அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பில் வெளியான சட்டம்: விரிவுரைகள் என்ற பொருண்மைக்கான (தொகுதிகள் 34-36) அறிமுகக் கட்டுரை

அண்ணல் அம்பேத்கர் 1930-33 ஆம் ஆண்டுகளில் இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாடுகளில் தீண்டப்படாத வகுப்பு மக்களின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். 1932-1934 காலங்களில் இந்திய அரசியல் சட்ட உருவாக்கக்குழு உருவாக்கப்பட்டது. இதில் நாடாளுமன்றக் குழு என்ற பிரிவில் அம்பேத்கர் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டிருந்தார். அம்பேத்கர் 1933 ஏப்ரல் 24 இல் இலண்டன் சென்றார். 1933 ஜூன் 13 முதல் 1933 நவம்பர் 7 ஆம் நாள் வரை அங்கு நடைபெற்ற அரசியல் சட்டத்திருத்தம் குறித்த பல்வேறு குழுக்களில் பங்கேற்றார். 1934 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் நாள் மூன்றாம் வட்டமேசை மாநாட்டை முடித்துக்கொண்டு மும்பை திரும்பினார்.

ambedkar lawஇந்தியாவுக்கான அரசியல் சட்ட வரைவு உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், அம்பேத்கர் மாணவர்களுக்கு சட்டம் தொடர்பான விரிவுரைகளை நிகழ்த்தும் வாய்ப்பு உருவானது. மும்பை திரும்பிய அம்பேத்கர் 1934 ஜூன் முதல் மும்பை சட்டக் கல்லூரியில் பகுதி நேர ஆசிரியராகப் பணியாற்ற ஒப்புதல் அளித்தார். பிறகு 1935 ஜூன் முதல் மும்பை சட்டக் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார். இதனால் 1934 ஜூன் தொடங்கி 1937 முடிய மாணவர்களுக்குச் சட்டம் குறித்த விரிவுரைகளை நிகழ்த்தினார்.

அம்பேத்கர் நிகழ்த்திய விரிவுரைகள் சட்டக் கல்லூரியின் இதழ்களில் வெளிவந்தன. பல்வேறு விரிவுரைகள் கையெழுத்துப் படிகளாகவும் இருந்தன. இவற்றைத் தொகுத்து, மராட்டிய அரசின் அம்பேத்கர் ஆவணப் பதிப்புக் குழு வெளியிட்டது. இதில் இடம்பெற்றிருக்கும் செய்திகளைச் சுருக்கமாகக் கீழ்க்காணும் வகையில் பதிவு செய்யலாம்.

பிரித்தானிய அரசு இந்தியாவுக்கான அரசியல் அமைப்புச் சட்டத்தை, இங்கிலாந்து அரசின் அரசியல் அமைப்புச் சட்டம் சார்ந்த வடிவிலேயே உருவாக்கத் தொடங்கியது. அது தொடர்பான பணிகளில் அம்பேத்கர் ஈடுபட்டு வந்தார். இந்தப் பின்புலத்தில் இந்தியாவில் சட்டம் பயிலும் மாணவர்களுக்கு இங்கிலாந்து அரசியல் அமைப்புச் சட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் விரிவுரைகளாக வழங்கும் பணியை மேற்கொண்டிருக்கிறார். அது பின்கண்டவாறு அமைகிறது.

-         இங்கிலாந்து நாடாளுமன்றம் என்பது எவ்வகையில் உருவாக்கப்பட்டுச் செயல்படுகிறது? அங்கு நடைமுறைப்படுத்தப்படும் பொதுச் சட்டநெறி என்பது என்ன? இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் தன்னாட்சி மற்றும் சிறப்புத் தகுதிகள் எவையெவை?

-         இங்கிலாந்து வழக்கு மன்றங்களில் சட்டங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறார்கள்? அங்கு செயல்படும் அறக்கட்டளைகள் என்பவை எவை? பல்வேறு சட்டங்கள் குறித்த அறிமுகம் ஆகியவற்றை அம்பேத்கர் விரிவுரைகளில் பேசியுள்ளார்.

-         சொத்துரிமைச் சட்டம் என்பது என்ன? இந்தியத் தன்மைகளோடு இந்தச் சட்டத்தை எப்படிப் புரிந்து கொள்வது? ஆகிய பலவற்றைப் பேசியுள்ளார்.

பிரித்தானியர்களின் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில், இங்கிலாந்து சட்டமுறைகளை அடிப்படையாகக் கொண்டு, இந்தியச் சட்டங்களை உருவாக்குவது என்பது தவிர்க்க முடியாதது. இந்தப் பின்புலத்தில், இங்கிலாந்தின் அரசமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளை முதலில் மாணவர்களுக்கு விரிவுரை செய்கிறார். இதில் டைசி, பிளாக்ஸ்போன், டெபோம் ஆகிய அறிஞர்களின் சட்டம் குறித்த கருத்துகளை அம்பேத்கர் விரிவாகப் பேசுகிறார். இங்கிலாந்தின் மரபு சார்ந்து பேசும்போது, ஆங்காங்கே இந்திய மரபுகளையும் இணைத்துப் பேசுகிறார். அறிஞர் டைசியின் கோட்பாடுகள், இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் உயரதிகாரம் குறித்து எவ்வகையில் உள்ளன என்பதைப் பதிவு செய்கிறார். இங்கிலாந்தின் சட்ட வரையறைகள் எவ்வாறெல்லாம் படிப்படியாக உருவாக்கப்பட்டு, சமகாலச் சூழலில் அவை எப்படி செயல்படுகின்றன என்பதை விளக்கிப் பேசுகிறார். இங்கிலாந்தின் மரபுகள் இந்தச் சட்டங்களில் எவ்வாறெல்லாம் உள்கட்டமைப்பாக இடம்பெற்றுள்ளன என்பதையும் சொல்கிறார். இவ்வாறு இங்கிலாந்து நாடாளுமன்றம் செயல்படும் சட்டமரபுகளின் பல்வேறு பரிமாணங்களை விரிவாகத் தமது விரிவுரைகளில் வெளிப்படுத்தியிருப்பதைக் காண முடிகிறது.

இங்கிலாந்தின் நாடாளுமன்றம் என்பது எத்தகையது என்பதைப் பின்வரும் அம்பேத்கரின் விளக்கம் தெளிவுபடுத்துகிறது.

“நாடாளுமன்றம் சட்டப்படி, மன்னர், பிரபுக்களவை, வெகு மக்களவை முதலிய மூன்று உறுப்புகளைக் கொண்டது. சட்டமியற்றும் அனைத்து அதிகாரமும் மன்னர், பிரபுக்களவை, வெகுமக்களவை மூன்றிற்கும் கூட்டாக உரியது. அந்த அதிகாரம் நாடாளுமன்றத்துடன் கூடிய மன்னரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, நாடாளுமன்றத்தின் இரு அவைகளது இசைவுடன் செயல்படும் மன்னரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சட்டப்படி ஒவ்வொரு சட்டமும் நாட்டின் சட்டமாவதற்கு முன்னர் மன்னரின் அனுமதியைப் பெற வேண்டும். நாடாளுமன்ற அமைப்பில் மன்னர் எவ்வளவு முக்கியமான உறுப்பு என்பது, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தங்களது பணிகளை நிறைவேற்ற மன்னரால் அழைக்கப்பட வேண்டும் என்ற உண்மையை நினைவில் கொண்டால் தெளிவாகும்!! (தொ. 34: பக். 33,34)

இவ்வகையில் மன்னரின் தடுப்பு அதிகாரம் (Veto), பிரபுக்களவையின் தடுப்பு அதிகாரம் பற்றிய பல கூறுகளைப் பற்றி அறிய முடிகிறது.

முடியரசு என்னும் ஆட்சி முறையின் தொடர்ச்சியாகவே இங்கிலாந்தின் நாடாளுமன்றம் அமைந்திருப்பதை, இங்கிலாந்தின் சட்ட வரையறைகள் மூலம் அறிய முடிகிறது. இது தொடர்பான விவரணங்களை அம்பேத்கர் தமது விரிவுரைகளில் வெளிப்படுத்தியிருப்பதைக் காண முடிகிறது. முடியரசு மன்னர்களின் அதிகாரம் என்பது, நாடாளுமன்றம் என்ற வடிவத்திலும் எவ்வாறு செயல்படுகிறது? வடிவம் மாறினாலும் அதிகார மரபு மாறாமல் இருப்பதை இங்கிலாந்து சட்ட வரையறைகள் மூலம் அறிந்துகொள்ள முடிவதை அம்பேத்கர் தெளிவுபடுத்துகிறார். தொடர்ந்து மன்னருக்கு எந்தெந்த வகையான உரிமைகளை இங்கிலாந்து அரசியல் சட்ட அமைப்பு வழங்குகிறது என்பது குறித்தும் அம்பேத்கர் பேசியுள்ளார்.

மதம் தொடர்பாக மன்னருக்கு இருக்கும் சிறப்புரிமைகள் என்பவை இங்கிலாந்து சட்ட அமைப்பில் இடம்பெற்றிருப்பதைப் பின்வரும் பகுதி உறுதிப்படுத்துகிறது.

“மன்னர்தான் சட்டப்படி அமைக்கப்பட்ட இங்கிலாந்து திருச்சபையின் முழு முதல் தலைவராவார். திருச்சபையின் தலைவர் என்ற முறையில் அவர் தலைமையமைச்சரின் பரிந்துரையின் பேரில், தலைமை மத குருவையும் மத வட்டாரத் தலைவர்களையும் திருச்சபையில் ஏனைய உயர் பதவியில் இருப்பவர்களையும் நியமிக்கிறார்” (தொ.34: பக்.46)

இவ்வாறு இங்கிலாந்து அரசமைப்புச் சட்டம் முதலியன மரபின் தொடர்ச்சியாகவே அமைந்திருப்பதை அம்பேத்கர் தெளிவுறுத்துகிறார். இவ்வாறு, பிரபுக்களவை, வெகுமக்களவை ஆகியவற்றின் அதிகாரங்கள், சிறப்பு உரிமைகள் ஆகியவற்றை அம்பேத்கர் பதிவு செய்துள்ளார்.

இங்கிலாந்தின் சமூக அமைப்பில், மன்னர்களுக்கு அடுத்த நிலையில் பிரபுக்கள் இருந்தார்கள். அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் மன்னருக்கு அடுத்த நிலையில் செயல்பட்டார்கள். மரபுரிமை சார்ந்த பிரபுக்கள், பிரதிநிதித்துவ அடிப்படையில் உள்ள பிரபுக்கள், அதிகாரப் படிநிலையில் உயர் பதவிகளில் இருப்பதால் பிரபுக்கள் எனக் கருதப்படுபவர்கள் என்று இங்கிலாந்தில் பிரபுக்கள் இருந்தனர். இந்த ஒவ்வொரு பிரிவிலிருந்தும் நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டனர். மன்னரின் அதிகாரங்களை நாடாளுமன்றத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு இந்தப் பிரபுக்கள் உதவினர்.

மன்னர், பிரபுக்கள் ஆகியோருக்கு அடுத்த நிலையில் வெகுமக்கள் அவை நாடாளுமன்றத்தில் இருந்தது. இந்த ஒவ்வொரு பிரிவினருக்கும் என்னென்ன அதிகாரங்கள் உள்ளன என்பது குறித்தும், அம்பேத்கர் விரிவாகப் பதிவு செய்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்திலும் மேற்குறித்த வகையில் தொடக்கக் காலத்தில் இடம்பெற்றதை இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. இவ்வகையில் பிரித்தானிய நாடாளுமன்றம் எவ்வாறு செயல்பட்டது என்பதை தமது விரிவுரைகள் மூலம் அம்பேத்கர் பேசியதை அறிந்துகொள்ள முடிகிறது.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் செயல்படும் சட்டங்கள் மற்றும் சட்டநெறிகளான பொதுச் சட்டநெறி, தன்னாட்சித் தகுதிநிலை, சிறப்புத் தீர்வுச் சட்டங்கள் ஆகியவை தொடர்பான விளக்கங்களையும் அம்பேத்கர் தமது விரிவுரைகளில் பேசியிருப்பதை அறிய முடிகிறது.

பொதுச் சட்டநெறி சார்ந்து சொத்துக்கள் பற்றிய விளக்கங்களை அம்பேத்கர் தெளிவுபடுத்துவதைக் காண முடிகிறது. பெண்களுக்கான சொத்து என்பது குறித்துப் பொதுச் சட்டநெறி கூறும் விளக்கங்களை அறிய முடிகிறது. இதில் பின்வரும் எடுத்துக்காட்டின் மூலம் மணமான பெண்ணின் சொத்துரிமை குறித்துக் காண முடிகிறது.

 “மணமான பெண்ணொருத்திக்கு தெளிவாகவோ பொருள்படும்படியாகவோ, அவளது தனிப் பயன்பாட்டிற்கென சொத்து ஏதும் தரப்பட்டிருப்பின், நீதிநெறியின்படி அவள் கணவனிடமிருந்து அச்சொத்தின் மீதான கட்டுப்பாடு விலக்கப்படுகிறது. அச்சொத்திற்கு அவன் அறங்காவலன் போன்று செயல்படலாமேயன்றிச் சொத்தைப் பயன்படுத்தவோ பிறருக்கு அளிக்கவோ முழு உரிமையும் மனைவிக்கு உண்டு.” (தொ.34: பக்.91)

இவ்வாறு இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் சட்டம் மூலம் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட உரிமைகள் குறித்து அறிய முடிகிறது.

தன்னாட்சித் தகுதிநிலை குறித்த சட்டங்கள், பிரித்தானியாவின் குடியேற்ற ஆட்சிக்குட்பட்ட நாடுகள் குறித்த பதிவாக அமைகிறது. குடியேற்ற நாடுகளில் எவ்வகையான உரிமைகளை நடைமுறைப்படுத்த முடியும்? பிரித்தானியப் பேரரசுக்கு உட்பட்டு குடியேற்ற நாடுகள் எவ்வாறெல்லாம் செயல்பட வேண்டும்? குடியேற்ற நாடுகளின் உரிமைகள் எவையெவை? ஆகிய பல்வேறு சட்டமுறைமைகள் குறித்தும் அம்பேத்கர் விரிவாகப் பேசியுள்ளார். இவ்வகையில், இங்கிலாந்து நாடாளுமன்றம் எவ்வாறு செயல்பட்டது? அதில் இயற்றப் பெற்ற சட்டங்கள் எத்தகையவை? ஆகிய பல செய்திகளை நாம் அறிந்துகொள்ள அம்பேத்கரின் உரையாடல்கள் அடிப்படையாக அமைகின்றன.

•••

இங்கிலாந்து சட்டங்களை இந்தியச் சட்டங்களோடு ஒப்பிட்டுப் பேசும் முறையை அம்பேத்கர் மேற்கொண்டுள்ளார். குறிப்பாக, சட்டங்களை நடைமுறைப்படுத்தும் காலவரையறைகளின் பல்வேறு பரிமாணங்கள் குறித்துப் பேசுகிறார். விதிகள் எவை, விதிவிலக்குகள் எவை என்பது குறித்தும் பேசுகிறார். இந்திய காலவரையறைச் சட்டம் என்பது நடுவர் மன்றம், நிறுவனங்கள், வருமான வரி, தொழிலாளர் இழப்பீடு ஆகியவற்றில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்ற விவரணங்களைப் பதிவு செய்துள்ளார். குற்றவியல், உரிமையியல் ஆகிய கூறுகளில் கால வரையறைச் சட்டம் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்தும் பேசுகிறார். ஒவ்வொரு விதி குறித்தும் விளக்கங்களை எழுதி, அவற்றிற்கான எடுத்துக்காட்டுகளையும் தருகிறார்.

பிரித்தானியர்கள் இந்தியாவை ஆட்சி செய்தபோது, குற்ற விசாரணை முறை தொகுப்புச் சட்டம் செயல்பட்டது குறித்த விரிவான விளக்கங்களை முன்வைத்துள்ளார். குற்றவியல் விசாரணைகளின் அமைப்பு முறைகள் குறித்தும் பேசுகிறார். தொடர்ந்து வழக்கின் விசாரணை முறைகள் குறித்தும் பதிவு செய்துள்ளார். உரிமையியல் விசாரணைச் சட்டம், குற்ற விசாரணைச் சட்டம் ஆகியவற்றை அட்டவணைப்படுத்தி, இரண்டுக்குமான விளக்கங்களைப் பதிவு செய்துள்ளார். உரிமையியல் மற்றும் குற்றவிசாரணைச் சட்டங்கள் சார்ந்து, கருத்துக் கேட்டல், மறுஆய்வு செய்தல், மேல்முறையீடு ஆகியவை குறித்தும் அம்பேத்கர் விளக்கம் அளித்துள்ளார்.

சட்டமுறைகளில் ஒன்றாக அறக்கட்டளைச் சட்டம் அமைகிறது. வக்ஃப் போன்ற அமைப்புகளை முறைப்படுத்தும் வகையில் அமைவது அறக்கட்டளைச் சட்டங்கள் ஆகும். இவை பொது அறக்கட்டளைகள், தனியார் அறக்கட்டளைகள் என்று உள்ளன. இவை பெரும்பகுதி நிதிநிறுவன அறக்கட்டளைகளாக உள்ளன. இந்த அறக்கட்டளைகள் நேரடி அறக்கட்டளைகள், வெளிப்படை அறக்கட்டளைகள் என்று செயல்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் செயல்படுவது தொடர்பான சட்டவிதிமுறைகள் குறித்து அம்பேத்கர் விரிவாகப் பேசுகிறார். அறக்கட்டளை அமைப்பு குறித்த அம்பேத்கர் விளக்கம் பின்வருமாறு அமைகிறது.

 “அறக்கட்டளையை உருவாக்குபவர் ஒரு குறிப்பிட்ட சொத்தின் மீது, குறிப்பிட்ட நபர்களுக்காக, குறிப்பிட்ட அறக்கட்டளை உருவாக்கும் தெளிவான நோக்கம் கொண்டிருக்க வேண்டும் என்பது தெளிவாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட நீதிநெறிக் கடமைகளை விதிப்பதற்கும், குறிப்பிட்ட பயனாளிகளுக்கு குறிப்பிட்ட நீதிநெறி உரிமைகளை வழங்குவதற்கும் உரிய நோக்கம் இல்லாவிட்டால், எந்தவொரு அறக்கட்டளையும் சட்டப்படி உருவாகாது.” (தொ.35: பக்.168)

இவ்வகையில் அறக்கட்டளை உருவாகுதல் என்பது தொடர்பான சட்ட விதிமுறைகளை விரிவாக அறிய முடிகிறது. அறக்கட்டளைகள் எவ்வாறு அழிந்துபோகும் வாய்ப்பைப் பெறுகின்றன, அப்போது சட்டச் செயல்பாடுகள் என்பவை எவ்வாறு செயல்படவேண்டும் என்பது குறித்தும் அம்பேத்கர் பேசுகிறார்.

குற்றவியல் சட்டங்கள், உரிமையியல் சட்டங்கள், அறக்கட்டளைச் சட்டங்கள் ஆகிய பிற எந்தெந்த அடிப்படைகளில் அமைந்துள்ளன? அவற்றை நடைமுறைப்படுத்தும் முறைமைகள் எவையெவை? இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு எவ்வகையான சட்டங்கள் உள்ளன ஆகிய பல விவரங்கள் தொகுதிகளில் இடம்பெற்றிருப்பதை அறிகிறோம். சட்டப் புத்தகங்களாக இத்தொகுதிகள் அமைகின்றன.

•••

இங்கிலாந்து நாடாளுமன்றச் செயல்பாடு, குற்றவியல் சட்டங்கள், அறக்கட்டளைகள் தொடர்பான சட்டங்கள் முதலியவற்றைத் தொடர்ந்து சொத்துரிமை குறித்து அம்பேத்கர் விரிவாகப் பேசுகிறார். மனித சமூகத்தில் சொத்து என்பது உருவானதால், மனிதன் நிலையாக ஓரிடத்தில் தங்கும் வாழ்முறையும் அதனைச் சார்ந்து அதிகாரங்களும் உருவாயின. இதன் உச்ச வளர்ச்சியாகவே அரசு என்னும் அதிகாரத்தை, நிருவாகம் செய்யும் அமைப்பு உருவானது. நாடோடி வாழ்முறையைக் கொண்டிருந்த மனித சமூகத்திடம் ‘சொத்து’ என்பது ஓர் உரிமைப் பொருளாக உருப்பெறவில்லை. சொத்து உருவான பின் அதற்குரிய உரிமை என்பதன் மூலம் மனித சமூகத்திற்குள் முரண்பாடுகள் வலுவாக உருப்பெறத் தொடங்கின. இந்தப் பின்புலத்தில் சொத்துரிமை எனும் தன்மை உருவானது. சொத்துரிமை என்பது என்ன? அதனை நடைமுறைப்படுத்துவது எப்படி? முதலிய பல புதிய தன்மைகள் உருவாயின. இதனைச் சரிசெய்ய சட்டங்கள் என்பவை உருவாக்கப்பட்டன. ஒருவர் சொத்தை இன்னொருவருக்கு விற்பனை செய்வது, அடைமானம் வைப்பது முதலிய நடவடிக்கைகள் உருவாயின. இத்தன்மைகளுக்குப் பின்பற்ற வேண்டிய அறம் சார்ந்த நடவடிக்கைகள் குறித்துப் பேசுவதும் உருவாயிற்று. காலப்போக்கில் அறமரபுகள் என்பவை சட்டங்களாக வடிவம் பெற்றதை அறிகிறோம். இவ்வகையான கூறுகள் சார்ந்து அம்பேத்கர் சொத்து தொடர்பான சட்டங்கள் பற்றிப் பேசுகிறார்.

சட்டங்கள், சட்டநெறிகள் பற்றிய விரிவான குறிப்புகளை அம்பேத்கர் முன்வைக்கிறார். சொத்தை அடைமானம் வைக்கும்போது உருவாகும் சட்டச் சிக்கல்கள் எவை, அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை முதல்நிலையில் பேசுகிறார். அதைப் போலவே சொத்தை விற்பனை செய்யும்போது என்ன விதமான சிக்கல்கள் உருவாகின்றன? அவற்றை எதிர்கொள்வது எவ்வாறு? என்பது பற்றியும் தெளிவுபடுத்துகிறார். சொத்தை விற்பனை செய்பவருக்குரிய சட்ட நியதிகள், வாங்குபவரின் கடப்பாடுகள் முதலியனவும் உரையாடலுக்கு உட்படுத்தப்படுகின்றன. சொத்து தொடர்பான சட்டங்களில் ஆங்கிலச் சட்டம் எத்தகையது? இந்தியச் சட்டம் எத்தகையது என்பது தொடர்பான விவரணங்களும் இடம்பெற்றிருப்பதைக் காண்கிறோம்.

அடைமானம் என்பது குறித்த விளக்கம் பின்வருமாறு அமைகிறது.

“ஆங்கிலச் சட்டத்தின் கீழ், சொந்த அல்லது உண்மைச் சொத்துகள் போன்ற (எல்லா வகையான சொத்துக்களும்) அடைமானம் வைக்கப்படலாம். உண்மைச் சொத்துகள் உணரக்கூடியதாகவோ உணரமுடியாததாகவோ, உரிமையில் உள்ள சொந்தச் சொத்தாகவோ வழக்கிற்குள்ளானதாகவோ இருக்கலாம். சொத்து சுயேச்சையானதாகவோ, உறுதியுடன் கூடியதாகவோ (எடுத்துக்காட்டு: சாகும் வரை சொந்தமானது) இருக்கலாம்; சட்ட அடிப்படையிலானதாக இருக்கலாம்; எல்லா வகையான சொத்துக்களும் அடைமானப் பொருளாக இருக்கலாம் என்பது மட்டுமல்ல, இந்தச் சொத்தின் எந்த உரிமையும் அடைமானம் வைக்கப்படலாம். இந்த உரிமை முழுமையானதாக இருக்கலாம்; எதிர்பார்க்கப்படுவதாக இருக்கலாம், அல்லது அவ்வப்போது நேரிடுவதாக இருக்கலாம்” (தொ. 35: பக். 23-24)

இவ்வாறு சொத்து அடைமானம் செய்வது தொடர்பான பல்வேறு முறைமைகளும் விரிவாகப் பேசப்படுகின்றன. அடைமானம் செய்வதற்கான பத்திரங்கள் உருவாக்கம், வெவ்வேறு வகையான அடைமானங்கள், சான்றொப்பம் அளிக்கும் முறைகள், பதிவு செய்யும் முறைகள், குறிப்பிட்ட சொத்தின் மீது வழக்குகள் இருந்தால், அடைமானத்தின் போது கைக்கொள்ள வேண்டிய சட்டவிதிமுறைகள் முதலிய பல விவரங்கள் குறித்த விரிவான பதிவுகள் உள்ளன. சாட்சியங்கள், மெய்ப்பித்தல் தொடர்பான நடைமுறைகள் குறித்தும் பேசப்படுகிறது.

அம்பேத்கர் மேற்குறித்த சட்டங்கள் தொடர்பான விவரணங்களைப் பெறுவதற்கு அவர் பயன்படுத்திய அடிப்படை ஆவணங்களாக பின்கண்டவை அமைகின்றன.

அலகாபாத் தொடர் இந்தியச் சட்ட அறிக்கைகள், கல்கத்தா தொடர் இந்தியச் சட்ட அறிக்கைகள், பம்பாய் தொடர் இந்தியச் சட்ட அறிக்கைகள், மெட்ராஸ் தொடர் இந்தியச் சட்ட அறிக்கைகள், ரங்கூன் தொடர் இந்தியச் சட்ட அறிக்கைகள், லாகூர் தொடர் இந்தியச் சட்ட அறிக்கைகள், இந்திய மேல்முறையீடுகள், சைமன்ஸ், மீசன் மற்றும் வேல்ஸ் அறிக்கைகள், சட்டம் தொடர்பான இதழ்கள் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டே அவர் சட்டங்கள் தொடர்பாகப் பேசி இருப்பதைக் காண்கிறோம்.

அம்பேத்கர் 1934-1937 காலங்களில் நிகழ்த்திய சட்டம் தொடர்பான விரிவுரைகள் என்பவை சட்டம் படித்த மாணவர்களுக்கு உதவியது மட்டுமன்றி, பின்னர் இந்தியச் சட்ட வரையறைகளில் அவர் ஈடுபடும்போது பெரிதும் உதவியிருக்க வேண்டும். இவ்வகையில், சட்டம் தொடர்பான விரிவுரை நிகழ்த்திய அண்ணல் அம்பேத்கர் எனும் ஆசிரியரை நாம் காண முடிகிறது.

- வீ.அரசு, முதன்மைப் பதிப்பாசிரியர், அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.