2017 மே 15-இல் துவங்கி 1.5 இலட்சம் தமிழக அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் கால வரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தத் தொழிலாளர்கள் தமிழ்நாடெங்கிலும் 23,000 பேருந்துகளை இயக்கி தினந்தோரும் 2.25 கோடி மக்களை சுமந்து செல்கின்றனர்.

தமிழக அரசாங்கம், அரசு போக்குவரத்துத் துறையை வேண்டுமென்றே திட்டமிட்ட முறையில் உதாசீனப்படுத்தி சீரழித்து வருகின்றது. தமிழக அரசாங்கத்தின் கொள்கைகளும், நிதி ஒதுக்கீடும் அரசு போக்குவரத்து நிறுவனங்களைத் தொடர்ந்து இழப்பிலேயே வைத்திருக்கின்றன. தமிழக அரசு போக்குவரத்து நிறுவனங்கள் 2016-17 இல் ரூ 2982 கோடி ரூபாய் இழப்பையும், 31-3-2017 வரை ஒட்டு மொத்த இழப்பாக 18,300 கோடி ரூபாயையும் காட்டியிருக்கின்றன. இந்த இழப்பையே காரணமாகக் காட்டி, அரசாங்கமும், நிர்வாகமும் போக்குவரத்துத் தொழிலாளர்களுடைய ஊதியத்தையும், பிடித்தங்களையும் வெட்கமின்றி திருடி, அதை நிறுவனத்தின் நிதித் தேவைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு, அவர்கள் தொழிலாளர்களுடைய உழைப்பின் உபரி மதிப்பை மட்டும் திருடுவதோடு நிற்காமல், அவர்களுடைய ஊதியத்தையும், பிற பயன்களையும் கூட கொள்ளையடித்து வருகின்றனர்.

transport workers 600கடந்த சில ஆண்டுகளில் இந்த போக்குவரத்து நிறுவனங்கள் தொழிலாளர்களுடைய ஊதியத்திலிருந்து கட்டாய பிடித்தங்களாக ரூ 4500 கோடியை பிடித்திருக்கிறார்கள். ஆனால் இந்தப் பணத்தை வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் கடன் சொசைடி மற்றும் பிற நிறுவனங்களுக்குச் செலுத்தப்பட வில்லை. மாறாக தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையை போக்குவரத்து நிறுவனத்தை நடத்துவதற்கான பிற தேவைகளுக்குச் செலவழித்து வருகிறார்கள். இதன் காரணமாக வருங்கால வைப்பு நிதி, கடன் சொசைடி மற்றும் பிற நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு உரிய பயன்களைத் தர மறுத்து வருகின்றன. இந்தச் சேவைகளைப் பெறுவதற்காக, தங்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்டு திருட்டுத் தனமாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வரும் தொகையை உரிய நிறுவனங்களில் உடனடியாக கட்டப்பட வேண்டுமென தொழிலாளர்கள் கோருகின்றனர்.

தமிழக அரசிற்குச் சொந்தமான இந்த போக்குவரத்து நிறுவனங்கள், நிதிப் பற்றாக்குறையை காரணங் காட்டி, கடந்த பல ஆண்டுகளாக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உரிய வருங்கால வைப்பு நிதி, பணிக் கொடை, விடுப்பு ஊதியம், ஓய்வூதியம் போன்ற பயன்களைக் கொடுக்காமல் தவிர்த்து வருகின்றன. வழக்கமான மாத ஊதியம் இல்லாத நிலையில், பிள்ளைகளின் திருமணம், மருத்துவ செலவு மற்றும் பிற குடும்ப செலவினங்கள் போன்ற தங்களுடைய குடும்பத் தேவைகளுக்கு அவர்கள் நம்பியிருக்கும் இந்தப் பணமின்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மிகவும் மோசமான விளைவுகளைச் சந்தித்து வருகிறார்கள். இவ்வாறு இதுவரை ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய மொத்த நிலுவைத் தொகையானது ரூ 1,700 கோடியாகும். தங்களுடைய மோசமான நிலைமையை விளக்கவும், தங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய தொகையைக் கோரியும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள்.

தற்போது பணியில் உள்ள தொழிலாளர்களுக்கும் பல்வேறு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை கொடுக்கப்படவில்லை. அந்தத் தொகையானது ரூ 300 கோடியாக உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 12-ஆவது ஊதிய ஒப்பந்தம் செப்டெம்பர் 2013 இல் நடைமுறைக்கு வந்தது. இந்த ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி நடைமுறைக்கு வந்திருந்தும் கூட, அதன்படி தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சில ஊதியங்களும் பல பயன்களும் கொடுக்கப்படவில்லை. புதிய 13-ஆவது ஊதிய ஒப்பந்தமானது விவாதித்து செப்டெம்பர் 2016 இல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். இது வரை அது குறித்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இது மட்டுமின்றி போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும், இதே பணியில் அரசாங்கத்தின் துறைகளில் வேலை செய்பவர்களுக்கும் பல ஊதிய முரண்பாடுகள் இருக்கின்றன.

அரசாங்கத்திடம் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தவும், தங்களுடைய மோசமான நிலைமையை வெளிப்படுத்தவும் தொழிலாளர்களும், ஓய்வு பெற்றவர்களும் தர்ணா, உண்ணா நிலைப் போராட்டங்கள் போன்ற பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். அவர்கள் பல வழக்குகளையும் பதிவு செய்திருக்கின்றனர். இவை எதுவுமே பயனளிக்காத நிலையில் தங்களுடைய கோரிக்கைகளுக்காக கால வரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொழிலாளர்கள் மேற் கொண்டனர். பேச்சு வார்த்தை நடத்துகிறோம் என்று ஒரு பக்கம் நாடகத்தை நடத்திக் கொண்டே முன்னணி தொழிற்சங்க செயல் வீரர்களைக் கைது செய்வது, தொழிலாளர்களை அச்சுறுத்துவது போன்ற வன்முறை முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டது. இந்தத் தாக்குதல்களால் வெகுண்டெழுந்த தொழிலாளர்கள், 15-ஆம் தேதி துவக்கத் திட்டமிட்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை 14-ஆம் தேதி பிற்பகலிலிருந்தே தன்னெழுச்சியாகத் துவக்கினர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடங்கின. தொழிற் சங்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்த அளவில் தொழிலாளர்கள் ஒன்றுபட்டிருந்த காரணத்தால், அவர்களைப் பிளவு படுத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. ஆளும் அதிமுக தொழிற் சங்கத்தைச் சேர்ந்த கணிசமான தொழிலாளர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றனர்.

மே 15 அன்று சில பேருந்துகளை இயக்க அரசாங்கம் கடுமையான முயற்சிகளை மேற் கொண்டது. எனினும் பெரும்பாலான பேருந்துகள் ஓடவில்லை. வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக தமிழ்நாடெங்கிலும் எல்லா வணிகமும், உற்பத்தியும், தொழில்களும், கல்வி, சுகாதாரம் போன்றச் சேவைகளும், மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டன. நீதிக்குப் புறம்பாக வேலை நிறுத்தத்தை உடைப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாதுகாப்பளிப்பதற்காக சென்னையில் மட்டுமே 15,000-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கட்டவிழ்த்து விடப்பட்டனர். அரசாங்கத்தின் உதாசீனமான போக்கின் காரணமாக பெரும்பாலான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொழிலாளர்கள், அலுவலகங்களுக்குச் செல்பவர்கள், வணிகர்கள், மாணவர்கள், நோயாளிகள், பெண்கள் மற்றும் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்கள் மோசமாக பாதிக்கப்பட்டனர். அவர்கள் தங்களுடைய தினசரி வேலைகளை மேற் கொள்ள முடியவில்லை. மேலும் பலர் அதிக பணம் கொடுத்து பயணிக்க வேண்டியிருந்தது.

வேலை நிறுத்தத்தை உடைப்பதற்காகவும், மக்களுடைய கோபத்தை திசை திருப்புவதற்காகவும், எவ்வித சட்ட அனுமதியின்றி தனியார் வாகனங்கள் ஓடுவதற்கும், விருப்பம் போல பயணிகளைக் கொண்டு செல்லவும், மக்களிடமிருந்து பணத்தைப் பறித்துக் கொள்ளவும் அரசாங்கம் அனுமதித்தது. ஆடோக்களும், பிற தனியார் வாகனங்களும் போக்குவரத்து இல்லாமல் தவித்த பயணிகளிடமிருந்து பணத்தைக் கறந்து கொண்டனர். தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பாவிட்டால், அவர்களுக்கு பதிலாக தற்காலிக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வோம் என அரசாங்கம் அவர்களை அச்சுறுத்தியது. அனுபவமற்ற தனியார் வாகனங்களால் மாநிலமெங்கும் பல்வேறு வாகன விபத்துக்கள் நிகழ்ந்தன.

வேலை நிறுத்தப் போராட்டம், மக்களை மிகவும் மோசமாக பாதித்திருப்பதாக கூறிய உயர் நீதி மன்ற நடுவர் குழு, “வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள எல்லா தொழிலாளர்களும் உடனடியாக வேலைக்குத் திரும்பி வழக்கமான போக்குவரத்து சேவைகளை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் வரத் தவறினால், தலைமைச் செயலாளரும், போக்குவரத்துச் செயலாளரும் அத்தியாவசிய சேவைகள் சட்டத்தைப் பயன்படுத்தி தொழிலாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென” ஆணையிட்டனர். இந்திய அரசின் ஒரு அங்கமான நீதி மன்றத்தின் உண்மையான முகத்தை இது காட்டுகிறது. தொழிலாளர்களுடைய சட்ட பூர்வமான நிதிகளை சட்டத்திற்குப் புறம்பாக நிர்வாகமே கையாடல் செய்திருப்பதையோ, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற பயன்களை அளிக்க வேண்டிய கடமையிலிருந்து நிர்வாகமும் அரசாங்கமும் தவறியிருப்பதையோ இந்த நீதி மன்றம் கேள்வி கேட்கவில்லை. ஆனால் இந்த சட்ட விரோத செயல்களால் பாதிக்கப்பட்டு, வெகு நாட்களாக நீதி கேட்டுப் போராடும் தொழிலாளர்கள் மீது கருப்புச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டுமென்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறது!

போக்குவரத்து சேவைகள் இல்லாத காரணத்தால் மிகவும் மோசமான சூழ்நிலைகளை எதிர் கொள்ள வேண்டியிருந்தாலும், அரசாங்கத்தின் குற்றவியலான பொறுப்பற்ற தன்மையை பெரும்பாலான மக்கள் உணர்ந்து கொண்டனர். அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களுடைய இந்த நியாயமான போராட்டத்திற்கு தமிழக மக்கள் ஆதரவு அளித்தனர். வங்கி ஊழியர் சங்கங்கள், அரசு ஊழியர் சங்கங்கள், தொழிற்சாலைத் தொழிலாளர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், தொழிற் சங்கங்களும் அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களுடைய வேலை நிறுத்தத்திற்கு போர்க்குணமிக்க ஆதரவைத் தெரிவித்து அறிக்கைகளையும் சுவரொட்டிகளையும் வெளியிட்டனர். எல்லா கம்யூனிஸ்டு மற்றும் தொழிலாளர் கட்சிகளும், அமைப்புக்களும் ஆளும் அதிமுக நீங்கலாக எல்லா அரசியல் கட்சிகளும் வேலை நிறுத்தத்திற்கு முழு ஆதரவளித்தனர்.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தினாலும், வேலை நிறுத்தத்திற்கு பரந்துபட்ட ஆதரவு இருந்த காரணத்தாலும், தொழிலாளர்கள் மீது அரசு நடத்திய அநீதியான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு வலுத்து வருவதாலும் தொழிலாளர்களுடைய கோரிக்கைகளை ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டது. உடனடியாக ரூ 1250 கோடியைத் தருவதற்கும், மீதமுள்ள நிலுவைத் தொகையை 2017 செப்டெம்பர் மாதத்திற்குள் கொடுக்கவும் அரசாங்கம் ஒப்புக் கொண்டது. தொழிலாளர்களுடைய ஊதியத்திலிருந்து பிடிக்கப்பட்ட தொகையை உரிய கணக்குகளில் கட்டுவது குறித்த பிரச்சனையைப் பொறுத்த மட்டிலும் அடுத்த 3 மாதங்களுக்குள் ஒரு “கொள்கை முடிவெடுக்கப்படும்” என்று அரசாங்கம் வாக்குறுதியளித்திருக்கிறது. 13-ஆவது ஊதிய உடன்படிக்கை பற்றி பேச்சு வார்த்தை தொடரும் என்றும் அவர்கள் வாக்குறுதி கொடுத்திருக்கின்றனர்.

கோரிக்கைகள் ஓரளவு மட்டுமே நிறைவேற்றப்பட்டு, பெரும்பாலானாவை ‘வாக்குறுதிகளாக’ இருந்த நிலையிலும், வேலை நிறுத்தப் போராட்டத்தை பின்வாங்கிக் கொள்வதென தொழிற் சங்கங்கள் மேற் கொண்ட தீர்மானத்தின் அடிப்படையில் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களுடைய போராட்டத்தை தொழிலாளர் ஒற்றுமைக் குரல் ஆதரிக்கிறது. அவர்கள் தங்களுடைய எல்லா உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் வென்றெடுப்பதற்காக போராட்டத்தை வரும் காலங்களில் மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.

 

Pin It