல்விகளான எம்.ஏ., எம்.எஸ்சி.; மற்றும் மருத்துவம், சட்டம், பொறியியல், வேளாண்மை முதலான உயர் பட்டப்படிப்புகள் பெற வசதியாக இடஒதுக்கீடு தரப் பட்டனர். இந்த உயர்கல்வியிலான இடஒதுக்கீடு பட்டியல் வகுப்பாருக்கும், பழங்குடியின ருக்கும் ஏட்டளவில் மட்டுமே தரப்பட்டது. எம்.எஸ்., எம்.டி.; எம்.எல்., முதலான படிப்புகளில் இவர்களை வேண்டுமென்றே புறக்கணித்தனர். இது வடஇந்தியாவில் மிக அதிகம்.

வடஇந்தியாவில், 1978 வரையில் உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தரப்படவே இல்லை. மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியும், இராம் அவதேஷ் சிங் தலைமையிலான பீகார் பிற்படுத்தப்பட்டோர் பேரவையும் 1978இல் பீகாரில் நடத்திய மாபெரும் போராட்டத்தின் பிறகுதான், வடமாநிலங்களில் மாநிலக் கல்வியிலும் வேலையிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வந்தது.

ஆனால் சென்னை மாகாணம் என்கிற தென்னாட்டில், 1940 முதலே உயர்கல்வியில் இடஒதுக்கீடு வந்துவிட்டது. அதற்கு 1950இல் ஏற்பட்ட அரசியல் சட்டத் தடையைப் பெரியார் உடைத்தார்; மேதை அம்பேத்கரும் அதற்குப் பேருதவி புரிந்தார்.

இந்த நிலைமையினால் - காலங்காலமாக மருத்துவப் படிப்பு, பொறியியல், சட்டப் படிப்பு, வேளாண் படிப்பு என்கிற துறைகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிற்படுத்தப் பட்டோரும், பட்டியல் வகுப்பினரும், பழங்குடியினரும் கடும் உழைப்பினால் உயர் படிப்புகளில் ஓரளவு இடம்பெற்றனர்.

ஆனாலும் படிப்பறிவு இல்லாத பெற்றோர்கள் கொஞ்சப் படிப்பு உள்ள பெற்றோர்கள் - நல்ல வீட்டு வசதியும் உணவும் பெற முடியாத பெற்றோர்களான கீழ்ச்சாதியினரின் பிள்ளைகள் - இந்த எல்லா வசதிகளையும் பெற்றிருக்கிற மேல்வருண - மேல்சாதிப் பெற்றோர்களின் பிள்ளைகளோடு போட்டி போட்டு - 12ஆம் வகுப்பில் 1200க்கு 1100, 1150 மதிப்பெண்கள் பெறக்கூடிய அளவுக்கு, இன்னும் வளர முடியவில்லை. கீழ்ச்சாதி மாணவர்கள் 1200க்கு 800, 900, 1000 மதிப்பெண்கள் பெறக்கூடிய அளவுக்குத்தான் இப்போது முன்னேறியுள்ளனர்.

இப்படி முன்னேறியவர்களைத் தடுத்து நிறுத்திப் பாழாக்கும் தன்மையில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு, 2004 முதல் தொடர்ந்து பல முட்டுக்கட்டைத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்திய மருத்துவக் குழுமம் (Medical Council of India – M.C.I.) என்பது உயர் அதிகாரம் படைத்த ஒரு தனி அமைப்பு. அதற்கு ஆளுநர்கள் என ஏழுபேர் உள்ளனர். இதற்கு ஒரு தலைவர் உண்டு. 2010 வரையில் இதற்குத் தலைவராக இருந்தவர் கேத்தான் தேசாய் என்கிற நாலாந்தரப் பார்ப்பனர். மருத்துவப் படிப்புத் திட்டங்களை வகுப்பது, மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்குவது, ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிக்கும் உரிய இடங்களின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பது, மருத்துவத் தேர்வுகளுக்கான திட்டங்களை வகுப்பது எல்லாவற்றையும் இந்தக் குழுவே செய்ய அதிகாரம் படைத்தது. இதற்கு இந்திய அரசின் ஒப்புதல் வேண்டும். இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி - இலட்சக்கணக்கான கோடி ரூபாய் பணமாகவும், தங்கமாகவும் குவித்துக் கொண்டார் கேதன் தேசாய். இவர் இதில் அடித்த கொள்ளை என்பது 2 ஜி - ஸ்பெக்ட்ரம் சம்பாதிக்கத் தவறிய கொள்ளையைவிட அதிகம் ஆகும். 22.4.2010இல் இவரைக் கைது செய்தனர். ஆனால் இவர் பேரிலான நடவடிக்கை கிணற்றில் போடப்பட்ட கல்லாகக் கிடக்கிறது.

இவருக்குப் பிறகு இப்போது MCIஇன் தலைவராக இருப்பவர் எஸ்.கே.சரின். ஏழு ஆளுநர் உறுப்பினர்கள் உண்டு. இப்போது ஆறு உறுப்பினர்களே உள்ளனர். இவர்களுள் ஒருவர் டாக்டர் தேவி ஷெட்டி.

இந்திய மருத்துவக் குழுமச் சட்டம் 1956இல் இயற்றப்பட்டது. இதில் ஒரு திருத்தத்தை இந்திய அரசு செய்தது. அதாவது விதி 3-அ என்பதைச் சேர்த்தது. அதன்படி இந்திய மருத்துவக் கல்வியில், இந்திய மருத்துவக் குழுமம் தலையிட அதிகாரம் அளித்தது. இந்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, மருத்துவப் படிப்பிற்கான மாற்றியமைக்கப்பட்ட நெறிமுறைகள் கொண்ட அறிவிக்கையை, 21.12.2010இல் இந்திய மருத்துவக் குழுமம் வெளியிட்டது.

அதாவது எம்.பி.பி.எஸ். முதலான மருத்துவப் பட்டப் படிப்புக்குச் சேர விரும்பும் மாணவர்கள் - அனைத்திந்திய அளவிலான நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்று அது அறிவித்தது. அப்படிப்பட்ட தேர்வுக்குத் தமிழக மாணவர்களை உட்படுத்தத் தடையாணை கோரித், தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, 6.1.2011இல் தடை ஆணை பெற்றது.

தமிழ்நாட்டு அரசு, தமிழக மருத்துவக் கல்விக்கு நுழைவுத் தேர்வு கூடாது என்று, 2006இலேயே சட்டம் இயற்றியிருந்தது. அந்தச் சட்டம் 3.3.2007 முதலே நடப்புக்கு வந்துவிட்டது. எனவே, சென்னை உயர்நீதிமன்றத் தடை ஆணையை நீக்கவேண்டி, உச்சநீதிமன்றத்தில் வந்த வழக்கில், 6.1.2011இல் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பைச் செல்லாததாக ஆக்க முடியாது என்று, 10.3.2011இல் தீர்ப்பு அளித்தது. அதனால் தமிழ்நாட்டு மாணவர்கள் அனைத்திந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு எழுத வேண்டியது இல்லை.

ஆனால் இன்னொரு பெரிய கேடான திட்டத்தை இந்திய மருத்துவக் குழுமம் அறிவித்துவிட்டது. அது என்ன?

நான்கு ஆண்டுக்காலம் எம்.பி.பி.எஸ். படித்து, ஓராண்டுக்காலம் மருத்துவமனையில் பயிற்சி பெற்று (Internship) மருத்துவராகப் பணிபுரிய ஒருவர் முழுத்தகுதி பெற்றிருந்தாலும் - அப்படிப் பணிபுரிவதற்கான உரிமம் பெறுவதற்காக, அனைத்திந்திய அளவிலான தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்று மருத்துவக் குழுமம் அறிவித்துவிட்டது.

குதிரை கீழே தள்ளியதுமல்லாமல், குழியும் பறித்த கதை போல, மருத்துவத் துறையில் ஒடுக்கப்பட வகுப்பினராக உள்ள 85% மக்கள் படிக்கவும் வாய்ப்புப் பெறாமல் - படித்த முழுத் தகுதி பெற்ற பிறகு வேலைக்கும் போக முடியாமல் மருத்துவக்குழு முட்டுக்கட்டை போட்டுவிட்டது.

இதற்கு இடையில், இந்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் அனைத்திந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு கொண்டு வரப்படமாட்டாது என, அய்தராபாத்தில் நடந்த மாநாட்டில் 13.1.2011இல் அறிவித்தது. இது இப்படியிருக்க, மருத்துவக் குழுமம் அமைத்த தனிக்குழுவின் செயல்பாட்டுக்கு உச்சநீதிமன்றம் 2010 சூலையில் அனுமதி அளித்திருப்பதையும் நாம் மறக்கக் கூடாது.

இந்தியா முழுவதிலும் மருத்துவப் படிப்பில் அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் சற்றொப்ப 40,000 ஆகும். 4 இலட்சம் முதல் 5 லட்சம் பேர் வரை நுழைவுத் தேர்வு எழுதுவார்கள்.

ஆனால் இந்திய அரசும், உச்சநீதிமன்றமும் அனைத்திந்திய அளவில், வெகுமக்களான பிற்படுத்தப்பட்டோர் - பட்டியல் வகுப்பினர் - பழங்குடியினரின் உயர் கல்வி முன்னேற்றம், உயர் பதவியில் பங்கு இவற்றுக்கு எதிராகவே உள்ளன. இது உண்மை. எப்படி?

சட்டப்படிப்புப் பெற விரும்பும் மாணவர்கள், 12ஆம் வகுப்பு முடித்தவுடன், அத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் கல்லூரியில் சேர்ந்து 5 ஆண்டுகள் படிக்க வேண்டும்; பி.ஏ. முதலான பட்டம் பெற்றவர்கள் மதிப்பெண் அடிப்படையில் கல்லூரியில் சேர்ந்து 3 ஆண்டுகள் படிக்க வேண்டும். அப்படிச் சட்டம் படித்தவர்கள், அந்தந்த உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொண்டு, நேரடியாக, வழக்குரைஞராகப் பணியாற்றலாம். 1860 முதல் நேற்று வரையில் இதுதான் நடைமுறை.

இந்த உரிமையையும், இப்போது இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் பறித்துக் கொண்டது. எதைப்பறித்தது? இந்த அமைப்பு 2010 ஏப்பிரலில் ஓர் அறிவிப்பைச் செய்தது. அதன்படி, “வழக்கறிஞராகப் பட்டம் பெற்றிருந்தாலும், அவர் வழக்கறிஞராகப் பணிசெய்யத் தகுதி பெறவேண்டுமானால், அனைத்திந்திய அளவிலான தகுதித் தேர்வு எழுத வேண்டும்” என்று அறிவித்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் இன்று 50,000 வழக்குரைஞர்கள் உள்ளனர். இவர்களுள் கீழ்ச்சாதிக்காரர்களே அதிகம் பேர். ஆனால் வடநாட்டில் உள்ள இலட்சக்கணக்கான வழக்குரைஞர்களில், பாதிப்பேர் பார்ப்பனர்கள்; கால் பங்குப் பேர் மேல்சாதியினர்; மீதிப்பேர் ஒடுக்கப்பட்டோர்.

இப்படிப்பட்ட கேடு கெட்ட நிலையில், வழக்கறிஞராகப் பணிசெய்ய விரும்புவோருக்கான அனைத்திந்திய நுழைவுத் தேர்வு 6.3.2011இல் நடத்தப்பட்டது; 22,000 பேர் நுழைவுத் தேர்வு எழுதினர். இத்தேர்வு முடிவு 20.3.2011இல் அறிவிக்கப்பட்டது. தேர்வு எழுதியவர்களில் 71% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மீதி 29% பேர். இவர்களுள் 100க்கு 95 பேர் ஒடுக்கப்பட்ட வகுப்பினர்தான் என்பதை நாம் அறிதல் வேண்டும். இப்படித் தேறாமல் போனவர்கள் மீண்டும் தகுதித் தேர்வு எழுதலாமாம். இந்தக் கேடுகெட்ட திட்டத்திற்குப் பெயர், “2015-காட்சி (Vision - 2015)” - அதாவது இந்தியாவை அறிவாளிகள் நாடாக ஆக்குவது என்பதாம்.

இன்றையப் பிரதமர் மன்மோகன் சிங் அயல்நாட்டில் படித்த மேதை; ஆனால் அமெரிக்காவின் மற்றும் இந்தியப் பணக்காரர்களின் - பன்னாட்டு முதலாளிகளின் பச்சை அடிமை.

இவர்தான் 500க்கு மேற்பட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர்களும், பல்லாயிரக்கணக்கான அரசியல், பொருளியல், அறிவியல், தொழில்நுட்பவியல் அறிஞர்களும் உள்ள இந்தியாவில், “தேசிய அறிவாளிகள் ஆணையம்” (National Knowledge Commission - NKC) என்று, அரசியல் சட்ட ஏற்பு இல்லாத - சோரம் போகும் படிப்பாளிகளைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து, ஆலோசனை கேட்கிற ஒரு பிற்போக்காளர்.

இந்த நிலையில், இந்தியாவில் 85% பேராக உள்ள பிற்படுத்தப்பட்டோர் - பட்டியல் வகுப்பினர் - பழங்குடியினர் வகுப்புகளைச் சார்ந்த சமூகத் தலைவர்கள், கட்சிகளின் தலைவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்குரைஞர்கள்; மருத்துவம், சட்டம், பொறியியல், வேளாண்மை - படிக்கும் மாணவ-மாணவிகள்; மற்றும் பெரியார், அம்பேத்கர் இயக்கத்தினர் என்ன செய்ய வேண்டும்?

இவைபற்றி, இவர்கள் கூடி, ஆழ்ந்து சிந்தியுங்கள்; விவாதியுங்கள்; தெருவுக்கு வந்து போராடுங்கள்! தமிழகத்திலும், இந்திய அளவிலும் போராட முன் வாருங்கள் என அன்புடன் வேண்டுகிறோம்.

இந்திய அளவில் இயக்கம் கட்டாமல், இந்திய அளவில் போராடாமல், இந்தியப் பார்ப்பன, பனியா பன்னாட்டு முதலாளிகளின் கொடுங்கோல் அரசின் கேடுகளை அடித்து வீழ்த்த முடியாது; முடியாது.

- வே.ஆனைமுத்து

Pin It