இந்தியாவை ஆட்சி புரிந்த பிரித்தானிய அரசு ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் தனது முழு அதிகாரத்தையும் செயல்படுத்தியது. பின்னர் 1909 முதல் அவர்களது ஆட்சி முறைகளில் அதிகாரப் பகிர்வை சிறிது சிறிதாக நடைமுறைப்படுத்தத் தொடங்கினர். 1905 இல் பிரித்தானிய அரசு நிகழ்த்திய வங்கப் பிரிவினை இந்தியாவில் செயல்பட்டு வந்த காங்கிரசுக் கட்சியில் உள்ளார்ந்த எழுச்சிகளை உருவாக்கத் தொடங்கியது. மிதவாத காங்கிரசு, தீவிரவாதக் காங்கிரசு எனும் பிரிவுகள் உருப்பெறத் தொடங்கின. உள்நாட்டில் உருவான எழுச்சிகளால் நெருக்கடிகளைச் சந்தித்த பிரித்தானிய அரசுக்கு, உலகளவிலும் முதல் உலகப் போர் போன்ற நிகழ்வுகளால் நெருக்கடிகள் உருவாயின. இந்தப் பின்புலத்தில் இந்தியாவில் ஆட்சி செய்யும் முறைகளில் படிப்படியான மாற்றங்களைக் கொண்டு வந்தனர்.
1909 இல் மின்டோ-மார்லி சீர்திருத்தம் எனும் சட்டத்தைக் கொண்டுவந்தனர். 1919 இல் மாண்டேகு-செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தச் சட்டம் வந்தது. இதன் தொடர்ச்சியாக இந்தியர்களுக்கும் ஆட்சி நடத்தும் அதிகாரம் வழங்க பிரித்தானிய அரசு முடிவு செய்தது. இதனால் ‘இரட்டையாட்சி முறை’ நடைமுறைக்கு வந்தது. மாகாணங்களில் ஜனநாயக வாக்குமுறை சார்ந்த சட்டமன்றங்கள் உருவாயின. வட்டார மொழிகளில் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு தேசிய இனமும் தங்களுக்கான உரிமைகளைக் குறித்து பேசத் தொடங்கின. மதம் சார்ந்து செயல்பட்ட தேசிய இனங்களும் தங்களது அடையாளங்கள், உரிமைகளை முன்னெடுக்கத் தொடங்கின. தமிழ்நாட்டில் உருவான தென்னிந்திய நலவுரிமைச் சங்கம், நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம் முதலியவற்றை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
பிரித்தானிய அரசு, சைமன் ஆணையம், வட்டமேசை மாநாடுகள் போன்ற நடவடிக்கைகளால் இந்தியர்களின் பல்வேறு சிக்கல்கள் குறித்த உரையாடல்களைத் தொடங்கி வைத்தது. இதில் முதன்மையாக மதம் சார்ந்த சிறுபான்மையோர், ஒடுக்கப்பட்ட தீண்டப்படாத மக்களின் வாழ்நிலை முதலிய பிற முன்னெடுக்கப்பட்டன. இந்தப் பின்புலத்தில்தான் முஸ்லிம் மக்கள் தங்களது உரிமைகளை முன்னெடுக்கத் தொடங்கினர்.
பல்வேறு தேசிய இனங்களையும் ஆட்சி அதிகாரத்தில் ஒருங்கிணைத்து இந்தியா என்ற பல்மொழி, பல்தேசிய இன, பல்பண்பாடு கொண்ட நாட்டை பிரித்தானியர்கள் கட்டமைத்திருந்தனர். இதில் பெரும்பான்மைச் சமூகமாக இந்துக்கள் உருவாகியிருந்தனர். பல்வேறு சமயக் குழுக்களையும் இணைத்து ‘இந்து’ எனப் பெயரிடும் மரபு பதினெட்டாம் நூற்றாண்டில் நிறைவேறியது. அவர்கள் பெரும்பான்மையினர். பிற மதக் குழுக்கள் சிறுபான்மையினர்.
இந்தியா என்று அழைக்கப்படும் இந்த நிலப்பகுதியில் பொ.ஆ. 700 முதல் முஸ்லிம் அரசர்களின் படையெடுப்பு நிகழ்ந்தது. பொ.ஆ. 16 ஆம் நூற்றாண்டு அளவில் கணிசமான வட இந்தியப் பகுதி, முஸ்லிம் அரசர்களின் ஆட்சி அதிகாரத்திற்குட்பட்டதாக உருவானது. இதன் தொடர்ச்சியாக, இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் முஸ்லிம் மக்கள் கணிசமான அளவில் இந்தியாவை வாழ்விடமாகக் கொண்டவர்களாக உருப்பெற்றனர். பொ.ஆ. எட்டாம் நூற்றாண்டு முதல், பார்ப்பன மதம் என்ற அடையாளத்தில், பின்னர் இந்து மதமாக உருவான அமைப்பை சங்கராச்சாரி கட்டமைத்தார். இதற்கு அரசர்களின் முழு ஆதரவு இருந்தது. ஆக, இந்திய மண்ணில் இந்து மதம், இஸ்லாம் மதம் எனும் இருமை நிலை உருவானது. கிறித்தவம், சீக்கியம் போன்ற வேறு சில மிகச் சிறுபான்மையான மதப்பிரிவுகளும் உருவாயின. இந்தப் பின்புலத்தில் முஸ்லிம் மக்கள் (முசல்மான்கள் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டனர்) பேசுபொருளாக இந்தியச் சமூகத்தில் உருவாயினர்.
மேற்குறித்தப் பின்புலத்தில் பிரித்தானியர்கள் செயல்படுத்திய பல்வேறு திட்டங்களிலும் முஸ்லிம் மக்களின் நிலைபாடு என்பது கவனத்துக்குரியதாக வடிவம் பெற்றது. 1919 இல் காங்கிரசுக் கட்சியில் முதன்மையான தலைவராக உருவான காந்தியாரின் செயல்களால், இந்தியா பிரித்தானியர்களின் ஆட்சி அதிகாரத்திலிருந்து விடுபடுதல் எனும் பேசுபொருள் புதிய பரிமாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு பிரித்தானியர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைமாற்றினால் இங்குள்ள ஒவ்வொரு மத மற்றும் தேசிய இனப் பிரிவுகளும் தங்களின் அரசியல் வகிபாகம் என்னவாக இருக்க வேண்டும் என்ற சிந்தனைக்குள் சென்றனர். இதில் 1940 ஆம் ஆண்டு லாகூரில் முஸ்லிம் லீக்கின் மாநாடு நடைபெற்றது. இதில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்களைத் தனியாகப் பிரித்து 'பாகிஸ்தான்' என்ற நாடு உருவாக வேண்டும் எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேற்குறித்த சூழலில் அம்பேத்கர் முஸ்லிம்கள், இந்துக்கள் என்ற இருமை சார்ந்து இருந்த பேசுபொருளை அக்கறையுடன் உரையாடலுக்குட்படுத்தத் தொடங்கினார். அந்தப் பின்புலத்தில் பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை எனும் விரிவான நூலை எழுதினார். இந்தியாவில் வாழும் மக்கள் மீது அக்கறை கொண்ட மனிதரான அம்பேத்கர் இந்து-முஸ்லிம் என்பது பெரிய சிக்கலாக உருவாகும் எனும் களநிலையைப் புரிந்து கொண்டு, அதில் தனது நிலைபாட்டை முன்வைக்கும் ‘சமூக அறிவியல் அறிஞராகச்’ செயல்பட்டு, இந்த ஆவணத்தை உருவாக்கியுள்ளார். ஒடுக்கப்பட்ட தீண்டப்படாத மக்களின் சமூக விடுதலையை முதன்மையாகக் கொண்டு போராடிய அம்பேத்கர், இந்தச் சிக்கலில் அக்கறை செலுத்தாமல்கூட இருந்திருக்கலாம். ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலையில் எவ்வளவு தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களை எழுதினாரோ, அதில் கொஞ்சம் கூட குறையாமல் முஸ்லிம் மக்கள், இந்துக்கள் குறித்த ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளார். இந்திய மக்கள் அனைவரின் விடுதலைக்கும் உழைத்த மனிதர் அம்பேத்கர் என்பதைப் புரிந்து கொள்ள, இந்த நூல் அடிப்படைத் தரவாக அமைந்துள்ளது. இந்நூல் பற்றிய அம்பேத்கரின் பதிவு பின்வருமாறு அமைகிறது.
“இந்த நூல் இந்துக்களின் வெறுப்பையும் அதேபோன்று முஸ்லிம்களின் வெறுப்பையும் ஈட்டிக் கொண்டுள்ளது. ஆனால், இந்துக்களின் வெறுப்புக்கான காரணங்களும் முஸ்லிம்களின் வெறுப்புக்கான காரணங்களும் வெவ்வேறானவை; முற்றிலும் முரண்பட்டவை. என் நூலுக்குக் கிட்டியுள்ள எதிர்ப்புக்காக நான் வருந்தவில்லை. இந்த நூலை இந்துக்களும் மறுதலிக்கின்றார்கள். முஸ்லிம்களும் ஏற்க மறுக்கிறார்கள் என்றால் அது எதைக் காட்டுகிறது? அச்சமின்றி, அசைக்க முடியாதபடி உண்மை விவரங்களை எடுத்துரைக்கும் இந்நூல் பக்கச்சார்பற்று, எந்த ஒரு தரப்பையும் ஒருசார்பாக முட்டுக்கொடுத்து ஆதரிக்காதது என்பதையே உள்ளங்கை நெல்லிக்கனி போல் பறைசாற்றுகிறது.” (தொ. 24, பக். 40)
***
அம்பேத்கரின் உரையாடலைச் சார்ந்து இந்நூலில் பேசப்படும் செய்திகளை, எவ்வகையில் உரையாடலுக்குட்படுத்தலாம் என்பதற்கான வரையறைகளைப் பின்வருமாறு தொகுத்துக் கொள்வோம்.
- பாகிஸ்தான் என்ற தனிநாடு தொடர்பான கோரிக்கையை முஸ்லிம் மக்கள் முன்வைப்பதை எப்படிப் பார்ப்பது? மொழி, பண்பாடு, வாழ்விடம் சார்ந்து ஒருபடித்தான தன்மையைக் கொண்டுள்ள மக்கள், தங்களுக்கான தாயகமாக, ஒரு தேசத்தை உருவாக்கிக் கொள்ள விரும்புவதை எந்த முறையில் புரிந்து கொள்ள வேண்டும். மேற்குறித்தக் கண்ணோட்டத்தில் அம்பேத்கர் இந்நூலின் முன்பகுதியில் பேசுகிறார். அதை நாம் புரிந்து கொள்ளும் தேவையுண்டு.
- இந்தியாவில் இணைந்து வாழும் ஒரு தேசிய இனம், பிரிந்து தனியே தனி நாடாக உருவாகும்போது, இந்தியாவின் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு முதலிய பிற சிக்கலுக்குட்படுத்தப்படும் சூழல் உருவாகுமா? அப்படி உருவாவதைத் தவிர்க்க இயலுமா? முதலியவை குறித்தும் அம்பேத்கர் பேசுகிறார். இதன் மூலம் வகுப்புப் பிரிவினை கூர்மையடைந்து சீரழிவு உருவாகும் எனில், அதனை எப்படி எதிர்கொள்வது என்ற உரையாடலையும் முன்வைக்கிறார்.
- பாகிஸ்தான் உருவாகவில்லை எனில் அந்த இடத்தில் இந்துக்களே ஆதிக்கம் செலுத்துவது மாற்றாக அமையலாமா? அல்லது முஸ்லிம் மக்கள் அதிகாரம் உடையவர்களாக இருக்க முடியுமா? இப்படியான தேசிய இனச் சிக்கல்கள் உலகின் பல இடங்களில் நிகழ்ந்துள்ளன. அவற்றிலிருந்து நாம் பெறவேண்டிய பாடம் எத்தகையவை என்பது குறித்தும் அம்பேத்கர் பேசுகிறார்.
- முஸ்லிம் மக்களின் வாழ்நிலை எவ்வாறு உள்ளது? மூட நம்பிக்கைக்கு அந்த மக்கள் ஆட்பட்டிருப்பது ஏன்? முஸ்லிம் மக்களிடம், சமூகச் சீர்திருத்த மனநிலை எவ்வாறு உள்ளது? அதனால், அந்த மக்களிடம் காணப்படும் சமூகத் தீமைகள் எவ்வாறு செயல்படுகின்றன? அதை நீக்குவதற்கான வழிமுறைகள் எவையெவை என்பதையும் அம்பேத்கர் முன்வைக்கிறார்.
- பாகிஸ்தான் என்ற ஒரு நாடு உருவாவதற்கான புவியியல் தகுதி, இந்து–முஸ்லிம் மக்களின் முரண்பாட்டுத் தன்மைகள் பாகிஸ்தானை எப்படி உருவாக்குகின்றன; இந்துக்களின் ஆட்சி முஸ்லிம் மக்களுக்குப் பாதுகாப்பாக அமைய முடியுமா முதலிய பிற குறித்தும் அம்பேத்கர் பேசுகிறார்.
***
தேசிய இனம், தேசிய இனங்களுக்குள் உள்ள முரண்பாடுகள், தேசிய இன ஆதிக்கம், முஸ்லிம் மக்களின் வாழ்நிலை, தவிர்க்க இயலாமல் பாகிஸ்தான் உருவாகப் போவதன் பல்வேறு விளைவுகள் முதலியவற்றை அம்பேத்கர் விரிவான உரையாடலுக்குட்படுத்தியுள்ளார்.
அம்பேத்கர் தாம் உரையாடலுக்குட்படுத்தும் அனைத்து விவரணங்கள் தொடர்பான விரிவானத் தரவுகளை பின்னிணைப்பாக இணைத்துள்ளார். ஒரு சிக்கல் குறித்து ஆய்வு மேற்கொள்ளும்போது அதற்கானத் தரவுகளை முன்வைப்பதன் தேவையை அம்பேத்கர் நிறைவுசெய்துள்ளார். மிகவும் நுண்ணியதாக ஆய்வு செய்யும் சமூகவியல் அறிஞராக அம்பேத்கர் செயல்பட்டிருப்பதை இந்த இணைப்புகள் உறுதிப்படுத்துகின்றன.
***
“சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் பலனை முஸ்லிம்களுக்கு மறுக்கமுடியாது. ஏனென்றால், இதே சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டைத்தான் இந்து தேசியவாதிகள் தங்களுக்கு ஆதாரபலமாகக் கொண்டிருக்கிறார்கள். மிகச் சின்னஞ்சிறு ஐரோப்பிய தேசங்களுக்கு எல்லாம்கூட உலக மனச்சாட்சி இந்த உரிமையை வழங்கியிருக்கும்போது, இந்தியாவுக்கு மட்டும் பிரித்தானியர் எவ்வாறு இந்த உரிமையை மறுக்கமுடியும் என்று கேட்கிறார்கள். அப்படியிருக்கும்போது, இந்த உரிமையை ஏனைய சிறுபான்மையினருக்கு மறுக்க வேண்டும் என்று அவர்கள் பிரித்தானியரை எவ்வாறு கேட்க முடியும்.
பாகிஸ்தானைக் கைவிடும்படி முஸ்லிம்களைப் பிரித்தானிய அரசு கட்டாயப்படுத்த வேண்டும் என்று இந்திய தேசியவாதிகள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், இங்கு அவர்கள் ஒரு பொருட்கூறை மறந்துவிடுகின்றனர்; அதாவது, ஆதிக்கவெறிகொண்ட ஓர் அந்நிய ஏகாதிபத்தியத்திடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு தேசியத்திற்குள்ள உரிமையும் ஆதிக்க மனப்பான்மை கொண்ட பெரும்பான்மையினரின் தேசியத்திலிருந்து சுதந்திரம் பெறுவதற்கு சிறுபான்மையினருக்குள்ள உரிமையும் இரண்டு வெவ்வேறான பொருட்கூறுகளல்ல என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர்; முதலாவதாகக் குறிப்பிடப்பட்ட உரிமை, இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்ட உரிமையை விடவும் எவ்வகையிலும் மிகவும் புனிதமானதல்ல என்பதையும் அவர்கள் மறந்துவிடுகின்றனர். இவை இரண்டுமே சுதந்திரப் போராட்டத்தின் இரு கூறுகளாகும்.
இவ்வகையில் இவை இரண்டும் அவற்றின் தார்மீக உட்பொருளில் சமத்துவ முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆதிக்க வெறிகொண்ட ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெறும் பொருட்டு போராடிவரும் தேசியவாதி, ஆதிக்க மனநிலை கொண்ட பெரும்பான்மையினரது தேசியத்தின் பிடியிலிருந்து விடுபடுவதற்கு சிறுபான்மையினருக்குள்ள உரிமையைக் குலைப்பதற்குப் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளின் உதவியை நாடமுடியாது.
எனவே, இந்தச் சிக்கலுக்கு முஸ்லிம்களும் இந்துக்களும்தான் தங்களுக்குள் தீர்வு காண வேண்டும். அவர்களுக்காகப் பிரித்தானியர் இச்சிக்கலுக்கு முடிவு காணமுடியாது. இது கவனத்திற் கொள்ளவேண்டிய முதன்மையானச் செய்தி” (தொ. 24, பக். 54-55).
மேற்குறித்த பகுதியில் முஸ்லிம் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை, சிறுபான்மை மக்களைப் பெரும்பான்மையினர் அணுக வேண்டிய முறை, பிரித்தானியர்களிடம் சுதந்திரத்திற்காகப் போராடும் பெரும்பான்மையினரான இந்துக்கள் கைக்கொள்ள வேண்டிய அறம் ஆகியவை பற்றி அம்பேத்கர் பேசுகிறார். பிரித்தானிய ஆட்சியின்கீழ் இருந்தால் இவ்விரு இனங்களிடையில் உருவாகும் சிக்கலை, ஏகாதிபத்தியம் சரிசெய்ய வாய்ப்பில்லாத சூழலில் இந்த இரு தேசிய இனங்களே தமக்குள் சரி செய்து கொள்ள வேண்டும் என்று அம்பேத்கர் கூறுவதை உணர முடிகிறது. இது தொடர்பாக, அவர் முன்வைக்கும் பல்வேறு கருத்துகளைத் தொகுக்கலாம்.
- இந்துக்கள் வாழும் மாகாணங்களில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. இவ்வகையான முரண்பாடுகளில் ஒன்றாகவே இந்து-முஸ்லிம் முரண்பாட்டைக் கருதுதல் அவசியம். இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும் முஸ்லிம் மக்களிடம்தான் முரண்பாடாகச் செயல்படுகின்றனர் என்பதும் உண்மையல்ல. முரண்பாடுகள் பலதரப்பிலும் செயல்படுவதை அம்பேத்கர் விரிவாகப் பதிவு செய்கிறார்.
- பிரித்தானியர்கள் ஆட்சிக்குப் பின் இந்தியாவிற்கென புதிய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்படுதல் நிகழும். அப்போது முஸ்லிம் மக்களுக்கான தனி தேசம் என்று உருவாகும் சூழல் நேர்ந்தால், இந்தியா பல்வேறு முரண்களை எதிர்கொள்ள நேரிடும். எனவே, பிரித்தானிய ஆட்சிக் காலத்திலேயே பாகிஸ்தான் உருவாவதற்கான அடிப்படை அரசியல் அமைப்புகளைத் தீர்மானிப்பது நல்லது.
- முஸ்லிம் மக்கள் தாங்கள் வாழும் பகுதிகளில் தனித்த நிருவாக அமைப்புகளை உருவாக்க விரும்புகின்றனர். அதுவே அவர்கள் தனித்தேசமாக உருப்பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும். காலப் போக்கில் முஸ்லிம்களுக்கான தனி அரசு உருப்பெறுவதை முஸ்லிம் மக்கள் விரும்புகின்றனர்.
- இந்தியாவில் முஸ்லிம் மக்கள் வாழும் மாகாணங்களை மறுசீரமைப்பு செய்து அப்பகுதிகளை முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் மாகாணங்களாக அறிவிக்க வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.
- இந்தியா என்பது பல்வேறு மொழிபேசும் மாகாணங்களாக உள்ளது. இந்த உண்மையை காங்கிரஸ் உணர்ந்ததாகத் தெரியவில்லை. இந்த எதார்த்தத்தைக் காங்கிரசு புரிந்துகொள்ளவில்லை. இந்தப் பின்புலத்தில் முஸ்லிம் மக்களும் தங்களுக்கான மொழிவாரி மாகாணம் எனும் அடையாளத்தை முன்னிறுத்துவதை அம்பேத்கர் கவனப்படுத்துகிறார். இதன் மூலம் பாகிஸ்தான் பிரிவினையை முஸ்லிம் மக்கள் முன்னிலைப்படுத்துகின்றனர் என்பதை அம்பேத்கர் பதிவு செய்கிறார்.
- முஸ்லிம் தேசம் உருப்பெறுவதற்கு முஸ்லிம் மக்கள் உரையாடல்களை முன்னெடுக்கின்றனர். இதற்கான நியாயப்பாடுகளை அம்பேத்கர் பின்வருமாறு வரையறை செய்கிறார்.
“தேசியத்தன்மை என்பது ஒரு சமூக உணர்வு. அது ஒத்தத் தன்மையை, இணக்கத்தை வெளிப்படுத்தும் கூட்டு உணர்ச்சிப் பாங்காகும்; இத்தகைய மெய்ப்பாட்டு உணர்வுக்கு ஆட்பட்டவர்கள் தங்களை உற்றார் உறவினர்களாகப் பாவிக்கின்றனர்.
இந்தத் தேசிய உணர்வை இருபுறமும் கூருள்ள ஒரு வாள் எனலாம். இது ஒரு பக்கம் தனது உற்றார் உறவினர்களிடம் தோழமை பாராட்டுகிறது; இன்னொரு பக்கம் உற்றார் உறவினர்கள் அல்லாதவர்களிடம் தோழமை கொள்வதில்லை. இதனை ஒரு வகையான ‘தனி உணர்வு நிலை’ எனலாம். இத்தகைய உணர்வுநிலை உள்ளவர்கள் அனைவரையும் இது ஒருபுறம் மிக வலுவாக ஒன்றிணைக்கிறது; பொருளாதார முரண்பாடுகளாலும் சமூகப் படிநிலைகளாலும் எழக்கூடிய வேறுபாடுகள் அனைத்தையும் எதிர்கொள்ள இது துணைபுரிகிறது. இன்னொருபுறம், இத்தகைய உணர்வுநிலை இல்லாதவர்களிடமிருந்து இவர்களைப் பிரிக்கிறது. வேறு எந்தக் குழுவுடனும் இணைந்திருக்காத விருப்பத்தையே இது குறிக்கிறது. தேசியத்தன்மை மற்றும் தேசிய உணர்வு என்பதன் கருப்பொருள் இதுதான்.
இப்போது முஸ்லிம்களின் கோரிக்கையை இந்த உரைகல்லில் உரசிப் பார்ப்போம். இந்தியாவின் முஸ்லிம்கள் தனித்த ஒரு பிரிவினரா, இல்லையா? அவர்களுக்கென ஒரு தனி உணர்வுநிலை இருப்பது உண்மையா, இல்லையா? ஒவ்வொரு முஸ்லிமும் தனது சொந்தக் குழுவினருடன் இணைந்திருக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டிருப்பது உண்மையா, இல்லையா?
இந்தக் கேள்விகளுக்கான விடை ‘ஆம்’ என்பதாக இருக்குமானால், அப்போது இந்தக் கேள்விக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; முஸ்லிம்கள் ஒரு தேசம் என்ற வாதத்தை எத்தகைய மறுப்புமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும்.” (தொ. 24, ப. 86-87)
இந்த உரையாடல் மூலம், இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே தேசமாக வாழ இயலுமா என்பதை கேள்விக்குட்படுத்துகிறார் அம்பேத்கர்.
- இனம், மொழி, தேசம் சார்ந்து மக்கள் கூட்டம் தங்களுக்குள் உருவாக்கிக் கொள்ளும் பல்வேறு உறவுகளை முன்னெடுக்கும் அம்பேத்கர், அவ்வகையான நிலைகளும் நிலைத்தவை அல்ல; அதற்குள்ளும் முரண்பாடுகள் உருப்பெறுகின்றன. இனம், மொழி, தேசம் என்பதற்கான வரையறைகள் முழுமையாக நடைமுறையில் இல்லை என்றும் அம்பேத்கர் பேசுகிறார். இவ்வகையில் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் பேசுவதாக அம்பேத்கரின் உரையாடல் அமைகிறது.
- காங்கிரசு அமைப்பிற்கும் முஸ்லிம் மக்களுக்குமான தொடர்புகள் குறித்தும் அம்பேத்கர் பேசுகிறார். காங்கிரசின் கருத்துநிலைகளிலிருந்து முஸ்லிம் மக்கள் முரண்படும் புள்ளிகள் குறித்தும் விரிவாகப் பேசுகிறார்.
- பிரித்தானிய அரசோடு, காங்கிரஸ், முஸ்லிம் மக்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளில் உள்ள முரண்பாடுகளையும் அம்பேத்கர் முன்வைக்கிறார்.
இந்தியாவில் வாழும் இந்துக்களும் முஸ்லிம்களும் இனம், மொழி, தேசம் எனும் கருத்தமைவுகளில் எவ்வாறெல்லாம் முரண்படுகின்றனர் என்பதை விரிவாகப் பேசும் அம்பேத்கர், அதன் மூலம் பாகிஸ்தான் என்ற நாடு உருப்பெறுவது தவிர்க்க இயலாதது என்ற கருத்துருவை முன்வைக்கிறார்; ஆனால், இவ்வகையான இனம், மொழி, தேசம் எனும் கருத்தமைவுகளில் உருப்பெறும் நாடுகளுக்குள்ளும் முரண்பாடுகள் உலக அளவில் உருப்பெற்றுள்ளன என்பதையும் பேசுகிறார். இதன்மூலம் முஸ்லிம் தேசம் உருப்பெறுதலையும் அது உருப்பெறுவதால் ஏற்படும் சிக்கலையும் தராசின் இரு தட்டுக்களாக உரையாடலுக்குட்படுத்துவதைக் காண்கிறோம். ஆனால், தனி தேசம் உருப்பெறுவது தவிர்க்க இயலாது எனும் கருத்துருவைச் சார்ந்த தராசுத் தட்டு கீழே இறங்குவதை இந்த உரையாடல் மூலம் நம்மால் உணர முடிகிறது. அம்பேத்கரின் இவ்வகையான உரையாடல் ஒரு நிகழ்வின் பல பரிமாணங்களையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது.
***
பாகிஸ்தான் என்ற நாடு உருவாவதன் மூலம் இந்தியா என்ற நாட்டுக்கு உருவாகும் பல்வேறு சிக்கல்கள் குறித்து அம்பேத்கர் பேசுகிறார். இந்திய தேசத்தின் ஒருமைப்பாடு உடையும்; இந்திய தேசப் பாதுகாப்புக்குச் சிக்கல் உருவாகும்; வகுப்புவாரி முரண்பாடுகள் மேலும் கூர்மைப்படும் என்னும் கருத்துகளை அம்பேத்கர் உரையாடலுக்குட்படுத்துகிறார். தராசின் இரு தட்டுகளில் முஸ்லிம்கள், இந்துக்கள் என்ற கருத்துநிலைகள் உள்ளன. தராசுத் தட்டின் ஒரு பக்கம் ஒரு சில நிலைகளில் கீழே போகிறது. இன்னொரு பக்கம் மேலே போகிறது. இதற்கு நேர் மாறாகவும் சில வேளைகளில் தட்டுகள் மேல் கீழ் போகின்றன. இந்தத் தராசை நிறுக்கும் நீதிபதியாகவும் தட்டுகளில் உள்ளவை குறித்து வழக்காடும் வழக்கறிஞராகவும் அம்பேத்கர் செயல்படுகிறார். இந்து – முஸ்லிம் – பாகிஸ்தான் என்ற கருத்துநிலைகளின் பல பரிமாணங்களையும் சார்பற்றுப் பேசும் வழக்கறிஞராக அம்பேத்கர் இந்த உரையாடலில் பங்கேற்றுள்ளார்.
பொ.ஆ. 700 முதல் பொ.ஆ. 1600 வரையிலான காலங்களில் இன்று இந்தியா என்று கட்டப்பட்டிருக்கும் நிலப்பகுதியில் இஸ்லாமிய அரசர்கள் படையெடுப்பு தொடர்ந்து நிகழ்ந்தது. இது குறித்த மிக விரிவான பதிவுகளை அம்பேத்கர் செய்துள்ளார். கீழ்க்காணும் சொற்கள், இத்தன்மை குறித்த அம்பேத்கரின் மனநிலையைப் புரிந்து கொள்ள உதவும்.
“படையெடுப்பாளர்கள் கடைப்பிடித்த ஆட்சிமுறைகள் பல பின்விளைவுகளை இங்கு விட்டுச் சென்றுள்ளன. இவ்விளைவுகளில் ஒன்றே இந்து, முஸ்லிம்களுக்கிடையே நிலவும் கசப்புணர்வு. ஒரு நூற்றாண்டுகாலம் இணைந்து உருவான அரசியல் வாழ்க்கைக்குப் பின்னரும் தணியவோ மறக்கவோ இயலாத அளவுக்கு இக்கசப்புணர்வு ஆழமாக வேரூன்றியுள்ளது. படையெடுப்புகளின்போதெல்லாம் நடைபெற்ற கோயில்களை இடித்தல், கட்டாய மதமாற்றம், சொத்துகளைச் சூறையாடி மக்களைக் கொன்று குவித்தல், ஆண் பெண் குழந்தைகளை அடிமைப்படுத்திப் பல வகையில் இழிவுசெய்தல் போன்ற நிகழ்ச்சிகள் தலைமுறை தலைமுறையாய் நினைவில் நிற்பதன் வாயிலாகச் செருக்கடைந்துள்ள முஸ்லிம்களுக்கும் அவமான உணர்வில் மூழ்கிய இந்துக்களுக்குமிடையே நல்லுணர்வு நிலவ வாய்ப்பேதும் இல்லையன்றோ?” (தொ 24. ப 141)
இந்தப் பின்புலத்தில் பாகிஸ்தான் உருவாக்கத்தின் மூலம், எல்லைச் சிக்கல்கள், ஆதார வளங்கள் குறித்தச் சிக்கல்கள், போருக்காகப் படைகளைக் கட்டமைப்பதில் உருவாகும் நடைமுறைச் சிக்கல்கள் எனப் பல பரிமாணங்களில் பேசுகிறார். இதில் வகுப்பு நல்லிணக்கம் என்பது பெரிய அளவிலான முரணாக உருப்பெற வாய்ப்புண்டு என்று அம்பேத்கர் கருதுகிறார். பாகிஸ்தான் முஸ்லிம், இந்துஸ்தான் முஸ்லிம் என இரு பிரிவுகள் உருவாவது குறித்து இரஹமத் அலி என்பவரின் கருத்தை அம்பேத்கர் பின்வருமாறு பதிவு செய்கிறார்.
“இந்துஸ்தானப் பகுதியில் வாழும் நாலரைக் கோடி முஸ்லிம்களின் நிலைமையை பாகிஸ்தான் பிரிவினை எவ்வாறு பாதிக்கும்?
உண்மையைக் கூறப்போனால் அவர்களைப் பற்றிய சிந்தனையே, கிடுக்கிப்பிடி போன்று என்னை நெருக்குகிறது. அவர்களும் நமது குருதி, சதை மட்டுமன்றி உயிரோடு உயிராகவும் ஒன்றியவர்களே. நாம் அவர்களை மறந்துவிடுவதென்பதோ நம்மை அவர்கள் மறந்து விடுவதென்பதோ ஒருக்காலும் நடவாது. அவர்களது இன்றைய நிலையும் வருங்காலப் பாதுகாப்பும் இன்று மட்டுமன்றி என்றைக்கும் எமக்கு முக்கியமானவையே. இப்போதைய நிலையில் பாகிஸ்தான் பிரிவினையால், அவர்களது நலன்கள் பாதிக்கப்பட மாட்டா. அவர்களது மக்கள்தொகையின் அடிப்படையில் (நான்கு இந்துக்களுக்கு ஒரு முஸ்லிம்), இப்போதிருப்பதைப் போன்றே சட்டமன்றங்களிலும் ஆட்சிப் பொறுப்புகளிலும் அவர்களது பிரதிநிதிகள் இடம்பெறுவர். வருங்காலத்தில் அவர்களது நலன்களுக்கு ஒரேயொரு வகையில்தான் நாம் உறுதிகூற முடியும்; அதாவது, பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினரின் உரிமைகளுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்க மனதார உறுதியளித்துக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்துஸ்தானின் முஸ்லிம்களுக்கும் அதேபோன்ற உரிமைகளைப் பெற்றுத் தருவதுதான்.
ஆனால், எங்கள் நலன்களை எது உறுதியாகக் காக்குமெனில், நாங்கள் பாகிஸ்தான் நாட்டை உருவாக்க விரும்புவது எங்கள் மக்களின் நல்வாழ்வை நிலைநாட்டுவதற்காகவே என்பதை இந்துக்களும் அறிந்துள்ளனர் என்பதே. இதுவே எங்களது தேசிய அரண் என்றால், அவர்களுக்கும் இதுவே அறநெறி-நங்கூரம் எனலாம். இந்த நங்கூரம் உறுதியாகப் பற்றியிருக்கும்வரை, எல்லா நலன்களையும் நாம் எய்துவோம்; அது தளர நேர்ந்தால் அனைத்தையும் இழக்க நேரிடும்.” (தொ. 24, பக் 215-216)
அம்பேத்கர் உரையாடலுக்குட்படுத்தியிருக்கும் இந்நிகழ்வுகள் 1947-க்குப் பின் நிகழ்ந்த வரலாற்றைப் பார்க்கும்போது, பின்னர் வரும் நிகழ்வுகளை அம்பேத்கர் முன்னரே ஊகித்து அது குறித்த பதிவுகளைச் செய்திருப்பதைக் காண முடிகிறது.
***
பாகிஸ்தான் எனும் நாடு உருவாவதன் பல்வேறு பரிமாணங்கள் குறித்துப் பேசிய அம்பேத்கர், அவ்வாறு நிகழாது போனால், எத்தகைய நிகழ்வுகள் எதார்த்தத்தில் அரங்கேற வாய்ப்பளிக்கும் என்பது குறித்தும் பேசுகிறார். இதில் இந்துக்களே பெரும்பான்மையினராக ஆட்சி செலுத்தும் வாய்ப்பு உருவாகலாம். அல்லது முஸ்லிம்களே ஆட்சி செய்யும் வாய்ப்பும் வரலாம். இவ்வகை நிலைகளில் ஏதேனும் நிகழ்ந்தால், என்னென்ன விளைவுகள் நிகழும் என்பதையும் முன்வைக்கிறார். உலக அளவில் நடந்த இத்தகைய தன்மைகளை எடுத்துக் காட்டிப் பேசுவதையும் காண்கிறோம்.
இந்துக்களின் கருத்தைப் பேசும் லாலா ஹர்தயாள் கருத்தையும் முஸ்லிம்களின் கருத்தை முன்னிலைப்படுத்தும் மௌலானா முகமது அலி அவர்களின் கருத்தையும் மேற்கோளாக அம்பேத்கர் தருகிறார். இவ்விரு மதங்களின் அமைப்பும் தம்முள் இணைவதற்கான வாய்ப்பைப் பெரிய அளவில் தடுக்கும் சக்தியாக, இந்துக்களின் சாதி அமைப்பு இருப்பதை அம்பேத்கர் தெளிவுபடுத்துகிறார். அப்பகுதி பின்வருமாறு:
“இந்துச் சமூகம் தனது சாதி அமைப்பை உருவாக்கிய காலத்திற்குப் பின்னர், பரவும் மதமாக இருந்த இந்து மதம், பரவாத மதமாகிவிட்டது. ஏனெனில், சாதி என்பது மத மாற்றத்திற்கு ஒவ்வாததாகும். வேற்று மதத்தவரைத் தனது மதத்திற்கு மாறச்செய்வதற்கு ஒரு சமுதாயம் தனது மதக் கோட்பாடுகளை மட்டுமே வழங்குவது போதாது. வேற்று மதத்தவரை இந்து மதத்திற்கு மாறச் செய்வதற்கு ஒரு முனைப்பான மதப் பரப்பாளர் முயன்றாரேயானால், அவரை யாரும் தடுக்கமுடியாது. ஆனால், அவ்வாறு ஒரு வேற்று மதத்தவரை இந்து மதத்தவராக மாற்றுவதற்கு முன் அவர் எதிர்கொள்ளும் கேள்வி இதுதான்: மதம் மாறுபவரின் சாதி என்னவாக இருக்கும்? இந்துக்களின் நம்பிக்கையின்படி, ஒருவர் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டுமெனில், அந்த நபர் அந்தச் சாதியில் பிறந்தவராக இருத்தல் வேண்டும். மதம் மாறுபவர் அந்தச் சாதியில் பிறந்தவரல்ல. ஆகவே, அவர் எந்தச் சாதியையும் சாராதவராகிறார். இதுவும்கூட ஒரு முக்கிய சிக்கலாகும்.
அரசியல் விலங்காகவோ மத விலங்காகவோ இருப்பதைவிட கூடுதலாக மனிதன் ஒரு சமூக விலங்காகத்தான் இருக்கிறான். அவன் மதத்தைச் சாராதவனாக இருக்கலாம்; அவனுக்கு மதம் தேவையற்றதாகவும் இருக்கலாம்: அவனுக்கு அரசியல் இல்லாமல் இருக்கலாம்; அது அவனுக்கு தேவையற்றதாகவும் இருக்கலாம். ஆனால், அவன் ஒரு சமூகத்தைச் சார்ந்தவனாகத்தான் இருக்க முடியும்; சமூகம் இல்லாமல் அவனால் இருக்கமுடியாது. ஓர் இந்துவைப் பொறுத்தவரை சாதியில்லாமல் இருப்பது என்பது சமூகம் இல்லாமல் இருப்பதைப் போன்றதாகும். மதம் மாறுபவருக்கு சமூகமே இல்லாதிருக்கும்போது, எப்படி மதமாற்றம் நிகழும்? இந்துச் சமூகம் தனிப்பட்ட உரிமைகளையும் தானாகவே வளரும் சாதி அமைப்புகளையும் கொண்டு சிதறிக் கிடக்கும்வரை இந்து மதம் பரவும் மதமாக மாறமுடியாது.” (தொ 25, பக் 225-226).
இவ்வகையில் இந்துக்களிடம் உள்ள பல்வேறு கூறுகள், இந்து-முஸ்லிம் இணைவு அல்லது மதம் மாறுதல் என்பதற்கான வாய்ப்புகள் இல்லாதிருப்பதை விரிவான உரையாடலுக்குட்படுத்துகிறார். இந்தப் பின்புலத்தில் இந்து மகாசபையின் திட்டங்களைப் பேசும் வி.டி. சாவர்க்கரின் பல்வேறு கருத்துகளை விரிவான மேற்கோள்களாக அம்பேத்கர் தருகிறார். இந்து மகாசபை மற்றும் சாவர்க்கர் பதிவுகள் என்பவை இந்துக்களை முதன்மைப்படுத்தி முஸ்லிம் மக்களை இரண்டாம்தர குடிமக்களாகவே பேசுவதையும் இந்துக்களின் அதிகாரத்தின் கீழ் முஸ்லிம் மக்கள் வாழ வேண்டும் என்பதை முன்னிருத்துவதையும் அம்பேத்கர் விரிவாகப் பதிவு செய்துள்ளார். 1939 டிசம்பரில் நடைபெற்ற இந்து மகாசபையின் கல்கத்தா கூட்டத் தொடரில், சாவர்க்கர் ஆற்றிய உரையின் விரிவான பதிவை அம்பேத்கர் தந்துள்ளார். அதன் ஒரு பகுதி பின்வருமாறு:
“போலிஷ் மக்களின் நாடு போலந்து என்றும் கிரேக்கர்களின் நாடு கிரேக்கம் என்றும்தான் தொடர்ந்து அழைக்கப்படுகிறது. அங்குள்ள முஸ்லிம்கள், அந்நாட்டுப் பெயர்களை மாற்றியமைக்க முயன்றதில்லை, அவ்வாறு செய்யவும் முடியாது. ஆனால், அவர்கள் தேவைப்படும்போது தங்களை போலிஷ் முஸ்லிம்கள் அல்லது கிரேக்க முஸ்லிம்கள் அல்லது சீன முஸ்லிம்கள் என்று வேறுபடுத்திக் காட்டுவதில் மனநிறைவடைந்துகொள்கின்றனர். அதேபோல, நமது நாட்டு முஸ்லிம்களும்கூட அவர்கள் விரும்பும்போது தங்களது மதம் அல்லது பண்பாட்டுத் தனித்தன்மையை விட்டுக்கொடுக்காது, ‘இந்துஸ்தானின் முஸ்லிம்கள்’ என்று வேறுபடுத்திக் கூறிக்கொள்ளலாம். ஆனால், இந்தியாவில் தாங்களாகவே காலடி எடுத்துவைத்தது முதல், முஸ்லிம்கள் தங்களை ‘இந்துஸ்தானிகள்’ என்று ஒருபோதும் கூறிக்கொண்டதில்லை.
ஆனால், இவையெல்லாவற்றையும் மீறி நமது நாட்டு மக்களிடையே உள்ள சில மூர்க்கத்தனமான முஸ்லிம் பிரிவினர், நமது நாட்டின் இப்பெயரையே கூட எதிர்க்கின்றனர் எனும்போது, நமது சொந்த உள்ளுணர்வையே நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும். ரிக் வேத காலத்தில் வாழ்ந்த சிந்துக்கள் முதல் இன்றைய நமது தலைமுறையினரான இந்துக்கள் வரை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘இந்துஸ்தான்’ என்ற நமது தாய்நாட்டுப் பெயரின் தொடர்ச்சியைத் துண்டாடவோ அதற்குத் துரோகமிழைக்கவோ இந்துக்களாகிய நாம் ஒருபோதும் உடன்படக் கூடாது. ஜெர்மானியர்களுடைய நாடு ஜெர்மனி, ஆங்கிலேயர்களுடைய நாடு இங்கிலாந்து, துருக்கியர்களின் நாடு துருக்கி, ஆப்கன் மக்களின் நாடு ஆப்கானிஸ்தான் என்பது போல் புவியியல் வரைபடத்தில், இந்துக்களின் நாடு ‘இந்துஸ்தான்’ என்பதை காலத்தால் அழியாதவாறு பதித்திட வேண்டும்.”
(தொ. 25, பக். 24-25)
மேற்குறித்த உரையாடல் சார்ந்தும் மேலும் நூலில் அம்பேத்கர் கொடுத்துள்ள சாவர்க்கரின் விரிவான பதிவுகள் அடிப்படையிலும் இந்துப் பெரும்பான்மை சமூகத்தில் முஸ்லிம் சிறுபான்மை சமூகம் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்புகள் உருவாகுமா? என்பதை அம்பேத்கர் உரையாடலுக்குட்படுத்தியுள்ளார். இன்றைய நிகழ்வுகளைக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது, அம்பேத்கரின் நுண்ணிய அரசியல் புரிதலை அறிந்து கொள்ள முடிகிறது. இந்திய சமூகம் குறித்த ஒப்பற்ற சமூக அறிவியலாளராக அம்பேத்கர் செயல்பட்டிருக்கிறார் என்பதற்கு இந்நூல் அரிய எடுத்துக்காட்டாக இருக்கிறது.
காந்தியார், முஸ்லிம் மக்கள் குறித்தும் பாகிஸ்தான் குறித்தும் மேற்கொண்ட நிலைபாடுகளையும் அம்பேத்கர் ஆய்வுக்குட்படுத்தியுள்ளார். ‘கிலாபத் இயக்கம்’, ‘மாப்ளா கலகம்’ முதலியவற்றை காந்தி எவ்வாறு மதிப்பீடு செய்தார் என்பதையும் அம்பேத்கரின் பதிவில் காண்கிறோம். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக 1924 ஆம் ஆண்டு 21 நாட்கள் காந்தி உண்ணாநோன்பு இருந்தார். காந்தியாரின் செயல்பாடுகளை அம்பேத்கர் எவ்வாறு மதிப்பிடுகிறார் என்பதை கீழ்வரும் பகுதி மூலம் அறியமுடிகிறது.
“இந்து-முஸ்லிம் ஒற்றுமையை ஏற்படுத்துவதில் திரு காந்தி வகித்த பங்கைப் பற்றிய இந்தச் சிறு வரலாற்றுக் குறிப்பை, வகுப்புத் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் திரு காந்தியின் அணுகுமுறையை மேற்கோள் காட்டி முடித்துக்கொள்ளலாம். முஸ்லிம்களுக்கு அவர்களே நிரப்பிக்கொள்ளக்கூடிய வெற்றுக் காசோலையை வழங்கினார்; அதாவது, அவர்கள் விரும்பிய சலுகைகளை எல்லாம் வழங்கினார். அது தட்டிக்கழிக்கும் செயல் என்று முஸ்லிம்கள் கருதிய காரணத்தால் அச்சலுகைகள் அவர்களைக் கோபமடையச் செய்தன. வட்டமேசை மாநாட்டில் தனி வாக்காளர் தொகுதிகளை அவர் எதிர்த்தார். வகுப்புவாரி தீர்ப்பு முஸ்லிம்களுக்குத் தனித் தொகுதிகளை வழங்கியபோது திரு காந்தியும் காங்கிரசும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அது தொடர்பாக வாக்கெடுப்பு என்று வந்தபோது, அதை ஏற்றுக்கொள்ளவோ மறுக்கவோ செய்யாமல் ஒரு விந்தையான அணுகுமுறையை மேற்கொண்டனர்.”
(தொ. 25, பக். 71-72)
இவ்வகையில் இந்து மகாசபை சார்ந்த சாவர்க்கர், இந்து - முஸ்லிம் ஒற்றுமையை உருவாக்க முனைந்த காந்தியார் ஆகியோரின் கருத்துகளை உரையாடலுக்குட்படுத்திய அம்பேத்கர், இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த பிரித்தானிய அரசினர், இந்த நிகழ்வு தொடர்பாக எவ்வகையான அணுகுமுறையை மேற்கொண்டனர் என்பதையும் விரிவாகப் பதிவுசெய்துள்ளார். உலகத்தின் பல நாடுகளில் மதம் சார்ந்த தேசிய இனங்களுக்குள் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளை விரிவாகப் பதிவுசெய்துள்ளார். இந்தப் பின்புலத்தில் இந்து-முஸ்லிம் இணைந்த வாழ்முறை சாத்தியப்படும் என்ற நம்பிக்கையை அம்பேத்கர் முன்வைக்கவில்லை. இது குறித்த அவரது பதிவு பின்வருமாறு அமைகிறது.
“சமூக ஒற்றுமையின்றி அரசியல் ஒற்றுமையை எய்துவது இடரானது. அப்படியே எய்தினாலும்கூட, அது கோடைக்கால மரக் கன்றைப்போன்று நிலையற்றதாக, பெருங்காற்றடித்தால் வேருடன் சாயக்கூடியதாக இருக்கும். வெறும் அரசியல் ஒற்றுமையுடன் இந்தியா ஓர் அரசாகத்தான் இருக்கமுடியும். ஆனால், ஓர் அரசு ஒரு தேசமாகாது. ஆகவே, ஒரு தேசமல்லாத ஓர் அரசு, உயிர் வாழ்வதற்கான போராட்டத்தில் உயிர் பிழைத்திருக்கும் வாய்ப்புகள் மிகக்குறைவே. எல்லாக் கலப்பு நாடுகளின் அழிவிலிருந்தும் தகர்விலிருந்தும் எல்லா இடங்களிலும் தன்னை விடுவித்துக்கொள்ள, நவீன காலத்தின் இயக்காற்றல் மிக்க சக்தியான தேசியத்தன்மை விழைந்து கொண்டிருக்கிறது. ஆகவே ஒரு கலப்பான, ஒன்றிணைந்த அரசுக்கு வெளியிலிருந்து வரும் கைப்பற்றுதலால் ஏற்படும் அபாயத்தைவிட, உள்நாட்டில் துண்டு துண்டாக்கப்பட்ட, அடக்கி ஒடுக்கி ஒரே கொட்டடியில் தங்களது விருப்பத்துக்கு மாறாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தேசிய இனங்கள் புத்தெழுச்சி பெறுவதில் உள்ள ஆபத்தே அதிகம். பாகிஸ்தானை எதிர்ப்பவர்கள் இந்த ஆபத்தை மனத்தில் கொள்வதுடன் மட்டுமல்லாது, ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் ஒரு கலப்பு அரசைக் குலைத்து தங்களுக்கென்று தனியாக ஒரு தூய அரசு உருவாக்கிக்கொள்வதைக் கண்டிப்பதற்கு மாறாக, அது சுய நிர்ணயம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நியாயமானது என்பதையும் உணர வேண்டும்.” (தொ 25, பக். 122)
இந்துக்கள், முஸ்லிம் மக்கள் மீது கொண்டிருந்த பல்வேறு கருத்துநிலைகள் குறித்து விரிவாக விவாதித்த அம்பேத்கர், அதன் மறுதலையாக முஸ்லிம்கள், இந்துக்கள் சார்ந்து கொண்டிருக்கும் கருத்துகளையும் ஆய்வுக்குட்படுத்துகிறார். மேலும், முஸ்லிம் சமூகத்தில் ஒரு பிரிவினர் பாகிஸ்தான் உருவாக்கத்தை எதிர்ப்பது குறித்தும் அம்பேத்கர் பதிவு செய்கிறார். துருக்கி, செக்கோஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளில் நிகழ்ந்த இவ்வகையான மதம் சார்ந்த தேசிய இனங்களின் எழுச்சி பற்றிய விரிவான பதிவைச் செய்துள்ளார். அந்த எழுச்சி பின்னர் தோற்றுப் போனதையும் விரிவான தரவுகளோடு சொல்கிறார். எவ்வாறு இந்து ஆதிக்கம் என்று நினைக்கிறோமோ, அதற்கு முஸ்லிம் மாற்று என்பதிலும் பல்வேறு சிக்கல்கள் உருப்பெற்றுள்ள உலக நிகழ்வுகளை அம்பேத்கர் அறிமுகம் செய்கிறார். இவ்வகையில் இந்தியா என்ற நாட்டின் உருவாக்கத்தில் இந்துக்களின் பங்கு, பாகிஸ்தான் என்ற நாட்டின் உருவாக்கத்தில் முஸ்லிம்களின் பங்கு குறித்த உரையாடலின், எழுச்சி, வீழ்ச்சி ஆகியவை குறித்தப் பதிவுகளை அம்பேத்கர் செய்துள்ளார். இருப்பினும் தனது இறுதி முடிபாக பாகிஸ்தான் பிரிந்து செல்வதே சரியாக இருக்க முடியும் என்றும் பதிவு செய்கிறார். அப்பகுதி பின்வருமாறு:
“தனித்தனியாக இருக்கும்போது, ஒவ்வொன்றும் ஒரு வலுவான நன்கு பிணைக்கப்பட்ட அரசுகளாக மாறமுடியும். இந்தியாவுக்கு ஒரு வலுவான மத்திய அரசு வேண்டும். ஆனால், இந்தியாவின் ஒரு பகுதியாகப் பாகிஸ்தான் இருக்கும்வரை இந்தியா ஒரு வலுவான மத்திய அரசைக் கொண்டிருக்க முடியாது. 1935 ஆம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ளபடி கூட்டாட்சி அரசாங்கத்தின் கட்டமைப்பை ஒப்பிட்டுப் பார்த்தால், அதன்படி உருவாக்கப்பட்ட மத்திய அரசாங்கம் வலுவிழந்த, கலகலத்துப்போன, உயிர்ப்பற்ற அரசாங்கம் என்பது தெரியவரும். ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்டது போல மத்திய அரசாங்கத்தை வலுவிழக்கச் செய்வது, தன்மையிலும் அமைப்பிலும் மத்திய அரசாங்கமானது பெரும்பான்மையினராக இந்துக்களைக் கொண்டிருக்கும் என்ற அடிப்படையில், மத்திய அரசாங்கத்தின் அதிகார வரம்பிலிருந்து விடுபட்டு, சுதந்திரமாக இருக்க விரும்பும் முஸ்லிம் பிரதேசங்களை இணைக்கச் செய்யும் ஆர்வத்தினால் ஏற்பட்டதாகும். பாகிஸ்தான் உருவாகும்போது இந்தக் கருத்துகள் வலுவிழந்துபோகும். அப்போது இந்துஸ்தான் ஒரு வலுவான மத்திய அரசாங்கத்தையும் இணக்கமான மக்களையும் கொண்டிருக்க முடியும். இவை அரசின் நிலையான தன்மைக்கு இன்றியமையாத கூறுகளாகும். இந்துஸ்தானிலிருந்து பாகிஸ்தானைப் பிரிக்காத வரையில் இந்த இரண்டுமே சாத்தியமில்லை.” (தொ 25. பக். 165-166)
அம்பேத்கர் பாகிஸ்தான் என்ற பிரிவினை உருவாக்கம் சார்ந்த பல பரிமாணங்களையும் குறித்துப் பேசியுள்ளார். பிரித்தானியர் ஆட்சி செய்த இந்தியா என்ற நிலப்பகுதியை இரண்டாக்குவதன் விளைவுகள், மதம் சார்ந்த தேசிய இன உரிமைகள், அதில் இந்துக்களின் வகிபாகம், முஸ்லிம்களின் வகிபாகம், இந்த இரு குழுக்களிடையே உள்ள பல்வேறு பாரதூரங்கள், அதன் இறுதிக் கட்டமாக பாகிஸ்தான் பிரிவினை தவிர்க்க இயலாத ஒன்று என்ற கருத்துநிலையை முன்னெடுப்பவராக அம்பேத்கர் உரையாடலைப் புரிந்து கொள்ள முடிகின்றது. இவ்வாறு தனித்த தேசத்தை உருவாக்க விரும்பும் முஸ்லிம் மக்களிடம் உள்ள பலவீனங்கள் குறித்தும் அம்பேத்கர் பதிவு செய்திருக்கிறார்.
முஸ்லிம் மக்கள், சமூக அடிப்படையில் தேக்க நிலையில் இருப்பதாகக் கூறுகிறார். குறிப்பிட்ட இனக்குழுவினரிடம் சமூகத் தீமைகள் இடம் பெற்றிருப்பதாகக் கருதுகிறார். குழந்தைத் திருமணங்கள், சாதியப் பாகுபாடு, முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா முறை முதலியவற்றை ‘சமூகத் தீமைகள்’ என்று அம்பேத்கர் கருதுகிறார். இத்தீமைகளைப் போக்குவதற்கான சமூகச் சீர்திருத்தம் முஸ்லிம் மக்களுக்குத் தேவை என்றும் கூறுகிறார். இந்து சமூகத்தில் இதனைப் போன்ற தீமைகளை அகற்றுவதற்கென்று சமூகச் சீர்திருத்தவாதிகள் உருவாகியுள்ளனர். அவ்வகையான சமூகச் சீர்திருத்த ஆளுமைகள் முஸ்லிம் சமூகத்தில் உருவாகவில்லை எனும் குற்றச்சாட்டை முன்வைக்கிறார். முஸ்லிம் மக்கள் முற்போக்கான கருத்துநிலையை உள்வாங்குவதில் பின்தங்கியே இருப்பதாகவும் அம்பேத்கர் பேசுகிறார். இஸ்லாம் மதம் பல்வேறு முற்போக்குச் சிந்தனைகளை முன்னெடுத்தாலும், அதனை உள்வாங்கிச் செயல்படுபவர்களாக முஸ்லிம் மக்கள் இருக்கிறார்களா? எனும் அய்யம் எழாமல் இல்லை. புதிய அறிவியல் மாற்றங்களையும் உள்வாங்குவதில் முஸ்லிம் மக்கள் பின்தங்கியிருப்பதாக அம்பேத்கர் கருதுகிறார். முஸ்லிம் மக்களிடம் உள்ள பிற்போக்குத் தன்மைகள் எந்த அளவிலும் குறைச்சல் இல்லாமல் இந்துக்களிடமும் இடம் பெற்றிருப்பதையும் விரிவாகப் பேசியுள்ளார்.
திலகர், காந்தி முதலியவர்களின் சீர்திருத்தங்கள் குறித்து அம்பேத்கர் செய்துள்ள பதிவு பின்வருமாறு:
“திரு காந்தியின் தலைமையில் இந்துச் சமூகம் ஒரு மனநோய் மருத்துவமனை ஆகாவிட்டாலும் அரசியலுக்குப் பின்னால் மனம் பிறழ்ச்சியடைந்து ஓடிற்று என்று நிச்சயமாகக் கூறலாம். இந்துக்களின் மனத்தில் ஒரு நேரத்தில் ஆதிக்கம் செலுத்திவந்த சமூகச் சீர்திருத்தத்தின் இடத்தை ஒத்துழையாமை, சட்டமறுப்பு போன்றவையும் தன்னாட்சி முழக்கமும் ஆக்கிரமித்துக் கொண்டன. அரசியல் கிளர்ச்சியின் இரைச்சலில், சந்தடியில், குழப்பத்தில், தங்கள் சமூகத்தில் தீர்வு காணவேண்டிய, கழுவாய் தேடவேண்டிய ஏதேனும் தீமைகள் இருக்கின்றனவா என்றுகூட அவர்கள் அறியாதவர்களாக இருந்தனர். இதை அறிந்தவர்களோ, அரசியல் சீர்திருத்தத்தைப் போன்றே சமூகச் சீர்திருத்தமும் முக்கியமானது என்பதை நம்ப மறுத்தனர். சமூகச் சீர்திருத்தத்தின் முக்கியத்துவத்தை ஒப்புக்கொள்ளும் கட்டாயத்துக்கு ஆளானபோது, அரசியல் அதிகாரத்தை முதலில் பெற்றாலொழிய சமூகச் சீர்திருத்தம் சாத்தியமில்லையென வாதிட முற்பட்டனர். சமூகச் சீர்திருத்தப் பரப்புரையில்கூட பொறுமை காட்டமுடியாத அளவுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெறுவதில் அவர்கள் அடக்கமுடியாத ஆவல் கொண்டிருந்தனர். (தொ. 25, பக். 195)
இவ்வகையில் பல்வேறு பிற்போக்குத்தனங்களைக் கொண்டுள்ள இந்த இரு சமூகங்களும், தனித்தனியாகப் பிரிவதன் மூலமே, மாற்றங்களை உள்வாங்க முடியும். இல்லையேல் தங்கள் மதப் பெருமையில் மூழ்கி, சமூக முன்னேற்றம் சார்ந்த கருத்துநிலை, நிலைபெற இயலாமல் போவார்கள் என்றும் அம்பேத்கர் கூறுகிறார். தங்களுடைய தேசிய இனம் சார்ந்த விடுதலையை மட்டும் கவனத்தில் கொள்ளும் சமூகத்திற்கு, விடுதலை தருவதன் மூலம் முற்போக்கான சிந்தனை மரபை வளர்த்தெடுக்கலாம். இல்லையேல் அவர்கள் உளவியல்ரீதியாக மாறும் வாய்ப்பில்லை. இதற்கு அம்பேத்கர் தரும் பெர்னாட்ஷா மேற்கோள் பின்வருமாறு அமைகிறது:
“வெற்றி் கொள்ளப்பட்ட ஒரு தேசம், புற்றுநோய் கண்ட ஒரு மனிதனைப் போன்றது; அவனால் தனது நோயைத் தவிர வேறு எதைப் பற்றியும் நினைக்கமுடியாது. ஒரு நலமுள்ள மனிதன் தன்னுடைய எலும்புகளைப் பற்றிக் கவலைப்படாதது போன்றே கேடுகள் அற்ற ஒரு தேசமும் தனது தேசியப் பண்பு குறித்துக் கவலைப்படுவதில்லை. ஆனால், ஒரு தேசத்தின் தேசியப் பண்பை நீங்கள் சிதைத்தால், தகர்த்தால், அதனை மீண்டும் பெற வேண்டும் என்பதைத் தவிர, அதுவேறு எதைப் பற்றியும் சிந்திக்காது. அந்தத் தேசியவாதியின் கோரிக்கை நிறைவேற்றப்படாதவரை அது எந்தச் சீர்திருத்தவாதி கூறுவதையும் செவிமடுக்காது. எந்தத் தத்துவஞானி மொழியும் தத்துவத்தையும் அது ஏறெடுத்தும் பார்க்காது; எந்த மதப் போதகரின் போதனையையும் அது காதில் வாங்கிக்கொள்ளாது. ஒருங்கிணைவும் விடுதலையும் பெறும் கடமையில் தவிர, வேறு எந்தக் கடமையிலும் அது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாயினும் கவனம் செலுத்தாது, நாட்டம் கொள்ளாது” (தொ. 25, பக். 213-214).
சீர்திருத்த மனநிலை இல்லாமல் வாழும் சமூகத்திற்குள், வகுப்புவெறி வடிவம் பெறும் என்றும் அதனை மாற்றுவது அவசியம் என்றும் அம்பேத்கர் பேசுகிறார். முஸ்லிம் வகுப்புவெறி தொடர்பான விரிவான விவரணங்களை அம்பேத்கர் பதிவுசெய்கிறார். முஸ்லிம் லீக் கட்சியின் பல்வேறு தீர்மானங்களை அதற்குச் சான்றாக எடுத்துக் காட்டுகிறார். இத்தன்மைகளால், தேசிய அளவிலான மாற்றங்கள் சாத்தியப்படாமல் போகிறது. இதற்கு முஸ்லிம், இந்து ஆகிய இரு பிரிவினரும் காரணமாக அமைவதாக அம்பேத்கர் வருந்துகிறார்.
மேற்குறித்த இந்து-முஸ்லிம் செயல்களுக்கு காங்கிரசு அமைப்பின் செயல்கள் எவ்வாறு காரணமாக அமைகின்றன என்பதையும் அம்பேத்கர் பேசுகிறார். இவ்வகையான, சூழலில் இந்து–முஸ்லிம் இணைந்த அரசு என்பது சாத்தியமாகுமா? என்ற கேள்வியை அம்பேத்கர் முன்வைக்கிறார். இது தொடர்பாக, ஏராளமான நிகழ்வுகளை ஆவணப்படுத்துகிறார். இந்து- முஸ்லிம் தோல்விக்கு ஜின்னாவின் கருத்துகள் எவ்வகையான வாய்ப்பளித்தன என்பதையும் விரிவான மேற்கோளை எடுத்துத் தருகிறார். இந்தப் பின்புலங்களின் அடிப்படையில் இந்து-முஸ்லிம் ஒற்றுமைகள் என்பது அனைத்து நிலைகளிலும் சாத்தியமற்றுப் போவதைக் கூறுகிறார்.
அம்பேத்கர் தனது உரையாடல்கள் மூலமாக இந்து, முஸ்லிம் ஆகிய இருபிரிவினரிடையே உருப்பெற்று வளர்ந்திருக்கும் உளவியல் சார்ந்த கருத்துநிலை, அவர்களுக்குள் ஒற்றுமை எனும் சமூகச் சூழலை உருவாக்குமா? என்று கேள்வி எழுப்புகிறார். அது சாத்தியப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்கிறார். தவிர்க்க முடியாமல் பாகிஸ்தான் உருவாகும் என்கிறார். இதுவே பின்னர் வரலாறாகியதை நாம் கண்முன் காண முடிந்தது. இரு தரப்பினரின் அனைத்துவிதமான செயல்களையும் ஆய்வு செய்து அம்பேத்கர் செய்துள்ள உரையாடல் 1940-களில் இந்தியச் சூழலைப் புரிந்து கொள்ள உதவுகிறது. 1947 இல் பாகிஸ்தான் பிரிவினை; 1948 இல் காந்தியின் கொலை; இன்றுவரை இந்திய-பாகிஸ்தான் முரண்கள், வெறுப்பு அரசியல், இத்தன்மைகள் சார்ந்து உருவாகிய இந்துத்துவா ஆகியவற்றைப் புரிந்துகொள்ள அம்பேத்கரின் ஆய்வு உதவுகிறது.
***
பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை என்ற நூலின் இறுதிப் பகுதியில், இதற்குமுன் அவர் பேசியது தொடர்பான பிறருடைய விமர்சனங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, சுயவிமர்சனமாக எழுதுகிறார். இதில் இதுவரை பேசிய பாகிஸ்தான் பிரிவினை தொடர்பான மூன்று செய்திகளை உரையாடலுக்குட்படுத்துகிறார். அவை வருமாறு:
- பாகிஸ்தான் என்ற நாடு உருவாக வேண்டும் என்பதன் நியாயப்பாடுகள்.
- அவ்வாறு உருவாகும்போது, எவ்வகையான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும்.
- பாகிஸ்தான் உருவாவதைத் தீர்மானிப்பவர்கள் யாராக இருக்க வேண்டும்.
பாகிஸ்தான் உருவாவதில் ‘புவியியல் தொகுதி’ என்பது முதன்மையாக அமைகிறது. இத்தன்மை சார்ந்து பாகிஸ்தான் உருவாவதை யாரும் தடுக்க முடியாது. ஆனால், இப்போது இருப்பது போல் ஒற்றுமையாக இருக்க முடியாதா? எனும் கேள்வியை எழுப்புகிறார்கள். அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், உலக வரலாற்றில் அவ்வாறு நடைபெறவில்லை. வகுப்புவாதம் சார்ந்த மனநிலையில் மக்கள் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்திருக்கிறார்கள். இதற்கான எடுத்துக்காட்டுகளை உலக அளவில் அம்பேத்கர் எடுத்துக்காட்டுகிறார். எனவே, புவியியல் தகுதி என்பதை முதன்மையாகக் கருத வேண்டும் என்கிறார்.
பாகிஸ்தான் பிரிக்கப்பட்டால் உருவாகும் சிக்கல்களில் முதன்மையாக, அப்போது செயல்பட்ட இந்தியாவின் நிருவாகம் சார்ந்த பொறுப்புகள், கடன்கள் இவற்றை எப்படி முறைப்படுத்துவது என்ற சிக்கல் உருவாகும். அடுத்த நிலையில் எல்லைகளை உருவாக்குவதில் முரண்கள் வரும். இந்த முரணை எப்படி எதிர்கொள்வது என்ற உரையாடல் தேவை. இவ்வகையான சிக்கல்களில் சுயநிர்ணயம் என்பதை எவ்வாறு கண்டறிவது; பெரும்பான்மையை மட்டுமே தகுதியாகக் கொள்ள முடியுமா? இரண்டு தேசிய இனங்களும் சமமான அளவில் வாழும் பகுதிகளை எப்படிப் பங்கிடுவது? இவை அனைத்திற்குமான உரையாடல்களை நிகழ்த்துவது பற்றியும் அம்பேத்கர் பேசுகிறார். இதில் மக்கள்தொகை பரிமாற்றம் என்பது முதன்மையான சிக்கலாக அமைவது குறித்து எச்சரிக்கிறார். அம்பேத்கரின் இந்த எச்சரிக்கையை 1947 இல் இந்தியா பிரிக்கப்பட்ட போது உருவான அவலங்களின் வரலாற்றிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.
பாகிஸ்தான் உருவாகும்போது எதிர்வரும் சிக்கல்களை எதிர்கொள்ள நான்கு வழிகளை அம்பேத்கர் கூறுகிறார். அதாவது, பிரித்தானிய அரசே தீர்மானிக்கும் சக்தியாக அமைதல்; இந்துக்களும் முஸ்லிம்களும் பிரித்தானிய அரசின் முடிவை ஏற்றுக் கொள்ளல்; பன்னாட்டு நடுவர் மன்றத்தின் மூலம் நடைமுறைப்படுத்தல்; மேற்குறித்த செயல்களை நடைமுறைப்படுத்த முடியாத சூழலில் உள்நாட்டுப் போர் மூலம் இதனைத் தீர்த்துக் கொள்ளலாம் என்கிறார் (தொ. 27, ப. 726-727). இவ்வகையான செயல்கள் அயர்லாந்து போன்ற நாடுகளில் நடைபெற்றதை முன்மாதிரியாகக் கொள்ளலாம் என்றும் கூறுகிறார். இந்தியப் பிரிவினை நடைபெற்றதற்கு ஏழு ஆண்டுகள் முன்பாக, அம்பேத்கர் முன்வைத்துள்ள இவ்வுரையாடலை பிரிவினை நடந்தபோது எப்படி நிகழ்ந்தது என்ற வரலாற்றோடு இணைத்துப் பார்க்கும் தேவையுண்டு.
***
அம்பேத்கர் இந்த நூலின் முன்னுரையில் பதிவு செய்திருக்கும் கருத்தும் அதே போல முடிவுரையில் பேசியிருப்பதும் ஒரு சமூகவியல் ஆய்வாளரின் நேர்மையான அணுகுமுறையைக் காட்டுகிறது. முன்னுரை பகுதி வருமாறு:”
“எங்கெல்லாம் என் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறேனோ அங்கெல்லாம் அவற்றை வினை-விளைவுகளோடு விளக்கியிருக்கிறேன். இரண்டாவதாக, அந்தக் கருத்துகள் எத்தகையனவாயினும் அவை ஒருதலைச் சார்பாக தெரிவிக்கப்பட்டவை அல்ல. அவை உண்மையில் பரிந்துரைகளே தவிர, இறுதிக் கருத்துகள் அல்ல. வேறுவகையாகச் சொன்னால், நான் திறந்த மனமுடையவன், வறண்ட மனமுடையவனல்ல. திறந்த மனமுடையவன் எப்போதுமே பாராட்டுதலுக்குரியவன். இது உண்மையாயினும் அதே நேரம், ஒரு திறந்த மனம் வறண்ட மனமாகவும் இருக்கக்கூடும் என்பதை மறந்துவிடக் கூடாது. இத்தகைய ஒரு திறந்த மனம் ஒருவனை மகிழ்ச்சிகரமான நிலைமைக்கும் அதே நேரத்தில், அபாயகரமான நிலைமைக்கும் உள்ளாக்கலாம். வறண்ட மனதுடையவனைப் பேரிடர் எளிதாகச் சூழ்ந்துகொள்ளும். இத்தகையவன் எடைப்பாரமும் சுக்கானும் இல்லாத ஒரு கப்பலைப் போன்றவன். அது திசைவழி தெரியாது தத்தளிக்கும். அக்கப்பல் நீரில் மிதந்துசெல்ல முடியும். ஆனால், திசை தெரியாது ஏதேனும் ஒரு பாறையில் மோதி கவிழ்ந்துவிடக்கூடும்.” (தொ 24, பக். 67).
இந்த முன்னுரைப் பகுதியோடு, அவரது முடிவுரைப் பகுதியையும் இணைத்து வாசிப்பது அவசியம். அப்பகுதி வருமாறு:
“நான் இங்கு நிறுத்திக்கொள்ள எண்ணுகிறேன். ஏனெனில், நான் சொல்லவேண்டிய பொருள் குறித்து அனைத்தையும் சொல்லிவிட்டேன். சட்டமொழியில் கூறுவதானால் நான் இருதரப்பு வாதங்களையும் விவரங்களுடன் முன்வைத்திருக்கிறேன். இதைப் போதுமான அளவு விரிவாக நான் செய்துவிட்டேன். இதற்கு பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரித்தானியப் பேரரசி விக்டோரியா காலத்து வழக்கறிஞர்கள் பெரிதும் பயன்படுத்திய மிக நீண்ட வாக்கிய மொழிநடையைப் பயன்படுத்தியுள்ளேன். அவர்களது அணுகுமுறையைப் போலவே, ஒருவரை ஒருவர் வினாவுதல், விடைமொழிதல், கண்டனம் தெரிவித்தல், மறுப்புரை கூறல், எதிருரைக்கு எதிருரை, மறுப்புரைக்கு மறுப்புரை முதலிய அனைத்தும் இதில் அமைந்துள்ளன. பாகிஸ்தானுக்கு ஆதரவான வழக்கையும் எதிரான வழக்கையும் பற்றிய ஒரு முழுமையான அறிக்கையை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் திட்டமிட்டே நான் இந்த முறையைக் கைக்கொண்டேன். முந்தைய பக்கங்கள் வாதங்களைத் தருகின்றன. இப்பக்கங்களில் காணப்படும் உண்மைகள் என் அறிவுக்கும் நம்பிக்கைக்கும் எட்டியவரை உண்மையானவை. என் முடிவுகளையும் நான் தந்துள்ளேன். இனி இந்துக்களும் முஸ்லிம்களும் அவர்களுடைய கருத்தைக் கூறவேண்டும்.”
(தொ 27, பக். 67)
அம்பேத்கரின் இந்த நூலின் உரையாடல் முறையை உள்வாங்காமல், முஸ்லிம்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார் என்று இந்துத்துவ சக்திகள் அம்பேத்கரை தங்களுடன் அடையாளப்படுத்தும் அவலம் நடைமுறையில் உள்ளது. இன்னொரு பக்கம் அம்பேத்கர் முஸ்லிம்கள் பற்றிச் சொல்வதை முழுமையாக ஏற்க இயலாது என்று முஸ்லிம் ஆதரவாளர்களும் பதிவு செய்வதைக் காணமுடிகிறது. இந்துத்துவா சக்திகள், அம்பேத்கர் பேசுவதை முழுமையாக எடுத்துக் கொள்ளாமல் பகுதி பகுதியாக எடுத்து மேற்கோள் காட்டி, அவரை இந்துத்துவா ஆதரவாளர் போலச் சித்திரிக்கும் மோசடியைக் காணமுடிகிறது. இந்த வகையில் இந்த நூல் அம்பேத்கர் ஆய்வு முறை சார்ந்து சிறந்த ஒன்றாகவே அமைகிறது. அவரது ஆய்வு முறை, ஆய்வு நடை, ஆய்வுகளை முன்வைக்கும் முறை பற்றிய சித்திரங்களைக் காண விரும்புவோர், இந்நூலை வாசிப்பது அவசியம். மிக முக்கியமான ஒரு சிக்கலை எப்படி விவாதிப்பது என்பதற்கு அடிப்படையான தரவு நூலாக இதனைக் கருத முடியும்.
சான்றாதாரம்: அம்பேத்கர் மக்கள் பதிப்பு – தொகுதிகள் 24 முதல் 27 வரை.
- வீ.அரசு