E.A.H பிளண்ட் (E.A.H Blunt) என்பவர் வட இந்தியாவின் சாதி அமைப்பு (The Caste System of North India) என்ற தனது புத்தகத்தில் சாதிகள் எவ்வாறு அன்றாட வாழ்வில் அவர்களை ஆள்கின்றன என்பதைப் பற்றி ஒரு முழு அத்தியாயம் எழுதியிருக்கிறார். 1911 ஆம் ஆண்டின் உ.பி. மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையை அடிப்படையாக வைத்து, ஜாதி பஞ்சாயத்துகளால் நிறுவப்பட்ட தண்டனைகளின் செயல்பாடுகளையும், வடிவங்களையும் அவர் விவரிக்கிறார். பார்ப்பனருக்கு உணவளிப்பது, பார்ப்பனருக்கு பணம் தருவது, பார்ப்பனருக்கு கன்றுக்குட்டியை பரிசளிப்பது போன்ற பொதுவான தண்டனைகள் பார்ப்பனரல்லாதவர்களுக்கு தரப்பட்டதாக பிளண்ட் சுட்டிக் காட்டுகிறார். உதாரணமாக, பார்ப்பனரல்லாதவரின் மனைவி ஒழுக்கக்கேடாக நடந்து கொண்டால் பார்ப்பனருக்கு உணவளிக்க வேண்டும். பசுவைக் கொன்றால் பார்ப்பனருக்கு கன்றுக் குட்டியைப் பரிசளிக்க வேண்டும். பிச்சை எடுத்து உங்கள் சொந்த சாதியை இழிவுபடுத்தியிருந்தால் பார்ப்பனருக்குப் பணம் தர வேண்டும். நாயையோ, பூனையையோ கொன்றிருந்தால் கங்கையில் குளித்துவிட்டு சில பார்ப்பனர்களுக்கு உணவளிக்க வேண்டும். பார்ப்பனர்கள் இருக்குமிடத்தில் உணவு உண்டிருந்தால் பார்ப்பனர்களுக்கு உணவளிக்க வேண்டும். குற்றத்திற்கும் தண்டனைக்கும் இடையே தோன்றும் பொருந்தாமையை ஆராய்ந்தால், புரோகித ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த பார்ப்பனன் இந்து மதத்தின் ஆதாரமாக, சாதியின் மையமாக இருந்து வருகிறான் என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.

இங்கு நடைமுறை பற்றிய கேள்வி முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இது 'பார்ப்பனர்' என்ற கோட்பாட்டை எளிமையாக கட்டமைப்பதிலிருந்து நம்மைக் காப்பாற்றும். 'பார்ப்பனர்' என்று அழைக்கப்படும் உறுதியான சமூகக் குழுவை பராமரித்தலும், மீட்டுருவாக்கம் செய்வதும் பார்ப்பனியத்தின் கருத்தியல் நிலைத்தன்மைக்கும் இயக்கத்திற்கும் அவசியம். எனவே, பார்ப்பனர்களையும் பார்ப்பனியத்தையும் பிரிக்க முடியாது.brahmins 484அனு ராம்தாஸ் எனும் ஆய்வாளர் தனது Mythicizing Materiality: Self-racialization of the Brahmin ஆய்வறிக்கையில் பார்ப்பனர்களின் இனமயமாக்கல் குறித்த கட்டுக்கதைகள் எவ்வாறு சாதி அமைப்பின் பெருங்கட்டமைப்பை நிலைநிறுத்தும் வேலையை செய்து கொண்டிருக்கின்றன என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். இனவாதக் கட்டுக்கதைகள் அனைத்து ஆதிக்க சித்தாந்தங்களுக்கும் அவசியம் என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். இந்திய சாதி அமைப்பில் பார்ப்பன சமூகம் 'தண்டனைகள் அளிக்கப்படாத சமூகமாக' மட்டுமல்ல, 'மிகவும் பாதுகாக்கப்பட்ட சமூகமாகவும்' இருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார். எந்த அமைப்பும் நிலைக்க வேண்டுமென்றால், அவ்வமைப்பின் ஆதிக்கச் சக்திகளைப் பாதுகாக்க வேண்டும், அது அரசனாகவோ அல்லது பார்ப்பனாகவோ இருந்தாலும்.

பார்ப்பனர்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்குவதற்காக, மதக் கோட்பாடுகளும் அரசுச் சட்டங்களும் உருவாக்கப்பட்டு பார்ப்பனியம் மிகத் தீவிரமாக சமூகமயமாக்கப் பட்டுள்ளது. இதன் பிண்ணனியில், பார்ப்பனர் என்ற சொல் ஓர் அறிவுசார்ந்த அடையாளமாக வெளிப்படையாகவும், முழுமையாகவும் கட்டமைக்கப்படுகிறது.

நமது ஒட்டுமொத்த சமூகமும் 'பார்ப்பனனை' ஒரு கருத்தாகவும், ஆளும் வர்க்கமாகவும் உருவாக்குவதிலும், மீட்டுருவாக்கம் செய்வதிலும் தொடர்ந்து முதலீடு செய்துள்ளது. ஒடுக்கப்பட்ட சாதியினரை உள்ளடக்கிய உழைக்கும் சாதியினர், ஆளும் வர்க்கங்கள் உட்பட அனைவருக்கும் உற்பத்தி செய்கின்றனர். மேலும், தம்முடைய உணர்ச்சி, உளவியல் முதலீடுகள் மூலம் மத, கலாச்சாரத் தளங்களில் 'பார்ப்பனர்களை' பாதுகாக்கின்றனர். பார்ப்பனிய சமூகத்திற்கு வழங்கப்படும் உளவியல் ஊதியத்தை சாதி அடிப்படையிலான உற்பத்தியிலிருந்து பிரிக்க முடியாது. கிராம்சி சுட்டிக் காட்டுவது போல, எலும்பும் தோலும் போல ஆழமாக பின்னிப் பிணைந்துள்ளன.

எனவே, பார்ப்பனன் என்ற அடையாளத்துடன் ‘ஏழை’ அல்லது ‘தகுதி’ என்ற அடைமொழியை முன்னொட்டாக சேர்க்கும்போது, ​​அது ஒரு சமூக வெறுப்பாக, முரண்பாடாக, கூட்டு, சமூக முதலீட்டின் மூலம் சரிசெய்யப்பட வேண்டிய ஒரு கண்புரை நோயாக மாறுகிறது.

ஏழை தலித், ஏழை விவசாயி, படிக்காத பெண் போன்ற சொற்றொடர்களை கேட்கும் போது ஏற்படும் உணர்வுகள் நம்மைப் பாதிப்பதில்லை. ஒரு ஏழை தலித் உடல் உழைப்பின் மூலம் பிழைத்துக் கொள்வார் என்றும், ஒரு ஏழைப் பார்ப்பனர் என்ன செய்வார் என்று சொன்ன ராம்விலாஸ் பாஸ்வானின் கூற்றை இந்தப் பின்னணியில் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏழைப் பார்ப்பனர்களுக்கு கல்வி உதவித் தொகை, கன்றுக்குட்டிகள், இட ஒதுக்கீடு, உணவு, நெய், நகர்ப்புற சொத்துக்கள், அரசு வேலைகள், ஜிஎஸ்டி இல்லாத பூணூல் போன்றவை வழங்கப்பட வேண்டும் என்று சொன்ன அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் அறிக்கை புதியதும் அல்ல, அசாதாரணமானதும் அல்ல. எர்னஸ்ட் வுட் தனது புத்தகமான “ஓர் ஆங்கிலேயன் இந்தியாவைப் பாதுகாக்கிறான்” என்ற புத்தகத்தில் இதே போன்ற கருத்தைக் கூறுகிறார். அதாவது, பார்ப்பன மாணவர்கள் உடல் உழைப்பை மேற்கொள்வது நிச்சயமாக முற்றிலும் முட்டாள்தனமாக இருக்கும், ஏற்கனவே உடல் உழைப்பு செய்ய தகுதி பெற்ற கோடிக்கணக்கான ஏழை தலித், பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். அவர்களில் பாதி பேர் பட்டினியின் விளிம்பில் உள்ளனர். இவர்கள் உழைக்காமல், பார்ப்பனர்கள் உழைப்பதா என்கிறார்.

பார்ப்பனர்களின் துயரங்களைப் போக்கச் செய்யப்பட்ட நம் சமூகத்தின் கூட்டு முதலீடுகள் குறித்த மிக நீண்ட வரலாறு உள்ளது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள உயர்கல்வித் துறை எடுத்துக்காட்டுகள் அதற்குச் சான்றாக உள்ளன.

க்‌ஷிணா பெல்லோஷிப்களின் கதை

நரிந்தர் குமார் தனது “Institution of Dakshina and its Impact on Sanskrit Education” புத்தகத்தில், மேற்கு இந்தியாவில் பேஷ்வா ஆட்சியின் போது, ​பார்ப்பனர்களுக்கான அதிகாரப்பூர்வ நன்கொடையாக தக்‌ஷிணா பெல்லோஷிப் நிறுவப்பட்டது என்று கூறுகிறார். 1957 ஆம் ஆண்டு சமஸ்கிருத கமிஷன் அறிக்கையை மேற்கோள் காட்டும் நரிந்தர் குமார், சிவாஜி தனது பார்ப்பன குருவான ராமதாஸின் வழிகாட்டுதலின் படி தக்‌ஷிணா பெல்லோஷிப்களை நிறுவினார் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். ராமதாஸ் சிவாஜியிடம் மூன்று 'வரங்கள்' கேட்டதாகக் கூறப்படுகிறது. அதில் ஆவணி மாதத்தில் பார்ப்பனர்களுக்கு வழங்கப்படும் விருந்துகளும் உதவித் தொகையும் அடங்கும். கல்வி உதவித் தொகை எனும் பொருள்படும் தக்‌ஷிணா எனும் சொல் பார்ப்பன வகுப்போடு பிரிக்க முடியாத தொடர்பை இன்றும் கொண்டுள்ளது. பார்ப்பனர்களின் திறமையைப் பொறுத்து அவர்களுக்கு பணமாகவும் பொருளாகவும் உதவித் தொகை வழங்கப்பட்டதை பம்பாய் மாகாண அரசாங்கத்தின் கல்வித் துறை சார்ந்த ஆவணங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம். உதாரணமாக, பத்துப் புத்தகங்களைப் படித்த ஒரு பார்ப்பனருக்கு பத்து கலன் மக்காச்சோளமும் நூறு ரூபாயும் வழங்கப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கிய இத் திட்டத்தின் ஆரம்ப ஆண்டு செலவு ஐந்து லட்சம் ரூபாய். பேஷ்வாக்களின் ஆட்சிக் காலத்தில்தான் இது நிறுவனப்படுத்தப்பட்டு மேலும் வலுப்பெற்று, அரசின் கடமையாக மாறியது.

காசி, ராமேஸ்வரம், தெலுங்கானா, திராவிடதேசம், கொங்கன், கன்யாகுப்ஜா, ஸ்ரீரங்கப்பட்டினம், மதுரா, கத்வால், குர்ஜார் போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து பார்ப்பனர்களை உள்ளடக்கிய விரிவான குழு அழைக்கப்பட்டது. இந்தக் குழு பல நாட்கள் புனேவில் முகாமிட்டு பார்ப்பனர்களை பெல்லோஷிப்பிற்குத் தேர்வு செய்தது. இதன் பின்னணியில், புனேவை மையமாக வைத்து சுற்றிலும் பல நிரந்தர 'சமஸ்கிருத பாடசாலைகள்' தோன்றின.

பேஷ்வாக்கள் அறிமுகப் படுத்திய ஆவணி மாத உதவித் தொகைத் திட்டம் போன்ற பல்வேறு பார்ப்பன ஆதரவுத் திட்டங்கள் பேஷ்வாக்களுக்கு பிந்தைய நிலப்பிரபுக்களால் ஏற்படுத்தப்பட்டன என்று நரிந்தர் குமார் குறிப்பிடுகிறார். பேஷ்வா ஆட்சியின் கீழ், பார்ப்பன ஆதரவுத் திட்டங்களின் ஒர் ஆண்டுச் செலவு பத்து லட்ச ரூபாய்க்கு கீழே ஒரு போதும் குறையவில்லை. 1758 இல் உச்சமாக, பேஷ்வா பாஜிராவ் காலத்தில், தொகை பதினெட்டு லட்சமாக உயர்ந்தது. சில சமயங்களில், ஒரு வருடத்தில் 60,000க்கும் மேற்பட்ட பார்ப்பனர்கள் இவ்வகையான அரசு உதவித் திட்டங்களால் பயனடைந்ததாக நரிந்தர் குமார் குறிப்பிடுகிறார்.

1770இல் வடக்கிலும், தெற்கிலும் உள்ள பார்ப்பன மையங்களில் இருந்து கிட்டத்தட்ட 40,000 பேர் தேர்வெழுதினர். ஒரு பொதுவான சமஸ்கிருத மொழியைப் பேசும், பொதுவான நலன்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு கற்பனை சமூகமாக, ஒரு தேசமாக, அரசு வழங்கும் திட்டங்களின் மூலம் பார்ப்பனர்கள் உருவாக்கப்பட்டார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பார்ப்பனர்களுக்கு உதவி செய்த பெருமை பேஷ்வாக்களுக்கு மட்டுமல்ல, பரோடா, தர்பங்கா, மைசூர், விஜயநகரம், ஜெய்ப்பூர், பாட்டியாலா, ஜம்மு உள்ளிட்ட பல பகுதிகளின் ஆட்சியாளர்களுக்கு உண்டு. பார்ப்பனர்களுக்குக் கிடைத்த அரசு ஆதரவோடு ஒப்பிட்டால், சுதந்திர இந்தியாவில் ஆண்டுதோறும் 300 OBC பெல்லோஷிப்களும், 667 ST பெல்லோஷிப்களும், 2000 SC பெல்லோஷிப்களும் மட்டுமே வழங்கப்படுகின்றன.

ஆங்கிலேய ஆட்சியின் கீழ் ஆரம்பத்தில் நிறுத்தப்பட்ட தக்‌ஷினா உதவித் திட்டம், பின்னர் ஆண்டு செலவினம் ஐந்து லட்சத்தில் இருந்து ஐம்பதாயிரம் ரூபாயாகக் குறைக்கப்பட்டு மீண்டும் செயல்படுத்தப்பட்டது. 1818 இல் ஆங்கிலேயர்கள் தக்காணத்தை ஆக்கிரமித்த பின் பார்ப்பனர்களுக்கான இழப்பீடு வழங்குவதற்காக தக்‌ஷிணா நிதி உருவாக்கப்பட்டது. கீழ்க்காணும் பட்டியலில் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட நிதி உதவித் தொகை பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன.dakshina fellowship

(ஆதாரம்: நரிந்தர் குமார், 1976: 44)

பல பார்ப்பனர்களுக்கு தக்‌ஷிணா நிதி உதவித் திட்டம் நிரந்தரமாக வழங்கப்பட்டது. 1829 ஆம் ஆண்டுக்குப் பிறகு பூனா சமஸ்கிருதக் கல்லூரியின் பராமரிப்பிற்காக தக்‌ஷிணா நிதியின் ஒரு பகுதி மடை மாற்றப்பட்டது. அனைத்து பாடத்திட்டங்களும் பார்ப்பனர்களால் சமஸ்கிருதத்தில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டன. இந்த நிலைமை 19 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் ஓரளவுக்கு மாறியது. 1849க்குப் பிறகு, கணிசமான அளவு தக்‌ஷினா பணம் உள்ளூர் மொழியான மராத்திக்கு மாற்றப்பட்டது. கோட்பாட்டளவில் அனைத்து சாதிகளுக்கும் மதத்தினருக்கும் மடை மாற்றப்பட்டது எனலாம். தக்‌ஷிணா நிதி உதவித் திட்டம் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முடிவுக்கு வந்தது.

20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் பம்பாய் பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளில் கீழ் ஜூனியர் (மாதம் 50 ரூபாய்), சீனியர் (மாதம் 100 ரூபாய்) என்ற வடிவத்தில் தக்‌ஷிணா நிதி மீண்டும் தரப்பட்டது. குறிப்பிட்ட கல்லூரிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்கள் பார்ப்பனர்களுக்கு ஒதுக்கப்பட்டன. எல்பின்ஸ்டோன் கல்லூரிக்கு ஆறு இடங்கள், செயின்ட் வில்சன் கல்லூரிக்கு மூன்று இடங்கள், பெர்குசன் கல்லூரிக்கு மூன்று இடங்கள். தக்‌ஷிணா எனும் பழைய பேய், அரசின் தக்‌ஷிணா பெல்லோஷிப்பாக உருமாறி, வேறு எந்த உதவித் தொகையையும் பெறாத 'தகுதியுள்ள' மாணவர்களுக்கு தரப்படும் நோக்கத்தை கொண்டதாக இன்று மாற்றப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களின் வருடாந்த நாட்குறிப்புகளிலும், நினைவுக் குறிப்புகளிலும், பல உயர்சாதி ஆண்கள், பெண்களின் வாழ்க்கை வரலாறுகளிலும், அவர்கள் கடந்த காலத்தில் எப்படி தக்‌ஷிணா பெல்லோஷிப் பயனாளிகளாக இருந்தார்கள் என்ற விவரங்களைக் காணலாம். 19 ஆம் நூற்றாண்டின் பம்பாய் பல்கலைக்கழக நாட்குறிப்புகள் தக்‌ஷிணா பெல்லோஷிப் பயனாளிகளின் பட்டியலை நமக்குத் தருகின்றன. அவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களாக இருந்ததில் ஆச்சரியமில்லை; அவர்களைத் தொடர்ந்து குஜராத்தி வைசியர்களும் பார்சிகள் உள்ளனர்.

எடுத்துக்காட்டாக, நந்தினி சுந்தரின் 'In the Cause of Anthropology : life and Work of Irawati Karve' என்ற நூலில் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஐராவதி கார்வே எவ்வாறு தக்‌ஷிணா பெல்லோஷிப் பயனாளியாக இருந்தார் என்பதை நமக்குக் கூறுகிறது. தக்‌ஷிணா பெல்லோஷிப் பயனாளியாக இருந்த ராமகிருஷ்ண பண்டார்கர் பெயரில் 1859 ஆம் ஆண்டில் புனேயில் பண்டார்கர் ஓரியண்டல் இன்ஸ்டியூட் ஆரம்பிக்கப்பட்டது. பெரோ மேத்தா, பைராம்ஜி நௌரோஜி காமா ஆகியோரும் தக்‌ஷிணா பெல்லோஷிப் பயனாளிகள் தான். கோவிந்த் அகார்கர் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் புனே தக்‌ஷிணா பெல்லோஷிப்பின் கண்காணிப்பாளராக இருந்தார்.

20 ஆம் நூற்றாண்டில் பார்ப்பன நிதி உதவித் திட்டம்

1945-46 ஆண்டின் ஆக்ரா பல்கலைக்கழக நாட்குறிப்பில் விடுதிகள் பற்றிய ஒரு சுவாரஸ்யமான பகுதி உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட ஐந்து விடுதிகளில், நான்கு உயர் சாதி இந்துக்களால், உயர்சாதி இந்துக்களுக்காக நிர்வகிக்கப்பட்டு வந்தன. அந்த விடுதிகள் “காயஸ்தா, சௌபே, பார்கவா, வைசிய” என தனிப்பட்ட ஜாதிகளின் பெயரால் அழைக்கப்பட்டன. சௌபே விடுதியில் சதுர்வேதி பார்ப்பனர்களையும், பார்கவா விடுதியில் பார்கவா சாதியினரையும் அனுமதித்தன. அதே நேரத்தில் காயஸ்தா விடுதி எழுத்துப் பூர்வமாக அனைவருக்கும் திறந்திருந்தது. அனைத்து விடுதிகளின் நிர்வாகமும் அவ்விடுதிகளை நிறுவிய சாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காயஸ்தா விடுதியின் கட்டுமானத்திற்கு கூடுதலான மானியம் உத்திரப் பிரதேச அரசாங்கத்திடமிருந்து கிடைத்தது. காயஸ்தா விடுதியின் காப்பாளராக காயஸ்தா சாதியைச் சார்ந்தவரே இருந்தார். சாதி அடிப்படையிலான மாணவர் விடுதிகள் அங்கீகரிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், பல்கலைக்கழகங்களாலும், அரசுகளாலும் பொருளாதார ரீதியாக மானியமும் அளிக்கப்பட்டது.madras university mess details

(மெட்ராஸ் பல்கலைக்கழக நாட்குறிப்பில் ஹாஸ்டல் மெஸ் விவரங்கள்)

லக்னோ பல்கலைக்கழக ஆண்டு நாட்குறிப்புகள் சாதி அடிப்படையிலான மாதாந்திர நன்கொடைகள் பற்றிய விரிவான கணக்குகளை நமக்குத் தருகின்றன. எடுத்துக்காட்டாக, பண்டிட் சூரஜ் நரேன் ஸ்காலர்ஷிப் காஷ்மீரிப் பார்ப்பனர்களுக்கு மட்டுமே தரப்பட்டது. பிங்கா ராஜ் சத்திரிய உதவித் தொகை என்பது தூய சத்ரிய இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான உதவித் தொகையாகும். தங்களை ஜாட்கள், காயஸ்தர்கள், காத்ரிகள் என சுயமாக அறிவித்துக் கொண்டவர்களுக்கு உதவித் தொகை கிடையாது என்ற குறிப்பையும் மேற்கண்ட நாட்குறிப்பு விவரங்களில் காண முடிகிறது. லக்னோ பல்கலைக்கழகத்தில் ராஜா பகதூர் தயாள் உதவித்தொகை படிநிலையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. முதலில் காத்ரிகள், அடுத்து காத்ரிகளைத் தவிர்த்த மற்ற இந்துக்கள், அடுத்து பிற பிரிவினர்.

குறிப்பாக சமஸ்கிருதத் துறை மாணவர்களுக்கு ஏராளமான உதவித் தொகைகள் வழங்கப்பட்டதையும் காணலாம். கோயில் அறக்கட்டளைகள் (ஸ்ரீ நாகேஷ்வர் நாத் கோயில் உதவித்தொகை, ஸ்ரீ மஹாவிர்ஜி கோயில் அறக்கட்டளை உதவித் தொகை போன்றவை), முக்கிய உயர்சாதி அரசு ஊழியர்கள், ஜமீன்தார்கள் ஆகியோரால் இந்த நன்கொடைகள் வழங்கப்பட்டன.nagpur university and brahmins

(1936-37 நாக்பூர் பல்கலைக்கழக நாட்குறிப்பில் இருக்கும் உதவித்தொகை விவரங்கள்)

1930 ஆண்டுகளுக்குப் பிந்தைய பனாரஸ் இந்து பல்கலைக்கழக நாட்குறிப்புகள் சாதி அடிப்படையில் வழங்கப்பட்ட உதவித்தொகை, பதக்கங்கள், பரிசுகள் பற்றிய விவரங்களை வழங்குகின்றன. அப்பட்டியலைப் பார்த்தால், 'ஏழை’ மற்றும் ‘தகுதியான பார்ப்பன மாணவர்' என்ற கருத்தாக்கம் என்பது தெளிவாகிறது. பார்ப்பனர் அல்லாத இருபிறப்பாளர்களும் (உயர்சாதியினர்) பார்ப்பனர்களின் மேன்மையை உறுதிப்படுத்துவதில் முதலீடு செய்தனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நன்கொடையாளர்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட ஜாதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு அவர்களை அடையாளங் காணுகின்றனர். பண்டிட் அமர்நாத் அறக்கட்டளை உதவித்தொகை, ராய் பண்டிட் கிஷேன் நரேன் குர்து உதவித்தொகை, பண்டிட் ஹரி கிருஷ்ணா உதவித்தொகை ஆகியவை காஷ்மீரி பண்டிட் மாணவர்களுக்கானது. ராய் சாஹிப் சண்டி பிரசாத் உதவித்தொகை, லாலா ரத்தன்சந்த் உதவித்தொகை, லாலா முரளிதர் கபூர் தொழில்நுட்ப உதவித்தொகை, ராய் பகதூர் பாபு கோகுல் சந்த் உதவித்தொகை ஆகியவை தகுதியான, ஏழை காத்ரி மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கின்றன. பார்வதிபாய் ஜெயின், குமார் சிங் உதவித்தொகை ஆகியவை சமஸ்கிருதத்தை தங்கள் பாடங்களில் ஒன்றாக எடுத்துக் கொண்ட ஜெயின் மாணவர்களைக் குறிவைத்தன. ரத்தன்சந்த் தல்பத்ராம் ஷா உதவித்தொகை பின்வரும் இறங்கு வரிசையில் மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்தது. முதலில் ஜெயின் ஸ்வேதாம்பர் மூர்த்தி புஜக், அடுத்து திகம்பர் ஜெயின், பின்னர் சமஸ்கிருதத்தை பாடமாகக் கொண்ட பிற இந்துக்கள்.

பண்டிட் லால்தா பிரசாத் சதுர்வேதி ஸ்காலர்ஷிப், பண்டிட் துளசிராம் பதக் ஸ்காலர்ஷிப், பண்டிட் பன்வாரி லால் ஷர்மா ஸ்காலர்ஷிப், ஹரி பிரசாத் துபே ஸ்காலர்ஷிப், ராய் பகதூர் பண்டிட் கன்ஹையலால் ஸ்காலர்ஷிப் பல்வேறு வகையான பார்ப்பனர்களை (கன்யாகுப்ஜா, கவுர், நகர், காரட் போன்றவர்களை) இலக்காகக் கொண்டன.

சில ஸ்காலர்ஷிப்கள் நுணுக்கமான விலக்கு முறையைக் கொண்டிருந்தன. உதாரணமாக, சதுர்வேதி ஹரிபஜன் ஸ்காலர்ஷிப் முதன்மையாக கல்பியின் கன்யாகுப்ஜா பார்ப்பனர்களை இலக்காகக் கொண்டது. அடுத்து ஜலானின் கன்யாகுப்ஜா பார்ப்பனர்கள், அதைத் தொடர்ந்து ஆக்ரா, அவுத் பார்ப்பனர்கள். உதவித் தொகை பெறுபவர்கள் பனாரஸ் சமஸ்கிருதக் கல்லூரியின் பிரதமா அல்லது பிரவேஷிகா தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கூறிய பகுதிகளில் இருந்து கன்னியாகுப்ஜா பார்ப்பனர்கள் யாரும் இல்லையென்றால், மற்ற இடங்களைச் சேர்ந்த கன்னியாகுப்ஜாக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இந்த இலக்குகள் தீர்ந்த பிறகுதான் வேறு எவருக்கும் உதவித் தொகை வழங்கப்பட்டது. கன்னியாகுப்ஜாக்களுக்கு வழங்கப்பட்ட மஹாவீர் பிரசாத் த்விவேதி ஸ்காலர்ஷிப் ஜாலா ராஜபுத்திரர்களுக்கான மகாராஜ் சர் கன்ஷ்யாம் சிங்ஜி உதவித் தொகையிலும் இதே மாதிரியான தேர்வு முறை பின்பற்றப்பட்டது.

மார்வாடி அகர்வால்களுக்கு வழங்கப்பட்ட தன்மால் சிக்தியா உதவித்தொகை வழங்கும் முறையில் உதவித் தொகை பெறும் பயனாளியிடமிருந்து பிரம்மச்சரியம் மற்றும் பகவத் கீதையைப் பாராயணம் செய்வதற்கான கூடுதல் விதிகளும் கட்டாயமாக்கப்பட்டிருந்தன.

பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் (BHU) பார்ப்பனர், அகர்வால், மகேஸ்வரி, காத்ரி சாதிப் பெண்களுக்கான பிரத்யோக உதவித் தொகைகளைக் கொண்டிருந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உயர்சாதிப் பெண்களுக்கு வகுப்புவாத அடிப்படையில் தனி வகை முதலீடு செய்யப்பட்டது.

ஏழை, தகுதியான பெங்காலி பார்ப்பன மாணவர்களுக்கு ராமச்சந்திர முகர்ஜி ஸ்காலர்ஷிப், ஒடியா பார்ப்பனர்கள், காயஸ்தா பட்டதாரி மாணவர்களுக்கு சங்கர் லக்ஷ்மி உதவித் தொகை, பிசா அகர்வால் மாணவர்களுக்கு பாசுதேயோ சஹாய் பதக்கம் போன்ற உதவித் தொகைகளும் வழங்கப்பட்டன.

சமஸ்கிருதம், இறையியல், அத்வைத தத்துவம் போன்றவற்றின் கீழ் தகுதியான ஏழை பார்ப்பன மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. மேற்கண முழுப் பட்டியலையும் ஆய்ந்து பார்த்தால், தற்போது OBC பட்டியலில் வரும் கல்வார் சாதியைச் சார்ந்த மாணவர்களுக்கு தரப்பட்ட தேவி பாஸ்மாடோ கோயர் உதவித் தொகை மட்டுமே OBC வகுப்பினருக்கு வழங்கப்பட்டது. கிரிதர் லால் பத்ரா உதவித் தொகையையும் கூடுதலாக குறிப்பிடலாம். பம்பாய் பல்கலைக்கழகம், நாக்பூர் பல்கலைக்கழகம், மெட்ராஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து பல்கலைகழகங்களிலும் இதே போன்ற உயர் ஜாதி கல்வி உதவி தொகைகளைக் காணலாம்.

பரம்பரைச் சொத்துக்கள் பொருளாதார ரீதியான மேலாதிக்கக் கட்டுக்கதையைப் பாதுகாப்பதிலும் மீட்டுருவாக்குவதிலும் முக்கியமான பங்கு வகிக்கின்றன. பார்ப்பன மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகைகளை வெறும் சாதிச் சலுகைகள் என்று மட்டும் புரிந்து கொள்ளக் கூடாது. சாதி அமைப்புக்குள் பிரிக்க முடியாத, நேர்முக மரபுவழியை அடிப்படையாகக் கொண்ட உரிமை வாய்ந்தவர்களாக பார்ப்பனர்கள் இருக்கிறார்கள் என்பதையும் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டும். உயர்சாதி ஜமீன் தார்கள் மற்றும் அரசு அதிகாரிகளால் செய்யப்படும் சமஸ்கிருதம் அல்லது பார்ப்பனர்களுக்கு செய்யப்படும் முதலீடுகள் பார்ப்பனியத்திற்குள் ஒரு முக்திக்கான வழிமுறையாக, தவம் செய்யும் ஆன்மீகச் செயலாக மட்டுமே கருதப்பட வேண்டும். பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை சாதிய வடிவமைப்பின் ஒரு பகுதியே தவிர, சாதிக்கு வழங்கப்படும் சலுகை அல்ல.

பார்ப்பனர்களால் தொடர்ந்து செய்யப்பட்ட சொத்துக் குவிப்பும், காலனித்துவ நவீனத்துவத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய உயர்கல்வியில் செய்யப்பட்ட வகுப்புவாத முதலீடும் காலனித்துவ ஆட்சிக்கு பிந்தைய இந்தியாவை பார்ப்பனர்கள் மேலாதிக்கம் செய்வதை உறுதி செய்தது. தங்கள் சந்ததியினர் உயர்கல்வியைத் தொடர, அவர்களை நிரந்தரமாக உடல் உழைப்பிலிருந்து விடுவிக்க முயலும் பார்ப்பனர்களின் திறன் தொடர்கிறது. சுதந்திரத்தின் ஆரம்ப காலகட்டத்தில் பாதுகாப்பான அரசு வேலைவாய்ப்பை ஏகபோகமாகக் கொண்டிருந்த இந்த மேல்மட்ட சாதியச் சிறுபான்மையினர், தங்கள் குழந்தைகளை உடல் உழைப்பிலிருந்து நிரந்தரமாக விடுவிக்கும் திறன் கொண்டிருக்கின்றனர்.

அதற்காக நிலம் கைமாற்றப்பட்டது. நகர்ப்புற சொத்துகளாக மாற்றப்பட்டது. கல்லூரி பட்டங்கள், பிஎச்டிகள் உள்ளிட்ட சான்றிதழ் மூலதனங்களாக மாற்றப்பட்டன. இந்திய நடுத்தர வர்க்கம் என்று அப்பாவியாகக் குறிப்பிடப்படும் பார்ப்பன உயர்வகுப்பைச் சேர்ந்தவர்கள் தான் பெரும்பாலும் கல்வியாளர்களாக இருந்தார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. 1931 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையை (தொகுதி.1, எழுத்தறிவு பற்றிய அத்தியாயம்) ஆராய்ந்தால், பார்ப்பனர்களின் கல்விப் பின்புலம் தெரிய வரும்.literacy in 1931

மேற்கண்ட ஆதாரத்தின் படி, பைத்யர்கள், காயஸ்தர்கள், நாயர்கள், கத்ரிகள், பார்ப்பனர்கள் 1931 ஆம் ஆண்டில் கல்வியறிவிலும், ஆங்கில எழுத்தறிவிலும் முதலிடம் பிடித்தனர். இன்று இத்தகைய அட்டவணையைக் காண முடியாது. ஜாதிப் படிநிலையில் யார் எந்த இடத்தில் இருந்தாலும், சாதிகளையும் சமூகங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் தைரியம் ஆங்கிலேயர்களுக்கு இருந்தது.

எப்போதுமே ஏழை, தகுதியான, பார்ப்பனரும், அவர்களுடைய ஒட்டுமொத்த கூட்டமும் நவீன உயர்கல்வியின் மையமாக இருந்துள்ளனர் என்பது மேலே உள்ள ஆதாரங்களில் இருந்து தெளிவாகிறது.

கிறித்துவ மிஷனரியின் ஆதாரங்களை ஆராய்ந்தால் நவீன கல்வியில் பார்ப்பனர்களின் ஏகபோகம் இன்னும் தெளிவாகப் புரியும். Christian India (1957) எனும் புத்தகத்தில் உள்ள பகுதி கீழே தரப்பட்டுள்ளது.

“நாம் இப்போது சிவனின் புனித நகரத்திற்குத் திரும்ப வேண்டும். இங்கே பெரிய கோவில், புகழ்பெற்ற பாறையில் அமைக்கப்பட்டுள்ளது, அதன் காலடியில், பார்ப்பனர் குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில், செயின்ட் ஜோசப் கல்லூரி உள்ளது. பள்ளிக் கட்டிடங்கள், ஆய்வகங்கள், மாணவர் விடுதிகள், தேவாலயம், மடாலயம், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றைக் கொண்ட பெரிய வளாகத்தைக் கொண்டுள்ளது. 1844 ஆம் ஆண்டில் நேகபட்டத்தில் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் 1883 ஆம் ஆண்டில் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது. தந்தை டி நோபிலியின் கனவு நிறைவேறியது; ஒரு கிறிஸ்தவ பள்ளி இப்போது இந்து பார்ப்பன மதத்தின் கோட்டையாக உள்ளது. கத்தோலிக்க பாதிரியார்கள், 'கடவுளின் மகன்கள்' (பார்ப்பனர்கள்) இடையே தொடர்பும் நட்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று செயின்ட் ஜோசப் பள்ளியில் சுமார் 1500 மாணவர்களும், சுமார் 1900 பல்கலைக்கழக மாணவர்களும் உள்ளனர். மொத்த எண்ணிக்கையில் சுமார் 1300 பேர் கிறிஸ்தவர்கள். மீதமுள்ளவர்கள் இந்துக்கள், பெரும்பாலும் பார்ப்பன சாதியினர். 

இந்தியாவில் நவீனக் கல்வி ஒருபோதும் பார்ப்பனரை விட்டு தொலைவில் செல்லவில்லை. மாறி வரும் உலகத்திற்காக பார்ப்பனர்களை மறுசீரமைக்கும் முயற்சியாக கிறிஸ்தவ மிஷனரிகளின் முதலீட்டைக் கூறலாம்,. பாபாசாஹேப் தனது ‘கிறிஸ்தவமயமாக்கல் இந்தியா’ என்ற கட்டுரையில் தகுந்த ஆதாரங்களுடன் இதே கருத்தைக் கூறுகிறார். மேற்கண்டதைப் போல, பார்ப்பனரை நெருங்கிப் பழகுவதும், அவர்களைத் தொடர்பு கொள்வதும், பார்ப்பன தெருவுக்கு அருகில் பல்கலைக்கழக வளாகம் அமைப்பதும் என இந்தியாவின் நிரந்தரமான அறிவுசார் வர்க்கமாக பார்ப்பனர்களை நிலைநிறுத்தும் முயற்சி கிறிஸ்தவ மிஷனரிகளால் பெரிய அளவிற்கு ஒருங்கிணைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்த கட்டமைப்பை மாற்றி அமைக்க எந்த முயற்சியும் இல்லை. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டமும் பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தை மாற்றி அமைக்க முயலவில்லை.

முடிவாக,

இந்தியாவில் உள்ள வேறு எந்த சமூகக் குழுவையும் போலல்லாமல், பார்ப்பனர்கள், ஒரு பொதுவான மொழியுடன், நன்கு கட்டமைக்கப்பட்ட அமைப்புக்களுடன் ஒரு தேசிய வர்க்கமாக வளர முடிகிறது. மேற்கு இந்தியாவில் நடைமுறையில் இருந்த தக்‌ஷிணா ஃபெல்லோஷிப் முறை பார்ப்பன தேசிய வர்க்க உருவாக்கம் பற்றிய ஆய்வில் நமக்கு உதவுகிறது.

19, 20 ஆம் நூற்றாண்டில் பல்கலைக்கழகங்களில் பல்வேறு பார்ப்பன மாணவர்களுக்கு கிடைக்கப் பெற்ற உதவித்தொகைகளின் விவரத்தை நம்மால் மேற்கண்ட ஆதாரங்களின் மூலம் அறிய இயலுகிறது. பனாரஸ் இந்து பல்கலைகழகம் இதற்கு முன்மாதிரியாக இருந்துள்ளது. உயர் கல்வியும், அதிகாரமும், நீதித்துறையும் பார்ப்பன தேசியத்தை உருவாக்க மிக முக்கியமான தளமாக மாறின.

ஏழை பார்ப்பனர்களுக்கு தரப்படும் புதிய 10% EWS இட ஒதுக்கீட்டை, மேற்கண்ட வரலாற்று உண்மைகளுடன் தொடர்புபடுத்திப் படிக்க வேண்டும். 10% EWS இட ஒதுக்கீடு என்பது ஜாதி அமைப்பில் உள்ள அனைவரின், குறிப்பாக பெரும்பான்மை மக்களான பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களின் வயிற்றில் அடித்து பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

நிதின் டொனால்டு

நன்றி: Round Table India இணையதளம் (2019, பிப்ரவை 1 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: சேகர் கோவிந்தசாமி