தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக ஜெயலலிதா சொல்கின்றார். வேறு யார் சொன்னாலும் அதில் இருக்கும் உண்மைத் தன்மை பற்றி நாம் கேள்விகேட்கத் துணியலாம். ஆனால் ஆயிரக்கணக்கான கோடிகள் பணம், பல ஆயிரம் ஏக்கர் நிலம், பல நூறு சொகுசு பங்களாக்கள் என இத்தனை உழைத்துச் சேர்த்த சொத்துக்கள் இருந்தும் தவவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சாமியாரிணியே இதைச் சொல்கின்றார் என்றால் நம்மைப் போன்ற அற்பப் பதர்கள் எப்படி கேள்வி கேட்பது? அவரது ஆட்சியில் சட்டம் ஒழுங்கை சீரோடும் சிறப்போடும் பராமரித்துவரும் தமிழக காவல்துறையின் அருமை பெருமைகளைப் பற்றி நாம் கொஞ்சமாவது தெரிந்துகொண்டால்தான் தவவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஆல் இன் ஆல் அம்மாவைப்பற்றி நாம் புரிந்துகொள்ள முடியும்.

 கோவை மதுக்கரை அருகே கடந்த மாதம் 25 –ம் தேதி சென்னையில் இருந்து கேரள மாநிலம் மலப்புரம் நோக்கி சென்ற காரை போலீஸ் உடையில் இருந்த சிலர் வழிமறித்து காரில் இருந்த நபரை கீழே இறக்கிவிட்டுவிட்டு காரை கடத்திச் சென்றனர். அந்தக் காரில் ரூ. 3.90 கோடி பணம் இருந்திருக்கின்றது. காரின் சொந்தக்காரர் கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் தங்க நகைக்கடை உரிமையாளர் அன்வர் சாதா ஆவர். இது தொடர்பாக அவர் கோவை மாவட்ட போலீஸாரிடம் தன்னுடைய கார் மட்டும் கடத்தப்பட்டதாக புகார் கொடுத்துள்ளார். பணத்தைப் பற்றி புகார் கொடுக்காததற்குக் காரணம் அது ஹவாலா பணமாம். போலீஸார் நடத்திய விசாரணையில் 27-ம் தேதி பாலக்காடு அருகே கடத்தப்பட்ட காரை மீட்டுள்ளனர். இது தொடர்பாக மலப்புரத்தைச் சேர்ந்த சுதீர், சுபாஷ், ஜாகீர் ஆகியோரைப் பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் காரையும் அதில் இருந்த ரூ 3.90 கோடி பணத்தையும் கொள்ளையடித்து அதில் ரூ1.90 கோடியை தாங்கள் எடுத்துக்கொண்டு மீதமுள்ள 2 கோடியை தங்களுக்கு உதவியாக இருந்த கரூர் பரமத்தியைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் முத்துக்குமார், குளித்தலை காவல் உதவி ஆய்வாளர் சரவணன், வேலாயுதம்பாளையம் தலைமைக் காவலர் தர்மேந்திரன் ஆகியோரிடம் கொடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

  இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழிகாட்டுதலின் படிதான் தாங்கள் நடந்துகொண்டதாகவும், அவர் கொள்ளையடித்த பணத்தில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே தங்களுக்குக் கொடுத்துவிட்டு மீதியை அவரே ஆட்டையை போட்டுவிட்டதாகவும் ‘மனம்வெதும்பி’ கூறியுள்ளனர். இந்த இன்ஸ்பெக்டர் முத்துக்குமாருக்கு கரூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் பலகோடி சொத்துக்கள் இருப்பதாக சொல்லப்படுகின்றது. தற்போது கிடைத்த செய்திபடி இந்த மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டிஐஜி அருண் உத்திரவிட்டுள்ளார். ஆனால் இவர்கள் மேல் இதுவரை எதுவும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லையாம்!.

 தமிழக காவல்துறையின் பெருமையைப் பறைசாற்ற இந்த ஒரு சம்பவம் மட்டும் போதும் என்றாலும் இன்னும் சில சம்பவங்களை அப்படியே தொகுத்துப் பார்த்தோம் என்றால் தான், அவர்கள் எவ்வளவு  நல்லவர்கள் என்று நம்மால் தெளிவாகவும் தீர்க்கமாகவும் புரிந்துகொள்ள முடியும்.

 மதுரை மாவட்டம் செம்மினிப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னயன். இவருக்கும் இவரது தம்பிக்கும் சொந்த வீடு தொடர்பாக பிரச்சினை இருந்துள்ளது. சரி காவல்துறையில் இருக்கும் நாணயஸ்தர்கள் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து வாடிப்பட்டி காவல் நிலையத்தில் ஆசை ஆசையாய் புகார் கொடுக்கச் சென்றுள்ளார். அவரிடம் புகாரை வாங்கிக்கொண்ட நாணயஸ்தன் காவல்நிலைய ஆய்வாளர் தன்னுடைய தொந்தி வளர்ச்சி நிவாரண நிதியாக ரூ. 10000 கேட்டுள்ளார். ஆனால் அவரிடம் ஒரு நேர்மை இருந்திருக்கின்றது. ‘பணம் இல்லை என்றால் கவலைப்படாதே! உன்னுடைய வீட்டைவிற்று பணத்தைக் கொண்டுவா’ என்று சின்னையன் மீது இரக்கம் காட்டியுள்ளார். ‘என்னடா இது வேட்டி காணாமல் போனது என்று புகார் கொடுக்க வந்தால் இவன் கோவணத்தையே கழற்றிக்கொண்டு விட்டுவிடுவான் போல் இருக்கின்றதே’ என மனதுக்குள் நினைத்துக்கொண்ட சின்னையன் ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்று சொன்ன அண்ணாவின் சிலை முன்பு தன்னுடைய வேதனையை அப்படியே கடிதமாக எழுதி வைத்துவிட்டு பூச்சிமருந்தை குடித்துவிட்டார். இப்போது அவர் மருத்துவமனையில் இருக்கின்றார். அப்படி என்றால் காவல் ஆய்வாளர்? அவர் இன்னும் சாகவில்லை. நல்ல ஆரோக்கியத்தோடு அடுத்தடுத்த சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் தனது பணியைச் சிறப்பாக செய்துகொண்டு இருக்கின்றார்.

  அதே போல இன்னொரு சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அருகே நடந்துள்ளது. கடலாடி காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளராக இருக்கும் ஏசுராஜ் மற்றும் ஏழுமலை ஆகிய இருவரும் பானாம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் ரூ 25000 லஞ்சம் கேட்டுள்ளனர். இல்லை என்றால் அவர் மீது பொய்வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் என மிரட்டி உள்ளனர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ரமேஷ் ரூ 10000 தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். அதில் முன்பணமாக ரூ 7000  ஸ்பாட் பேமன்ட் செய்துள்ளார். மீதமுள்ள ரூ. 3000 அப்புறம் தருவதாகச் சொல்லியுள்ளார். ஆனால் பேசியபடி ரூ. 3000 கொடுக்காததால் நேர்மை நாணயத்துக்கு இந்த உலகத்தில் இடம் இல்லையா என கொதித்துப்போன அந்தக் கடமை தவறாத இரண்டு காவலர்களும் தொடர்ந்து ரமேஷிடம் ‘மரியாதையாக பணத்தைக் கொடுத்துவிடு, யார் அப்பன் வீட்டு பணத்தை யார் ஏமாற்றி வைத்துக் கொள்வது’ என  ரமேஷிடம் அறத்தை பற்றி வகுப்பெடுத்துள்ளனர். இதனால் மனம் திருந்திய ரமேஷ் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்துள்ளார். அவர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில் சாயணம் தடவிய ரூ. 3000 ரமேஷ் கொடுத்துள்ளார். அதை குரங்குகள் பங்கு போடுவது போன்று பங்கு போட்டுக் கொண்டிருக்கும்போது வழக்கம் போல மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அவர்களை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

  மேலும் தமிழக காவல்துறை  எவ்வளவு அன்போடு குற்றவாளிகளிடம் அல்லது குற்றவாளி என்று சந்தேகப்பட்டு விசாரணை என்ற பெயரில் அழைத்து வரப்படுபவர்களிடம் நடந்து கொள்கின்றார்கள் என்பதற்கு தேசிய குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையே ஒரு நல்ல சான்று. கடந்த பதிமூன்று ஆண்டுகளில் அதாவது 2001 முதல் 2013 வரை தமிழ்நாட்டில் 120 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகக் கூறுகின்றது.  காவல்நிலைய மரணங்களில் வெறும் 50 சதவீதம் மட்டுமே வழக்குகளாக பதிவு செய்யப்படுவதாக அந்த அறிக்கை சொல்கின்றது. அப்படி என்றால் உண்மையான காவல்நிலைய மரணங்களின் எண்ணிக்கை இதைவிட அதிகம் என்பது தெரிகின்றது. 2014 மற்றும் 2015 தொடர்பான புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை. அது கிடைக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை தமிழக காவல்துறை எப்படி சிறப்பாக பராமரிக்கின்றது என்ற அதிர்ச்சி கலந்த உண்மை தெரிய வரலாம்.

 தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி, சிவகங்கையைச் சேர்ந்த திவ்யா என்ற 17 வயது சிறுமி, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த பழங்குடியின இருளர் பெண்கள் போன்றவர்கள் அம்மாவின் சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கும் காவல்துறையால் காவல் நிலையத்திலேயே வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர்கள். ஜெயலலிதா தன்னைப் போலவே தவவாழ்வு வாழ்வது எப்படி என்று தமிழக காவல்துறைக்குக் கற்றுக் கொடுத்திருந்தால் இதுபோன்ற துரதிஸ்டவசமான சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்திருக்கலாம்.

 தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி சிறப்பாக உள்ளது என நாம் சொல்வதைவிட தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பெரிய அளவில் சீரழித்த ஒருவரே சொல்கின்றார் என்றால் அதை நாம் நம்பித்தானே ஆகவேண்டும். மருத்துவர் ராமதாஸ் கடந்த 2011 முதல் 2016 வரை அதிமுக ஆட்சியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கொள்ளை சம்பவங்களும், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கொலைகளும் நடந்துள்ளதாக சொல்கின்றார். இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? தமிழக காவல்துறையின் யோக்கியதையை நிறுவுவதற்கும் தவ வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மையாரின் ஆட்சித் திறத்தையும் தெரிந்து கொள்வதற்கும்.

  ஆளும்வர்க்கத்தின் கூலிப்படையாக, கொலைகார கும்பலாக தமிழக காவல்துறை செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது. சாமானிய மக்கள் காவல்துறையினரை ஒரு பொறுக்கி, கொலைகாரன், தாதா போன்றவர்களைப் பார்க்கும் போது என்ன மாதிரியான மனநிலை ஏற்படுமோ அதே மன நிலையில்தான் பார்க்கின்றனர். எந்த மக்களின் பாதுகாப்பிற்காக அது உருவாக்கப்பட்டதோ, அந்த மக்களின் பாதுகாப்பிற்கே அது அச்சுறுத்தலாக உள்ளது. தமிழ்நாட்டில் நடைபெறும் பல குற்றச்செயல்களுக்குத் தமிழக காவல்துறையே அடிப்படை காரணமாக உள்ளது. 

கொலைகாரர்களுக்கே சவால்விடும் கொலைகாரர்களாக, வழிப்பறி கொள்ளையர்களுக்கே சவால்விடும் வழிப்பறி கொள்ளையர்களாக, பாலியல் குற்றவாளிகளுக்கே சவால்விடும் பாலியல் குற்றவாளிகளாக அவர்கள் உள்ளனர். அதனால் தான் பெரும்பலான மக்கள் காவல்நிலைய வாசல் படியை மிதிப்பதே கேவலம் என்று நினைக்கின்றார்கள். குற்றவாளிகள் வெளியே இல்லை; அவர்கள் காவல்நிலையங்களுக்கு உள்ளே சட்டப் பாதுகாப்போடு உள்ளனர். இது மட்டும் அல்ல இன்னும் நிறையவே நாம் தமிழக காவல்துறையின் சிறப்புகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் படிப்பவர்களுக்கு நெஞ்சு வலி வந்துவிடும் என்பதால் நாம் இத்தோடு நிறுத்திக் கொள்வோம்.

- செ.கார்கி