சோ என்லாய் (1898-1976) சீன மக்கள் குடியரசின் முதல் பிரதமராக 1949 தொடக்கம் 1976 அவரின் இறப்பு வரை பணியாற்றினார். சீனப் பொதுவுடமைக் கட்சியின் எழுச்சியிலும், சீனாவின் பொருளாதார வளர்ச்சியிலும் இவரது பங்களிப்பு முக்கியமானது. மா சே துங்கின் உறுதியான ஆதரவாளராக இருந்தார். இவரின் இறப்பின் பின் இவரது இணைச் செயற்பாட்டாளர் டங் சியாவுபிங் பிரதமர் ஆனார். இவர் சீனாவின் இறுகிய பொதுவுடமைக் கொள்கைகளைத் தளர்த்தி, திறந்த சந்தைக் கொள்கைகளை அறிமுகப்படுத்தி, சீனாவின் பொருளாதார எழுச்சிக்கு வித்திட்டார்.

Zhou Enlaiவரலாற்றுத் திரைப்பட உருவாக்கத்தின் காரணம்?

சீன குடியரசின் முதல் பிரதமரான சோ என்லாய் சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வழங்கிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. மா சே துங்கின் உறுதியான ஆதரவாளராக இருந்த சோ என்லாய் நம் முன்னோர்கள் வாழ்ந்த இந்தியாவுடன் இணக்கமான அணுகுமுறையைக் கொண்டிருந்தார். இப்படிப்பட்ட மனிதனின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களைத் தொகுத்த வண்ணம் The Story of Zhou Enlai Chinese: 周恩来的四个昼夜) படம் எடுக்கப்பட்டது.

கதைச்சுருக்கம்

இந்தப்படத்தின் கரு 1950-1960 காலக்கட்டத்தில் உருவானாலும் 2013 ஆம் ஆண்டில்தான் Tian Yunzhang, Jiang Yue ஆகியோரால் எழுதப்பட்டது. இப்படத்தை இயக்குநர் சென் லீ என்பவர் இயக்கினார். தலைவர் சோ என்லாய் நான்கு நாள் பயணமாக போயான் Boyan இடத்திற்குச் சென்று அங்கு நடக்கும் சிக்கல்களைக் களைய முற்பட்டப்பட்ட வரலாற்றுச் சம்பவத்தைச் சினிமா திரைக்குக் கொண்டு வந்தார் இயக்குநர்.

1950 களின் பிற்பகுதியிலும் 1960 களின் முற்பகுதியிலும் இந்த நகராட்சி கம்யூனிஸ்ட் கொள்கைகளைப் புதிதாகப் பின்பற்றி வந்தது. ஆரம்பக்காலமாக இருந்ததால் வரலாறு காணாத பஞ்சமும் பசிக் கொடுமையும் தாண்டவமாடின. சோவிட் யூனியன் சீனாவிலிருந்து கட்டணத்தை எதிர்பார்த்த வண்ணம் இருக்கும்போது சீனக் குடியரசின் பொருளாதாரம் பாதாளத்திற்குள் புகுந்தது. Mao Zedong அவர்களின் கட்டளைக்கீழ் மற்ற அதிகாரிகள் தங்களுக்குக் கீழ் இருக்கும் நகரங்களுக்கு மேற்பார்வையிடச் சென்றனர். அந்த வகையில் சோ என்லாய் போயான் இடத்திற்குச் சென்று பன்முகத் தன்மையோடு ஆராய்ச்சிகளையும் தகவல்களையும் சேகரித்தார். அப்போது அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படும் காரணிகளை நன்கு அறிந்து கொள்கிறார். தனது சோதனை முடிவுகளை மேல் அதிகாரியோடு பகிர்ந்து கொண்டு ஏற்பட்ட சிக்கல்களுக்குத் தீர்வு காண்கிறார்.

மக்களுக்காக, மக்களுக்காகவே

சீனாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள போயான் பகுதியில் காணப்படும் மரங்கள் இலைகளை இழந்த நிலையில் காணப்படும் காட்சியானது மக்களின் பசிக்கொடுமையை ஆழமாகச் சித்தரித்தது. சோ என்லாய் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோக மக்களிடமிருந்து உண்மையைக் கேட்க விழைந்தார். அனைவரும் தற்போதைய கொள்கையைப் பாராட்டித் தள்ளுகிறார்களைத் தவிர ஒருவர்கூட உண்மையைப் பேச மறுக்கின்றனர். தனக்குமட்டும் பன்றி இறைச்சியும் முட்டைகளும் பரிமாறப்படுவதைப் பார்த்தபின் அந்த மேசைப் பக்கம்கூட அவர் போகாத காட்சி அவரின் பொதுடைமைப் பண்பைக் காட்டுகிறது. அந்தப் பகுதியின் வசிக்கும் குழந்தைகளும் முதியோர் பெருமக்களும் அங்கு நடக்கும் உண்மையைக் கக்கிவிடுகின்றனர். பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் பசி மயக்கத்தால் பள்ளிக்குப் போக முடியாமல் தவிக்கிறார்கள் என்பதை அறிந்த தலைவர் வேதனைப்படுகிறார்.

 வறுமையிலும் மக்களின் ஒருமைப்பாடு

சோ என்லாய் அவர்கள் அப்பகுதியில் தங்கிய இரண்டாம் நாள் சூறாவாளி காற்றும் மழையும் பெய்ய ஆரம்பித்துவிட்டது. விவசாயிகள் மரவெள்ளிக்கிழங்கு பயிர்களைக் காப்பாற்ற அனைவரும் ஒற்றுமையாகப் போராடுகிறார்கள். வயலில் நீர் தங்காமல் பார்த்துக் கொள்ள ஆண்களும் பெண்களும் ஒற்றுமையாகச் செயல்பட்டனர். சின்ன பொடியன் கூட தனது மக்களின் உழைப்பு வீணாககூடாது என்பதை உணர்ந்து மழையில் நனைந்தவாறே வயலுக்குச் செல்லும் காட்சி பார்ப்போரைப் புல்லரிக்கச் செய்யும். அந்தச் சமயத்தில் பொது சமையல் அறையில் அனைவருக்கும் தேவையான சூப் சமைத்துக் கொண்டிருப்பார் தலைவர்.

நாட்டுத் தலைவரும் மக்களும் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை மிக அழகாக எடுத்து இயம்புகிறது இத்திரைப்படம்.

சோ என்லாயின் சிறப்பம்சம்

சோ என்லா அவர்கள் மக்களிடையே இத்தனை வரவேற்பு பெற என்ன காரணங்கள் என்பவனவற்றை பார்ப்போம். நாம் அனைவருக்கும் ஒன்று தெரியவேண்டும். சிறிய நுணுக்கமான செய்திகள்கூட சீனாவின் நுட்பமான ராஜதந்திரம் மறைந்துள்ளது. அமெரிக்க அதிபரின் வருகைக்கு முன்னரே சீனப் பிரதமர் பல்வேறு கோணங்களில் சிந்தித்து அவற்றை நடைமுறைப்படுத்தியதாக, சோ என்லாய்-இன் வாழ்க்கை வரலாற்றை எழுதிய காவோ வேன்கியான் கூறுகிறார். அமெரிக்க அதிபருடன் அதிக நெருக்கம் காட்டுவதில்லை என்றும் சற்று விலகியே இருக்க வேண்டும் என்றும் அவர் முடிவு செய்தார். அதேபோல் நிக்சனைச் சந்திக்கும்போது, அதிக நட்பு பாராட்டாமல் இயல்பாக இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தார்.

அரசியல் சதுரங்கத்தில் எந்தக் காயை எப்போது எங்கு எப்படி நகர்த்தினால் எதுபோன்ற எதிர்வினைகள் நிகழும் என்பதை தனது தலைவர் மாவோவைப் போலவே சிந்திக்கக்கூடியவர் என்பது சோ என்லாயின் சிறப்பம்சம். "வெள்ளை மாளிகை ஆண்டுகள்" என்ற தனது சுயசரிதையில் முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹென்றி கிசிஞ்சர் இவ்வாறு எழுதியுள்ளார்: "1971இல் நான் முதன் முதலில் சோவைச் சந்தித்தபோது, அவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாகச் சீன கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவராக இருந்தார். "

தத்துவம், வரலாறு, தந்திரோபாயம், நவீனமயமாக்கல் என எந்த துறையாக இருந்தாலும் அதில் அவர் சிறந்த அறிவைக் கொண்டிருந்தார். அமெரிக்காவைப் பற்றிய தகவல்கள் மற்றும் எனது சொந்த பின்னணியையும் அவர் அத்துபடியாக தெரிந்து வைத்திருந்தது ஆச்சரியமானது." 

மாவோவின் அடுத்த வாரிசு

சோ என்லாய் என் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார் என்று பிபிசியிடம் பேசிய முன்னாள் இந்திய வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் கூறுகிறார். "இருபதாம் நூற்றாண்டில் அவருக்கு சமமாக வேறு எந்த ராஜதந்திரியும் இல்லை என்றே கூறலாம். அனைவரையும் ஈர்க்கும் திறன் கொண்ட அவர், தனது நீண்டகாலப் பொதுவாழ்க்கையில் சரியான புரிதல்களையும் சிறப்பான மக்கள் தொடர்பையும் கொண்டிருந்தவர்". ஆனால், சில அரசியல் ஆய்வாளர்களின் பார்வையில், சோ என்லாயின் அரசியல் வாழ்க்கை முற்றிலும் மாறுபடுகிறது.

அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆசிரியரான காவோ வென் க்வின் எழுதுகையில், "சுவரில் இருக்கும் சிறிய விரிசலைக்கூட கண்டுபிடிப்பதில் திறமை வாய்ந்தவர் சோ என்லாய்” என்று சொல்லலாம். உண்மையில் அவர் விசுவாசமான நாயைப் போல மாவோவின் பின் செல்பவர். அவர் மாவோவின் தலைமையை மட்டுமே ஏற்றுக் கொண்டதால், அவருடைய அரசியலில் நீடித்து நிலைக்க முடிந்தது. அவர் எப்போதும் மாவோவின் உதவியாளராகவே இருந்தார்.

சோ என்லாயின் திறமைகளுக்குச் சர்வதேச அளவில் பல பத்திரிகையாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும் ரசிகர்களாக இருந்தனர். பிரபல பத்திரிகையாளர் ஜேக் ஆண்டர்சன் தனது புத்தகத்தின் 'Confessions of a Muckraker' என்ற தனது புத்தகத்தில் கீழ்கண்டவாறு எழுதியிருக்கிறார்: "சோ என்லாய்-இன் நினைவு என்னுடைய வாழ்க்கையில் நீங்கா இடம்பெற்றது. 45 வயதிலும் அழகாக இருந்த அவரது முகத்தில் அற்புதமான நுண்ணறிவு வெளிப்படும். மெலிந்த உடல்வாகை கொண்டிருந்த அவர் கடின உழைப்பாளி."

"மிகவும் எளிமையாக வாழ்ந்த அவர், எல்லா விடயங்களையும் நன்கு அறிந்தவர். அவரின் செயல்பாடுகள் பார்ப்பதற்கே அற்புதமாக இருக்கும். ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் சீன மொழிகளில் சிறந்த ஆற்றல் கொண்டவர். அவரைப் போன்ற அழகான, அறிவான, கவர்ச்சிகரமான நபரைப் பார்ப்பது அரிது என்று அமெரிக்க முன்னாள் வெளி விவகார நிபுணர் வால்டர் ராபர்ட்சன் ஒரு முறை கூறினார்."

- கலைவாணி இளங்கோ

Pin It