நோபல் பரிசு பெற்ற சீன எழுத்தாளர் மோ யானுடன்  ஓர் உரையாடல்

அறிமுகமும் மொழிபெயர்ப்பும்

யமுனா ராஜேந்திரன்

may yon 350சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரும், ஷான்டாங்க் பிரதேசக் கட்சிச் செயலாளரும்,  சீன அரச ஆதரவாளருமான நாவலாசிரியர் மோ யான் இரண்டாயிரத்துப் பன்னிரண்டாம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றிருக்கிறார். சீனாவுக்கான தேசிய கௌரவமாக சீன அரசு இதனை இப்போது கொண்டாடுகிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும் சீனப் பிரதமரும் தனிப்பட்ட முறையில் மோ யானை வாழ்த்தியிருக்கிறார்கள். சீன அரசின் அதிகாரபூர்வ நாளிதழான மக்கள் தினசரி இந்தப் பரிசை சீன இலக்கியத்திற்கான முதல் நோபல் பரிசு எனக் குறிப்பிட்டிருக்கிறது. நீண்ட காலம் தாமதித்து வந்திருக்கிற பரிசு இது எனவும் மக்கள் தினசரி சொல்லியிருக்கிறது. 1956 ஆம் ஆண்டு ஷான்டாங்க் பிரதேசத்தில் விவசாயிகளின் மகனாகப் பிறந்த மோ யான் கலாச்சாரப் புரட்சியில் ஈடுபட்டவர். பின்னாளில் மக்கள் விடுதலை ராணுவத்தில் பணியாற்றியவர். மக்கள் விடுதலை ராணுவத்திற்கு இலக்கியம் பயிற்றுவித்தவர். எண்பதுகளில் முறைப்படியாக பல்கலைக்கழகத்தில் சீன இலக்கியம் பயின்றவர்.

சீனச் சிறுகதையாசிரியரான லூசுனது சமூக யதார்த்தமும்  இலத்தீனமெரிக்க நாவலாசிரியர் கார்சியா மார்க்வசினது மாந்திரீக யதார்த்தமும் தனது இலக்கிய ஆதர்சங்கள் எனச் சொல்கிறார் மோ யான்.

ஷாங் இமு சீனாவின் புகழ்மிக்க திரைப்பட இயக்குனர். மோ யானின் நாவலான சிவப்பு மது ஷாங் இமுவினால் திரைப்படமாக்கப்பட்டுள்ளது. மோ யானைப் போலவே ஷாங் இமுவும் இன்றைய சீன அரச அதிகாரத்திற்கு அனுசரனையாளராக ஆகிப் போனவர். ஷாங் இமுவின் தந்தையார் சீன உள் நாட்டுப் போரில் ஷியாங்கே ஷேக்கின் தேசியப் புரட்சி ராணுவத்தில் அதிகாரியாக இருந்தவர். இதனது விளைவாக கலாச்சாரப் புரட்சி கால அனுபவம் என்பது ஷாங் இமுவுக்கு வலி நிறைந்த தாகவே இருந்தது. டு லிவ் போன்ற ஷாங் இமுவின் ஆரம்பகாலப் படங்களில் கலாச்சாரப் புரட்சியின் அனர்த்தங்கள் குறித்து அவர் பேசினார். பிற்பாடு ஹீரோ போன்ற படங்களில் மகோன்னத சீன தேசத்தின் ஒற்றுமை குறித்துப் பேசுபவராக அவர் ஆகினார். இன்றைய நாளில் மோ யான், ஷாங் இமு போன்ற இரு கலைஞர்களுமே இன்றைய சீனாவின் பெருமிதத்தைக் கொண்டாடும் ஆளுமைகளாகவே இருக்கிறார்கள்.

மோ யானின் சிவப்பு மது நாவல் ஐந்து அங்கங்கனால் ஆன, நூறாண்டுகள் விரிந்த, மூன்று தலைமுறைகளின் கதை சொல்லும் நாவல். நாவலின் முதல் இரு அங்கங்களை மட்டுமே கொண்டதாக ஷாங் இமுவின் திரைப்படம் உருவாகியிருக்கிறது. மோ யானின்  சிவப்பு மது நாவல் எண்பதுகளில் வெளியானதையடுத்து ஷாங் இமு 1987 ஆம் ஆண்டு சிவப்பு மது நாவலுக்குத் திரைவடிவம் (RedSorghum : 1987) தருகிறார். சிவப்பு மது நாவலே உலக அளவில் மோ யானின் பெயரை நிலைநாட்டியது. அதுபோலவே சிவப்பு மது எனும் தனது முதல் திரைப்படத்தின் மூலமே ஷாங் இமுவும் உலக சீனாவினுள் பிரவேசித்தார். சிவப்பு மது நாவலின் காலம் 1937 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரையிலான ஜப்பானிய ஆக்கிரமிப்பின் கீழான சீனக் காலம். சோளக் கதிர்களால் மூடுண்ட குவாங்க்சா பிரதேசத்தில் கதை நடக்கிறது. மோ யானின் கதை சொல்லல்முறை நாட்டுப்புறக் கதைப் பண்புகளினதும் மாயா யதார்த்தத்தினதும் கலவை யாக இருக்கிறது என நோபல் பரிசுக்குழு சொல் வதனை அவருடைய சிவப்பு மது கதைப்போக்கி லேயே நாம் காணமுடியும்.

சிவப்பு மது கதை துவங்கும்போது ஆண்கள் குழவினர் முரசங்களும் குழல்களும் அதிர இசை யெழுப்பியபடி மணப்பெண்ணின் அலங்கரிக்கப் பட்ட சப்பரத்தைச் சுமந்து புழுதியெழுப்பியபடி ஒரு கிராமத்தை அண்மித்துக் கொண்டிருக்கிறார்கள். சப்பரத்தின் உள்ளிருக்கும் மணப்பெண்ணை மணமகன் வீடு கொண்டுசெல்லும்வரை குலுக்கிக் கொண்டே செல்லவேண்டும் என்பது சீன கிராமிய மரபு. சப்பரத்தை மணப்பெண்ணுக்குப் பீதியூட்டும்படி குலுக்கும் திறந்த மேனியுடனான ஆண்கள் மணப் பெண்ணை நையாண்டி செய்வதிலும் ஈடுபடுகிறார்கள். காரணம் வறிய இளம் பெண்ணான அவள் ஒரு கோவேறு கழுதைக்கான ஈடாக அவளது தந்தையால் மணமேடைக்கு அனுப்பப்படுகிறவள். மணமகன் தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு முதியவன். அவனுக்கு மதுச்சாலையன்றும் நிலங்களும் சொத்தாக இருக்கிறது. விரைவிலேயே மரணமுறப் போகும் தொழுநொய் கொண்ட முதிய நிலவுடமை யானின் சொத்துக்களின் வாரிசாகத் தனது மகள் ஆவாள் என்பது அவளது தந்தையின் எண்ணம். தவிர்க்கவியலாத சூழலில் அந்த இளம்பெண் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறாள் என்பது நமக்கு முதல் காட்சியிலேயே தெரிகிறது.

சப்பரம் குலுக்கப்படுகிற ஒவ்வொரு முறையும் திரை அசைகிறபோது தன்னைச் சுமந்து செல்லும், சதா தன்னை நையாண்டி செய்யும் இளைஞனொரு வனின் தினவெடுத்த வியர்வை துளிர்க்கும் தசை திரண்ட தோள்களை மோகத்துடன் இளம்பெண் கள்ளமாகப் பார்த்துக்கொண்டே வருகிறாள். தன்னை அவள் கள்ளமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதை அவன் அறிவான் என்பதையும் அந்த இளைஞன் அவளுக்கு உரக்கத் தெரியப்படுத்தவும் செய்கிறான். மோகத்தினால் விளையும் இயல்பான கள்ளமின்மையின் குதூகலம் கொப்பளிக்கும் காமம் இங்கு முரசும் குழலும் கலந்து காமமாக வழிகிறது.

கதாநாயகியாக நடித்திருப்பவர் நடிகை காங் லீ. இயக்குனர் ஷாங் இமுவின் பெரும்பாலமான படங்களின் கதாநாயகி மற்றும் நிஜ வாழ்வில் அவரது காதலி காங் லீ. ஷாங் இமு தொடர்ந்து இயக்கிய ஜூ டூ, ஷாங்காய் டிரையாட், ரெய்ஸ் த ரெட் லான்டர்ன், டு லிவ் போன்ற படங்களில் பெண்மையின் அதிகாரத்தையும் பெண் உடலின் நெகிழ்வையும் காமத்தின் உக்கிரத்தையும் திரையில் நிகழ்த்திக் காட்டிய அதியற்புதமான நடிப்பாற்றலும் அழகும் படைத்தவர் காங் லீ. தனது பாலுறவு ஆற்றலின் கீழ் ஆண்களை மண்டியிடவைக்கும் பாத்திரங்களையே பெரும்பாலுமான ஷாங் இமுவின் படங்களில் காங் லீ ஏற்றார். அதே பாலுறவு ஆற்றலின் உக்கிரவடிவமாகவே சிவப்பு மது திரைப்படத்திலும் காங் லீ தோன்றுகிறார். சிவப்பு மது நடிகையாகக் காங் லீயின் முதல் திரைப்படம்.

இடையீடற்ற மீக நீண்ட காட்சிகளைக் கொண்ட திரைப்படமாகச் சிவப்பு மது இருக்கிறது. பத்து அல்லது பன்னிரண்டு காட்சிகளால் ஆன தொண்னூறு நிமிடத் திரைப்படம் சிவப்பு மது. கிராமத்தை அண்மித்துக் கொண்டிருக்கும் சப்பர ஊர்வலம் ஒரு அடர்ந்த சோளக்காட்டைக் கடந்து தான் கிராமத்தை அடையமுடியும். சோளக்காட்டின் மத்தியில் வரும்போது துப்பாக்கி ஏந்திய முகமூடிக் கொள்ளையன் ஒருவனால் சப்பரக் குழு எதிர் கொள்ளப்படுகிறது. சப்பரத்தைச் சுமக்கும் கூலிகளிடம் அவர்களது இடுப்புப் பட்டிகளையும் பணத்தையும் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கும் முக மூடிக்காரன் சப்பரத்தின் திரையை விலக்கி வண்ண மயமான காலணியினால் மூடப்பட்ட இளம் பெண்னின் பாதத்தை தனது ஐந்து விரல்களாலும் அழுத்திப் பிசைகிறான்.

சப்பரத்திலிருந்து வெளியேறி அவளை சோளக் காட்டுக்கு உள்ளே போகச் சொல்கிறான். அவளுடன் கலவி செய்வது அவன் திட்டம். மௌனமாகச் சப்பரத்திலிருந்து இறங்கும் இளம்பெண் தான் கள்ளநோட்டமிட்ட தினவேறிய தோள்களுக்குச் சொந்தக்காரனை வைத்த கண் வாங்காமல் பார்க் கிறாள். லேசாக கண்ஜாடை காட்டவும் செய்கிறாள். அவனுக்கு ஆவேசம் வந்துவிடத் தனது தோழர் களுடன் சேர்ந்து முகமூடிக் கொள்ளையனை மடக்கி அடித்து மிதித்துக் கொல்கிறான். கொள்ளையன் ஒரு போலி. அவனது துப்பாக்கியும் ஒரு போலித் துப்பாக்கி. மணப்பெண் இப்போது தொழுநோய் முதியவனின் மதுச்சாலைக்கு வந்துசேர்ந்துவிட்டாள். படம் துவங்கி இந்த இருபது நிமிடங்கள் வரையிலு மானது ஒரே ஒரு காட்சி.

அடுத்த காட்சியில் தொழுநோய்க்காரனிடம் இருக்க விரும்பாது கோவேறு கழுதையில் அமர்ந்த படி தனது தந்தை நடந்துவர தனது கிராமத்திற்குத் திரும்பும் பயணம் மேற்கொள்கிறாள் இளம்பெண். பயணம் மறுபடி அடர்ந்த சோளக்காட்டைக் கடந்து செல்ல வேண்டும். மகள் சோளக்காட்டினுள் திடீரெனக் காணாது போய்விடுகிறாள். மகள் சிறுநீர் பெய்வதற்காகச் சோளக் காட்டினுள் போயிருப்பதாகக் கருதும் தந்தை அவளுக்காகக் காத்திருக்கிறார். நிஜத்தில் அவளது கோவேறு கழுதை சோளக்கட்டின் நாற்சந்தியில் வரும்போது முகமூடிக் கொள்ளையன் ஒருவன் அவளை சோளக்காட்டினுள் பலவந்தமாகக் கடத்திச் செல்கிறான். அவனிடமிருந்து தப்பி அவள் ஓங்கி உயர்ந்த சோளக் கதிர்களிடையில் ஒடிக்கொண் டிருக்கிறாள். வந்தவன் முகமூடியை விலக்குகிறான். அவன் திண்தோள் இளைஞன். நட்டநடுக்காட்டில் அவளோடு உடலுறவு கொள்ள கால்களால் மிதித்து வட்டவடிமாக ஒரு சோளத்தட்டுப் படுக்கையை அவன் ஏற்பாடு செய்கிறான். கால்களை விரித்தபடி அதன் நடுவில் அவனுக்காக அவள் படுத்திருக் கிறாள். நீண்ட நேரம் படுத்திருக்கும் நமக்கு மேலாக சோளத்தட்டு இடையிடையில் சூரிய ஒளியைக் கசியவிட்டு நீண்ட நேரம் அசைந்து கொண்டிருக்கிறது. உடலுறவின் சுகத்தை பார்வையாளனுக்கு அந்த நீண்ட நேரம் அசையும் சோளத் கதிர்களின் அசைவில் கொண்டுவந்து விடுகிறார் இயக்குனர் ஷாங் இமு.

உடலுறவு முடிந்து புன்னகையுடன் சோளக் காட்டிலிருந்து வெளியே வரும் மகளை ஏன் சிறுநீர் பெய்ய இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டாய் என்கிறார் தந்தை. மகள் பதிலிறுக்காமல் தனக்குள் சிரித்துக் கொள்கிறாள். சொர்க்கத்துக்குப் போவதற்கு ஒன்பதாயிரத்துத் தொள்ளாயிரத்து ஒன்பது பாதைகள், பெண்ணே ஏன் காத்திருக்கிறாய்? என ஒரு விரகதாபப் பாடலை சோளக்காட்டினுள் எங்கோயிருந்தபடி இசைக்கிறான் திண்தோள் இளைஞன். கெட்ட பாட்டா படிக்கிறாய் போக்கிரிப் பயலே என அவனைத் தேடுகிறான் மகளைப் பின் தொடரும் தந்தை. வீடு திரும்பும் மகளுக்கும் தந்தைக்கும் வாய்த்தர்க்கம் நடக்கிறது. தொழுநோயாளன் நல்லவன் எனவும், பணக்காரன் எனவும், அவன் நமக்கு கோவேறு கழுதையன்று கொடுத்திருக் கிறான், அவன் இறந்தபின் நீயே அவனது வாரிசு என்றும் சொல்கிறான் தந்தை. வீட்டிலுள்ள பொருட் களை விசிறியடித்துவிட்டு தனது தொழுநோய்க் கணவனிடம் திரும்புகிறாள் பெண்.

அவள் கணவனது வீடு திரும்பும்போது கணவன் சுவடு தெரியாமல் காணாது போயிருக்கிறான். அவன் எங்கே போனான் எனவோ அவன் கொல்லப் பட்டானா எனவோ எவருக்கும் தெரியாது. கிடைத்த தெல்லாம் அவனது காலணி மட்டும்தான். அவன் கொள்ளையடிக்கப்பட்டதற்கான எந்தச் சான்றுகளும் இல்லை எனப் பேசிக் கொள்கிறார்கள் மதுச்சாலைத் தொழிலாளர்கள். தொழுநோய் நிலவுடைமை யாளனைக் கொன்றவன் தனது தாத்தாவாக இருக்கலாம் என்கிறான் கதை சொல்லி. தனது தாத்தா அதனைத் தன்னிடம் ஒரு போதும் சொன்னதில்லை எனவும் அவன் சொல்கிறான். சிவப்பு மது நாவலின் கதை ஒரு பேரனால் சொல்லப்படுகிறது. தனது தாத்தா பாட்டியிடம் இருந்து அவனது கதை துவங்குகிறது. நிலவுடைமையாளர்கள், வறிய விவசாயிகள், பாலுறுவுச் சுரண்டலுக்கு ஆளாகும் விவசாயப் பெண்கள், கொள்ளையர்கள், நாட்டுப் புறப் பாடல்கள், தொல்கதைகள், விவசாயத் தொழிலாளர்கள், சிவப்பு மதுவின் போதை என கிராமிய மாயா யதார்த்தமாகத் துவங்கிச் செல்லும் கதை சீனா மீதான ஜப்பானிய ஆக்கிரமிப்பு வரலாற்றின் காலத்தினுள் நுழையும்போது, தனி நபர்களின் பழிவாங்குதலும் மோகமும் துரோகமும் ஆன உலகத்திலிருந்து மரணமும் இரத்தச் சிந்துதலும் கம்யூனிசப் புரட்சியுமான நடைமுறை வரலாற்றினுள் கதை நுழைகிறது.

கதையில் தொழுநோயாளனும் பேரனும் இன்மைகளாக இருக்கிறார்கள். பாட்டி, மணப்பெண், தாத்தா திண்தோள் இளைஞன். கதைசொல்லியின் தகப்பன் இந்த இருவருக்கும் முறைதவறிப் பிறந்த மகன். இவனே கதையை நகர்த்திக் கொண்டு போகிறான். இவனது தந்தை சிவப்பு மது திரைப் படத்தில் குஞ்சாமணியை ஆட்டிக் கொண்டு திரியும் ஒரு அம்மணக்குண்டிச் சிறுவனாகவே இருக்கிறான். பேரழிவின் முடிவில் கதையின் இறுதியின் அவன் பாட்டி மரணமெய்திவிட அவனது தாத்தாவும் அவனது தந்தையான சிறுவனும் மட்டுமே மிஞ்சு கிறார்கள். தொழுநோய் நிலவுடைமையாளனின் மரணத்துடன் கதையின் இரண்டாம் பகுதி தொடங்குகிறது.

அதுவரையிலும் வீட்டினுள் செல்லாமல் முற்றத்தில் படுத்திருந்த மணப்பெண் நிலவுடைமை யாளனின் மதுச்சாலை உதவியாளனின் உதவியுடன் மரணமுற்ற தொழுநோயாளி தொட்ட அனைத்தையும் எரியூட்டுகிறார்கள். மதுச்சாலையைத் தொடர்ந்து நடத்த முடிவெடுத்து நிர்வாகப் பொறுப்பேற்கிறாள் பெண். இப்போது குடிபோதையுடன் திரும்பும் திண்தோள் இளைஞன் போதையில் இவளை நானே பூப்பெய்த வைத்தேன், முதன் முதலாக அவளுடன் உடலுறவு கொண்டவன் நானே, அவள் என்னைத் தன்னுடையவனாக ஏற்றுக் கொள்கிறேன் எனச் சோளக்காட்டில் என்னுடன் படுத்திருக்கையில் உறுதி கொடுத்தாள் என்கிறான். பலவந்தமாக அவளது இருப்பிடத்தினுள் நுழைகிறான். உள்ளிருந்து நெட்டித்தள்ளப்படும் அவனை அங்கிருந்து வெளி யேற்றுமாறு தனது தொழிலாளிகளிடம் கோருகிறாள் பெண். அவன் பென்னாம்பெரிய மதுசேமிப்புத் தொட்டிக்குள் வீசப்படுகிறான். மூன்று நாட்கள் இரவும் பகலும் அதனுள் அவன் கிடக்கிறான். இந் நேரத்தில் கொள்ளையர் கூட்டம் அவளைக் கடத்து கிறது. பிணைத் தொகை கேட்கிறது. மதுச்சாலையின் விசுவாசமான உதவியாளன் பணத்தை ஏற்பாடு செய்து அவளை மீட்டு வருகிறான். முகத்தில் காயங் களுடன் உதடு கிழிந்த நிலையில் சோர்வுடன்

அவள் திரும்புகிறாள். அவள் கொள்ளையர்களால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருகிறாள் எனச் சினமுறும் திண்தோள் இளைஞன் கொள்ளையர்கள் வழமையாக வரும் மதுவிடுதிக்குப் போகிறான். அவர்களுக்கிடையில் கைகலப்பு ஏற்படுகிறது. கொள்ளையன் தொழுநோயாளனுடன் உறவு கொண்டவளை நான் எப்படித் தொடமுடியும்? என்கிறான். கொள்ளையர்களிடம் இருந்து தப்பு வதற்கு தான் முதியவனுடன் உறவு கொண்டதாக இளம்பெண் சொல்லியிருக்கிறாள் என்பது இப்போது இவனுக்குப் புரிகிறது. தள்ளாடியபடி அவளது இருப்பிடம் நோக்கி வருகிறான்.

முதல் முதலாக அவள் தீமூட்டச் செஞ்சோளக் கதிர்களிலிருந்து வடிக்கப்படும் சிவப்பு மது கொதி யூட்டப்பட்டு வடிக்கப்படுகிறது. அவள் முதல் முதலாகச் சுவைக்க தொழிலாளர்கள் அனைவரும் அவளைத் தொடர்ந்து மதுவைச் சுவைக்கிறார்கள். போதையுடன் அங்கு வரும் திண்தோள் இளைஞன் அவளையும் அங்கு நிற்கும் அனைவரையும் ஏளனத் துடன் பார்க்கிறான். நிரப்பப்பட்ட நான்கு பென்னாம் பெரிய மதுசேமிப்புக் கலயங்களை வரிசையாகக் கொண்டு வைத்து வைத்து எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க அவற்றினுள் அவன் சிறுநீர் கழிக் கிறான். திமிராகச் சிறுநீர் கழித்துவிட்டு அமைதியாக நின்றிருக்கும் அவளது இடுப்பில் கைநுழைத்து தலைகீழாக அவளைத் தூக்கிக் கொண்டு அவளது அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொள்கிறான். தொழிலாளர்கள் ஒவ்வொருவராகக் குனிந்த தலை களுடன் அவ்விடத்திலிருந்து அகல, விசுவாசமான உதவியாளன் சிறுநீர்கழித்த மதுக்கலயத்திலிருந்து மதுவைச் சுவைத்துப் பார்க்கிறான். மது இப்போது உன்னதமான சுவையுடன் இருப்பதாக அவனுக்குத் தெரிகிறது. தனது எஜமானியிடம் சென்று இந்த விசேஷமான மதுவுக்கு என்ன பெயர் வைப்பது எனக் கேட்கிறான். பதினான்கு மைல் மது எனப் பெயர் வை என உள்ளிருந்து குரல் வருகிறது. அன்றிரவு அந்த விசுவாச ஊழியன் அவளிடம் சொல்லாமல் அங்கிருந்து மறைந்து போகிறான். இப்போது

chinamovie 600மதுச் சாலை எஜமானிக்கும் அவளது முறை சாரா காதலனுக்கும் ஒரு மகன் பிறக்கிறான். கொண்டாட்டமும் களிப்புமாக நகர்ந்துகொண் டிருக்கிறது அவர்களது வாழ்வு.

இப்போது காணாது போன விசுவாச ஊழியன் திரும்பி வந்து தூரத்திலிருந்து மதுச்சாலையைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு மௌனமாகத் திரும்பிச் செல்ல அவனைப் பின்தொடர்கிறாள் மதுச்சாலை எஜமானி. இப்போது அந்த விசுவாச ஊழியன் ஒரு கம்யூனிஸ்ட் போராளி. ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் முன்னணி வீரன். இவனது பிரவேசத்தைத் தொடர்ந்து அந்தக் கிராமப்புறத்தினுள் பிரவேசிக்கிறது ஜப்பானிய ஆக்கிரமிப்பு ராணுவம். நான்கு இலட்சம் சீனக் கிராமப்புற மக்கள் சோளக் காடுகளை அழிப்பதற்காக கட்டாய உடலுழைப்பில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சோளத் தட்டுகளின் மீது நடந்து சோளக்காடுகளை அவர்கள் ஜப்பானியப் படையின் முன்னேற்றத் திற்கான சமதளமாக உருவாக்குகிறார்கள். அந்தக் கிராம மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த கொள்ளையர் தலைவனை உள்ளுர் மதுவிடுதி நடத்தியபடி மாடுகளின் தோலுரிக்கிற வேலையைச் செய்பவனை உயிருடன் தோலுரிக்குமாறு கட்டளை யிடுகிறான் ஜப்பானியப் படைத்தளபதி. பிற்பாடு அவன் சுட்டுக் கொல்லப்படுகிறான். விசுவாச ஊழியனான கம்யூனிஸ்ட்டைத் தோலுரிக்கும் பிறிதொரு மதுவிடுதி ஊழியன் அதனை முடித்தபின் மனம் பேதலித்தவனாகிறான். ஜப்பானியப் படைக்கு எதிராகச் செயல்படுகிறவர்களுக்கு இததான் கதி என்கிறான் ஜப்பானியப் படைத்தலைவன்.

தமது மதுச்சாலையின் முன்னாள் விசுவாச ஊழியனும் இன்னாள் கம்யூனிஸ்ட் போராளியுமான வனின் மரணத்திற்குப் பழிவாங்க நினைக்கிறாள் கள்ளங்கபடமற்ற மணப்பெண்ணாக கிராமத்தினுள் பிரவேசித்து, முறைசாரா உறவினால் இப்போது ஒரு மகவுக்கும் தாயாகிய மதுச்சாலை எஜமானி. ஜப்பானிய வாகனங்கள் வரும் சோளக்காட்டுப் பாதையில் சிவப்பு மதுக் கலயங்களை வெடி பொருளாகப் புதைக்கிறார்கள். அவர்கள் புதைத்து மடித்து அயர்ச்சியில் பசியுடன் தூங்கிப் போகிறார்கள். அவர்கள் தமது வேலை முடிந்துவர வீட்டில் விருந்து தயார்செய்து கொண்டிருக்கிறாள் பெண். அவளது மகனான அம்மணச் சிறுவன் சென்றவர்கள் பசியோடு இருப்பதாக ஓடிவந்துசொல்கிறான். அவர்களுக்கு இரு தோள்களிலும் உணவெடுத்துக்கொண்டு செல்லும் அவள் அப்போதுதான் சோளக்காட்டுப் பாதையினுள் பிரவேசிக்கும் ஜப்பானிய வாகனத்தை எதிர்கொள்கிறாள்.

ஜப்பானிய ராணுவத்தினரது துப்பாக்கிகள் அவளது உடலைத் துளைக்கின்றன. கொண்டு வந்த உணவுக் கலயங்களுடன் அவளது செங்குருதி சிதறிக் கலக்கிறது. மதுச்சாலைத் தொழிலாளர்களுக்கும் ஜப்பானிய ராணுவத்தினருக்கும் இடையில் உக்கிர மான சமர் நடக்கிறது. ராணுவ வாகனங்கள் வெடித்துச் சிதறுகின்றன. முழுத் தொழிலாளர்களும் மரணமடைகிறார்கள். இருவர் மட்டுமே மிஞ்சி நிற்கிறார்கள். கதைசொல்லியின் தாத்தாவும் தந்தையும் தான் அவர்கள். இரத்த நிறத்தில் திரை நிறைகிறது. செஞ்சூரியன். சிவப்புச் சோளக் கதிர்கள். சிவந்த வானம். வெஞ்சினத்தினதும் போதையினதும் கொண்டாட்டத்தினதும் காமத்தினதும் மரணத்தினதும் நிறம் சிவப்பு. சீனாவின் கிராமப்புறங்களிலெங்கும் அடர்ந்து செழித்திருந்த செஞ்சோளக் கதிர்களிலிருந்து வடிக்கப்பட்ட சிவப்பு மது அந்தக் கொந்தளிப்பான வாழ்வின், வரலாற்றுக் காலத்தின் நிரந்தரமான குறியீடாக நமக்குள் தங்கி நிற்கிறது.

ஜப்பானிய ராணுவ வாகனங்களைத் தகர்க்கச் சோளக் காட்டுப் பாதையில் புதைக்கும் சிவப்பு மதுக் கலங்களில் வெடி கொழுத்தும் முன்பாகத் தனது மகனின் சிறுநீரைக் கால்தூக்கிக் கழிக்கச் செய்கிறான் தந்தை, கதைசொல்லியின் மூதாதை... கண்ணீரும் நாடகீயமும் மாந்திரீகமும் தர்க்கம் மீறிய சடங்கு களும் உலகெங்கிலும் கிராமிய வாழ்வின் சாரமாக இருக்கிறது. சிவப்பு மதுவில் சிறுநீர்கழித்தல் பெறும் அற்புதமான இடத்தை வேறு எவ்விதமாக எம்மால் புரிந்து கொள்ள முடியும்? சீன கிராமிய வாழ்வின் பழமொழிகளும் சொலவடைகளும் கொச்சைகளும் சிவப்பு மது நாவலிலும் திரைப்படத்திலும் எங்கெங்கும் விரவிக் கிடக்கிறது. சிவப்பு மது திரைப்படத்தின் இறுதியில் மகன் தனது மரணமுற்ற தாய்க்கு ஒரு பாட்டுப் பாடுகிறான். அது ஒரு சீன நாட்டுப்புறப் பாடல். அன்னையே, அன்னையே, தென்மேற்கு திசை நோக்கிச் செல். குதிரை காத்திருக்கிறது, செல்வம் கொட்டிக்கிடக்கிறது, கலம் புறப்படக் காத்திருக்கிறது. செல்வச் செழிப் புடன் வாழ அன்னையே, அன்னையே தென்மேற்கு திசை நோக்கிச் செல்... 

நோபல் பரிசு தொடர்பான அரசியல் விவாதங்கள் அனைத்தையும் தாண்டி கலைஞர்களாக மோ யானும் ஷாங் இமுவும் சிவப்பு மது படைப்பில் சேர்ந்து நிமிர்ந்திருக்கிறார்கள். மாவோவின் கலாச்சாரப் புரட்சி உணர்ச்சிகரமான வாழ்வும் நாடகீயமான சோகக் கதைகளும் தேடிய சீன மக்களின் முன் தோற்றுப்போயிருக்கிறது எனத் தான் உணர்ந்ததாகச் சொல்கிறார் மோ யான். 1972 ஆம் ஆண்டு தி பிளவர் கேர்ள் எனும் வடகொரியத் திரைப்படம் பார்ப் பதற்காக எல்லைதாண்டி வடகொரியா போனபோது  தான் இதனைத் தனது சொந்த அனுபவத்தில்  உணர்ந்ததாகச் சொல்லியிருக்கிறார் அவர். கலாச்சாரப் புரட்சி உச்சத்தில் இருந்தபோது வெளியான இந்தக் கண்ணீர் சினிமாவைப் பார்ப்பதற்காக தொகை தொகையாக எல்லைகடந்து சீன மக்கள் சென்றார்கள். திரைப்படம் பார்த்துவிட்டுத் தமது வீடுகளுக்குக்  கண்ணீருடன் திரும்பினார்கள். நானும் கிம் இல் சுங் கதை எழுதிய அத்திரைப்படத்தைப் பார்த்து அழுது கொண்டுதான் ஊர் திரும்பினேன் என்கிறார் மோ யான்.

தியானன்மென் சதுக்க மாணவர் எழுச்சியை ஆதரித்துச் சீனாவில் மனித உரிமை, அரசியல் சீர்திருத்தம் போன்றவற்றுக்காகக் குரல் கொடுத்த தற்காக இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டு சமாதானத் துக்கான நோபல் பரிசு பெற்ற லீ சியாபோ என்பவர் சீன அரசினால் பதினொரு ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். லீ சியாபோவுக்கு சமாதானத்துக்கான நோபல் விருது வழங்கப்பட்ட போது சீனா நோர்வே அரசுடன் ராஜதந்திர உறவை முறித்துக் கொள்வதாக மிரட்டியது. நோபல் பரிசுகளில் சமாதானத்துக்கான பரிசை மட்டும் நோர்வேயும் இலக்கியம் உள்ளிட்ட பிற துறைகளுக்கான பரிசு களை ஸ்வீடன் நாட்டின் நோபல் நிறுவனமும் அளித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. சீனாவிலிருந்து வெளியேறி பிரான்சில் குடியுரிமைபெற்று வாழும் காவோ ஜிங்க்ஷியாங் எனும் சீன நாவலாசிரியர் இரண்டாயிரமாம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றபோது அதனைச் சீனாவுக்கு எதிரான பரிசாகவே சீன அரசு கருதியது. கடந்த பதினோரு ஆண்டுகளாகச் சிறையில் வாடும் பிறிதொரு நோபல் பரிசாளரான லீ சியாபோ பற்றி ஒரு போதும் பேசியிராத மோ யான் தனக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதனையடுத்து லீ சியாபோ விரைவிலேயே விடுதலை செய்யப்படவேண்டும் எனக் கோரியிருக்கிறார்.

சீன அரச ஆதரவாளரான மோ யானுக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டதைக் கண்டித்திருப்பவர் பிறிதொரு சீனக் கலைஞரும் சீனாவிலிருந்து 2012 ஆம் ஆண்டு வெளியேறிய ஓவியருமான அய் வீவீ. பூகம்பமொன்றில் கொல்லப்பட்ட பள்ளி மாண வர்கள் குறித்த சீன அரசின் பொறுப்பின்மையை  உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்காக சீன அரசினால் கைது செய்யப்பட்டு, இரண்டு மாதம் சிறையில் அடைக்கப்பட்டு, நீலப்படக் குற்றச்சாட்டு, வரிஏய்ப்புக் குற்றச்சாட்டுக்கள் போன்றவற்றிலிருந்து தப்பி வாழ்பவர் அய் வீவீ. 2008 ஆம் ஆண்டு நடந்த சீன ஒலிம்பிக் திடலை வடிவமைக்க ஒப்புக்கொண்டு பிற்பாடு அதிலிருந்து வெளியேறியவர். சீனாவின் படைப்பாளர் சுதந்திரமும் மனித உரிமையும் குறித்து அக்கறைப்படாதவர், சக அறிவுஜீவியான லீ சியாபோவின் விடுதலை குறித்துக் கவலைப் படாதவர் என இப்போது நோபல் பரிசு பெற்றிருக்கும் மோ யான் குறித்து விமர்சித்திருக்கிறார் ஓவியரான அய் வீவீ. அரசியலுக்கும் இலக்கியத்துக்கும் மனித உரிமைக்கும் அதிகாரத்திற்கும் உள்ள உறவு பிரிக்க முடியாதது என்பதற்கு வேறு வேறு காலகட்டங்களில் மூன்று சீன ஆளுமைகளுக்கு அளிக்கப்பட்ட இந்த மூன்று நோபல் பரிசுகளும் சான்றுகளாக இருக்கின்றன.

***

பெரும்பாலான உங்களது நாவல்களின் கதைகள் உங்கள் சொந்த நகரமான கோமி பிரதேசத்தை அடிப் படையாக வைத்த பாதி புனைவான பிரதேசத்தில் நிகழ்கிறது. இன்னும் சொல்லப்போனால் வில்லியம் பாக்னர் அமெரிக்காவின் தெற்குப் பிரதேசத்தை எவ்வாறு தன் கதைகளில் பாவித்தாரோ அவ்வாறு இருக்கிறது. இவ்வாறு பாதி புனைவான வெளிக்கு உங்களைத் திரும்பச் செய்தது எது? உலக அளவிலான வாசகர்களின் உங்கள் மீதான கவனம் ஏதேனும் இப்பிரச்சினையில் பாதிப்புச் செலுத்தியிருக்கிறதா?

நான் எழுதத் துவங்கும்போது எனது கதைச் சூழல் முழுக்கவும் நிஜமானது. எனது அனுபவங்களும் எனது சொந்த அனுபவங்கள். எனது தொகையான படைப்புக்கள் வெளியான பின்பு எனது அன்றாட வாழ்வனுபவங்கள் முடிவுக்கு வந்துகொண்டிருந்தன. இப்போது நான் கொஞ்சம் கற்பனையைப் போட வேண்டியிருந்தது. சில வேளைகளில் மாயத் தன்மையையும் போட வேண்டியிருந்தது. அதுதான் பிற்பாடு என் கதைகளில் இடம்பெற்றது.

சில சமயங்களில் உங்கள் படைப்புக்கள் குந்தர் கிராஸ், வில்லியம் பாக்னர் மற்றும் கார்சியா மார்க்வஸ் போன்றவர்களை ஞாபகப்படுத்துகிறது. நீங்கள்

எழுத ஆரம்பித்த வேளையில் சீனாவில் இவர்களது படைப்புக்கள் உங்களுக்குக் கிடைத்தனவா? உங்களது படைப்புக்களின் மீதான பிறரது பாதிப்புக்கள் குறித்து எங்களுக்குச் சொல்வீர்களா?

நான் எழுத ஆரம்பித்த 1981 ஆம் ஆண்டு நான் வில்லியம் பாக்னரையோ அல்லது கார்சியா மார்க்வசையோ நான் வாசித்திருக்கவில்லை. 1984 ஆம் ஆண்டுதான் இவர்களது படைப்புக்களை நான் வாசித்தேன். சந்தேகமில்லாமல் இவர்கள் இருவரும் என் மீது மிகப்பெரும் பாதிப்பைச் செலுத்தினார்கள். எனது வாழ்க்கை அனுபவங்கள் இவர்களது அனுபவங் களுடன் ஒத்திருப்பதை நான் கண்டேன். பிற்பாடு தான் இந்த ஒப்புமையை நான் கண்டுபிடித்தேன். இவர்களது படைப்புக்களை நான் முன்பாகவே வாசித்திருந்தால், நான் ஏலவே அவர்கள் சாதித்தது போல உன்னதப் படைப்புக்களைப் பெற்றிருந் திருப்பேன்.

உங்களது ஆரம்ப நாவல்கள், குறிப்பாக ரெட் சொர்கம் போன்றன முழுமையாகக் கடந்தகால வரலாறு சார்ந்ததாகவும், அதனோடு பலர் கருதுவது போல மனோரதியம் கொண்டதாகவும் இருந்திருக் கின்றன. ஆனால், சமீப ஆண்டுகளில் உங்களது நாவல்கள் அதிகமாகச் சமகாலம் சார்ந்ததாகவும், சமகாலப் பிரச்சினைகள் சார்ந்ததாகவும் இருக் கின்றன. இந்த மாற்றம் உங்களது பிரக்ஞைபூர்வமான தேர்வா?

நான் ரெட் சொர்கம் நாவலை எழுதியபோது எனக்கு முப்பது வயதுக்கும் குறைவு. ஒப்பீட்டளவில் மிக இளம் வயது. எனது மூதாதையர்களோடான எனது உறவை வைத்துப் பார்க்கிறபோது எனது வாழ்வு மனோரதியமான மனஅமைவைக் கொண்டு தான் இருந்தது. நான் அவர்களது வாழ்வை எழுதினேன்.  அவர்களைக் குறித்து அதிகமாக எனக்குத் தெரியாது. ஆகவே அவர்களது பாத்திரப் படைப்பில் பல்வேறு கற்பனைகளைக் கலந்தேன். லைப் அன்ட் டெத் வியரிங் மீ அவுட் நாவலை நான் எழுதியபோது எனக்கு நாற்பது வயதாக இருந்தது. நான் இப்போது மத்தியதர வயது மனிதனாக ஆகியிருந்தேன். எனது வாழ்க்கை இப்போது வித்தியாசமானது. எனது வாழ்வு அதிகமாக நிகழ்காலம் சார்ந்ததாக, சமகாலம் சார்ந்ததாக ஆகியது. சமகாலத்தின் உக்கிரமான குரூரம் என்பது நான் ஒரு போது கொண்டிருந்த எனது மனோரதியத்தை மட்டுக்குள் கொண்டு வந்தது.

நீங்கள் அவ்வப்போது பொதுமக்களின் மொழியில், ஷான்டாங்க் பிரதேசமொழி வழக்கில் எழுதிக்கொண்டிருந்தீர்கள். கச்சாவான கூர்மையை அந்த மொழி உங்களுக்கு வழங்கியது.  உங்களது பிரதேசத்தின் பழமொழிகளும் சிலேடைகளும் ஆங்கில மொழி பெயர்ப்பில் சரியாக வரவில்லை என நீங்கள் வருத்தப்பட்டது உண்டா? அல்லது உங்களது மொழிபெயர்ப் பாளர் ஹவார்ட் கோல்பிளேட் அவர்களுடன் இணைந்து இதனைக் களைந்து கொண்டீர்களா? 

நிஜத்தில் நான் சொல்லத்தக்க அளவில் உள்ளுர் வழக்கையும் பழமொழிகளையும் சிலேடைகளையும் எனது ஆரம்பப் படைப்புக்களில் உபயோகப்படுத்திக் கொண்டிருந்தேன். அச்சமயத்தில் நான் - சீனாவும் - வளர்ச்சியடைந்திருக்கவில்லை. வளர்ச்சி என்பது பல்வேறு பிரச்சினைகளைக் கொண்டு வந்தது. எடுத்துக்காட்டாக சூழலியல் பிரச்சினைகள் மற்றும் உன்னதமான விழுமியங்களின் வீழ்ச்சி போன்றன. எனது படைப்புக்கள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகின்றன என்பதனை மனங்கொண்டதில், இப்படியான மொழி எனது மொழிபெயர்ப்பாளர் களுக்கு நிறைய சிரமம் தருகிறது என்பதை நான் உணர்ந்தேன். ஆனால், உள்ளுர் மொழியையும் பழமொழிகளையும் சிலேடைகளையும் பாவிக்காத மொழி எனக்குச் சரிவராது; ஏனெனில் பழமொழி சார்ந்த மொழி என்பது கூர்மையானது; உக்கிரமான வெளிப்பாட்டுத்தன்மை கொண்டது; அதனோடு ஒரு குறிப்பிட்ட எழுத்தாளனின் அடையாளம் கொண்ட மொழிக்கு இது தவிர்க்கவியலாத சாராம்சமாக இருப்பது. ஒரு பக்கத்தில் எனது பழமொழிகள், சிலேடைகள் கொண்ட மொழியை ஓரளவு நான் மாற்றித் தகவமைத்துக்கொண்டு பாவித்தேன், மறுபக்கம் எனது மொழிபெயர்ப்பாளர்கள் தமது மொழியில் எனது வழக்குமொழிகளை எதிரொலி செய்யுமாறும் பார்த்துக் கொண்டேன் - இது ஒரு சாத்தியமான இலட்சிய நிலை. 

உங்களது பல நாவல்களில் உறுதிமிக்க பெண்கள் உள்ளார்ந்து வாழ்கிறார்கள் - எடுத்துக்காட்டாக பிக் பிரஸ்ட்ஸ் அன்ட் வைட் ஹிப்ஸ், லைப் அன்ட டெத் வியரிங் மீ அவுட் மற்றும் ஃபிராக் போன்ற நாவல்கள் - நீங்கள் உங்களைப் பெண்ணிலைவாதி எனக் காண் கிறீர்களா அல்லது பெண்களின் பார்வையில் பிரச்சினை களைச் சொல்கிறீர்கள் என்று காண்கிறீர்களா?

முதலாவதாகப் பெண்களை நான் ஆராதிக்கிறேன்; மரியாதை கொள்கிறேன். அவர்கள் மேன்மையான வர்கள் என நான் கருதுகிறேன். வாழ்வில் அவர்களது அனுபவங்களும் அவர்கள் எதிர்கொள்கிற கஷ்டங் களும் ஒரு ஆண் எதிர்கொள்வதைக் காட்டிலும் மிகப் பெரிது என நான் கருதுகிறேன். பேரழிவுகளை நாம் எதிர்கொள்ளும்போது ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மனபலம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கே உரிய தகைமையான, அன்னையர் களாகவும் அவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் இதற்கான காரணம் என நான் கருதுகிறேன். இந்த உணர்வு அவர்களுக்கு அளிக்கிற வலிமையை நாம் கற்பனை செய்தும் பார்க்க முடியாது. எனது நூல் களில் பெண்களின் மிதியடிகளுக்குள் நான் என்னை நுழைத்துக் கொள்கிறேன். அறுதி நிஜம் யாதெனில் நான் பெண் அல்ல; ஒரு ஆண் எழுத்தாளன். ஓரு பெண்ணாக இருந்தால் எவ்வாறு பார்ப்பேனோ அவ்வாறு நான் எனது நாவல்களில் உலகை வியாக்யானப்படுத்துவதென்பது பெண்களால் தம்மளவில் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்படாமல் போகலாம், ஆனால் அதற்காக அதன்பொருட்டு என்னால் ஏதும் செய்ய இயலாது என்பதாக எனது முயற்சி ஆகிவிடாது. நான் பெண்களை விரும்புகிறேன்; ஆராதிக்கிறேன்; ஆனால் நான் ஒரு ஆண்தான். 

தணிக்கையைத் தவிர்ப்பது என்பதனை எழுத்தில் 'சூட்சுமம்' தொடர்பான கேள்வி எனக் கருது கிறீர்களா? அல்லது மாயா யதார்த்தம் அனுமதிக்கும் படைப்பு வெளி, அதுவல்லாது மரபான பாத்திரச் சித்தரிப்பு போன்றன எந்த அளவுக்கு விவாதங் களுக்கு உட்படாமல் ஆழ்ந்த அக்கறைகளை வெளிப் படுத்த உதவ முடியும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

ஆமாம். அப்படித்தான். இலக்கியத்தின்பாலான பல அணுகுமுறைகள் அரசியல் நோக்கைக் கொண்டு தான் இருக்கும். எடுத்துக்காட்டாக, எமது நிஜவாழ்வில் பல உணர்ச்சிகரமான கூர்மையான பிரச்சினைகளை எவரும் தொட விரும்புவது இல்லை. இம்மாதிரி நிலைமைகளில் எழுத்தாளன் அந்தப் பிரச்சினை களை வாழ்விலிருந்து தனிமைப்படுத்துவதற்காகத் தனது கற்பனைகளைச் செலுத்துகிறான் அல்லது அதீதப்படுத்தப்பட்ட சூழல்களைக் கட்டமைக்கிறான் - நிஜ உலகின் அடையாளம் கொண்ட அச்சமற்ற, நுட்பமான சித்தரிப்புகள் இருக்குமாறும் பார்த்துக் கொள்கிறான். ஆகவே, நடைமுறையில் இந்த மட்டுப்படுத்தல்கள், தணிக்கைகள் என்பது இலக்கிய ஆக்கத்திற்குச் சிறந்தது என நான் நம்புகிறேன்.

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட, ஜனநாயகம் என்பது குறித்த உங்களது சுருக்கமான ஒரு நினைவு கூர்தலில் அந்நிலைமை உங்களது சொந்த அனுபவத்தில் நீங்கள் ஒரு வாலிபனாகவும், வளர்ந்த ஆணாகவும் இருந்த யுகத்தின் இறுதி என்பதாகப் பதிவு செய்திருந் தீர்கள். அதில் மனச்சோர்வின் தொனி இருந்ததாக எங்களுக்குப்பட்டது. மேற்கத்திய சிந்தனையிலிருந்து வந்த எங்களுக்கு அது ஆச்சர்யமாக இருந்தது. முன்னேற்றம் என்பது குறித்துப் பேசும்போது நாங்கள் அதை எப்போதும் வளர்ச்சி என்றுதான் பார்ப்போம். ஆனால், உங்களது நினைவுகூர்தல் எதனையோ இழந்து விட்டதாகச் சொல்கிறது. இது நியாயமான மதிப்பீடுதானா?

ஆம், எனது அந்த நினைவுப்பதிவு முழுமை யாக எனது சொந்த அனுபவங்கள். எனது அன்றாட வாழ்வு. அதனோடு சில விஷயங்கள் கற்பனா பூர்வமானது. நீங்கள் சொல்கிற மனச்சோர்வுத் தொனி நிஜத்தில் துல்லியமானது. அந்தக் கதை ஒரு நாற்பது வயது மனிதன் தனது கடந்துபோன காலம் குறித்துச் சிந்திப்பது பற்றியது. எடுத்துக்காட்டாக, நீங்கள் இளமைநாட்களில் இருந்தபோது ஒரு பெண்ணின் மீது மையல் கொண்டிருந்திருப்பீர்கள்; இப்போது அவள் பிறிதொருவரின் மனைவியாக இருப்பாள். அந்த நினைவுகள் துயரமானதுதான். கடந்த முப்பதாண்டுகளாக சீனா முக்கியமான மாற்றங் களுக்கு உள்ளாகி வந்திருக்கிறது. எமது வாழ்க்கைத் தரத்தில், அறிவுத்தளத்தில், எமது குடி

மக்களின் ஆன்மீகத் தளத்தில் வளர்ச்சி என்பது ஸ்தூலமாக இருக்கிறது. ஆனால், பல விஷயங்களில் எமது அன்றாட வாழ்வில் நாங்கள் திருப்தியில்லாமல் இருக்கிறோம். நடைமுறையில், சீனா வளர்ச்சியடைந் திருக்கிறது. அந்த வளர்ச்சியானது பல்வேறு பிரச்சினைகளைத் தோற்றுவித்திருக்கிறது. குறிப்பாகச் சூழலியல் பிரச்சினையைத் தோற்றுவித்திருக்கிறது. மேன்மையான மனித விழுமியங்கள் வீழ்ச்சியடைந் திருக்கின்றன. நீங்கள் குறிப்பிட்ட எனது மனச் சோர்வுக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, என்னுடைய இளமைநாட்கள் முடிந்து விட்டன. இரண்டாவதாக, இன்றைய சீன நிலைமை என்னைக் கவலையுற வைக்கிறது, குறிப்பாக நான் திருப்தியுறமுடியாத பல்வேறு பிரச்சினைகள் என்னைச் சோர்வுற வைக்கின்றன.

ஆங்கிலத்தில் வெளிவரவிருக்கிற உங்களது அடுத்த புத்தகம் என்ன?

சான்டல்வுட் பெனால்டி.

(இலண்டனில் நடைபெற்ற புத்தக விழாவுக்கு வந்திருந்த மோ யானுடன் இலண்டனிலிருந்து வெளியாகும் கிரண்டா இலக்கிய இதழின் ஆசிரியர்

ஜான் பிரீட்மேன் நடத்திய உரையாடல்.)