“தாயை இழந்து நிற்கும் விபரம் அறியாத பிஞ்சுக் குழந்தைகள் இரவு நேரத்தில் எங்கே அம்மா என கேட்கிறது. நான் அந்தக் குழந்தையிடம் என்ன கூறுவதென்றே தெரியவில்லை”யென கண்ணீர் மல்க தெரிவித்தார் இறந்து போன பெண் தொழிலாளியின் மாமியார். இறந்து போன தந்தையைப் பற்றியே தெரியாமல், அழுது கொண்டிருந்த தனது தாயின் தோளில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த 8 மாதமே ஆன பெண் குழந்தை, தனது மனைவி இறந்த சோகத்தில் அப்படியே நிலைகுலைந்து அமைதியாக உட்கார்ந்திருந்த கணவர், டிப்ளமோ படித்துவிட்டு விடுமுறைக்காக வேலைக்குச் சென்ற மகன் வீடு திரும்பவில்லையே என தரையில் அழுது புரண்ட தாய் என பட்டாசு விபத்தில் உற்றோரை பறிகொடுத்த குடும்பங்களின் தவிப்பும் கதறலும் பார்ப்போரின் உள்ளத்தை உருக்கின. (நன்றி - தீக்கதிர், டிச-30, 2016, மதுரை)
இந்த சம்பவம் கேள்விப்பட்டு சாத்தூர் அருகேயுள்ள எலுமிச்;சங்காய்பட்டி கிராமத்திற்கு சென்ற போது அந்த பகுதியை சோகமயமாக காணப்பட்டதை பார்க்க முடிந்தது. அருகருகே இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் கூட்டம் கூட்டமாக மக்கள் துக்கம் விசாரித்துக் கொண்டும், கண்ணீர் வடித்துக் கொண்டும் தங்களின் துக்கத்தை வெளிப்படுத்திய வண்ணம் இருக்கின்றனர். நீங்கள் இந்த கட்டுரையை வாசிக்கும் நேரத்திலும் கூட. ஒவ்வொரு வீட்டுக்கும் செல்லும் போது கதறி அழும் அவர்களை பார்த்து என்ன ஆறுதல் சொல்வதென்றே தெரியாமல் மௌனமாக தான் இருக்க வேண்டியதாய் இருக்கிறது.
பட்டாசு தொழிலாளர்களின் ஏக்கம்
ஓவ்வொரு நாளும் வேலைக்கு போய்விட்டு வீடு திரும்புவோமா? என்ற ஏக்கத்துடன் தான் வேலைக்கு செல்கிறார்கள் பட்டாசு தொழிலாளர்கள். இந்த தொழிலை விட்டால் வேறு மாற்றுத் தொழில் இல்லை. எவ்வளவு ஆபத்தான வேலையாக இருந்தாலும் சரி, இந்த வேலையை செய்தாவது குடும்பத்தை காப்பாற்றியாக வேண்டுமே என்ற அவலத்தினால் தான் வேலைக்கு செல்கிறார்கள். பட்டாசு தொழிலாளர்கள் இவ்வளவு ஆபத்து இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அவர்களாக விரும்பி இந்த வேலைக்கு செல்வது கிடையாது. யார் தான், எந்நேரமும் தான் சாகக்கூடும் என்று தெரிந்து கொண்டு இவ்வளவு ஆபத்தான வேலைக்கு செல்வார்கள்? ஆனாலும் பட்டாசு தொழிலாளர்களுக்கு வேறு வழியில்லை. தான் இன்று வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் மாலை உயிருடன் வீட்டுக்கு திரும்பிச் செல்வோமா என்கிற உத்திரவாதம் இல்லாமலே வேலைக்கு செல்லும் ஒரே வேலை பட்டாசு தொழில் தான்.
நம்மில் பலருக்கும் ஒரு கேள்வி எழலாம்? ஏன் இவ்வளவு ஆபத்து என்று தெரிந்து இந்த வேலைக்கு செல்கிறார்கள்? என்பது தான். வேறு மாற்று தொழிலும், அதற்கு முறையான ஏற்பாடு எதுமே கிடையாது என்பது தான் எதார்த்தம்! இதுபோன்று அன்றாடம் விருதுநகர் மாவட்டத்தில் சர்வ சாதரணமாக நடக்கும் செயல் தான் இந்த பட்டாசு விபத்துக்கள். இவைகள் விருதுநகர் மாவட்ட செய்திகளில் இடம்பெறும் பெட்டி செய்திகளாக அன்றாடம் இடம்பெறும் செய்திகளில் ஒன்று என்பதை போல ஆகிவிட்டது பட்டாசு தொழிலாளர்களின் உயிர் பலிகள்.
பட்டாசு ஆலை விபத்து
கடந்த டிசம்பர் - 26, 2016 அன்று விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், சாத்தூர் அருகே, நாரணாபுரத்தில், ஸ்ரீ ஆர்.ஆர் பட்டாசு ஆலையில் வழக்கம் போல தொழிலாளர்கள் வேலை செய்து வந்திருக்கின்றனர். அப்போது சுமார் நண்பகல் 12 மணியளவில் பேன்சி ரக வெடிகளை இந்த ஆலையில் தயாரிக்கும் போது எதிர்பாராத விதமாக மணிமருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. விபத்து ஏற்பட்ட அந்த அறையில் விதிமுறையை மீறி எட்டு தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்திருக்கின்றனர். இந்த வெடி விபத்தில் அந்த அறையில் பணிபுரிந்த எலுமிச்சங்காய்பட்டியைச் சேர்ந்த முனியாண்டி மனைவி சரஸ்வதி (45), மாடசாமி மனைவி செல்வி (25), பெரிய முனியசாமி மனைவி சுப்புத்தாய் (45), ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினா.; மேலும் இதில், அதே ஊரைச் சேர்ந்த முனியாண்டி மகன் சூரியநாராயணசாமி (26), தீக்காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி அங்கு பலியானார்.
இந்த விபத்தில் சிக்கி தீக்காயங்களுடன் படுகாயமடைந்து இருந்த முருகேசன் மகன் மாமுனிராஜ் (23), பழனிராஜ் மனைவி முத்துமாரி (52), தம்பிராஜ் மனைவி வீரலட்சுமி (27), தாவீது மகன் செல்வராஜ் (35), ஆகியோரை பிற தொழிலாளர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் இவர்களை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நான்கு தொழிலாளர்களும் நூறு சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்நிலையில் விதிமுறைகளை மீறி, பட்டாசு ஆலையை செயல்படுத்தி, வெடிவிபத்து ஏற்படக் காரணமான ஆலை உரிமையாளர், போர்மேன்; ஆகியோர் மீது கங்கரக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் பலவேசம் கொடுத்த புகாரின் பேரில் ஏழாயிரம்பண்ணை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இந்த புகாரின் அடிப்படையில் ஆலை உரிமையாளர் புதுப்பட்டியை சேர்ந்த தெய்வப்பாண்டி மகன் ரமேஷ்கண்ணன், புல்லக்கவுண்டம்பட்டியைச் சேர்ந்த போர்மேன் ஆரோக்கியராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ததும் அவர்கள் தலைமறைவாக இருந்து பின்பு பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டதும் தற்போது அவர்களை கைது செய்துள்ளனர்.
இந்த விபத்து நடந்ததையொட்டி தகவல் அறிந்து, ஆலையின் உரிமத்தை வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் ‘சஸ்பென்ட்’ செய்துள்ளனர்.
தொழிலாளர்கள் போராட்டம்
இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத் தொகையாக ரூ.5 லட்சம் மற்றும் இறுதிச்சடங்கு நிதியாக ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை வழங்கவேண்டுமென வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் கோரிக்கையை முன் வைத்தனர். ஆனால் ஆலை நிர்வாகத்தினர் ரூ.4 லட்சம் மட்டுமே தர முடியும் என தெரிவித்தனர். எனவே முழுமையான நிவாரணம் வேண்டுமென வலியுறுத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் சேர்ந்து உடலை வாங்க மறுத்து, பிணவறை முன்பு போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
தகவலறிந்து வந்த சாத்தூர் கோட்டாட்சியர் மற்றும் வெம்பக்கோட்டை வட்டாட்சியர், துணை காவல் கண்காணிப்பளர் (சிவகாசி) ஆகியோர் ஆதித்தமிழர் கட்சி, அருந்ததியர் அமைப்புகள் மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் முதல் கட்டமாக ரூ.4.20 லட்சத்தை ஆலை நிர்வாகத்தினரிடம் பெற்றுத்தருவது, மீதித் தொகையை இரண்டாம் கட்டமாக வழங்குவது என ஒப்பந்தம் போடப்பட்டது. இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்து இறந்தவர்களின் உடலை வாங்கி சென்றனர்.
இதுபோன்று ஒவ்வொரு முறையும் பட்டாசு விபத்து நடக்கும் போது இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நியாயமாக போய் சேர வேண்டிய இழப்பீடை வாங்க தங்களின் உறவினரை பறிகொடுத்த துக்கத்திலும் அவர்களின் உரிமைக்காக போராட வேண்டிய அவலத்தில் தான் இன்றும் நிலைமை இருக்கிறது. இதற்கு பல்வேறு விதங்களில் அரசும், அரசு அதிகாரிகளும் காரணமாக இருக்கின்றனர். இப்படியொரு கோர சம்பவங்கள் நடக்கும் போது பல நேரங்களில் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருப்பது கிடையாது என்பது தான் எதார்த்தம்.
வெற்று காசோலை
பாதிக்கப்பட்ட எட்டு தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு பாண்டியன் வங்கி மற்றும் பெடரல் வங்கியில் இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளுமாறு தலா ரூ.4.10 லட்சத்திற்கான காசோலை வழங்கியிருக்கின்றனர். தொழிலாளியின் குடும்பத்தினர் வங்கியில் சென்று பார்த்த போது, அதில் வெறும் 327 ரூபாய் மட்டுமே உள்ளது என வங்கி மேலாளர் கூறியிருக்கிறார். இதனால், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் பெரும் அவதிக்கும் மனஉளைச்சலுக்கும் ஆளாயுள்ளனர். சாதாரண அப்பாவி தொழிலாளர்களின் குடும்பத்தினரை ஏமாற்றும் விதத்தில் அரசு அதிகாரிகளும், பட்டாசு ஆலை உரிமையாளரும் கைகோர்த்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்பு மொத்தத் தொகையையும் ஒரே தவனையில் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையொட்டி ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் கு.ஜக்கையன் அவர்கள் கூறியதாவது, “இப்படியொரு துயர சம்பவம் நடந்தும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நியாயமாக வழங்க வேண்டிய இழப்பீடு தொகையை வழங்குவதில் கூட மோசடி நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட எட்டு பேரின் குடும்பத்தினருக்கும் ரூபாய் 4.10 லட்சத்திற்கான காசோலை கொடுத்தும் அந்த கணக்கில் பணம் இல்லை. இரண்டாவதாக பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளரின் பெயரில் அந்த காசோலை இல்லை. சம்மந்தமில்லாத வேறு யாருடைய பெயரிலோ அந்த காசோலை உள்ளது. இவற்றை பார்த்தால் இப்படியொரு காசோலை மோசடி நடப்பதற்கு அரசம், அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். இது பாதிக்கப்பட்ட அருந்ததியர் மக்களை முட்டாள்களாக ஆக்குவதற்கு செய்த சூழ்ச்சி. மேலும் நொந்து போய் இருக்கிற மக்களை மேலும் நோகடிக்கிற செயலை செய்திருக்கிறார்கள்” என்றார்.
விதிமீறல்கள்
எட்டு அப்பாவி தொழிலாளர்கள் பலியான சம்பவம் சாத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் தொழிலாளர்களின் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து பட்டாசு தனி தாசில்தார் முத்துலட்சுமி கூறியதாவது:- “மணிமருந்து கலவை செய்ய வேண்டிய அறையில் மருந்து நிரப்பும் பணி செய்துள்ளனர். இருவர் பணிபுரிய வேண்டிய அறையில் எட்டு பேர் பணிபுரிந்துள்ளனர். ‘மணிமருந்து’ கையாளும் போது ஏற்பட்ட உராய்வு, அதை குச்சியைக் கொண்டு செலுத்தியது, இட நெருக்கடி போன்றவற்றால் விபத்து ஏற்பட்டுள்ளது” என்கிறார். (தினமலர், டிச-28, 2016, மதுரை)
இந்த ஆலையில் அப்பட்டமான விதிமீறல் இருந்ததே விபத்திற்கு காரணமாகும். அளவுக்கு அதிகமாக மணிமருந்து கலவையை ஒரு அறையில் பயன்படுத்த வைத்தது. பட்டாசு ஆலையில் ஒரு குறிப்பிட்ட வெடியை தயாரிக்க கான்ட்ரக்ட்க்கு எடுத்து வேலை செய்ய அனுமதித்தது. பேன்சி ரக வெடிகளை அளவுக்கு அதிகமாக பட்டாசு தயாரிக்கும் அறையில் இருப்பு வைத்தது. பட்டாசு தயாரிக்கும் அறையில் நான்கு தொழிலாளர்களுக்கு மேல் இருக்கக்கூடாது. அதேபோல பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும் அறையில் இரண்டு நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்பது விதிமுறையாகும். ஆனால், விபத்து நடந்த அறையில் விதிமுறைகளை மீறி எட்டு தொழிலாளர்கள் வேலை செய்ய ஆலை நிர்வாகம் நிர்பந்தம் செய்துள்ளது. இது ஆலை உரிமையாளர்களின் லாபநோக்கு வெறி என்று சொல்வதை விட வேறு என்ன சொல்வது? இதானல் பாதிக்கப்பட்டது என்னவோ அப்பாவி தொழிலாளர்களே!
மேலும் பட்டாசு தயாரிக்கும் அறையில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை அதிக அளவில் இருப்பு வைத்துள்ளனர். இதனால், மணிமருந்தில் தீப்பற்றியதும், தொழிலாளர்கள் வெளியே செல்ல முடியாமல் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஆலையில் உள்ள அனைத்து அறைகளிலும், தயாரிக்கப்பட்ட பேன்சி ரக வெடிகள் அதிகமாக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிக்கப்பட்டுள்ளது.
ஒரு பட்டாசு ஆலை தொடங்கும் போது முறையாக செய்திருக்க வேண்டிய பல அடிப்படையான விசயங்கள் இங்கு செய்யப்படவில்லை. இந்த பட்டாசு ஆலைக்கு செல்வதற்கு தார்ச்சாலை கிடையாது. வண்டிப்பாதை மட்டுமே உள்ளது. இதனால் இங்கு யாரும் எளிதில் செல்ல முடியவில்லை. தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் ஆகியவை மிகப்பெரிய சிரமத்தில் தான் ஆலைக்கு சென்றிருக்கின்றன. இப்படி அடிப்படையான ஏற்பாடுகளை செய்யாத பட்டாசு ஆலைக்கு எப்படி அதிகாரிகள் லைசன்ஸ் கொடுத்தார்கள் என்பது தான் நம்மை துளைத்தெடுக்கும் கேள்வி?
தொழிற்சாலை அனுமதி பெற்றது தானா?
விபத்து நடைபெற்ற ஸ்ரீ ஆர்.ஆர் பட்டாசு தொழிற்சாலை நாக்பூர் அனுமதி பெற்றுள்ளது என்று பட்டாசு தொழிற்சாலையில் குறிப்பிட்டுள்ளது. அதன் உரிமை எண்: E/HQ/TN/20/1356(E84011) மற்றும் VNR (E 438709) 2014 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டாசு தொழிற்சாலை அனுமதி பெற்ற இரண்டு வருடங்களில் இப்படியொரு விபத்து அதுவும் எட்டு பேரை பறிகொடுத்ததைப் பார்க்கும் போது இவை முறையாக அனுமதி பெற்றது தானா? என்ற சந்தேகமும் உள்ளது.
பட்டாசு தொழிற்சாலைக்கு அனுமதி அளிக்கும் போது அதிகாரிகள் அதன் உரிமையாளருக்கு பட்டாசு தயாரிப்பதில் போதிய அனுபவம் இருக்கிறதா? அங்கு பணியில் அமர்த்தப்படும் தொழிலாளர்கள் போதிய பயிற்சி பெற்றுள்ளார்களா? என்பதை அவ்வப்போது அரசு அதிகாரிகள் ஆய்வு செய்யாததே பெரிய குறையாக இருக்க முடியும். இந்த பட்டாசு தொழிற்சாலையில் உரிமையாளர் முறையாக பட்டாசு தயாரிக்கும் பணியை செய்யாமல் கான்ட்ரக்ட் முறையில் எழுமிச்சங்காய்பட்டியை சார்ந்த தேசியப்பன் என்கிற நபருக்கு கொடுத்திருக்கிறார். இவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர். அதனால் அவர் அதே ஊரை சார்ந்த அருந்ததியர்களை பணியில் அமர்த்திருக்கிறார். இதன் விளைவு தான் ஒரே ஊரில் எட்டு பேரை பலிகொடுத்துள்ளனர். மொத்தத்தில் இவற்றைப் பார்க்கும் போது வெறும் லாபநோக்கத்தோடு பணியை முடுக்கிவிடப்பட்டுள்ளது என்பது மட்டும் புரிகிறது. இப்படியொரு கோர சம்பவம் நடந்ததற்கு முழுமையான பொறுப்பு உரிமையாளரும், அரசுமே காரணம்.
அதிகாரிகளின் அலட்சியம்
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து விபத்து ஏற்படக் காரணமாக இருப்பது விதிமுறை மீறல்கள் தான். இதை சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்வதில்லை. இதனால், தொழாலளர்களின் உயிர் அநியாயமாக பறிபோகிறது. விபத்திற்கு பிறகு நடத்தும் ஆய்வும் வெறும் கண்துடைப்பாகவே நடைபெறுகிறது. ஆலையை சீல் வைப்பது, பின்பு, மீண்டும் திறக்க உத்தரவிடுவது என்கிற நிலையில் தான் அதிகாரிகள் உள்ளனர். இதனால் மீண்டும் அதே ஆலையில் வெடிவிபத்து நடைபெறும் நிலைதான் உள்ளது.
விபத்து நடந்தால், சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் முறையாக ஆய்வு மேற்கொண்டு விபத்து நடக்காமல் பார்த்துக் கொள்வார்கள்.
ஒரு அதிகாரிகள் தங்களுக்கு பணம் லஞ்சமாக கிடைக்கிறது என்று எதையும் கண்டும் காணாதததை போல் இருப்பதால் அப்பாவி தொழிலாளர்கள் பலியாக நேரிடுகிறது. யார் செத்தால் என்ன நமக்கு தேவை பணம் என்கிற மனநிலையோடு அதிகாரிகளும், ஆலை உரிமையாளர்களும் செயல்பட்டால் இவற்றை தடுக்க முடியாது.
அதிகாரிகள் லஞ்ச வேட்டையும், ஆலை உரிமையாளர்கள் லாபவேட்டையும் கைவிட்டால் தான் தொழிலாளர்களின் வாழ்வில் வசந்தம் வீசும். இல்லையென்றால் அன்றாடம் அங்கும் இங்குமாய் கொத்துக் கொத்தாய் பட்டாசு தொழிலாளர்கள் செத்து ஒழிவதை தவிர வேறு வழியில்லை.
பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கூட்டம்
தமிழ்நாடு இந்தியன் பயர் ஒர்க்ஸ் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பட்டாசு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் - 30, 2016 அன்று நடைபெற்றிருக்கிறது.
இக்கூட்டத்தில் துணை முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி சி.சுந்தரேசன் பேசியதவது:- ஏழாயிரம்பண்ணை அருகே நடைபெற்ற பட்டாசு வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தது வருந்தத்தக்க விசயம். அந்த ஆலையில் மருந்து செலுத்துவதற்கு இரும்பாலான கருவியை பயன்படுத்தியதாக தெரிய வந்துள்ளது.
மேலும் விதிகளை மீறி ஒரே அறையில் 8 தொழிலாளர்கள் பணிபுரிந்துள்ளனர். விதிமீறல்கள் இருக்ககூடாது என பலமுறை அறிவுறுத்தியுள்ளோம். எனினும் ஆலை உரிமையாளர்கள் விதியை மீறி செயல்படுகிறார்கள்.
மேலும் பல விபத்துகளில் சிக்கிய தொழிலாளர்கள் உயிரிழந்து விடுவதால் விபத்துக்கு உண்மையான காரணத்தை அறியமுடிவதில்லை. மேலும் ஆலை நிர்வாகிகள் தலைமறைவாகி விடுகிறார்கள். இது விபத்து குறித்த விசாரணைக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.
விபத்து நடைபெற்றால் ஆலை உரிமையாளர்கள், மேலாளர், கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தால் விசாரணைக்கு உதவியாக இருக்கும். குத்தகைக்கு விடப்படும் பட்டாசு ஆலைகளில் பல விதிமீறல்கள் காணப்படுகின்றன. எனவே குத்தகைக்கு விட்டால் அந்த ஆலையின் உரிமம் ரத்து செய்யப்படும் என அவர் பேசியிருக்கிறார்.(தினமணி, டிச-31, 2016, மதுரை, பக்-02)
பட்டாசு ஆலைகளில் பல்வேறு விதமான முறைக்கேடுகள், விதிமீறல்கள் நடைபெறுவது அதிகாரிகளுக்கு தெரிந்து தான் கண்டும் காணாமல் இருந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.
அதேபோல டிசம்பர் - 28, 2016 அன்று தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் சார்பில், பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சிவகாசியில் நடந்திருக்கிறது. அதில் தொழிலாளர் துறை அமைச்சர் பேசியதாவது:- தொழிலாளிகள் உயிர், உடைமைகளுக்கு ஆலை உரிமையாளர்கள் தான் பொறுப்பு. விதிகளை மீறி பட்டாசு உற்பத்தி செய்யக்கூடாது. அளவுக்கு அதிகமான வெடி பொருட்களை பயன்படுத்தி, அப்பாவி தொழிலாளிகளின் பலிக்கு காரணாமாகிவிட்டனர்.
ஆலைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை கடுமையாக இருக்கும். பட்டாசு ஆலையை குத்தகைக்கு விட்டால் உடனடியாக உரிமத்தை ‘சஸ்பென்ட்’ செய்யவேண்டும் என்றார். (தினமலர், டிச-29, 2016, மதுரை, பக்-05)
இப்படி அறிக்கைகள், விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது ஒவ்வொரு முறையும் வழக்கமாக ஒன்றாக மாறிவிட்டது. ஒவ்வொரு முறையும் கூட்டங்கள் கூட்டி உரிமையாளர்களுக்கு அறிவுரை சொல்வதோடு நிறுத்திவிடாமல் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது தான் அவர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வார்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
கடமை தவறிய அரசு
விருதுநகர் மாவட்டத்தில் அடிக்கடி நிகழும் பட்டாசு விபத்துக்களில் அதிகமாக பாதிக்கப்படுவது தலீத் மக்கள் தான். அப்படிப்பட்ட துயர சம்பவத்தின் போது அவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்குவது கிடையாது. அரசும் உடனடியாக இந்த விசயத்தில் தலையிட மறுக்கிறது. இந்த விபத்தை தடுக்கும் வகையில் சட்டங்கள் இருந்தும் அதை முறையாக கடைபிடிப்பது கிடையாது. பட்டாசு வேலையை பாதுகாப்பாக செய்வதற்கு அறிவுறுத்தவோ, கண்காணிக்கவோ முறையாக பயிற்சி பெற்றவர்களை கொண்டு பணியை செய்யவோ அரசு அதிகாரிகள் பார்வையிடுவது கிடையாது. அதனால் தான் இப்படி அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. பட்டாசு தொழிலை விட்டு வேறு வேலைக்கு போவதற்கு இப்பகுதியில் மாற்று வேலைகள் எதுவும் கிடையாது என்பதை அரசு அதிகாரிகள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு லஞ்சம் வாங்கிக் கொண்டு பட்டாசு தொழிற்சாலைக்கு அனுமதி அளித்து விடுகிறார்கள். இதனால் முறையாக தொழிற்சாலையை பார்வையிடுவது கிடையாது. அப்படியே பார்வையிட்டாலும் லஞ்சம் வாங்கிக் கொண்டு அங்கு விதிகளை மீறி செயல்படுவதை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார்கள். இதனால் சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து உயிர் பலிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இப்படி நூறுக்கும், இருநூறுக்கும் கூலி வேலைக்கு போகும் பாமர மக்களின் உயிரை லஞ்ச வேட்டையிலும், லாப வேட்டையிலும் குடித்து ஏப்பம்விடும் அரசு அதிகாரிகளும், தொழிற்சாலை உரிமையாளர்களும் திருப்பிக் கொடுப்பார்களா?
அன்றாடம் ஆங்காங்கே புல் முளைப்பது போல புதிதுப் புதிதாக பட்டாசு தொழிற்சாலைகள் பெருகிக் கொண்டே வருகிறது. அதே போல பட்டாசு விபத்துக்களும் கணக்கில்லாமல் நடந்து பாமர மக்களின் உயிரை குடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அரசு தன் கடமையிலிருந்து விலகி நிற்பது தான்.
பட்டாசு தொழிற்சாலை விபத்தின் போது அதன் உரிமையாளரே பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அரசு இதில் எந்தவித இழப்பீடும் வழங்காது என்கிற அரசின் தவறான கொள்கையும், பொறுப்பற்ற தன்மையின் வெளிப்பாடும் தான் அப்பாவி தொழிலாளர்களின் உயிரை அன்றாடம் தீக்கரையாக்கி குவித்துக் கொண்டிருக்கிறது. இதனால் தான் பட்டாசு தொழில் தெரிந்தவர், தெரியாதவர் என அனைவரும் கும்பலாக பணியில் ஈடுபட செய்கிறார்கள். ஒருவேளை விபத்தில் இறக்க நேரிட்டால் அப்பாவி தொழிலாளர்கள் மட்டுமே விபத்தில் இறக்க நேரிடுமே தவிர ஆலையின் உரிமையாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஆளவதில்லை. அவர்களுக்கு என்ன, மீண்டும் அந்த பட்டாசு தொழிற்சாலையை புதுப்பிக்கும் வரை நஷ்டம் ஏற்படும். அவ்வளவு தான். இதனால் அன்றாடம் பாதிப்புக்கு உள்ளாவது பட்டாசு தொழிலாளர்கள் தான். அரசும் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு சாதகமாக இருக்கிறதே தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதகமாக இருப்பது கிடையாது.
இதுபோன்று ஒவ்வொரு விபத்தின் போதும் அரசு அதிகாரிகள் உரிமையாளர்களுக்கு சாதகமாகவே செயல்படும் போக்கு உள்ளது. இதே போன்று தான் எலுமிச்சங்காய்பட்டியில் எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்தார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட காசோலை மோசடியிலும் அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருந்திருப்பது பெரும் வெட்கக் கேடாக உள்ளது.
மனித உரிமைகள் ஆணையம்
இந்த பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கம் அளிக்கும்படி, மாநில மனித உரிமைகள் ஆணையம் ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது. இது குறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்தது. ஆணையத் தலைவர், டி.மீனாகுமாரி பிறப்பித்த உத்தரவு:- பட்டாசு ஆலையின் வெடிவிபத்துக்கான காரணம், பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்பட்ட சிகி;ச்சை மற்றும் உதவிகள் குறித்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகிய இருவரும் ஆறு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கபட்டுள்ளது. (தினமலர், டிச-28, 2016, மதுரை)
இப்படியொரு கோர விபத்து நடந்திருப்பதை செய்திகளில் பார்த்து தானாக முன்வந்து மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய அவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதன் வழியாக இந்த விபத்துக் காரணமாக இருந்தவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் ஆலையை முறையாக ஆய்வு செய்யாத அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டால் தான் இதுபோன்று அடுத்தடுத்து விபத்து நிகழாமல் பட்டாசு தொழிலாளர்களின் உயிருக்கு உத்திரவாதம் கிடைக்கும்.
அரசியல் தீண்டாமை
இந்த பட்டாசு வெடிவிபத்து சம்பவத்தை கேள்விபட்டு ஆதித்தமிழர் கட்சியினர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினர். அப்போது கட்சியின் தலைவர் கு.ஜக்கையன் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களிடையே பேசியதாவது “இப்படியொரு துயர சம்பவம் நடந்ததை எண்ணி மிகவும் வருத்தம் அளிக்கிறது. பேசுவதற்கு கூட இயலாத சூழலில் உள்ள தாயை இழந்த குழந்தைகள், அவர்களின் குடும்பத்தினரைப் பார்க்கும் போது வேதனையளிக்கிறது.
வழக்கமாக இப்படியொரு பட்டாசு விபத்து நடந்தால் பாதிக்கப்பட்ட மக்களை அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் வந்து சந்திப்பார்கள். ஆனால் இங்கு ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பட்டாசு தொழிற்சாலையை பார்வையிட வந்த அமைச்சர் இரண்டு கிலோ மீட்டர் தூரமுள்ள பாதிக்கப்பட்ட மக்களின் கிராமத்திற்கு வர மனமில்லை. இதே நேரம் வேறு சமூகத்தை சார்ந்தவராக இருந்தால் கூட்டம் கூட்டமாக வந்திருப்பார்கள். இதுவும் ஒரு வகையில் அரசியல் தீண்டாமை தான். சம்பவ இடத்திலேயே இறந்து போன மூன்று போரின் உடலை சாத்தூர் அரசு மருத்துவமனையில் வைத்திருந்த போது அங்கு சட்டமன்ற உறுப்பினர் எல்.ஜி.சுப்பிரமணியம் வந்திருந்தார். ஆனால் அவர் கூட கடைசிவரை பாதிக்கப்பட்ட மக்களின் கிராமத்திற்கு சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை.
இப்படி அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஓரங்கட்டப்படும் அருந்ததியர் மக்கள் சார்பாக ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்தார். தீண்டாமையில் பலவடிவங்கள் இம்மக்களின் மீது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அரசியல் ரீதியான, சமூக ரீதியான தீண்டாமைகள் தான் கடைபிடிக்கப்பட்டன. தற்போது மனித உயிர்கள் மீதான தீண்டாமைகளும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது சாதி ஆதிக்க மனோபாவத்தை வெளிச்சமிட்டு காட்டுகிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த விபத்தையொட்டி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களை சம்பந்தப்பட்ட ஊருக்குச் சென்று அமைச்சர்கள் சந்திக்காமல் சாத்தூரில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு அவர்களை வரவழைத்து, நீண்டநேரம் காத்திருக்க செய்துவிட்டு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் முதலமைச்சர் நிவாரண நிதி பெறுவதற்கான மனுவைப் பெற்றுக் கொண்டு சென்றுவிட்டார். இவ்வளவு பெரிய விபத்து நடந்து அவர்களை கட்சி கூட்டத்திற்கு அழைத்து வருவது போல அழைத்து சென்று தான் மனுக்களை பெற வேண்டுமா? தேர்தலில் ஓட்டுக் கேட்டு வரும் போது மட்டும் வீடு வீடாக எந்தவித பாகுபாடும் இல்லாமல் தேடிவரும் இவர்களுக்கு ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் எப்படி தான் இந்த சாதிய பாகுபாடு கண்ணுக்கு தெரிகிறதோ தெரியவில்லை.
தொழிலாளர்களின் உள்ளக் குமுறல்
பட்டாசு தொழிற்சாலைக்கு வேலைக்குப் போகும் தொழிலாளர்கள் தாங்கள் பாதுகாப்பான முறையில் வேலை செய்ய வேண்டும். தனக்கு எந்தவித ஆபத்தும் நேர்ந்துவிடக்கூடாது என்று நினைத்து தான் ஒவ்வொரு நாளும் வேலைக்கு செல்கிறார்கள். ஆனால் நடப்பதே அதற்கு நேர் எதிராக இருக்கிறது. சிவகாசி, சாத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் வேறு மாற்று தொழில் இல்லாததால் அப்பாவி தொழிலாளர்கள் இது போன்ற பட்டாசு விபத்துகளில் தங்களின் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிருக்கிறது. எழுமிச்சங்காய்பட்டியை சார்ந்த பட்டாசு தொழிலாளர்களில் ஒரு சிலர் தங்களின் பணி அனுபவங்களையும், தங்களுடைய எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.
அவற்றுள் சில.....
முதலில் பட்டாசு ஆலையை உரிமையாளர்கள் ஒப்பந்தம் விடுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
சொந்தமாக முதலீடு செய்து வேலை செய்ய முடியாத உரிமையாளர்களுக்கு ஏன் உரிமம் வழங்க வேண்டும்.
பொறுப்பற்ற அரசு அதிகாரிகளால்தான் எங்களைப் போன்ற தொழிலாளர்கள் உயிரிழக்கின்றனர். அவர்களது குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. இவற்றை தடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட யாரையும் இதுவரை அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளவி;ல்லை. தொழிலாளர்களுக்கு பி.எப். இ.எஸ்.ஐ போன்றவற்றை கிடைக்க சட்ட விதிமுறைகள் உருவாக்கி அவைகள் கிடைக்கச் செய்ய அதிகாரிகள் உறுதிபடுத்த வேண்டும்.
பட்டாசு ஆலையில் அனுமதிக்கப்பட்ட நபர்களை மட்டும் தொழிற்சாலையில் பணியில் அமர்த்த வேண்டும். ஒருவேளை கூடுதலாக பணியில் அமர்த்தி பணிசெய்யும் பட்சத்தில் அந்த பட்டாசு ஆலையின் உரிமையினை ரத்து செய்ய வேண்டும்.
பட்டாசு ஆலையில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை முறையாக செய்திருக்க வேண்டும். இவைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டாலே பாதிக்கும் மேற்பட்ட விபத்துகள் தவிர்க்கப்பட்டுவிடும்.
பட்டாசு விபத்தின் போது அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளி பல நாட்கள் வேலையை இழந்து கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு அப்படி நேரத்தில் இழப்பீடு வழங்க ஆவண செய்ய வேண்டும். என்பன போன்ற பல்வேறு எதிர்பார்ப்புகள் பட்டாசு தொழிலாளர்களின் மனதில் இருக்கிறது. அவர்கள் நீண்ட நாட்களாக வேலை செய்து அதன் வழியாக வரும் வருமானத்தை வைத்து மகிழ்ச்சிகரமாக தங்களின் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள்.
மக்கள் அமைப்புகளின் கோரிக்கை
பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூற பல்வேறு அமைப்பினரும் அவர்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் ஆதித்தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, தமிழ்ப்புலிகள், புரட்சி புலிகள், மாதர் சங்கம், விடுதலை சிறுத்தைகள், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற அமைப்புகள் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வருகின்றனர்.
இவற்றில் ஆதித்தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற அமைப்புகள் ஒருசில கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றன.
பலியான தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்குவதையும் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதையும் சட்டமாக்க வேண்டும்.
கையில் மலம் அள்ளும் தொழிலாளர்களில் செப்டிக் டேங் சுத்தம் செய்யும் போது உயிரிழந்தவர்களுக்கு பத்து லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அதே போல் பட்டாசு தொழிலும் அருவருக்கத்தக்க, ஆபத்தான தொழில் தான். அதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாயும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் கு.ஜக்கையன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் இந்த காசோலை மோசடியை அரசு அதிகாரிகளும் அமைச்சர் போன்றோர் உடனடியாக தலையீட்டு உரிய நிவாரணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க ஆவண செய்ய வேண்டும். இதனை செய்யாமல் தாமதிக்கும் பட்சத்தில் வலுவான போராட்டங்களை எடுப்போம் என்பது உறுதி என்றார்.
சொல்லி மாளாத சோகங்கள்
திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் மாமுனிராஜ் என்கிற இளைஞர் டிப்ளமோ படித்து வந்துள்ளார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவரால் கட்டணம் கட்டி சான்றிதழ் வாங்க முடியாத நிலை இருந்துள்ளது. இதனால் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்று பணம் சேர்த்து பின்பு தொடர்ந்து படிக்கலாம் என்று நினைத்திருந்த சூழலில் அவர் பட்டாசு விபத்தில் உயிரிழந்துவிட்டார். படிப்பதற்கு போதுமான பணம் இல்லாததால் ஒரு மாணவனின் உயிர் போயிருக்கிறது.
இந்த விபத்தில் பலியான சூரியநாராயணசாமி என்பவருக்கு எட்டு மாதமே ஆன பெண் குழந்தை உள்ளது. தன் அப்பா இறந்துவிட்டார் என்பதை அறிய வயதில் தன் தந்தையை பறிகொடுத்திருக்கிறது அந்த எட்டு மாத குழந்தையான விஷ்ணுப்பிரியா. அவரது மனைவி செல்வி (23) தன் கணவனை பறிகொடுத்துவிட்டு இனி இந்த சமூகத்தில் நான் எப்படி வாழப் போகிறேன் என்று திக்கு தெரியாமல் பிரமை பிடித்தவர் போல உட்கார்ந்திருக்கிறார்.
அதே போல செல்வராஜ் என்பவருக்கு மீனா (25) என்கிற மனைவி இருக்கிறார். அவர் தன் கணவர் இறந்ததை கேள்விப்பட்டு துக்கம் விசாரிக்க வருபவர்களை கண்டு அவரது இரண்டே வயதான மகள் பவித்ரா, “எதுக்குமா எல்லாரும் உன்னப் பாத்து அழுறாங்க? அப்பா எங்கம்மா போயிருக்காரு? எப்பம்மா வருவாரு?” என்று அடுக்கடுக்காக கேள்விக்கணைகளை தொடுத்துக் கொண்டிருக்கிறாள். அதற்கு பதில் சொல்ல முடியாமல், “அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. அதான் அவங்க பாக்க வந்திருக்காங்க. நாளைக்கு வீட்டுக்கு திரும்ப வந்திருவாரு!” என்று சொல்லிவிட்டு தன் மகளுக்கு தெரியாமல் அழுது கொண்டிருக்கிறார் மீனா. அந்த பிஞ்சுக்கு தெரியுமா? தன் அப்பா கருகிப் போனது. இன்னும் எத்தனை நாளைக்கு தான் மீனா அப்படி சொல்லி சமாளிக்கப் போகிறாரோ தெரியவில்லை.
வீரலட்சுமி (27) என்பவருக்கு தம்பிராஜ் என்கிற கணவரும் இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும், ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் ஒரு பையனும் இருக்கிறார்கள். அந்த சிறுவன் தன் தாயை இழந்துவிட்ட சூழலில் மொட்டை அடித்திருக்கிறான். அருகில் இருக்கும் தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாட சென்று விட்டு தன் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க வருபவர்களை ஒன்றும் அறியாமல் வேடிக்கை பார்க்கிறான். ஒன்றும் அறியாத இரண்டு வயதான மகளையும் வைத்துக் கொண்டு இனி நான் எதிர்காலத்தை எப்படி சமாளிக்கப் போகிறேன் என்று யோசித்தவாறு ஆழ்ந்த மௌனத்தோடு அமர்ந்திருக்கிறார்.
இப்படி ஒவ்வொரு வீட்டிலும் வெவ்வேறு விதமான ஏக்கங்கள், சோகங்களும் நிறைந்து இருக்கிறது எலுமிச்சங்காய்பட்டி கிராமத்தில். அவர்களை தேற்றுவதற்கும், ஆறுதல் சொல்வதற்கும் எத்தனை பேர்கள் வந்தாலும் வாழ்நாள் முழுவதும் துயர கடலில் பயணிக்கப் போவது பாதிக்கப்பட்டோர்கள் தானே!
இனி நாளை எத்தனை தொழிலாளர்களின் குடும்பத்தினர் இவர்களை போல தவிக்கப் போகிறார்களோ? தெரியவில்லை.
ஒவ்வொரு நாளும் பொழுது விடிகிறது. பட்டாசு தொழிலாளர்கள் வேலைக்கு செல்கிறார்கள். மீண்டும் பொழுது அடைவதற்குள் தான் உயிருடன் வீடு திரும்புவோமா? என்ற ஏக்கத்துடனே செல்கிறார்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத இந்த பட்டாசு வேலைக்கு! இப்படிப்பட்ட சூழலில் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் துயரம் எப்போது நீங்கும்?
- மு.தமிழ்ச்செல்வன்