people and languages 700நூல் ஆசிரியர்

லூகி லுக்கா காவள்ளி-ஸ்ஃபோர்ஸா (1922-2018) இத்தாலியில் பிறந்தவர். இத்தாலியின் பாவியா (Pavia), பார்மா (Parma) பல்கலைக்கழகங்களிலும் பிறகு கேம்பிரிட்ஜிலும் கல்வி கற்றவர்; கற்பித்தவர். அடிப்படையில் மருத்துவர். சில நோய்கள் பரம்பரை நோய்களாக தொடர்வது குறித்த ஆய்விற்காகத்தான் மரபணு ஆய்வில் இறங்கினார். பிறகு மருத்துவராக பணியாற்றுவது நின்றுபோய் முழுநேர மரபணு ஆய்வாளராக மாறிப் போனார். மரணத்தின் போது அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மதிப்புறு பேராசிரியராக இருந்தார். அவர் கல்விப் புலம் சார்ந்து எழுதிய பெரும் பனுவலான ‘மானுட மரபணுக்களின் வரலாறும் புவியியலும்’ (The History and Geography of Human Genes) மரபணு அறிவியலில் ஒரு தலையாய படைப்பாக இன்று வரை கருதப்படுகின்றது. ‘மக்கள் தொகுதி மரபணுவியல்’ (Population Genetics) என அழைக்கப்படும் என்ற அறிவியல் புலத்தின் பிதாமகன் காவல்லி-ஸ்ஃபோர்ஸா. ‘மனிதனின் பயணம்’ (The Journey of Man) என்ற ஆங்கில புத்தகத்தின் ஆசிரியரும் உலகம் முழுவதும் மக்கள் பரவிய பயணப் பாதையை ஆணின் ஒய் (Y) குரோமோசோம் மரபணு மூலம் கண்டறிந்து, வரைந்தளித்தவருமான ஸ்பென்ஸர் வெல்ஸ் இவரது மாணாக்கர். அதுபோல பெண்ணின் கருமுட்டை கொண்டிருக்கும் மித்தோகோன்றியா டிஎன்ஏ ஆய்வுகளின் மூலம் உலகம் முழுவதும் மக்கள் கூட்டங்கள் பரவியப் பயணப் பாதையை வரைந்து அளித்தவரும் ‘ஏவாளின் ஏழு பெண்மக்கள்’ (Seven Daughters of Eve) நூலின் ஆசிரியருமான பிரையான் சைக்ஸ்ஸும் இவர் வழி வந்தவர்தான். மரபணுவைப் பயன்படுத்தி பரம்பரை நோய்களின் மூலத்தைக் கண்டறிதல், மக்கள் கூட்டங்களின் நகர்வை கண்டறிதல், பரிணாம வரலாற்றைக் கட்டமைத்தல், குற்றப் புலனாய்வில் உதவுதல் என்று இன்று ஆழமும் விரிவும் ஆகியுள்ள மரபணுவியல் உட்பிரிவுகளுக்கு எல்லாம் அடித்தளம் இட்டவர் காவள்ளி-ஸ்ஃபோர்ஸா.

நூலின் நோக்கம்

முன்னுரையில் இது குறித்து காவள்ளி-ஸ்ஃபோர்ஸா எழுதியுள்ளார். நூல் மானுட பரிணாமம் குறித்து பல்வேறு புலங்களில் நடைபெற்றுள்ள ஆய்வுகள் குறித்து ஒரு பறவைப் பார்வையைத் தருவதற்கு முயற்சிக்கின்றது. கடந்த ஒரு லட்சம் ஆண்டுகள் இதனுடைய வரலாறு. அந்த வரலாற்றை தொல்பொருளியல், மரபணுவியல், மொழியியல் ஆகியவற்றின் அடிப்படையில் பார்ப்பதுதான் இந்த நோக்கம். இந்த வெவ்வேறு மாணுட அறிவுப் புலங்கள் ஏராளமான தரவுகளையும் விளக்கங்களையும் அளித்துள்ளன. அவற்றை ஒன்று கூட்டுவது அல்லது ஒன்றுபட்ட விளக்கம்தான் இந்த மானுட பரிணாமத்தின் வரலாறு. ஏனெனில் ஒவ்வொரு புலமும் தனியாக செய்யும் ஆய்வு பல போதாமைகளையும் குறைபாடுகளையும் கொண்டதாக இருக்கிறது. இவற்றோடு கலாச்சார மானுடவியல், மானுடப் பரப்பியல் (demography), பொருளாதாரம், சூழலியல், சமூகவியல் ஆகியவையும் இணையும் பொழுது இந்த வரலாறு குறித்த விளக்கம் முழுமை அடையும் என்று காவள்ளி-ஸ்ஃபோர்ஸா கூறுகின்றார். அந்த நோக்கத்தில் கல்வி வளாக சிறப்புப் புலம் தாண்டி அக்கறை கொண்ட அனைவரும் வாசிக்கத் தக்கவகையில் எழுதப்பட்டதே இந்த நூல். நூல் எழுத மற்றொரு நோக்கம் இனவெறி பிரச்சாரங்கள் அறம் சார்ந்தவையும் அல்ல; அறிவியல் சார்ந்தவையும் அல்ல என்பதை விளக்குவது ஆகும் என்கின்றார் ஆசிரியர்.

Genes Peoples and Languagesவெளிப்படையானதும் உள்ளார்ந்திருப்பதுமான வேறுபாடுகள்

மக்கள் தொகுதிகளுக்கு இடையே சில வெளிப்படையான எளிதில் கண்டுணரக்கூடிய வேறுபாடுகள் உள்ளன. அவற்றில் சில மரபணு அடிப்படை கொண்டவை என்பது உண்மையே. தோல் நிறம், கண்களின் வடிவம், தலைமுடியின் தன்மை போன்றவை எல்லாம் ஓரளவுக்கு மரபணு அடிப்படை கொண்டவை. இவைதான் நம் முன்னோர்களின் (இன்றும்கூட பலர்) இன வேறுபாடுகளை உணர்ந்து கொள்வதற்கான வழியாக இருக்கிறது. சில கலப்புகளை புறம் ஒதுக்கி விட்டால் ஒரு ஐரோப்பியரை அல்லது ஆப்பிரிக்கரை அடையாளம் காண்பது சாதாரணமாக எளிதாகத்தான் இருக்கிறது. இதுபோன்று சில எளிதில் புலப்படக்கூடிய வேறுபாடுகள் 'தூய இனம்' என்று ஒன்று இருக்கிறது என்ற தவறான கருத்தை விதைக்கின்றது. இவை மானுட வரலாற்றில் சமீப காலத்தில் பரிணமித்த மாற்றங்கள்தான்; நவீன மானுட இனத்தைச் சார்ந்தவர்கள் அல்லது தொடக்க கால மனிதர்கள் பெருமளவுக்கு வேறுபடுத்திக் காண முடியாதவர்களாகத்தான் இருந்தார்கள் என ஆசிரியர் விளக்குகின்றார்.

ஆப்பிரிக்காவிலிருந்து…

மானுட இனம் முதலில் ஆப்பிரிக்காவில் உருவாகி பிறகு அங்கு எண்ணிக்கை அதிகமானபோது அவர்கள் அனைவருக்குமான வாழ்விடமும் தேவைகளும் எளிதில் நிறைவு செய்யப்படாதபோது அங்கிருந்து நகர்ந்து ஏனைய கண்டங்களுக்கும் பரவியது நன்கு நிறுவப்பட்ட கருத்து. ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறிய மானுடகுலத்தினர் பல்வேறு விதமான சூழல்களை எதிர்கொள்ள, தகவமைய வேண்டியவர்களாக இருந்தார்கள். இது போன்ற சூழல்கள் ஏற்படுத்திய தாக்கம், அதற்குத் தகவமைந்தது குறித்து பல எடுத்துக்காட்டுகளின் மூலம் விளக்குகின்றார். ஐரோப்பியர்களுக்கு கருப்பு நிறத் தோல் வெள்ளையாக ஆனது, கிழக்கு ஆசியர்களுக்கு கண்களின் மீது இரண்டாவது இரைப்பை சவ்வுப் படலம் உருவானது, உடலின் பருமன் அல்லது வடிவு மாறியது ஆகியவற்றை எல்லாம் அவற்றைக் கொணர்ந்த சூழல் காரணங்களோடு காவள்ளி-ஸ்ஃபோர்ஸா காட்டுகின்றார். சுமார் 25 பக்கங்களில் இந்த உலகப்பந்தின் ஆறு கண்டங்களில் வாழும் சுமார் 800 கோடி மக்களையும் அவர்களின் ஒற்றுமை, வேறுபாடு ஆகியவற்றோடு நம்ப முடியாத ரசவாதமாக ஒற்றைச் சட்டகத்தில் காட்டிவிடுகின்றார்.

மானுட பரிணாம வரலாறும் மரபணு அடிப்படையிலான மீள்கட்டமைப்பும்

மானுடம் காலங்காலமாக பயணத்திலும் குடிபெயர்விலும் ஈடுபட்டு வந்துள்ளதைக் கூறும் காவள்ளி-ஸ்ஃபோர்ஸா, அவை எவ்வாறு சில மரபணு அடையாளங்களின் இருப்புகதியை (Frequency) மாற்றுகின்றன என்பதையும் விளக்கி நமக்கு மரபணு அடையாளங்கள், மரபணு கலப்புகள் என்பவை குறித்த ஒரு அடிப்படை புரிதலை உருவாக்குகின்றார். அவை, அவருக்கு பின்னால் வந்த பல மரபணு நிபுணர்களும் விளக்கி எழுதியுள்ளவைதான். அவை இருக்கட்டும். நாம் இந்த நூலில் ஸ்ஃபோர்ஸா அவர்களுடைய தனித்துவமானதும் சிறப்பானதுமன சில விளக்கங்கள் குறித்து மட்டும் பார்ப்போம். அவை மரபணுக்கள், மக்கள் தொகுதிகள் மற்றும் மொழிகளுக்கு இடையிலான உறவு என்பதே. மரபணு ரீதியாக மக்கள் தொகுதிகள் கிளை பிரிவது போல ஒரு குடும்ப மொழிகள் கிளை பிரிந்து வேறு வேறு மொழிகள் உருவாவது குறித்தும் ஆப்பிரிக்காவுக்கு வெளியில் வந்த மானுடக் கூட்டம் கிளை பிரிந்தபோது ஆதி ஆப்பிரிக்க மொழிக் குடும்பத்தில் இருந்து வேறுவேறு மொழிக் குடும்பங்கள் கிளை பிரிந்தது குறித்தும் அவர் விளக்குவது போல வேறு எந்த மரபணு நிபுணரும் விளக்கியுள்ளதாகத் தெரியவில்லை. எனவே அவருடைய சிறப்புப் புலமான அது குறித்து மேலே பார்க்கலாம்.

மொழியின் தோற்றம்

மானுட கூட்டங்கள் ஆப்பிரிக்காவைவிட்டு வெளியேறிய காரணம் இன்றுவரை விவாதத்திற்குரிய ஒரு வினாதான். காலநிலை மாற்றம், மக்கள் தொகை அடர்த்தி அதிகரிப்பு, தொழில்நுட்பங்களின் முன்னேற்றம் போன்ற பல காரணங்கள் விவாதிக்கப்படுகின்றன. ஆனால் இவை எல்லாம் போதுமானதல்ல என்று கருதுகின்ற காவள்ளி-ஸ்ஃபோர்ஸா, மொழியின் உருவாக்கம் இந்த பழைய கற்கால மானுட கூட்டம் ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்வதற்கு வழி வகுத்த ஒரு முக்கியமான மேம்பாடு என்று கருதுகின்றார். மானுட இனத்தின் தொல்முந்தையரான ஹோமோ ஹாபிலிஸ் இனத்தவரே சில ஆரம்பகட்ட மொழித் திறன்களை பெற்றிருப்பார்கள் என்பதற்கு புதைபடிமச் சான்றுகள் இருக்கின்றன என அவர் கூறுகின்றார். ஒருவரோடு ஒருவர் உணர்வுபூர்வமாகத் தொடர்பு கொள்வதற்கு தேவைப்படுகின்ற இந்த அற்புதமான கருவியான மொழி, மானுடக் கூட்டங்கள் தாம் முன்னர் அறிந்திராத புதிய இடங்களுக்குப் பரவி அந்த இடங்களைக் குறித்து நுணுகி நோக்கி அறிந்து அங்கு புதிய சமூகங்களை உருவாக்கிக் கொள்வதற்கும் அந்த புதிய இடத்தின் சூழலுக்கு தம்மை தகவமைத்து கொள்வதற்கும் அதற்குத் தேவைப்படுகின்ற புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்கிக் கொள்வதற்கும் வழி வகுத்திருக்கும் என்று அவர் உறுதியாக நம்புகின்றார்.

தொழில்நுட்ப வளர்ச்சியும் இடப்பெயர்வும்

சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மானுட இனம் பழைய கற்காலத்திலிருந்து புதிய கற்காலத்துக்கு மாறிய புள்ளியில் வேளாண்மை தொழில்நுட்பம் உருவானது. இன்றைக்கும் வேடுவர்களாகவும் சேகரிப்பாளர்களாகவும் இருப்பவர்களுடைய எண்ணிக்கையையும் அவர்களுடைய அடர்த்தியையும் கணக்கில் கொண்டு பார்க்கும் பொழுது 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகமெங்கும் இருந்த மானுட கூட்டத்தினுடைய எண்ணிக்கை சுமார் 50 லட்சம் அளவில் இருக்கும் என்று லூகி லுக்கா கருதுகின்றார். மானுடம் முழுமையும் ஆப்பிரிக்காவில் இருந்தபோது சுமார் 50 ஆயிரமாக இருந்த கூட்டம், ஒரு லட்சம் ஆண்டுகளில் 50 லட்சம் என்று மாறியது மிகவும் மந்தமான வளர்ச்சி விகிதம் ஆகும். வேளாண்மை தொழில்நுட்பம் கைவந்த பிறகு கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் 50 லட்சம் என்ற அந்த எண்ணிக்கை இன்று 800 கோடி ஆகியுள்ளது. பழைய கற்காலத்தில் இருந்த மானுட வளர்ச்சி விகிதத்தை போல சுமார் 14 மடங்கு அதிகம் எனச் சுட்டிக்காட்டி, தொழில்நுட்ப வளர்ச்சியும் மானுட மக்கள் தொகை பெருக்கமும் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதை விளக்குகின்றார்.

சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கூர்மையான காலநிலை மாற்றம் ஏற்பட்டது. அது எங்கர் டிரையாஸ் எனக் குறிப்பிடப்படுகின்றது. அது ’வளமிகு பிறை’ (Fertile Crescent) என்று அழைக்கப்படும் (இன்றைய இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான்…) பகுதியில் மானுட கூட்டங்களை, அதுவரை வேட்டை மற்றும் உணவுப் பொருள்களை சேகரித்து வாழ்வதைத் தாண்டி சில புதிய முறைபாடுகளை பின்பற்ற வைத்தது. உணவை அவர்களே உற்பத்தி செய்வது என்பதை வேட்டை, சேகரிப்பு ஆகியவற்றோடு இணைத்து செய்யப்பட வேண்டிய ஒரு முறைபாடாக மாற்றியது. தங்கள் பகுதிகளில் வனப் பயிர்களாக இருந்த தாவரங்களை சாகுபடி பயிர்களாக மாற்றுவது தங்கள் பகுதியில் இருந்த வன விலங்குகளை வளர்ப்பு விலங்குகளாக மாற்றுவது அதாவது வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் உருவெடுத்தன. இவை கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகள், சீனா, மெக்ஸிகோ அதனை அடுத்த பெரு ஆகிய பகுதிகளிலும் ஆப்பிரிக்காவின் சாஹேல் பகுதியிலும் உருவாகி வளர்ந்தன. இந்த ஒவ்வொரு பகுதியும் தமது சூழலுக்கு ஏற்ற உணவு பயிர் வேளாண்மை என்பதற்குரிய முறைபாடுகளை கண்டறிந்து வளர்த்திருக்கின்றது. இந்த மாற்றங்கள் எல்லாம் ஒரே காலகட்டத்தில் நடந்தது, சில பொதுவான உலகு தழுவிய காலநிலை மாற்றம் போன்ற புறநிலை அழுத்தம் தொழில்பட்டுள்ளதைக் காட்டுகிறது.

மக்கள் இடம் பெயர்வதும் இத்தோடு இணைந்து நடந்துள்ளது. மக்கள் இடம் பெயர்வது நடக்காமல் பண்பாடு பரவுவதும் நடந்துள்ளது. மரபணு தரவுகள் தெளிவாகவும் அதிகமாகவும் இருக்கக்கூடியதும் மிக நீண்ட காலத்துக்கு தொடர்ச்சியான ஆவணப் பதிவுகள் இருப்பதுமான ஐரோப்பாவை ஒரு எடுத்துக்காட்டாக ஸ்ஃபோர்ஸா எடுத்துக் கொள்கிறார். அங்கு வேளாண்மை பரவியது குறித்து இருக்கக்கூடிய தரவுகளும் மானுடக் பரவல் குறித்து இருக்கக்கூடிய மரபணு தரவுகளும் ஒத்துப் போவதை விளக்குகின்றார். ஐரோப்பாவில் இருக்கக்கூடிய மரபார்ந்த மானுட கூட்டங்களில் 95% மரபணுக்களில் ஐந்து முதன்மையான அடையாளக் கூறுகள் இருப்பதை அவர் எடுத்துக்காட்டுகின்றார். அவற்றை உருவாக்கிய ஐந்து பரவல்களையும் இன்றைய மரபணு கதிகளில் உள்ள வேறுபாட்டையும் எடுத்துக் கூறி எளிய வரைபடங்களின் மூலம் தெளிவாக்குகின்றார்.

இதுபோன்று மத்திய கிழக்கு பகுதியில் இருந்து வேளாண்மை பல திசைகளிலும் பரவியிருக்கின்றது என்பதை காண முடிகின்றது. பிற்காலத்தில் வேளாண்மை நடந்த இடங்களாகக் கருதப்படும் இடங்களில் எல்லாம் இங்கிருந்து வேளாண்மை பரவியதற்கு சான்றுகள் இருக்கின்றன. ஈரான் மற்றும் இந்தியா நோக்கி விவசாயம் பரவியதை ஆசிய பகுதிகளின் மரபணு பரவல் வரைபடங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. அதேபோன்று ஒரு பரவல் அலை அரேபியா, வடக்கு ஆப்பிரிக்கா பகுதிகளை நோக்கியும் சென்றுள்ளது. உலகின் பல இடங்களில் போல அரேபிய மற்றும் வடக்கு ஆப்பிரிக்க பகுதிகள் பிற்காலத்தில் பாலைவனம் ஆகியதால் அங்கிருந்த மக்கள் கூட்டங்கள் அங்கு தொடரவில்லை. அங்கிருந்து நகர்ந்த மக்கள் இன்றைய சகாரா பாலைவனத்தில் தென் பகுதியான சாஹெல் பகுதியில் 3000-4000 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறி அங்கு சோளம் மற்றும் ஏனைய சிறு தானியங்கள் ஆகிய உணவு தானியங்களையும் வேறுசில விவசாய பயிர்களையும் சாகுபடி செய்ததோடு மாடுகள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள் ஆகியவற்றையும் வளர்த்துள்ளார்கள் என்பதற்கு சான்றுகள் இருக்கின்றன. மாலி, பர்கினோஃபாஸோ ஆகிய இன்றைய நாடுகளில் இவ்வாறு அவர்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டதற்கு சான்றுகள் உள்ளன. இன்னும் தெற்கே அவர்கள் விவசாயத்தில் ஈடுபடுவதற்கு வேறு பல புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டி இருந்தது. ஏனென்றால் இந்த வடக்கு பகுதியில் மானுட வயப்படுத்தப்பட்ட தானியங்கள், மத்திய நிலநடுக்கோட்டுப் பகுதியில் சாகுபடி செய்வதற்கு ஏற்றவை அல்ல. அந்தப் பகுதியில் முற்றிலுமாக புதிய பயிர்கள் பெரும்பாலும் வேரில் உருவாகும் காய்கள் அந்தப் பகுதியின் காடுகளிலிருந்து மானுட வசப்படுத்தப்பட்டு சாகுபடியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன

மேற்காப்பிரிக்காவில் மாலி, நைஜீரியா பகுதிகளிலிருந்து தெற்கேயும் கிழக்கேயும் வேளாண்மை மானுடக் கூட்டங்களூம் பரவின. இதற்கு மொழியியல் ரீதியாக சான்றுகள் இருக்கின்றன. சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு அல்லது அதற்கு முன்பும் கூட புதிய கற்காலத்தின் இறுதி பகுதியிலேயே இந்த இடப்பெயர்வுகள் நடந்துள்ளன. சுமார் கிமு 500 வாக்கில் இரும்பு பயன்பாட்டுக்கு வந்தது, இந்த குடிப்பெயர்வுகளை இன்னும் அதிகமாக்கி உள்ளது இந்த குடிப்பெயர்வுகள் பாண்டு (Bantu) விரிவாக்கம் என்று அழைக்கப்படுகின்றன. மக்கள் பேசிய முக்கியமான மொழிக் குடும்பம் அந்தப் பெயரைத் தந்தது. அவை மொழியியல் வல்லுனர்களால் நைஜர்-கொரடோஃபானியன் என்று அழைக்கப்படும் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் அதன் பிறகு கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதியைச் சேர்ந்த நைலோடிக் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோடும் தெற்கே கொய்ஷான் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோடும் ஒன்று கலந்தது தெரிகிறது.

அதுபோல சீனாவில் கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் சீனாவின் வடக்கிலும் கிழக்கிலும் தெற்கு பகுதியிலும் தனித்தனியே விவசாயம் தோன்றி வளர்ச்சி அடைந்திருக்கின்றது. வடக்கு புறத்தில் மில்லட் எனப்படும் சிறுதானிய வேளாண்மையும் பன்றிகளின் வளர்ப்பும் மிகவும் வெற்றிகரமாக பரவியுள்ளது; அதே காலகட்டத்தில் தெற்கு சீனாவில் நெல் சாகுபடியும் எருமை வளர்ப்பும் உருவாகி அதுவும் பரவியுள்ளது.

ஆனால் கடந்த பல ஆயிரம் ஆண்டுகளில் ஆக முக்கியமான மானுட பரவல், மத்திய ஆசிய பகுதியில் இருந்துதான் ஆரம்பமாகியுள்ளது எனலாம். இதற்கு முக்கிய காரணம் இந்த பகுதியில் உருவான தொழில்நுட்ப வளர்ச்சியும் கால்நடை வளர்ப்பும் அலைகுடி பொருளாதாரத்திற்கு மிகவும் உதவிகரமாக இருந்துள்ளது. ஆசிய ஸ்டெப்பி புல்வெளி பகுதிகளில் வேளாண்மை சிறப்பாக நடந்ததாக சான்றுகள் இல்லை. ஆனால் மிக முக்கியமான வளர்ப்பு விலங்குகளில் ஒன்றான குதிரைகள் மானுட வசப்படுத்தப்பட்டது இந்த பகுதியில்தான் நடந்துள்ளது. இது யுரேஷிய கால்நடை மேய்ப்பு சமூகங்களுக்கு வேறு யாருக்கும் இல்லாத வலிமையை அளித்துள்ளது. அத்தோடு ஆரக்கால்கள் கொண்ட சக்கரங்களோடு ரதம் இணைந்தது. குடிப்பெயர்வு மற்றும் ராணுவ வெற்றிகள் ஆகியவற்றுக்கு குதிரையும் ரதமும் இவர்களுக்கு உதவியுள்ளன. கருங்கடலின் வடக்கேயுள்ள குர்கான் (Kurgan) பகுதியில் இருந்து பல்வேறு அலைகளாக நடந்த குடி பெயர்வு, ஐரோப்பிய மற்றும் ஆசிய வரலாற்றில் பெரும் தாக்கங்களை உருவாக்கியுள்ளது. தெற்கு ஆசியா நோக்கிய முதல் விரிவாக்கம் அனேகமாக கிமு 3000 முதல் 2000 வரை நடந்துள்ளது எனலாம். இந்த குடியேற்றம் இன்றைய துர்க்மேனிஸ்தான் வழியாக ஈரான், பாகிஸ்தான், இந்தியா என நடந்துள்ளது. இந்த குடிப்பெயர்வு அதற்கு முன்பு சிந்து சமவெளி பகுதிகளில் தழைத்திருந்த சிந்து சமவெளி நாகரிகம் சுமார் கி.மு 1500 வாக்கில் முடிவுக்கு வருவதற்கும் பங்களித்துள்ளது என அவர் கருதுகின்றார். ஆரியர் வருகைதான் சிந்துசமவெளி நாகரிகத்தை முடிவிற்குக் கொண்டுவந்தது என அவர் கூறவில்லை என்றாலும் இரண்டிற்கும் சம்பந்தமே இல்லை என்ற வேறுபல அறிஞர்களின் கூற்று அவருக்கு ஏற்பில்லை எனத் தெரிகின்றது. இந்தக் குடியேற்றம் நிகழ்ந்த சம காலகட்டத்தில் இந்தோ ஐரோப்பிய மொழி பேசக்கூடிய அவர்களுடைய கிழக்கு மற்றும் மேற்கு நோக்கிய அவர்களது நகர்வு ஸ்டெப்பி புல்வெளிகள் ஊடாக அட்லாண்டிக் முதல் அல்டாய் மலைத்தொடர்கள் வரை நடைபெற்றுள்ளது.

கடந்த ஒரு லட்சம் ஆண்டுகளாக மானுடப் பரவல்களின் திசைகளையும் காலத்தையும் மரபணு அடையாளங்களின் முதன்மையான கூறுகளின் (Principal Components) வரைபடம் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம் என்பதை விளக்குகிறார். பொதுவாக இந்த விரிவாக்கம் புதிய தொழில்நுட்பங்கள் உருவாகி அதன் காரணமாக மக்கள் தொகை பெருக்கம் நடைபெற்ற காரணத்தினால் நடந்துள்ளது. விவசாயம் செழித்து உணவுப் பொருட்கள் உற்பத்தி அதிகரித்த பொழுது மக்கள் தொகைப் பெருக்கம் நடந்திருக்கிறது. அது சில மக்கள் பகுதியினரை புதிய பகுதிகளுக்கு குடியேறி அங்கு விவசாயத்தை நடத்துவதற்கு வழி வகுத்துள்ளது. இதுதான் முதன்மை என இதனை விளக்கும் ஸ்ஃபோர்ஸா, ராணுவ நடவடிக்கைகளாலான மானுட பரவல்கள் விதிவிலக்குகளாகத்தான் நடந்துள்ளன என்று தெளிவாக்குகின்றார். அத்தகைய ராணுவ வெற்றிகள் மூலம் நடைபெறும் மானுடப் பரவல்கள் பெரிய அளவு மரபணு ரீதியான பரவல்களாக இருப்பதில்லை என்பதையும் விளக்குகிறார்.

முழுமையாக வேட்டுவ மற்றும் சேகரிப்பு சமூகமாக இருக்கும் பொழுது பெரிய அளவிலான மக்கள் தொகை பெருக்கம் இருக்கவில்லை என்பதை அவர் கூறுகின்றார். இவர்களைக் காட்டிலும் சற்றே அதிகமாக இடம்பெறக்கூடியவர்களாக இருந்த மேய்ப்பு சமூகத்தினர் இந்தப் பழங்குடிகளைக் காட்டிலும் சற்றே அதிகமான வளர்ச்சி விகிதத்தில் மக்கள் தொகை பெருக்கத்தை சந்தித்து இருக்கின்றார்கள் என்பதையும் அவர் கூறுகின்றார். ஏனென்றால் இத்தகைய கூட்டங்கள் தங்களுக்கு வாழ்வாதாரமாக கொண்டிருக்கக் கூடிய கால்நடைகளை பாதுகாப்பதற்கும் அதை மாற்று இனக்குழுக்களிடமிருந்து மக்கள் கூட்டங்களிடமிருந்தும் பாதுகாப்பதற்கும் ராணுவ ஆற்றலை உருவாக்கி வளர்த்து கட்டியமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள் என்பதை விளக்குகின்றார். ராணுவ ரீதியாக கட்டமைப்புகளை உருவாக்கியவர்கள், ஓரிடத்தில் தங்கியிருந்து வேளாண்மை நடத்திய விவசாய சமூகங்களை எளிதில் வென்று அடக்கி இருக்கின்றார்கள் என்பதையும் கூறுகின்றார்.

ஆரியர்கள் நாடோடி மேய்ச்சல் இனமாகத் தான் இருந்திருக்கின்றார்கள் என்பதை கூறுபவர், அவர்கள் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்பே தம்மளவில் சாதியப் படிநிலைகள் கொண்டவர்களாக இருந்தார்கள் என்று கூறுகிறார். அவர்கள் மத்தியில் அகமண முறை இந்தியாவில் நுழையும் காலத்திலேயே நிலவி வந்தது; இது இந்தியாவில் நுழைந்ததற்குப் பிறகு இந்தியாவில் உருவான படிநிலை சமூகத்தில் அவர்கள் தங்களை அதன் உச்சத்து அடுக்கில் அமர்த்திக் கொள்வதற்கு வழி வகுத்தது; அதிகாரமும் ஆதிக்கமும் எப்போதுமே சமூக அந்தஸ்தைப் பொறுத்ததுதானே ஒழிய எண்ணிக்கையைப் பொறுத்தது அல்ல என்பதெல்லாம் அவர் கருத்தாக உள்ளது. இந்த ஆரியர்கள் இந்தோ ஐரோப்பிய மொழிகளை பேசினார்கள்; அந்த மொழிகளை ஆப்கானிஸ்தான், ஈரான், இந்தியா ஆகிய பகுதிகளில் கொண்டு வந்து பரப்பினர் என்பதையும் கூறுகின்றார்.

மரபணுக்களும் மொழிகளும்

உலகில் 5000க்கும் மேற்பட்ட மொழிகள் இருப்பதை சுட்டிக்காட்டும் ஸ்போர்ஸா சில மொழிகள் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துவதாக இருப்பதையும் ஆனால் பல மொழிகள் மிகவும் குறு எண்ணிக்கையிலான மக்கள் பயன்படுத்துவதையும் அழிவின் விளிம்பில் இருப்பதையும் சுட்டிக் காட்டுகின்றார். சில மொழிகள் வேறு சில மொழிகளோடு மிக நெருக்கமான உறவு கொண்டவை என்பதை தெரிந்து கொள்வதற்கு ஒருவர் மொழியியல் நிபுணராக இருக்க வேண்டியது இல்லை என்பதை சில உதாரணங்கள் மூலம் கூறுகிறார். நமக்கே அது தெரியாதது அல்ல. அவர் சமஸ்கிருத மொழியை பற்றிய ஐரோப்பியர்களின் கல்விதான் முதன் முதலில் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்று ஒன்று இருப்பதை வெளியில் கொண்டு வந்தது என்று கூறுகின்றார். 1780 ஆம் ஆண்டுகளில் சர்.வில்லியம் ஜோன்ஸ் அவர்கள் ஆரம்பித்து வைத்த ஆய்வைத்தான் அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார். ஆனால் அவருக்கு ராபர்ட் கால்டுவெல் தெரியாதது வியப்புதான். அவருடைய பெயரை குறிப்பிடவில்லை; திராவிட மொழிகள் பற்றி எழுதும்போது கூட திராவிட மொழி குடும்பம் குறித்து எழுதும்போது கூட அவருடைய பெயரைக் குறிப்பிடாதது வியப்பை அளிக்கிறது.

இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பம் தெரிய வந்ததற்கு பிறகு அதனைப் போலவே வேறு பல மொழிக் குடும்பங்களும் இருப்பது உலகுக்கு தெரியவந்தது. உயிரியலில் இதுவரையிலான பரிணாமத்தை ஒரு உயிரியல் மரத்தின் மூலம் பிரதிநிதித்துவப்படுத்துவர். அதுபோல மொழிகளின், மொழிக் குடும்பங்களின் உருவாக்கத்தையும் கிளை பிரிதலையும் ஒரு மொழிக் குடும்ப மரத்தின் மூலம் கட்டமைப்பதற்கு தொடர்ந்து மொழியியல் நிபுணர்கள் முயன்று வருகின்றார்கள் என்றாலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மொழியியல் வல்லுனரான ஜோசப் கிரீன்பர்க் அவர்கள் 1987 ஆம் ஆண்டு ’அமெரிக்காக்களின் மொழிகள்’ (Languages in Americas) என்ற நூலை வெளியிட்டார். அதில் அமெரிக்காவின் தொல்குடி இந்தியர்கள் பேசும் எண்ணற்ற மொழிகள் மூன்று மொழிக் குடும்பங்களில் அடங்கும் என்பதை முன்மொழிந்தார். எஸ்கிமோ-அலெயுட், நாடீன் மற்றும் அமரிந்தியன் ஆகியவையே அந்த மூன்று குடும்பங்கள் என்று அவர் வகுத்தார். அவர் வந்து அடைந்த முடிவு அமெரிக்கப் பழங்குடிகளின் தொல்படிம எச்சங்களை ஆய்வு செய்த உயிரியல் நிபுணர்களின் முடிவுகளோடு உடன்பட்டது. ஆனாலும் கூட அவருடைய நூல் அமெரிக்க மொழியில் வல்லுனர்கள், மானுடவியல் நிபுணர்கள் இடையே கடும் வாதப்பிரதிவாதங்களை உருவாக்கியது. காவள்ளி ஸ்ஃபோர்ஸா, கிரீன்பர்க் அவர்களுடைய வாதம்தான் சரியாக இருப்பதாக நம்புகின்றார். தான் ஒரு மொழியியல் வல்லுநர் அல்ல என்றாலும் கூட கிரீன்பர்க் அவர்களது வாதங்கள் சரியானவையாக தனக்கு தோன்றுகின்றன என்று கூறுகின்றார்.

 கிரீன்பர்க் அவர்கள் இதனை எழுதுவதற்கு பல ஆண்டுகள் முன்பு ஆப்பிரிக்க மொழிக் குடும்பங்கள் நான்கு மொழிப் பெருங்குடும்பங்களில் (Super Linguistic Families) அடங்கும் என்ற கருத்தையும் விளக்கி இருந்தார். பழமையான செமிடிக் மொழிகள், எத்தியோப்பியா மற்றும் வட ஆப்பிரிக்காவில் பேசக்கூடிய மொழிகள் அனைத்தும் ஆஃப்ரோஸியாட்டிக் மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை; தெற்கு சகாரா மற்றும் நைல் நதியின் மேற்புறம் பேசப்படும் பழமையான மொழிகள் நைலோ-சகாரன் மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை; மத்திய, தெற்கு, மேற்கு ஆப்பிரிக்க மொழிகள் குறிப்பாக பாண்டு (Bantu) மொழிகள் அனைத்தும் நைஜர்-கொரடோஃபானியன் குடும்பத்தைச் சார்ந்தவை; கொய்-கொய் மற்றும் ஷான் பழங்குடிகள் பேசும் மொழிகள் அனைத்தும் கொய்ஷான் குடும்பம் என்பது அவருடைய வகை பிரிப்பு ஆகும். கிரீன்பர்க் அவர்கள் முதலில் இதனை முன்மொழிந்தபோது அது பலத்த விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால் இன்றைக்கு பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்வதாக மாறியுள்ளது. அனேகமாக அது போன்ற மனமாற்றம் அமரிந்தியன் வகைப்பாடுகளுக்கும் நேரும் என்று காவல்லி ஸ்ஃபோர்ஸா கருதுகின்றார்.

கிரீன்பர்க் அவர்களுடைய வகைப்பாட்டை ஏற்காதவர்கள் பலரும் மொழிகளை அவ்வாறு குடும்பம் என்ற வகையில் வகை பிரிப்பதே தவறு என்றுதான் கூறுகின்றார்கள். மொழிகள் மரபணு மாற்றங்களைக் காட்டிலும் துரித கதியில் நடப்பவைகளாக இருக்கின்றன என்பதால் பிரச்சனையில் உண்மையின் கூறு இருக்கிறது என்றாலும் நவீன மொழியில் அறிஞர்கள் மிகவும் சிக்கலான, மிகவும் நுட்பமான வழிமுறைகள், முறைபாடுகள் மூலமாக மொழிகளுகிடையிலான உறவு அல்லது உறவின்மையை அளவிடக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். இந்த முறைபாடு குளோட்டோகுரோனாலஜி (Glutochronology) என அழைக்கப்படுகிறது. இந்த முறைபாடு மரபணு நிபுணர்கள் ‘மூலக்கூறு கடிகாரம்’ என்று ஒன்றைப் பயன்படுத்துவது போல ’மொழியியல் கடிகாரம்’ என்ற கருத்தாக்கத்தை பயன்படுத்துகின்றார்கள். காவள்ளி-ஸ்ஃபோர்ஸா, கிரீன்பர்க்கின் மாணக்கரான மெர்ரிட் ரூலன் உருவாக்கிய மொழிக் குடும்பங்கள் வகைபாடு ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருப்பதாக கூறுகின்றார். அத்தோடு அவருடைய வகைபாடு மரபணு ரீதியான மானுட பரிணாம, மானுட பரவல் வகைபாட்டோடு உடன்பட்டு இருப்பதாகவும் கூறுகின்றார்.

மொழியியல் வல்லுநர், மெர்ரிட் ரூலன் (Merrit Ruhlen) அவர்களது கட்டமைப்பு 17 மொழிக் குடும்பங்களை காட்டுகிறது அதற்கு மேலாக அவர் சில மீ-குடும்பங்கள் (super Family) குறித்து பேசுகின்றார். ரூலன் அவர்களது கருத்துப்படி ஆஸ்ட்ரிக் மீ-குடும்பம் தெற்கு சீனாவிலும் வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து முதலில் பகுதிகளில் பேசக்கூடிய மியாவ்-யாவ் மற்றும் வட இந்தியாவிலும் வேறு சில பகுதிகளில் பேசப்படுகிற முண்டா மொழிகளை அடக்கிய ஆஸ்ட்ரோ ஏசியாட்டிக் குடும்பம்; தென்கிழக்கு ஆசியாவில் பெரிதும் பேசப்படுகின்ற மோன்-கமீர் குடும்பம்; தெற்கு சீனாவிலும் ஏனைய சில தென்கிழக்கு ஆசிய பகுதிகளிலும் பேசப்படுகின்ற டாய்க் குடும்பம் மற்றும் ஆஸ்திரோனேசியன் குடும்பம் ஆகிய நான்கு குடும்பங்களை உள்ளடக்கியது. ஆஸ்திரோனேசியன் குடும்பத்திலேயே ஆயிரக்கணக்கான மொழிகள் இருக்கின்றன; சுமார் 180 மில்லியன் மக்கள் இதனைப் பேசுகின்றார்கள். தொல் தைவான், பாலினேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா ஆகிய பகுதிகளிலிருந்து மடகாஸ்கர் வரை பல தீவுகளில் பேசப்படுகின்ற மொழி இந்தக் குடும்பத்தைச் சார்ந்தது என்கிறார். இதனை
படம்:. இல் காணலாம்.geographic distribution of 17 linguistic families

ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டப் பகுதிகளில் பேசப்படும் மொழிக் குடும்பங்களின் மீதான மீ-குடும்பம் முக்கியமாக பேசப்பட வேண்டியது. அவ்வாறு இரண்டு வகைப்பாடுகள் இருப்பது இன்று பெரிதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என அவர் கூறுகின்றார். நோஸ்ட்ராட்டிக், யூரேசியாட்டிக் ஆகிய இரண்டுமே அந்த வகைகள். நோஸ்ராட்டிக் என்ற வகைபாடு இந்தோ ஐரோப்பியன், யுராலிக். அல்டாயிக், ஆஃப்ரோசியாட்டிக் மற்றும் திராவிட மொழிக் குடும்பங்களை உள்ளடக்கியது என்று கூறும் ரூலனின் வகைபாட்டை ஏற்போடு எடுத்தாளும் அவர் யூரேசியாட்டிக் மீ-குடும்பம் எஸ்கிமோ, சுக்ஷி, ஜாப்பனீஸ் போன்ற மொழிகளை அடக்கியதாக மேலாக மேலும் கிழக்காசியப் பகுதிகளை உள்ளடக்கியதாக விரிவடைகின்றது; ஆனால் அது தென்மேற்கு பகுதிகளை உள்ளடக்கியது அல்ல. அது ஆஃப்ரோசியாட்டிக் மற்றும் திராவிட மொழிக் குடும்பங்களை உள்ளடக்கவில்லை. அவை இந்த மொழிப் பிரிவினைகளுக்கு முன்பே பிரிந்த ஒரு தோற்றுவாயை கொண்டவை என்ற ஜோசப் கிரீன்பர்க் அவர்களது கருத்தை ஏற்போடு எடுத்தாள்கிறார் ஸ்போர்ஸா. ஒருவர் மொழிகளின் பரிணாமம் குறித்த இந்த மரத்தை மேலும் மேலும் முந்தைய மற்றும் பிந்தைய கிளைகளை இணைத்து இதை வளர்த்தெடுக்கலாம் என்று சொல்லும் ஸ்ஃபோர்ஸா அத்தகைய ஒரு மரத்தை வரைந்து காட்டுகின்றார். (படம்: 2).linguistic treeயூரேசியன் மொழிகள் அனைத்தும் நோஸ்ட்ராட்டிக், அமெரிந்தியன், டீன் -காக்கசியன் என்ற மொழிக்குடும்பங்களாகப் பிரிந்தன; பிறகு நோஸ்ராட்டிக் மீ-குடும்பம் யூரோசியாட்டிக் குடும்பம், ஆஃப்ரோசியாட்டிக் குடும்பம், திராவிட மொழிக் குடும்பம் எனக் கிளை பிரிந்தது என விளக்குகின்றார். அல்லது மொழியியல் வல்லுநர்கள் கூறும் இந்த விளக்கத்தை அவர் ஏற்புடன் எடுத்தாளுகின்றார். இத்தகைய ஒரு மீ-குடும்ப வகைபாடு அனேகமாக ஐரோப்பா, வடக்கு-ஆப்பிரிக்கா, ஆசியாவின் பெரும்பகுதி, அமெரிக்க கண்டங்கள் ஆகிய பகுதிகளில் பேசும் பெரும்பாலான மொழிகளை உள்ளடக்கி விடுகின்றது. இந்த வகைபாடு ஆப்பிரிக்காவில் பேசப்படும் மூன்று ஆப்பிரிக்க மொழிக் குடும்பங்களான கொய்ஷான், நைஜர்-கொரொடொஃபானியன், நைலோ-சஹாரன் ஆகியவற்றையும் 170 மொழிகள் அடங்கிய ஆஸ்திரேலியன் மொழிக் குடும்பத்தையும் சுமார் 700 மொழிகள் அடங்கிய இந்தோ பசிபிக் மொழிக் குடும்பத்தையும் மட்டும்தான் சேர்க்கவில்லை.

ஆனால் எந்த மொழிக் குடும்பத்திலும் அடங்காத சில மொழிகள் இருக்கின்றன என்பதை அவர் எடுத்துக் கூறுகின்றார் அதற்கு ஒரு நல்ல உதாரணமாக அவர் காட்டுவது பாஸ்க் மொழி; சுமார் 12 ஆயிரம் ஃபிரெஞ்சு நாட்டுக்குடிகளும் சுமார் 15 லட்சம் ஸ்பெயின் நாட்டு குடிமக்களும் பேசக்கூடியது. இது அனேகமாக ஐரோப்பாவின் மிகப் பழமையான ஹோமோ சேபியின்-சேபியின் இனமான குரோமாக்னன்கள் பேசியது. அனேகமாக ஐரோப்பாவை அடைந்த முதல் மானுடக் கூட்டங்கள் பேசியது. ஆனால் அதுவும் காலப்போக்கில் பெரும் மாற்றங்களை அடைந்திருக்கும்; இன்றைக்கு பாஸ்க் மொழி பேசுபவர்களை அன்றைய குரோமாக்னன் மனிதர்களால் புரிந்து கொள்ள இயலாது. இது போன்ற மற்ற மொழிகள் வடமேற்கு பாகிஸ்தானில் பேசப்படும் புருஷாஸ்க்கி, மத்திய இந்தியாவில் நஹலி மொழி என்றும் கூறுகின்றார்.

மொழியியல் குடும்பங்கள் மற்றும் மரபணு ரீதியான பரிணாம மரம் ஆகியவற்றுக்கிடையே ஒப்பீடு

முழுமையானதும் எல்லாம் தழுவியதுமான ஒரு மொழியியல் மரம் இன்னும் கட்டியமைக்கப்படவில்லை என்றாலும் கூட நம்முடைய மக்கள் தொகுதிகளின் மரபணு மரம் என்பதை மொழியியல் மரம் எந்த அளவுக்கு கட்டமைக்கப்பட்டுள்ளதோ அதன் அளவில் அதனோடு ஒப்பிடலாம். அப்போதும் கூட இரண்டுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதாக காவள்ளி-ஸ்ஃபோர்ஸா கருதுகின்றார். அவர் இரண்டையும் ஒப்பிட்டு அளித்துள்ள வரைபடம் இங்கு படம்: 3 ஆக உள்ளது.the comparison of genetic and linguistic treesஅவை மரபணு மரக் கட்டமைப்பிற்கும் மொழியியல் ரீதியான மொழிக் குடும்ப வகைப்பாட்டிருக்கும் இடையே உள்ள பெரும் ஒற்றுமையைக் காட்டுகின்றன. அவர் இரண்டு எடுத்துக்காட்டுகளைக் கூறுகின்றார். ஒன்று பாண்டு (Bantu) எனப்படுகின்ற ஆப்ரிக்க மொழியின் உப குடும்பம். அது நைஜர்-கொரடோஃபேனியன் பெரும் குடும்பத்தை மொழியியல் ரீதியாக சேர்ந்தது. அந்த மொழிகளை பேசுபவர்கள் மரபணு ரீதியாக ஒற்றுமை கொண்டவர்களாகவும் ஏனைய ஆப்பிரிக்க மக்கள் தொகுதியில் இருந்து வேறுபட்டவர்களாகவும் இருக்கின்றார்கள். இந்த படமும் அதனை காட்டுகின்றது. அவரே கூறும் அடுத்த எடுத்துக்காட்டு நமக்கு முக்கியமானது. அது தென்னிந்தியர்கள் பேசுகின்ற திராவிட மொழிக் குடும்பம். அவர் கூறுகின்ற மற்றுமொரு மொழிக் குடும்பம் நா-டீன் என்ற வட அமெரிக்க தொல்குடிகள் பேசும் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் எல்லாம் ஒரு பொதுவான மரபணு மற்றும் இனக்குழுப் பின்புலத்தைக் கொண்டவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பது அவருடைய துணிபு.

இதன் காரணமாக மரபணு மரக்கட்டமைப்பு உதவியோடு மொழிக் குடும்பத்தின் தோற்றத்தின் காலகட்டத்தை சற்றேறக்குறைய கணக்கிடுவது சாத்தியமாகின்றது என்கின்றார். அவருடைய கருத்துப்படி பெரும்பாலான மொழிக் குடும்பங்கள் சுமார் 25,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான காலகட்டத்தில்தான் தோற்றம் கண்டுள்ளன. மெர்ரிட் ரூலன், 1999 ஆம் ஆண்டு வரைந்து அளித்த மொழிக் குடும்பங்களின் தோற்றம் குறித்த மரக்கட்டமைப்பின்படி (படம்:4) திராவிட மொழிக் குடும்பம் சற்றேறக்குறைய 40 ஆயிரம் ஆண்டுகள் முன்பிருந்து 20 ஆயிரம் ஆண்டுகள் முன்பு வரையிலான காலகட்டத்திற்குள் கிளை பிரிந்து இருக்க வேண்டும் என்றும் திராவிட மொழிக் குடும்பத்தை உள்ளடக்கிய யுரேஷியன்-அமெரிக்கன் மொழிக் குடும்பம் சுமார் 60 ஆயிரம் ஆண்டுகள் முன்பு இருந்து சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்திற்குள் கிளை பிரிந்து இருக்க வேண்டும் என்று கூறுகின்றார். அந்த வகையில் திராவிட மொழிக் குடும்பம் ஒரு மிகத் தொன்மையான மொழிக் குடும்பம் என்பதே அவரது கருத்தாக இருக்கின்றது.

மரபணு மரக் கட்டமைப்பில் ஒரு மக்கள் தொகுதியின் இடம் அந்த மக்கள் தொகுதியில் ஆகப்பெரும் பகுதிக்கு பங்களித்த மரபணுக் கூட்டத்தைக் கொண்டு அடையாளப்படுத்தப்படுகின்றது. இதன் பொருள் தூய மரபணுக் கூட்டங்கள் என்று ஏதுமில்லை. ஆனால் அதே சமயத்தில் அவர் இந்தியன் மக்கள் தொகுதி என்று அழைப்பது வட இந்திய, இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை சார்ந்தவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால் இந்தியர் எனும் மக்கள் தொகுதியையும் தென்கிழக்கு இந்தியன் என்ற மக்கள் தொகுதியையும் தனித்து காட்டுவது மரபணு ரீதியான மரக்கட்டமைப்பில் அவசியமாக இருக்கிறது.

மக்கள் தொகுதிகளின் கலப்பு மரபணுரீதியாக உருவாக்கும் தாக்கங்கள் என்பவை மொழி ரீதியான மாற்றங்களோடு ஒப்பிட எளிமையானவை ஆகவும் முன் கணிப்பு செய்ய முடிவதாகவும் இருக்கின்றன; ஒரு கலப்பு மக்கள் தொகுதியில் மரபணுக் கட்டமைப்பு, அந்த மக்கள் தொகுதியின் முந்தைய பெற்றோர் மக்கள் தொகுதிகள் என்ன சதவீதத்தில் கலந்தனர் என்பதனைப் பொறுத்து அமைகின்றது; ஆனால் மரபணு ரீதியாக அவ்வாறு உருவாகும் ஒரு கலப்பு மக்கள் தொகுதி அவ்வாறு கலந்த இரண்டு மொழிகளில் ஒன்றைத் தான் உள்வாங்கி தனதாக்கி பரிணாமம் பெறுகிறது என்று அவர் கூறுகிறார். சில சமயம் இந்த இரண்டு மொழிகளில் ஒரு மொழி எந்த வித பெரிய மாற்றமும் அடையாமலேயே புதிய கலப்பு மக்கள் தொகுதியின் மொழியாக மாறிவிடுகிறது; ஆனால் பெரும்பாலான சமயங்களில் புதிய மக்கள் தொகுதியினுடைய மொழி அடுத்த மொழியிலிருந்து சில சொற்கள், சமயத்தில் சில ஒலிக் குறிப்பான்கள் ஆகியவற்றையும் உள்வாங்கி உருவாகின்றது; ஒரு மொழியின் இலக்கணம் அந்த மொழியினுடைய சொற் களஞ்சியம் என்பதை காட்டிலும் எளிதில் மாறாததாக தொடர்வதாக இருக்கின்றது எனும் அவர் கருத்து மிகவும் சிந்திக்க வைக்கின்றது.

ஒரு மொழியை விட்டுவிட்டு வேறு ஒரு மொழியை பேசுவதில் மரபணுக்களுக்கு எந்தவித பங்களிப்பும் இல்லை என்பதை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்துபவராக இருக்கின்றார். எல்லா நவீன மொழிகளும் ஒரேயளவிலான கட்டமைப்பு நுணுக்கங்களை கொண்டவையாகத்தான் இருக்கின்றன. பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையிலோ அல்லது தொன்மையான நிலையிலோ இருக்கும் ஒரு மக்கள் பகுதியின் மொழியினுடைய கட்டமைப்பு, பொருளாதார ரீதியாக முன்னேறிய மக்கள் பகுதியினரின் மொழியைக் காட்டிலும் எளிமையானதாக எல்லாம் இருப்பதில்லை என அவர் கூறுவது புதிய கருத்தாகத்தான் இருக்கிறது. மொழி, மரபணு ஆகியவற்றுக்கு இடையிலான உறவில் மரபணுக்களுக்கு மொழியின் மீது செல்வாக்கு இல்லாமல் இருக்கலாம்; ஆனால் மொழிக்கு மரபணுவின் மீது செல்வாக்கு இருக்கிறது. மொழியியல்ரீதியாக வேறுபாடுகள் கொண்ட இரண்டு கூட்டத்தினரிடையே மரபணு ரீதியாக கொடுக்கல் வாங்கல் நடப்பது அரிது என்று அவர் கூறுவது சிந்திக்கத்தக்கது.

ஒரு மரபணு அடையாளத்தைக் கொண்ட ஒரு கூட்டம் வேறு மரபணு அடையாளத்தைக் கொண்ட கூட்டத்தை முழுமையாக இடப்பெயர்வு செய்வது நடைபெறுவதில்லை. ஆனால் ஒரு மொழி மற்றொரு மொழியை முழுமையாக இல்லாமல் செய்வது மிகக் குறுகிய காலத்திலேயே பல இடங்களில் நடந்துள்ளதை அவர் காட்டுவது நமக்கு மிகுந்த வியப்பை அளிப்பதாக இருக்கின்றது. ஐரோப்பாவில் அது போன்று பல எடுத்துக்காட்டுகளை அவர் காட்டுகின்றார். அவை எல்லாம் மிகுந்த ஆர்வம் ஊட்டுவதுதான் என்றாலும் அவற்றை விட்டு விடுவோம். ஆரிய ’படையெடுப்பு’ காரணமாக ஈரான், பாகிஸ்தான், மற்றும் இந்தியாவிற்கு வந்த இந்தோ ஐரோப்பிய மொழிகள் அதற்கு முன்பு அங்கிருந்த திராவிட மொழிக் குடும்பத்தின் மொழிகளை இல்லாது செய்துவிட்டன என்று அவர் கூறுவது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கின்றது. திராவிட மொழிகள் இருந்து அழிந்தது ஒரு அதிர்ச்சி; மறு அதிர்ச்சி அவர் மீண்டும் மீண்டும் ஆரியர்களின் வருகை என்பதை ’படையெடுப்பு’ என்பதாகக் கூறுவது. இந்தியாவிற்குள் ஆரியர்கள் வந்தார்கள் என்பதையே நம்ப மறுக்கும் பிராமண கருத்தாக்கங்கள் ஒருபுறம் இன்றும் தொடர்கின்றன. ஆனால் ஆரிய ’படையெடுப்பு’ என்பதை இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள் உட்பட பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்வதில்லை. லூயி லுக்கா காவள்ளி-ஸ்ஃபோர்ஸா, இந்த நூலை 2000 ஆண்டின் போதுதான் பதிப்பித்துள்ளார். அதற்கு முன்பு சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக மானுட மரபணுவியலையும் மக்கள் தொகுதி மரபணுவியலையும் மரபணுவியலுக்கும் மொழிகளுக்குமான தொடர்புகளையும் ஆழ்ந்து கற்றவர்; அவற்றில் நுண்மான் நுழைபுலம் பெற்றவர். அவர் ’ஆரிய படையெடுப்பு’ என்று சொல்வது போகிற போக்கில் கூறுவது அல்ல; பல இடங்களில் அது குறித்த விளக்கங்களை அவர் கூறுகின்றார். பழமையான சமஸ்கிருத இலக்கியங்களில் இருக்கும் வன்முறை, ஆரியர்கள் படையெடுப்பில் நிகழ்ந்தது என அவர் குறிப்பிடுகின்றார். அவர் குறிப்பிடுகின்ற காரணத்தினாலேயே அதனை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதல்ல; ஆனால் இதனை அவர் மட்டும் கூறவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அவரது மாணாக்கரும் இந்திய மரபணுக் கட்டமைப்பு குறித்து ஆய்வுகள் நடத்தியவருமான டேவிட் ரைக் எழுதிய நூல் 'நாம் யார்? நாம் எப்படி இங்கு வந்தடைந்தோம்?" (Who We Are And How We Got Here). அதில் அவர் எழுப்பியுள்ள இரண்டு கேள்விகளையும் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவிற்குள் வந்த இந்தோ ஐரோப்பிய மொழி பேசுகின்ற கூட்டத்தினர் ஆண்கள், பெண்கள் சதவீதம் கிட்டத்தட்ட 90:10 என்று அளவில் இருப்பதை மறுக்கின்ற யாரையும் பார்த்ததில்லை. சாதாரணமாக இப்படி இருப்பது உலகில் படை எடுத்துச் சென்ற கூட்டம் தங்கிய இடங்களில்தான் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகின்றார் டேவிட் ரைக். அவரது இரண்டாவது கருத்து இந்தியாவில் அதுபோல ஆரிய ’படையெடுப்பு’ நடந்ததற்கான தொல்பொருள் சான்றுகள் ஏதும் இல்லையே? என்ற கேள்விக்கு பதில் அளிப்பதாக இருக்கின்றது. 5ஆம் நூற்றாண்டின் இறுதியில் ரைன் நதியைத் தாண்டி அன்றைய ரோம் சாம்ராஜ்யத்தின் பகுதிக்குள் நுழைந்த ஜெர்மானிய பழங்குடியினர் கோட்டை கொத்தளங்கள், நகரங்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கினர். ரோம் நகரமே ஏழு நாட்கள் எரிந்தது. மேற்கு ஐரோப்பாவில் ரோம் சாம்ராஜ்யமே சரிந்தது. இதற்கான தொல்பொருள் சான்றுகளோ இடிபாடுகளோ ஏதுமில்லை. ஆனால் அன்றைக்கு எழுத்து பண்பாட்டில் வந்துவிட்ட காரணத்தினால், இந்த நிகழ்வுகள் அனைத்திற்கும் எழுத்து பூர்வமான ஆவணங்கள் சான்றாக இருக்கின்றன என்பதனை டேவிட் ரைக் அவர்கள் குறிப்பிடுகின்றார். இவர்களது கருத்துக்கள் எல்லாம் எளிதில் ஏற்றுக் கொள்ளப்படக்கூடியவையாகவோ எளிதில் புறந்தள்ளப்படக் கூடியவையாகவோ இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

ஆசியாவின் மக்கள் தொகுதிகள் பற்றிய ஆய்வுகள் ஆசியாவின் சில பகுதிகள் முக்கியமான மானுட கூட்ட உருவாக்க மையங்களாக இருந்துள்ளன என்பதை காட்டுகின்றன. மரபணுவியல் மற்றும் மொழியியல் நிபுணர்கள் ஐந்து முதன்மைக் கட்டமைப்பு மையங்களைப் பற்றி கூறுகின்றார்கள். 1) இரானின் வடமேற்கு பகுதி; வடக்கே காஸ்பியன் கடலையும் மேற்குப் பகுதியில் ஈராக்கையும் வடகிழக்கே துர்க்கிஸ்தானையும் கொண்டிருக்கும் பகுதி. 2) தென்கிழக்கு ஆசியா. 3) ஜப்பானிய கடலை ஒட்டிய பகுதி. மஞ்சூரியா வடகிழக்கு சீனா ஆகியவற்றை உள்ளடக்கியது. 4) வட இந்தியா. 5) மத்திய ஆசியா. இந்த மையங்களில் இருந்துதான் ஆசியா முழுவதும் மக்கள் கூட்டங்கள் இடம்பெயர்ந்து குடியேறி பரவிப் பெருகி உள்ளன. ஓஷியானியா எனப்படும் பசிபிக் பெருங்கடல் தீவுக் கூட்டங்கள், ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய கண்டங்கள் ஆகிய பகுதிகளில் எல்லாம் இந்த ஆசிய மையங்களில் இருந்துதான் மக்கள் தொகை பெருகி குடியேறி பரவியுள்ளனர்.

திராவிட மொழிக் குடும்பத்தின் தோற்றுவாய் மையம், இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் இருந்திருக்க வேண்டும்; அதாவது இன்றைய ராஜஸ்தான் அல்லது சிந்து சமவெளி பகுதிகளில் தான் உருவாகி இருக்க வேண்டும் அல்லது தெற்கு காஸ்பியனில் (அதாவது இரானில்) அல்லது வடக்கு இந்தியாவில் நான்காவது முதன்மை கட்டமைப்பு உருவான இடத்திலேயே உருவாகி இருக்கலாம் என்றும் தெரிகிறது. வடஇந்தியாவில் திராவிட மொழிக் குடும்ப மொழிகள் ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் தனித்த சில வட்டங்களில் மட்டும் இருக்கக்கூடிய மொழிகளாக மாறியுள்ளன. எடுத்துக்காட்டாக தென் மேற்குப் பாகிஸ்தானில் ஒரு சிறு மக்கள் கூட்டம் பேசும் பிராஹி மொழி பலராலும் சுட்டப்படுகின்றது. முந்தைய காலங்களில் இன்னும் மேற்கே இரானின் தென்கிழக்கு முனையான ஈளம் எனும் பகுதியில் பேசப்பட்டதாகவும் சிந்து சமவெளியில் பேசப்பட்டது என்றும் வாதங்கள் உள்ளன. இன்றைக்கு அந்த மொழியைப் பேசக் கூடிய யாருமே இல்லாத இடங்களில் இந்த மொழி உருவாவதற்கான தோற்றுவாய் இருந்தது என்று சொல்வது சற்று வியப்பாகத்தான் இருக்கிறது. மொழிகளின் வரலாற்றில் அப்படிப் பட்ட பல எடுத்துக்காட்டுகள் உள்ளதாகத் தெரிகின்றது. திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளை பேசுபவர்கள் தென்னிந்தியாவில்தான் பெரும்பாலும் இருக்கின்றனர். திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் வட இந்தியாவில் குறிப்பாக கிழக்கு பகுதியில் பழங்குடி வட்டங்களில் இருக்கின்றனர். ஆனால் ஆரியப் படையெடுப்பு, அவர்களுடைய ஆதிக்கம், அவர்களது கொடுங்கோன்மை ஆகியவைதான் இந்தப் பகுதிகளில் திராவிட குடும்ப மொழிகள் இல்லாது போனதற்குக் காரணம் என்றே லூயி லுக்கா காவள்ளி-ஸ்ஃபோர்ஸா தொடர்ந்து விடாது எழுதுகின்றார்.

ஆசிய பகுதியில் நடைபெற்ற மற்றுமொரு முக்கியமான மக்கள் தொகுதியின் விரிவாக்கம், இந்தியாவிற்கு வடக்கே மத்திய ஆசிய பகுதியிலிருந்து மேற்கே அட்லாண்டிக் கரை முதல் கிழக்கே அல்டாய் மலைப்பகுதிவரை நடைபெற்ற மக்கள் தொகுதி விரிவாக்கம் மற்றும் குடியேற்றம் என்று குறிப்பிடுகின்றார். இதில்தான் இந்தோ ஐரோப்பிய மொழிகளைப் பேசும் மக்கள் ஐரோப்பாவிற்குள் நுழைந்து பரவினர். ஐரோப்பாவிற்கு வந்த இந்தோ ஐரோப்பிய மொழிகள் பேசும் கூட்டத்தினர் எங்கிருந்து வந்தார்கள் என்ற கேள்வி முக்கியமானது தான். சமீப காலத்து வரை அதற்கு இரண்டு முக்கியமான பதில்கள் இருந்து வந்துள்ளன என்று தெரிகின்றது. ஒன்று தொல்பொருள் ஆய்வாளரான மர்ஜியா கிம்புதஸ் அவர்கள் கூறியது; அதன்படி முந்தை இந்தோ ஐரோப்பிய மொழிகளும் அவற்றை பேசிய மக்களும் அவர்களது நாகரீகமும் கருங்கடல் பகுதிக்கு வடக்கே இருக்கும் குருகன் (Krugan) பகுதியில்தான் தோன்றியது என்பதாகும். மற்றொரு ஆய்வாளரான காலி்ன் ரென்ஃப்ரு அவர்களின் கருத்து, இந்த ஐரோப்பிய மொழிகளும் ஆரியர்களும் தோன்றிய இடம் இன்றைய துருக்கியின் பகுதியான அனடோலியா என்பதாகும். ஆனால் மர்ஜியா கிம்புதஸ் அவர்களது முன்மொழிவுதான் ஸ்ஃபோர்ஸா உள்ளிட்ட பெரும்பாலான மரபணுவியல் மற்றும் தொல்லியல், மொழியியல் நிபுணர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதாக இருக்கின்றது குருகன் கலாச்சாரம் என்று அழைக்கப்படும் கருங்கடலிற்கு வடபகுதியில் இருந்த கலாச்சார மேடுகளில் கிடைக்கப் பெறுகின்ற தொல்பொருள்கள் குறிப்பாக வெங்கல ஆயுதங்கள், பண்ட பாத்திரங்கள், குதிரை மற்றும் மானுட எலும்புகள் ஆகியவை இதனை வலுவூட்டுகின்றன. அத்தோடு ஆரிய நாகரிகம், பண்பாடு ஆகியவற்றோடு பிரிக்க முடியாத குதிரைகளின் மானுட வயப்படுத்தல் அவற்றின் பயன்பாடு, ஆரக்கால்கள் கொண்ட ரதங்கள் போன்றவற்றுக்கு அனடோலியாவில் எந்தவித சான்றுகளும் கிடையாது. ஆனால் இவை எல்லாம் கருங்கடலுக்கு வடக்கேயான குருகன் நாகரிகம் விளைந்த இடங்களில் ஏராளமாக கிடைக்கின்றன.

நூலின் முக்கியத்துவம் குறித்தும் நூல் விரித்துள்ள உலகம் குறித்தும் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. நூல் அறிமுகத்தின் மூலம் அதனை முழுமையாகக் கூற முடியாது என்றுதான் தோன்றுகிறது. தமிழுக்கு தமிழர்களுக்கு, திராவிடர்களுக்கு மிக முக்கியமான இந்நூல் விரைவில் தமிழில் வரவேண்டும்; ஏனைய திராவிட மொழிகளிலும் வரவேண்டும். எதற்கு அதோடு நிப்பாட்ட வேண்டும். திராவிட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வரவேண்டும். அந்த மொழிகள் நம் குடும்பத்து மொழிகளாக இல்லாது போயிருக்கலாம்; ஆனால் பேசுபவர்கள் நம் குடும்பத்தினரே! யாதும் ஊரே; யாவரும் கேளிர்!

மரபணுக்கள், மக்கள் தொகுதிகள், மொழிகள்

லூகி லுக்கா காவள்ளி ஸ்ஃபோர்ஸா

Genes, Peoples and Languages

Luigi Luca Cavalli-Sforza

- ப.கு.ராஜன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.