art sirpamகேரளத்திலும் தமிழ்நாட்டிலும் கண்ணகி தொடர்பாகக் கிடைக்கும் கதைகளில் பொதுவான தன்மை உண்டு. இதை ஒரு கருதுகோளாகவும் கருதலாம். இவ்விரு மாநிலங்களிலும் வழக்கில் இருந்த கண்ணகி தொடர்பான செய்திகளில் சிலப்பதிகாரக் கதை இழையோடுகிறது என்பது உண்மை. இதன் அடிப்படையிலேயே கேரளத்தில் கண்ணகி வழிபாட்டை இனங்காண வேண்டும்.

தமிழகத்தில் கண்ணகி கதை தொடர்பாக 17 அம்மானைகள், இசை நாடகங்கள், 8 உரைநடை நாடகங்கள், 4 திரைப்படங்கள் ‘11 கதைப்பாடல்கள்’ நவீனப் பாடல்கள் ஆக 40 வடிவங்கள் கிடைத்துள்ளன (பி.இ. எண்: 1).

இவற்றில் சில வாய்மொழி வடிவில் உள்ளன. இந்த வடிவங்களை எல்லாம் ஒன்றாக வைத்து ஆராய்ந்தால் இவற்றிற்கெல்லாம் மூலம் புகழேந்திப் புலவரின் பேரிலுள்ள கோவிலன் கதை என்னும் அம்மானை வடிவம்தான் என்பதை நுட்பமாய் உணர முடியும்.

கேரளத்தில் கிடைத்துள்ள தமிழ் மொழியில் அமைந்த 5 கதைப் பாடல்களிலும், மலையாளத்தில் வழங்கும் 11 வாய்மொழிப் பாடல்களிலும் உள்ள (பி.இ. எண்: 2) மூலக் கதைகளுக்கும் புகழேந்தியின் - அம்மானை வடிவம் தொடர்புடையது என்பதை மறுக்க முடியாது.

புகழேந்திப் புலவர் பெயரில் உள்ள 13 மகாபாரதக் கதைப்பாடல்களும், 8க்கு மேற்பட்ட பிற அம்மானைப் பாடல்களும் கிடைத்துள்ளன. இவற்றில் பழமையானது கோவிலன் கதை. இதன் முதல் பதிப்பு 1894இல் வந்தது. இதன் பின் எத்தனையோ பதிப்புகள் வந்து விட்டன.

இந்தக் கதைப்பாடலின் ஓலைச் சுவடி ஒன்றை இன்றைய கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம் ஒரு கிராமத்திலிருந்து வையாபுரிப்பிள்ளை பெற்றிருக்கிறார். இந்த ஏடு கி.பி. 1700இல் பிரதி செய்யப்பட்டது என்பது அவரது ஊகம். எனவே புகழேந்திப் புலவர் பேரிலுள்ள கோவிலன் கதை 1700க்கு முன்பு வழக்கில் இருந்திருக்கலாம் என்பது அவரது கருத்து. (எஸ்.வையாபுரிப்பிள்ளை 1964, ப.168).

நளவெண்பா எழுதிய புகழேந்தி அல்லர் அம்மானைகள் எழுதப்பட்டதாகக் கூறப்படும் புகழேந்தி. இருவரும் வேறானவர்கள். அட்டாவ தனம் வீராசாமிச்செட்டியார்தான் அம்மானை புகழேந்தியின் பெயரை பிரபலப்படுத்தினார் என்கிறார் மு.அருணாசலம். கோவிலன் கதை முதல்பதிப்பில் புகழேந்தியின் பெயர் இல்லை. பின்னர் வந்த பதிப்புகளில் இப்பெயரை இரத்தினநாயக்கர் சன்ஸ் பதிப்பகத்தார் சேர்த்திருக்கின்றனர்.

புகழேந்தி பெயரில் உள்ள கோவிலன் கதையை எட்டு பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. இவற்றிற்கிடையே பெரிய அளவில் வேறுபாடில்லை. ஆனால் பி.ஆர்.என். சன்ஸ் பதிப்பில் (1908) வட்டபுரி அம்மன் சிறு கதைப்பாடல் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த அம்மானைப்பாடல் கண்ணகியைக் காளியாக மாரியம்மனாக பகவதியம்மனாகக் காட்டுகிறது. ஒரு கூத்து நாடகம் கண்ணகியை மலையாள பகவதி எனக் கூறும்1. புகழேந்தி அம்மானையின் காலம் எது என்பது தெரியவில்லை. இந்தக் கதைகளில் குறிக்கப்படும் பல செய்திகள் கி.பி. 15, 16ஆம் நூற்றாண்டுகளில் வழக்கில் இருந்திருக்கலாம்.

இந்த மரபு சிலப்பதிகாரக் கதையிலிருந்து உருவானது என்றாலும் இது தொடர்பான வேறுபட்ட மரபும் வழக்கில் இருந்தது. இந்த மரபு கண்ணகி கதை நிகழ்ந்த காலத்தில் உருவான தமிழ்நாட்டிலும், பண்டைய தமிழகமான கேரளத்திலும் வழக்கில் இருந்திருக்கலாம். 15, 16ஆம் நூற்றாண்டு வரை இது தொடர்ந்திருக்கலாம்.

செழிப்பு, வெப்பு நோய் தொடர்பாக வழிபாடு பெறும் பெண் தெய்வம் குறித்த செய்திகள் பரவல் தன்மையுடைதாக இருந்தன. இதை கோட்பாடாகக் கொள்ளலாம். (தே.லூர்து 1986 ப.24) இது கண்ணகி கதைக்கும் பொருந்தும்.

புகழேந்தி அம்மானையில் வஞ்சிக் காண்ட நிகழ்வு இல்லை. இதில் கவுந்தியடிகள் வரவில்லை. கேரள வாய்மொழி மரபுக்கும் இது பொருந்தும். அம்மானையில் வரும் 12 கதாபாத்திரங்களில் சிலப்பதிகாரத்தில் இல்லாதவையும் உண்டு.2

தமிழகத்தை விட கேரள மரபில் கண்ணகி தொடர்பான வாய்மொழிச் செய்திகள் அதிகம் கிடைக்கின்றன. அவற்றை முழுதும் தொகுப்பதன் மூலம் அம்மானையை ஒப்பிட்டு ஆராய முடியும். தமிழகத்தில் இப்படியான செய்திகளைத் தொகுப்பதற்கு வாய்ப்பில்லை.

கேரளத்தில் கண்ணகி தொடர்பாக தமிழில் கிடைக்கின்ற கோவலன் கர்ணகி கதை, மன்னான் கோவலன் சரித்திரம், கோவலன் கதை, கண்ணகிகதை, கண்ணகி வில்லுப்பாட்டு ஆகிய ஐந்து கதைகளும் புகழேந்தி அம்மானையின் செல்வாக்கு உடையவை. இவை தவிர மலையாளத்தில் உள்ள கண்ணகி தோற்றம் பாட்டு, சிலம்பு கதை, கோயிலாண்டி கதை, ஸ்ரீகுறும்பா கதை ஆகியவற்றிலும் புகழேந்தி அம்மானையின் செல்வாக்கு உள்ளது.

அம்மானை கோவலனைச் செட்டி எனக் கூறும்; இவனது பூர்வீகம் செட்டி என தமிழக வாய்மொழிமரபு கூறும். கோவலனின் தந்தை முத்துச் செட்டி (மாநாய்க்கன்) மாச்சோட்டன் செட்டி மரபில் வந்தவன். இவன் 16 வயதில் கொலைப்பட வேண்டும் என்பது காமதேனுவின் சாபம். கேரள வாய்மொழி மரபிலும் செட்டி எனப்படுகிறான்.

வடமலபார் கண்ணகிக் கோவில்களுடன் செட்டியார்களுக்குத் தொடர்பு உண்டு. கேரளத் தோல்பாவைக் கூத்தை நடத்திய ஆரம்பகாலக் கலைஞர்கள் செட்டி சாதியினர். இக்கலை கண்ணகி கோவில்களிலும் நடத்தப்பட்டது.

அம்மானை பாண்டியனின் மகள் காளி எனக் கூறும். இது கதையின் மையம். இதே செய்தி கேரளத் தமிழ்க் கதைகளிலும் உண்டு. அம்மானை “வலதுகால் செஞ்சிலம்பும் இடதுகை செப்பேடு கழுத்திலே பூமாலை கன்னம் வழி கட்டழகி தான் பிறந்தாள்” எனக் கண்ணகியின் பிறப்பைக் கூறும் (கோவலன் கதை 1970 ப. 10) இச் செய்தி கேரள கண்ணகி கதை ஏட்டுப்பிரதியிலும் குலசேகரம் வில்பாட்டிலும் உள்ளது.

கண்ணகி காளி, துர்க்கையின் அவதாரம். அதனால் கண்ணகி கோவலன் இருவரும் உடல் தொடர்பின்றி வாழ்கின்றனர் என்னும் மரபு கேரள வாய்மொழி மரபில் உண்டு. சிலப்பதிகாரம் கூறும் பாசண்ட சாத்தன் தேவந்தி உறவு போன்றது இது. திருவிதாங்கூர் தென்பகுதியில் கிடைத்த கோவலன் சுதையில், சேத்திரபாலனின் அம்சமாகக் கோவலனும், காளியின் அம்சமாகக் கண்ணகியும் பிறக்கின்றனர் என்ற செய்தி வருகிறது.

பாண்டியன் மதுரையின் எல்லையில் உள்ள காளி கோவிலை அடைக்கச் சொல்லுகிறான்; அங்கு விளக்கேற்றுபவன் தண்டனை பெறுவான் என்கிறான். இது அறியாத வாணியன் ஒருவன் காளி கோவிலில் விளக்கிடுகிறான்; அதனால் கொல்லப்படுகிறான். இதற்காக, காளி பாண்டியனைக் கொல்கிறேன் என்கிறாள். இது அம்மானையில் வரும் நிகழ்ச்சி (கோவலன் கதை ப.8).

இதே நிகழ்ச்சி கேரளப் பழங்குடியினரின் வாய்மொழி மரபில் வருகிறது. பாண்டியன் குழந்தை வேண்டி காளி கோவிலில் தவம் இருக்கிறான். குழந்தை பிறக்காததால் காளி கோவில் கதவை அடைக்கிறான்.

இதை மீறிக் கம்மாளன் ஒருவன் கோவிலில் விளக்கேற்றுகிறான். பாண்டியன் அவனை வெட்டுகிறான். இதனால் காளி பாண்டியனின் மகனாகப் பிறந்து பழிவாங்குகிறான் (டாக்டர் நசீம்தீன் 1992 கோவலன் சரித்திரம் ப.55).

தமிழக, கேரளக் கண்ணகி கதைகளில் காளி கோவில் கதவடைத்தல் சிலப்பதிகார மூலத்திலிருந்து கிளைத்தது. இது பராசகன் என்ற பிராமணச் சிறுவன் தொடர்பான கதை; கட்டுரை காதையில் வரும் ஐயை கோவில் கதவடைத்த கதையும் இதனுடன் ஒப்பிடத்தக்கது.

கேரள வாய்மொழி மரபு, எழுத்து வடிவக் கதைகளில் கண்ணகி பாண்டியனின் மகளாகக் குறிக்கப்படுகிறாள். தென் கேரளப் பகவதிக் கோவில்களில் கண்ணகி கதை பாடப்பட்டது. இதற்கென்று மூலப்பனுவல் இருந்தது. அம்மானை வடிவில் இருக்கும் இந்தக் கதைப் பாடலின் தொடக்கத்தில் கண்ணகியையும் கோவலனையும் பூவுலகில் பிறக்குமாறு வரமளிக்கிறான்.

கோவலன் சேத்திரபாலனின் அம்சமாகவும் கண்ணகி துர்க்கையின் அம்சமாகவும் பிறக்கிறாள் என வருகிறது (நடராஜன் கோவலன் கண்ணகி கதை 1979 ப.1). கேரளப் பழங்குடியான மன்னான் சாதியினரின் வாய்மொழி மரபில் உள்ள கோவலன் சரித்திரம் கதையிலும் பாண்டியனின் மகளாகத் துர்க்கை (கண்ணகி) பிறப்பதாக வருகிறது (டாக்டர் நசீம்தின் ப.அ. 1992 ப. 59).

கண்ணகி தோற்றம் பாட்டில் ஒரு கதை. தென் கொல்லத்தில் நாராயணன் என்ற அரசன் இருந்தான். இவன் பாண்டிய வம்சத்தினன். இவனது மகன் காளியின் அம்சம் கொண்டவள். இவளே ஸ்ரீகுறும்பா கதையிலும் காளியின் அம்சமாகக் கண்ணகி காட்டப்படுகிறாள்.

கேரளச் சுவடிப் புல ஏடு பாண்டியன் மனைவி கோப்புளாங்கியின் வயிற்றில் காளியின் அம்சமாக கண்ணகி பிறந்தான் எனக் கூறும். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் மங்கலம் கோவில் - வில்லுப்பாட்டு பாண்டியனார் - பெற்றெடுத்த கண்ணகியே தாலேலோ” என்று கூறும்.

கேரளத்துக் கண்ணகி கதைகளுடன் புகழேந்திப்புலவரின் கோவிலன் கதை முழுவதும் ஒத்து நடக்கிறது. பாண்டியன் குழந்தைக்காகத் தவமிருந்தான். அவள் மனைவி கோவிலங்கியும் தவமிருந்தாள். தவத்து இரங்கிய சொக்கலிங்கம் காளியின் உயிரை எலுமிச்சம் பழமாக மாற்றிப் பாண்டியன் மனைவியிடம் கொடுத்தான். அவர் அதை உண்டு கர்ப்பமானாள். பத்துமாதம் கழித்து கன்னம் வழி கண்ணகி பிறந்தாள் என்பது புகழேந்தி கூறும் கதை (பக். 10).

தமிழகம், கேரளம் என இரு மரபிலும் கண்ணகி. பாண்டியன் மகளாகக் காட்டப்படுகிறாள். இதற்குக் காரணம் சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதையில் கண்ணகி, செங்குட்டுவன் எடுத்த கோவிலுக்கு வந்த மக்களிடம்

தென்னவன் தீதிலன் தேவர்கோன்
தன்கோவில்
நல்விருந்து ஆயினன் நானவன்
தன்மகள்

என்கிறாள் (பாடல். 10)

இப்பகுதிக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் “முன் மானிட யாக்கையில் கொண்ட சிவப்பறித் தெய்வ யாக்கை பெறுதற்குக் காரணமாயினான் என்பது பற்றி நான் அவன் மகனென்றாள்” என்கிறார்.

கோவலனும் கண்ணகியும் காட்டுவழி மதுரைக்குச் செல்லுகின்றனர். ஒரு இடத்தில் கோவலன் அவளைத் தனியே விட்டுவிட்டு தண்ணீர் கொண்டு வரச் செல்லுகிறான். அப்போது ஏழு திருடர்கள் அவளை வழிமறிக்கின்றனர். அவனது மங்கல நாணைக் கழற்றுமாறு கட்டாயப்படுத்துகின்றனர். கண்ணகி அவர்களைக் குத்துக்கல்லாகுமாறு சாபமிடுகிறாள்.

இந்த நேரத்தில் அங்கு வந்த கோவலன் நடந்ததை அறிந்து அவர்களை மன்னித்து மறுபடியும் மனிதர்களாக்கி விமோசனம் அளிக்கக் கேட்கிறான். அவளும் இணங்குகிறாள். இப்படி ஒரு நிகழ்ச்சி புகழேந்திப் புலவன் கோவலன் கதையில் வருகிறது. (பக்.55, 56)

இதே நிகழ்ச்சி தென்திருவிதாங்கூர் குலசேகரம் மங்கலம் காளிகோவில் விழாவில் பாடப்படும் வில்லுப்பாட்டு கதையிலும் வருகிறது. வடகேரளக் கண்ணகி கதையில் இந்த நிகழ்ச்சி இல்லை. கண்ணகி திருடர்களை உப்பு பரதவர்களாகவும் ஒட்டகர்களாகவும் ஆகுமாறு சாபம் கொடுத்தாள் என ஒரு நிகழ்ச்சியை கர்ணகி கதை திருநெல்வேலி பதிப்பு கூறுகிறது - (1921 ப. 46).

இந்த நிகழ்ச்சிக்கு மூலம் சிலப்பதிகாரம் தான். இது புகார்க் காண்டம் நாடுகாண் காதையில் வருகிறது (வரி: 214-244). இங்கு கண்ணகியையும் கோவலனையும் பார்த்து வம்பப் பரத்தையும் வறுமொழியாளனும் கிண்டலாகப் பேசுவதைக் கண்ட கவுந்தியடிகள் சாபம் கொடுக்கிறாள். இக்கதையின் மாற்று வடிவங்களே புகழேந்திப் புலவரின் அம்மானையில் வருவது. நல்லதங்காள் கதை அம்மானையிலும் இப்படி ஒரு நிகழ்ச்சி உண்டு.

பாண்டியன் கோவலனைக் குற்றவாளியாகக் கருதி சோதிக்கிறான். காவலர் பல்வேறு சோதனைகளுக்குப் பின் ராஜவீதியில் அழைத்துச் சென்றனர். அவன் அநியாயமாகக் கொல்லப்படப் போகிறான் என அறிந்து விடுகிறாள் கோவிலங்கி. பாண்டியனிடம் தன் எண்ணத்தைச் சொல்லுகிறாள் (கோவலன்கதை ப. 74-76).

இதே நிகழ்ச்சி தென் கேரளக் கோவலன் கதையிலும் வருகிறது. பாண்டிமாதேவி கோவலனுக்காகப் பரிந்து பேசுகிறாள். இதைக் கேட்ட பொற்கொல்லன் “பாண்டியனே இவள் கோவலன் மேல் ஆசை கொண்டவள்; இவளை நம்பாதே” என்கிறான் (நடராஜன். 1979, ப.94).

கேரளத்து மன்னான் பழங்குடி மக்களிடம் வாய்மொழியாக வழங்கும் கோவலன் கதையில் இதே நிகழ்ச்சி வருகிறது (டாக்டர் நசீம்தீன் 1982, ப. 60-70). ஸ்ரீகுறும்பா கதையில் பொற்கொல்லன் அரசனிடம் அரசியைப் பற்றிக் கோள் சொல்லுவதாக ஒரு நிகழ்ச்சி வருகிறது; கோவலன் அழகில் அரசி மயங்குகிறாள் நம்பாதே அவளை என்கிறான்.

வடகேரள வாய்மொழி மரபில் தட்டானின் கோள் சொல்லைக் கேட்டு அரசன் அரசியைத் தண்டித்தான் என வருகிறது. இப்படியான கதை நிகழ்வு சிலப்பதிகாரத்தில் இல்லாதது. இது வாய்மொழி மரபில் இருந்து புகழேந்திப் புலவர் அம்மானையில் நுழைந்திருக்கலாம்.

புகழேந்திப் புலவன் அம்மானையில் வரும் சில செய்திகள் சிலப்பதிகார மூலத்தில் இல்லாத¬வ் கேரள தமிழ்க் கதைகளிலோ மலையாள வாய்மொழி மரபிலோ இல்லாதவை. தமிழகத்திலோ கேரளத்திலோ வட்டார அளவில் வாய்மொழி மரபில் அவை இருந்திருக்கலாம். அம்மானைப் பாடலில் பிற்காலத்தில் நுழைந்திருக்கலாம்.

கோவலனைக் கொலையாளிகள் வெட்டுகின்றனர். ஆனால் கத்தி அவன் கழுத்தில் பூமாலையாக விழுகின்றது. கொலையாளிகள் அஞ்சி ஓடுகின்றனர். கோவலன் வாளை தன் மீது பாய்ச்சிக் கொள்ளுகிறான். இது நாட்டார் கதைப்பண்பின் ஒரு கூறு. தன்னேரில்லாத காவியத் தலைவனை யாரும் அழிக்க முடியாது. அவனே விரும்பினால் மட்டுமே அது முடியும். இது போன்ற நிகழ்ச்சி கான்சாகிப் சண்டை, மதுரைவீரன் கதை, தேவசகாயம் பிள்ளை கதை போன்றவற்றிலும் வருகிறது.

இடைக்குலப் பெண் கோவலன் இறந்த செய்தியைக் கண்ணகியிடம் சொல்லாமல் மறைக்கிறாள். இதனால் கண்ணகி அவள் வீட்டை எரிக்கிறாள். பின் இடைச்சி கண்ணகியைப் பணிந்து தான் அப்படி மறைத்ததன் காரணத்தைச் சொல்லுகிறாள். கண்ணகி அவளது வீட்டை மறுபடியும் எழுப்பிக் கொடுக்கிறாள் (கோவலன் கதை ப.83). இது போன்ற ஒரு நிகழ்ச்சி மத்திய கேரள வாய்மொழி மரபில் உண்டு. குலசேகரம் வில்லுப்பாட்டில் இடைச்சிக்கு வரமளித்த செய்தி வருகிறது.

கண்ணகி பொற்கொல்லனைக் கொன்று அவனது குடலை உருவி மாலையாகப் போடுவதான நிகழ்ச்சியைப் புகழேந்திப்புலவன் அம்மானை வருணிக்கிறது (கோவலன் கதை பக்.98, 99). இதையே தென் கேரளத் தமிழ் கர்ணகை கதையும் கூறும் (1979,பக். 144).

பாண்டியனின் மகனான கண்ணகி பிறக்கும் போது கொடி சுற்றிப் பிறக்கிறாள். சோதிடர் இக்குழந்தைக்கு நாட்டுக்கு ஆகாது ஆற்றில் விட்டுவிடுங்கள் என்கிறார். இது நாட்டார் வழக்காற்றிலிருந்து செவ்விலக்கியத்துக்குச் சென்ற கதைக்கூறு. கர்ணன், வள்ளுவன், மதுரைவீரன் எனச் சிலர் கொடி சுற்றிப் பிறந்தவர்கள் என்பது வழக்காறு.

கோவலன் கதையில் கண்ணகி வட்டபுரி அம்மனாக மாறிய செய்தி வருகிறது (ப.103). கோவலன், மாதவி ஆகிய இருவரின் உடல்களை எரித்து கங்கையில் கரைத்த பிறகு கண்ணகி திருவொற்றியூர் வருகிறாள். அங்கே தியாகராஜனைக் (சிவன்) காண்கிறாள். குடிக்க நீர் கேட்கிறாள். அவர் ஒரு சுனையைக் காட்டுகிறார்.

அவள் சுனையில் இறங்குகிறாள். சிவன் பெரிய கல்லால் சுனையை மூடிவிடுகிறார். அவள் வேறு ஒரு இடத்தில் முளைக்கிறாள். அங்கும் மூடுகிறார் சிவன். அவள் வேறு இடங்களில் முளைத்து வட்டபுரி அம்மனாகக் கோவில் கொள்ளுகிறாள். சித்திரை மாதம் சிறப்பு பூசை ஏற்கிறாள்.

திருவொற்றியூர் சிவன் கோவில், உட்பகுதி வடக்கில் உள்ள துர்க்கா தேவியை வட்டபுரியம்மனாகக் கூறும் வழக்கு உண்டு. இக்கோவில் விழாவில் 15ஆம் நாள் கோவில் ஓலைப் பந்தலை எரிக்கின்றனர். இது மதுரையை எரித்ததன் அடையாளம்.

முந்திய காலங்களில் கம்மாள இளைஞனை துர்க்கா தேவிக்குப் பலி கொடுத்தனர். ஒரு முறை தமிழ்ப்புலமை பெற்ற கம்மாள இளைஞனைப் பலி கொடுக்க ஆயத்தமானபோது, அந்த இளைஞன் அம்மனைத் துதித்துப் பதிகம் பாடினாராம். அதுகேட்டு மகிழ்ந்த அம்மன் இனி நரபலி வேண்டாம் மிருகபலி போதும் என்றாளாம். இக்கோயில் சாசனம் இத்துர்க்கையை “திருவட்டப்பாறை பிடாரியார்” எனக்கூறும் (மு.ராகவையங்கார் ஆராய்ச்சித் தொகுதி,

1960 ப.239). சுடலை மாடன் ஏடு
மலையாளத்து எல்லையிலே
மயிலனையாள் வந்திருந்து
பகவதியாள் என்று சொல்லி
பட்சமுடன் பேரும் பெற்று
வட்டபுரி அம்ம னென்று
வடக்குவாய் செல்வி என்றும்
கண்ணகி தேவி என்றும்
காச்சக்கார நீலி என்றும்

கண்ணகியைப் பாராட்டுகிறது. கண்ணகி பகவதி கூத்து நாடகம் (1932) கண்ணகியை வட்டபுரி அம்மன் எனக்கூறும். இதற்கு வேறு மேற்கோளும் உண்டு (அறிவு நம்பி ப.21).

அடிக்குறிப்புகள்

1. இந்தக் கூத்து நாடகத்தை உடையார் பிள்ளை என்பவர் பதிப்பித்திருக்கிறார். பதிப்பாளர் மதுரை ராமசாமிக்கோன். இதே பதிப்பு 1928இல் இரண்டு பாகங்களாக வந்திருக்கிறது. இரண்டிலும் வேறுபாடில்லை. 1929ஆம் பதிப்பில் திருவிதாங்கூரில் நிலைகொண்ட மலையாள பகவதி கொடுங்கோளூரில் கோவில் கொண்ட மலையாளத்துக் காளி என்ற வர்ணனை இறுதிப் பகுதியில் வருகிறது.

இப்பாடல் சிறு பிரசுரமாக வந்திருக்கிறது (எம்.இ.எம். முத்துமாலையம்மன் தெரு 1929 மதுரை). இந்தச் சிறு பிரசுரத்தில் கண்ணகி கேரளத்தில் பரவலாகக் குடிகொண்டவன் என்று கூறப்படுகிறது. இந்நூலைப் பதிப்பித்த உடையார்பிள்ளை கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம், கடுக்கரை ஊரைச் சார்ந்தவர் (1875 - 1962) இவர் நவாப் ராஜமாணிக்கம் கம்பெனியில் இருந்தவர். இவர் 16க்கு மேற்பட்ட கூத்து நாடகங்களை எழுதியுள்ளார்.

2. புகழேந்திப் புலவரின் கதாபாத்திரங்கள்.

மாச்சோட்டன் - மாசாத்துவன்
வர்ணமாலை - கோவலனின் தாய்
கோவிலங்கி - பாண்டியனின் மனைவி
கர்ணகி - கண்ணகி
மாநாய்க்கனின் வளர்ப்பு மகள்
மாதகி - மாதவி
வசந்தமாலை - சித்திராபதி மாதவியின் அம்மா
வஞ்சிப்பத்தன் - பொற்கொல்லன்
ஆச்சி - மாதரி
மழுவரசர் - கோவலனைக் கொலை செய்தவர்
சுந்தரலிங்கம்
சோமலிங்கம் - வஞ்சிப்பக்தனின் மக்கள்

பின் இணைப்பு - 1

கண்ணகி கதையின் வடிவங்கள் பட்டியல்

1882 கோபால கிருஷ்ண அய்யர் (ப.ஆ) கோவிலன் கதை,
மட்டுவார் குழலாள் அச்சுக்கூடம், சென்னை.
1915 கோவலன் சரித்திரம் சே,பக்கிரியா பிள்ளை (ப.ஆ) மதுரை
1918 கோவலன் சரித்திரம் (சக்தி லோபாகாரி) இசை நாடகம்
1918 கோவலன் சரித்திரம் இராஜ வடிவேல்தாசர்
1920 கல்யாணசுந்தரம்பிள்ளை, கோவலன் சரித்திரம், எம்.இ.எம், முத்துமாலையம் தெரு, மதுரை.
1923 கோவலன் சரித்திரம், சங்கரலிங்கக் கவிராயர்
1925 கோவலன் கதை உடையார் பிள்ளை, (மதுரை ராமசாமிக்கோன் பதிப்பு)
1928 உடையார் பிள்ளை கோவலன் சரித்திரம், 1, 2 (ப.ஆ.ராமசாமிக்கோன்), எச்செல்சியார் அச்சகம், மதுரை.
1927 கோவலன் கதை, என்.எஸ்.மாணிக்கம் பிள்ளை
1932 கோவலன் நாடகம், குற்றாலம்,
1934 நவீன கோவலன் நாடம், நடராஜகவிராயர்.
1934 கோவலன் டிராமா சரஸ்வி ஸ்டோர்ஸ், கிராமபோன் ரிகார்டு.
1937 வீரபத்திரன் கோவலன் கண்ணகி நாடகம்,
பி.ஆர்.என் சன்ஸ்.
1942 சங்கரதாஸ் சுவாமிகள் கோவலன் சரித்திரம்.
1981 கோவலன் கூத்து, தெருக்கூத்து வடிவம்.
பூம்புகாரில் வாய்மொழி வடிவில் கண்ணகி கோவலன் மாதவி நல்லாள் கதை.
ஓலப்பாளையத்தில் வாய்மொழியாக உள்ள கதை.
நாடகம் (உரைநடை)
1949 சிலப்பதிகார நாடகம் (அரங்கவேங்கடாசலம் பிள்ளை)
1953 குடமலைதெய்வம் - புலவர் அரசு
1959 நாடகச்சிலம்பு - கு.திருமணி
1965 காமக்கண்ணி - டி.ஏ. ஞானமூர்த்தி
1977 சிலம்புச் செல்வி - மு.வை.அரவிந்தன்
1977 சிறுவர் சிலம்பு - அய்யாசாமி
1990 கொங்கைத்தீ - இந்திரா பார்த்தசாரதி
1993 மதுரைக் காண்டம் - எஸ்.எஸ். சிவப்பிரகாசம் (கன்னடத்திலிருந்து தமிழில்)
திரைப்படங்கள்
1933 கோவலன் - ராஜா சாண்டோ இயக்கம், நரசிம்மராவ், லீலா
1934 சம்பூர்ண கோவலன் புகழேந்தி கதை - கே.ஆர்.லட்சுமி, செல்லப்பா
1942 கண்ணகி ஜூபிடர் பிக்சர்ஸ் - பி.யு.சின்னப்பா, கண்ணாம்பா
1965 பூம்புகார் - எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி - கருணாநிதி
கண்ணகி கதைப்பாடல் வடிவில் பிற்காலத்தவை
கண்ணகி ச.து.சு. யோகிகள் 12 பாடல்கள்
கோவலன் வெண்பா - ஸ்ரீனிவாசாச்சாரியார் 290 வெண்பாக்கள்
பூம்புகார் பத்தினி - சம்பந்தம் பிள்ளை 1558 பாடல்கள்
சிலப்பதிகார செம்பொருள் காவியம் 1321 வெண்பாக்கள்
கண்ணகி வெண்பா - மு.ரா.கந்தசாமிக் கவிராயர் 300 வெண்பாக்கள்
கண்ணகி கதை - நவநீதகிருஷ்ணன்
கண்ணகி புரட்சிக் காப்பியம் - பாரதிதாசன் 281 பாடல்கள்
மாதவி காவியம் - பொன்னிவளவன்
சிலப்பதிகாரம் - ஞானமணி
விதியோ வீணையோ - தமிழொலி
சிலம்பின் சிறுநகை - சாலை இளந்திரையன்

பின் இணைப்பு எண் - 2

கேரளத்தில் கண்ணகி தொடர்பான கதைகள்
தமிழில் அமைந்த கதைப்பாடல்கள்
கோவலன் கண்ணகி - நடராஜன் பதிப்பு 1979
மன்னான் கோவிலன் கதை - டாக்டர் நசீம்தீன் 1992
கண்ணகி கதை 2000 பதிப்பு
கேரளம் சுவடிபுல ஏடு
குலசேகரம் பத்திரகாளி கோவிலில் பாடப்பட்ட வில்லிசைக் கதை வாய்மொழி வடிவில்
மலையாளக் கதைகள் (வாய்மொழி மரபு)
கோவலன் சிலம்பு வில்கான் போய கதா - கேரளம் வடபகுதி தோற்றம்பாட்டு கொல்லம்
கோயிலாண்டி அம்மன்கதை - புகழேந்திப் புலவர் கதையை ஒத்தது செட்டியார் மரபினர் பாடுவது
ஸ்ரீ குறும்பா கதை
ஆவியர் பாட்டு
மரக்கால் பாட்டு
கட்டப்படி இருளர் கதை
நல்லம்மா கதை
பாலக்காடு சித்தூர் வண்ணாரிடம் வழங்குவது
கண்ணகி தோற்றம் பாட்டு கொடுங்கல்லூர் வடிவம்
ஆற்றுக்கால் கோவிலில் (திருவனந்தபுரம்) பாடப்படும் வடிவம்
மணிமங்கலம் தோற்றப்பாட்டு.

துணை நூற்கள்

• அறிவு நம்பி (1980) கூத்தும் சிலம்பும் அறிவகம், காரைக்குடி.

• இராகவையங்கார். மு (1964) ஆராய்ச்சித் தொகுதி, பாரி நிலையம், சென்னை.

• கிருஷ்ணன் குட்டிப்புலவர் செ.எல் (1983) அயோத்தி காண்டம் சங்கீத நாடக அகதமி புதுதில்லி

• சாமிநாத அய்யர் உ.வே.சா. 1960 சிலப்பதிகார மூலமும் அரும்பத உரையும் அடியார்க்கு நல்லார் உரையும் சென்னை.

• டாக்டர் நசீம்தீன் 1992 கோவலன் சரித்திரம் அன்னம் ‘சிவகங்கை’ புகழேந்திப்புலவர், 1962 கோவலன் சரித்திரம் சென்னை.

• வையாபுரிப்பிள்ளை (1962) இலக்கிய மணிமாலை, தமிழ்ப் புத்தகாலயம் சென்னை.

- அ.கா.பெருமாள்

Pin It