தமிழகத்தில் சமீப காலமாக சாதீயப் பெருமித வரலாறுகளைக் கட்டமைப்பதில் ஒவ்வொரு சாதியினருக்கும் இடையே பெரும் போட்டியே நிலவிக் கொண்டிருக்கிறது. வரலாற்றைத் திரிப்பதில் சாதியவாதிகள் காட்டும் முனைப்புகள் வரலாற்றுத் துறையை மலினப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் போர் குறித்து வரலாறு என்ற பெயரில் சாதியவாதிகளால் பரப்பப்படும் கதைகள் விவாதத்திற்கு உரியவையாக மாறியிருக்கின்றன.

De Lannoy Surrenderதிருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 1741 ஆம் ஆண்டு நடைபெற்ற குளச்சல் போரில் டச்சு படைகள் தோற்கடிக்கப்பட்ட வரலாற்றை தங்களது சாதியினரின் சாதனையாகவும், தங்களது சாதியைச் சேர்ந்த அனந்த பத்பநாபன் என்பவர் தலைமையிலேயே டச்சுப் படைகள் தோற்கடிக்கப்பட்டதாகவும் சில நாடார் சாதிய அமைப்புகள் தொடர்ந்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. ‘டச்சுப் படையை வென்ற மாவீரன்’ என்ற அடைமொழியோடு கடந்த சில ஆண்டுகளாக ‘அனந்த பத்பநாப நாடார் குருபூஜை’ என்ற பெயரில் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

அனந்த பத்ம‌னாபனைக் குறித்த வரலாற்று ஆதாரங்களாக ஒரு செப்பேடு ஒன்றும், ‘ஓட்டன் கதை’ எனும் கதைப்பாடலும் முன்வைக்கப்படுகின்றன. கொல்லம் ஆண்டு 923 (கி.பி.1748) வேணாடு மன்னர் ஆழினம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவால் அனந்தனுக்கு செப்புப் பட்டயம் ஓன்று வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது அந்த செப்பேடு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தச்சன்விளை பகுதில் வாழும் அனந்த பத்மநாபனின் வம்சாவழியினரின் கைவசம் உள்ளது. மார்த்தாண்ட வர்மாவிற்கும் அவரது எதிரிகளுக்குமிடையே நடந்த வாரிசுரிமை கலகத்தைப் பற்றி பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘ஓட்டன் கதை’ எனும் கதைப்பாடலிலும் அனந்த பத்மநாபனைப் பற்றி சில தகவல்கள் கூறப்பட்டிருக்கின்றன. 1982 ஆம் ஆண்டு ப.சர்வேஸ்வரன் எனும் பேராசிரியரால் ‘ஓட்டன் கதை’ புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்டது. இந்த செப்பேடு மற்றும் கதைப்பாடல் வாயிலாக அனந்த பத்மனாபனைப் பற்றி அறிய வரும் தகவல்களையும், அதனோடு தொடர்புடைய வரலாற்றையும் சுருக்கமாகக் காண்போம்.

வேணாடு மன்னராக இருந்த ராம வர்மா 1729 ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு மரணமடைந்ததை அடுத்து, வேணாட்டு அரச குடும்பத்தினர் பாரம்பரியமாக கடைப்பிடித்து வரும் ‘மருமக்கத்தாயம்’ வாரிசுரிமைப்படி மன்னரின் சகோதரி மகனான மார்த்தாண்ட வர்மா அதிகாரத்திற்கு வருகிறார். இதற்கு எதிராக ராமவர்மாவின் மகன்களான பத்ம‌நாபன் தம்பி மற்றும் ராமன் தம்பி ஆகிய இருவரும் கலகத்தில் இறங்கியதால் உள்நாட்டுப் போர் மூண்டது. தம்பிமார் என்றழைக்கப்பட்ட இருவரும் மருமக்கத் தாயத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து மன்னரின் மூத்த வாரிசான பத்மநாபன் தம்பியை மன்னராக்க வேண்டும் என்று உரிமை கோரினர். வேணாட்டில் அரச குடும்பத்திற்கு அடுத்தபடியாக அதிகார நிலையில் இருந்த ‘எட்டு வீட்டுப் பிள்ளைமார்’ எனும் நிலப்பிரபு குடும்பங்கள் தம்பிமாரை ஆதரித்ததால் இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். மார்த்தாண்ட வர்மாவை கொலை செய்ய முயற்சிகள் நடந்ததால் அவர் சில காலம் தலைமறைவாகவும் இருக்க நேரிட்டது.

தம்பிமாருக்கு ஆதரவாக படையுடன் வந்த நெல்லையைச் சேர்ந்த நாயக்கர் தளபதி அழகப்ப முதலி என்பவர் இரு தரப்பினருக்குமிடையே சமரசம் செய்து வைத்தார். ஆனால் உடன்பாட்டை ஏற்க மறுத்த மார்த்தாண்ட வர்மா தனது ஆதரவாளர்கள் மூலம் தம்பிமார் இருவரையும் கொலை செய்துவிட்டார். தம்பிமாருக்கு ஆதரவளித்தவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்ட மார்த்தாண்ட வர்மா, பிற குறுநில அரசுகளைத் தோற்கடித்து நாட்டை விரிவுபடுத்தியதால் திருவிதாங்கூர் சமஸ்தானம் உருவானது.

வாரிசுரிமை கலகத்தின்போது, அன்றைக்கு சாணார் என்று அறியப்பட்டிருந்த நாடார் சமூகத்தைச் சேர்ந்த சில களரி ஆசான்கள் மார்த்தாண்ட வர்மாவுக்கு ஆதரவாக படை திரட்டிக் கொடுத்திருக்கின்றனர். அத்தகைய களரி ஆசான்களுள் முதன்மையானவராக அனந்த பத்மநாபனைக் குறிப்பிடலாம். மார்த்தாண்ட வர்மாவை கொலை செய்ய தம்பிமார்களின் ஆதரவாளர்கள் நடத்திய சில முயற்சிகள் அனந்த பத்மநாபனால் முறியடிக்கப்பட்டிருக்கிறது. எதிரிகளிடமிருந்து தனது உயிரைக் காப்பாற்றிய ஆனந்தனுக்கு மார்த்தாண்ட வர்மா செப்புப் பட்டயம் ஒன்றை வழங்கியிருக்கிறார். அதை ஓட்டன் கதை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது: ...‘ தீரன் ஆனந்தனை வருத்தி இறையிலி நிலங்கள் பட்டயமும் கொடுத்து அனந்த பல்பனாபன் என்ற பெயரும் சூட்டி அரண்மனையில் அவர் சொந்த பாதுகாவலாக்கிறார்’..... தன்னுடைய மெய்க் காவலராக அனந்த பத்மநாபனை மன்னர் நியமித்ததாக இந்த கதைப்பாடல் தெரிவிக்கிறது.

மன்னர் அனந்தனுக்கு வழங்கிய செப்பேட்டில், "நீ நம்முடைய உற்ற பெந்துவும் வலக் கையுமாகவே தினம் தினம் ராப்பகல் ஊணும் உறக்கமும் ஒழிஞ்ஞு நம்முடைய குணதோஷங்களில் பங்கு கொண்டும் ஒரு மெய்யாய் நின்று சத்துரு நிக்கிரகத்திலும் படையோட்டங்களுக்கும் மனசறிஞ்ஞு சகாயிச்சும் பலப்பொழுதும் நம்முடைய ஜீவனை ரெக்ஷிச்சு நடந்து வந்திருந்த மகிமையையும் தீரதையையும் அடிஸ்தானமாக்கி நமக்குண்டான அதிரற்ற சந்தோஷத்தினால் கரமொழிவாகவிட்டு கொடுக்கிறேன்" என்று கூறியிருப்பதிலிருந்து, மன்னரின் மெய்க் காவலராக அனந்தன் பணியாற்றியிருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது. எதிரிகளிடமிருந்து மன்னரின் உயிரை அனந்தன் காப்பாற்றியிருப்பதும், மன்னரின் படைகளுக்கு உதவிகள் செய்திருப்பதும் தெரிய வருகிறது. அத்துடன் பேச்சிப்பாறை அருகே 32,000 தண்ணு சுற்றளவு கொண்ட நஞ்சை நிலங்களை கரமொழிவு(வரி விலக்கு) தானமாகவே அனுபவித்துக் கொள்ளுமாறும் இந்த செப்பேட்டில் கூறப்பட்டிருக்கிறது.

அனந்த பத்மநாபனைப் பற்றிய ஆதாரங்களாக முன்வைக்கப்படும் இந்த செப்பேடு மற்றும் கதைப்பாடலில், மார்த்தாண்ட வர்மாவின் தளபதியாக அனந்தன் பணிபுரிந்ததாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. மார்த்தாண்ட வர்மாவின் ஆட்சிக் காலத்தைப் பற்றி குறிப்பிடும் வேறு எந்த ஆவணங்களிலும், அனந்த பத்மநாபன் என்பவர் மன்னரின் தளபதியாக பணிபுரிந்ததாக எந்தவித சான்றும் இல்லை. ஆனால் வேணாட்டின் முதன்மைத் தளபதியாக அனந்த பத்மநாபன் பணிபுரிந்ததாக சாதியவாதிகள் தொடர்ந்து கோமாளித்தனமான பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். குளச்சல் போரோடு அனந்தனை தொடர்புபடுத்திக் கூறுவதற்கும் எந்தவித ஆதாரமும் இல்லை.

களரி வீரர்கள்

பாரம்பரியமான சண்டைப் பயிற்சிகளை பயிற்றுவிக்கும் இடத்தை களரி என்பார்கள். நாடார் சமூகத்தினரிடையே வழக்கில் இருந்து வந்த களரிப் பயிற்றை தெக்கன் களரி என்றும், ஈழவர் சமூகத்தினரின் களரிப் பயிற்றை வடக்கன் களரி என்றும் அழைப்பர். களரி பயிற்றுவிப்பவர் ஆசான் என்றும், பணிக்கன் என்றும் அழைக்கப்படுவார். இடைக்காலத்தில் வேணாட்டில் ஓர் ஆதிக்க சாதியாக உருவெடுத்த நாயர் சமூகத்தினர் மன்னர்களுக்கு முதன்மை படை சேவையை அளிப்பவர்களாகவும், உள்ளூர் நிர்வாக அதிகாரங்களைப் பெற்றவர்களாகவும் இருந்தனர். தங்களுக்கென தனிக் களரிகளைக் கொண்டிருந்த நாயர்கள் தங்களது களரி ஆசானை குறுப்பு என்றழைப்பர். யுத்த காலங்களில் நாயர் படையுடன் பிற சமூகங்களிலிருந்தும் வீரர்கள் திரட்டப்படுவது வழக்கம். வேணாட்டில் பதினெட்டாம் நூற்றாண்டு வரைக்கும் போர்க் காலங்களில் நாயர் படையினருக்கு அடுத்தப்படியாக நாடார் மற்றும் ஈழவர் சமூகத்தினரிடமிருந்து அதிகப்படியான வீரர்கள் திரட்டப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. வேணாட்டு மன்னர்கள் நெல்லைச் சீமையிலிருந்து மறவர் படைகளையும், அவர்களது குதிரைப் படையையும் கூடுதல் படைத் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்வதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். ஐரோப்பிய பாணியிலான இராணுவக் கட்டமைப்பிற்கு திருவிதாங்கூர் மாறிய பிறகு பாரம்பரியமான களரிகள் வழக்கொழிந்து போய்விட்டன.

‘மார்த்தாண்ட வர்மா’ நாவல்

இன்றைக்கு அனந்த பத்மநாபன் என்ற பெயருக்குப் பின்னால் நாடார் என்ற பெயர் அழுத்தமாக கூறப்படுவதற்கு வேறு சில பின்னணிகளும் உண்டு. மார்த்தாண்ட வர்மாவிற்கும் தம்பிமாருக்குமிடையேயான வாரிசுரிமைத் தகராறை மையப்படுத்தி சி.வி.ராமன் பிள்ளை என்ற எழுத்தாளரால் எழுதப்பட்ட ‘மார்த்தாண்ட வர்மா’ எனும் பிரபல மலையாள நாவலானது 1891 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த நாவலில் அனந்த பத்மநாபன் எனும் கதாப்பாத்திரத்தை ஓர் அமானுஷ வீரரைப்போல் நாவலாசிரியர் சித்தரிக்கிறார். மார்த்தாண்ட வர்மாவை கொலை செய்ய எதிரிகள் முற்றுகையிடும் போதெல்லாம் அங்கே அனந்த பத்மநாபன் உடனடியாகத் தோன்றி எதிரிகளைப் பந்தாடிவிடுவதாக கதை போகிறது. அனந்தனை நாவலாசிரியர் திருமுகத்துப் பிள்ளை என்பவரின் மகன் என்றும், ‘பிராந்தன் சாணான்’ என்ற புனைப் பெயரில் அனந்தன் மாறுவேடமிட்டு நடமாடியதாகவும் நாவலில் குறிப்பிடுகிறார். இவ்வாறு இந்த நாவல் மூலம் அனந்த பத்மநாபன் என்பவர் நாயர் சமூகத்தைச் சேர்ந்தவராக அடையாளப்படுத்தப்பட்டது. இன்றைக்கும் அனந்தனை நாயர் சமூகத்தைச் சேர்ந்தவர் என வாதிடுபவர்களும் உள்ளனர்.

அனந்தனின் வம்சாவழிகள்

perunthalaivar makkal katchi posterகுமரி மாவட்டத்திலுள்ள தச்சன்விளை பகுதியில் வாழ்ந்து வரும் அனந்தனின் வம்சாவழியினர் மார்த்தாண்ட வர்மா காலத்தில் அனந்தனுக்கு ஏராளமான நிலங்கள் தானமாக வழங்கப்பட்டதாகவும், அந்த நிலங்களை பிறர் அபகரித்துவிட்டதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். நிலங்களை மீட்டுத் தரக் கோரி அவர்கள் 1950 ஆம் ஆண்டு முதல் மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து மனுக்கள் அனுப்பியிருப்பதை அவர்கள் வெளியிட்டிருக்கும் புத்தகங்களிலிருந்து அறிய முடிகிறது. அனந்தனின் வம்சாவழியைச் சேர்ந்த கெ.பி. வரதராஜன் என்பவர் அனந்த பத்மனாபனைக் குறித்து கட்டுரைகளையும், புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறார். அவரது கட்டுரைகள் ஆய்வுப் பூர்வமாக இல்லாமல் வெறும் புனைவாகவே காணப்படுகின்றன.

குளச்சல் போருடன் அனந்தனை தொடர்புபடுத்திவிட்டால் ஐரோப்பியர்களுக்கு எதிராகப் போராடிய சுதந்திர போராட்ட வீரர்கள் வரிசையில் அவரைக் கொண்டுவந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். இதற்காகவே கெ.பி.வரதராஜன் 1999 ஆம் ஆண்டு ‘குளச்சல் போர்’ என்ற பெயரில் ஒரு சிறு பிரசுரத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார். அந்தப் புத்தகத்தில் அனந்தன் போரில் எதிரிகளை வீழ்த்திய விதம் குறித்து நூலாசிரியர் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்:

"போர் முகத்தில் அனந்தனும் எட்டு ஆசான்களும் காட்டிய தீரச் செயலைப் பார்த்தால் இந்த வையகமே அரண்டுவிடும், நடுங்கிவிடும். அவ்வளவு மாயா மந்திர தந்திர ஜாலம் காட்டி டச்சுப் படையினரைக் குருடாக்கி விட்டனர். டச்சுப் படையினரின் துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் செயலிழக்கச் செய்தனர். துப்பாக்கிச் சத்தமோ பீரங்கி சத்தமோ குளச்சல் போரில் கேட்டதில்லை.ஆசான்களின் ஆத்ம சக்தியினால் டச்சுப் படையினர் ஸ்தம்பனமாகி கற்சிலைகள் போன்று காட்சியளித்தனர். இப்போரில் யாரும் ரத்தம் சிந்தவோ பலியாகவோ இல்லை என்பது உறுதியிலும் உறுதியே. இதுதான் உண்மையுமாகும். கைதியாகப் பிடிக்கப்பட்ட டிலனாயின் மனமோ மாறிவிட்டது. குளச்சல் போரில் ஆசான்கள் காட்டிய மாயமந்திர ஜாலங்களைப் பார்த்து பிரமித்துவிட்டார்."

இப்படித்தான் வரலாறு எழுதுகிறோம் என்ற பெயரில் கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். குளச்சல் போரின்போது கடற்கரையில் மாட்டு வண்டியை சாய்வாக நிறுத்தி அதன்மீது பனந்தடியை வைத்து பீரங்கி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி டச்சுப் படையை திருவாங்கூர் படை ஏமாற்றியதாக, ஒரு தகவல் புழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த ஒரு தகவலை மட்டுமே கருவாகக் கொண்டு பனந்தடிகளை வைத்துதான் ஒட்டுமொத்த குளச்சல் போரே நடந்ததாக சாதிய அபிமானிகள் தங்கள் கற்பனையைத் தட்டிவிட்டு புதுப்புது கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் அனந்த பத்மநாபன் தலைமையில்தான் பனந்தடிகளை வைத்து போர் நட ந்ததாகவும் சிலர் கட்டுரைகளை எழுதியிருக்கின்றனர்.

குளச்சல் போர் நடைபெற்ற சமயத்தில் பதிவான டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் அறிக்கைகள், இரண்டு மாத காலம் போர் நடந்ததாகவும் இரு தரப்பினரும் பீரங்கிகளையும் துப்பாக்கிகளையும் கொண்டு கடுமையாக மோதிக்கொண்டதில் உயிரிழப்புகள் நேர்ந்ததாகவும் குறிப்பிடுகின்றன. ஆனால் இங்கே மாயாஜால மந்திர வித்தைகள் காட்டி போர் நடந்ததாகவும், பனந்தடிகளைப் பார்த்து பயந்து போய் டச்சுப் படைகள் சரணடைந்துவிட்டதாகவும் பாமரத்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மத்திய அரசின் பள்ளி பாடத் திட்டத்தில் நாடார் சமுதாயத்தைப் பற்றி தவறான தகவல் இடம் பெற்றிருப்பதாக குற்றம் சாட்டிய சில சாதி அமைப்புகள், கடந்த 2012 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் பல கண்டனக் கூட்டங்கள் நடத்தி சர்ச்சைக்குரிய பாடப் பகுதிகளை நீக்க வேண்டுமென வலியுறுத்தி வந்தன. இத்தகைய கூட்டங்களில்தான் அனந்த பத்மநாபனைப் பற்றி அதிகமாகப் பேசப்பட்டன. இந்த பின்னணியில்தான் அனந்த பத்மநாப‌னின் நினைவாக விழாக்களும் நடத்தப்பட்டன. விழாக்களை நடத்தியோர் குளச்சல் போரானது அனந்த பத்மநாபன் தலைமையில் நடந்த போராக தொடர் பிரச்சாரங்களைச் செய்து வந்தனர். தங்களது பிரச்சாரங்களுக்கு அரசியல்ரீதியான அங்கீகாரத்தையும் பெறவும் முயற்சித்தனர். குளச்சல் போரில் டச்சுப் படைகளை தோற்கடித்த அனந்த பத்மநாபனுக்கு அரசு சார்பில் மணிமண்டபம் கட்டித் தருமாறு தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகளையும் முன்வைத்தனர். கடந்த 2015ஆம் ஆண்டு தமிழக அரசின் செய்தித்துறை சார்பில் இந்தக் கோரிக்கை தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனந்த பத்மனாபனைப் பற்றி கூறப்பட்ட தகவல்களுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்துவிட்டது.

குளச்சல் போரும் கட்டுக்கதைகளும் :

கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் போரைப் பற்றி விதவிதமான கட்டுக்கதைகள் தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன. இந்த மாவட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் ஒரு புனிதராகக் கருதப்படும் தேவசகாயம் பிள்ளை என்பவர் குளச்சல் போரை நடத்தியதாகவும் கதைகள் கூறப்படுகின்றன. நாயர் சமூகத்தைச் சேர்ந்த இவர் நீலகண்ட பிள்ளை எனும் இயற்பெயரை உடையவர். இவர் கிறிஸ்தவ சமயத்தை தழுவியதற்காக மன்னரின் கோபத்திற்கு ஆளாகி கொலை செய்யப்பட்டவர். இவரைப் பற்றி வேத சாட்சியின் துயரப்பாடுகள் எனும் பழைய கதைப்பாடல் ஓன்று உண்டு. இந்த கதைப்பாடலில், நீலகண்ட பிள்ளை டச்சுத் தளபதி டிலனாயை குளச்சல் போரில் கைது செய்து பிடித்து வந்ததாக கூறப்பட்டிருக்கிறது. இந்த கதைப்பாடலை தழுவி எழுதப்பட்ட தேவசகாயம் பிள்ளை நாடகங்களிலும் இத்தகைய காட்சிகள் அரங்கேற்றப்பட்டதால், குளச்சல் போரானது தேவசகாயம் பிள்ளையால் நடத்தப்பட்டதாக மக்கள் மத்தியில் பரவலாக நம்பப்பட்டது.

மார்த்தாண்டவர்மா ஆட்சி காலத்தில் மறவர் படைத் தலைவராக இருந்த பொன்பாண்டித் தேவர் என்பவரே குளச்சல் போரில் வெற்றியைத் தேடி தந்தவர் எனும் பிரச்சாரமும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இவரைப் பற்றி குமரி மாவட்டத்தில் வாழும் தேவர் சமூகத்தினரால் கடந்த 2006 ஆம் ஆண்டு ‘மறக்கப்பட்ட மாவீரன் பொன்பாண்டித் தேவர் வீர வரலாறு’ எனும் நூல் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தில் பொன்பாண்டித் தேவன் தலைமையிலான குதிரைப் படையினர் டச்சு தளபதி டிலனாயை கைது செய்து மார்த்தாண்டவர்மாவின் முன்பாக சரணடைய வைத்ததாக கதையளக்கப்பட்டிருக்கிறது. திருவிதாங்கூர் அரண்மனையில் வைக்கப்பட்டிருக்கும் குளச்சல் போரை சித்தரிக்கும் பழைய ஓவியம் ஒன்றிலிருந்து ஒரு போர் வீரரின் உருவத்தை எடுத்து, அந்த உருவத்தை பொன்பாண்டித் தேவர் எனக் கூறி இந்தப் புத்தகத்தின் அட்டையில் அச்சிட்டிருக்கிறார்கள். இந்த புத்தகத்திற்குப் போட்டியாக அனந்த பத்மநாபன் ரசிகர்கள் ஒரு புத்தகத்தை எழுதி, அந்த ஓவியத்திலிருக்கும் உருவமானது அனந்த பத்மனாபனைக் குறிப்பதாகக் கூறி அதே உருவத்தை தங்களது புத்தகத்தின் அட்டையிலும் அச்சிட்டிருக்கிறார்கள்.

குளச்சல் போரை சித்தரிக்கும் அந்த ஓவியமானது பத்தொன்பதாம் நூற்றாண்டில் வரையப்பட்டதாகும். 1878 ஆம் ஆண்டு வெளிவந்த சங்குண்ணி மேனனின் திருவிதாங்கூர் சரித்திரம் நூலில் குளச்சல் போர் குறித்து கூறப்பட்ட தகவல் அடிப்படையில் இந்த ஓவியம் வரையப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஓவியத்தில் ஓவியர் பெயர் குறிப்பிடப்படவில்லை. கடற்கரைப் பகுதி ஒன்றில் மார்த்தாண்ட வர்மா சிம்மானத்தில் வீற்றிருக்கிறார். அவரது முன்பாக டச்சு வீரர்கள் மண்டியிட்டு சரணடைகிறார்கள். ஒவ்வொரு டச்சு வீரரின் அருகிலும் உள்நாட்டு வீரர் ஒருவர் கையில் வாள் ஏந்தியபடி காவல் காப்பதாக ஓவியம் சித்தரிக்கிறது. அதில் முதலாவதாக நிற்கும் உள்நாட்டு வீரரின் உருவம் பெரிதாக காட்டப்பட்டிருக்கிறது. அந்த உருவத்தையே சாதியவாதிகள் நாடார் என்றும் தேவர் என்றும் உரிமை கோருகிறார்கள். உள்நாட்டுப் போர் வீரர் ஒருவரின் மாதிரி தோற்றத்தையே அந்த ஓவியர் சித்தரிக்க முயன்றிருக்கிறார். அந்த ஓவியருக்கு பொன்பாண்டித் தேவனைப் பற்றியோ அல்லது அனந்த பத்மநாபனைப் பற்றியோ ஏதேனும் தெரிந்திருக்குமா என்பதே சந்தேகம்தான்.

மண்டைக்காட்டைச் சேர்ந்த கெ.திரவியம் என்ற பேராசிரியர் எழுதிய ‘டச்சுப்படை வென்ற குமார உதய மார்த்தாண்டன் நாடார்’ எனும் நாவல் 1987 ஆம் ஆண்டு வெளிவந்தது. தனது முன்னோரான உதய மார்த்தாண்டன் என்பவரே குளச்சல் போரை நடத்தி டினலாயை கைது செய்ததாக கெ.திரவியம் நம்புகிறார். அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்த அவரிடம் ஆதாரங்கள் எதுவும் இல்லாததால், தனக்கு விருப்பமான விதத்தில் ஒரு வரலாற்றைக் கட்டமைத்து அதை ஒரு நாவலாக எழுதியிருக்கிறார். நாவலாசிரியரிடம் வெளிப்படும் அதீதமான சாதிய சார்பும், மிதமிஞ்சிய கற்பனைகளும் நகைச்சுவை மிகுந்தவை. ஏதேனும் காமெடி நாவல் வாசிக்க விரும்புபவர்கள் கட்டுரைத் தன்மையுடன் இருக்கும் இந்த நாவலை ஒருமுறை சிரமப்பட்டு வாசித்துப் பார்க்கலாம்.

A History of Travancore from the Earliest Timesகுளச்சல் கடற்கரையில் வசிக்கும் மீனவ சமூகத்தினரும் தங்களது முன்னோர்கள் இந்த போரில் முக்கிய பங்கு வகித்ததாக கட்டுரைகளை எழுதி வருகின்றனர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மெல்வின் வினோத் என்பவர், மீனவர்களின் கடற்படை டச்சு கப்பல்களை எதிர்த்து கடலுக்குள் சென்று போர் புரிந்ததாகவும், மீனவர்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாத டச்சுப் படையினர் மீனவர்களிடத்தில் சரணடைந்ததாகவும் புதுப் புது கதைகளை பரப்பி வருகிறார். குமரி மாவட்டத்தில் குளச்சல் போர் குறித்து பரப்பப்படும் கட்டுக்கதைகளை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமெனில், நாகர்கோவிலைச் சேர்ந்த திருத்தமிழ் தேவனார் எழுதிய ‘ குளச்சல் போர் – கட்டுக்கதைகளும் கற்பனைக் குதிரைகளும்’ எனும் நூலை வாசித்துப் பார்க்கலாம்.

குளச்சல் போரும் ஆதாரங்களும் :

குளச்சல் போர் நடைபெற்ற காலகட்டத்தில் திருவிதாங்கூர் தரப்பினர் போரைக் குறித்து தெளிவான விபரங்களை பதிவு செய்திருக்கவில்லை. ஒரு சில ஓலைச்சுவடி குறிப்புகள் உள்ளதாக சங்குண்ணி மேனன் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தினர் குளச்சல் போரைப் பற்றிய விரிவான தகவல்களை தங்களது அறிக்கைகளில் பதிவு செய்திருக்கின்றனர். ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் ஆவணங்களிலும் இந்த போரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. திருவிதாங்கூருக்கும் டச்சுவுக்கும் இடையேயான உறவினைக் குறித்து ஆய்வு நூல்களை எழுதிய எம்.ஒ.கோஷி மற்றும் எஸ்.கிருஷ்ணய்யர் ஆகியோர் ஐரோப்பியர்களது ஆவணங்களிலிருந்து குளச்சல் போரைப் பற்றிய தகவல்களை ஓரளவுக்கு அறியத் தருகின்றனர். டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆவணங்கள் அனைத்தும் நெதர்லாந்து நாட்டின் தேசிய ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

நெதர்லாந்தைச் சேர்ந்த மார்க் டி லெனாய் எனும் வரலாற்றாளர் டச்சு ஆவணங்கள் அடிப்படையில் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் ஆட்சிக் காலத்தை ஆய்வு செய்து புத்தகம் எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்தில் குளச்சல் போரைப் பற்றிய விரிவான தகவல்களை அறியத் தருகிறார். குளச்சல் போர் குறித்து மார்க் டி லெனாய் எழுதிய அத்தியாயம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.

டச்சு தரப்பினரின் பதிவுகள்படி குளச்சல் போர் குறித்து கூறப்படுவது யாதெனில், 1741 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 அன்று டச்சுப் படையினர் கொச்சி தலைமைத் தளபதி கொலேனஸ் தலைமையில் குளச்சலில் தரையிறங்கி அருகாமையிலுள்ள இடங்களை வசப்படுத்திக் கொண்டனர். குளச்சல் கடற்கரையில் டச்சுப் படையினர் சிறிய கோட்டை ஒன்றையும் கட்டியிருக்கின்றனர். கொலேனஸ் தலைமையிலான ஒரு படை அணியினர் கொச்சிக்கு திரும்பிச் சென்ற பிறகு, ரிஜிட்டல் என்பவர் குளச்சலில் தங்கியிருந்த படையினருக்கு தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். 1741 ஆம் ஆண்டு ஜூன் மாத துவக்கத்திலிருந்து திருவிதாங்கூர் படை தீவிரமான தாக்குதலைத் தொடுத்து குளச்சலை நோக்கி முன்னேறியிருக்கிறது.

ஆங்கிலேயர்கள் தங்களது வணிகப் போட்டியாளரான டச்சுப் படையை தோற்கடிக்க பீரங்கிகள், துப்பாக்கிகள், வெடிமருந்து உள்ளிட்ட தளவாடங்களை திருவிதாங்கூருக்கு பெருமளவில் அளித்து வணிக ஆதாயங்களைப் பெற்றிருக்கின்றனர். ஐரோப்பிய கம்பெனிகளிலிருந்து விலகி வந்த 24 ஐரோப்பிய வீரர்களை மார்த்தாண்டவர்மா தமது படையில் இணைத்து ஐரோப்பிய பாணியில் தமது இராணுவத்தைக் கட்டமைத்திருக்கிறார். நாயர் படை மற்றும் மறவர் படையினருடன் பிற சாதிகளைச் சேர்ந்த வீரர்களும் திருவிதாங்கூர் படையில் இருந்திருக்கின்றனர். 1741, ஆகஸ்ட் 2 அன்று டச்சுத் தளபதி ரிஜிட்டல் யுத்தத்தில் கொல்லப்பட்ட பிறகு டச்சுப் படை கட்டுக்கோப்பை இழந்திருக்கிறது. ஆகஸ்ட் 9 அன்று டச்சு தரப்பினரின் வெடிமருந்து கிடங்கு வெடித்துச் சிதறியதையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட டச்சுப் படையினர் மார்த்தாண்ட வர்மாவின் முன்பாக சரணடைந்திருக்கின்றனர்.

திருவிதாங்கூர் படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஐரோப்பிய வீரர்களுக்கு டியுவன்சாட் என்பவர் தலைமை தாங்கி திருவாங்கூர் படையை வழிநடத்தியிருக்கிறார். டியுவன்சாட் திருவிதாங்கூர் படையினருக்கு பயிற்சி அளித்த தகவலை, மலபாரில் டச்சுக்காரர்களின் ஆதிக்கத்தை குறித்து ஆய்வு செய்த எ.கல்லெட்டி மற்றும் பி.சி. அலெக்சாண்டர் ஆகியோரும் தங்களது புத்தகங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.

குளச்சலில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் கன்னியாகுமரி டச்சு முகாமிலிருந்து வெளியேறி திருவிதாங்கூர் படையில் இணைந்து கொண்டவரே எசுதாக்கியஸ் டி லெனாய். டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தில் ஒரு கடைநிலை வீரராக பணிபுரிந்த இவர் டச்சு இனக் குழுவை சாராதவர். டச்சு நிறுவனத்தில் இவருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் மறுக்கப்பட்டதாலேயே இவர் டச்சுப் படையிலிருந்து வெளியேறி திருவிதாங்கூர் படையில் சேர்ந்திருக்கிறார். மார்த்தாண்ட வர்மாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாகிவிட்ட டி லெனாய் 1744 ஆம் ஆண்டு டியுவன்சாட் மரணமடைந்த பிறகு, திருவிதாங்கூரின் தளபதியாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

குளச்சல் போர் குறித்து கதை எழுதுபவர்கள் கூறுவது போன்று, டச்சுப் படை டி லெனாய் தலைமையில் குளச்சல் மீது படையெடுத்து வரவுமில்லை; டி லெனாய் குளச்சல் போரின் முடிவில் திருவிதாங்கூரிடம் சரணடையவுமில்லை. ஆனால் இங்கே டிலனாயை கைது செய்தது தங்களது சாதியைச் சேர்ந்தவர்தான் என சாதிப்பதற்கு சாதியவாதிகள் மெனக்கெடுகிறார்கள். சாதிய வரலாறு எழுதுபவர்களுக்கு ஆதாரங்களைப் பற்றி எந்தவிதக் கவலையும் இல்லை. கற்பனை மட்டும் அவர்களுக்கு போதுமானது.

உதவிய நூல்கள் :

1. குளச்சல் போர் , பதிப்பாசிரியர் – எஸ்.ஆன்றனி கிளாரட் , 2017.
2. குளச்சல் போர் ( 1740 – 1741 ), மார்க் டி லெனாய், தமிழாக்கம் – திருத்தமிழ் தேவனார், 2019.
3. குளச்சல் போர் : கட்டுக்கதைகளும் கற்பனைக் குதிரைகளும், திருத்தமிழ் தேவனார், 2018.
4. THE KULASEKHARA PERUMALS OF TRAVANCORE : History and state formation in Travancore from 1671 to 1758, MARK DE LANNOY, 1997.
5. A History of Travancore from the Earliest Times, P.SHUNGOONNY MENON, 1878.

- என்.டி.தினகர்

Pin It