வி.பி.சிங் மண்டல் குழுவின் பரிந்துரைகளில் ஒரு சிறு பகுதியைச் செயல் படுத்த முனைந்த போது, பார்ப்பனர்கள் கதிகலங்கிப் போனார்கள். இந்தியாவில் பொதுப் போட்டி முறையில் திறமையானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது இல்லை; பார்ப்பனர்களை உயர் நிலை வேலைகளுக்கும், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களைக் கீழ் நிலை வேலைகளுக்கும் தேர்ந்தெடுக்கும்படி மிகவும் சூட்சுமமாக இம்முறை வடிவமைக்கப்பட்டு உள்ளது. இம்முறை வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டு இருப்பதற்கு, உயர்நிலைகளில் பார்ப்பனர்கள் நிரம்பி வழிவதே காரணமாக உள்ளது. வி.பி.சிங் அரசின் ஆணைப்படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% அளித்தால் இந்த அடிப்படையே தகர்ந்து போய்விடும் என்று பார்ப்பனர்கள் திகில் அடைந்தார்கள்.

இப்போதைய நிலையில் பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்களைத் திறமையானவர்கள் என்றும், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களில் உள்ள திறமைசாலிகளைத் திறமைக் குறைவானவர்கள் என்றும் கூற முடிகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள் 27% உயர்நிலைகளில் அமர்ந்தால் பார்ப்பனர்களின் இந்த தகிடுதத்தம் வினாவிற்கு உட்பட்டு விடும். அதன் பின் பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் உயர்நிலை வேலைகளை அடைவதும், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களில் உள்ள திறமைசாலிகள் ஓரங்கட்டப்படுவதும் கடினமாகி விடும். இதை எல்லாம் எண்ணிப் பார்த்த பார்ப்பனர்கள், அரசு வேலை என்று ஒன்று இருந்தால் தானே இட ஒதுக்கீடு என்ற பேச்சு வரும்? அனைத்தையும் தனியார் மயமாக்கி விட்டால் .....? பார்ப்பன முற்றுரிமை முறையைத் தொடரலாம் எனத் திட்டமிட்டனர். அதன்படி முடிந்த இடங்களில் எல்லாம் தனியார் மயத்தைத் திணித்தனர் / திணித்துக் கொண்டு இருக்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, தனியார் மயத்தின் கொடூர குணமான, இலாப வேட்டைக்காக மக்கள் நலனைக் காவு கொடுக்கும் தன்மை வளர்ந்தது / வளர்ந்து கொண்டு இருக்கிறது. அதன் விளைவாக ஆங்காங்கே விபத்துகள் ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

derailed
கடந்த 21.10.2015 அன்று பெருங்குடியில் இருந்து சென்னை கடற்கரைக்குச் சென்று கொண்டு இருந்த தொடர் வண்டி தீப்பற்றிக் கொண்டது.

இதே தடத்தில் 6.10.2015 அன்று கலங்கரை விளக்கம் நிலையம் அருகே வண்டி தடம் புரண்டது. மேலும் வண்டியில் தீப்பொறிகள் பறந்தன. இதைக் கண்ட பயணிகள் அவசர அவசரமாக வண்டியில் இருந்து கீழே குதித்தனர்.

இதே தடத்தில் 18.2.2015 அன்று பூங்கா நிலையத்திற்கு 20 மீட்டர் தொலைவில் வண்டி தடம் புரண்டது.

2.11.2011 அன்று கோட்டூர்புரம் நிலைய வாகன நிறுத்தப் பகுதியில் தீ பிடித்தது.

23.5.2003 அன்று திருமயிலைக்குச் சென்று கொண்டு இருந்த தொடர் வண்டி கோட்டை நிலையம் அருகே தடம் புரண்டது.

9.1.1998 அன்று திருமயிலை நிலையத்திற்கு அருகே வண்டி தடம் புரண்டது.

இவ்வாறு நடந்த விபத்துகள் அனைத்திற்கும் காரணம் என்னவென்றால், வேலை செய்வதற்குப் போதுமான எண்ணிக்கையில் ஊழியர்கள் இல்லாதது தான். இதைப் பற்றித் தொழிற் சங்கங்கள் பலமுறை முறையிட்டும், நிர்வாகத்தினர் கேளாக் காதினராகவே இருந்திருக்கின்றனர் / இருந்து கொண்டு இருக்கின்றனர்.

தொழிற் சங்கத்தினரின் கோரிக்கைகளைப் பற்றி நிருபர்கள் 22.10.2015 அன்று தெற்கு இரயில்வே பொது மேலாளரிடம் கேட்ட போது, இருப்புப் பாதைப் பராமரிப்புப் பணிக்காக 360 மின் கண்காணிப்பாளர்கள் (Electrical supervisors) ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக விடை அளித்து இருக்கிறார். இது மிக மிகக் குறைவு என்றும், போதிய அளவு ஊழியர்கள் இல்லாததால் தான் இது போன்ற விபத்துகள் நேர்கின்றன என்றும் தொழிற் சங்கங்கள் கூறுவதைப் பற்றி முற்றிலும் மவுனம் சாதித்து இருக்கிறார்.

இதே போன்று ஊழியர்கள் பற்றாக் குறை காரணமாகவும், இலாப விகிதத்தை மனதில் கொண்டு தேய்ந்து போன பேருந்துகளை இயக்குவதாலும் தமிழ் நாடு அரசு விரைவுப் பேருந்துகள் பல விபத்துக்குள்ளாகி உள்ளன. இதற்கும் உரிய விடையை அளிக்காமல் அரசு மவுனம் சாதிக்கிறது.

ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் அவர்களுக்கு உரிய அதிகாரத்தில் ஒரு சிறு பகுதியைக் கூட அடைந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் பார்ப்பனர்கள் தனியார் மயத்தை ஊக்குவிக்கத் தொடங்கினர். முழுமையாகத் தனியார் மயமாக்க முடியாத இடங்களில் பகுதியைத் தனியார்களிடம் கொடுத்தனர் / கொடுத்துக் கொண்டு இருக்கின்றனர். இலாபம், அதிக இலாபம் என்பதைத் தவிர வேறு எதைப் பற்றியும் அக்கறை கொள்ளாத தனியார் துறை, ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதின் மூலமே தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முனைகிறது. அது விபத்துகளுக்கு வழி கோலும் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் தன் வழியில் பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

மக்கள் இந்நிலையைத் தொடர அனுமதிக்கப் போகிறார்களா? அல்லது உழைக்கும் மக்களின் நலன்களை மட்டுமே முதன்மையாகக் கொண்டு இயங்கும் சமதர்ம அரசை அமைக்க அணியமாகப் போகிறார்களா?

- இராமியா

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 14.11.2015 இதழில் வெளி வந்துள்ளது)