சென்னை மாநிலத்தின் உயர்நிலைப் பள்ளிகள் விரும்பினால் தாய்மொழியையே பயிற்சி மொழியாகக் கொள்ளலாம் என்று 1930 ஆம் ஆண்டில் அரசு ஆணை பிறப்பித்தது.

ஆங்கிலக் கலைச்சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச் சொற்களை ஆக்குவதற்கு ஒரு குழுவை அரசு அமர்த்தியது. அக்குழுவில் உறுப்பினர்களாக இருந்த மேலாண்பொறியாளர் பா.வே.மாணிக்கநாயகரும், கா.சுப்பிரமணிய பிள்ளையும் ஏனைய உறுப்பினர்களுடன் கொண்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அக்குழுவிலிருந்து விலகி விட்டனர். “அரசு சார்பில் உருவாக்கி வரும் கலைச் சொற்கோவையில் சொற்களும், சொற்றொடர்களும் தமிழிலேயே இருக்க வேண்டும் என முயற்சி காட்டவில்லை” என்று பா.வே.மாணிக்க நாயகர் வருத்தப்பட்டதுதான் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். அரசு அமைத்த குழுவினால் உருவாக்கப்பட்ட தமிழ்க் கலைச் சொற்கள் 1932இல் வெளியிடப்பட்டன. அச்சொற்களில் பெரும்பான்மையானவை எளிதில் விளங்கிக்கொள்ள இயலா வடமொழிச் சொற்களாக இருந்தமையால் அச்சொற்கோவை கல்வியாளர்க்கும் தமிழன்பர்க்கும் நிறைவளிப்பதாக அமையவில்லை.

சைதாப்பேட்டை அரசினர் நன்முறை உயர்நிலைப் பள்ளி அப்போது தாய்மொழியைப் பயிற்சி மொழியாக ஏற்றிருந்தது. அப்பள்ளித் தலைமையாசிரியர் டி.கே.துரைசாமி சாஸ்திரி 1934-35 ஆம் ஆண்டுக்கான தமது பள்ளி ஆண்டறிக்கையில், அரசு வெளியிட்ட தமிழ்க் கலைச்சொற்கள் மிக நீளமானவையாகவும் எளிதில் புரிந்துகொள்ள இயலா வடமொழிச் சொற்களாகவும் உள்ளன எனக் குறிப்பிட்டார்.hindi agitation 13தமிழன்பர் மாநாடு

இதன் தொடர்ச்சியாக 1933இல் தமிழ்ப் பயிற்றுமொழி, கலைக்களஞ்சியத்திட்டம், தமிழுக்கு செம்மொழித் தகுதி கோரிக்கை, நாட்டுப்புறப் பாடல்கள் சேகரிப்பு ஆகிய தமிழின் வளர்முகப் பணிகள் பற்றி விவாதிக்க தமிழன்பர்கள் மாநாடு 1933 ஆம் ஆண்டு சென்னையில் கூடியது.

இம்மாநாட்டில் வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி, சத்தியமூர்த்தி அய்யர், பி.வரதராசலு நாயுடு, திரு.வி.கலியாணசுந்தர முதலியார், பி.எஸ்.குமாரசாமிராஜா, டி.கே.சி., வ.ராமசாமி, கல்கி, சங்கு சுப்பிரமணியம், வை.மு.கோதைநாயகி, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் ஆகியோர் பங்கேற்றனர். ஆனால், அக்காலகட்டத்தில் தமிழ் வளர்ச்சிய¤ல் பெரும் பங்களிக்கும் மறைமலையடிகள், ச.சோமசுந்திர பாரதி, மு.கதிரேசன் செட்டியார், வ.உ.சி, கா.சுப்பிரமணியபிள்ளை, த.வே.உமாமகேசுவரன் பிள்ளை, மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை, ச.சச்சிதானந்தம்பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டர் முதலான தமிழ்ப் பேரறிஞர்களின் கூட்டுறவின்றி இம்மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் உ.வே.சாமிநாதையர் தலைமையுரையாற்றினார்.

அத்தலைமையுரையில்,

“இக்காலத்தில் விருத்தியாகிவரும் சாஸ்திர அறிவு தமிழ் மக்களிடத்தும் நன்றாகப் பரவவேண்டியது இன்றியமையாததாதலின் அத்துறையிலுள்ள நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுதல் அவசியமாகும். அவ்வகை மொழிபெயர்ப்புகள் ஒரு விதமாக முறையாக இருக்க வேண்டும்.” (உ.வே.சாமிநாதையர் 1945:58)

எனக் கருத்து தெரிவித்துள்ளார். இவ்வாறு அறிவியல் நூல்களை மொழிபெயர்க்க வேண்டியதன் தேவையை குறிப்பிடும் உ.வே.சா. மொழிபெயர்ப்புக்களில் சீர்மை உருவாக வேண்டும் என வலியுறுத்துவது கருத்தில் கொள்ளத்தக்கது. மேலும் கலைச்சொற்கள் பற்றி கருத்து தெரிவிக்கும்போது,

“சாஸ்திர சம்பந்தமாகவும் பொருளின் பெயர்களாகவுமுள்ள மற்ற மொழிச்சொற்களும் வேறு சில வகைச் சொற்களும் இப்பொழுது சாதாரண தமிழில் வழங்குகின்றன. இவற்றை மாற்றி பல புதிய சொற்களை உபயோகிக்கத் தொடங்கினால் அச்சொற்கள் தமிழ்நாடு முழுவதும் வழக்கத்தில் அமைவதற்கு நெடுங்காலம் ஆகும். சொற்களின் வழக்கமும் அவற்றின் பொருள் எளிதில் விளக்குதலும் முக்கியமேயன்றி எல்லாம் தனித்தமிழ் வார்த்தைகளாக இருக்க வேண்டுமென்று அனுபவத்தில் இயற்றுவதன்று.” (உ.வே.சாமிநாதையர் 1945:58)

என்கிறார்.

புதிய கலைச்சொற்களை உருவாக்கும் பணிகளால் காலதாமதமாகும் என்று கருத்து தெரி­வித்த உ.வே.சா. கலைச்சொற்களை தனித்தமிழில் உருவாக்குவது இயலாத காரியம் என்றார். பா.வே.மா. வடமொழிக் கலைச்சொற்களை விலக்கி நல்ல தமிழில் கலைச்சொற்களை உருவாக்கலாம் என்று அறிவித்த காலகட்டத்தில் உ.வே.சா. அதற்கு மாறான கருத்தை வெளியிட்டுள்ளது நினைக்கத்தக்கது.

சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம்

‘தமிழில் தக்க பதங்கள் இல்லாத இடத்து வழக்கத்திலுள்ள பதங்களை உபயோகித்தல் நல்லதென்றும் தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்’ என்றும் தீர்மானங்கள் தமிழன்பர் மாநாட்டில் நிறைவேற்றப் பட்டன. இத்தீர்மானங்களில் உடன்பாடு இல்லாத தமிழறிஞர்கள் திருநெல்வேலியில் இ.மு.சுப்ரமணிய பிள்ளை தலைமையில் கூடி, தமிழன்பர் மாநாட்டுத் தீர்மானங்களுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானங்களை 7.1.1934இல் நிறைவேற்றினர்.

ஏ.வி.சுப்பிரமணிய அய்யர்

இக்காலகட்டத்தில் ‘தமிழ் ஆராய்ச்சி வரலாறு’ குறித்து விரிவான நூல் எழுதிய ஏ.வி.சுப¢பிரமணிய அய்யர் தமிழ்க் கலைச்சொல்லாக்கம் பற்றியும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

“சில அறிஞர்கள் ஊக்கத்துடன் வேலை செய்து தயாரித்து ஒரு தொகுதியை சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் வெளியிட்டிருக்கிற பௌதிக சாஸ்திரத்தை மாணாக்கர்களுக்குத் தமிழில் போதிக்கலாம் என்று காட்ட ஸ்ரீ.சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், ‘தமிழில் முடியுமா?’ என்ற தலைப்பில் ஒரு சிறு நூலை எழுதியிருக்கிறார்; வருந்தினால் வராதது ஒன்றுமில்லை.” (ஏ.வி.சுப்பிரமணிய அய்யர் 1985:57)

எனக் கூறும் அவர் இதுபோன்ற முயற்சிகள் மட்டும் தமிழில் அறிவியல் கல்வியை வளர்த்துவிடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“சுமார் நான்கு தலைமுறைகளாக மேனாட்டுக்கல்வி ஆங்கிலத்தின் மூலம் பரவிய பிறகும், அரசியல் துறையிலும் சற்று முன்னேற்றம் அடைந்த பிறகும், தமிழில் முடியும் என்று பறைசாற்றி அதற்கு உதாரணங்கள் மாத்திரம் கொடுத்துக் கொண்டிருந்தால் இந்த நாட்டு மக்களிடையும் மாணாக்கரிடையும் விஞ்ஞான சாஸ்திர அறிவும் அதனால் அமைந்த மனப்பான்மையும் விரிந்து பரவ எவ்வளவு காலமாகும்?” (ஏ.வி.சுப்பிரமணிய அய்யர் 1985:57)

எனவும் நம்பிக்கையின்றி வினவியுள்ளார்.

கலைச்சொல்லாக்கம்

கலைச்சொல் உருவாக்கம் பற்றி கருத்து தெரிவிக்கும்போது, கிரேக்க லத்தீன் சொற்களை ஆங்கிலேயர்கள் ஏற்றுக் கொண்டதைச் சுட்டிக் காட்டுகிறார். அச்சொற்களுக்கு மாற்றுச் சொற்களை அவர்கள் உருவாக்க முயற்சிகள் எடுக்கவில்லை எனவும் அதேபோல பிறமொழிக் கலைச்சொற்களுக்கு இணைச்சொற்களை முதலில் தமிழில் தேட வேண்டும், இல்லையெனில் பிறமொழிச் சொற்களை அப்படியே ஏற்றுக்கொள்வது சிறந்த முறை என்பதை,

“விஞ்ஞான சாஸ்திரங்கள் சம்பந்தமாக ஆங்கிலத்தில் காணப்படும் அநேகச்சொற்கள் அந்த மொழியைக்கூட சேர்ந்தவையல்ல; கிரேக்க லத்தீன் முதலிய மொழிகளைச் சேர்ந்தவை; அவைகளை ஆங்கிலேயர் அப்படியே கை கொண்டிருக்கிறார்களே ஒழிய அவற்றின் பொருள்களைக் கொடுக்கும் ‘ஆங்கிலோ ஸாக்ஸன் பதங்களை தேடிக் கொண்டிருக்கவில்லை. விஞ்ஞான சாஸ்திர கருத¢துக்களுக்குத் திட்டமாய்ச் சரியான பொருளுடைய பதங்கள் தமிழில் வழங்கியிருந்தால், அவைகளைப் போற்றி எடுத்துக் கொள்வது தமிழர் கடமை. அப்படியில்லையானால் பிற மொழி­யிலுள்ள சொற்களை அப்படியே கையாள்வது உத்தமம்” (ஏ.வி.சுப்பிரமணிய அய்யர் 1985:56)

எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

சொற்கள் எந்த மொழிக்கு உரியன என்று கவலைப்படத் தேவையில்லை; மக்கள் ஆங்கிலச் சொற்களையே பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். சொற்களை அப்படியே ஏற்றுக்கொள்வது நலம் எனவும் வலியுறுத்துகிறார்.

‘...சாஸ்திர பதங்கள் எந்த மொழியைச் சேர்ந்திருந்தாலும் அவைகளை அப்படியே எடுத்தாள்வதுதான் முறை. ‘தெர்மாமீடர்’, ‘ஆசிட்’ போன்ற சொற்களை ஆண்களும் பெண்களும் படித்தவர்களும் பாமரர்களும் தாராளமாய் கையாண்டு வருவதால், அவைகளுக்குப் பதிலாகத் தமிழ்ச் சொற்கள் ஆக்கப்புகுவது சரியில்லை. ‘அனற்பதனி’, ‘காடி’ போன்ற சொற்களை ஆக்கிவிடலாம். ஆனால், அவை மக்களின் பேச்சோடு இயங்குவதற்கு வெகுகாலம் ஆகும்.”  (ஏ.வி.சுப்பிரமணிய அய்யர் 1985:57)

என்ற பகுதி இதனைத் தெரிவிக்கிறது.

கலைச்சொல்லாக்கத்தில் வடமொழிச் சொற்களைப் பயன்படுத்துவதா? தனித்தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதா என வாதப்பிரதிவாதம் நடைபெற்ற காலத்தில் மொழியைப் பற்றிக் கவலை­யில்லை, அறிவியல் அறிவுதான் முக்கியம் என்ற சுப்பிரமணிய அய்யரின் கருத்துக்கள் கவனிக்கத்தக்கன.

தமிழ்ப்பதங்களையும், பதத்தொகுதிகளையும் வெறும் தேசபக்தி உணர்ச்சியாலும் மொழிப்பற்றாலும் தூண்டப்பட்டு உருவாக்குவது தவறாகும் என்ற சுப்பிரமணிய அய்யரின் கருத்துக்கள் முறையே சுதேச உணர்வுடைய கலைச்சொல்லாக்குநர்களையும், செ.மா.த.சங்கத்தினரையும் குறிப்பிடுவதாகக் கருத இடமுண்டு. இவ் இரு குழுக்களின் போக்கிலிருந்து வேறுபடும் மூன்றாவது போக்கினராகவே ஏ.வி.சுப்பிரமணிய அய்யரும், டி.எஸ்.சொக்கலிங்கமும் விளக்குகின்றார்.

டி.எஸ்.சொக்கலிங்கம்

தினமணி இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர் டி.எஸ்.சொக்கலிங்கம். சிறந்த இதழாளராகவும், தீவிர காந்தி இயக்க ஆதரவாளராகவும் அறியப்பட்டவர்; மொழிப் பாதுகாப்பு, மொழி வளர்ச்சி பற்றி கருத்து தெரிவிக்கும் இவர் கலைச்சொல்லாக்க முயற்சிகளையும், பயிற்றுமொழித் திட்டத்தையும் எதிர்த்து வந்தார்.

இதனை,

“கலைச்சொற்கள் எல்லாவற்றையும் தனித்தமிழில் ஆக்க வேண்டுமென்று சொல்வது உபயோகமில்லாத வேலை. தமிழரின் ஜனத்தொகை இரண்டரை கோடி இருக்கலாம். இந்த சொற்ப ஜனத்தொகையுள்ள ஒரு பிரதேசத்தில் சகல கலைகளுக்கும் உள்ள உயர்தர படிப்பைச் சொல்லிக் கொடுக்கக்கூடிய ஸ்தாபனங்களை ஏற்படுத்தி, நடத்தி வர முடியுமென்று நினைப்பது வெறும் பகற்கனவு” (டி.எஸ்.சொக்கலிங்கம் 1943:45)

என்று அவர் கூற்றிலிருந்து அறியமுடிகிறது.

கலைச்சொல்லாக்கம்

இந்தியா முழுமைக்கும் ஒரே வகையான கலைச்சொல்லாக்கம் அவசியம் என்பதை,

“தமிழ் கலைச்சொற்களைக் கொண்டு ஒரு கலையில் ஆரம்பப் படிப்பை முடித்துவிட்டு, மற்றொரு மாகாணத்திற்கு உயர்தர படிப்புக்குப் போனால் அங்குள்ள பாஷையின் கலைச்சொற்களைப் புதிதாகப் படித்தாக வேண்டும். இந்த கஷ்டத்தைத் தவிர்க்க வேண்டுமானால் இந்தியா பூராவுக்கும் பொதுவான ஒரு பாஷையில் கலைச்சொற்கள் இருக்க வேண்டும். அப்படிச் செய்வதுதான் புத்திசாலித்தனமானது. அது தான் காரிய சாத்தியமானது. அதைவிட்டு தனித்தமிழில் எல்லாக் கலைச்சொற்களும் வேண்டுமென்று சொல்வது வெறும் குருட்டுத்தனமாகும்." (டி.எஸ்.சொக்கலிங்கம் 1943:45)

என்று வற்புறுத்தியுள்ளார். மேலும் இந்தியா முழுமைக்கும் பொதுவான ஒரு மொழியில் கலைச்சொற்கள் இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளது வடமொழியை மனதில் கொண்டேயாகும். இந்தியாவுக்கு ஒரே ஆட்சிமொழி என்ற அடிப்படையில் தமிழின் இருப்பைப் புறக்கணிக்கும் வகையிலே சொக்கலிங்கத்தின் கருத்து அமைந்துள்ளது.

டி.எஸ்.சொக்கலிங்கம் போன்றோர் ஏன் தனித்தமிழில் சொல்லாக்கம் ஆக்க வேண்டியதில்லை ஏன் என்பதற்கு கைலாசபதி பதில் கூறுகிறார்.

“ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதுகளில் தங்களை மணிக்கொடிக் குழுவினர் என அழைத்துக் கொண்ட வலிமை வாய்ந்த படைப்பிலக்கியக் குழு ஒன்று எழுந்தது. மணிக்கொடி வ.ராவை ஆசிரியராகக் கொண்டு கே.சீனிவாசன், டி.எஸ்.சொக்கலிங்கம் ஆகியோரால் தொடங்கப் பெற்ற இலக்கிய இதழ் ஆகும். மணிக்கொடி எழுத்தாளர்கள் தமிழை முறையாகக் கற்றவர்கள் அல்லர். சமஸ்கிருதம், ஆங்கிலம், மெய்யியல், பொருளியல் முதலிய பாடங்களைக் கற்றபின் தமிழ் எழுத வந்தவர்கள். அவர்கள் அமெரிக்க ஐரோப்பிய இலக்கியங்களின் தாக்கத்திற்கு ஆட்பட்டவர்கள். குறிப்பாக வங்கமொழி எழுத்தாளர்களின் சாதனையால் கவரப் பெற்றவர்” என்கிறார்.

தமிழன்பர் மாநாட்டு நோக்கங்களையே திருத்திய வடிவத்தில் கொண்டு சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டை 1934 ஜூனில் கூட்ட இ.மு.சு. திட்டமிட்டார். இதுபற்றிய அவரின் அறிக்கை வருமாறு:

... “7.1.34 ல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சென்னை மாகாணத் தமிழர் மாநாடு என்று பெயர் ஆராய்ந்து ஒருமுகமாக அமைக்கப்பெற்றது. சாதி, சமய வேறுபாடில்லாமல் தமிழ்மக்களும் தமிழன்பர்களும் இம்மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டுகிறோம்... இம்மாநாட்டைக் கூட்டுவிக்கிறவர்களின் நோக்கம் தமிழ்மொழித் தூய்மையைப் பேணல். ஆதலினால் அதன் தூய்மைக்கும் அறிவுவளத்துக்கும் குறைவு வராமல் அதனை வளர்த்தற்கேற்றனவும் ஒற்றுமையையும், அன்பையும் ஓங்கச் செய்வனவும் ஆகிய தீர்மானங்களே மாநாட்டில் ஆராய்ந்து முடிவு செய்யப் பெறும்.” (வெங்கடாசலபதி 1999:151)

இ.மு.சு. தமது விரிவான அறிக்கையில் 1933 இல் நடந்த தமிழன்பர் மாநாட்டுக்கு இம்மாநாடு போட்டியில்லை என்று அறிவித்தார். இருப்பினும் தமிழன்பர் மாநாட்டில் உ.வே.சா. போன்றோர் முன்வைத்த வடமொழி கலைச்சொற்களையும் ஏற்றுக்கொள்ளலாம் என்ற வாதத்திற்கு எதிராக மொழித் தூய்மைவாதத்தை முன்வைத்து சென்னை மாகாணத் தமிழர் மாநாடு வெளியிட்ட அறிவிப்பு கவனிக்கத்தக்கது.

இ.மு.சு மாநாடுகளை நடத்தியபின், பல போராட்டங்கள் நடத்தியபின் சென்னை மாகாண தமிழ்ச்சங்கத்திடமிருந்து 10,000 சொற்களை அரசு பயன்படுத்திக் கொண்டது. ஆனால், மீண்டும் சாஸ்திரி குழு 1940 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதில் சமஸ்கிருத மாணாக்கர்களே மிகுதியாக இருந்தன. அவர்கள் அறிக்கையில் “அறிவியல் கலைச்சொற்களை அப்படியே அவற்றின் மூல மொழியிலிருந்து எடுத்துக்கொண்டு, அதே உச்சரிப்புடன் அந்தந்த மொழிகளில் எழுத்துக்களில் உபயோகப்படுத்திக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இவ்வறிக்கையைப் புறக்கணிக்க இ.மு.சு. உறுதி பூண்டு தந்தை பெரியாரிடம் சென்னை அரசு சமஸ்கிருத சார்பாக உள்ளதை விளக்கினார். பிறகு இது குறித்து விடுதலையில் “குதிரைக்கு முன் வண்டி”(6.7.1946) “கலைச்சொற்கள் பெயரால் தற்கொலை” என்று தலைப்பிட்டு (11.10.1946) பெரியார் இருமுறை தலையங்கம் தீட்டினார்.

சென்னை மாநில அரசு அமைத்த கலைச்சொல்லாக்கக் குழுவினர் 1940இல் வெளியிட்ட கலைச்சொற்பட்டியலையும், 1938இல் சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் வெளியிட்ட கலைச்சொல் தொகுப்பையும் ஒப்பிட்டு நோக்கிய பெரியார்,

“கலைச்சொல் நிர்மாணக் கமிட்டியார் கண்டுபிடித்துள்ள வார்த்தையைப் பாருங்கள். Electrolysis, Hydrogen, Disinfectant என்பவற்றிற்கு முறையே விக்தி வித்யுக்தி யோகம், ஆப்ஜனகம், பூதநாசினி என்று புதுவார்த்தைகளைத் தோற்றுவித்துள்ளனர். இதைவிட சென்னைத் தமிழ்ச் சங்கத்தார் கண்டு பிடித்துள்ள முறையே மின்பருக்கை, நீரகம், நச்சுநீக்கி என்ற வார்த்தைகளே சிறந்தனவாக இருக்கின்றன. காரணம் சென்னைத் தமிழ்ச் சங்கத்தாருக்குள்ள தமிழ்ப்பற்று கலைச்சொல் நிர்மாணக் கமிட்டியாருக்கு இல்லாமற் போனதுதான். நமது மேன்மைக்கும் அந்தஸ்துக்கும் ஏற்றதும் நம் சுதந்திர உணர்ச்சியைத் தூண்டக்கூடியதுமான எம்மொழியிலிருந்தும் நம் மொழிக்கு ஆக்கம் தரக்கூடியதும் அவசியமானதும் ஆகிய சொற்களை எடுத்துக் கொள்ளலாம். எம்மொழித் தொடர்பிருந்தாலும் பரவாயில்லை. நமக்கு வடமொழித் தொடர்பு மட்டும் கூடாது. தமிழ் ஒன்றுதான் இன்று வரைக்கும் வடமொழிக் கலப்பின்றித் தனித்துச் சிறப்புடன் வாழக்கூடிய தன்மையைத் தமிழ் பெற்றிருக்கிறதென்று மேனாட்டு வல்லுநர்களே எடுத்துக் காட்டியுள்ளார்கள்”148

எனத் தனித்தமிழ்ச் சொல்லாக்கத்தை ஆதரித்து எழுதினார்.

தமிழின் இழிவிற்கு வடமொழித் தொடர்பு கரணியமாய் அமைந்துவிட்டதால் வடமொழிச் சொற்களை நீக்கவேண்டும். வேறு எம்மொழி­யிலிருந்தும் தமிழுக்கு ஆக்கம் தரும் இன்றியமையாத சொற்களை ஏற்கலாம் எனக் கருதினார் பெரியார் என்பது இதனால் தெளிவாகிறது.

இவ்விவாதங்கள் தொடர்ந்து நீடித்து சீனிவாச சாஸ்திரி குழுவை மாற்றியமைத்தபோது இ.மு.சு. சேலம் இராமசாமி கவுண்டர், எஸ்.வையாபுரிப் பிள்ளை ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்று பணியாற்றினர்.

அப்போது எஸ்.வையாபுரிப் பிள்ளைக்கும் இராமசாமி கவுண்டருக்கும் நிகழ்ந்த கருத¢துப்போர் பின்னரது தனித்தமிழ் முனைப்பிற்குச் சான்றாக உள்ளது.

வையாபுரியார்: நூலும் சாஸ்திரமும் ஒரு பொருள் குறிப்பனவாயின் சாஸ்திரம் என்ற சொல்லை ஏன் ஆட்சேபிக்கிறீர்கள்?

இராமசாமியார்: சாஸ்திரம் என்பது வடசொல். நூல் என்ற தூய தமிழ்ச் சொல்லிருக்க அதே பொருளுடைய பிற சொல்லைப் புகுத்துதல் நீதியன்று; மேலும் இது தமிழ்ச் சொல்லாக்கக் குழுவேயன்றி வடசொல்லாக்கக் குழுவன்று என்பதை உங்களுக்குப் பணிவுடன் நினைப்பூட்டுகிறேன்.

வையாபுரியார்: சாஸ்திரம் என்பதும் தமிழ்ச் சொல்லேயாகும். அது தேவாரம், திருவாசகம் முதலிய சமய நூல்களில் ஆளப்பட்டுள்ளது. தமிழில் இரண்டறக் கலந்த சொல்லெல்லாம் தமிழ்ச் சொல் என்பதே எமது துணிபு.

இராமசாமியார்: உங்கள் கொள்கை எனக்கு வியப்பைத் தருகின்றது. சாஸ்திரம் என்ற சொல் நூல்களில் காணப்படலாம். ஆனால் அதனாலேயே அது தமிழ்ச் சொல்லாகாது. ஒரு சொல் தமிழ்ச்சொல்லா ஆரியச் சொல்லா என அறிவதற்குப் பல முறைகள் உண்டு. அவற்றுள் ஒன்றினாலாவது உங்கள் கொள்கையை நிலைநாட்ட முடியாது.

வையாபுரியார்: அடிப்படையான கொள்கை­யிலேயே உமக்கும் எமக்கும் கருத்து வேற்றுமையுண்டு. ஆதலால் விவாதத்தை நிறுத்திக் கொள்வோம். கமிட்டித் தலைவர் (திரு.கே. சாமிநாதன்) தீர்ப்புப்படியே தீர்ப்புச் செய்து கொள்ளட்டும்.

இராமசாமியார்: அப்படியே ஆகட்டும். சாஸ்திரம் என்ற சொல்லே இக்குழுவினரால் ஏற்கப்படும் என்பதை நான் அறிவேன். ஆனால் தமிழருக்கும் தமிழ் நாட்டுக்கும் நீங்கள் பெருந்தீங்கு விளைக்கின்றீர்கள் என்பதையும் பிற்காலத்தில் தமிழர்கள் வீறிட்டெழுத்து சீறுவாராயின் அவர்களுக்குச் சமாதானம் கூறும் பொறுப்பு உங்களுடையதாகும் என்பதையும் உங்கட்கு அறிவிக்கிறேன்.

மேற்குறித்த உரையாடல் தனித்தமிழ்ச் சொல்லைக் கலைச் சொற்பட்டியலில் சேர்க்க எத்துணை முனைப்போடு சேலம் இராமசாமி கவுண்டர் (கு.திருமாறன் 2012.164) போராடினார் என்பதைக் காட்டுகிறது.

இக்காலகட்டத்தில் தமிழில் பிறமொழிக் கலப்பு குற¤த்து கவலையுற்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்,

“ஓர் கூட்டம் கோவிலில் பிறமொழிக் கூச்சலை ஏன் தடுக்கக் கூடாது? ஒரு குழுவினர் தெருத்தோறும் சென்று பிறமொழி விளம்பரப் பலகையை மாற்றியமைக்கச் சொல்லி ஏன் வற்புறுத்தலாகாது? மற்றும் பல வகையிலும் கிளர்ச்சி செய்யின் தமிழ் விடுபடும். தமிழ்நாடு விடுபடும்.” என்று அறிவுறுத்தினார்.

தமிழ் மொழி வடமொழி போராட்டத்திற்கு முடிவில்லையா? என்பதற்கு தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் பதிலளிப்பது சற்று ஆறுதலாக உள்ளது.

உலகம் போகிற போக்கில் பொதுமக்கள் குடியரசில் இடம்பெற வேண்டுமானால் உலக அறிவையெல்லாம் ஒருவகையாகப் பெற்றே தீரவேண்டும். கலைச்சொற்கள் எல்லாம் தமிழ்ச்சொற்களாக அவர்கள் வாயிலும் காதிலும் இனிக்கின்ற காலம் வரும். முன்காலத்தில் மணிப்பிரவாள நடையில் எழுதினாலன்றிச் சில கருத்துக்களை விளக்க முடியாதென்று சில அறிஞர்கள் கருதினார்கள். ஆனால் நாளடைவில் அந்த அறிவெல்லாம் எளிய தமிழில் எழுத வேண்டும் என்ற நிலை வந்த போது மணிப்பிரவாள நடை தானாக மறைந்து போனது. இலத்தீனில்தான் கருத்துக்களைத் தெரிவிக்க முடியுமென்று நியூட்டனும் எழுதினார். இப்போதோ அந்த நிலை மாறி ஆங்கிலத்தில் எழுதும் காலம் வந்துள்ளது. அந்தநிலை தமிழில் ஓராண்டு ஈராண்டில் வராது. பொதுமக்களுக்காக எழுதும்போது இந்த நிலை படிப்படியாக வரும். அதுவரையிலும் ஆங்கிலத் தமிழ் மணிப்பிரவாளநடை இருந்துகொண்டுதான் வரும்.”7 என 1974 இல் எழுதினார்.

- டாக்டர் சு.நரேந்திரன், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர்.

Pin It