கதை சொல்லுவது ஆயிரம் ஆண்டுகாலத்துப் பழக்கம்.

குழந்தைகள் பாட்டியின் மடியிலும், பாட்டனின் மடியிலும் படுத்துக்கொண்டு கதை சொல்லச் சொல்லி அடம்பிடிப்பார்கள்.

ஆற்றல்மிக்க பேச்சாளர்களும் பேச்சின் ஊடே கதை சொன்னால், அவர் சொல்ல வந்த கருத்தை எளிதில் மக்கள் புரிந்து கொள்வார்கள். தலைசிறந்த எழுத்தாளர்களும், கதை சொல்லுவதைத் திறம்படச் செய்கிறார்கள்.

‘பொன்னியின் செல்வன்’ என்னும் வரலாற்றுப் புதினத்தை எழுதிய ‘கல்கி’ ஆசிரியர் ஆர். கிருஷ்ண மூர்த்தி அவர்கள் கடந்த அரை நூற்றாண்டாகத் தமிழரின் நெஞ்சங்களில் இடம்பிடித்திருக்கிறார்.

கடலூரில் பிறந்து வளர்ந்த முருகேசன் என்கிற ஜெயகாந்தன்-அன்றாட நாட்டு நடப்புகளில் காண் போரைக் கதைமாந்தர்களாகவும் உத்திகளாகவும் வைத்து, எண்ணற்ற புதினங்களைத் தமிழில் எழுதிப் புகழ் பெற்றவர். கடந்த ஓராண்டாக, ‘தி இந்து’ தமிழ் நாளேடு, ஜெயகாந்தன் கதைகளில் தோய்ந்தவர் களைக் கட்டுரை எழுதச் சொல்லி, அவற்றை வெளி யிட்டது.

ஜெயகாந்தன் பொதுவுடைமை இயக்கம் வழியாகப் பொதுவாழ்வுக்கு வந்தவர். அவர் அப்போதும் - பின் எப்போதும் திராவிடர் இயக்கத்தையும், பெரியாரையும் இழித்தே பேசி வந்தார்.

15-10-1961 அன்று திருச்சி தேவர் மன்றத்தில், தமிழ்நாடு எழுத்தாளர் மாநாடு நடந்தது. அதை நடத்தியவர் அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார். அம்மாநாட்டின் தலைவர் - பெரியாரை அறிந்த தி.மூ. நாராயணசாமி பிள்ளை. அம்மாநாட்டில் ஜெயகாந்தன் பேசும் போது, பெரியாரின் பேரில் கண்டனக் கணைகளை வீசினார். கருப்புச் சட்டைத்தைத் தோழர்கள் கூட்டாக எதிர்ப்புத் தெரிவித்து எழுந்து நின்றனர்; ஜெயகாந்தன் தொடர்ந்து பேசினார்; நான் என் தோழர்களை அமைதிப்படுத்தினேன்.

பெரியார், அம்மாநாட்டில் தான், “நான் ஒரு பேச்சாளன் அல்லன்; நான் ஓர் எழுத்தாளன் அல்லன்; நான் ஒரு கருத்தாளன்” என்று முதன்முதலாகக் கூறி விட்டு, “இங்கே ஏதேதோ பேசினார்கள். நான் தமிழரைப் பற்றி, தமிழைப் பற்றி, இராமாயணம் பற்றிப் பேசுவதைத் தக்க ஆதாரங்களுடன் பேசுகிறேன். அதில் தப்புச் சொல்லுகிறவர்கள், இதோ மேடையில், மேசைக்கும் கீழே நான் வைத்திருக்கிற ஆராய்ச்சி நூல்களைப் பார்த்துவிட்டுப் பிறகு குற்றமிருந்தால் சொல்லட்டும்” என்றே பேசினார். இராமாயணத்தைத் தோலுரித்தார்.

நாங்கள் அவரோடு வண்டியில் புறப்படும் போது, “இன்னின்ன நூல்களை எடுத்து வண்டியில் வையுங்கள்” என்று பெரியார் கட்டளை இட்டதன் உள்ளடக்கம் அப்போது தான் புரிந்தது.

மறுநாள் காலை 8 மணிக்கெல்லாம், பெரியாரைச் சந்தித்த இராம பக்தர் தி.மூ. நாராயணசாமி பிள்ளை, “அய்யா! நான் இராமாயணம் படித்தவன். உங்கள் பேச்சில் நீங்கள் சொன்னவையெல்லாம் எனக்குப் புதியவை” என்று கூறி, வியந்தார்.

ஜெயகாந்தன் போன்ற திறமையான எழுத்தாளர் கள், வால்மீகி இராமாயணத்தைப் படித்ததில்லை; அதனால் “உண்மை இராமாயணம்” அவர்களுக்குத் தெரியாது.

இப்படி நாம் எழுதுவதால், ஜெயகாந்தன், அவர்களின் சிறந்த எழுத்துத் திறமையை நாம் பாராட்டு வதில், எந்தக் குறைவும் இல்லை. இந்திய அரசின் உயர்ந்த இலக்கியப் பரிசான ஞானபீட விருதைப் பெற்ற தமிழர் அவர். மனமார அவரைப் பாராட்டு கிறோம்.

அப்பெருமகனாரின் மறைவு கருதி, ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்கிறோம்.

Pin It