- காட்டுமிராண்டிகளும், முட்டாள்களும்!
இந்த ஆண்டு 2017- தைப் பொங்கலின்போது ஏறு தழுவுதல் போட்டிகள் நடத்துவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து அனுமதி அளிக்கும் என்று மத்திய அரசுக்கான தமிழக ஆள்காட்டியான பொன்.ராதாகிருட்டிணன் தொடர்ந்து பேசி வந்தார். இதை நாமும் நம்பி வந்தோம். ஆனால் ஏறுதழுவுதல் போட்டிக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்து இருப்பதால், நாங்கள் இதில் செய்வதற்கு ஏதுமில்லை என்று மத்திய அரசு கைவிரித்தது. மாநில அரசும் தான் செய்வதற்கும் ஒன்றுமில்லை என்றும், சட்டப்படி நடக்கப் போவதாகவும் அறிக்கை விட்டது.
தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலில் 2011-16 வரை ஜெயலலிதா இருந்தபோதும் கூட, கடந்த 2014-15 ஆகிய இரு ஆண்டுகளிலும் ஏறுதழுதல் போட்டிகள் நடைபெறவில்லை. போட்டிகள் நடப்பதற்கு இருந்த தடையை உடைப்பதற்கான உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவும் இல்லை.
ஜெயலலிதா உயிரோடு இருந்த போதும், இறந்த பின்னரும் எப்போதுமே அதிகாரமற்ற முதல்வராகவே இருந்து வரும் ஓ. பன்னீர்செல்வம் தன்னையும், தனது கட்சியையும், ஆட்சியையும் மத்திய பா.ஜ.க ஆட்சியாளர்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியுமா என்று தவித்துக் கொண்டிருந்த போதுதான், ஏறுதழுவுதல் தொடர்பான பிரச்சனையும் சேர்ந்து கொண்டது. ஆளும் கட்சியும், ஆட்சியும் வலுவான நிலையில் இருந்தாலும், மோடி அரசின் மிரட்டல்களை எதிர்கொள்ள முடியாத பலவீனமான அரசாகவே அது இருந்து வருவதால், ஏறு தழுவுதல் உட்பட எந்த விவகாரத்திலும் மத்திய அரசை நெருக்கும் திறன் அதற்கு இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போதே, அதிலும் நாடாளுமன்றத்தில் 50 உறுப்பினர்களை கொண்டு 3-வது பெரிய கட்சியாக உள்ள அ.தி.மு.க, ஏறு தழுவுதல் போட்டியை நடத்துவதற்கு மத்திய அரசை நெருக்க முடியாமல் இருந்ததற்கான காரணம், இப்பிரச்சனை உச்ச நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று சொல்லப்பட்டது. எனவே இந்த வாதத்தை மற்றவர்களால் சட்டப்பூர்வமாக மறுக்க இயலவில்லை.
மொத்தத்தில் ஏறுதழுவதல் போட்டி நடைபெறாமல் இருப்பதற்கான பழி முழுவதும் உச்ச நீதிமன்றத்தின் மீதும், அதற்குத் தடை வாங்கிய பீட்டா என்ற பன்னாட்டு அமைப்பின் மீதும் திருப்பி விடப்பட்டது. காளைகளை காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகளின் பட்டியலில் சேர்த்து விட்டு, அதை நீக்காமல், அப்படியே தொடர விடும் மத்திய அரசின் செயலையும், இதைப்பற்றி அம்பலப்படுத்தாத மாநில அரசின் மவுனத்தையும் பற்றி கவனமாகத் தவிர்த்து வந்தனர்.
இதன் மூலம் மத்திய, மாநில அரசுகள் மக்களின் கோபத்தில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொண்டு, நம்மைத் தொடர்ந்தும் ஏமாற்றி, திசை திருப்புவதற்கான சிறந்த உத்தியாகவே கடைபிடித்து வந்துள்ளனர். இதனோடு உச்சநீதிமன்றமே இந்திய அரசியல் சட்டத்தின் தலைமைக் காவலன் என்றும், அதன் உத்தரவை சட்டப்படி இயங்கும் ஜனநாயக அரசுகளான, மத்திய, மாநில அரசுகளால் ஒரு போதும், எந்த நிலையிலும் மீற முடியாது, மீறவும் மாட்டோம் என்றும் ஆட்சியாளர்கள் காட்டிக் கொண்டனர்.
மத்திய, மாநில அரசுகளின் இந்த வாதத்தை, கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்பவர்களும் அது உண்மைதான் என்று நம்புவதாக பாவனை செய்து கொள்பவர்களும் மத்திய, மாநில அரசுகளை குறை சொல்வதற்கான, குற்றம் சுமத்துவதற்கான தார்மீக பலம் எவருக்கும் இல்லை என்று நம்மிடையே போதித்தனர்.
ஆனால் இந்த சட்டவாதத்தை என்னவென்று அறியாதவர்களும், இதை நம்பாதவர்களும் எதைச் செய்தாவது ஏறுதழுவுதல் போட்டியை நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து அனுமதி வழங்க வேண்டும். அப்படி அனுமதி வழங்காவிட்டால், அதை மீறிப் போட்டியை நடத்தியே தீருவோம் என்று தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினர்.
அடிப்படையில் இந்த இரண்டாவது பிரிவினைரைத்தான் காட்டுமிராண்டிகள், முட்டாள்கள் என்றே ஆட்சியாளர்களும், நீதிமன்றங்களும் பார்க்கின்றனர். இதுதான் சட்டப்படியான பார்வை என்றும், அவர்கள் தம்மை நியாயப்படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல, இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றும், இந்த நாடு சட்டப்படி இயங்கும் கட்டமைப்பை உடையது என்றும் பாசாங்கு செய்து கொள்பவர்களும் கூட, பெரும்பான்மை மக்களாகிய நம்மை காட்டுமிராண்டிகள், முட்டாள்கள் என்றே எப்போதும் ஏளனம் செய்வது அவர்களின் அன்றாட செயல்களாகும்.
நீதிமன்றங்கள், ஆட்சியாளர்கள், அறிவாளிகள் இவர்கள் அனைவருமே காகிதத்தில் எழுத்தாக உள்ள சட்டங்களையும், சட்டப் பிரிவுகளையுமே தமக்கான ஆதாரங்களாக நம்மிடம் மனப்பாடம் செய்து ஒப்பிக்கிறார்கள். இப்படி ஒப்பிக்கப்படும் சட்டங்களுக்கும், நடைமுறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் காட்டுமிராண்டிகளாலும், முட்டாள்களாலும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
இந்தியாவில் உள்ள எந்தவொரு சட்டமும், லஞ்சம், ஊழல், முறைகேடுகளை சரி என்று எங்கேயும், அங்கீகரிக்கவில்லை. இவைகளை சட்ட விரோதமான செயல்கள் என்று தான் சொல்லுகின்றன. ஆனால் நடைமுறையில் இவைகள் நாட்டின் மூலைமுடுக்கு, சந்து, பொந்து என்று எந்த இடத்திலும் இல்லாமல் இல்லை. உண்மையில் இவைகள்தான் நாட்டில் எல்லா இடங்களிலும் அணு, அணுவாக ஆட்சி செய்கிறது; நீக்கமற நிறைந்து கிடக்கிறது.
இந்த எதார்த்த உணர்வாளர்கள் ஒரு லட்சம்பேர், அலங்காநல்லூரில் ஜனவரி – 16-ல் காணும் பொங்கல் அன்று ஒன்று கூடினார்கள். தமது உணர்வுகளை கோரிக்கைகளாகவும், வாடிவாசல் திறக்கும் வரை வீட்டு வாசலை மிதிக்க மாட்டோம் என்றும் முழக்கமிட்டார்கள். உச்சநீதிமன்றத் தடையை மீறி கோரிக்கையை முன்வைப்பது கூட சட்ட விரோதம் என்று தமிழக அரசு தனது அடியாட் படையான போலீசு மூலம் அடக்குமுறையை ஏவியது. தடியடி நடத்தி 200 பேரைக் கைது செய்தது. போலீசின் இந்த சட்டப்பூர்வ(!) நடவடிக்கையை எதிர்த்துதான் சென்னை மெரினா கடற்கறையில் சட்டவிரோதமாக மாணவர்களும், இளைஞர்களும் 500 பேர் ஜனவரி 17-ம் தேதி திரண்டனர். சில மணி நேரங்களில் இந்த எண்ணிக்கை பத்து மடங்காக அதிகரித்தது. அடுத்த சில தினங்களில் இந்த எண்ணிக்கை ஐந்து லட்சத்தைத் தொட்டது.
இவர்களிடம் தமிழக போலீசு கலைந்து போகச் சொன்னது. போராட்டக்காரர்கள் இதை ஏற்க மறுத்தனர். முதல்வரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தனர். 'சின்னம்மா, சின்னம்மா ஓ.பி.எஸ் எங்கம்மா' என்ற நையாண்டி முழக்கம் ஐந்து லட்சம் பேர்களின் தொண்டைக் குழிகளில் இருந்து வெளியே வந்து விண்ணை முட்டியது. இதன் பின்னர் ஜனவரி - 17 இரவு, முதல்வருக்குப் பதில் தமிழக அமைச்சர்கள் டி.ஜெயக்குமாரும், கே.பாண்டியராஜனும், போலீசு சொல்லிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து வந்து ஒப்பித்ததை மெரினா போராளிகள் நிராகரித்தனர்.
அலங்காநல்லூரில் பற்றிய தீ சென்னையில் மட்டுமல்ல, மாநிலமெங்கும் பற்றிப் படர்ந்தது. இந்த எழுச்சிக்கெதிராக தமிழக அரசு குறிப்பிடத்தக்க அளவுக்கு எதிர்வினையாற்றாததன் விளைவாக ஒவ்வொரு நாளும் மக்களின் கூட்டம் அதிகரித்தது. இப்போது மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமல்ல பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் குடும்பம், குடும்பமாக எழுச்சியின் சுவையை சுவைத்து மகிழ அலை, அலையாய் திரண்டு வந்தனர்.
தமிழகத்தில் இருந்த அனைத்து இளம் காட்டுமிராண்டிகளும், படித்த முட்டாள்களும், தீவிரவாதிகளும், வேறுபாடின்றி ஒன்று திரண்டார்கள். இவர்களுக்கு வயது முதிர்ந்த அனைத்து சமூக விரோத சக்திகளும் ஆதரவு தந்தனர். தமிழன் என்று தன்னை கருதிக்கொள்ளும் ஒவ்வொருவரும் உலகெங்கிலும் இருந்து தனது ஆதரவுக் கரத்தை நீட்டினார்கள். களத்தில் திரண்டவர்கள் மட்டுமல்ல, தத்தமது வீடுகளில் இருந்தவர்களும் அங்கிருந்து ஆர்ப்பரித்தனர், உரக்க முழக்கமிட்டனர். போராட்டக் களத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த அரசியல்வாதிகளை கட்டிளம் காளையர் திருப்பி அனுப்பினர். இப்படி விரட்டப்பட்டவர்கள் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவியாய்த் தவித்தார்கள். பல்லைக் கடித்துக்கொண்டு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். சிலர் போராட்டத்தின் நோக்கத்தையும் பின்னணியும் பற்றி சந்தேகம் எழுப்பினர்.
1965-ல் மாணவர்கள், இளைஞர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை திமுக பயன்படுத்திக் கொண்டு ஆட்சிக் கட்டிலை பிடித்ததைப் போன்று, இந்த போராட்டத்தை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க மாட்டோம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கொக்கரித்தனர்.
துள்ளலும், துடிப்பும், கொக்கரிப்பும் சில போலீசாரையும் வசீகரித்தது. மக்களை சந்திக்கும்போதும், எதிர்கொள்ளும் போதும் மனித உணர்வுகள் எதையுமே வெளிக்காட்டக் கூடாது என்று பயிற்சியின்போது தாங்கள் கற்றுக் கொண்டதையும் மீறி சிலர் சிரிக்கவும், முழக்கமிடவும் செய்தனர்.
இப்படிப்பட்டவர்கள் காவல் துறையில் விதிவிலக்குகள் என்றாலும், இவர்கள் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றினார்கள். ஆர்ப்பாட்டக்காரர்களின் உணர்வைக் கொழுந்து விட்டு எரியச் செய்தனர். தமிழனாய்ப் பிறந்த அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டோம் என்ற முழக்கம் விண்ணை முட்டியது. எங்கும், எங்கெங்கும் உற்சாகம் கரை புரண்டோடியது.
2. நாட்டு மாடுகளும், ஏறு தழுவுதலும்!
ஏறு தழுவுதல் என்பது ஒரு குறிப்பிட்ட சாதியின் பண்பாடாக மட்டுமே காலம், காலமாக இருந்து வந்துள்ளது. இது மற்றவர்களுக்கு பார்த்து ரசிக்கும் விளையாட்டு மட்டுமே ஆகும். தமிழகத்தில் ஏறு தழுவுதல் என்பது ஒரு பிரிவினரின் சொத்தாக இருந்தவரை மட்டுமே, அந்த பாரம்பரிய பண்பாட்டை தாக்கி முடக்குவது பாரப்பனிய, ஏகாதிபத்திய சக்திகளுக்கு எளிதான செயலாக இருந்தது. 2002-ம் ஆண்டிலிருந்து 2016 வரை பத்தாண்டு காலமாக இதை நாம் அனைவரும் பார்த்துதான் வந்தோம்.
ஏறு தழுவுதலுக்கு, தடை வாங்கியவர்கள் அது மிருக வதையென்று தமது செயலை நியாயப்படுத்தினார்கள். பல நூறு ஆண்டுகளாக இவர்கள் மிருக வதையென்று சொல்லும், ஏறு தழுவுதல் என்ற பண்பாடு அவைகளை அழித்துவிடவில்லை. மாறாக அவைகளை செழிக்கவே வைத்தது. இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின்பும் கூட தமிழகத்திலும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் விவசாயத்தோடு தொடர்புடைய பாரம்பரிய பண்பாடுகள் சட்ட விரோத தன்மை கொண்டவைகளாக பார்க்கப் படவில்லை. இந்த பாரம்பரிய பண்பாடுகள் மக்களால் மட்டுமல்ல, ஆட்சியாளர்களாலும் பெருமிதத்தின் அடையாளமாகவே விளங்கி வந்தன.
ஆனால், அந்த பாரம்பரிய பண்பாடுகள் 21-ம் நூற்றாண்டு துவங்கியதற்கு பின்னர் ஒவ்வொன்றாக ஆட்சியாளர்களுக்கு கசக்க துவங்கியதின் அடையாளமே காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகளின் பட்டியலில் காளைகளை சேர்த்த நடவடிக்கை ஆகும். காளைகள் விவசாயிகளின் வாழ்வியலோடும், உணர்வுகளோடும் பிரிக்க முடியாத அங்கங்களாக இருப்பவைகள். இவைகள் விவசாயத்தில் வகித்து வந்த பங்கு பெருமளவு குறைந்து போனாலும், இன்னமும் கூட அவைகள் விவசாயிகளின் வாழ்வியலோடும், அதனால் அவர்களின் பண்பாட்டோடும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியே வருகின்றன.
காளைகள் நிலத்தை உழுவதில் இருந்தும், வண்டிகளை இழுப்பதில் இருந்தும் பெருமளவு அகற்றப் பட்டு அந்த இடத்தை பன்னாட்டு நிறுவனங்களின் மோட்டார் வாகனங்கள் ஆக்கிரமித்துக் கொண்டு வி்ட்டன.
மனிதர்களின் பால் தேவையை ஈடுகட்டி வந்த நாட்டு மாடுகளின் இடத்தை வெளிநாட்டு மாடுகள் பிடித்துக் கொண்டு விட்டன. மாடுகள், நாய்களைப் போன்றோ, பூனைகளைப் போன்றோ சமூகத்தின் மேட்டுக் குடியினரால் வளர்க்கப்படும் செல்ல பிராணிகள் இல்லை. இவைகள் உழவர்களின் வாழ்வாதாரத்தோடு பிரிக்கமுடியாத அங்கங்களாக இருந்து வந்தவை, வருபவைகள். உழவனின் வாழ்வாதாரத்தில் இருந்து எந்த அளவிற்கு அவைகள் விலக்கி வைக்கப் படுகின்றனவோ, அந்த அளவிற்கு அவைகள் அழிந்து போவதும் தற்செயலான நிகழ்வுகள் இல்லை!
விவசாய உற்பத்தியில் கால்நடைகளின் பங்கு பெருமளவு குறைந்து போனதால், இப்போது அவைகள் ஏறு தழுவுதல் போன்ற பண்பாட்டு அடையாளங்களின் மூலமே உயிர் வாழ்ந்து வருகின்றன. உண்மையில் இந்த விலங்குகளை பாதுகாக்க எவரேனும் உண்மையிலேயே உள்நோக்கம் இன்றி மனதார விரும்பினால் அவற்றின் பயன்பாட்டை அதிகரிக்க செய்யும் நடவடிக்கைகளில்தான் ஈடுபட வேண்டும். இதற்கு நேர்மாறாக ஏறு தழுவுதல் உள்ளிட்ட பாரம்பரிய பண்பாடுகளை சட்ட விரோதமாக ஆக்குவதும், தடை செய்வதும் அவைகள் உயிர் வாழ்வதற்குமான எஞ்சியுள்ள குறைந்த அளவு வாய்ப்பையும் மறுக்கும் தந்திரமே ஆகும்.
ஏறு தழுவுதலை சட்ட விரோதமாக ஆக்குவது எப்படியான விளைவுகளை ஏற்படுத்துமோ, அதை போன்றதுதான், அவைகளை உணவுக்காக பயன்படுத்துவதை தடை செய்வதுமாகும். இந்தியாவில் பல மாநிலங்களில், மாடுகளை உணவுக்காக பயன்படுத்துவதை சட்ட விரோத செயலாக ஆக்கியுள்ளனர். தமிழகத்திலும் கூட தடைசெய்யப்பட்டு பின்னர் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின்னர் அந்த தடை விளக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம்.
இப்படி மாடுகளை உணவுக்காக பயன்படுத்துவதை புனிதம் என்ற பெயராலும், அவைகளை காப்பது என்ற பெயராலும் இதைச் செய்வோர் நியாயப்படுத்த முனைகின்றனர். ஆனால் எந்த ஒரு பொருளுக்கும், எந்த அளவிற்கு அதன் தேவை அதிகரிக்கிறதோ, அந்த அளவிற்கு அதற்கான உற்பத்தியும் பெருகவே செய்யும். எந்த அளவிற்கு அவற்றின் பயன்பாடு குறைக்கப் படுகிறதோ, அல்லது தடுக்கப்படுகிறதோ, அப்போது அதன் உற்பத்தியும் குறைந்து போகும். கால்நடைகளை உணவுக்காக பயன்படுத்துவதன் மூலம் அதன் வளர்ப்பும், எண்ணிக்கையும் அதிகரிக்குமே அன்றி குறைந்து போகாது என்பதற்கு ஆடுகளே சிறந்த ஆதாரமாகும்.
உலகில் அனைத்து உயிரினங்களிலும் ஆணும், பெண்ணும் சரிசமமான விகித்திலேயே பிறக்கின்றன. இதில் மாடுகளுக்கும் எந்த விதி விலக்கும் இருப்பதில்லை. அப்படி பிறக்கும் கன்றுகளில் கிடாரிகள் பாலுக்காக வளர்க்கப்படுகின்றன. காளைகள் ஐந்தில் இருந்து பத்து விழுக்காடு அளவுக்கு மட்டுமே இனப்பெருக்கம், வண்டியிழுத்தல், ஏறு தழுவுதல் போன்றவைகளுக்காக இப்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. எஞ்சிய 90 விழுக்காட்டு காளைகளை விவசாயிகள் என்ன செய்ய முடியும்?
பசுவதை கூடாது என்பவர்கள் அவைகளை பாதுகாப்பதற்காக மடங்களை அமைக்கிறார்கள். காளைகளுக்கு அவர்களால் மடம் அமைக்க முடியுமா? அப்படியே மடம் அமைத்தாலும் விவசாயிகள் தமது கன்றுக் குட்டிகளை இனாமாக தர முடியுமா? இந்தியாவில் முற்றிலும் லாபம் இல்லாத தொழிலாக விவசாயம் ஆக்கப்பட்டு விட்ட பின்னரும் கூட, விவசாயிகளில் பெரும்பாலோர் தற்கொலை செய்து கொள்ளாமல் இருப்பதற்கு, கால்நடைகளில் இருந்து வரும் சிறிதளவு வருமானமே அடிப்படையாகும். உழவனின் உயிரையே காக்கின்ற அந்த வருவாயை எதற்காக அவன் தியாகம் செய்ய வேண்டும்? பசுக்களை புனிதமாக்குவோரின் செயலை அவர்கள் செய்துவி்ட்டு போகட்டும். நாங்கள் அதை எப்போதும் நாங்கள் தடுத்ததில்லை. அப்படி செய்வதற்கு எமக்கு உரிமை இல்லாததைப் போன்றே, கால் நடைகள் எமது வாழ்வாதரமாக உள்ளதை மறுப்பதற்கும், இவ்வுலகில் எவனுக்கும் உரிமையில்லை.
காளைகளை உணவுக்காக பயன்படுத்தக்கூடாது என்பவர்கள் விவசாயிகளிடம் இருந்து அவற்றை விலைக்கு வாங்கவும், பராமரிக்கவும் தயாரா? இது எதுவுமே நடை முறை சாத்தியமற்றதாகும்.
எனவே, உணவுக்காக மாடுகளை பயன்படுத்தக்கூடாது என்பது, அவைகளை அழிவுக்கே இட்டுச் செல்லும். மனிதர்கள் பெண் சிசுக்களை கருவிலேயே கலைத்து விடுவதைப் போன்று, கிடா கன்றுகளை கருவிலேயே கலைத்து விடும் தொழில் நுட்பத்தை உருவாக்கினாலும், அதுவும் கால்நடை வளர்ப்போரின் நலன்களுக்கு எதிரானதே ஆகும்.
பிறந்த கன்றுக் குட்டி காளையா, கிடாரியா என்பதைப் பற்றி அற்ப மனிதர்களைப் போன்று, பசுக்களுக்கு எந்த கவலையும் இல்லை. அது எதுவாக இருந்தாலும் கன்றுக்குட்டி தன்னிடம் பால் ஊட்டினால் தான் பசு பால் சுறக்கும். காளையை கருவிலேயே களைக்கும் தொழில் நுட்பம் அதை உருவாக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அதை நாட்டிற்குள் அனுமதிக்கும் ஆட்சியார்களுக்கும் ஆதாயமே தவிர விவசாயிகளுக்கு இல்லை. ஐம்பது விழுக்காட்டு கருவை களைப்பதினால், அதற்காக நாங்கள் செலவழிக்கும் தொகையோடு, பால் உற்பத்தியையும் இழந்து போவதற்கு உழவர்களுக்கு என்ன கிறுக்கா பிடித்திருக்கிறது! ஒரு முறை பசுவின் கருவை கலைத்துவிட்டு மறுமுறை அது கருவுறுகிற வரை, அவைகளை பராமரிப்பதும், உணவளிப்பதும் பாதுகாப்பதும் எத்துனை சிரமத்தை உள்ளடக்கியது என்பதை வெறுமனே பேசுபவர்களுக்கு வேண்டுமானால் எளிமையானதாகவும், தெரியாத ஒன்றாகவும் இருக்கலாம். அதை வளர்ப்பவனுக்குத்தான் தெரியும் அதன் அருமை!
எனவே மாடுகளை உணவுக்காக பயன்படுத்தக் கூடாது என்பதும், நாட்டு மாட்டினங்களை அழிவை நோக்கி தள்ளிவிடும் மற்றுமொரு சதியே ஆகும்.
3. ஏறு தழுவுதலுக்கான தடையும், பன்னாட்டு நிறுவனங்களும்!
வெறுமனே முப்பது விநாடிகள் மட்டுமே ஏறுதழுவுதல் நிகழ்வில் காளைகளைப் பங்கேற்க வைப்பது, அவைகளை வதை செய்வது என்றால், டன் கணக்கில் வண்டிகளில் ஏற்றப்படும் பாரத்தை, மணிக் கணக்கில் காளைகளை இழுக்க வைப்பது ஆயிரம் மடங்கு அதிக சித்ரவதை இல்லையா? அதே போன்றுதான் நிலத்தை உழுவதற்காக பயன்படுத்துவதும் காளைகளை சித்ரவதை செய்வதுதானே?
எந்த வகையில், எந்தக் கோணத்தில் பரிசீலித்தாலும் ஏறுதழுவுதலை தடை செய்வது பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அவர்களிடம் ஸ்பான்சர் பெறும் முதலாளிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஆதாயமே தவிர, நமது காளைகளுக்கு மட்டுமல்ல, நமக்கும் அது இழப்பையே ஏற்படுத்தக்கூடியது என்பது அய்யத்திற்கு இடமில்லாத உண்மையாகும். எனவே காளைகளை காட்சிப்படுத்தக் கூடாத பட்டியலில் சேர்த்த அரசின் செயலும், அதற்குத் துணை போகின்ற வகையில் ஏறுதழுவுதலுக்கு தடைவிதிக்கின்ற நீதிமன்றங்களின் செயலும் தெளிவான திட்டமிட்ட சதியே ஆகும்.
எதற்காக ஆட்சியாளர்கள் இத்தகைய சதிச் செயல்களில் ஈடுபட வேண்டும்? உச்சநீதிமன்றம் இதற்கு ஏன் துணை போக வேண்டும்? இதனால் இவர்களுக்கும், நாட்டிற்கும் என்ன நன்மை இருக்கிறது? இவை போன்ற செயல்களை ஆட்சியாளர்கள் நாட்டின் நலன்களுக்காகத்தான் செய்கிறார்களா? நாட்டு மக்களை விலங்குகளாகப் பார்க்கும் இவர்கள்தான், விலங்குகளை பாதுகாக்கப் போகிறார்களா?
நாம் முன்னமே பார்த்ததைப் போன்று நமது பாரம்பரிய மாட்டினங்கள் விவசாயத்திலும், விவசாயத்தோடு தொடர்புடைய தொழில்கள், பால் உற்பத்தி ஆகியவற்றிலிருந்தும் எந்த அளவுக்கு வலுக்கட்டாயமாக வெளியேற்றப் படுகின்றனவோ அந்த அளவுக்கு, அந்த இடங்களை பன்னாட்டு நிறுவனங்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அவைகள் தமது மோட்டார் வாகனங்கள், வீரிய ரகம் என்ற பெயரில் தமது கால்நடைகள், பால், பால் பொருட்கள் ஆகியவற்றை, நமது தலையில் கட்டுவதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் கோடி ரூபாய்களை லாபமாக அள்ளிச் செல்லுகின்றனர். இப்படி கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை ஆட்சியாளர்களுக்கும், அதிகார வர்க்கத்திற்கும் விட்டெறிவதன் மூலம் காளைகளை காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் சேர்க்க வைத்துள்ளனர்.
கால்நடைகளில் மட்டுமல்ல, பாரம்பரிய விதைகள், இயற்கை சார்ந்த விவசாயம் அனைத்தும் அழிக்கப்பட்டு, அந்த இடங்களில் பன்னாட்டு நிருவனங்களின் விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் அனைத்தையும் புகுத்தி, மொத்த விவசாயத்தையும், விவசாயத்தோடு தொடர்புடைய தொழில்கள், மருத்துவம், மக்களின் வாழ்வு அனைத்தையும் பெருமளவிற்குத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டனர்.
எந்த அளவிற்கு விவசாயம் பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றதோ, அந்த அளவிற்கு அறுபது கோடி விவசாயிகளின் வாழ்வும், வாழ்வாதாரமும் அழிக்கப்பட்டு வருகிறது. இதன் வெளிப்பாடுகள் தான் விவசாயிகளின் தற்கொலைகள். உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது என்பது பழமொழி. உழுதவன் கணக்குப் பார்த்தால் உயிரும் மிஞ்சாது என்பதுதான் புது மொழி.
ஆனாலும், பன்னாட்டு நிறுவனங்களின் கோரப் பசி இன்னமும் அடங்கவில்லை. அவர்கள் நம்மிடம் மிச்சம், மீதியுள்ள வளங்களையும் கொள்ளையிடத் துடிக்கிறார்கள். எஞ்சியுள்ள வளங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், வளர்த்தெடுக்க வேண்டும் என்பதையும் நமக்கு நினைவூட்டுகின்ற விழுமியங்களாகத் திகழும் நமது பாரம்பரிய பண்பாடுகளையும், மொழியையும் அழித்து விடுவதன் மூலம் இதைச் சாதித்து விடப் பார்க்கிறார்கள். தமிழும், தமிழனின் பண்பாடும் பன்னாட்டு நிறுவனங்களின் முழு முற்றான ஆதிக்கத்திற்கு மட்டுமல்ல, இரண்டாயிரம் ஆண்டு காலமாக பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு எதிராகவும் சளைக்காமல் போராடுவதற்கான உயிராற்றலையும் நமக்கு வழங்கி வருகிறது. இதனால் தான் நமது பண்பாடுகள் பன்னாட்டு நிறுவனங்கள், பார்ப்பனிய சக்திகள் இருவருக்குமே பொது எதிரிகளாக ஆகிவிடுகிறது.
இதனால்தான் இவற்றை அழித்து விட இருவரும் இயல்பாக கூட்டு சேர்ந்து கொள்கிறார்கள். பொங்களுக்கான விடுமுறையை பார்ப்பனிய தீவிரவாத மோடி கும்பல் ரத்து செய்கிறது. பார்ப்பனிய மிதவாதக் கும்பலான காங்கிரஸ் காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகளின் பட்டியலில் காளைகளை சேர்த்ததை, பார்ப்பனியத்தின் தீவிரவாதக் கும்பலான பா.ஜ.க கோமாதா பாதுகாப்பு என்பதாக விரிவுபடுத்தி முசுலீம்களும், தாழ்த்தப்பட்டோரும், இதற்கு எதிரானவர்களாகக் காட்டுவதன் மூலம் ஏறுதழுவுதல் பண்பாட்டிற்கு ஆதரவான மக்களின் ஒருங்கிணைவைத் தடுத்துவிட முயற்சித்தது.
4.ஏறு தழுவுதலும், பண மதிப்பு நீக்கமும்!
பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களை அழிக்க முயலுவதோடு மட்டுமல்ல, நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரத்தையும் அவைகள் கொள்ளையிடுவதற்காகத்தான், உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் அறிவித்து நடைமுறைப்படுத்தினார்கள். டிஜிட்டல் பணமுறைக்கு மாற நம்மை நிர்பந்திக்கிறார்கள். இதன் மூலம் நாட்டின் 90- விழுக்காட்டு மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் முறைப்படுத்தப்படாத தொழில்கள் அனைத்தையும் நம்மிடமிருந்து பிடுங்கி பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கத் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரமும் நிச்சயமற்றதாக மாற்றப் பட்டுவிட்டது. இப்போது நமது அன்றாட வாழ்வே பெரும் சுமையாகிப் போனது.
ஆனாலும் ஆயிரமாயிரம் பிரிவினைகளால் பிரிந்து கிடக்கும் நம்மால், வலிமை மிக்க அரசுகளை என்ன செய்ய முடியும்? புலம்புவதைத் தவிர நம்மால் வேறு செய்வதற்கு என்ன இருக்கிறது? எதுவுமில்லை!
இந்த தருணத்தில்தான் பொங்கல் வருகிறது. பொங்கலுக்கான விடுமுறையை மத்திய அரசு ரத்து செய்கிறது. நமது நெஞ்சங்கள் குமுறுகிறது. ஏறுதழுவுதல் தடைக்கு எதிரான போராட்டம் சிறு பொறியாக அலங்காநல்லூரில் பற்றுகிறது. நடைமுறை வாழ்வில் ஆயிரமாயிரம் தடைகளால் காலம், காலமாகப் பிரிந்து கிடக்கும் நம்மை தமிழ் மட்டுமே - அதிலும் மாணவர்களையும், இளைஞர்களையும் - பொது எதிரிக்கு எதிராக ஒன்றுபட வைக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது. 1965-ல் இந்தியைத் திணிக்க முயன்ற மத்திய அரசு என்ற பொது எதிரிக்கு எதிராக ஒன்று திரண்டோம். இப்போது தமிழர்களின் ஒரு பிரிவினரின் பாரம்பரிய பண்பாட்டை எந்த சக்தி அழிக்கத் துடிக்கிறதோ, அதே சக்திதான் நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரத்தை பணமதிப்பு நீக்கம், டிஜிட்டல் பணமுறை ஆகியவற்றின் மூலம் அழிக்கப் பார்க்கிறது.
இப்போது நம் அனைவரின் பொது எதிரி கிடைத்துவிட்டான். அவனுக்கு எதிராக அணிதிரளுவதற்கான அடையாளம் கிடைத்துவிட்டது. ஒரு குறிப்பிட்ட சாதியின் பண்பாடாக மட்டுமே இருந்து வந்த ஏறுதழுவுதல், தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு ஏற்ப தைத் திருநாளில் மொத்த தமிழனின் பண்பாடாக பரிணாம வளர்ச்சி அடைந்தது.
அலங்காநல்லூரில் பற்றிய தீ தமிழகமெங்கும் பரவியது. அதிலும் இந்தத் தீ பெருநகரங்களில் கொழுந்து விட்டு எரியத் துவங்கியது.
விவசாயத்திற்கும், ஏறுதழுவுதலுக்கும் நேரடித் தொடர்பே இல்லாத பிரிவினரையும் கூட இந்தப் போராட்டம் வசீகரித்தது என்றால், இவர்கள் அனைவரின் எதிர்கால வாழ்வு மட்டுமல்ல, நடப்பு வாழ்வே பணமதிப்பு நீக்க நடவடிக்கைகளுக்குப் பின்னர் நிச்சயமற்றதாக ஆக்கப்பட்டுவிட்டது என்பதற்கு எதிரான எதிர்வினைதான் தமிழகமெங்கும் திரண்ட லட்சக்கணக்கானோரின் சங்கமமாகும்.
5. ஆட்சியாளர்களும், நமது பாமரத்தனமும்!
மத்திய, மாநில ஆட்சியாளர்களும், அவர்களின் கையாட்களும் இப்போராட்டம் ஏறுதழுவுதல் என்ற ஒற்றை கோரிக்கையைத் தாண்டி, பன்முகத் தன்மையை அடைந்து விடாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளைத் தொடங்கினார்கள். ஆட்சியாளர்கள் நேரிடையாகவும், உளவுத்துறையின் மூலமும் தேவையான ஆட்களை போராட்டக் களத்தில் ஊடுருவ வைத்தனர்.
மத்திய ஆட்சியாளர்களின் அடுக்கடுக்கான மிரட்டல்களில் இருந்து தப்பிக்க மாநில ஆட்சியாளர்களும், பணமதிப்பு நீக்கம் உள்ளிட்ட விவகாரங்களில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப மத்திய ஆட்சியாளர்களும், இப்போராட்டத்தை பயன்படுத்திக் கொள்வதற்காகத்தான் மாநிலம் எங்கும் மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் லட்சக்கணக்கில் திரளுவதை தடுக்காமல் அனுமதித்தனர். தமது கையாட்களையும், உளவாளிகளையும் கொண்டு போராட்டத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முயன்றார்கள். ஏறுதழுவுதல் என்ற ஒற்றைக் கோரிக்கைக்கு அப்பால் போராட்டம் விரிவடையாமல் தடுப்பதற்காக தம்மால் இயன்றது அனைத்தையும் இவர்கள் செய்து பார்த்தனர். இவர்கள் காந்திய வழி அறப்போராட்டத்தினால், உலகின் எந்த சக்தியையும் கட்டுப்படுத்தவும், வெற்றிகொள்ளவும் முடியும் என்று முழங்கினார்கள்.
பயிற்சியின் போதே மனித உணர்வுகள் காயடிக்கப்பட்டுவிடும் போலீசிடம் கூட அறவழிப் போராட்டங்கள் மனித உணர்வுகளை மீண்டும் துளிர்க்கச் செய்துவிடும் என்பதற்கான ஆதாரம்தான் ஒரு வாரமாக நமக்கு அவர்கள் பாதுகாப்பாக இருப்பது என்றெல்லாம், நமக்கு மெய் சிலிர்க்கும் வகையில் ஆடினார்கள், பாடினார்கள், வீர உரையாற்றினார்கள்.
இப்படிப்பட்ட கொம்பு சீவல்களால் போராளிகள் தலைகால் புரியாமல் ஆனந்தக் கூத்தாடினோம். ஒரு தலைமை, சித்தாந்தம், அமைப்பு என்று எதுவுமே இல்லாமல் ஆட்சியாளர்களையும், அதிகார வர்க்கத்தையும் தம்மால் கட்டுப்படுத்தவும், ஆட்டுவிக்கவும், அலற வைக்கவும் முடியும் என்று கற்பிதம் செய்து கொண்டோம். நம்மில் முதன் முறையாக போராட்டக் களத்திற்கு வந்த மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமல்ல சமூக நலன்களில் அக்கறையுள்ள, அதற்காக களத்தில் பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்றும் பல அமைப்பினரும் கூட, வாராது வந்த மாமணியாக வந்துள்ள இந்த எழுச்சியை தத்தமது லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான அரிய வாய்ப்பாகக் கருதி நமது பங்குக்கு கொம்பு சீவி விடும் பணியை மேற்கொண்டோம்.
'ஆள்வோரின் சூழ்ச்சிக்கு பலியாகி, களைந்து போய்விடக்கூடாது. இப்போது களைந்து போய்விட்டால் மீண்டும் ஒன்று சேரமுடியாது. இப்போதே ஏறுதழுவுதலுக்கு மட்டுமல்ல, காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளுக்குமான போராட்டமாகவும் இதை வளர்த்தெடுத்து விட வேண்டும். ஏறுதழுவுதல் போராட்டத்தைப் போன்றே ஏனைய கோரிக்கைகளும், தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் பொது கோரிக்கைகளாக இருப்பதால் மத்திய, மாநில அரசுகளை இந்தத் தருணத்தை பயன்படுத்திக் கொண்டு வினையாற்ற வைத்துவிட முடியும்' என்று கற்பிதம் செய்து கொண்டோம்.
இதன் உச்சகட்டமாக லஞ்சம், ஊழல், முறைகேடுகள், டாஸ்மாக், பணமதிப்பு நீக்கம், தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது உள்ளிட்ட அனைத்து அநீதிகளுக்கு எதிராகவும் இனி நாங்கள் வினையாற்றப் போவதாக ஆளுவோருக்கு சவால் விடத் தொடங்கினோம். எவ்வித ஆதாயத்தையும் எதிர்பாராமல் லட்சக்கணக்கில் குவிந்துள்ள நம்மை ஆட்சியாளர்களால் எதுவுமே செய்ய முடியாது என்று சினிமா பாணியில் வளமாக கற்பனை செய்து கொண்டோம். ஒவ்வொரு போராட்டக் களமும் விவாதக் களங்களாக மாறின. சமூகத்தில் நிலவும் அனைத்து அநீதிகளுக்கு எதிராகவும் கத்தியின்றி, ரத்தமின்றி உலகுக்கே முன்னுதாரணமான முற்றிலும் புதியதொரு யுத்தம் ஒன்றை தமிழக இளம் போராளிகள் தொடுத்திருப்பதாக சித்தாந்தவாதிகளாக தம்மை கருதிக் கொள்ளும் சிலர் வரிந்து கட்டிக் கொண்டு எழுதிக் குவித்தனர்.
இந்த களேபரங்களுக்கிடையே முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லிக்கு விரைகிறார். மோடியைச் சந்தித்து ஏறுதழுவுதல் போட்டி நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கோருகிறார். இந்த விவகாரம் உச்சநீதி மன்றத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மத்திய அரசு இதில் செய்வதற்கு ஏதுமில்லை என்று மோடி கை விரிக்கிறார்.
ஆனால், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்கி, 'மாநில அரசே இதற்கு அவசர சட்டம் கொண்டு வரலாம். அதற்கான அதிகாரம் அதற்கு இருப்பதாக' ஆலோசனை கூறுகிறார். மாநில அரசுக்கே ஏறுதழுதல் நடத்த அவசர சட்டம் கொண்டு வருவதற்கான உரிமை இருக்கிறது என்பதை இப்போதுதான் இவர்கள் கண்டுபிடித்தார்களா? கடந்த பத்து ஆண்டுகளாக இந்த உண்மை இவர்களுக்குத் தெரியாமல் இருந்ததற்கான மர்மம் என்ன? சரி டெல்லியில் வேண்டுமென்றே மறைத்து விட்டார்கள் என்றே வைத்துக் கொள்வோம்! தமிழகத்தில் இருக்கிற ஒரு வழக்கறிஞருக்குக் கூடவா இது தெரியாமல் இருந்திருக்கும்? அந்த அளவுக்கா நமது வழக்கறிஞர்கள் தத்திகளாக இருக்கிறார்கள்! எல்லாமும் ஒரே மர்மமாகத்தான் இருக்கிறது!
எப்படியோ ஒருவழியாக மாநில அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்கத் தேவையான நடவடிக்கைகளைத் தொடங்குகிறது. அவசர சட்ட வரைவு அறிக்கை ஜன- 20 அன்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்படுகிறது. அன்றே மத்திய சுற்றுச்சூழல், சட்டம், கலாச்சார அமைச்சகங்களின் ஒப்புதல் பெறப்படுகிறது. ஜன-21 ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசரம், அவசரமாக மும்பையிலிருந்து, சென்னைக்குப் பறந்து வருகிறார். அன்று மாலையே அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறது.
முதல்வர் பன்னீர்செல்வம் அலங்காநல்லூரில் ஏறு தழுவுதல் போட்டியைத் தானே தொடங்கி வைக்கப் போவதாக ஜனவரி - 22 அன்று மதுரைக்கு விமானத்தில் விரைகிறார். மெரினாவிலும், மாநிலமெங்கும் போராளிகளும், அலங்காநல்லூர் மக்களும் நிரந்தரச் சட்டம் இயற்றப்படும் வரை ஏறு தழுவுதல் போட்டியை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு முயற்சியை நிராகரிக்கின்றனர். ஜனவரி 23-ம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது என்றும் அதில் அவசர சட்டம், நிரந்தர சட்டமாக மாற்றப்படும் என்றும் முதல்வர் சொல்கிறார்.
'காளையை காட்சிப்படுத்தக் கூடாத பட்டியலில் இருந்து மத்திய அரசு இன்னமும் நீக்கவில்லை. இதன் காரணமாக 23-ம் தேதி திங்கள் அன்று தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் பீட்டா தடை வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அதற்குள் ஜனவரி 22-ம் தேதி ஞாயிறு அன்றே ஏறு தழுவுதல் போட்டியை நடத்தி மக்களைத் திசைதிருப்பி, தப்பித்துக் கொள்வதற்காகத்தான் தமிழக அரசு சதி செய்வதைப் போல் தெரிகிறது. எனவே மாநில அரசின் திட்டத்தை ஏற்க மாட்டோம்' என்று போராளிகள் அறிவிக்கின்றனர்.
ஏறு தழுவுதல் போட்டியை அவசர, அவசரமாக மக்களின் விருப்பத்தையும் மீறி திணிக்க முயலும் தமிழக அரசின் நடவடிக்கை மொத்த தமிழக மக்களின் எதிர்ப்பையும் சந்திக்கிறது. இதையும் மீறி போட்டியை நடத்துவது சாத்தியமில்லை என்பதைப் புரிந்து கொண்ட முதல்வர் பன்னீர் செல்வம் சென்னை திரும்புகிறார்.
ஜெயலலிதா இறப்பிற்குப் பின்னர் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற எத்தனித்த மோடிக்கும்பலிடம் இருந்து தப்பிக்க, ஏறு தழுவுதலுக்கு ஆதரவான போராட்டத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தமிழக அரசு, இப்போது போராட்டம் அந்த வரம்பையும் கடந்து பன்முகத் தன்மையைப் பெற்று, தனது அதிகாரத்திற்கே சவால் விடுவதாக மாறிவிட்டதை உணர ஆரம்பிக்கிறது.
பண மதிப்பு நீக்கத்தால் ஏற்பட்டுள்ள மக்களின் கோபத்தையும், எதிர்ப்பையும், திசைதிருப்பவும் தனது அடிப்படைக் கோட்பாடான பார்ப்பனிய கொள்கையின்படி, பசுவைக் கடவுளாக்கி, மாட்டுக்கறியை உணவாக உட்கொள்ளும் முஸ்லீம்கள், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு எதிராக போராட்டத்தை திசைதிருப்ப முயன்ற மோடி கும்பலால் இதில் எதையும் சாதிக்க முடியாமல் போனது மட்டுமல்ல, பார்ப்பனியத்திற்கு எதிரான போராட்டமாகவும் மாறிவிட்டதை மத்திய ஆட்சியாளர்கள் உணர்கின்றனர்.
ஒட்டுமொத்தமாக ஏறு தழுவுதலுக்கு ஆதரவான போராட்டம் முற்றாக மத்திய, மாநில அரசுகளின் அடிப்படைக் கொள்கைகளான பார்ப்பனியம், உலகமயம், பிழைப்புவாதம் உட்பட அனைத்திற்கும் எதிரான அடையாளமாக மாறி வருவதை அதிர்ச்சியுடனும், மிரட்சியுடனும் பார்க்கத் துவங்கின.
6. அறப்போராட்டமும், ஆட்சியாளர்களும்
கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக மக்களை ஒன்று சேரவிடாமல் பிரித்து வைப்பதற்கான வழிமுறைகளைக் கையாளுவதன் மூலமே ஆட்சியாளர்கள் தம்மை பாதுகாத்துக் கொண்டனர். இதற்கு நேர் எதிராக, மக்கள் விதி விலக்காக எப்போதெல்லாம் ஒன்று கூடுகிறார்களோ, அப்போதெல்லாம் தம்மைப் பிரித்து வைக்கும் எதிரியின் ஆயுதங்களை பலவீனப்படுத்தி விடுகின்றனர். அதே போன்றுதான் இம்முறையும் பிரிவினை சாதனங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, தமிழன் என்ற ஒற்றை அடையாளமே போராளிகள் அனைவரையும் ஒரு வாரகாலமாக கட்டிப் போட்டிருந்தது.
இப்படிப்பட்ட நேரத்தில்தான் ஏறு தழுவதல் போராட்டத்தை, ஒற்றை அடையாளத்திற்கு அப்பால் விரிவடையாமல் தடுப்பதற்காக, போராளிகள் மத்தியில் ஊடுருவி இருந்த ஆட்சியாளர்களின் கைக்கூலிகள், போராட்டத்தில் இருந்து தாங்கள் விலகிக் கொள்வதாகக் கூறி போராட்டத்தை காட்டிக் கொடுக்கின்றனர். அன்றாடம் நடந்து கொள்வதைப் போன்றே ஞாயிறு இரவிலும் சென்னையில் கணிசமானோர் தமது வீடுகளுக்கு சென்றிருந்தனர். அதிலும் குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் பெருமளவில் களத்தில் இல்லாமல் இருந்தனர்.
இத்தருணத்தில் ஜனவரி- 23 திங்கள் அதிகாலை 4 மணியளவில் மாநிலம் முழுக்க ஒன்று குவிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான போலீசார் சென்னை மெரினாவிலும், தமிழகத்தின் பெருநகரங்கள் அனைத்திலும் போராட்டக் களத்திற்குள் புகுந்தனர். பொது இடங்களில் போலீசு அனுமதி இல்லாமல் ஒன்றாக கூடுவது சட்டப்படி குற்றச் செயலாகும். எனவே ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் உடனடியாக கலைந்து செல்லுமாறு அச்சுறுத்தினர். அதிகாலை நேரத்தில் அரைத் தூக்கத்தில் அதிர்ந்து போன போராளிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றத் துவங்கினார்கள். மறுத்தவர்களின் மீது தடியடி நடத்தினார்கள். மெரினாவில் திரண்டிருந்தவர்களில் பெரும்பான்மையினரை சாலையின் பக்கம் விரட்டியடித்தனர்.
ஒரு சிறு பிரிவினர் மட்டும் கடலை நோக்கி ஓடினர். கடல் நீரில் இறங்கி தம்மை தற்காத்துக் கொண்டனர். சாலையின் பக்கம் விரட்டப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் பெரும்பாக்கம் மீனவர்கள் குடியிருப்பின் வழியே வந்து, கடலோரத்தில் ஏற்கனவே உள்ள போராளிகளோடு மீண்டும் இணைந்து கொண்டனர்.
இரவு நேரத்தில் தமது வீடுகளுக்கு சென்றிந்தவர்கள் செய்தி அறிந்து ஓடி வந்தாலும் கடற்கரைக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் போலீஸ் அடைத்து விட்டதால், இவர்களால் களத்தில் இருப்பவர்களோடு கைபேசி மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள முடிந்தது.
போராளிகளை, போலீஸ் விரட்டியபோது அவர்கள் மீனவ மக்களின் குப்பங்களில் சென்று தஞ்சமடைந்தனர். விடாது அவர்களை துரத்திச் சென்ற போலீஸ், போராளிகளுக்கு அடைக்கலம் தந்தமைக்காக மீனவ மக்களின் வீடுகள் மற்றும் வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தியதுடன் மக்களையும் மிக கோரமாகத் தாக்கி விரட்டியடித்தது. இப்பகுதிகளில் ஊடகங்கள் செல்ல முடியாததால் ஆர்ப்பாட்டக்காரர்களும், மீனவர்களுமே வன்முறையில் ஈடுபடுவதைப் போன்ற தோற்றத்தை ஊடகங்களின் மூலம் பரப்பியது. போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து விட்டதாக நடிகர் லாரன்ஸ் போன்ற எட்டப்பர்கள் மூலம் வதந்திகளைப் பரப்பியது. தமிழகமெங்கும் போலீசின் இந்தச் செய்தியை மக்கள் அனைவரும் நம்பும் வகையிலேயே ஊடகங்களும் காட்சிகளை ஒலிபரப்பின.
இந்த களேபரங்கள் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கும்போதே, தமிழக சட்டசபையும் ஆளுநர் உரையுடன் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்று மாலை 5 மணி அளவில் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் ஏறு தழுவுதலுக்கான அவசரச் சட்டம், சட்டமாக ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
ஏறு தழுவுதலுக்கான சட்டம் நிறைவேற்ற பிறகு, அவசர சட்ட நகலுடன் மெரினாவிற்கு வந்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் போராளிகளிடம் சட்டத்தின் நம்பகத்தன்மை குறித்து விளக்கமளித்தார். இவரோடு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் குழுவும் விளக்கமளித்தது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி அரிபரந்தாமன், "அவசர சட்டத்தின் நகலைக் கூடத் தராமல், போராளிகளிடம் வந்து பேசுமாறு அரசு தரப்பில் இன்று காலை எனக்கு கோரிக்கை வைத்தனர். அதை நான் ஏற்க மறுத்து விட்டேன். பின்னர் விதிகளடங்கிய நகலை மட்டும் எனக்குத் தந்தனர். ஆனால் அவசர சட்டத்தின் முழுமையான நகலைத் தந்தால் தான் நான் வருவேன் என்று மீண்டும் நிராகரித்தேன். அதன் பின்னர் அவர்கள் என்னை மீண்டும் தொடர்பு கொள்ளவில்லை. பின்னர் அதிகாரப்பூர்வமற்ற வகையில் அவசர சட்டத்தின் நகலைப் பெற்று படித்து விட்டுதான் இப்போது மாணவர்கள், இளைஞர்களிடையே அச்சட்டத்தின் தரம் மற்றும் நம்பகத்தன்மை பற்றி விளக்கமளித்தேன்.
எனவே தமிழக அரசின் வெளிப்படைத் தன்மை இல்லாத அணுகுமுறையே, இச்சட்டத்தின் மீதான நம்பகத்தன்மை குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சந்தேகப்படுவதற்கான வாய்ப்பாக அமைந்து விட்டது. தமிழக அரசு பொறுப்புடன் நடந்து கொண்டிருந்தால் போராட்டத்தை மாணவர்கள் அமைதியாக முடித்துக்கொண்டு கலைந்து சென்றிருப்பார்கள். இப்போது ஏற்பட்டுள்ள அனைத்து அசம்பாவித சம்பவங்களுக்கும் தமிழக அரசே முழுக் காரணம்" என்பதையும் சுட்டிக் காட்டினார்.
நீதிபதி அரிபரந்தாமன் மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் விளக்கங்களை ஏற்றுக் கொண்ட போராளிகள், தங்கள் மீது போலீஸ் எவ்வித வழக்கும் தொடுக்கக்கூடாது என்ற முன் நிபந்தைனைகளுடன் போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெறுவதாக அறிவித்தனர்.
7. போலீசும், அவற்றின் இயல்புகளும்
ஆனால், அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு மாறாக போலீஸ் அவர்களைத் தாக்கி, கைது செய்யத் துவங்கியது. இதனோடு மீனவ மக்களுக்கெதிரான போலீசின் கோரத் தாக்குதலைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போராளிகளில் 500 பேர் மீண்டும் கடற்கரைக்கே திரும்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் துவங்கினர்.
களைந்து சென்ற போராளிகளை, மீனவர்களின் குடியிருப்புகளுக்குள் விரட்டியடித்த போலீசு அவர்களைப் பிடிப்பது என்ற பெயரில் மீனவர்களின் குடியிருப்புகளில் நுழைந்து விடிய, விடிய தாக்குதல் நடத்தினர். அவர்களின் உடைமைகளை சூறையாடி, கொள்ளையடித்துச் சென்றனர்.
மறுநாள் ஜனவரி- 23 திங்கள் அன்று போலீசின் முந்தைய நாள் அட்டூழியங்கள் சமூக வலைதளங்களில் வெளியானபோது தமிழகமே அதிர்ந்து போனது. போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவிய காரணத்தினால்தான் அமைதியான போராட்டம் வன்முறையாக மாறியது என்று சென்னை மாநகர போலீஸ் ஆணையர் ஜார்ஜ் குறிப்பிட்ட, அந்த சமூக விரோதிகள் போலீசுதான் என்பது அப்போதுதான் அனைவருக்கும் புரிந்தது.
பொது இடங்களில் தாங்கள் அனுமதித்தால் மட்டுமே மக்கள் ஒன்று கூட முடியும் என்கிறது போலீசு தரப்பு. ஆனால் அமைதியான முறையில் போக்குவரத்திற்கும், ஏனைய பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தாமல் பொது இடங்களில் கூடி போராடுவதற்கு மக்களுக்கு உரிமையுண்டு. அப்படிப்பட்ட போராட்டங்களை வலுக்கட்டாயமாக கலைப்பதற்கு காவல் துறைக்கு உரிமையில்லை என்கிறது சென்னை உயர்நீதிமன்றம். அமைதியாகப் போராடியவர்கள் மீது பலப்பிரயோகம் செய்த போலீசின் செயலையும் வன்மையாகக் கண்டித்தது.
'ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்ட விரோதமாக பொது இடத்தில் கூடியிருந்தனர். அவர்களை கலைந்து போகச் சொன்னபோது, அதை அவர்கள் ஏற்க மறுத்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால்தான் போலீஸ் குறைந்த அளவு பலப்பிரயோகம் செய்தது' என்று தனது செயலை அது நியாயப்படுத்திக் கொள்ள முயன்றது. போலீசின் இந்த வாதத்தையே ஜனவரி- 27 அன்று தமிழக சட்டசபையில் முதல்வர் ஓ.பி.எஸ்-ம் தனது வாயால் அப்படியே கக்கினார்.
ஆனால், இதற்கு நேரெதிராக போலீசுதான் திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டது என்பதற்கான மறுக்கமுடியாத ஆதாரங்கள் இருந்தபோதும் இடைவிடாது போராளிகளையும், மீனவர்களையும் போலீஸ் தொடர்ந்து கைது செய்தே வருகிறது.
எவ்வளவுதான் ஆதாரங்கள் வெளிவந்தாலும், தங்களை ஒன்றும் செய்து விட முடியாது என்று பகிரங்கமாக போலீசார் கொக்கரிக்கின்றனர்.
போராட்டம் தொடங்கி 7 நாட்களாக அமைதியாக இருந்த போலீசா இவர்கள்!? என்று இப்படிப்பட்ட போராட்டங்களில் முதன் முறையாக பங்கேற்ற மாணவர்களும், இளைஞர்களும் அதிர்ந்து போய் உள்ளனர். இவர்கள் மட்டுமல்ல, ஒருவார கால போலீசின் நடவடிக்கையைப் பார்த்துவிட்டு அறப் போராட்டத்திற்கும், மக்கள் சக்திக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என்றெல்லாம் இறுமாந்து போயிருந்த பல்வேறு சமூக அமைப்பினரும் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர்.
இவைகளின் மூலம் நாம், மனித சமூகம், அதன் வரலாறு, ஆட்சி, ஆட்சியாளர்கள், போலீசு, மக்கள் சக்தி, மக்களின் ஏற்புத் திறன் மற்றும் தாங்கு திறன் என அனைத்திலும் எந்த அளவிற்குப் பாமரர்களாக உள்ளோம் என்பதை இவ்வுலகிற்கு அம்பலப்படுத்திக் கொண்டுள்ளோம். நாம் நமது வளமான கற்பனையையே மிகச் சிறந்த சித்தாந்தமாக கருதிக்கொண்டு, அதை மக்கள் மீது திணிக்க முயன்றதையே இப்போராட்டம் நமக்கு உணர்த்தியுள்ளது. ஆட்சியாளர்களும், போலீசும் அனுமதிக்கும் வரைதான் அறவழிப் போராட்டம் உயிரோடு இருக்கும் என்பதையும், ஆள்பவர்களின் ஆசி இல்லாமல், அதனால் மூச்சுவிடக்கூட முடியாது என்பதையும், இப்போராட்டம் நமது கன்னத்தில் ஓங்கி அறைந்து உரைத்திருக்கிறது. இந்த எதார்த்த உண்மை இன்று மட்டுமல்ல, இங்கு மட்டுமல்ல, உலகின் எல்லா இடங்களுக்கும் நீக்கமறப் பொருந்தும் என்ற உண்மையை வரலாறும், நடப்பு நிகழ்வுகளும் உணர்த்தியே வருகின்றன.
காந்தியின் அறவழிப் போராட்டத்தின் விளைவாகவே, இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறியதாக பாடங்களில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும், முன்பே அதைப் படித்து முடித்திருந்த இளைஞர்களுக்கும், ஏனைய மக்களுக்கும் ஏறு தழுவுதல் போராட்டத்தில் போலீசு நடந்து கொண்ட விதம், அறவழிப் போராட்டங்களைப் பற்றிய சிறந்த நடைமுறை அனுபவமாக விளங்கியது என்பதில் மிகையிருக்க முடியாது!
ஜனவரி -17ல் இருந்து ஜனவரி -22 வரை, ஒரு வார காலமாக அங்குலம், அங்குலமாக நம்மால் கட்டப்பட்ட கோட்டை, ஜனவரி – 23 அதிகாலை வேளையில் போலீசின் ஒரே ஒரு உதையில் ஒன்றுமில்லாமல் சரிந்து விழுந்தபோதுதான், நம் அனைவருக்கும் தெரிந்தது, நாம் கட்டிய கோட்டை கற்கோட்டையல்ல, மணல் கோட்டை என்பது! அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது, ஆனால் உண்மை அதுவாக இருக்கும் போது, அதை ஏற்பதைத் தவிர நமக்கு வேறு வழியென்ன இருக்கிறது!
ஏறுதழுவுதலுக்கு ஆதரவான நம்முடைய போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள், இப்போது எப்படி நாட்டின் அடிப்படையான விவகாரங்களில் நம்முடைய கவனத்தைத் திசை திருப்புவதற்காக பயன்படுத்திக் கொண்டனவோ, அதே போன்றுதான் அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்களும் போராட்ட களத்திலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக பயன்படுத்திக் கொண்டனர். எப்போதெல்லாம் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களின் கோபம் பீறிட்டு வெடித்ததோ, அப்போதெல்லாம் காந்தி தனது அறவழிப் போராட்டத்தை அறிவித்தார். எப்போதெல்லாம் மக்கள் அறவழி போராட்டங்களின் போது பீறிட்டு வெடித்தார்களோ, அப்போதெல்லாம் காந்தி தனது போராட்டங்களை திரும்ப பெற்றுக் கொண்டார்.
இந்தியா முழுவதற்குமே தன்னிகரற்ற ஒரே தலைவராக காந்தி விளங்கியதால், அவரால் நினைத்த நேரத்தில் போராட்டங்களை உருவாக்கவும் முடிந்தது, அவற்றை ஒன்றுமி்ல்லாமல் ஆக்கவும் முடிந்தது.
இரண்டாம் உலகப்போரும், அதில் ஆங்கில ஏகாதிபத்தியம் அடைந்த பலவீனமும்தான் இனியும் காலனி நாடுகளை ஆள முடியாது என்ற நெருக்கடியை அதற்கு ஏற்படுத்தியது; இந்தியா உள்ளிட்ட காலனி நாடுகளிலிருந்து பாதுகாப்பாக வெளியேறவும் வைத்தது. உண்மையில் இந்த நாட்டில் இருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறியதற்கு உலகில் யாருக்காவது நாம் நன்றி சொல்ல வேண்டுமானால் அதற்குரிய தகுதியான நபர், இரண்டாம் உலகப் போரை துவங்கிய ஜெர்மனியின் இட்லருக்குத்தான் நாம் சொல்ல வேணடும்!
பெரும்பான்மை மக்களின் சக்தியும், ஆற்றலும் ஆட்சியாளர்களின் நலன்களுக்கு எதிராக திரும்பி விடாமல் தடுப்பதே அகிம்சை, அறவழி ஆகியவைகளின் உண்மையான பணியும், கடமையுமாகும். அது தனது வரம்பை மீறுகின்ற அந்தக் கணமே, அதாவது ஆட்சியாளர்களின் நலன்களுக்கு எதிராக மக்களை உருவாக்குவதற்கான ஆயுதமாக மாற்றப்படும்போது என்ன ஆகும் என்பதற்கான ஆதாரமே தமிழக போலீசின் ஜனவரி - 23 கோரத் தாக்குதல்கள் ஆகும்.
இப்போது மட்டுமல்ல எப்போதுமே மக்கள் மீதான தனது ஒடுக்குமுறையை நியாயப்படுத்திக் கொள்வதற்கு போலீசு மிகவும் சாதாரணமாக அன்றாடம் கையாளும் சமூக விரோத நடவடிக்கைகளைத்தான் இப்போதும் கையாண்டிருக்கிறது.
இப்போது போன்று தொழில் நுட்பம் வளராத காலத்தில் போலீசின் சமூக விரோத செயல்களை கண்ணால் காண்பவர்கள் மட்டுமே ஆதாரங்களாக இருந்தார்கள். அவர்களைத் தவிர ஏனையோருக்கு அந்த உண்மைகள் சென்றடைவதற்கு வாய்ப்பில்லாமல் இருந்தது. அப்படி காண்பவர்களின் குரல், அன்றைய ஊடகங்களான, பத்திரிக்கை, வானொலி, தொலைகாட்சி ஆகியவை முழுமையாகவோ அல்லது பகுதி அளவிற்கோ ஆட்சியாளர்கள் மற்றும் ஆளும் வர்க்கங்களின் கைகளில் இருந்ததால் மிகவும் குறைவாகவோ அல்லது முழுமையாகவோ வெளியே வராமல் தடுக்கப்பட்டன.
ஆனால் ஏறு தழுவுதல் போராட்டத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்களை எந்த சமூக வலைத்தளங்கள் ஒருங்கிணைத்தனவோ, அவைகள் தான் போலீசின் சமூக விரோதச் செயல்களையும் இப்போது அடுக்கடுக்காய் வெளியே கொண்டு வந்து அம்பலப்படுத்தி இருக்கின்றன.
ஆனால், இதன் பின்னரும் கூட செய்தி ஊடகங்கள் போலீசின் ஒடுக்குமுறையை நியாயப்படுத்தும் செயல்களிலேயே தொடர்ந்து ஈடுபட்டும் வருகின்றன. மக்களுக்கும், மக்களின் உடைமைகளுக்கும் சேதம் விளைவிப்பது, ஒரு சில போலீசு தானே தவிர அனைவரும் இல்லை என்று நம்மை திசைதிருப்பப் பார்க்கின்றன. போராட்டக் களத்தில் கருப்பு ஆடுகள் இருந்ததைப் போன்றுதான் போலீசிலும் சில கருப்பு ஆடுகள் இருப்பதாகவும், இவைகளை தனி மனிதக் குற்றங்களாகவும் சித்தரிக்கின்றன.
போலீசின் வன்முறைப் பற்றி வெளியாகும் காட்சிகளோ, ஒரு சில போலீசாரின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு அடிப்படையிலான நிகழ்வுகளாக அல்லாமல், போலீசு துறையே நன்கு திட்டமிட்டு, ஒருங்கிணைக்கப்பட்ட செயல்கள் அவைகள் என்பதைத் தெளிவாக நிரூபிக்கின்றன.
இதற்கு முன்பு வரை போலீசார் எவ்வளவுதான் மக்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபட்டாலும், அதற்குப் போதுமான ஆதாரம் இல்லை என்று வழக்குகளை தள்ளுபடி செய்து நிராகரித்த நீதிமன்றங்கள், இப்போது அசைக்க முடியாத ஆதாரங்களைப் பார்த்துவி்ட்டு என்ன செய்யப்போகின்றன? ஆட்சியாளர்களின் உத்தரவுக்கு ஏற்ப, அறவழியில் போராடிய மக்கள் மீது வன்முறையை ஏவிய சமூக விரோத செயலுக்காக, போலீசு துறையையே நீதிமன்றங்கள் தண்டிக்கப் போகின்றனவா? ஆட்சியாளர்களின் கைகளில் விலங்குகளை மாட்டப் போகின்றனவா?
சென்னை உயர்நீதி மன்றத்திற்கு உள்ளேயே புகுந்து வழக்கறிஞர்களை மட்டுமல்ல, நீதிபதிகளின் மண்டைகளையே பிளந்த போலீசையே ஒன்றும் செய்ய முடியாத, போலீசின் தாக்குதல்களில் இருந்து தம்மையே காப்பாற்றிக் கொள்ள முடியாத நீதிமன்றங்கள்தான், மக்களை காக்கப் போகின்றனவா? கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பாருக்கு மதி எங்கே போனது என்ற பழமொழி தான் இந்நேரத்தில் நமது நினைவுக்கு வருகிறது!
அப்படியானால் இந்த அநீதிக்கு எதிராக நாம் என்னதான் செய்திருக்க முடியும்? எதிரியின் பலத்தை விட நமது பலம் அதிகமாக இருக்கும் போது முன்னேறி தாக்குவதை விட, எதிரியின் பலத்தைவிட நமது பலம் குறைவாக உள்ள போது, இழப்புகளை குறைத்துக் கொண்டு பின்வாங்குவதில் தான் சிறந்த தலைமைக்கான தனித்துவம் அடங்கியுள்ளது. போராட்டம் என்பது ஒருவழிப் பாதையல்ல. ஒவ்வொரு நொடிப்பொழுதும் மாற்றத்திற்கு உள்ளாகும் கள நிலைமைகளுக்கு ஏற்ப, அது மாற்றத்திற்கு உட்பட்டது. ஆனால் நாம் அப்படி சிந்திக்கத் தவறி விட்டோம்!
ஏற்கனவே உருவாக்கப்பட்ட, தயார் நிலை உத்திகளை, எந்தவொரு போராட்டத்திற்கும் அப்படியே பொருத்தி விட முடியாது. ஒவ்வொரு போராட்டக் களத்திற்கு ஏற்ப புதிய, புதிய உத்திகளை சிறிதும் தாமதிக்காமல் கையாளும் திறனும், ஆற்றலுமே சிறந்த போராட்ட தலைமைக்கான தகுதியாகத் திகழ முடியும்; வெற்றியை நோக்கி முன்னேற்றி கொண்டு செல்லவும் முடியும்.
போராட்டத்தை திறம்பட கொண்டு செல்ல வேண்டுமானால் போராட்டம், போராட்டக் களம் உட்பட அனைத்து அம்சங்களைப் பற்றியும் தெளிவான படிப்பினையும், புரிதலும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம் ஆகும். எதிரியின் பலம், பலவீனங்களை மட்டுமல்ல, அதைவிட முக்கியமாக தன்னுடைய பலம், பலவீனம் பற்றிய தெளிவு தவிர்க்கவியலாத தேவையாகும்.
இராணுவ ரீதியான களமாக இருந்தாலும் அல்லது அரசியல் ரீதியான களமாக இருந்தாலும் குறிப்பிட்ட பகுதியின் நில அமைப்பைப் பற்றிய புரிதல் மட்டுமே வெற்றிக்குப் போதுமானது அல்ல. அதனோடு அதைவிட முக்கியமாக குறிப்பிட்ட சமூகத்தின் வரலாறு, மக்களின் சமூக சிந்தனாமுறை வளர்ச்சி ஆகியவைகளைப் பற்றிய தெளிவும், புரிதலும் இல்லாத எவராலும், எக்காலத்திலும் எந்தவொரு போராட்டத்தையும் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொண்டு செல்லவே முடியாது.
முன்னணியாளர்களின் உணர்வுகளையே மக்களின் உணர்வுகளாக கருதிக் கொண்டு, மக்களின் ஏற்பு மற்றும் தாங்கு திறன்களைப் பற்றிய எவ்வித புரிதலும் இன்றி, அவைகளை மக்கள் மீது திணிப்பது, அவைகள் எதுவாக இருந்தாலும் நிராகரிப்பிற்கு உள்ளாவதும், திணிக்க முயலுபவர்கள் மக்களிடம் இருந்து தனிமைப் படுத்தப்படுவதும் எதிர்மறை விளைவுகள் இல்லை!
ஒரு சித்தாந்தம் இருந்தால் மட்டும் போதாது, அதை ஏற்றுக் கொள்பவர்களை ஒருங்கிணைக்கும், முறைப்படுத்தும், வழி நடத்தும் ஒரு தலைமையும் தவிர்க்கவியலாத தேவைகள் என்பதை மெரினா அனுபவம் நமக்குப் புகட்டியிருக்கிறது. எதார்த்தத்திற்குப் புறம்பான சினிமா கதாநாயக கற்பனா வளம் எதுவும் நடைமுறைக்கு உதவாது என்பதையும் நமக்கு அது உணர்த்தி இருக்கிறது.
விதிவிலக்குளை, விதிகளாக கற்பனை செய்து கொள்வது ஈடுகட்ட முடியாத இழப்புகளையே ஏற்படுத்தி விடும் என்பதையும் போராட்டக் களம் நமக்கு தகுந்த பாடமாக புகட்டி இருக்கிறது.
மனித உணர்வுகள் அனைத்தையும் முற்றாகக் காயடிப்பதுதான் போலீசு பயிற்சியின் சாரம். உருவத்தால் மட்டுமே மனிதர்களாக விளங்குவதுதான் சிறந்த போலீசுக்கான தகுதியாகும். இந்தத் தகுதி இல்லாதவர்கள் போலீசில் உள்ள விதிவிலக்குகள் மட்டுமே. அப்படியொரு விதிவிலக்குதான் மெரினாவில் போலீசு உடையிலேயே போராட்டத்தை ஆதரித்து உரையாற்றிய நபராவார்.
இப்படியான விதிவிலக்குகளைத் தவிர, வேறு எவரும் தம்மை நம்மில் ஒருவராக எந்த சந்தர்ப்பத்திலும் காட்டிக்கொண்டதே இல்லை. அவர்களை நம்மைப் போன்ற உணர்வுகளை உடைய மனிதர்களாக கருதிக்கொண்டது நம்முடைய தவறே தவிர, போலீசின் தவறல்ல. அவர்களே, அவர்களை மனிதர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளாதபோது, விரும்பாதபோது அவர்கள் மீது வலிய மனித உணர்வுகளைத் திணிக்க முயன்றது நம்முடைய குற்றமே தவிர, போலீசின் குற்றம் இல்லை.
இந்த உண்மை இதுநாள் வரை நமக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். இப்போது போராட்டக் களம் நமக்கு அதை தெரிய வைத்துவிட்டது. இனிமேலும் அப்படி ஒரு தவறை ஒருக்காலும் நாம் செய்யக்கூடாது என்று கருதினால், உருவத்தில் மட்டுமே மனிதர்களாக உள்ள போலீசின் மீது வலிய மனித உணர்வுகளை திணிப்பதை நிறுத்திக் கொள்வோம். உண்மையிலேயே நாம் முரணற்ற மனிதர்களாக வாழ விரும்பினால், உருவத்தில் மட்டுமல்ல உணர்வுகளாலும் மனிதர்களாக வாழ விரும்புவோமேயானால், போலீசு வேலைக்குச் செல்லும் கனவுகளை களைத்திடுவோம். அவர்களை வாழ்க்கைத் துணைவர்களாக ஏற்பதையும் நிராகரிப்போம்.
மொத்தத்தில் போலீசாக இருப்பவர்களின் விருப்பப்படியே, அவர்கள் மனித சமூகத்தின் இயல்புகள், உணர்வுகள் இருந்து விலகி வாழ விரும்புவதை, வாழ்ந்து விட்டுப் போவதை ஏற்றுக்கொள்வோம். அவர்கள், அவர்களின் மந்தையிலிருந்து நம்மை வேறுபடுத்திப் பார்ப்பதை, புறக்கணிப்பதை தவறு என்று சொல்லாமல், அது அவர்களின் இயல்பு என்று மனமார ஏற்றுக்கொள்வோம். போலீசு நமது உணர்வுகளை மதிக்கவில்லை, ஏற்கவில்லை என்பதற்காக அதற்கு எதிர்வினையாக, அவைகளோடு நாம் போட்டி போடுவதை தவிர்த்திடுவோம்.
மனிதர்களைத் தவிர, ஏனைய உயிரினங்கள் தமது கூட்டத்தைத் தவிர, ஏனைய அனைவரையும் எதிரிகளாகவும் அல்லது பிறராகவும் பார்ப்பது அவைகளின் இயல்பாகும். இப்புவியில் உள்ள எப்படிப்பட்ட வலிமைமிக்க விலங்குகளானாலும், அவற்றைக் கட்டுப்படுத்துவது அல்லது அவற்றிடமிருந்து நம்மை தற்காத்துக் கொள்வது என்பதே மனிதர்களாகிய நம்முடைய இயல்பாகும். மனிதர்களாகிய நம்மை விட பன்மடங்கு பலசாலிகளான காளைகளை கட்டுப்படுத்தும் நிபுணர்களான நாம், மனித உருவில் இருக்கும் போலீசை கட்டுப்படுத்தவும், அவைகளிடமிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளவும் தேவையான நிபுணத்துவத்தைப் பெறுவதற்கான சிறந்த நடைமுறை அனுபவமாக ஏறு தழுவுதல் போராட்டத்தை உள்வாங்கிக் கொள்வோம்.
ஏறு தழுவுதலை தவிர ஏனைய நமது வாழ்வியல் கோரிக்கைகளுக்காக மீண்டும் நாம் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பதற்காகத்தான், ஆட்சியாளர்களால் நாம் ஓட, ஓட அடித்து விரட்டப் பட்டிருக்கிறோம். எனவே இதிலிருந்து உரிய பாடங்களை கற்றுக்கொண்டு, நமது வாழ்வை பாதுகாத்துக் கொள்ளத் தேவையான வழிமுறைகளை உருவாக்கி கொள்வோம். இலட்சக்கணக்கில் ஒன்றிரண்டு இடங்களில் குவிந்து போராடுவது மட்டுமே போராட்டங்களின் ஒரே வழிமுறை இல்லை. வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு தன்மைகளில் மீண்டும், மீண்டும் புதிய, புதிய களங்களை உருவாக்கிக் காட்டுவதன் மூலம், உண்மையிலேயே இவ்வுலகிற்கு முன்னுதாரணமாகத் திகழ முயற்சிப்போம்.
ஆட்சியாளர்களும், போலீசும் என்னதான் சதி செய்து நம்மை விரட்டி இருந்தாலும், நாம் நமது ஒரு இலக்கை அடைந்தே இருக்கிறோம். போராட்டம் பன்முகத் தன்மையை எட்ட விடாமல் போலீசு தடுத்து விட்டதே என்று நம்மில் பெரும்பாலோர் ஆதங்கப்பட்டு வருகின்றனர். உண்மையில் போலீசு நம்மை அடித்து விரட்டாமல் இருந்திருந்தாலும், நாம் நினைப்பதைப் போன்று அது உடனடியாக சாதித்து விடக்கூடியவைகள் அல்ல. அவைகள் நமது நீண்ட கால இலக்குகளாக மட்டுமே இருக்க முடியும். ஏறு தழுவுதலுக்கான போராட்டத்தைப் போன்று அவைகள் சாதாரணமானவைகள் அல்ல என்பதை இப்போராட்டம் நமக்கு தெளிவாக உணர்த்தியுள்ளது.
ஆனாலும், நாம் நமது நீண்டகால இலக்குகளுக்கான அடித்தளத்துக்கு தேவையான பணிகளை, அதற்கு தேவையான செழிப்பான வித்துக்களை விதைத்திருக்கிறோம். பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான கண்ணோட்டத்தை, கருத்தை நமக்கானதாக மட்டுமல்லாமல், அதை பெரும்பான்மை மக்களுக்குமானதாகவும் மாற்றியிருக்கிறோம். இது கருத்தாக மட்டுமல்லாமல், மார்ச் – 31க்குப் பிறகு பன்னாட்டு நிறுவனங்களின் கோக், பெப்சி ஆகிய குளிர்பானங்களை விற்க மாட்டோம் என்ற வியாபாரிகள் சங்கத்தின் பங்கேற்பின் மூலம் நடைமுறையாகவும் மாறப்போகிறது.
இதனோடு, போராட்டத்தை காட்டிக் கொடுப்பவர்கள், கருங்காலிகள், பிழைப்புவாதிகள் ஆகியோரைப் பற்றியும், அவர்களை எப்படி அடையாளம் காண்பது, அப்படிப்பட்டவர்களை எதிர்கொள்வதற்கான தேவை, அவசியம் ஆகியவை பற்றியெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் இப்போராட்டக் களம் நமக்கு உணர்த்தி இருக்கிறது. எனவே நாம் இப்போராட்டத்தின் மூலம் அனுபவங்களை மட்டுமல்ல, பல பத்தாண்டு காலத்தில் எட்ட முடியாதவற்றையெல்லாம் எட்டிப் பிடித்திருக்கிறோம், சாதித்திருக்கிறோம்!
சமூகம், அரசு, அதிகாரம், போராட்டம், போலீசு ஆகியவைகளைப் பற்றிய, நமது பாமரத்தனத்தை தங்களது சூழ்ச்சிகளின் மூலமும், குண்டாந்தடிகளின் மூலமும், நமக்கு எளிமையாக புரிய வைத்த ஆட்சியாளர்களுக்கும், போலீசுக்கும் நாம், நமது நன்றிகளை உரித்தாக்குவோம்.
- சூறாவளி