யமுனா ராஜேந்திரனுடன் கண. குறிஞ்சி உரையாடல்
கண. குறிஞ்சி - உங்களது பெற்றோர் கல்வி என்பதிலிருந்து தொடங்குவோம்.
யமுனா ராஜேந்திரன் - அப்பா கஸ்தூரிசாமி அவர்கள் முழுநேர கம்யூனிஸ்ட்டுக் கட்சி ஊழியர். அம்மா ராஜம்மா அவர்கள் பஞ் சாலைத் தொழிலாளி. எனது சகோதரர்கள் இருவரும் பஞ்சாலைத் தொழிலாளிகள். எனது சகோதரி கட்சிப் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். இந்த வகையில் முழுமையாகத் தொழிலாளி வர்க்கப் பின்னணி கொண்டது எங்கள் குடும்பம். வறுமை, எதிர்ப்புணர்வு, பொதுவுடமைக் கனவின் பாலான ஈடுபாடு என்பது எங்களது இல்லத்தின் இயல்பாக இருந்தது. காவல்துறை அடக்குமுறை, தொழிலாளி வர்க்கக் கூட்டுணர்வு, பிற மனிதரின் தோழமை போன்ற அனைத்தையும் எமது அன்றாட வாழ்வில் நாங்கள் அனுபவித்தோம்.
சரியானபடி முழுநேர அலவன்ஸ் கிடைக்காத தந்தையின் கையறுநிலையில் எனது அம்மா இல்லையென்றால் நாங்கள் தெருவில் நின்றிருப்போம் என நான் இன்றும் அடிக்கடி நினைப்பதுண்டு. அப்பாவிடமிருந்து நான் கற்றது அவரது அறிவுநேர்மையும் எதிர்ப்புணர்வும். ஆரம்பக்கல்வியுடன் 12 வயதில் சுல்தான்பேட்டை அருகிலுள்ள பச்சார்பாளையம் கிராமத்திலிருந்து கோவைநகர் வந்த என் தந்தை பின்னாளில் கோவை இஞ்ஜினியரிங் தொழிலாளர்களின் தொழிற்சங்கத்தை ஸ்தாபித்தார்.
எனது ஆரம்பப் பள்ளிநாட்கள் உப்பிலிபாளையத்திலும் உயர்நிலைப் பள்ளிப் படிப்பு பீளமேடு சர்வஜன உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரிப் படிப்பு கோவை பிஎஸ்ஜி கலைக்கல்லூரி- யிலுமாக இருந்தது. கணிதமும் இரசாயனமும் பௌதிகமும் கற்றேன். இந்த நாட்களில் எனது வாழ்வின் பகுதியாக இருந்த தோழர்களான கா. பழனிசாமி, வரதராஜபுரம் டெய்லர்ஜி, அமித்ஜி, எனது ஆத்ம நண்பர்களான ஜெகநாதன், விசுவநாதன், உதயகுமார், ஆர். பாலகிருஷ்ணன் போன்றவர்கள் இன்றும் என்னுள் தங்கியிருப்பவர்கள்.
இங்கிலாந்து வருவதற்கு முன்னால் உங்களது அரசியல் செயல்பாடு மற்றும் எழுத்து முயற்சிகள்.
எனது தமிழக அரசியல் என் தந்தையை அடியொற்றியது. அவரது அரசியல் வாழ்வு இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக் கட்சி, எம்எல் தோழர்கள் பங்காற்றிய தமிழக மில் தொழிலாளர் சங்கம், எம். கல்யாணசுந்தரம் ஆரம்பித்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, மீளவும் இந்தியக் கம்யூனிஸ்ட்டு என 65 ஆண்டுகளிலான நெடும்பயணம் சார்ந்தது. இந்த எல்லா அமைப்புகளதும் தலைவர்களை, கோட்பாட்டாளர்களை எனது ஆரம்பப்பள்ளி நாட்களிலிருந்தே அருகிருந்து பார்த்துக் கேட்டு வளர்ந்தவன் நான்.
இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் உறுப்பினராக 15 ஆண்டுகள் இருந்திருக்கிறேன். அதனது மாணவர் இளைஞர் அமைப்புகளில், கட்சியின் கல்விப் பணிகளில் பங்காற்றி- யிருக்கிறேன். உப்பிலிபாளையும் லோகநாதன், திருமூர்த்தி, சுப்ரமணியன், ரவி, செங்கதிர் கலை மன்றம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மன்றம், பிற்பாடு இலட்சுமிபுரம் பகத்சிங் மன்றத் தோழர்கள், வேலாண்டிபாளையம் தோழர்கள், கோவை அரசுக் கலைக் கல்லூரி, சிஐடி, ஜிசிடி, கோவை மருத்துவக் கல்லூரி மாணவத் தோழர்கள் எனது இந்த காலத்தின் உடன்பயணிகள். டாக்டர் மணியை, ஆட்டோ சந்திரனை, தோழர் ஜானை இன்றும் அவ்வப்போது அழைப்பது உண்டு. கல்லூரிகளில் நிலவிய சாதித்தடிப்புக்கு எதிராக வன்முறையை நாங்கள் வன்முறையால் எதிர்கொண்ட நாட்கள் அவை. ஹைதராபாத்தின் மத்தியக் கட்சிக் கல்வி நிலையத்தில் மாஸ்கோ மார்க்சிய ஆய்வகத்தில் இருந்து வந்தவர்கள் தத்துவம் கற்பித்தார்கள். தாமரை, செம்மலர், மார்க்சிய ஒளி, சாந்தி, ஜனசக்தி, ஜீவா முழக்கம், கல்பனா, விடியல், மனிதன் போன்றவற்றில் என் எழுத்துக்கள் வெளியான காலம் இது.
தமிழக வரலாற்றையும் இளைஞர்களது உளவியலையும் மாற்றிய நிகழ்வு ஈழ விடுதலைப் போராட்டம். உலக தேசிய விடுதலைப் போராட்ட அரசியல், இலக்கியம் போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட இது என்னை உந்தியது. மார்க்சியச் சார்பு கொண்ட ஈழ விடுதலை இயக்கங்களை நாங்கள் ஆதரித்தோம். இன்று ஈழ, குர்திஸ், பாலஸ்தீன விடுதலைப் போராட்டங்கள் ஆழந்த நெருக்கடியில் உள்ளன. இதற்கான அக-புற நெருக்கடிகளில் காலனியம், ஏகாதிபத்தியம் சார்ந்த புற அழுத்தங்களே விடுதலைப் போராட்டங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிக்குக் காரணம் என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது.
கோவை ஞானியோடு நீங்கள் பல தருணங்களில் உரையாடியிருக்கிறீரகள். சத்திய மங்கலம் எஸ். என். நாகராசன் உங்களது தந்தையின் நண்பர். இவர்கள் குறித்த உங்களது மதிப்பீடு என்ன?
எஸ். என். நாகராசன் பற்றி நெகிழ்ச்சியாகச் சொல்ல ஒரு பள்ளிச் சிறுவனாக என்னிடம் நிறைய உண்டு. உப்பிலிபாளையத்தில் நள்ளிரவு கழிந்த நேரத்தில் எமது வீட்டுக் கதவு தட்டப்படும். ‘கஸ்தூரி கொஞ்சம் பேசவேண்டும் வா’ என எஸ். என். நிற்பார். அப்பாவும் அவரும் பத்திரகாளியம்மன் கோயிலில் உள்ள பரந்த ஆலமரத்தின் கீழ் உள்ள விநாயகர் கோயில் மேடையில் உட்காருவர்கள். பக்கத்திலுள்ள ரொட்டிக் கடை திறக்கும் அதிகாலை வரை பேசுவார்கள். நான் பாதி தூங்கியும் தூங்காத நிலையில் கிறக்கத்துடன் அமர்ந்திருப்பேன். எனது ஆரம்பப் பள்ளிநாட்களில் எல். அப்பு, கீதானந்தன், கண்ணாக்குட்டி, லிங்குசாமி, குமாரவேலு எனப் பலரை இப்படிப் பேசக் கேட்டிருக்கிறேன். பத்ரகாளியம்மன் கோவில் ஊருக்கு நடுவில் உள்ள, இரவில் அமர்ந்து பேசப் பொருத்தமான இடம்.
எனது தந்தை மரணமுருவதற்குக் கொஞ்சம் முன்னால் தோழர். ‘கோணங்கள்’ சந்திரன் உதவியுடன் எஸ். என். னை எனது தந்தையைச் சந்திக்கச் செய்தேன். அன்று எஸ். என். பேசிய இரண்டு மணிநேர ஒளிப்பதிவு இன்றும் என்னிடம் உண்டு. பிற்காலத்தில் நானும் நண்பர்கள் சந்திரன், விசுவநாதன், கோணங்கள் சந்திரன், தனம் அம்மா, உதயகுமார் போன்றவர்களும் ஒருங்கிணைத்து அவரது மிக நீண்ட உரையாடலை ஒரு நூலாகக் கொணர்ந்தோம்.
எஸ். என் பேசுகிற பல விஷயங்களில் இன்று என்னால் உடன்பட முடியவில்லை. அவரது கீழை / மேலை மார்க்சியப் பிளவு அதீதப்படுத்தப்பட்டது. போலவே மாவோவியம் அன்பு என்பதும் உடன்பாடனாதல்ல. கீழை மேலைப் பிரச்சினைகளில் அமர்த்யா சென் மிகுந்த சமநிலையுடன் செயல்படுகிறார். மேலை மார்க்சியம் தொடர்பாக எஸ். என். சொல்கிற இயற்கையை ஆதிக்கம் செலுத்திய மனிதன் என்பதிலும் உடன்பட முடியாது. பெல்லாமி போஸ்ட்டரைப் படித்தே இதனை நிருவமுடியும். குறிப்பாக மெடாபலிகல் ரிப்ட் எனப் பேசும் அவரது வாதங்கள்.
எஸ். என் மத்தியத்துவப்படுத்தப்பட்ட கட்சியில் தேசிய இனம்- அதனது மொழிகள் சார்ந்து சொல்பவை இன்றும் பொருத்தமானவை. இந்திய விடுதலை இறையியல் தொடர்பான அவரது தேடல்களும் முக்கியமானவை. சுவாமி அக்னிவேஷ், குன்றக்குடி அடிகளார், வள்ளலார், தொ. ப தொட்டு இதனை நாம் திறந்த மனத்துடன் அணுக முடியும்.
பொதுவாக கோவை ஞானி, எஸ். என். போன்றவர்களிடம் நான் காண்கிற இடைவெளி என்பது, அவர்கள் இரசிய சீன அனுபவங்களில் மட்டுமே தேங்கிப் போயினர் என்பதுதான். அவர்களிடம் உலகின் பிற புரட்சிகர இயக்கங்கள் தொடர்பான, நடைமுறைகள் தொடர்பான வாசிப்பு இல்லை. குறிப்பாக இலத்தீனமெரிக்க மார்க்சியம், புரட்சிகர இயக்கங்கள் பற்றிய தேடல் இவர்களிடம் இல்லை. உண்மையில் 21 ஆவது நூற்றாண்டு மார்க்சியம் என்பது இலத்தீனமெரிக்க அனுபவங்களில் இருந்து நிறையக் கற்க முடியும்.
எஸ். என். நாகராசன், கோவை ஞானி போன்றோர் முன்னெடுத்த கீழைமார்க்சியம் என்பது மாவோவின் பாலான மனோரதியப் பார்வை என்பதாகவே எனது எண்ணம் இருக்கிறது. மார்க்சிய இயக்கத்தினுள் உலகெங்கிலுமுள்ள அதன் பிதாமகர்களது குடும்ப வாழ்வு, அன்பு, காதலுறவுகள், இயக்கத் தோழமை, இயற்கைநாட்டம், தற்பாதுகாப்பு வன்முறையில் ஈடுபடுவது குறித்த அவர்களது மனவலி (குறிப்பாக ரோசா லுக்சம்பர்க் கடிதங்கள், சே குவேராவின் பொலிவியன் டைரி மற்றும் சோசலிசமும் மனிதனும் நூல்) போன்றவற்றைப் படித்தவர்களுக்கு மேலை-கீழை மார்க்சியம் எனும் இந்தப் பிளவு அதீதப்படுத்தப்பட்டது என்பது தெரியும்..
எஸ். என். நாகராசன் எல்லா வகையிலும் ஒரு கலகக்காரர். தனது சிந்தனையிலும் மொழி வெளிப்பாட்டுமுறையிலும் கத்தோலிக்க மரபின் பாதிப்பை மறுக்கமுடியாது என்பார் அயர்லாந்துக்காரரான டெர்ரி ஈகிள்டன். அல்தூசர் தான் சந்திக்க விரும்பிய இருவர் என மாவோவையும் போப்பாண்டவரையும் குறிப்பிட்டார். இலத்தீனமெரிக்காவில் விடுதலை இறையியல் மார்க்சியத்துடன் கொண்ட உரையாடலில் தோன்றியது. இஸ்லாமிய விடுதலை இறையியல் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொண்டது என எழுதுகிறார் ஈரானியரான ஹமித் தபாசி.
மார்க்சில் அந்நியமாதலை முன்னிலைப்படுத்தியவராக எஸ். என்.நாகராசன் இருந்தார். மதத்தை ஒரு நிறுவனமாகக் கண்டு விடுதலை இறையியலை இந்திய-தமிழ் மரபுக்குள் தேடியவராக எஸ். என். நாகராசன் இருந்தார். இந்தியச் சூழலில் இத்தகைய தேடுதலை இன்று நாம் பேசுகிற இந்துத்துவம் என்பதற்குள் நிரல்படுத்தமுடியாது. எஸ். என். நாகராசன் தான் சார்ந்த வைணவ மரபினுள் அதைத் தேடினார். ஞானி தமிழ் இலக்கிய-சமய மரபினுள் அதனைத் தேடினார். இது அவர்களது சிந்தனையமைப்பின் ஒரு பகுதிதான். இதுவே அவர்களது முழுச் சிந்தனையும் இல்லை.
எஸ். என். நாகராசன் சூழலியல் பிரக்ஞையின் அவசியத்தைப் பேசினார். மொழிவழியிலான தேசியத்தைப் பேசினார். அவரது இறுதி நேர்காணலில் பெண்கள், தலித்துகள், இஸ்லாமியர்கள் போன்றவர்களே இந்திய அரசியலில் முதன்மைச்சக்திகள் என்றார். ஏகாதிபத்தியத்தை அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். உலக சமாதான இயக்கம் என ஒன்றை உருவாக்குவது குறித்து நோம் சாம்ஸ்க்கிக்கு எழுதி அதனை அமைப்பாக்க முடியும் எனக் கருதினார். முதலும் முடிவுமாக அவர் ஒரு அரசியல்வாதி இல்லை. ஒரு சிந்தனையாளர். மார்க்சில் அந்நியமாதல் குறித்து முதலில் அககறைப்பட்டவர் என கே. பாலதண்டாயுதத்தைக் குறிப்பிடுவார்கள். அது குறித்துத் தமிழில் முதன் முதலில் விரிவாக எழுதியவர் எஸ். என். நாகராசன். சூழலியல் குறித்த பிரக்ஞை மார்க்சியர்களிடம் அதிகரித்ததும் சூழலியல் இயக்கங்களுடனான ஊடாட்டம் துவங்கியதும் கடந்த கால்நூற்றாண்டில்தான். அதுவும் ஜான் பெல்லாமி போஸ்ட்டரின் நூல்கள் வெளியான பிறகே அவர்களிடம் உக்கிரம் பெற்றது. இதற்கு செர்னோபில் விபத்தும் விளைவும் ஒரு காரணம்.
நாகராசன் சூழலியல் பற்றிப் பேசியது அறுபது எழுபதுகளில். அதே காலகட்டத்தில்தான் அவர் தேசிய இனப் பிரச்சினை பற்றிப் பேசினார். தமிழ் மார்க்சிய மரபினுள் இவையெல்லாவற்றிலும் முன்னோடி அவர்தான். மதம், இறையியல் என இரண்டாகப் பகுத்துக் கொள்வோம். அம்பேத்கர் பௌத்தத்தை விடுதலை இறை- யியலாகவே தேர்கிறார். மார்க்சியர்களுக்கு இதன் தேவை குறித்த பார்வை இல்லை என்கிறார். பெரியார் பேசியது முழுமையாக இறைநெறி வெளியேற்றம். நாத்திகம். இன்று தொ. ப. போன்றோர் சிறுதெய்வ வழிபாடு, வடஇந்திய-பேரிறை வழிபாட்டுக்கு இடை- யிலான வித்தியாசத்தை முன்வைக்கிறார். சிறுதெய்வ வழிபாட்டை வெகுமக்கள் இறையியலாக நாம் கொள்ள முடியும். விடுதலை இறையியலுக்கான தேடல் இன்றுவரை இருக்கிறது. எஸ். என். நாகராசனும் ஞானியும் இதனைத் தமது வாழ்வில் முயன்றவர்கள்.
எஸ். என். நாகராசன் விஞ்ஞானம் என்பது இன்னசென்டோ நியூட்ரலோ கிடையாது என்கிறார். மார்க்சியம் இந்த வகையில் இயற்கை விஞ்ஞானம் போன்றது அல்ல எனும் அவர் இயங்கியலும் இயற்கை விஞ்ஞானம் போன்றது அல்ல என்கிறார். விஞ்ஞானம் மனிதனுக்குக் கேடு விளைவிக்கவும் செய்யும். சூழலியல் உணர்வு இதற்கான எதிர்வினைதான். இயற்கையையும் மனிதனையும் நாம் பிரித்துப் பார்க்க முடியாது. மார்க்சியம் மனித மையமானது எனில், இயங்கியல் மனிதகுல வளர்ச்சிக்கு ஆனது எனில் அதனை விஞ் ஞானம் எனக்கொள்ள முடியாது. இது நாகராசன் சிந்தனையில் அடிப்படையான செய்தியாக இருக்கிறது. இந்த அளவில்தான் நவீன விஞ்ஞானத்தையும் மார்க்சியத்தை விஞ்ஞானமாக்கும் வாதங்களையும் நாகராசன் கடுமையாக விமர்சிக்கிறார்..
தமிழகச் சூழலில் ஸ்டாலினியப் பிரச்சினையை ஸ்டாலின் வெறுப்பாக மாற்றியவர்கள் கோவை ஞானி, பொன்னீலன் போன்றவர்கள். ஸ்டாலின் பிரச்சினை குறித்து இரு தளங்களில் விவாதங்கள் நடந்திருக்கின்றன. கோட்பாட்டு மட்டத்தில் சார்த்தர் துவங்கி லசூர்டோ வரை. கம்யூனிஸ்ட்டுக் கட்சி மட்டத்தில் டிஜிலாஸ் துவங்கி பிடல் காஸ்ட்ரோ வரை.
ஏகாதிபத்தியம், காலனியம், இந்துத்துவ பாசிசம் போன்றன சிந்தனைத்தளத்தில் வலிமையாக இருக்கிற இந்திய-தமிழகச் சூழலில் ஸ்டாலின் பிரச்சினையை எவ்வாறு அணுகுவது? சோலிசக் கட்டுமானம் குறித்த பிரச்சினைகள் ஒரு புறமும், பாசிசத்தை வெற்றி கொண்ட வரலாறு பிறிதொருபுறமும் என இரண்டையும் முன்வைத்துத்தான் ஸ்டாலின் பிரச்சினையை நாம் அணுகவியலும். ஸ்டாலின் குறித்த விமர்சனம் வேறு, வெறுப்பு வேறு. இதனை வித்தியாசப்படுத்தாவிட்டால் கம்யூனிச மரபையே நாம் தொலைத்துவிடுவோம். இதுவே ஸ்டாலினியம் குறித்த எனது பார்வை.
இடதுசாரிகளின் அனுபவங்கள் பற்றிய சிந்தனைப் பள்ளிகளில் இருவிதமான இலக்குகள் உண்டு. ஒன்று வரலாற்றில் நிகழ்ந்த பிழைகளை ஒப்புக்கொண்டு கம்யூனிசக் கருதுகோளை மறுஆக்கம் செய்வது. மற்றது வரலாற்றுப் பிழைகளை முன்வைத்து கம்யூனிசத்தை ஒரு தரிசனம் அளவில் இழிவுபடுத்தி, சமாந்தரமாக வலதுசாரிக் கருத்தியலை மறுகட்டமைப்புச் செய்வது. மறுஆக்கம்,இழிவுபடுத்தல் எனும் இவற்றுக்கு இடை- யிலான வித்தியாசத்தைக் காண்பதில் இடதுசாரிகள் மயங்கினால் அவர்களால் வலதுசாரி அபாயத்தைக் கறாராக வரையறுக்க முடியாது.
அல்தூசர், ஸ்டாலின் வெறுப்பாளர்க்கும் ஸ்டாலின் ஆதரவாளர்க்கும் இடையில் ஒரு பாதையைத் தேர்ந்தார். அவரது எதிர்-மனிதாபிமானம் அப்படிப்பட்டதுதான். அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள், யூரோ கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்டு ஸ்டாலின் பிரச்சினையை- இரசிய மாதிரியைப் பார்க்கிற மாதிரி மேற்கல்லாத மார்க்சியர்கள் பார்க்க அவசியமில்லை . அவர்களது விமர்சனம் எல்லாம் ஸ்டாலின் காலக் களையெடுப்பு, தொழிலாளர்- விவசாயி- அதிகார வர்க்கம் -ஜனநாயகம் குறித்த பிரச்சினைதான். ஸ்டாலின் பரிமாணம் என்பது இத்துடன் முடிவதல்ல. பாசிசத்திற்கு முடிவு கட்டியது ஸ்டாலின்தான். காலனிய எதிர்ப்பு தேசிய விடுதலைப் போராட்டங்கள் குறித்த லெனினிய மரபு ஸ்டாலின் காலத்தில் வீறுபெற்றன.
ஞானியின் மார்க்சிய அறிதல்கள் என்பது அநேகமாக சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் முடிகிறது. ஞானியின் சிந்தனையில் 25 ஆண்டுகால மார்க்சிய இற்றைப்படுத்தல் நிகழவில்லை. குறிப்பாக, பாராளுமன்ற ஜனநாயக அடிப்படையில் வெற்றிபெற்ற இலத்தீனமெரிக்க நாடுகளின் மார்க்சிய அனுபவங்களின் சிறு தடம்கூட ஞானியின் எழுத்துக்களில் இல்லை. நிலவிய சோசலிசம் பற்றிய எதிர்மறை மற்றும் ஆக்கபூர்வ- கன்ஸ்ட்ரக்டிவ் -விவாதம் என இரு வகை உண்டு. ஆர்தர் கோஸ்லர், காம்யூ வகை லிபரல்- வலதுசாரி சிந்தனைப்பள்ளி. ரோஸா, சார்த்தர் வகை இடதுசாரி, கன்ஸ்ட்ரக்டிவ் சிந்தனைப் பள்ளி. ஞானி ஸ்டாலினியம் தொடர்பான வலதுசாரிப் பார்வையை ஜெயமோனது நாவலான பின் தொடரும் நிழலின் குரலை விதந்தோதுவதன் வழி சுவிகரிததார்.
எஸ். என். நாகராசனைப் பொருத்தவரை அவரது இறுதி நாட்களில் அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுடன் நெருங்கி- யிருந்தார். உச்சபட்ச அறிவும் குழந்தை உள்ளமும் கொண்ட மனிதர் அவர் எனும் புரிதல் இப்போது எனக்கு இருக்கிறது. உலகின் மார்க்சிய அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்ட இன்றைய சூழலில் மார்க்சியக் கட்சிகள், குழுக்கள், அணிகளுக்கு இடையில் முரண்பாடுளை விடவும் உடன்பாடுகளைக் காண்பதே அவசியம் என்று இன்று நான் நம்புகிறேன்.
இங்கிலாந்திலிருந்து வெளியாகும் முற்போக்குப் பத்திரிகைகள் பற்றித் தெளிவுபடுத்தவும்.
நியூ லெப்ட் ரிவியூ (New Left Review), இன்டர்நேஷனல் சோசலிசம் (International Socialism), ரெட் பெபர்(Red Pepper), ஹிஸ்டாரிகல் மெட்டீரியலிசம் (Historical Materialism), சால்வேஜ்- (Salvage), ரேடிகல் பிலாசபிஸ் (Radical Philosophy), டிரிப்யூன் (Tribune) போன்றன முழுமையான மார்க்சியக் காலாண்டிதழ்கள். நான் தவறாது சந்தா செலுத்தும் பிற இதழ்கள் இலண்டன் ரிவியூ ஆப் புக்ஸ் (London Review of Books), தி பிலாசபர் (The Philosopher) மற்றும் லெமான்டே டிப்ளமடிக் (Lemaonde Diplomatic) மாத இதழ். உலகில் எவரெவரை நாம் இடதுசாரிகள் எனக் கருதுகிறோமோ அவர்கள் அனைவரும் இந்த இதழ்களில் எழுதுகிறார்கள். இதுவன்றி வலதுசாரி அறிவுஜீவிகளின் மாத இதழ் கிரிட்டிக் (The Critic)-கிற்கு நான் சந்தா செலுத்தியிருக்கிறேன். இந்த இதழின் சிறப்பம்சம் ஒவ்வொரு இதழிலும் குறைந்தபட்சம் 20 புத்தகங்கள் குறித்த வலதுசாரிப் பார்வையிலான மதிப்பீடுகள் வெளியாகிறது. வலதுசாரி அறிவுஜீவிதம் பற்றிய விரிவான மதிப்பீட்டுக்கு இந்த இதழ் உதவுகிறது.
அமெரிக்க மார்க்சிய இதழ்களையும் இங்கு நான் குறிப்பிடவேண்டும். மன்த்லி ரிவியூ (Monthly Review), ஜெகோபின் (Jecobin), கேடலிஸ்ட் (Catalyst), ரீதிங்கிங் மார்க்சிசம் (Rethinking Marxism), ஸ்பெக்டர் (Spectre) போன்றன முழுமையாக மார்க்சிய இதழ்கள். இதுவன்றி போஸ்ட்டன் ரிவியூ (Boston Review), லாஸ் ஏஞ்சல்ஸ் ரெவியூ ஆப் புக்ஸ் (Losangels Review of Books), நேஷன் (Nation), டிஸ்சன்ட் (Dissent), நியூயார்க் ரிவியூ ஆப் புக்ஸ், (Newyork Review of Books) ஜூயிஸ் கரன்டஸ் (Jewish Currents) போன்றவற்றிலும் நிறைய இடதுசாரிகள் எழுதுகிறார்கள். கிழக்கு ஐரோப்பிய இணையதளமான ஈஸ்ட்லெப்ட் (EastLeft) இன்றைய கிழக்கு ஐரோப்பிய அரசியலை அறிவதற்கு முககியமான ஆதாரமாக இருக்கிறது.
இங்கிலாந்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் கலாச்சாரம், சமூக வாழ்வு, கலை இலக்கியச் செயல்பாடுகள் பற்றிக் குறிப்பிடவும்.
புலம்பெயர்தல் என்பதை இன்று எக்சைல் (Exile), மைக்ரேஷன் என வகுத்துக்கொள்வது சரி என நினைக்கிறேன். எக்சைல் என்பது அரசியல் காரணங்களால் ஒரு நாட்டில் இருந்து பிறிதொரு நாடு சென்று அடைவது. பொருளாதாரம், படிப்பு, உறவுகளுடன் சேர்வது போன்ற காரணங்களுக்காக நாடுவிட்டு நாடு வருபவர்கள் மைக்ரன்ட்ஸ் எனலாம். இருவரதும் அனுபவங்கள் வேறு வேறானவை.
ஈழத்தமிழர்களின அனுபவம் எக்சைல் அனுபவங்கள் என்றால், தமிழகத் தமிழர்களின் அனுபவங்கள் மைக்ரன்ட்ஸ் அனுபவங்கள் எனலாம். தமிழகத் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் இலக்கியம் என ஐரோப்பிய நாடுகளிலோ இங்கிலாந்திலோ இல்லை. இங்கிலாந்தில் இலக்கியச் செயல்பாடு என்பது ஈழத்தமிழர்கள் இடையில் நடைபெறுவதுதான் . ஓவியர் கே. கே. ராஜா முன்னெடுக்கும் விம்பம் கலை இலக்கிய அமைப்பு நிகழத்தும் கருத்தரங்குகள் திரைப்பட விழாக்கள் இதன் பகுதி. பதிப்பாளரும் புத்தக விற்பனையாளரான பௌசர் தனது அமைப்புகளின் வழிமுன்னெடுக்கும் நூல் வெளியீடுகள், புத்தகக் கண்காட்சிகள், கருத்தரங்குகள் இதனது பகுதி. இலண்டன் நண்பர்கள் திரள் எனும் அமைப்பின் வழியிலும் புத்தக வெளியீடுகள், கருத்தரங்குகள் நடத்துகிறார்கள். சிறுவர் இலக்கியம் தொடர்பாக பிரபு ராஜேந்திரனின் அண்மைக் காலச்செயல்பாடுகள் தமிழகத் தமிழரொருவரின் முக்கியமான முன்னெடுப்பு எனலாம்.
சிற்றிதழ்கள் எனில் ஒரு போது வந்து கொண்டிருந்து இப்போது நின்றுவிட்ட தாகம், எதுவரை, மீட்சி போன்ற இதழ்களைக் குறிப்பிடலாம். எழுபதுகள் துவக்கம் எனது வாழ்வின் பகுதியாக இருக்கிற உலக மற்றும் தேசிய தேசியவிடுதலை அரசியலின் பகுதியாக எனது எழுத்துக்கள் அனைத்தும் ஈழ இலக்கிய இதழ்களில்தான் வெளியாகின.
அயலகத்தில் சாதியின் மேலாதிக்கம் எவ்வாறு உள்ளது?
அம்பேத்கர் நினைவகம் இங்கு உள்ளது. அம்பேத்கர் சங்கம் இங்கு உள்ளது. தமிழகத் தமிழர்கள் பெரியார்அம்பேத்கர்- படிப்பு வட்டத்தை நடத்துகிறார்கள். சாதி இங்கு அனைத்து இந்திய ஈழ அமைப்புகளில் உள்ளுறைந்து இருக்கிறது. ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயகத்தின் உலகத் தலைமையகம் இங்குதான் உள்ளது. பிஜேபி அரசியலின் தாக்கம் அந்த அமைப்பில் உள்ளது. அதன் குருவான பிரபுபாதாவின் போதனைகள் நால்வருணப் பகுப்பினால் உந்தப்பட்டது. வெள்ளையினப் பூசாரிகள் இங்கு புதிய பார்ப்பனர்களாக உருவாகியிருக்கிறார்கள். சாதிய மோதல்கள் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் ஈழத் தமிழர்கள் கடைப்பிடிக்கும் சைவ சமயச் சடங்குகளிலும் குஜராத்திகள், சீக்கியர்கள் கடைப்பிடிக்கும் சமயச் சடங்குகளிலும் இங்கு சாதி நீக்கமற நிறைந்திருக்கிறது. குறிப்பாக வைணவர்களான குஜராத்திகளின் இடையில் சாதியம் புரையோடிப்போ- யிருக்கிறது. இங்கிலாந்தில் சாதிப் பிரச்சினை தொடர்பான ஒரு அற்புதமான கட்டுரையை தத்துவத்துறைப் பேராசிரியர் மீனா தண்டா ரேடிகல் பிலாசபி இதழில் எழுதியிருக்கிறார். அதனது மொழிபெயர்ப்பை எனது முன்னுரையுடன் என்சிபிஹெச் பதிப்பகம் ‘சாதி எதிர்ப்பும் இடம்பெயர்க்கப்பட்ட பூர்வீகவாதமும்‘ எனும் பெயருடன் வெளியிட்டிருக்கிறது.
சாதி மற்றும் பிராமணன் எனும் தன்னிலை குறித்த விவாதங்களை முன்னெடுப்பதில் நடைமுறையிலுள்ள ஒரு சிந்தனைப்பள்ளி இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் தத்துவாதியமான டாக்டர். ராதாகிருஷ்ணன் அவர்களுடையது. பிராமணன் என்பவன் பிறப்பால் வருபவன் இல்லை, அவன் தனது இலட்சிய குணங்களால் உருவாகி வருபவன், எந்தச் சாதியில் உள்ளவர்களும் தமது இலட்சிய நடவடிக்கைகளால் பிராமணன் ஆகமுடியும் என்பது இவரது பார்வை. பிறிதொரு சிந்தனைப்பள்ளி, சாதியை ஒரு பண்பாட்டு வகையினமாகக் குலப்பண்பாட்டு மரபாக முன்வைக்கும் சிந்தனைப் பள்ளி.
அம்பேத்கரது பார்வை இந்த இரண்டு நோக்குகளையும் நிராகரிக்கும், சாதியின் நடைமுறைப் பண்பான தீண்டாமையையும் சாதி ஒதுக்குதலையும் அதற்கு அடிப்படையிலான பிறப்பினால் தீர்மானிக்கப்படும் சாதி எனும் கருத்தாக்கத்தையும் மையமாகக் கொண்ட பார்வை. இந்த வேறுபட்ட சிந்தனைப் பள்ளிகளின் பார்வைகளது அடிப்படையில் வேறுபட்ட விளக்கங்களையும் அணுகுமுறைகளையும் கொண்டிருப்பதால் கருத்தளவில் சாதி எனும் வகைமை இன்னும் தீர்மானிக்கப்பட இயலாததாக இருக்கிறது. இருப்பினும் அதன் வேர்களையும் விழுதுகளையும் தொடர்ந்து அடையாளங் காண்பதோடு அதனது நடைமுறைப் பண்பான ஒதுக்குதல் அல்லது தீண்டாமை எனும் பண்பின் அடிப்படையில், இனத்துவேஷத்தின் பண்புகளை சாதியத்துவேஷம் கொண்டிருப்பதன் அடிப்படையில், சாதியை இனத்தைப் போலவே சமத்துவ மற்றும் மனித உரிமைச் சட்டத்தினுள் கொண்டு வரலாம் எனச் சொல்கிறார் மீனா தண்டா.
எட்வர்ட் சைத் முன்வைத்த கலாச்சார ஏகாதிபத்தியம் எனும் கருத்தாக்கத்தைத் தமது நலனுக்குக் கடத்துபவர்களாகவும், அந்நிய-காலனிய எதிர்ப்பாளர்களாகவும், பூர்வீகப் பண்பாட்டின் காவலர்களாகவும், சாதியைக் கலாச்சார வகைமையாகவும் என எப்படியெல்லாம் இந்த இந்துத்துவக் குரங்குகள் ஆட்டம் கட்டுகின்றன என்பதை விவரிக்கிறது மீனா தண்டாவின் ஆய்வுக்கட்டுரை. சாதி என்பது என்ன என்பது தொடர்பான முரண்பட்ட விளக்கங்கள் இருந்தாலும், சாதியம் என்பதற்கான விளக்கத்தைச் சட்ட வரையறைக்குள் விளக்க முடியாவிட்டாலும், சாதியம் எனும் உணர்வு பிறர் மீது ஏவும் வலியை முன்வைத்து சாதிய ஒதுக்கலை இன-நிற எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கொணர முடியும் எனத் தனது கட்டுரையை இறுதிப்படுத்துகிறார் மீனா தண்டா
மேற்கத்திய மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் மார்க்சியம் குறித்த புதிய அணுகுமுறைகளாக நீங்கள் கருதுபவை எவை?
ஐரோப்பிய நாடுகளின் சோசலிச அரசியலைத் தீர்மானித்ததில் சில வரலாற்று நிகழ்வுகள் முக்கியத்துவப்படுகின்றன. இரண்டாம் உலகப் போர், செக்கோஸ்லாவாக்கிய, ஹங்கேரியில் சோவியத் தலையீடு, 1968 பாரிஸ் மாணவர் -தொழிலாளர் எழுச்சி, சோவியத் யூனியனின் வீழ்ச்சி என்பன அந்த வரலாற்று நிகழ்வுகள். இன்று ஸ்டாலினை முன்வைத்துச் சோசலிசத்தைக் கட்டுவது என்பதை ஐரோப்பாவின் எந்த மார்க்சிய அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகளும் சொல்வதில்லை. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் எனும் சொல்லைக் கூட எவரும் பாவிப்பதில்லை. இன்று ஐரோப்பியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளில் ஸ்டாலினியம் என்பது மறக்கப்பட்ட ஓர் அனுபவம்.
இன்றைய ஐரோப்பிய மார்க்சிய அறிவுஜீவிகளை மூன்று வகையானவர்களாகப் பிரிக்கலாம். கல்வித்துறைசார் மார்க்சியர்கள். பிராங்கபர்ட் கிரிட்டிகல் தியரி, நியூலெப்ட், பிராக்சி சிந்தனைப் பள்ளி மார்க்சியர்கள். இதுவன்றி அமைப்புகள் சார்ந்து செயல்படும் மார்க்சியர்கள். தமிழகத்தில் விமர்சன மார்க்சியர்களால் கடந்த கால்நூற்றண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மார்க்சியம் என்பது அமைப்புசார் நடைமுறைகளைக் கொண்டவர்களின் அனுபவங்கள் சார்ந்தது அல்ல. மாறாக அது கல்வித்துறைசார், நிலவிய சோசலிசம் பற்றிய சிந்தனைப் பள்ளிகள் சார் விமர்சனம் மற்றும் பின்நவீனத்துவ மார்க்சியம்.
இங்கிலாந்தில் பிரித்தானியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியை விடவும் இலண்டன் கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தில் மிச்சிகன் பல்கலைக் கழக உளவியல் பேராசிரியர் ராம் மகாலிங்கத்துடன் யமுனா ராஜேந்திரன்
தொழிலாளி வர்க்க அடித்தளம் கொண்ட கட்சியாக டிராட்ஸ்க்கிய அமைப்பான சோசலிஷ்ட் ஒர்க்கர்ஸ் பார்ட்டி இருக்கிறது. இங்கிலாந்துக் கம்யூனிஸ்ட்டுக் கட்சிக்கு எந்தவிதமான வெகுஜன அரசியல் பாத்திரமும் இல்லை. இடதுசாரிக் கட்சியான பெடோமஸ் ஸ்பெயின் அரசில் அங்கம் வகிக்கிறது. பிரான்ஸ், இத்தாலியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் வலுவான கட்சிகளாக இன்று இல்லை. பிரான்சில் தீவிர இடதுசாரியான மெலிஞ்சன் தலைமை தாங்கும் இடதுசாரிக் கட்சி பெரும் செல்வாக்குப் பெற்ற கட்சியாக இருக்கிறது. இங்கிலாந்துக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் நிலைதான் அமெரிக்கக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியினது நிலை. அங்கு ஜனநாயக கட்சியில் இருந்துசெயல்படும் ஜனநாயக சோசலிஸ்ட்டுகளுக்கு வெகுஜனங்கள் மத்தியில் ஓர் இடம் இருக்கிறது. பெர்னி சான்டர்ஸ் இவர்களது தலைமைத்துவ ஆளுமை. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பதற்கு மாற்றாக ஜனநாயக சோசலிஷம் என்பதை இவர்கள் முன்வைக்கிறார்கள்.
தொழிலாளி வர்க்க மையவாதம் என்பதற்கு மாற்றாகப் பழங்குடியின மக்கள் பிரச்சினை இலத்தீனமெரிக்கச் சூழலில் முக்கியமானது. நவதாரளவாதத்திற்கு எதிரான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரை அவர்களே முனைப்புடன் நடத்துகிறார்கள். புரட்சிகர அமைப்பைக் கீழிருந்து கட்டுவது, அரசு மக்கள் திரளில் தங்கிருயிருப்பது, படையணி உள்ளிட்டு கருத்தியல் கண்ணோட்டம் கொண்டிருப்பது அங்கு இடதுசாரி அமைப்புகளில் இருக்கும் முக்கியமான பண்புகள்.
இளம் மார்க்ஸ் - முதிய மார்க்ஸ், ஆசிய உற்பத்தி முறை, மதம் குறித்த மார்க்சிய அணுகுமுறை போன்றவை குறித்த உங்களின் நிலைபாடு?
அல்தூசர் இளம் மற்றும் முதிய மார்க்ஸ் பிரச்சினையை விவாதத்துக்கு உரியதாக மாற்றினார். அந்நியமாதலைப் பேசிய இளம் மார்க்ஸ் ஹெகலிய கருத்து முதல்வாதத்திற்கு ஆட்பட்டவர் எனவும், பிற்கால மூலதனம் எழுதிய மார்க்ஸ் திட்டவட்டமான விஞ்ஞானப் பார்வைக்கு வந்து சேர்ந்தவர் என்பதும் அவரது பாரவை. மனிதனது தன்னிலை அவனது பிரதிநிதித்துவச் செயல்பாடு என்பதை மறுக்கும் அமைப்புவாதியாக அல்தூசர் அறியப்படுகிறார். மாறாக, அந்நியமாதல் எனும் கருத்தாக்கம் மார்க்சின் அனைத்துப் படைப்புகளிலும் உள்ளார்ந்து இருப்பது எனவும், சரக்குவயமாதல் இருக்கும் வரை அது ஓர் அழுத்தமான அணுகுமுறையாக இருக்கும் எனவும் லுக்காக்ஸ் போன்றவர்களை முன்வைத்த மார்க்சியர் கருதுகின்றனர். இன்றைய முதலாளித்துவ உற்பத்தியும் செயற்கை நுண்ணறிவும் மனிதனை மேலும் மேலும் அவனது படைப்பிலிருந்து அந்நியமானவனாக ஆக்கிவருகிறது. அவனது செயல்பாடுகள் மற்றும் சுற்றிலுமுள்ள பௌதிக உலகு சரக்காக ஆகிவருகிறது. இச்சூழலில் அந்நியமாதல் எனும் கருத்தாக்கம் கூடுதலான பொருத்தத்தைக் கொண்டிருக்கிறது. இளம் மார்க்ஸ் முதிய மார்க்ஸ் எனும் பிளவு சரியானது அல்ல. அல்தூசரில் தேர்வதற்கு உரியது அவரது அமைப்பு தொடர்பான ஆய்வு. ஐடியலாஜிகல் ஸ்டேட் அப்பேரேட்டஸ் எனும் அவரது கருத்தமைவு கிராம்சியின் ஹெகிமானிசம் (Hegemonism), சாம்ஸ்க்கியின் மேனுபேக்சரிங் கன்சன்ட் (Manufacturing Consent) போன்றவற்றுடன் வைத்துப் பயிலத்தக்கது. இன்றைய ஊடகமும் தகவல் தொழில்நுட்பமும் அல்கரிதமும் குறித்த ஆய்வுக்கும் செயல்பாட்டுக்கும் நிச்சயம் அல்தூசர் பயன்படுவார்.
ஆசிய உற்பத்திமுறை என்பது கார்ல் மார்க்சின் அதிகம் விவாதத்திற்கு உள்ளாகும் கருத்தாக்கம். ஸ்டாலின் கால இரசிய மார்க்சியர்களும், கட்சி சாரா இந்திய மார்க்சியர்களும் நெடுங்காலம் இதனை நிராகரித்து வந்தனர். சமூக வளர்ச்சியில் புராதன கம்யூனிசம், அடிமை முறை, நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் எனும் படிநிலையில் ஐரோப்பாவில் இருந்ததுபோல ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியா, சீனா, இரசியா, எகிப்து போன்ற நாடுகளில் இல்லை என்பது மார்க்சின் ஆசிய உற்பத்தி முறை எனும் மார்க்சின் கருத்தாக்கம். முதலாளியம் தனக்கு முன்பிருந்த உற்பத்தி வடிவங்களையும் அதன் மிச்ச சொச்சங்களையும் இருவிதங்களில் கடந்து வந்தது. முதலாவதாக சமூக அதிகாரத்தில், குறிப்பாக ஆட்சியதிகாரத்தில் அது மதஅதிகாரத்தை விலக்கி வைத்தது. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை அது அரவணைத்துக் கொண்டது. இந்தியாவில் இது நிகழவில்லை. அதற்கு அடிப்படையான காரணம்
இந்து மதமும் சாதிய அமைப்பும். இந்திய உற்பத்தி முறை இனக்குழு, அடிமை முறை, நிலப்பிரபுத்துவம் ஆகிய அனைத்தும் இறுகிய ஓர் சாதிய அமைப்பின் உற்பத்திமுறையாக இருப்பதை மார்க்ஸ் புரிந்து கொண்டார். அம்பேத்கரியர்கள் இதனது கூடுதல் விளக்கமாக இந்திய வரலாற்றில் சாதியப் படிநிலையில் உழைப்பு சார்ந்து, கீழ்நிலையில் இருந்த சாதிகளின் விஞ்ஞானத் தன்மை கொண்ட கைவினைஞர்கள், விவசாயத் தொழிலாளர்களின் பங்கை நிராகரித்து, ஆதிசங்கரரின் பார்ப்பனிய மைய ஆன்மிகத்தை மாற்றாக முன்வைத்த எதிர்புரட்சி இந்தியாவில் நிகழ்ந்தது. விஞ் ஞான மறுப்பைக் கொண்ட பார்ப்பன சாதி ஆதிக்கமும், மதத்தை முன்னிறுத்திய அதிகார அமைப்பும் கொண்டதாக இந்திய உற்பத்தி முறை ஆகியது. சாதியம், இந்துமதம் போன்றவை குறித்த போதுமான அக்கறை இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளிடம் இருந்திருக்கவில்லை எனப் பெரியாரும் அம்பேத்கரும் விமர்சித்ததை இங்கு நினைவுகூர வேண்டும்.
மதம் பற்றிய மார்க்சிய அணுமுறை என்பது ஆதுரமானது. அப்பாலை உலகின் சொர்க்கத்தைப் பேசுகிறது மதம். நடைமுறை உலகின் துயர்களுக்கான காரணங்களைத் திசைதிருப்பும் ஓர் ஆறுதாலாக, போதையாக அது இருக்கிறது. உண்மைத் துயர்களின் காரணங்களை விலக்கி மண்ணில் சொர்க்கத்தைப் படைக்க முடியும் என்பது மார்க்சிய அணுகுமுறை. நெடிய வரலாற்றில் மதஆதிக்க பீடங்கள், அடிமைமுறை- காலனியம்- நிலப்பிரபுத்துவம்- முதலாளியம்- ஏகாதிபத்தியம் போன்ற தீமைகளில் என்ன பங்காற்றியது எனப் பார்க்கிறோம். ஆப்பிரிக்க, இலத்தீனமெரிக்க, மத்தியக் கிழக்குச் சமூகங்களில் இந்தத் தீமைகளுக்கு எதிராகப் பூர்வகுடி மதங்கள் ஒரு வித எதிர்ப்பைக் கொண்டிருக்கின்றன. இலத்தீனமெரிக்காவில் விடுதலை இறை- யியல் தோன்றியது. தேசிய விடுதலை இயக்கங்களில் அது ஆக்கபூர்வமான பங்கை ஆற்றியது. மத்தியக் கிழக்கில் இஸ்லாம் அமெரிக்க-மேற்கத்திய ஏகாதிபத்திய, நவகாலனிய எதிர்ப்புப் பண்பைக் கொண்டிருக்கிறது. இந்துமதவாதிகள் காலனியத்துடன் குலவினர். உள்நாட்டில் சமூகநீதிக்கு எதிராக இருக்கின்றனர். பிற மதங்களில் இருந்து உருவான விடுதலை இறையியல்போக்குக்கு மாறாக இந்துமதத்திலிருந்து மேட்டிமையும் பிறர்வெறுப்பும் பாசிச உளவியலும்தான் உருவாகி இருக்கிறது. திராவிடக் கருத்தியலின் அடியொற்றி தமிழகத்தில் சிறுதெய்வ வழிபாட்டில் விடுதலை இறையியலுக்கான கூறுகள் இருக்கின்றன என அறிஞர் தொ. பா கருதுகிறார். அது வளர்த்தெடுக்கப்படுமானால் பார்ப்பன மைய எதேச்சாதிகாரத்திற்கான ஒரு மாற்றாக அது இருக்க வாய்ப்பு உண்டு.
உலகமயம் கோலோச்சி வரும் இன்றைய சூழலில் தேசிய இனவிடுதலைப் போராட்டங்களின் பொருத்தப்பாடு பற்றி விளக்கவும்.
ஒரு புறம் நமது சொந்த அனுபவத்தில் ஈழப்போராட்ட அனுபவங்களிலிருந்தும், மறுபுறம் நம் காலத்தில் நாம் கண்டுவரும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திலிருந்தும் தேசிய இன விடுதலைப் போராட்டம் பற்றிய புரிதலுக்கு நாம் வரமுடியும். நேஷனல் ஸ்டேட்ஸ் எனப்படும் இந்தியா, இலங்கை போன்ற பல்லின நாடுகளில் தேசிய இன ஒடுக்குமுறை என்பது தேசிய ஒற்றுமை எனும் பெயரில் முன்னெடுக்கப்படுகிறது. இந்தவகை நாடுகளில் இடம்பெறும் தேசிய இன எழுச்சிகளை ஏகாதிபத்திய நாடுகள் தமது பிராந்திய மற்றும் பொருளாதார நலன்கள் எனும் அடிப்படையில் பாவிக்க நினைக்கிறது. கிழக்கு திமோர், கொசவா போன்றவை தனிநாடுகள் ஆக உதவிய ஏகாதிபத்திய நாடுகள் ஈழம், குர்திஸ்தான், பாலஸ்தீனம் போன்ற பிரச்சினைகளில் அதன் இயக்கங்களை பயங்கரவாதிகள் என நிரல்படுத்தி அழிக்க முனைகின்றன.
விடுதலைப் போராட்ட முறையாக ஆயுதப் போராட்டங்களுக்கு முன்னோடியாக இருந்த நாடுகள் சீனாவும் வியட்நாமும். அதன்பின்பு ஆப்பிரிக்க இலத்தீனமெரிக்க நாடுகளின் விடுதலைப் போராட்டம். இன்று அதிநவீன உளவுக்கருவிகளும் விமானப் படையும் பங்கர் ஊடுருவும் குண்டுகளும் அரசுகளிடம் உள்ள சூழலில், முன்பு அசமத்துவ- அசிமிட்ரிகல்- போராட்ட வழிமுறையாக இருந்த கொரில்லா போராட்ட வடிவம் தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் உள்ளது. இதுவே காசா அனுபவம். ஆயுதப் போராட்டதினால் இன்று அரசுகளை வெல்ல முடியாது. பாரிய மக்கள் மற்றும் இயக்கப் பேரழிவுகளை அது எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஒருபோது இத்தகைய தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கு ஆயுத உதவிகள் செய்த சோவியத் சீன அரசுகள் இன்று இல்லை. இரசிய, சீன ஆதரவு என்பது தூதரக மட்டத்திலான ஆதரவு மட்டுமே. இந்த நிலையில் ஆயுதப்போராட்டம் என்பது கவனஈர்ப்புக்கான போராட்டமாகவே எஞ்சி நிற்கிறது. இந்தச்சூழலில் பிராந்திய நாடுகளின் ஆதரவைத் திரட்டுவது, உலகு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவான மக்கள் எழுச்சிகளை உருவாக்குவது, ஐநா அவைசார்ந்த சர்வவேத நீதிஅமைப்புகளில் இதனை உயிரோட்டமான பிரச்சினையாக ஆக்குவது போன்றவற்றின் மூலமே தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் உயிர்த்திருக்க முடியும்.
எந்த இசம் ஆட்சி புரிந்தாலும் சனநாயகம் எனும் கருத்தாக்கத்தைத் தொடர்ந்து வலியுறுத்துபவர் நீங்கள். அதற்கான காரணம் என்ன?
மார்க்சியம் அடிப்படையில் மக்களாட்சித் தத்துவம். ஜனநாயகம் என்பது அதுதானே? தமது தகுதிக்கு முடிந்ததை ஒவ்வொரு மனிதரும் சமூகத்துக்குத் தரவேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையானதைச் சமூகம் செய்ய வேண்டும். இதுதான் மார்க்ஸ் கண்ட சமூகத்தின் சாரம். மார்க்ஸ் சுதந்திரத் தனிமனிதர்கள் இணைந்த சமமனிதனை நேசிக்கும் சமூகத்தை அவாவினார். இன்று நாம் அக்கறைப்படும் சிறுபான்மையினர் உரிமை, விளிம்புநிலை மக்களின் உரிமைகள், அவர்களின் தேவைகள் போன்றவற்றை ஒரு மக்களாட்சி முறை இல்லாமல் எப்படி அடையமுடியும்? மார்க்சியத்தின் பிரச்சினை நிலவும் சமூகம் அப்படி இல்லை என்பதுதான். ஜனநாயகம் என்பது மாற்றுக் கருத்துக்கள், ஊடக சுதந்திரம், அறிவுசார் உழைப்பாளர்களின் உரிமை போன்றவற்றையும் உத்திரவாதப்படுத்த வேண்டும். சோசலிச சமூகத்தின் பெரும் பிரச்சினையாக தேசிய இனப்பிரச்சினை என்பது இருந்தது. லெனின். பிரிந்துபோகும் உரிமை பற்றியும் பேசினார். ஸ்டாலினுக்கு அது விருப்பமில்லை. ஜனநாயக மத்தியத்துவம் ஜனநாயகமற்ற மத்தியத்துவமாக இறுகியது. இன்னும் இந்தியா போன்ற பல்லின, பலகலாச்சார, பன்மொழி, பல்மத சமூகத்தில் ஜனநாயக விழுமியங்கள் இல்லாமல் சமத்துவத்தைக் கொணரவே முடியாது. ஒருகட்சி ஆட்சி போன்றவை, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் போன்றவை இங்கு நடைமுறை சாத்தியமேயில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் கொடுங்கோன்மை போன்றது இந்தியச் சூழலில் ஒற்றைக் கட்சி ஆட்சி என்பது. எனவேதான் நாம் ஜனநாயகத்தை அடிப்படையாக முன்வைத்துப் பேசவேண்டி இருக்கிறது.
சமகாலச் சர்வதேச அரசியல் குறித்த உங்களது கண்ணோட்டம்? குறிப்பாக உக்ரேன் போர்?
உக்ரேன் பிரச்சினையை மேலோட்டமாகப் பார்க்கிற பல ஐரோப்பிய மார்க்சியர்கள் அது ஒரு தேசிய விடுதலைப் போர் எனப் பார்க்கிறார்கள். இரண்டாவாக இதில் இரசிய ஏகாதிபத்தியம் எனும் விநோத வாதத்தைக் கொண்டுவருகிறார்கள். உலகில் நேட்டோ கூட்டணியின் பரவலுடன் பிணைந்தது உக்ரேன் பிரச்சினை. புட்டின் ஒரு பல்துருவ உலகை அவாவுகிறார். சீனாவும் அவ்வாறுதான் கருதுகிறது. நேட்டோ ஒற்றைத்துருவ முதலாளிய உலகை, அமெரிக்க மேற்கு ஐரோப்பிய மேலாதிக்க உலகை விழைகிறது. உலக நாடுகளின் பொருளாதாரம் மற்றும் இயற்கை வளங்களின் மீதான வேட்கை இது. இங்கிலாந்தில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை இன்று இரசியாவின் மீது உக்ரேன் பாவிக்க அவர்கள் அனுமதிக்கிறார்கள். இது உக்ரேன் வழியில் அவர்கள் இரசியா மீது நடத்தும் பிராக்சி யுத்தம். இதிலிருந்து உக்ரேனை விலகி நிற்கக் கோருவதுதான் இரசிய யுத்தத்தின் இலக்கு. புடின் சொன்ன நேட்டோ பரவல் இப்போது நடக்கிறது. இஸ்ரேல், மத்தியக் கிழக்கின் அமெரிக்க மேற்கத்திய வேட்டை நாயாக இருப்பது போல இரசியாவின் பிராந்திய நலனில் தலையிடும் ஐரோப்பிய வேட்டை நாய் உக்ரேன். மத்தியக் கிழக்கு நாடுகள், இரசிய, சீன ஒற்றுமை என்பது அமெரிக்க மேற்கத்திய மேலாதிக்கத்திற்கு மாற்றான ஓர் உலகை உருவாக்குவதாக இருக்கிறது. ஏகாதிபத்தியம் தனது 600 ஆண்டுக்கால மேலாதிக்கத்தை இன்றும் கொண்டிருக்க முனைகிறது. அதனது விளைவுகளே நேட்டோ பரவலாக்கமும் இஸ்ரேல் உக்ரேன் யுத்தங்களும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்ச் சமூகத்திற்குத் தந்தை பெரியாரின் பங்களிப்பு குறித்த உங்களது மதிப்பீடு? மார்க்ஸ் - பெரியார் - அம்பேத்கர் கருத்துக்களின் கூட்டிணைவு குறித்து ஆக்க வழியிலும், எதிர்மறை வழியிலும் உரையாடல்கள் நடக்கின்றன. இதில் உங்களது பார்வை?
இந்தியச் சமூகத்தைப் புரிந்துகொள்வதிலும் மாற்றுவதிலும் இன்று வர்க்கம், மதம், சாதி என மூன்று பிரச்சினைகளும் எந்த இயக்கத்திடமும் ஆழமான ஈடுபாட்டைக் கோருகின்றன. சமத்துவத்தை விழைந்த பெரியார்தான் இந்துமதம், அதன் அடிப்படையிலான சாதியப் படிநிலை இரண்டும் அதற்குத் தடையாக இருப்பதாகக் கருதினார். அவர் வெறுமனே நாத்திகர் மட்டுமல்ல. அவருக்கு மனித விடுதலை குறித்த ஒரு தத்துவநோக்கு இருந்தது. விஞ்ஞானக் கண்ணோட்டம் மதநம்பிக்கையை வீழ்த்தும் என அவர் கருதினார். அது சாதி ஒழிப்புக்கும் இட்டுச்செல்லும். அதற்கான பாதைதான் அவர் முன்வைத்த பகுத்தறிவு.
இந்துமதம், சாதி குறித்த ஆழமான பார்வை இந்திய மார்க்சியருக்கு இருக்கவில்லை என்பதுதான் அம்பேத்கரிய விமர்சனம். ‘புரட்சியின் பிற்பாடு சாதி மதப்பாகுபாடு இருக்காது, அவர்கள் சமமாக நடத்தப்படுவார்கள் என்பதை அறியாதவரை சொத்துடமைச் சமத்துவத்துக்கான புரட்சியில் மனிதர்கள் இணைய மாட்டார்கள். புரட்சிக்குத் தலைமை தாங்கும் ஒரு சோசலிஸ்ட் சாதியில் நம்பிக்கை இல்லை என்று உறுதி அளித்தால் மட்டும் போதாது. உறுதி என்பது மிகவும் ஆழமான அடித்தளத்தில் இருந்து வரும் உத்தரவாதமாக இருக்க வேண்டும். அதாவது, தங்கள் தனிப்பட்ட சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் உணர்வில் ஒருவரையொருவர் நோக்கிய தோழர்களின் உளவியல் அணுகுமுறை என்கிற அடித்தளத்தில் இருந்து அது வரவேண்டும்’ என்கிறார் அம்பேத்கர்.
மார்க்சியம் மானுட விடுதலை குறித்த தத்துவம்- நடைமுறை எனில் அது உலகின் அனைத்து விடுதலைக் கூறுகளையும் உள்வாங்கும் ஒரு முழுமையான விடுதலைக் கோட்பாடு. ஏகாதிபத்தியமும், முதலாளித்துவமும், நவகாலனியமும் பொருளாதார மேலாதிக்க நடவடிக்கையாக இன்று மிக வன்மமாக இருக்கும் சூழலில் மார்க்ஸ் முன்வைத்த வர்க்கப் பகுப்பாய்வு என்பது இன்றும் பொருத்தமானது. இன்று பார்ப்பனிய மைய இந்துத்துவ மதபாசிசம் என்பது பெரும் கருத்தியலாகத் திரண்டு நிற்கிறது. இதில் மதவெறி, சாதிவெறி, முதலாளியவெறி மூன்றும் பிணைந்து எழுந்திருக்கிறது. இதற்கு மாற்று என்பது வர்க்கம், சாதி, மதம் என மூன்றிலும் ஒடுக்கப்படும் தரப்பினரின் ஒற்றுமையிலிருந்துதான் உருவாக முடியும்.
அண்மைக்காலத் தமிழ்த் திரைப்படங்கள் குறித்த உங்களது மதிப்பீடு.
மேற்கில் நிறவாதம் இனவாதம் காலனியம் போன்றது இந்திய நிலையில் பார்ப்பனியமும் சாதியமும். அது எமது சிநதனையில் ஆதிக்கம் செலுத்துகிறது. காலனிய நீக்கம் போலப் பார்ப்பனிய நீக்கம் நிகழ்ந்தே தீரவேண்டும். இந்திய தமிழகக் கலை இலக்கியங்கள் இதற்கு விதிவிலக்கு அல்ல. தமிழ் சினிமாவில ஷங்கர், மணிரத்னம், கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்றவர்களின் ஆதிக்கம் தலைகீழாக்கப்பட வேண்டும். தமிழ்சினிமாவை தேர்தல் அரசியல் அதிகாரத்தின் பகுதியாகக் கண்டுவந்திருப்பதால் வாழ்வில் நிஜத்திற்கும் நிழலுக்கும் இருக்கும் வித்தியாசத்தை உணர முடியாத ஒரு நிலை உருவாகியிருக்கிறது. அதனால் வாழ்வின் பன்முகப் பரிமாணங்கள், கலை சார்ந்த பண்புகள் தமிழ் சினிமாவில் இல்லாது போகிறது. இந்த இரண்டு பண்புகளையும் குறித்து வலியுறுத்துவதாகவே தமிழ் சினிமா விமர்சனம் என்பது இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
உங்களது விருப்பப்பட்டியலில் இடம் பெற்றுள்ள பிறமொழிப் படங்களின் பட்டியலைத் தர இயலுமா?
உலகின் திரைக்கோட்பாடு, திரைப்படங்கள் என இரு வகையிலும் மாபெரும் சாதனைகளை நிகழ்த்தியவர்கள் மார்க்சியத்தினால் ஆதர்ஷம் பெற்ற ஆளுமைகள்தான். ஐசன்ஸ்டைன், சிகா வெர்ட்டோவ், புடோவ்கின், ழான் லுக் கோதார்த், தியோ ஆஞ்சல பெலோஸ, இல்மஸ் குணே, கென் லோச், தோமஸ் கிதராஸ் அலியா, சாஞ்சினோஸ், லுக்ரிஷயா மார்ட்டல், ரித்விக் கடக், மிருணாள்சென் எனப் பெரும் பட்டியலை என்னால் போட முடியும். கென்லோச்சின் கெஸ், ஆஞ்சல பெலோசின் தி டிராவலிங் பிளேயர்ஸ், அலியாவின் மெமரீஸ் ஆப் அன்டர் டெவலப் மென்ட், ரித்விக் கடக்கின் மேகா தாரா தாக என நூறு நூறு படங்களை என்னால் சொல்ல முடியும். எனது 12 திரைப்பட நூல்களில் இந்தப் படங்கள் குறித்து நான் விரிவாக எழுதியிருக்கிறேன்.
சர்வதேச அளவில் உங்களைக் கவர்ந்த மார்க்சிய அறிஞர்களைப் பற்றிய விவரம்.
முதன்மையானவராகக் காலஞ்சென்ற அமெரிக்க மார்க்சியரான பிரெடரிக் ஜேம்சன் அவர்களைக் குறிப்பிடுவேன். உலகை அறிவதில் -மாற்றுவதில் மார்க்சியம் ஒரு முழுமையான கண்ணோட்டம் என்றவர் அவர். வரலாற்றுவாதம், ஒரு கருத்துப் போக்கின் காலத்தை வரையறுப்பது, எதிர்மறைகளில் இருந்தும் சுவீகரித்து தமது அறிதலை விரிவுபடுத்திக் கொள்ளும் இயங்கியல் பார்வை போன்றவை அவரது ஆய்வுமுறை. இன்றைய உலக மார்க்சியர்களில் அதிகமும் பாதிப்புச் செலுத்திய முதன்மையான சிந்தனையாளர் அவர்தான். அவர் தொடாத துறைகளே இல்லை. அவரது வாசிப்பு மலைப்புக்குரியது. கல்வித்துறைசார் கலாச்சார மார்க்சியராக அவர் இருந்தாலும், பொருளாதாரம், அரசியல், இலக்கியம், இசை, திரைப்படம், விஞ்ஞானப் புனைகதை, மூன்றாம் உலகின் கலாச்சாரப் போக்குகள் என அவர் விமர்சன மதீப்பீட்டை வைக்காத அறிவுத்துறைகளே இல்லை. பின்நவீனத்துவம் குறித்த ஆரவாரங்கள் உலகில் எழுந்தபோது, செவ்வியல் மார்க்சிய வரலாற்றுவாதத்தின் அடிப்படையில் பின்நவீனத்துவம் என்பது முதலாளியப் பொருளாதாரத்தின் ஒரு வரலாற்றுத் தருணம் எனவும், அது பிற்கால முதலாளித்துவத்தின் கலாச்சாரத் தர்க்கம் எனவும் வரையறுத்து ஓர் அற்புதமான நூலை அவர் எழுதினார். அது குறித்த ஆப்ரோ கரீபியன் அறிஞர் டூரூவர்ட் ஹாலுடனான அவரது நேர்காணலின் மொழியாக்கம் எனது ‘நான் பின்நவீனத்துவ நாடோடி இல்லை’ நூலில் 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. பிரெஞ்சுச் கோட்பாடு பற்றிய அவரது இறுதி நூல் வெர்சோ பதிப்பகத்திலிருந்து அவரது மரணத்தின் பின் 2024 அக்டோபரில் வெளியாகியிருக்கிறது.
இரண்டாவது நான் குறிப்பிட விரும்புவது காலஞ்சென்ற இத்தாலிய மார்க்சியரான ரான டொமினிகோ லசூர்டோ. இன்று அதிகமும் மேற்கில் விவாதிக்கப்படுவதும் விவாதங்களுக்கு உள்ளாவதும் அவரது நூல்கள்தான். நீட்ஷே, ஸ்டாலின் குறித்த அவரது வாழ்க்கை வரலாற்று நூல்கள், தாராளவாதம், மேற்கத்திய மாரக்சியம் குறித்த அவரது நூல்கள் மிகுந்த சமகால உணர்வுடன் எழுதப்பட்ட அவரது நூல்கள். ஸ்டாலினை வரலாற்றில் வைத்துப் புரிந்துகொள்ள நான் விரும்புகிறேன் எனும் அவர் மேற்கத்திய மார்க்சியம் எனப்படும் விமர்சனக்கோட்பாடு சோசலிசத்தின் இதுவரைத்திய சாதனைகளை மறைத்துவிட்டது என்கிறார். பின்நவீனத்துவவாதிகளின் மிகப்பெரும் ஆதர்சபுருஷரான நீட்ஷேவை மேட்டிமைக் கலகவாதி என மதிப்பிடும் அவர், ஏகாதிபத்தியம், காலனியம் போன்றவை வன்மமாகச் செயல்படும் காலத்தில் மிலிடன்ட் இடதுசாரி நடைமுறையை முன்வைப்பவராக இருக்கிறார்.
பிறிதொருவர் அமெரிக்காவில் பிறந்து தற்போது பிரான்சில் வாழும் மார்க்சியரான காப்ரியேல் ராக்ஹில். பனிப்போர் கால கலாச்சார யுத்தமும் அமெரிக்க சிஐஏ ஆவணங்களும், கிரிட்டிகல் தியரி எனப்படும் பிராங்பர்ட் சிந்தனையும் சிஐஏ கோப்புகளும், பிரெஞ்சுக் கோட்பாடும் நடைமுறை ஐரோப்பிய இடதுசாரி அமைப்புகளும் பற்றி எழுதப்பட்ட இவரது கட்டுரைகள் முக்கியமானவை. புதியவகை மார்க்சியப் போக்குகள் பற்றிய காட்டமான விமர்சனமாக இவரது கட்டுரைகள் இருக்கின்றன. மேற்கத்திய மார்க்சியம் பற்றிய டொமினிகோ லசூர்டோவின் இத்தாலிய மொழி நூலை ஆங்கிலத்தில் இவர் மொழிபெயர்த்திருக்கிறார். மன்த்லி ரிவியூ பதிப்பகம் இந்த நூலை 2024 செப்டம்பர் மாதம் வெளியிட்டிருக்கிறது.
நிலவிய சோசலிச அனுபவங்கள், அவை குறித்த புதிய சிந்தனைப் பள்ளிகளின் விமர்சனங்கள், இந்தச் சிந்தனைகளின் போதாமை- தவறவிட்டமை, மார்க்சியத்தின் மறுநிர்மாணம் போன்றவற்றை இவர்களது ஆய்வுகளை முன்வைத்து நாம் அறிய முடியும்.
கம்யூனிஸ்டுக் கட்சிகள் இந்தியாவில் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை குறித்த உங்களது கண்ணோட்டம்.
கலாச்சாரதளத்தில் குறிப்பாக ஊடகத்தில் அவர்கள் பெரும் வெளிபபாட்டை நிகழ்த்த வேண்டும். சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்னான மார்க்சியப் போக்குகள் குறித்த விவாதங்கள் கட்சிக்குள் நிகழ வேண்டும். தொழிலாளி வர்க்க மையத்திற்கு இணையாக பழங்குடிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் மத்தியில் வேர் மட்டங்களில் கட்சி வேலை செய்யவேண்டும். ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட்டுக் கட்சி மாணவர் இளைஞர் அமைப்புகளில் இருந்த மிலிடென்சி இன்று இல்லாது போயிருக்கிறது. அற்புதமான நூல்களை வெளியிட்ட பீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ் தேய்ந்து விட்டிருக்கிறது. மாரக்சிஸ்ட்மிசலி, சோஷியல் சயின்டிஸ்ட், ஆர்ட் அன்ட் ஐடியாஸ், ஸ்டேட் அன்ட் சொசைட்டி, மார்க்சிய ஒளி போன்ற தத்துவார்த்த இதழ்கள் வருவது நின்றுவிட்டன. இவை அனைத்தும் மீளக் கட்டபட வேண்டம். தூய மார்க்சியம் என்பதைக் கடந்து பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளைச் சுவீகரித்து மதம், சாதி போன்ற பிரச்சினைகளின் தத்துவார்த்த அடிப்படைகளை அணிகளிடம் கொண்டு செல்ல வேண்டும். சோவியத் மாடலோ, சீன மாடலோ, வியத்நாமிய மாடலோ, கியூப மாடலோ இந்தியாவில் சாத்தியமில்லை. இந்தியாவுக்கு உகந்த ஒரு வெகுஜன இடதுசாரி அரசியலைக் கண்டடைய வேணடும். இதில் ஐரோப்பிய அனுபவங்களை விடவும் இலத்தீனமெரிக்க அனுவபங்கள் நமக்கு வழிகாட்ட முடியும் என நினைக்கிறேன்.
இந்த உரையாடலின் அறுதித்தொகுப்பாக என்ன கூற விரும்புகிறீர்கள்?
நாம் என்னதான் உலகை அறிந்து கொண்டாலும் வாசித்து அறிந்தாலும், குறிப்பான நிலம், குறிப்பான காலம், குறிப்பான இடம் சார்ந்து, இவற்றுக்குரிய குறிப்பான பிரச்சினைகள் சார்ந்துதான் ஒரு விடுதலைக் கோட்பாடு என்பது உருவாக முடியும். உறுதியாக, இன்றைய அமெரிக்க-மேற்குலகு அல்லாத மக்களின் ஒரு மாற்றுப் பார்வை எல்லாத் தளங்களிலும் உருவாகவேண்டும் என நான் கருதுகிறேன். இன்று நாம் ஏகாதிபத்திய, முதலாளிய, நவகாலனிய யதார்த்தத்தில்தான் வாழ்கிறோம். பாலஸ்தீனப் பிரச்சினையில் இந்தியா நிறவாத, இனஒதுக்கல், குடியேற்றக் காலனியமான இஸ்ரேலை ஆதரிப்பது நமக்கெல்லாம் ஒரு பெரும் படிப்பினை. உலகை அறிவதும் விளக்கப்படுத்துவதும் அதை மாற்றுவதற்காகத்தான் என்பது மார்க்சின் தீர்க்கதரிசனம்.
யமுனா ராஜேந்திரனின் நூல்கள்
கலாச்சார அரசியல் மற்றும் கோட்பாடு -- 14
கவிதை மொழிபெயர்ப்பு -- 12
திரைப்படம் -- 17
தொகை நூல்கள் -- 2
ஆக மொத்தம் - 45 நூல்கள்