பெற்றோர் பலர் தங்களது குழந்தைகளை மிகச் சிறுவயதிலிருந்து புத்தகத் திருவிழாவிற்கு அழைத்து வருகின்றனர். உலகம் தெரிவதற்கு முன்பே குழந்தைகளுக்குக் கடைகளில் பொம்மைகள் வாங்கித் தருவதைப் போல, தீபாவளிச் சமயத்தில் அவர்களுக்கு ஏற்ற எளிய பட்டாசு வகைகளை வாங்கித் தந்து மகிழ்விப்பதைப்போல சிறு சிறு சிறார் நூல்களை வாங்கித் தருவதை வழக்கமாக்கி வருகின்றார்கள்.parents and kidsசில வீடுகளில் ஐந்து, ஆறு வயதுக் குழந்தைகள் ஆங்கிலத்திலும், தமிழிலுமாக நூற்றுக்கும் மேற்பட்ட சிறார் நூல்களைச் சேகரித்து வைத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. குழந்தைகளை ஊக்குவிக்கும் விதத்தில் ஒரு சிறு நூலகம் போன்ற அமைப்பை வீட்டில் பெற்றோர் ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். இத்தகைய முயற்சிகள் யாவும் அக்குழந்தைகளுக்கு அவர்களுக்கே தெரியாமல் விளையாட்டாய் நூல்களின் மீதும் வாசிப்பின் மீதும் நாட்டமும் ஈடுபாடும் ஏற்பட ஏதுவாக அமைகின்றன.

திணிப்பு என்ற வகையில் அல்லாமல், குழந்தைகள் மகிழ்வுடன் ஈடுபடும் விதத்தில் இவ்வாறு தொடக்கத்தில் பெற்றோரால் எடுக்கப்படும் இப்படிப்பட்ட இயல்பான முயற்சியால் காலப்போக்கில் பள்ளிக் காலத்திலேயே வாசிப்புக்கு ஆட்படுகிற குழந்தைகளாக வளர்கின்றனர்; வளர்க்கப்படுகின்றனர்.

இத்தகைய குழந்தைகள் பண்டிகைக்கால உணர்வுடன் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழாவிற்குப் பெற்றோரால் அழைத்து வரப்பட்டு எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்புகளுக்கு வருகிறபோதே தாங்களே நூல்களைத் தேர்வு செய்து வாசிக்கிறவர்களாக உருவெடுக்கின்றனர்.

‘வேறு புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள் பாடப் புத்தகங்களின் மீது கவனம் செலுத்த மாட்டார்கள், அதன் காரணமாக மதிப்பெண்கள் குறைவாகப் பெற வாய்ப்புண்டு’ என்று எண்ணியிருந்த பல பெற்றோரின் கண்ணோட்டம் படிப்படியாக மாறி வருகிறது. வேறு நல்ல பொதுப்புத்தகங்களை வாசிக்கும் குழந்தைகளுக்கு ஆசிரியர் நடத்தும் பாடங்கள் நன்றாகப் புரியும்; அதன் காரணமாக படிப்பு சுலபமாவதோடு, புரிந்து படிக்கவும் - அதிக மதிப்பெண்கள் பெறவும் வாய்ப்புள்ளது. இவற்றோடு சிறு வயதிலேயே வாசிப்புக்கு வசப்பட்ட குழந்தைகளுத்குத் தன்னம்பிக்கை தானாக வளரும். தான் படிக்கும் பாடம் தொடர்பாக மட்டுமல்லாது உலகத்தைப் பற்றியும், வாழ்வியல் குறித்தும் ஒரு தெளிவு கிடைக்கும்; பொது அறிவு மட்டுமல்லாது, சமூக அறிவும் வளரும்.

இவை அனைத்தும் பொதுவாகச் சொல்லப்படும் அறிவுரைகள் அல்ல; பல்லாண்டுகளாக நடத்தப்பட்டு வரும் புத்தகத் திருவிழாக்களை ஊன்றிக் கவனித்தும், அவற்றில் கிடைக்கப்பெற்ற அனுபவங்களை அடிப்படைகளாக வைத்து ஆய்ந்து பார்த்தும், குழந்தைகளின் உளவியலையும் பெற்றோரின் அணுகுமுறையையும் உற்று நோக்கியும் - இவ்வாறு வளரும் குழந்தைகள் பலர் இப்போது கல்லூரி மாணவர்களாக உயர்ந்துள்ள நிலையில் அவர்களின் பரிணாம வளர்ச்சியை நேரில் கண்டும் சொல்லப்படுபவை; அத்தகைய மாணவர்களின் தனித்தன்மையை உணர்ந்து உரைப்பவை.

குழந்தைகளின் - மாணவர்களின் அறிவை விரிவு செய்ய வைக்கும் அரிய வாய்ப்பு ஆசிரியர்களுக்கே கிடைக்கப்பெறுகிறது. இதை ஆசிரியரின் ‘கடமை’ என்று சொல்வதை விட ஆசிரியர்களுக்கு அளிக்கப்படுகிற ‘நல்வாய்ப்பு’ என்றுரைப்பதே சாலப்பொருத்தமாகும்.

தன்னுடைய பாடங்களை மிகச் சிறப்பாக நடத்தி நூறு சதவிகித மதிப்பெண்கள் பெற வைக்கிற ஆசிரியர்கள் இன்று அதிகம் பேர் உள்ளனர். அது பாராட்டத்தக்கதுதான் என்றாலும், அதற்கும் மேல் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்களை சிறந்த குடிமக்களாக - தன்னம்பிக்கை உள்ளவர்களாக - பொது அறிவு மிக்கவர்களாக - சமூகச் சிந்தனையுள்ளவர்களாக – தனித் திறன்கள் பெற்றவர்களாக – தலைமைத் தகுதியுள்ளவர்களாக - ஆளுமை மிக்கவர்களாக வார்த்தெடுப்பதும் வளர்த்தெடுப்பதும் ஆசிரியர்களின் கடமை.

பாடங்களை நடத்துகிறவர்களாக மட்டுமல்லாது, பாடங்களாகவே திகழ்பவர்களே தலைசிறந்த ஆசிரியர்கள். பாடநூல்களுடன், தலைசிறந்த பொது நூல்களை வகுப்பறைக்கே எடுத்து வந்து, அதனை நேரடியாக மாணவர்களிடம் காட்டி, அதன் சாரத்தை எளிய வகையில் புரிந்து கொள்ளத்தக்க வடிவிலும் அந்நூலை வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உள்ளத்திற்குள் ஊற்றெடுக்கத்தக்க வகையிலும் உரைக்கும் கடமையும், ஆசிரியர்களுக்கு உண்டு. நூலகங்களைப் பயன்படுத்தத் தூண்டுவதும், புத்தகத் திருவிழாக்களுக்குப் பள்ளியின் வழியாக அனைத்து மாணவர்களையும் உணர்வுப்பூர்வமாக அழைத்துச் சென்று அங்குள்ள நல்ல நூல்களை அறிமுகப்படுத்துவதும் ஆசிரியர்களின் கடமையாகும்.

ஆசிரியர்களை நேரடியாக மாணவர்களோடு அல்லாத பிற வேலைகளில் ஈடுபட வைப்பதை அரசு அவசியம் தவிர்க்க வேண்டும். சிறந்த குழந்தைகளை உருவாக்கும் சிற்பிகளாக ஆசிரியர்கள் திகழ வேண்டும். அதற்கான மன நிலையும் சூழ்நிலையும் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டும். ஆசிரியர் சங்கங்களும் இத்தகைய திசைவழியில் தங்களது சங்க உறுப்பினர்களாக விளங்கும் ஆசிரியர்கள் அனைவரும் உருவெடுக்க உந்து சக்தியாக விளங்க வேண்டும்.

பொறுப்புணர்வுமிக்க பெற்றோரும், கடமையுணர்வுமிக்க ஆசிரியர்களும், புரிதலுள்ள அரசும் ஒரே நேர்கோட்டில் அமைந்தால் சமூக முன்னேற்றமும் மாற்றமும் சாத்தியப்படும் என்பதில் சந்தேகமில்லை.

- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.