கருப்பர் நகரம்
வட சென்னை மக்களின் வாழ்வோடு கலந்துவிட்ட ஸ்டான்லி மருத்துவமனை சுமார் 200 ஆண்டுகள் பழைமையானது. கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் 17ஆம் நூற்றாண்டில் மதராசில் குடியேறியபிறகு அவர்களுக்கு வேலை செய்வதற்காகப் பெரும்பாலோர் கோட்டையைச் சுற்றி உள்ள பகுதிகளுக்கு வரத் தொடங்கினர். அப்படி வந்தவர்களால் உருவானதுதான் அன்றைய கருப்பர் நகரம் என அழைக்கப்படும் இன்றைய ஜார்ஜ் டவுனும் முத்தியால்பேட்டையும் பெத்தநாயகன்பேட்டையும் சேர்ந்து பிளாக் டவுன் (கருப்பர் நகரம்) என்றாயிற்று.
ஆங்கிலேயர்கள் சென்னையில் கால் ஊன்றியதும் தங்களுக்கான தேவைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாகப் பூர்த்தி செய்து கொண்டே வந்தனர். அந்த வரிசையில் நோய்வாய்ப்பட்ட ஆங்கிலேயர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகக் கோட்டைக்குள் மருத்துவர்களுடன் மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அதே சமயம் கோட்டைக்கு வெளியில் இருக்கும் சென்னை பூர்வகுடி மக்களுக்கு, வந்தேறிகளுக்கு மருத்துவம் பார்க்க நவீன மருத்துவர்கள் யாரும் இல்லை. நாட்டு மருத்துவர்கள்தான் அவர்களின் நோய்களுக்கு மருந்து கொடுத்து வந்தனர். எனவே, அவர்களுக்கென ஒரு நவீன மருத்துவமனைக்கான தேவை மெல்ல உணரப்பட்டது.
உள்ளூர்வாசிகளுக்கு மருத்துவமனை தேவை
இதற்கான செயலுக்கு முன் முயற்சி எடுத்தவர், கர்னல் கிரான்போர்ட் (Gran Ford) கூற்றின்படி, சர்ஜன் வில்லியம் கார்டன்தான். இவர் மதராஸ் சுதேசிகளுக்கு ஒரு மருத்துவமனை தேவை என்ற ஒரு புதுக்கருத்தைத் தெரிவித்தார். இவர் 1787 நவம்பர் 19ஆம் தேதி இதற்கான ஒரு விண்ணப்பத்தைக் கவுன்சில் கவர்னர், மெடிகல் போர்டு மற்றும் கர்நாடக நவாப் ஆகியோரிடம் அளித்தார். இதனால் எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை. ஆனால், 10 ஆண்டுகள் கழித்து 1797இல் உதவி மருத்துவரான ஜான் ஹோலன் அண்டர்வுட் (John Holen Underwood) தானே ஒரு மருத்துவமனை நிறுவுவதாகவும், அதற்கு அரசு புரசைவாக்கத்தில் நிலம் தந்து உதவுவதோடு, 100 பக்கோடாக்கள் மாத வாடகை தர வேண்டும் என்று கூறி விண்ணப்பித்தபொழுது, அரசு இசைவளித்து, கட்டடத்தைப் பொதுமக்கள் அன்பளிப்புடனே கட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒரு மருத்துவரை வேலைக்கு வைத்துக்கொள்ளவும் அங்கீரித்தது. ஆனால் புரசைவாக்கத்தில் நிலம் ஒதுக்காது 40 ஏக்கர் மற்றோர் இடத்தில் ராயபுரத்தில் ஒதுக்கியது.
இக்காலகட்டத்தில் 1781இல் மதராசில் மிக மோசமான பஞ்சம் தலை விரித்தாடியது. மதராசின் சொந்த மக்கள் சோற்றுக்கு வழியில்லாமல் பரிதவித்தனர். இவர்களில் பெரும் பாதிப்புக்கு உள்ளானவர்களில் முக்கியமானவர்கள் கருப்பர் நகரத்தினர். இவர்களுக்கு உதவுவதற்கு இன்றைய ஸ்டான்லி மருத்துவமனை இருக்கும் இடத்தில் ஒரு கஞ்சித்தொட்டி திறக்கப்பட்டது. இது 1782இல் மாகாண அரசும், கோட்டையிலுள்ள செயின்ட் மேரி தேவாலயமும் இணைந்து இந்தியாவில் முதன் முறையாக ஓர் அறக்கொடைக்கான அமைப்பு, பஞ்சம் துயர்நீக்கும் குழு ஒரு வாடகை கட்டடத்தில் கருப்பர் நகரத்தின் சுவருக்கு அருகில் தொடங்கியது. பஞ்சம் குறைந்தபிறகு மணியக்கார சத்திரத்தில் உணவு வழங்கப்பட்டது. பிறகு, இதுவே கஞ்சித் தொட்டி என அழைக்கப்பட்டது. இவ்விடம் அக் காலத்தில் பழம் காய்கறிகள் விளையும் இடமாக இருந்தது. இந்த வாடகை வீடே பஞ்சம் சற்று குறைந்த பிறகு சத்திரமாக (உள்ளூர் நோயாளிகள் தங்குமிடமாக) மாறியது. (A Madras Miscellany, P. 807)
மணியக்காரர் சத்திரம்
1784ஆம் ஆண்டுவரை இந்த இடம் பெயரில்லாச் சத்திரம் ஒன்றுமில்லாதவர்களின் புகலிடமாக இருந்தது. பஞ்சம் குறைந்தபிறகும்கூட, நடை பெற்றது. ஆனால், பிறகு எப்படி மணியக்காரர் சத்திரம் (Monegar choultry) என்று பெயர் வந்தது என்பது இன்றும் புதிராகவே உள்ளது.
இந்த மணியக்கார சத்திரத்திலேயே இணைந்து மருத்துவமனை கட்டப்பட்டவுடன், இதற்கு யார் முயற்சி செய்தாரோ அவரே 1799இல் (அண்டர்வுட்) கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு, 80 படுக்கை களுடன் மருத்துவக்குழுவால் மேற்பார்வையிடப்படும் என்ற விதியுடன் மருத்துவமனை நடைபெற்றது.
இந்த மருத்துவமனை 1799இல் 9800 பக்கோடாக் களுக்குக் கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டடம் செங்கல் சுண்ணாம்பினால், இரண்டு வளாகங்களில் 4 வார்டுகள் எல்லாப் பக்கங்களிலும் தாழ்வாரங் களுடன் கட்டப்பட்டிருந்தன. ஆரம்பத்தில் மருத்துவம் பெற இங்கு வர ஆர்வமற்றவர்களாகப் பிராமணர்கள் இருந்ததனால், இதிலிருந்து ஒரு வார்டு தனியாகப் பிரிக்கப்பட்டு உயர்ஜாதியினர் மருத்துவம் பெற்றனர். (Op. Jaggi, p. 78)
இது சிறப்புற நடைபெற ஆர்காட் நவாப்பும் மற்றும் வணிக நிறுவனங்களும் மிகவும் உதவினர். இந்நோயாளிகள் உறைவிடம் மூன்றுவிதமான அமைப்புகளுடன் நடைபெற்றது. அவைகள்
(1) வெளிப்புற நோயாளிகளுக்கான மருந்தகம்,
(2) உள்நோயாளிகளுக்கான ஆறு கொட்டகைகள்
(3) நாட்பட்ட நோயாளிகளுக்கான சிறப்பு படுக்கைக் கூடம் ஆகியவைகளாகும். ஒரு மாதத்திற்குள்ளாகவே 89 உள்நோயாளிகள் மருத்துவம் பெற்றனர்.
பலர் உள்நோயாளிகளாகத் தங்க இடம் போதாத குறையால் திருப்பி அனுப்பப்பட்டனர். ஆகவே ஒரு வரைமுறையுடன் உள்நோயாளியாக 80 நபர்களுக்கும், வெளிநோயாளிகளாக 100 நபர்களுக்கும் மருத்துவம் அளிக்கப்பட்டது.
டாக்டர் அண்டர்வுட்டிற்கு மருத்துவமனை சீர்படுத்தவும், வாடகைக்காகவும் 150 பக்கோடாவும் மருத்துவம் புரிவதற்கும் ஊதியமாக மாதத்திற்கு 100 பக்கோடாவும் வழங்கப்பட்டது. (Op. Jaggi 78)
1807ஆம் ஆண்டு கடைசியில் மருத்துவமனை குழுமம் அரசிற்குத் தனக்குக் கிடைக்கும் அன்பளிப்பு மற்றும் உதவித்தொகை மிகவும் குறைந்துவிட்ட தாகவும், அதற்காக அரசு நிதி அதிகமாக ஒதுக்கவும் வேண்டி, இது ஒரு கிராமத்திற்கான நிதி அளவு இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. இதன்படி மணியக்கார சத்திரமும், உள்ளூர் மருத்துவ மனையும் 1809 நவம்பர் 1ஆம் தேதி இணைந்தன.
நோயாளிகளையும், உதவித்தொகையையும் இப்புதிய நிறுவனத்திற்கு அளித்த அரசுதான் மேலாண்மையைச் செலுத்தியது.
இந்தப் புதிய நிறுவனம் மதராஸ் நோயாளி உறைவிடம் மற்றும் சுதேசி ஏழைகள் காப்பகம் (Madras Infirmary and Native Poor Asylum) எனப் பெயரிடப்பட்டு மருத்துவர் சர்வுட் (Shar wood) 80 பக்கோடா ஊதியமாகவும், 20 பக்கோடா பல்லக்குக்கான உதவிப் பணமாகவும் கொடுக்கப்பட்டு நியமிக்கப் பட்டார்.
இத்துடன் இங்குக் கால் ஊனமுற்றோர், குருடு, மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்குக் காப்பகம், தொழுநோய் மருத்துவமனை மற்றும் கேட்பாரற்று கண்டெடுக்கும் குழந்தைகளுக்கான வார்டும் தொடங்கப் பட்டன. இச்சமயத்தில் மணியக்கார சத்திரத்தின் இயக்குநர்கள், இந்த நோயாளிகளின் உறைவிடம் கருப்பர் நகரத்தார் அனைவருக்குமான மருத்துவ மனையாக விளங்குவதால், மருத்துவருக்குக் கொடுக்கும் ஊதியத்தை மற்ற இடங்களுக்குக் கொடுக்கப்படுவதைப்போல அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஒரு விண்ணப்பத்தை வைத்தார்கள். அது அரசால் 1858 ஜூலையில் ஏற்றுக்கொள்ளப் பட்டது.
இச்சத்திரத்தில் 1868இல் பல புதிய மாறுதல்கள் நிகழ்ந்தன. பெண்களுக்காகப் புதிய வார்டுகள் 40 படுக்கை வசதியுடன் கட்டப்பட்டன. இத்துடன் பல பிரமுகர்களின் உதவித் தொகையில் பல வார்டுகள் கட்டப்பட்டன. இதில் முக்கியமானது, நார்த்கோட் வார்டு இதில் ஒன்று ஆணுக்கும், மற்றொன்று பெண்ணுக்கும் மாகாணச் செயலர் சர் ஸ்போர்ட் நார்த்கோட்டினால் ரூ. 1000 அன்பளிப்பினால் கட்டப்பட்டன. இதேபோல் கவர்னர் நேப்பியரின் உதவியால் நேப்பியர் வார்டு திறக்கப்பட்டது. 1882இல் விஜயநகர ராஜா ரெட்ஹில்ஸ்- இலிருந்து மருத்துவமனைக்குத் தண்ணீர் கொண்டுவரும் செலவை ஏற்றுக்கொண்டார்.
மருத்துவமனைகள் பற்றிய 1876ஆம் ஆண்டு அறிக்கையில் சர்ஜன் ஆர்.வி. பவர் இந்த மருத்துவ மனை வடக்கு கறுப்பர் டவுன் மருத்துவமனை என்றே குறிப்பிடுகிறார். 1873-74இல் 9608 பேர் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 9579 பேர் குணமடைந்து அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டதாகவும் அவரது அறிக்கை அறிவிக்கிறது.
ஸ்டான்லியுடன் ஆர்.எஸ்.ஆர்.எம்.
1880இல் ராஜா சர் ராமசாமி முதலியார் நோயாளிகள் தங்கும் மருத்துவமனை இவர் பெயரைத் தாங்கி இம்மருத்துவமனையுடன் இணைத்துக் கொண்டது. இதுவே இன்றும் ஸ்டான்லி மருத்துவ மனையுடன் இணைந்த மகப்பேறு மருத்துவ மனையாக ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை என்ற பெயருடன் இயங்கி வருகிறது.
1910ஆம் ஆண்டு இந்த நிறுவனம் அரசு கட்டுப்பாட்டின் கீழ்வந்தது.
மணியக்கார சத்திரத்தில் கட்டடங்களைக் கட்டிப் பெரிதாக்க எண்ணிய அரசு அதன் பெயரை அரசு இராயபுரம் மருத்துவமனை என மாற்றி வெங்கடகிரி ராஜா சத்திரத்திற்கு அருகில் வரிசையாக கட்டடங்களைக் கட்டியது. (Madras discovered P. 335)
கட்டடம் கட்ட மறைமுகமாக உதவியவர் அப்போது கண்காணிப்பாளராகச் சத்திரத்தில் பணிபுரிந்த கோஷன் (Coshan) என்பவராவார். ஏனெனில் இவரே இச்சத்திரத்திற்கு மருத்துவம் பார்க்க வரும் நோயாளிகளின் எண்ணிக்கைகளைப் புள்ளி விவரத்தோடு பட்டியல் தயாரித்து மருத்துவ மனையைப் பெரிதாக்க வேண்டிய தேவையை அரசினருக்கு உணர்த்தி நம்ப வைத்தவர். இதற்கு அச்சமயத்தில் சிறப்புடன் பணிபுரிந்த ஆட்சிப் பொறுப்பாளர் சர்ஜன் ஜெனரல் வில்லியம் பானர்மேன், நேருதவி செயலர் சர் அலெக்சாண்டர் கார்டியூ ஆகிய இருவரும் பெரிய அளவில் மருத்துவ மனை உருவாக்க உதவி செய்தனர்.
இப்புதிய மருத்துவமனையை உருவாக்க சத்திரத்திற்கு அருகில் பெரிய அளவில் இடமும், துணை இராயபுரம் மருத்துவப்பள்ளியும் (1877) இருந்தது மேலும் பயன் அளித்தது. இப்பள்ளியில் தான் மருந்தாளுநர்களுக்கும், சப் அசிஸ்டண்ட் மருத்துவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. மிகக் குறைந்த வசதிகளுடன் அதாவது பாடம் கற்பிக்க இரண்டு மைக்கிராஸ்கோப்புகளுடன் இருந்தது. இதில் ஒன்று மாவட்ட மருத்துவர் மட்டும் பயன்படுத்தும் விதத்தில் பூட்டு சாவியுடன் இருந்தது.
கவர்னர் கார்மிஷல் உத்தரவும் பயனும்
சத்திரத்தின் பழைய கட்டடத்தில் 51 படுக்கைகள் ஆண்களுக்கும், 24 பெண்களுக்கும் இருந்த நிலையில் கவர்னர் லார்ட் கார்மிஷல் (Carmichael) 1912ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மேற்பார்வையிட வந்த பொழுது இம்மருத்துவமனை பழைமையானதாக நவீன வசதியின்றி நடைபெறுவதாகக் கூறியதோடு மட்டுமின்றி, புதிய கட்டடங்களைக் கட்டி மருத்துவ மனையை நவீன வசதிகளுடன் நடைபெற வேண்டும் என்று கூறியதன் விளைவாக, 135 படுக்கைகளுடன், ஒரு நவீன அறுவை அரங்குடன் ஒரு நடுத்தர மருத்துவ மனை கட்ட மூன்று லட்சம் ரூபாய் அளிப்பதாக அரசு ஒப்புதல் அளித்தது.
1913இல் அடிக்கல் நாட்டவில்லை என்றால் இன்று ஸ்டான்லி என்னவாகி இருக்கும்?
அதன்படி 1913ஆம் ஆண்டு டிசம்பர் 19 அன்று ஆளுநர் பென்லாண்ட், ராயபுரம் மருத்துவமனைக்கும் மருத்துவப் பள்ளிக்கும் அடிக்கல் நாட்டினார். அந்த ஆண்டு அடிக்கல் நாட்டப்படாது போயிருந்தால் ஸ்டான்லி மருத்துவமனை என்று இன்று கொடி கட்டிப் பறக்கும் மருத்துவமனை ஒரு கனவாகிப் போயிருக்கும். இது ஏன் என்பதற்கான காரணத்தை 1913இல் மருத்துவராகப் பணியில் சேர்ந்து பிறகு ராயபுரம் மருத்துவப் பள்ளிக்குக் கண்காணிப்பாளரான கர்னல் ஆர். பிரைசன் (Bryson) கூறுகிறார்: “அடிக்கல் மட்டும் நடப்படாமல் இருந்திருப்பின் 1914இல் முதல் உலகப் பெரும் போரின் நெருக்கடியான காலத்தின் காரணமாக நிச்சயமாக இது முழுவதுமாகக் கைவிடப்பட்டிருக்கும். மேலும் பழைய தோட்டா தொழிற்சாலையில் (ராயபுரம் மருத்துவப்பள்ளியில்) படிப்பவர்களுக்கும் இது பயன் தந்திருக்காது.” என்று காலத்தின் விளைவை விளக்குகிறார். (Shobana Menon, p. 9)
1917ஆம் ஆண்டு மருத்துவமனை ரூ 3,56,750க்குக் கட்டிமுடிக்கப்பட்டு, இதன் முதல் கட்டடமான பென்லாண்ட் (Pentland) வளாகம் லார்ட் பென்லாண்டால் 1917 ஜூலை 17ஆம் தேதி 72 ஆண், 72 பெண், 16 குழந்தைகள் படுக்கை வசதியுடன் திறக்கப்பட்டது. இதுபோல வெளிநோயாளி பிரிவில் பழைய கருப்பர் நகரம் மருந்தகம் என்றிருந்தது ஜார்ஜ் டவுன் மருந்தகமாகப் பெயர் மாறியது. பிறகு பல மாறுதல் வார்டுகள் அமைப்பதில் நிகழ்ந்தன. இதில் குறிப்பிடத்தக்கது இரண்டாவது வளாகம் பனகல் அரசரால் திறக்கப்பட்டதாகும்.
துணை மருத்துவப்பள்ளி - இராயபுரத்தில்
இப்பள்ளி 1957இல் மதராசில் ஏற்பட்ட பஞ்சத்தின் பொழுது குறைவுபட்ட கீழ்மட்ட மருத்துவப் பணியாளர் சூழாமை வலுப்படுத்த தொடங்கப்பட்டது. இது 1879இல் மதராஸ் மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்டிருந்தது. பிறகு 1883 மருத்துவக் கல்லூரியில் இக்கீழ் மட்ட பணியாளர் துறை ஒழிக்கப்பட்டு, மருத்துவமனை உதவியாளர்களை (Hospital Assistants) உருவாக்க நிரந்தர நிறுவனத்தை நிறுவியது. இவர்கட்குக் கற்பிக்க முறையே ஒரு கண்காணிப்பாளர், அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவத்திற்குப் பேராசிரியர்களும் மற்றும் ஐந்து போதகர்களையும் நியமித்தது. மருத்துவமனை உதவியாளர்கள் போட்டித் தேர்வு மூலமாகவே படிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டன. இவர்கள் மூன்று ஆண்டுகள் பயிற்சிக்குப் பின்னரே, மருத்துவமனை உதவியாளர்கள் நிலைக்குத் தகுதி யடைந்தனர். இவர்களுக்கு ராயபுரத்தில் மருத்துவ மனையும், மணியக்கார சத்திர மருத்துவமனையும் மருத்துவம் கற்க உதவின. 1833-34இல் இங்கு 86 மாணவர்கள் பயின்றனர். (Madras Presidency Manual,(Madras Presidency Manual,Vol. II P. 554)
ராயபுரம் துணை மருத்துவப் பள்ளியைப் போலவே, மதராஸ் மருத்துவப் பள்ளியிலும், இராணுவத்திற்காக, 1835 மருத்துவக் கீழ் பணியாளர் களை உருவாக்க, திறக்கப்பட்டுப் பிறகு 1856இல் இது கல்லூரி ஆகி அபோதகிரி. டிரசர் என்ற மருத்துவ உதவியாளர்களை உருவாக்கியது. இதை 1910இல் நிறுத்தி மருத்துவமனை உதவியாளர் என்ற பொது பெயருடன் பயிற்சியளித்தது. இந்தத் துறை மருத்துவக் கல்லூரியிலிருந்து ராயபுரம் துணை மருத்துவப் பள்ளிக்கு 1882இல் மாற்றலாகி 1887 வரை நடைபெற்றது. பிறகு மீண்டும் மதராஸ் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றலாகி, திரும்பவும் 1903 ராயபுரம் மருத்துவப் பள்ளி என்ற புது நிர்வாகத்திற்கு மாற்றலானது. இந்த ராயபுரம் மருத்துவப் பள்ளி கிழக்கிந்திய கம்பெனியின் பழைய தோட்டா தொழிற்சாலையில் செய்த சில அடிப்படை மாறுதல்களுக்குப் பிறகு நடைபெற்றது. இதன் பிறகு இது மிகவும் பிரபலமாகி தனியார் பலர் இதில் மாணவர் களாகச் சேர்ந்தனர். 1911ஆம் ஆண்டில் மருத்துவ உதவியாளர்கள் என்பது சப் அசிஸ்டண்ட் சர்ஜன் என்று பெயர் மாற்றி அழைக்கப்பட்டது. அதன் பிறகு, 1912ஆம் ஆண்டு இந்தப் பள்ளியில் தேர்வான வர்கள் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் எல்.எம்.பி, (Licensed Medical Practitioner) என்று போட்டுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது.
இப்படிப்பு படிக்கக் குறைந்த அளவு எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை 1915ஆம் ஆண்டிலிருந்தே அமல்படுத்தப் பட்டது. பள்ளி ஆரம்பித்த காலத்தில், எல்லாருக்கும் உதவித் தொகை வழங்கப்பட்டது. மேலும் இவர்கள் பட்டம் பெற்ற பிறகு, அரசில் பத்து ஆண்டுகள் கட்டாயம் வேலை செய்ய வேண்டும். தவறினால் ரூ. 1000 கட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒப்பந்தத்தில் கையப்பமிட்டனர். ஆனால் அரசிற்கான தேவை குறைந்தபிறகு, சொந்தமாக மருத்துவம் பார்க்கும் ஆர்வம் அதிகரித்ததினாலும், பணி முறை சாராத தனிப்பட்ட மாணவர் சேர்க்கை அதிகரித்தது. இதன் காரணமாக அரசில் வேலை செய்ய வேண்டும் என்ற ஒப்பந்தத்திற்கான விதி 1920 நீக்கப்பட்டது. (The Higher Education in South India, p. 232)
இந்தப் பள்ளியில் 1904-1920 வரை பர்மா மருத்துவ சேவைக்கும் இங்கே பயிற்சி அளிக்கப்பட்டது. பிறகு ரங்கூனில் மருத்துவப் பள்ளி 1920இல் ஆரம்பிக்கப்பட்டபின், இங்கு ரங்கூன் மாணவர்கள் வருகை நிறுத்தப்பட்டது.
ராயபுரம் மருத்துவப் பள்ளியில் 1933இல் அரசு 5 ஆண்டு டி.எம். & எஸ். (D.M.&S) தரம் உயர்ந்த படிப்பைத் துவங்கியது. ஏனெனில் இது இங்கிலாந்து ராயல் கல்லூரியில் பெறும் பட்டச் சான்றிதழுக்கு இணையானதாக இருக்க வேண்டும் என்பதினாலாகும். இந்தப் பட்டச் சான்றிதழ் படிப்பை மதராஸ் மாகாண ஆளுநர் சர் ஜார்ஜ் ஃபிரடெரிக் ஸ்டான்லி தொடங்கி வைத்தார். இத்துடன் ராயபுரம் மருத்துவப் பள்ளி என்ற பெயரை ஸ்டான்லி மருத்துவப் பள்ளி என மாற்றவும் இசைவளித்தார். இதன்படி அரசாணை எண் 792 பொது சுகாதாரம் (G.O. No. 792, P.H.) 1941 பிப்ரவரி 25ஆம் தேதி ஆணைப்படி எல்.எம்.பி., என்பது டி.எம். & எஸ். (Diploma in Medical and Surgery) என்று மாற்றப்பட்டது.
ஸ்டான்லி மருத்துவப் பள்ளியின் அடுத்த மைல் கல்லாக 1938இல் ஸ்டான்லி மருத்துவப் பள்ளி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியாக மலர்ந்தது. கல்லூரியின் தொடக்கவிழா இக்கல்லூரியின் பழைய மாணவரான அப்போதைய மதராஸ் மாகாண காங்கிரஸ் அரசின் நலவாழ்வுத் துறை அமைச்சரான டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜனால் 1938 ஜூலை 2ஆம் தேதி திறக்கப்பட்டது. இதன் பிறகு கல்லூரி மதராஸ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, டி.எம். & எஸ். பட்டச்சான்றிதழ் படிப்பு நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் ஐந்தரை ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் 1 இராணுவ மாணவரும், 60 சுதேசி மாணவர்களும், (பெண்கள் உட்பட) அனுமதிக்கப்பட்டனர்.
கல்லூரி தொடங்கிய காலத்தில் அதற்கு வேண்டிய கட்டடங்கள் இல்லை. ஆகவே உடல்கூறு, உடல் இயங்கியல், உயிர் வேதியல், கரிம வேதியல் ஆகியவை மதராஸ் மருத்துவக் கல்லூரியிலேயே அம்மாணவர்களுடன் சேர்ந்து இவர்களும் கற்க வேண்டியதாய் இருந்தன. இருப்பினும், இப்படிப் படித்த முதல் செட் மாணவர் டி.எஸ்.கல்யாணம் என்பவரே பல பதக்கங்களை வென்றார். 1948இல் எம்.டி., எம்.எஸ் என்ற முதுநிலைப் படிப்புகள் தொடங்கப்பட்டுத் தனித்து இயங்கியது.
ஸ்டான்லியில் உடல்கூறு, உடல் இயங்கியல் களுக்குப் புதிய கட்டடங்கள் 1950இல் 95 லட்ச ரூபாயில் கட்டி முடிக்கப்பட்டது. ஆகவே மாணவர்கள் மதராஸ் மருத்துவக் கல்லூரிக்குச் சென்று படிக்க வேண்டிய கட்டாயத்திலிருந்து மீண்டு, எல்லாப் பாடங்களையும் ஸ்டான்லியிலேயே படிக்கத் தொடங்கினர். முதல் ஆண்டு எம்.பி.பி.எஸ்., மாணவர் எண்ணிக்கை 72இலிருந்து 100 ஆக உயர்ந்தது. உடல்கூறு, உடல் இயங்கியல் வளாகத்தை 1950 செப்டம்பர் 7ஆம் தேதி நலவாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் திறந்து வைத்தார்.
1952இல் உடல்கூறில் எம்.எஸ்.சி. மற்றும் முனைவர் பட்டமும் நடைபெற்றது. (Shobana Menon, p. 16)
ஸ்டான்லி மருத்துவமனையை ஒட்டி ராஜா வெங்கடகிரி சத்திரம் உள்ளது. இதில் வசிப்பவர்கள் இறந்தால், இவர்களின் உடல் ஸ்டான்லி மருத்துவ மனைக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்டு, உடல் கூறு இயல் மாணவர்களுக்குப் பயன்பட வேண்டும், என்ற ஒரு விதி உண்டு. அரசர் வெங்கடகிரி நீதிக் கட்சியைச் சேர்ந்தவர். இவர் நீதிக்கட்சியின் சென்னை கூட்டமைப்பு மாநாட்டிற்குத் தலைமை வகித்தார் என்பது ஒரு கூடுதல் செய்தியாகும்.