thikasi 3தி.க.சி. என்று அன்புடனும் தோழமையுடனும் அழைக்கப்படும் முதுபெரும் இலக்கியச் செயற் பாட்டாளர் தி.க.சிவசங்கரன் அவர்கள் திருநெல் வேலியில் 1925ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி பிறந்தார். தன்னுடைய ஐந்து வயதில் தந்தையையும், ஏழு வயதில் தாயையும் இழந்து தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்தார். சின்னஞ்சிறு வயதி லேயே புத்தகங்களைத் தனது ஆத்மார்த்த நண்பர் களாக்கி தன்னைச் செழுமைப்படுத்திக்கொண்டார்.

1936இல் விடுதலைப் போராட்டம் உக்கிர மாக நடந்து கொண்டிருந்தது. பதினோறு வயதுச் சிறுவனாக இருந்த தி.க.சி. தனது வீட்டின் வழியாக தேசபக்தர்கள் பாரதியின் பாடல்களைப் பாடிக் கொண்டு மிடுக்குடன் ஊர்வலமாக செல்வதைப் பார்த்து பரவசமடைந்தார். அப்பாடல் வரிகள் அப்பிஞ்சு நெஞ்சிற்குள் வீரியத்தை விதைத்தன.

1940-41 காலகட்டத்தில் தி.க.சியும், அவரை யொத்த சில இளைஞர்களும் இணைந்து ‘நெல்லை வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கினர். இதே காலகட்டத்தில் புகழ்மிக்க எழுத்தாளரான தொ.மு.சி ரகுநாதன் ‘ஜவஹர் வாலிபர் சங்கம்’ அமைப்பையும், வேறுசில இளைஞர்கள் ‘மணியரசு செந்தமிழ்க் கழகம்’ அமைப்பையும் நெல்லையில் தொடங்கி நடத்தி வந்தனர். இந்த இலக்கியம் மற்றும் பொதுவாழ்வுச் சூழல்தான் தி.க.சிக்கு தொடக்க கால அடித்தளமாக அமைந்தது.

தமிழறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை, ரசிகமணி டி.கே.சி., இலக்கியப்பேராசான் ப. ஜீவானந்தம் போன்றவர்களை பேச்சுக் கலையின் முன்மாதிரி யாகக் கொண்டு தங்கள் பேச்சாற்றலை வளர்த்துக் கொண்ட நெல்லை வாலிபர் சங்கத்தினர் ‘இளந் தமிழன்’ என்ற ஒரு கையெழுத்துப் பிரதியைத் தொடங்கினர். அச்சமயத்தில் அரசு வேலையை உதறிவிட்டு முழுநேர எழுத்தாளராக உருவெடுத் திருந்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன் நெல்லையில் தனது குடும்பத்துடன் குடியிருந்தார். தி.க.சி. உள்ளிட்ட இளைஞர்கள் வல்லிக்கண்ணனைச் சந்தித்து ‘இளந்தமிழன்’ கையெழுத்து இதழுக்கு ஆசிரியராக இருக்கும்படி அவரை வேண்டினர். அதனை வல்லிக்கண்ணனும் ஒப்புக்கொண்டார். இந்த இளந்தமிழன் கையெழுத்து இதழில்தான் தொடக்கத்தில் தி.க.சி எழுதி வந்தார்.

பதினெட்டுவயது இளைஞனாக இருக்கும் போது தி.க.சி.யின் வீட்டில் வேலை பார்த்துவந்த ஒரு வண்டிக்காரரிடம் வறுமையால் வாடும் அவரின் வாழ்க்கையைத் துருவித் துருவிக் கேட்டறிந்து அந்த சோகச் சம்பவங்களை உள்வாங்கி அதனை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதுதான் அவரின் முதல் சிறுகதையான ‘வண்டிக்காரன்’. அந்தக் கதையை வாசித்துப் பார்ப்பதற்கு வல்லிக் கண்ணனிடம் கொடுத்தார் தி.க.சி. வாசித்து நெகிழ்ந்து போன வல்லிக்கண்ணன் அச்சிறுகதையை நாரண. துரைக்கண்ணனிடம் கொடுத்து அதனை பிரசண்ட விகடனில் வெளியிட வைத்தார். வல்லிக் கண்ணனின் தொடர்பு தி.க.சி.யின் இலக்கியப் பணிக்கு வலுவூட்டியது.

ஏற்கனவே உரைநடையில் எழுதிக் கொண்டிருந்த தி.க.சி. பின்னர் கதை, கவிதை என்று எழுதத் தொடங்கினார். தனியார் வங்கி ஊழியராக பத்தொன்பது ஆண்டுகள் பணியாற்றினார். அச் சமயத்தில் வங்கி ஊழியர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கென தொழிற்சங்கத்தைத் தொடங்கிச் சிறப்புடன் நடத்தி வந்தார். தொழிற்சங்கப் பணி யோடு இலக்கியப்பணியையும் இணைத்தே செய்து கொண்டிருந்தார். சென்னையிலிருந்து வெளிவந்த ‘சோவியத்நாடு’ இதழின் செய்திப்பிரிவில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். ஏராளமான கட்டுரைகள், செய்திகள் மற்றும் தகவல்களைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்த தி.க.சி இந்த நிறுவனத்தில் 1965 முதல் 1990 வரை கால் நூற்றாண்டு காலம் பணியாற்றியுள்ளார்.

அரை நூற்றாண்டுக்கு முன்பே இந்திய முற்போக்குப் படைப்பாளிகள் பிரேம்சந்த், முல்க்ராஜ் ஆனந்த், சஜ்ஜாத் ஜாகிர் போன்றவர்களால் தொடங்கப்பட்டு ஜவகர்லால் நேரு, சரோஜினி நாயுடு, ரவீந்திரநாத் தாகூர் போன்றவர்களால் ஆதரிக்கப்பட்டு இன்றளவும் செயல்பட்டு வருகிற முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தமிழ்நாட்டில் உள்ளம் குளிர வரவேற்று வளர்த்த முதன்மை யானவர்களில் தி.க.சி. மிகவும் குறிப்பிடத்தகுந்தவர்.

தமிழ்நாட்டில் முற்போக்கு இலக்கியத்திற்கு முரசு கொட்டிய இலக்கியப்பேராசான் பொது வுடைமைப் போராளி ப. ஜீவானந்தம் அவர்களால் 1961-இல் தொடங்கப்பட்ட ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்’ என்ற கீர்த்திமிக்க அமைப்பின் தொடக்கத்திற்கு மிகவும் துணை நின்றவர்களில் தி.க.சியும் ஒருவர். அன்றுமுதல் இவ்வமைப்பின் செயல்பாடுகள் அனைத்திலும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர் தி.க.சி.ஜீவா தொடங்கிய, அவரையே ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த முற்போக்கு இலக்கிய இதழான ‘தாமரை’ இதழின் பொறுப்பாசிரியராக 1965 முதல் 1972 வரையில் மிகச்சிறப்பாகச் செயல் பட்டார். இக்காலகட்டத்தை ‘தாமரையின் பொற் காலம்’ என்று இலக்கிய, இதழியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தி.க.சி.யின் தனித்துவமே தான் வளர்வது மட்டுமல்ல தன் காலத்தில் வாழும் இளம் படைப் பாளிகளை வளர்த்தெடுப்பதில் தனிக்கவனம் செலுத் தியதுதான். இன்று தமிழ்நாட்டில் புகழ் பூத்த படைப்பாளர்களில் பலர் இவரால் இனம் காணப் பட்டு இவரது வழிகாட்டுதலாலும் ஊக்குவிப் பாலும் வளர்ந்தவர்கள். தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான கல்யாண்ஜி என்ற வண்ணதாசன் இவரது மகனாவார். ஒரு பெரும் படைப்பாளர் பட்டாளமே திக.சி.யின் முயற்சி யால் தமிழ் உலகிற்கு அறிமுகமானது என்பதில் சந்தேகமில்லை.

‘தாமரை’ இதழ் இவர் காலத்தில் எழுத்தா ளர்களின் உலைக்களனாக விளங்கியது. நிறைவுகளை ஊரறியக் கூறி குறைகளை உரியவரிடம் மட்டும் சொல்லித் திருத்துகிற தாய்மையுள்ளம் மிக்க இலக்கிய விமர்சகராகத் திகழ்ந்தவர் தி.க.சி.

தி.க.சி ஜனநாயகப் பண்புமிக்கவர். இவர் கருத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் கருத்துக்குக் கூட உரிய மதிப்பளித்து பண்புக் கோட்டைத் தாண்டாமல் பதில் சொல்லிப் புரியவைக்க அன்பு கலந்த முயற்சியை மேற்கொள்வார்.

இவர் நான்கு திறனாய்வு நூல்களையும், ஆறு மொழிபெயர்ப்பு நூல்களையும் படைத்துள்ளார். மனிதம் என்ற மந்திரச் சொல்லை திரும்பத் திரும்ப உச்சரிக்கும் இவர் ஒரு உச்சகட்ட மனிதாபிமானி.

மார்க்சீயத்தை அடிப்படைக் கோட்பாடாகக் கொண்டு பொதுவுடைமைக் கொள்கையில் ஊறித் திளைத்து இலக்கியம் படைக்கும் இவர் புதிய படைப்புகளை அன்றாடம் வாசித்தபோதிலும் தினசரி ஒரு தடவையாவது தவறாமல் புரட்டுவது திருக்குறள், பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள் ஆகிய மூன்று புத்தகங்களாகும்.

“எழுத்தாளன் என்பவன் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று நிரம்பியவனாய்- அன்புஉள்ளம், அறஉள்ளம், ஆண்மைஉள்ளம் பூண்டவனாய் இருத்தல் வேண்டும். இடையில் நிறுத்தாது, இற்று விழுந்துபோகாது தொடர்ந்து பயணிக்க வேண்டும். அதேபோல எழுத்தாளனுடைய பேனா அவனுடைய வயிற்றை மட்டும் நிரப்பவோ அல்லது காகிதத்தை நிரப்பி மனநிறைவு காண்ப தற்கோ உரிய கருவி அல்ல. அது சமுதாய விரோதி களுக்கு எதிரான வாளாகவும் மக்களுக்குக் கேடய மாகவும் விளங்க வேண்டும்” என்று தி.க.சி. சமீபத்திய பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார்.

தி.க.சி. தமிழ் உலகின் ஓர் அரிய திறனாய் வாளர் ஆவார். படைப்பாளர், இதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர், திரைப்பட விமர்சகர், இலக்கிய விமர்சகர், தொழிற்சங்க அமைப்பாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டவரும், 2000ம் ஆண்டின் ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்ற இலக்கியவாதியுமான தி.க.சி அவர்களுக்கு 2011ம் ஆண்டிற்கான பாரதி விருதினை ஈரோட்டில் நடைபெற்ற பாரதி விழாவில் 11.12.2011 ஆம் தேதி மக்கள் சிந்தனைப் பேரவை வழங்கியது.

தமிழகத்தின் மிகமூத்த தலைசிறந்த படைப் பாளிகளுக்கான பாராட்டு நிகழ்ச்சி, ஈரோடு புத்தகத் திருவிழாவில் 08.08.2012 அன்று மக்கள் சிந்தனைப் பேரவையால் நடத்தப்பட்டது. பல்லா யிரம் மக்கள் பங்கேற்ற இந்த எழுச்சிமிக்க நிகழ்ச்சியிலும் திரு.தி.க.சி அவர்களுக்கு சிறப்புப் பாராட்டு மடல் வழங்கி கௌரவித்து மகிழ்ந்தது மக்கள் சிந்தனைப் பேரவை.

இம்மாபெரும் மனிதரின் மரணம் நம் அனை வருக்கும் ஒரு பேரிழப்பாகும். அவர் வழி நடக்க- அவர் கனவு கண்ட சமூகத்தைப் படைக்க- அவர் பெயரில் உறுதியேற்போம்.

‘மக்கள் சிந்தனைப் பேரவை’ தனது ஆழ்ந்த இரங்கலையும், வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

மக்கள் சிந்தனைப் பேரவையின் பாரதி விருதை திரு.தி.க.சிவசங்கரன் பெற்றபோது எடுத்த எடுத்த படம்.

thikasi- 4 ungalnoolagamapr

கல்வியாளர் பேராசிரியர் க.ப. அறவாணன் விருது வழங்குகிறார். மேடையில் (இடமிருந்து வலம்): மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், ‘தினமணி’ ஆசிரியர் கே.வைத்தியநாதன், மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வே.க.சண்முகம் ஐ.ஏ.எஸ்., தேசிய நல விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் ‘பத்மஸ்ரீ’ எஸ்.கே.எம். மயிலானந்தன், கல்வெட்டறிஞர் முனைவர் செ.ராசு ஆகியோர் உள்ளனர்.

மக்கள் சிந்தனைப் பேரவையின் ஈரோடு புத்தகத் திருவிழா மேடையில் 08. 08. 2012 ஆம் தேதி தமிழகத்தின் மிக மூத்த - தலைசிறந்த படைப் பாளர்களான இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், விக்ரமன், டி.செல்வராஜ், தி.க.சிவசங்கரன், நீல.பத்மநாபன், கு.சின்னப்ப பாரதி ஆகியோருக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்புப் பாராட்டு மடலை திரு. தி.க.சிவ சங்கரன் அவர்களுக்கு திரு.ஆர்.நல்லகண்ணு ஈரோடு புத்தகத் திருவிழா மேடையில் 08. 08. 2012 ஆம் தேதி வழங்கியபோது எடுத்த படம்.

Pin It