சீர் வாசகர் வட்ட விருதுபெறும் பேரா. முத்துமோகன் அவர்களைப் பற்றிப் பேசுவதற்கு வாய்ப்பளித்த சீர்வாசகர் வட்ட நண்பர்களுக்கு எனது வணக்கங்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். சீர்வாசகர் வட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சரியான ஆளுமைகளைத் தேர்வு செய்து விருது வழங்கியதைப் போல இந்த ஆண்டும் பேராசிரியர் முத்துமோகன் அவர்களைத் தேர்வு செய்து இந்த விழாவை நடத்திக் கொண்டிருக்கிறது. பேராசிரியர் முத்துமோகனுக்கு ஏன் இவ்வகையான ஒரு சிறப்பைச் செய்ய வேண்டும்? அல்லது முத்துமோகன் என்ற பேராசிரியர் கொண்டாட வேண்டியவராக ஏன் இருக்கிறார்? என்று கேள்விகளை எழுப்பிக்கொண்டு, அவருடைய பணிகளைப் பற்றிக் கூற விழைகிறேன். பேராசிரியர் முத்துமோகன் பற்றிக் கடந்த சில நாட்களாகத்தான் வாசிக்கத் தொடங்கினேன். அந்த வாசிப்பில் கிடைத்த அனுபவம் சார்ந்து மணிக்கணக்கில் பேராசிரியர் முத்துமோகனைப் பற்றிப் பேச வேண்டும் என்று மனம் சொல்கிறது. நேரம் கருதி சுருக்கமாகப் பேசுகிறேன். மூன்று முக்கியமான அடிப்படைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.na muthumohan 700-       மார்க்சியத் தத்துவம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய மண்ணில் உருவாகி வளர்ந்தது. 1848இல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் தொடங்கி 1883இல் மார்க்ஸ் மறைந்த காலம் வரை, 1895இல் ஏங்கல்ஸ் மறைந்த காலம் வரை ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தத்துவத்துறையில் அவர்கள் ஈடுபட்டு உலகிற்கு அரிய புதிய தத்துவ மரபை உருவாக்கித் தந்துவிட்டுச் சென்றார்கள். இந்தத் தத்துவ மரபு, ரஷ்யாவில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி லெனின் என்ற மனிதனின் வீரதீரமான போராட்டத்தின் அடிப்படையில் சோவியத் ஒன்றியமாக உருவானது. அதற்குப் பிறகு, 1949இல் மாவோவினுடைய போராட்டத்தின் வழியாகச் சீனா என்ற மண் சிவப்பாக மாறியது. அதைப்போல கியூபா, வியட்நாம்... இப்படி உலகம் முழுக்க இந்தத் தத்துவ மரபு இருபதாம் நூற்றாண்டில் மிகப்பெரிய வீச்சாக உருவானது. உலகம் இரண்டு மரபுகளை உடையது என்று ஆனது. ஒன்று அமெரிக்க முதலாளித்துவ மரபுகள் சார்ந்தது‌; இன்னொன்று சோசலிச மரபுகள் சார்ந்தது. இந்தத் தெளிவான பிரிவுகள் இருபதாம் நூற்றாண்டில் நமக்குக் கிடைத்த புதிய வரலாறு.

-       இந்தச் சூழலில், தமிழில் என்ன நடந்தது? தமிழில் மார்க்சியத் தத்துவம் எப்படி உள்வாங்கப்பட்டது? தமிழில் செயல்பட்ட வரலாறு என்ன? மார்க்சியம் பற்றிப் பேசும்போது இரண்டு அடிப்படைகளாகப் பிரித்துக் கொள்கிறேன். ஒன்று மார்க்சியக் கட்சிகள், இயக்கங்கள், அது சார்ந்த செயல்பாடுகள். அதைப் பற்றி நான் பேசப்போவதில்லை. மாறாக, மார்க்சியம் என்று சொல்லக்கூடிய தத்துவ மரபு சார்ந்து உருவாக்கப்பட்ட பிரதிகளை வாசிப்பது; அது பற்றி எழுதுவது; அதை ஒரு புலமைத் தளமாக வளர்த்தெடுத்துச் செல்வது என்பது இன்னொரு வகையான பணி. இந்தப் பணி தமிழில் எப்படி நடந்தது? 1920களில் கம்யூனிஸ்ட் இயக்கம் இந்தியாவில் உருவானது. அது குழுக்களாக இருந்து 1940களில் வடிவமைக்கப்பட்ட கட்சியாக மாறியது. 1964 வரை ஒரே கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தது. 1964க்குப் பிறகு இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் 1969க்குப் பிறகு பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவாகின. 1990இல் சோவியத் ஒன்றியம் தகர்ந்தது. இந்த வரலாற்றுக்குள்ளே தமிழ்ச் சூழல் மார்க்சிய புலமைத்துவ மரபுகளை எப்படி எல்லாம் உள்வாங்கியது? யார் செயல்பட்டார்கள்? யார் எழுதினார்கள்? யார் பேசினார்கள்? என்ற வரலாற்றுக்குள் நெட்டோட்டமாக பயணித்தால், அந்தப் பயணத்தின் அடிப்படையிலிருந்து பேரா. முத்துமோகன் என்ற மனிதர் என்ன சாதனை செய்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அதற்காகத்தான் இந்த சுருக்கமான வரலாற்றைச் சொன்னேன்.

மார்க்சியம் பற்றி, தமிழில் முதன்முதல் எழுதத் தொடங்கிய பெருமகன் சிங்காரவேலர்தான். அந்தப் பெருமகனுடைய எழுத்துகள் குடியரசு பத்திரிகையின் ஊடாக, பெரியாரினுடைய இசைவோடு வெளிவந்தன. அறிவியல்பூர்வமாக உலகத்தைப் புரிந்து கொள்ளுதல்; இதுதான் அவருடைய முதன்மையான நோக்கமாக இருந்தது. உலகத்தில் உருவாகி வந்த புதிய அறிவியல், ஐரோப்பிய மண்ணில் உருவான புத்தொளி மரபுகளின் வழியாக உருவாகி வந்த புதிய கண்டுபிடிப்புகள், உலகத்தை எப்படி மாற்றியிருக்கின்றன? இந்தியச் சமூகம், இந்த மநுதர்ம பூமி எப்படி இருக்கிறது? இந்த மநுதர்மத்தை ஒழிப்பதற்கான வடிவம், ஐரோப்பியப் பின்புலத்தில் உருவான அறிவியல் சார்ந்துதான் சாத்தியம் என்பதை அவருடைய எல்லா எழுத்துக்களும் சொல்லின. 1924 தொடக்கம் 1935 வரை அவர் எழுதிய எல்லா எழுத்துகளையும் நீங்கள் இணைத்துப் பார்த்தால், அறிவியல் பூர்வமான சமூகத்தை உருவாக்குவதற்கு, உலகத்தில் என்னென்ன நடந்திருக்கிறது, நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றியப் புரிதல் கிடைக்கும்.

சிங்காரவேலருக்கு நேரடியான மார்க்ஸ் மேற்கோள்களையோ ஏங்கல்ஸ் மேற்கோள்களையோ லெனின் மேற்கோள்களையோ எடுத்துக் காட்டுவதற்கான வாய்ப்புக் குறைவு. அந்தக் காலத்தில் அந்தப் பிரதிகள் எல்லாம் பெரும்பகுதி ஜெர்மன் மொழியில் இருந்திருக்கும் அல்லது ரஷ்ய மொழியில் இருந்திருக்கும்; அவை ஆங்கிலத்தில் கூடப் பிற்காலத்தில்தான் மொழியாக்கம் செய்யப்பட்டன. புலமைத்துவம் சார்ந்த புத்தகங்களை எழுதுவது பெரிதும் சாத்தியப்படாமல்தான் இருந்தது. பிரதிகள் கிடைப்பது அரிதாக இருந்தது. தலைமறைவாக வாழ்ந்த காலத்தில் ஆங்கிலத்தில் வாசிப்பது என்பதுதான் 1950கள் வரை கம்யூனிஸ்ட்களுக்குச் சாத்தியம்.

தத்துவ மரபுகளை எழுதுவது, பேசுவது, புத்தகங்கள் ஆக்குவது என்பது 1947இல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கிய ‘ஜனசக்தி பிரசுராலயம்’ என்ற அமைப்பு மூலம் சாத்தியமானது. 1950களில் உலகம் முழுவதும் இருந்த கம்யூனிஸ்ட் இயக்கங்களிடையே ஏற்பட்ட பல்வேறு கருத்து முரண்பாடுகள், அதை வெளிப்படுத்த புத்தகங்களை உருவாக்குதல், அதைக் கட்சி சுற்றுக்கு விடுதல், கட்சித் தோழர்கள் வாசித்தல் என்ற வகையில்தான் மார்க்சியத் தத்துவம் பற்றிய உரையாடல் என்பது கம்யூனிஸ்ட் கட்சிகள் மத்தியிலே இருந்தது. 1940களின் இறுதியில் ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளிலே புதிய சக்தி உருவாகி வருகிறது. காலனி ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடுகிறார்கள். காலனியம் வெளியேற்றப்பட்டது. காலனியம் வெளியேற்றப்பட்டதின் விளைவாக, காலனியத்திற்குப் பிந்தையதான ஒரு சமூகம் உருவாகப்போகிறது என்பதைக் கண்டறிந்த அமெரிக்கப் பின்புலத்தில் இருந்த அறிவாளிகள்‌, ‘யுனெஸ்கோ’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கினர். அதன்மூலம் நூல்களை வெளியிடுவதைச் செய்தார்கள். யுனெஸ்கோ நிறுவனம் வெளியிட்ட நூல்களை அந்தக் காலத்தில் எழுத்தாளர் க.நா.சுப்பிரமணியம் போன்றவர்கள் எழுதினார்கள், மொழிபெயர்த்தார்கள், வெளியிட்டார்கள்.

இந்தச் சூழலில், சோவியத் நாடும் இப்படியான செயல்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியது. 1950களில் நேருவுக்கும் குருட்சேவுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த மாதிரியான செயல்களில் வளர்ச்சி ஏற்பட்டது. 1970களில் இந்திராகாந்தி அம்மையார் சோவியத் இந்திய ஒப்பந்தங்கள் பலவற்றை உருவாக்கினார். சோவியத் நூல்களை மொழிபெயர்த்து இந்திய மொழிகளில் கொண்டு வருவதற்கான குழுவும் இந்திரா அம்மையார் காலத்தில் உருவாக்கப்பட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அதில் மிகுந்த ஈடுபாடு கொண்டு செயல்படத் தொடங்கியது. அந்தச் செயல்பாட்டின் விளைவாக 1960களின் இறுதி 1970களில் மார்க்சிய எழுத்துகள் ஆங்கில மொழியில் மிக அதிகமாக வெளிவரும் வாய்ப்பு பெற்றது.

சோவியத் ஒன்றியம் ஆங்கிலத்தில் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் படைப்புக்களைப் பல்வேறு தொகுதிகளாக வெளியிடத் தொடங்கிய காலம் என்பது 1980களில் உருவானது. அப்படி 1980களில் உருவான மார்க்ஸ் ஏங்கல்ஸுடைய மூன்று ஆங்கிலத் தொகுதிகள் சோவியத் ஒன்றியத்திலேயே பன்னிரண்டு தொகுதிகளாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நமக்குக் கொடுக்கப்பட்டன. தமிழகத்தில் இருந்து சென்ற அறிஞர்கள் மொழிபெயர்ப்புப் பணியைச் செய்தார்கள். 1980களில் அந்தப் பிரதிகள் நமக்கு வந்து சேர்ந்தன. ‘நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்’ பன்னிரண்டு தொகுதிகளை விற்பனை செய்யத் தொடங்கியது. இதுதான் மார்க்சிய மூல நூல்கள் தமிழுக்கு வந்த வரலாறு. பேராசிரியர் முத்துமோகன் என்ன செய்தார் என்பதை அறிவதற்கான பின்புலத்தை வழங்க இந்த நீண்ட வரலாற்றைச் சுருக்கமாகச் சொன்னேன்.

தொகுப்பாக்கம்

2018இல் மார்க்ஸ் பிறந்த 200ஆம் ஆண்டை எல்லாத் தளங்களிலும் கொண்டாடிய காலத்தில், சோவியத்தில் மொழியாக்கம் செய்த பன்னிரண்டு தொகுதிகளை பேரா. முத்துமோகன் தன்னுடைய மேசைக்கு எடுத்தார். அந்தத் தொகுதிகளை மட்டுமல்லாமல் 1950களிலிருந்தே மார்க்சியம் தொடர்பாக நிறைய மொழிபெயர்ப்புகள் தனித்தனியாக வெளிவந்திருந்தன. எடுத்துக்காட்டாக, 1968லேயே தொ.மு.சி “மதம்” என்ற தொகுதியை மார்க்ஸ். ஏங்கல்ஸ் எழுத்துக்களிலிருந்து எடுத்து மொழிபெயர்த்துத் தனியாகக் கொடுத்திருந்தார். இப்படி தனித்தனியாக இருந்த மார்க்ஸ். ஏங்கெல்ஸ் எழுத்துகள் எல்லாவற்றையும் திரட்டி பன்னிரண்டு தொகுதிகள் என்பதை, இருபது தொகுதிகளாக மார்க்ஸ் ஏங்கல்ஸ் மூல எழுத்து தொகுதிகளை உருவாக்கித் தந்தவர் பேரா. முத்துமோகன் என்பதை தமிழ்ச் சமூகம் நன்றியுடன் கொண்டாடுவது அவசியம். இது சாதாரண வேலை அல்ல. அது பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் அவர் அந்த ஒவ்வொரு தொகுதிக்கும் எழுதிய முன்னுரைகளை எல்லாம் இணைத்து வெளிவந்துள்ள அவருடைய புத்தகம் “படைப்பின் அற்புதத் தருணங்கள்” என்பதைப் பார்க்க வேண்டும். அந்தத் தொகுதிகளை பொருள்ரீதியாக வகைப்படுத்தியுள்ளனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க கால கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் தொடங்கி பிறகு மூலதனத்தில் வந்து, ஏங்கல்ஸினுடைய இயற்கையின் இயக்கவில் பற்றிய விஷயங்களுக்குள் போய் அவருடைய குடும்பம் தனிச்சொத்து அரசு என்ற வகையில் முடிகிறது. 1840 தொடக்கம் 1895 வரையில் இரண்டு பெரும் மனிதர்களும் செய்த பல்வேறு விதமான ஆய்வுகள் சார்ந்த தத்துவப் பதிவுகளைத் தமிழ்ச் சமூகத்திற்கு, அதனுடைய பொருள் சார்ந்த மரபில் இருபது தொகுதிகளாகக் கட்டமைத்த முறை சிறப்பானது. தொ.மு.சி. ரகுநாதன், விடியல் பதிப்பக நிழல்வண்ணன், எஸ்விஆர் இப்படி யார் யாரெல்லாம் மார்க்சியப் பிரதிகளை மொழிபெயர்த்திருக்கிறார்களோ அதையெல்லாம் தேடி எடுத்து குறிப்பிட்டப் பொருண்மையின் கீழாக இருபது தொகுதிகளாகக் கட்டமைத்துள்ளார். இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் நிலைமைகளைக் கணக்கில் கொண்டு அவற்றுக்கு அவர் எழுதியிருக்கிற முன்னுரைகள் அந்தத் தொகுதிகளை வாசிப்பதற்கு உத்வேகத்தையும் அது சார்ந்த புரிதலையும் நமக்கு உருவாக்கித் தரும் வகையில் அமைந்துள்ளன.

கடந்த சில நாட்களாக இருபது தொகுதிகளையும் எடுத்து வைத்து, அவருடைய ‘படைப்பின் அற்புத தருணங்கள்’ என்ற தொகுப்பையும் வாசித்துப் பார்த்த பிறகு இந்த மனிதர் மார்க்சியத்துக்காக எவ்வளவு பெரிய புலமைத்துவக் கொடையைச் செய்திருக்கிறார். அந்தப் படைப்பு, அதனுடைய எளிமை, அது ஒழுங்குசெய்யப்பட்ட முறைமை ஆகிய எல்லாவற்றையும் இந்த மனிதருடைய மிகப்பெரிய சாதனையாகக் கருதுகிறேன். எனக்கு ஒரு நல்வாய்ப்பு. இவற்றையெல்லாம் அவை வெளிவந்த காலத்திலே வாங்கிச் சேகரிக்கக்கூடிய வாய்ப்பு பெற்றவன், நான். அவற்றை எல்லாம் ஒருசேர எடுத்து பார்க்கிற பொழுது, மார்க்சிய புலமைத்துவ மரபை அறிய, மூல ஆசான்களைத் தமிழில் கொடுத்திருக்கிற இந்தப் பணி, மிகப்பெரிய பணி என்று கருதுகிறேன்.

2000 தொடக்கம் தமிழ் புத்தகச் சூழலில் கணிப்பொறி யுகம் வந்தது. தமிழ்ப் புத்தக உருவாக்கத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. தலையணைப் புத்தகங்கள் என்பவை இரண்டாயிரத்துக்குப் பிறகு வந்தவைதான். நாவல் என்ற பெயரில் தலையணை அளவு எழுதுகிற ஒரு கூட்டம் இருக்கிறது. அது புராணங்களை, மகாபாரதத்தை தலையணையாக எழுதி பெரிய சாதனை என்று பேசி கொண்டிருக்கிற கூட்டமாக உள்ளது. ஆனால், இன்னொரு பக்கம் மூல தத்துவ மரபுகளை மிகப்பெரும் தொகுதிகளாக உருவாக்கி வருகிற மரபும் இருக்கிறது. இந்த மரபில் முத்துமோகன் செய்திருக்கிற இந்தப் பணிகள் எப்படி நடந்தன என்ற புரிதல் தேவை. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தைச் சார்ந்த, அதற்குப் பொறுப்பாக இருந்த நண்பர்கள் சரவணன், சபாபதி போன்றவர்களும் முத்துமோகனுடைய வழிகாட்டுதலில் வேலை செய்த தமிழ் காமராசன் போன்றவர்களும் சேர்ந்து செய்த செயல்கள் மற்றும் உழைப்புகள் முக்கியமாக இருக்கின்றன.

மொழியாக்கம்

2016 தொடக்கம் தொடர்ந்து, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மூலமாக ‘பிராங்க்பர்ட் புத்தகச் சந்தை’ என்று மிகப்பெரிய உலகப் புத்தகச் சந்தைக்கும் அதைப்போல இலண்டனில் நடக்கக்கூடிய உலகப் புத்தகச் சந்தைக்கும் என்.சி.பி.எச் சார்பாக சில முறை முத்துமோகன் போனார்.

ஆசிய, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் உருவாகக்கூடிய மார்க்சிய இயக்கங்கள் எப்படி இருக்கின்றன? எடுத்துக்காட்டாக, அண்மையில் நேபாளத்தில் இளைஞர் கூட்டம் போராடியது. இலங்கையில் இன்னொரு இளைஞர் கூட்டம் போராடியது. வங்க தேசத்திலும் நடந்தது. இப்படியான இளைஞர்கள் சார்ந்த போராட்ட மரபுகள் நம்ம ஊரில் கூட, அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் அந்த வேலையைச் செய்ததாகச் சொல்கிறார்கள். இந்த எல்லா விஷயங்களையும் இணைத்துப் பார்க்கிற பொழுது, சமூகத்தில் நடக்கக்கூடிய போராட்டங்கள் என்பவை ஒரு காலத்தில், அமைப்பாக உருவாக்கப்பட்ட தனிமனிதர்களைத் தலைமைப்படுத்திக் கொண்ட ஜனநாயக மரபு சார்ந்த இயக்கங்களாக இருந்தன. இன்னொரு பக்கம் வர்க்க அரசியலை முதன்மைப்படுத்தி, மார்க்சியத்தை முதன்மைப்படுத்தி அதைச் சார்ந்த போராட்ட வடிவங்களாக இருந்தன. ஆனால் இன்றைக்கு அதை மீறி வேறு ஒரு போராட்ட வடிவம், வேறு ஒரு அணி சேர்தலும், வேறு வகையான நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. அது இனம் சார்ந்து, மொழி சார்ந்து, அவர்களுடைய வட்டாரம் சார்ந்து, அதன் ஊடாக சமூகப் பிரச்சனைகளை முன்னெடுக்கக்கூடிய மரபும் உருவாகியுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு எதிராக, சென்னைக் கடற்கரையில் கூடிய கூட்டம் பிரமாண்டமானது. உள்ளே நுழைந்து போக முடியாத அளவுக்கு இலட்சக்கணக்கான இளைஞர்கள் கூடி இருந்தார்கள். இவ்வகையான நிகழ்வுகளுக்கான சமூக அரசியல் காரணங்களைத் தேடுகிற வேலையில் முத்துமோகன் இறங்கத் தொடங்கினார். மார்க்சியம் குறித்த ஆய்வுகளில், இந்த நிகழ்வுக்கான பின்புலங்களைக் கண்டறியலாம் என்பது அவரது நோக்கமாக இருந்தது. அதன் விளைவு, ஐரோப்பிய நாடுகளிலே நவீன மார்க்சிய மரபுகள் சார்ந்த நூல்களைத் திரட்டினார். ஏறக்குறைய முப்பது நூல்கள். இந்த முப்பது நூல்களையும் தேர்ந்தெடுப்பதில் தொடங்கி மொழிபெயர்க்கவும் அவை ஒவ்வொன்றுக்கும் அறிமுகம் எழுதுவதிலும் முத்துமோகன் அவர்களின் ஒருங்கிணைப்பு முதன்மையாகச் செயல்பட்டிருக்கிறது.

உலகப் புத்தகச் சந்தையில், உலகம் முழுவதும் எப்படியான மார்க்சியம் சார்ந்த புத்தகங்கள் உருவாக்கப்படுகின்றன என்பது பற்றியான புரிதல் அவருக்குக் கிடைக்கிறது. அந்தப் புரிதல் சார்ந்து அந்தப் புத்தகங்களைத் தெரிவு செய்ய தொடங்குகிறார். இந்த நூல்கள் 1990களுக்குப் பிறகு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு அதன் தொடர்ச்சியாக மேற்கத்திய மார்க்சியச் சிந்தனையில் ஏற்பட்ட முக்கியமான புத்தாக்கங்களைக் கொண்டவை.

இலண்டன் மாநகரைச் சார்ந்து உருவாட மார்க்சிய அறிஞர்கள் என்ற கூட்டம் உண்டு. அது தொடக்க காலத்திலிருந்தே இருக்கிறது. மௌரிஸ் கான்போர்த் (1909. 1980) என்ற மார்க்சிய அறிஞர். அவர் தொழிலாளர்களுக்கு வகுப்பு எடுத்த உரைகள் தமிழில் புத்தகமாக வந்திருக்கிறது. அதைப்போல ஜே.டி.பெர்னால் (1901. 1971) மார்க்சியத்தை அறிவியல் வழியாக முன்னெடுத்தவர். அறிவியல் வரலாறு என்பதே மார்க்சியத்தின் வரலாறுதான் என்பதைக் கட்டமைத்து எழுதிய பெரியவர் ஜே.டி.பெர்னால். அதைப்போல பணத்தின் மதிப்பு’ என்ற ஒரு குட்டி புத்தகத்தைப் படித்திருப்போம். அதை எழுதியவர் எமிலி பேன்ஸ், (1889. 1972). அதைப்போல, கிறிஸ்டோபர் காட்வெல் (1907. 1937) பண்பாட்டுத் தளத்தில் மார்க்சியம் பற்றி பேசிய மிகப்பெரிய அறிஞர். இவர்கள் எல்லாம் இந்த இலண்டன் பின்புலத்தில் வந்தவர்கள். இந்தப் பின்புலத்தில் அண்மைக் காலத்தில் வரக்கூடிய எரிக் ஹாப்ஸ்பாம் (1917. 2012) என்ற அறிஞர். அவருடைய ஆறு நூல்களை முத்துமோகன் தேர்வுசெய்து தமிழில் மொழிபெயர்க்கச் செய்திருக்கிறார்.

எரிக் ஹாப்ஸ்பாமை ஓர் எடுத்துக்காட்டாகக் கொண்டு முத்துமோகன் நவீன உலகத்திற்குத் தேவையான மார்க்சியம் பற்றிப் பேசக்கூடிய செய்திகளைக் கொண்டு வந்திருப்பதைப் பார்க்கலாம். புரட்சியின் யுகம், மூலதன யுகம், பேரரசின் யுகம், எதிர்புரட்சி யுகம் என்று ஒரு பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு செய்து, 1991 வாக்கில் தொடங்கி இரண்டாயிரங்களில் அவை நூல் வடிவம் பெறுகின்றன. சோவியத்து தகர்வு, அது சார்ந்த விஷயங்கள், உலகத்தில் ஏற்படக்கூடிய நவீன மரபுகள் குறித்து, அவருடைய நூல்களில் ‘தொடக்கக் கால கிளர்ச்சியாளர்கள்’ என்ற ஒரு புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதைப்போல ‘சமூகம்சார் கொள்ளையர்கள்’ என்று ஒரு புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இதற்குள் வெகுசன அரசியல், இந்த வெகுசன அரசியல் மரபு சார்ந்து மக்களினுடைய வளர்ச்சி எப்படி மாறி இருக்கிறது; இதைச் சார்ந்து மார்க்ஸ் ஏங்கல்ஸ் தத்துவ மரபை எப்படி கொண்டு செல்வது என்பது பற்றிய உரையாடல் முதலியவை பேசப்படுகின்றன. அதைப்போல, தாரிக் அலி (1943 -) என்ற முக்கியமான மார்க்சிய அறிஞர். பாகிஸ்தானைச் சேர்ந்தவர். அவர் இலண்டனில் வாழுகிறார். ‘லெனின் சந்தித்த நெருக்கடிகள்’ என்ற நூலை எழுதியுள்ளார். ‘தெருச்சண்டை ஆண்டுகள்’ என்ற அவரது ஒரு புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் மார்க்சியம் சார்ந்த இந்த முரண்கள் எப்படி வந்தன? அதை எப்படிப் புரிந்து கொள்வது? என்பது பற்றி அவர் எழுதுகிறார். இந்தப் புத்தகங்களை எல்லாம் தேடிக் கொண்டுவந்து தமிழில் மொழிபெயர்க்கச் செய்திருக்கிறார் முத்துமோகன். அதைப்போல, ‘திறந்தநிலை மார்க்சியம்’ என்ற நான்கு தொகுதிகள் வந்திருக்கின்றன. திறந்தநிலை மார்க்சியம் என்பது ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்வேறு மார்க்சிய அறிஞர்களால் எழுதப்பட்ட பல கட்டுரைகளின் தொகுப்பு. அதைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

முப்பது தொகுதிகளில் இருபத்தி மூன்று தொகுதிகள் என்.சி.பி.எச் நிறுவன விற்பனையில் இருக்கின்றன. எஞ்சியவை தயாரிப்பில் உள்ளன. இவை எல்லாவற்றையும் மேசை மேலே வைத்துக் கொண்டு பார்க்கிற பொழுது, உலகத்தில் நிகழ்ந்த அண்மைக்கால மார்க்சியம் பற்றிய விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. ரோசா லக்சம்பர்க் (1871. 1919) எப்படி மார்க்சியத்தை பேசினார்; அல்தூசர் (1918. 1990) என்ன பேசினார், கிராம்ஸ்கி (1891. 1937) என்ன பேசினார், கிறிஸ்டோபர் காட்வெல் (1907. 1937) என்ன பேசினார், நோம் சாம்ஸ்கி (1928 -) என்ன பேசினார் என்ற புரிதலைப் பெறமுடிகிறது. இந்த அறிஞர்கள் எல்லாம் மார்க்சியம் பற்றிப் பேசிய பல்வேறு செய்திகளின் தொகுப்பாக இருக்கக்கூடிய நூல்களைத் தமிழ் வடிவமாக்கித் தருவதின் மூலம், மார்க்சியம் உலகம் முழுவதும் ஏற்பட்ட நெருக்கடிகள் சார்ந்து செத்துவிட்டது; மார்க்சியம் இனிமேல் வளர முடியாது என்ற வறட்டு கூச்சல்களுக்கு எதிராக, இந்த அறிஞர்கள் எல்லாம் மார்க்சியத்திற்கு உருவாகியுள்ள நெருக்கடிகள் எவை? இதை எப்படி நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்லக்கூடிய ஆராய்ச்சிகளை செய்துள்ளனர். இந்த நூல்கள் முத்துமோகன் அவர்களின் முயற்சியால் தமிழில் வந்துள்ளன. இது மிக முக்கியமான அரசியல் பணி.

நாம் அந்தத் தொகுதிகளை ஒவ்வொன்றாகப் படித்து, அது பற்றியான உரையாடல்களை நடத்த வேண்டும். இந்த வேலை மிக அவசியம். சோம்ஸ்கி எப்படி இன்றைய மார்க்சிய விஷயத்தை சொல்லுகிறார்? கிராம்ஸ்கியை நீங்கள் எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? பெண்ணிய ஆய்வாளர்கள் எப்படி மார்க்சியம் பற்றிச் சொல்கிறார்கள்? இப்படி பல்வேறு விதமான விஷயங்களை மேலோட்டமாக இல்லாமல், ஆணித்தரமான, ஆழமான நூல்களின் வழியாகக் கண்டெடுத்து அதைத் தமிழில் கொடுத்திருக்கிற மிகப்பெரிய வேலையை முத்துமோகனுடைய குழு, அவரோடு சேர்ந்த தோழர்கள் செய்திருக்கிறார்கள். இந்தக் குழுவில் இவரோடு சேர்ந்து வேலை செய்த இரண்டு தோழர்கள் பெயரை நான் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். ஒன்று பி.கே.ராஜன் என்ற தோழர். அவருடைய பங்களிப்பு முதன்மையானது. இதைப்போல இன்னொரு தோழர் மா.சிவக்குமார். நான் தோழர் சிவக்குமாரோடு இணைந்து அம்பேத்கர் பதிப்புகளைச் செய்வதிலே ஈடுபட்டிருக்கிறேன். அவருடைய உழைப்பு பிரமாண்டமானது. சீனாவில் எல்லாம் வேலை பார்த்துவிட்டு வந்தவர். அவர் மார்க்சிய இயக்கங்களுக்குள் தொடர்ந்து வேலை செய்திருக்கிறார். மொழிபெயர்ப்பாளர் ஒவ்வொருவர் குறித்தும் விரிவாகப் பேசவேண்டும். பிற இந்திய மொழிகளில் இப்படியான நவீன மார்க்சியம் பற்றிய உரையாடல்கள் சார்ந்த புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன என்று சொல்லமுடியாது. திட்டமிடப்பட்டு, வகைமைப்படுத்தப்பட்டு, எந்தப் பின்புலத்தில் உருவாகி இருக்கிறது என்பதைச் சொல்வதற்கான தன்மையாக இந்த நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன என்று சொன்னால், இதற்கெல்லாம் மூலம் யார்? இதற்கு மூளை யார்? இதில் யாருடைய உழைப்பு இருக்கிறது என்பதை நாம் தேடும்போது முத்துமோகன் தனித்து நிற்பதைக் காண்கிறோம். அவருடைய செயல்பாட்டை நாம் வெறும் வார்த்தையில் சொல்ல முடியவில்லை. அதன் பரிமாணம் மிகப்பெரியது.

கோட்பாட்டாக்கம்

இந்த வகையில், மார்க்சிய புலமைத்துவ உலகில் பணியாற்றிய முத்துமோகன் இதை மட்டும்தான் செய்தாரா? இல்லை. இந்த மொழிபெயர்ப்புகள், இதில் பேசப்படும் விஷயங்கள், இதைச் சார்ந்து அவர் முன்னெடுத்த பல விஷயங்கள் உள்ளன. ஆனால் நேரம் கருதி இரண்டு செய்திகளை மட்டும் பேசி நான் முடித்துக் கொள்கிறேன். ஒன்று இந்தியத் தத்துவ மரபுகள் பற்றிய அவருடைய ஆராய்ச்சி. ‘இந்தியத் தத்துவங்களும் தமிழர் தடங்களும்’ என்ற அவருடைய நூல் மிக முக்கியமான நூல். அதில் எனக்கு ஒரு வகையில் மகிழ்ச்சி உண்டு. நாங்கள் “கங்கு” என்ற வரிசையில் சமூக மரபுகளின் அரசியல் என்ற வரிசையில் பத்து சிறு நூல்களைக் கொண்டு வந்தோம். அதில் இந்தியத் தத்துவங்களின் அரசியல் பற்றி ந.முத்துமோகனிடம் 64 பக்கத்தில் எழுதி வாங்கி ஒரு புத்தகத்தைக் கொண்டு வந்தோம். அந்தத் தலைப்பில் முத்துமோகன் பின்னர் விரிவாக எழுதி வெளியிட்டார்.

தோழர் முத்துமோகன் மாஸ்கோ லுமும்பா பல்கலைக் கழகத்தில் இந்தியத் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்படும்போது மேற்கத்தியத் தத்துவ மரபுகளையும் பயின்று இந்தியத் தத்துவ மரபை அவர் செழுமைப்படுத்தினார்.

இந்தியத் தத்துவங்களுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு உள்ளது? என்பதைப் பற்றி இதுவரை பேசியோர் குறைவு. முத்துமோகன் இந்தியத் தத்துவ மரபை நேரடியாகத் தமிழ்ச் சூழலோடு இணைத்து சமஸ்கிருத பின்புலத்தில் உருவாகி வந்த மதம் சார்ந்த தத்துவ மரபை, மக்கள் தத்துவ மரபாக எப்படி கட்டமைக்க வேண்டும்? அதில் தமிழ்ச் சூழலில் என்ன நடந்தது? தமிழ்ச் சூழலில் நம்முடைய சங்க இலக்கியம் எதைச் சொல்லியது? தொல்காப்பியர் என்ன சொன்னார்? அதைப்போல பின்னர் வந்த அறிஞர்கள் குறிப்பாக, இராமலிங்கர் என்ன சொன்னார்? பெரியார் என்ன சொன்னார்? அம்பேத்கர் என்ன சொன்னார்? அயோத்திதாசர் என்ன சொன்னார்? என்று அந்த மரபுகள் எல்லாவற்றையும் உள்வாங்கி, அது பற்றிய உரையாடல்களை முன்னெடுத்து, தமிழர் அடையாளங்கள் என்ற இன்னொரு வகையான தத்துவக் கோட்பாட்டு மரபையும் அவர் நூலாகக் கொண்டு வந்திருக்கிறார்.

‘தமிழர் அடையாளங்கள்’ என்று சொல்லுகிற பொழுது, ஓர்இனம் சார்ந்து, மொழி சார்ந்து, அது சார்ந்த விஷயங்களை நாம் உரையாடலுக்கு எடுத்துக் கொள்கிற பொழுது, அந்த அடையாளங்கள் எந்த வகையில் மார்க்சிய தத்துவ, வர்க்க மரபு சார்ந்த போராட்டங்களோடு இணைந்ததாக இருக்க முடியும்? ஏனெனில், மார்க்சியர்களுக்கு இந்த “அடையாளம்” என்று சொல் பெரிதும் ஏற்புடைய சொல் இல்லை. ஆனால், முத்துமோகன் வரலாற்றுப் பின்புலத்தில், கருப்பர்கள் இனம் சார்ந்து அமெரிக்கா போன்ற நாடுகளில் உருவான மார்க்சிய மரபு சார்ந்த போராட்டங்கள் முதலியவற்றுடன் இணைத்து இந்திய ஜனநாயக அரசியலைப் பேசினார்.

இதில், அம்பேத்கரை பற்றி விரிவாக பேச வேண்டும். அம்பேத்கர் முன்னெடுத்த தத்துவ மரபுகளில் ஒன்று மநுவை எரிப்பது. பார்ப்பனிய மநு ஒழிப்பு என்பதே நம்முடைய வேலை என்பதை அவர் அடிப்படைக் கோட்பாடாகக் கொண்டிருந்தார். இந்தியப் பொருளாதார மரபாக இருந்தாலும் சரி, இந்திய பண்பாட்டு மரபாக இருந்தாலும் சரி, இந்திய வெகுசன உளவியலாக இருந்தாலும் சரி, அதில் பார்ப்பனியம் என்பது ஆழ்ந்து செயல்படுகிறது என்பதை அம்பேத்கர் மிக விரிவாகப் பேசினார். பெரியாரும் அதை இன்னொரு தளத்தில் கொண்டு சென்றார். இவர்களை எல்லாம் மார்க்சியர்கள் 1990கள் வரை எதிர்த்திசையில்தான் மதிப்பீடு செய்தார்கள். இன்றைக்கும் எதிர்த்திசையில் பேசக்கூடிய, மார்க்சியம் பேசக்கூடிய குழுவினர் இருக்கிறார்கள். ஆனால் முத்துமோகன் இவர்களுடைய இந்த மரபுகளை வர்க்க மரபு சார்ந்த புரிதலோடு உரையாட வைக்கும் வேலையைச் செய்தார்.

ஆசிய பொருள் உற்பத்தி முறை சார்ந்து மார்க்ஸ் இந்திய சமூகம் பற்றிய கருத்தை எவ்வாறு கட்டமைத்தாரோ, அந்த வகையில் மொழி, இனம், தேசியம் பற்றிப் பேசக்கூடியவற்றை நாம் வர்க்க மரபுகளுக்குள் எப்படி புரிந்து கொள்ள முடியும் என்பது பற்றி முத்துமோகன் பேசுகிறார். மார்க்சைப் பொறுத்தவரையில் கிழக்கத்திய சமூகங்கள், மேற்கு ஐரோப்பிய சமூகங்களைப் போல தனிமனிதர்களால் ஆனவையல்ல, சமுதாயங்களால் ஆனவை. இந்தியச் சமூகத்தில் தனிமனிதர்கள் தமது சமுதாய (சாதி/வகுப்பு) அடையாளத்தின் வழியாகவே பிறருடன் உறவாடுகின்றனர்.

இதிலிருந்து தொடங்கி இந்திய சமூகத்தில் இருபதாம் நூற்றாண்டு முதல் நடந்துவரும் அடையாள அரசியல் பற்றி கோட்பாட்டாக்கம் செய்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர் இராஜாவுடன் இணைந்து மார்க்ஸ்-அம்பேத்கர் தொடரும் உரையாடல் என்ற நூலை தோழர் முத்துமோகன் எழுதியுள்ளார். மார்க்சின் இந்தியா பற்றிய கருத்துநிலைகளிலிருந்து அம்பேத்கரின் இந்து மதத்தின் மீதான விமர்சனத்தைப் பார்க்கிறது, இந்நூல். படிநிலை ஏற்றத்தாழ்வு என்று அம்பேத்கர் வகுத்தளித்த புரிதலை விளக்குகிறது.

அதுமட்டுமின்றி, இருபதாம் நூற்றாண்டின் மேற்குல மார்க்சியர்களான அந்தோனியோ கிராம்சி (கருத்தியல் மேலாதிக்கம். எதிர்க்கருத்தியல் மேலாதிக்கம், குடிமைச் சமூகம், அடித்தள மக்கள்), ஜார்ஜ் லூகாக்ஸ் (மொத்தமாக்கம். பொருளாதாரம் மட்டுமின்றி ஒட்டு மொத்த சமூகத்தையும் தழுவி நிற்கும் மேலாதிக்கமாக முதலாளித்துவம்), லூயி அல்தூசர் (கட்டமைப்புவாதம். தனிமனித மையத்துக்கு எதிராக சமூகத்தை மையமாக வைப்பது) முதலியோரின் கருத்தாக்கங்கள் அம்பேத்கரின் இந்து சமூகம் பற்றிய விமர்சனங்களுடன் பொருந்துகின்றன என்பதை இந்த நூல் நிறுவுகின்றது.

இந்து மதத்தின் மீதான அம்பேத்கரின் விமர்சனத்தை பண்டைய வரலாற்றில் சிராமண மரபுகள் வேத மரபுகள் மீது வைத்த விமர்சனத்தோடு இணைத்து, இந்து மத மேலாதிக்கத்துக்கு எதிராக அம்பேத்கர் பௌத்தத்தின் சனநாயக மரபுகளை நிறுத்தியதை இந்நூல் விளக்குகிறது. கூடுதலாக, அயோத்திதாச பண்டிதர் தமிழ் இலக்கிய ஆதாரங்களிலிருந்து தமிழ் பௌத்த மரபை மீட்டெடுத்து பார்ப்பனியத்தின் மீதும் காலனி ஆதிக்கத்தின் மீதும் தொடுத்த தாக்குதலை ஆவணப்படுத்துகிறது.

மார்க்ஸ் வரையறுத்த, சமுதாயங்களால் (சாதிகளால்) ஆன ஆசிய சமூகங்களில் நாடாளுமன்ற ஜனநாயகம் புகுத்தப்படும்போது அதில் அரசியல் உரிமைகளுக்கான போராட்டங்கள் சமுதாயக் குழுக்களால் (தனிமனிதர்களால் அல்ல) நடத்தப்படுகின்றன. இதில் மேலிருந்து நடத்தப்படும் சுரண்டலுக்கான அடையாளங்களையும் (பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், சைவ தமிழ் தேசியம் முதலியன) கீழிருந்து நடத்தப்படும் விடுதலைக்கான அடையாளங்களையும் (தலித்திய இயக்கங்கள்) மார்க்சியர்கள் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்று முன்வைக்கிறது மார்க்ஸ் அம்பேத்கர் உரையாடல் என்ற நூல்.

இது மிகவும் முக்கியமான செய்தி. மார்க்சியம் பயில்வதற்காக எழுதப்பட்ட அவரது நூல்களாக இருந்தாலும் சரி, தத்துவ மரபுகளை முதன்மையாகக் கொண்டு அவர் பேசிய, எழுதிய கட்டுரைகளாக இருந்தாலும் சரி, முப்பது நூல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதாக இருந்தாலும் சரி, இவை அனைத்தையும் இந்திய சமூகத்தில் நடக்கும் வர்க்க மோதல்களைப் புரிந்து கொள்வற்கான அவரது தேடலாகப் புரிந்துகொள்ள முடியும். மார்க்ஸ் ஏங்கல்ஸினுடைய மூல நூல்களில் இருந்தும் அவர் உள்வாங்கித் தமிழ்ச் சமூகத்திற்குக் கொடுத்திருக்கிறார். இதற்காகத் தமிழ்ச் சமூகம் அவருக்குக் கடமைப்பட்டுள்ளது.

குறிப்பு: சீர் வாசகர் வட்டம் சார்பில் 14.06.2026 அன்று, மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பேரா. ந.முத்துமோகன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அந்த நிகழ்வில் நிகழ்த்திய உரையின் எழுத்து வடிவம், இது. இதனை உருவாக்கித் தந்த முனைவர் சு.பிரபாவதி அவர்களுக்கு நன்றி. கட்டுரையை வாசித்து மாற்றங்கள், இணைப்புகள் ஆகியவற்றைச் செய்துகொடுத்த தோழர் மா. சிவக்குமாருக்கும் நன்றி. ஜூலை, ஆகஸ்டு 2026 மாதங்களில் ‘காக்கைச் சிறகினிலே’ இதழில் வெளியிடப்பட்ட கட்டுரை இப்போது மாற்றங்களைச் செய்து மறுவெளியீடாக வெளியிடப்படுகிறது.

- வீ.அரசு, சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த்துறை மேனாள் தலைவர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.