1) கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் மறையூர், காந்தளூர் பஞ்சாயத்துக்களில் மலைப்புலயர் என்னும் ஆதிவாசி மக்கள் வாழ்கின்றனர். அம்மக்கள் ஒருவிதத் தமிழ் வட்டார வழக்கையே பேசுகின்றனர். அவ்வழக்கு தமிழ் பேசும் நமக்கு மிகவும் எளிதாகப் புரிகிறது. நாம் பேசும் தமிழ் வழக்கையும் அவர்கள் எளிதாகப் புரிந்து விடுகின்றனர். இந்நிலையில் மலைப்புலய மொழி என்ற ஆதிவாசி மொழியை நம் தமிழின் கிளைமொழியாகக் கொள்வது தவறில்லை. இம்மக்கள் மலையும் மலை சார்ந்த பகுதிகளில் ‘அஞ்சுநாடு பள்ளத்தாக்கு’ என்று வரலாற்று ரீதியாக அறியப்படும் நிலப்பரப்பில் வாழ்கின்றனர். புலம் என்ற சொல்லுக்கு ‘நிலத்திற் குரியோர்’ என்ற பொருள் கொண்டு மலை நிலத்திற் குரியோர் (மண்ணின் மைந்தர்) என்று பெயர்க் காரணம் தருகிறார் சி.மகேஸ்வரன் (2017, ப.30). புலம் என்ற சொல்லுக்கு ‘நாடு’ என்ற பொருளும் உள்ளது (காண்க: தொல்காப்பியச் சொற்பொருளடைவு, ப, 291). மலை நாட்டிற்குரியவர் மலைப்புலயர்கள் என்றும் கொள்ளலாம். இதுவே சரியாகத் தோன்றுகிறது. மேலே குறிப்பிட்ட மறையூர், காந்தளூர் பஞ்சாயத்து கேரள தேவிகுளம் தாலுக்காவில் தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்துக்கு அண்மையில் இருக்கும் பகுதியாகும். உடுமலையி லிருந்து சுமார் 40 கி.மீட்டர் தொலைவில் மறையூர் அமைந்துள்ளது. மறையூர். காந்தளூர் பகுதிகளில் தமிழ் பேசும் வெள்ளாளர், நாடார், செட்டியார் போன்ற மக்கள் வசிக்கின்றனர். முதுவான் என்ற ஆதிவாசி மொழியைப் பேசும் மக்கள் வாழ்கின்றனர். மலையாளம் பேசும் கேரள மக்கள் வசிக்கின்றனர். மலையாள மொழி நாட்டுபாஷை என்றும், தமிழ்மொழி ஊர்பாஷை அல்லது கிராமத்துபாஷை என்றும் முதுவான், மலைப் புலயர் மொழி ‘குடிபாஷை’ என்றும் வெகுவாக அறியப் படுகின்றன. இந்தச் சூழலில் மலைப்புலயர் பேசும் மொழி மலையாள மொழியோடும் தமிழ்நாட்டுத் தமிழ் மொழியோடும் தொடர்ந்து உறவு கொண்டு வருகின்றது. இதனோடு மறையூர், மூணார் பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளோடும் மலைப் புலயர்கள் தொடர்பு கொள்கின்றனர். இதன் காரணமாக மலைப்புலயர்களின் மொழி மிகவும் வேகமாக மாறி வருகின்றது. இளைஞர்கள் மலையாள மொழிக் கற்பதனையே பெரிதும் விரும்பு கின்றனர். வேலை வாய்ப்பிற்கான மொழி மலையாளமே என்று கருதுகின்றனர். இதனால் தங்கள் மொழியின் மீது எதிர்மறையான கண்ணோட்டம் கொண்டுள்ளனர். இவர்கள் மலையாள மொழிக்குத் தாவிவிடுகின்ற (shift) சூழல் விரைவில் உருவாக வாய்ப்புள்ளது. இந்நிலையில் மலைப்புலயர் மொழியை ஆவணப்படுத்திப் பாது காப்பது தலையாய கடமையாகும்.
இக்கட்டுரை மலைப்புலயர்களின் தமிழ் மொழியின் சொல்வளம் குறித்து விளக்க முற்படுகிறது.
2) வீட்டின் அமைப்பை உணர்த்தும் சொற்கள்
மலைப்புலயர்கள் முன்காலத்தில் கரும்பு சோலை, தர்ப்பைப் புல் ஆகியவற்றால் ஆன வீடுகளில் வசித்தனர். தற்காலத்தில் அரசு அனைவருக்கும் கான்க்ரீட் வீடுகள் கட்டித் தந்துள்ளது. ஒருசில ஓட்டு வீடுகளும் கட்டி அதில் வாழ்கின்றனர். வீட்டின் பல்வேறு அமைப்புகளை உணர்த்தும் சொற்கள் கீழே தரப்படுகின்றன.
ஒதெ காலு / முட்டு - தூண்
மொகளு - வீட்டின் நடுப்பகுதியிலுள்ள தூலம்
எரசலு - வீட்டின் பக்கத்திலுள்ள இரண்டு தூலங்கள்
நெலவு - (வீட்டின்) நிலை வாசல்கால்
தொறப்பு - சாவி
திண்ணெ - தரையை (வீடு) திண்ணை என்கின்றனர்
மொகளு செவுரு - நடு சுவர்
எரச செவுரு - பக்கவாட்டிலுள்ள சுவர்
திம்மம் பண்ணு - மேடு அமைத்தல்
இஷ்டி கல்லு - செங்கல்
மெட்லு - ஜல்லிகள்
முளுகல்லு - முழு செங்கல்
துண்டு கல்லு - உடைத்த செங்கல்
கதவுலு - கதவு
ஜன்னலு - ஜன்னல்
3) வீட்டு உபயோகப் பொருள்கள்
வீட்டில் பயன்படுத்தும் கருவிகளுக்கும், பாத்திரம் பண்டங்களுக்கும் சில சொற்கள் காணப்படுகின்றன. அகப்பையை ‘கண்ணாப்பெ’ என்றும் கரண்டியைக் கரெண்டி, தவி ஆகிய இரு சொற்களாலும் குறிக் கின்றனர். பானெ, சட்டி, அண்டாவு, பித்தளெ அண்டாவு போன்ற சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. காய்கறிகள் நறுக்க பிச்சா கத்தி (சின்னகத்தி) பயன்படுகின்றது. உணவு சாப்பிடும் தட்டை ‘வட்டுலு’ என்றும் பாத்திரங் களை மூடுகிற தட்டைத் ‘தட்டம்’ என்று குறிக் கின்றனர். அடுப்பை ஊதுகின்ற குழலை ‘தீக்கொலலு’ என்றும், நெருப்பைத் ‘தீக்கனலு’ என்று அழைக் கின்றனர். நாம் பயன்படுத்தும் வாணலியை "வடசட்டி" என்று சொல்கின்றனர். தட்டுவம் என்பது தோசையைத் திருப்பிப்போடப் பயன்படும் கருவி. ஆட்டங்ககல்லு, இடிகல்லு (உரல்) திருவெ கல்லு ஆகியவற்றை அவர்கள் தெரிந்து வைத்துள்ளனர். ஆனாலும் இரு வேளையும் கஞ்சி வைத்தே ஏதாகிலும் கீரையைப் பாறையில் வைத்து அரைத்து அவற்றை உண்கின்றனர். மலெயங் கௌங்கு என்ற ஒரு வகையான காட்டுக் கிழங்கே பஞ்ச காலத்தில் முக்கியமான உணவாக இருந்துள்ளது. அதனைத் தோண்டி எடுக்க கம்பி கோலு என்ற கருவியைப் பயன்படுத்தினர். நாயின் துணை யோடு வேட்டையாடச் சென்றால் வேட்டையாடிய இறைச்சியைச் சரிசமமாகப் பகிர்ந்து கொள்வார்களாம்.
உறுமி, கொலலு, தாய்மேளம், மெர்ச்சி போன்றவை இசைக் கருவிகளின் பெயர்களாகும். நோம்பி சமயத்தில் வெகுநேரம் ஆட்டுப்பாட்டு நிகழ்த்துவர்.
4) தேனும் காளான் வகைகளும்
பொதுவாக ஆதிவாசிகள் முற்காலத்தில் உணவு சேகரிப்பவர்களாகவே இருந்திருப்பர். அவர்களுக்கு விவசாயம் செய்து உணவு உற்பத்தி செய்யத் தெரியாது. வனத்தில் தாமாகக் கிடைக்கும் கிழங்கு வகைகளையும், பல்வேறு கீரை வகைகளையும் உண்பர். தேன் அழித்து தேனைப் பயன்படுத்துதல், பல்வேறு காளான்களைக் கண்டறிந்து அவற்றை சுட்டும், அவித்தும் உண்பர். ஆகவே அவர்களின் மொழியில் பல்வேறு காளான் களைக் குறிக்கும் சொற்களும், தேன் வகைகளைக் குறிக்கும் சொற்களும் காணப்படுகின்றன. காளான்களை மண்ணிலிருந்து கிடைப்பவை, மரத்திலிருந்து கிடைப் பவை என்று பாகுபடுத்திக் கூறுகின்றனர். மரத்திலிருந்து கிடைக்கும் காளான்கள்
நவ்வா கேளான் / கேளன் / மாங்க கேளான் / காட்டே கேளான் / ஈச்சி கேளன் / அத்தி கேளன் / மூங்கெ கேளன் / நரம்பு கேளன் / கொரங்கு காது கேளன்
மண்ணிலிருந்து கிடைப்பவை
அவுலு கேளன் / தெக்கென கேளன் / புத்துக் கேளன் / தேன், /கொம்பந்தேனு
மலையில் வாழும் எல்லோருமே தேன் வகை களையும், தேனின் பயன்பாட்டையும் அறிந்து வைத் திருப்பர். இயற்கையாகவே தேனீக்களின் நட மாட்டத்தை வைத்து தேனிருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து விடுவர். தேனீயைத் தேனீச்ச என்றும் தேன் கூட்டை குடி என்றும் கூறுகின்றனர் மலைப்புலயர்கள். தேன் அழித்தல் என்பதைத் தேன் அறுக்குது என்று சொல்வர். தேன்குடியில் ஈச்சைகள் அசைதல் ‘ஈச்செ அலுங்கிடுச்சு’ என்றும் ‘ஈசியெ முடுக்கனா தேனெ கண்டுபிடிச்சிரலாம்’ என்று கூறுகின்றனர். தேன்குடி பல்வேறு இடங்களில் அமையலாம், மரப்பொந்து, கல்பொந்துகளிலும் (முறையே மரவாய், கல்வாய்) தேனீக்கள் கூடு கட்டலாம். மரக் கிளைகளிலும் குச்சி களிலும் தேன் கூடுகள் கட்டப்படலாம். அந்த அடிப் படையில் தேன்களின் பெயர்கள் அமைவதனைக் காணலாம்.
கொசுவந்தேனு / நாட்டுத்தேனு / கொம்பந்தேனு /போரு கொம்பந்தேனு / மொல கொம்பந்தேனு / குச்சிக் கொம் பந்தேனு / தொளெத் தேனு
(பட்டியல் நிறைவுபெறவில்லை)
கொசுவந்தேனு ஒருவகையான கொசுக்கள் போன்ற தேனீக்களால் சேகரிக்கப்படுவது. இதுவே பெரிய மூக்கங் கொசுவந்தேனு, சீலமூக்கன் (கொசுவந்) தேனு என்று இரு வகையாக உள்ளன. சீலமூக்கன் தேனு மிகவும் ருஜியாக இருக்கும் என்று தெரிவித்தனர். போரு கொம்பன் தேனு மரவாய், கல்லுவாய் ஆகிய இடங்களில் உண்டாகும். பெருந்தேனு என்ற வகையும் (மலந்தேனு) பிரசித்தி பெற்ற தேன் வகையாகும். சங்க இலக்கியங்களில் தேன்களைக் குறித்த பல செய்திகளும் வருகின்றன. நிலத்தினும் பெரிதே என்ற குறுந் தொகைப் பாடலில் வரும் ‘பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே’ என்ற வரியில் வரும் பெருந்தேன் இன்றும் வழக்கில் உள்ளது.
5) யானை எழுப்பும் ஒலிகள்
மலைப்புலயர்கள் யானைகளோடும் பிற காட்டில் வாழும்விலங்குகளோடும் வாழ்கின்றனர். விலங்குகளால் எப்பொழுதும் அவர்களது உயிர்க்கும் உடைமைக்கும் சேதமுண்டு. அவர்கள் பயிரிடும் விவசாய நிலங்களை யானைகள் வந்து மிதித்து துவம்சம் செய்து விடுவதுண்டு. அதனால் பழங்காலத்தில் அவர்கள் யானைக் காவலுக்குச் செல்வதுண்டு. யானையை ‘ஆனெ’ என்றுதான் கூறு கின்றனர். யானையின் மண் புதைந்த பாதச் சுவட்டை ‘காலு தாரெ’, ‘ஆனெ தாரெ’ என்று கூறுகின்றனர். யானையின் தந்தத்தை ‘கொம்பு’ என்றும், தும்பிக் கையைத் ‘துமிசங்கெயி’ என்றும் கூறுகின்றனர். யானைகள் காதுகளை அசைத்தபடி நின்றால் இயல்பாக நிற்கிறது என்று பொருள். காதுகளை அசைக்காமல் பார்த்தால் சற்று சினமாக இருக்கிறது என்று பொருள். யானை ஓடுவதற்கு முன் உடலைச் சுருக்குமாம். அப்போது தாக்க முற்படலாம். ஆனெதாரெயெக் கொண்டும், ஆனெயின் மணத்தைக் கொண்டும் யானையின் இயக்கத்தையும் இருப்பிடத்தையும் அறிகின்றனர். அதனால் வரும் ஆபத்தைத் தவிர்க் கின்றனர். ‘ஆனெக்குப் பயந்தால் காட்டில் வாழவே முடியாது’ என்று மக்கள் சொல்வதைக் கவனிக்க முடிந்தது. ‘அது வெரட்டவெல்லாம் செய்யாது அதுபாட்டுலெ நிந்தா (நின்றால்) நாம பாட்டுலெ போயிருவோம். ஏதோ கெட்ட போக்கிரி நிந்தா அது வெரட்டச் செய்யும்’ என்று பொங்கம்பள்ளியைச் சேர்ந்த தங்கம்மா என்ற தகவலாளி கூறினார்.
யானை ஐந்து விதமாக ஒலியெழுப்பும் என்று ஒரு தகவலாளி கூறினார். கதறுதல் என்பது எல்லா விலங்கு களும் எழுப்பும் ஒலியைக் குறிக்கும் பொதுவான சொல்.
ஆனெ கதருது / கேளெ கதருது / மயிலு கதருது
என்று கூறுவர். கொளெந்தெ கதருது என்றும் கூறுவார்கள். சூக்கெ விடுதல் என்ற இன்னொரு சொல் விலங்குகள் விசிலடிப்பது போன்று எழுப்பும் ஒலியைக் குறிக்கும் சொல்லாகும். கோழி கூவுது என்பதைக் கோழி கூப்பிடுது என்று கூறுகின்றனர்.
ஆனை எழுப்பும் பல்வேறு ஒலிகளைக் குறிக்கச் சில சொற்கள் காணப்படுகின்றன.
ஆனெ ஊதுது / ஆனெ மொரண்டுது / ஆனெ கொதக்குது / ஆனெ கொளருது
முரலுதல், குளறுதல், கொதக்குக் கொதக்கெனல் போன்ற சொற்கள் தற்காலத் தமிழிலும் பழந்தமிழிலும் காணப்படுகின்றனவன்றோ?
6) பச்செ புள்ளகாரி
மலெப்புலயர் மொழியில் நட்சத்திரங்களைக் குறிக்க ‘வெள்ளி’ என்ற சொல் பொதுவாகப் பயன் படுத்தப்படுகின்றது. வளர்பிறை, தேய்பிறை ஆகிய வற்றைக் குறிக்க என்ன சொற்கள் பயன்படுகின்றன என்பதைக் காண முற்பட்டபோது பச்செ புள்ளெகாரி என்ற சொல்லை வைத்து மூன்றாம் பிறையைக் குறிப்பது தெரிய வந்தது. மூன்றாம் பிறைக்கு ஏன் அப்பெயரை வைத்தனர் என்று கேட்கும்போது பிள்ளை பெற்ற
பெண் வேலை செய்யும்போது பிறர் பார்க்காதவாறு திடீரென்று குழந்தைக்குப் பால் கொடுக்க மறைந்து விடுவாளாம். அதைப் போல பிறை நிலவும் சிறிது நேரமே இருந்துவிட்டு மறைந்துவிடுவதால் அதற்குப் பச்செபுள்ளெகாரி என்ற சொல்லைப் பயன்படுத்து கின்றார்களாம். குழவி மதியம், குழவித் திங்கள் போன்ற சொல்லாட்சிகள் நம் இலக்கியங்களில் காணப் படுகின்றன. இலக்கிய ஆசிரியர்கள் பிறைநிலவைக் குழவியாகக் காண்கின்றனர். மலைப் புலயர்கள் தாயாகக் காண்கின்றனர்.
காலை நேரத்தில் பொழுது விடிவதற்கு முன்பாக நான்கு நட்சத்திரங்கள் பக்கம் பக்கமாக நிற்கும். அவை நான்கு கட்டில் கால்களைப் போல அமைந்து காணப்படும். பொழுது விடியும்போது அந்நான்கு நட்சத்திரங்களில் ஒன்று கீழ் நோக்கி இறங்கி வரும். அதனைக் ‘கட்டுலு காலு சரிஞ்சிடுச்சு’ என்று கூறுகின்றனர். ‘கட்டுலு காலு சரிஞ்சிரிச்சு’ என்றால் பொழுது விடிந்துவிட்டது என்று பொருள். ‘வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று’ என்று திருப்பாவையில் வரும் வரியை இங்கு ஒப்பிட்டுக் காணலாம்.
சித்திரையில் வரும் மழையைக் ‘சித்ரகாரி’ என்றும் ‘வெள்ளமழை’ என்றும் கூறுகின்றனர். கருமேகங்கள் இல்லாமல் வெண்மையான மேகங்கள் எப்பொழுதாவது மழை தருவதால் வெள்ளமழை என்று கூறப்படுகிறது. சூன் மாதத்தில் வரும் மழை ‘கோடெமழெ’ என்று அழைக்கப்படுகிறது. காற்றும் மழையும் சேர்ந்து விடாது பெய்யும் மழையை கோடெ மழை என்பர். புரட்டாசி வரை இம்மழை பெய்யும். தென்மேற்குப் பருவ மழையைக் கோடை மழை என்றும். வடகிழக்குப் பருவமழையை ‘அடெ மழை’ என்றும் கூறுவர். அப்பசி அடெ மழை. இதனைக் ‘காவக்காரி’ என்றும் கூறுவர். இக்காலத்தில் உணவுப் பொருள்களைப் பாதுகாத்தும் சிக்கனமாகவும் பயன்படுத்துவது அவர்களுக்குப் பழக்கம்.
7) பெருவிரல் - பெருமெ தாத்தா
உடல் உறுப்புக்கள் அடிப்படையான சொற்கள். அவை இரு கிளை மொழிகளில் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிறுசிறு உச்சரிப்பு வேறுபாட்டுடனோ சொற்கள் வேறுபாட்டுடனோ காணப்படும். மலைப் புலயர் பேசும் தமிழும் இதற்கு விதிவிலக்கு அன்று. கையிலுள்ள விரல்களுக்குப் பெயர்களென்ன என்று கேட்டபோது ஒரு தகவலாளி பின்வருமாறு கூறினார்.
பெரும தாத்தா - பெருவிரல்
ஆளு காட்டி - ஆள்காட்டி விரல்
நடுசோலெ - நடு விரல்
வீரி நடுங்கி - மோதிர விரல
சுண்டலி வீரி - சுண்டு விரல்
பெருமைக்குத் தான் உட்கார்ந்திருக்கிறார் என்று பெருவிரலைக் காண்பிக்கிறார். அதேபோல உள்ளங் கையை ‘மிங்கையி’ என்றும் புறங்கையை ‘பெறங்கையி’ என்றும் கூறுகிறார்கள். கால் விரல்களையும் கை விரல் களைப் போலவே பெயரிட்டு வழங்குகின்றனர். காதினைக் கொப்புகாது, அல்லக்காது, புகிடி என்று மூன்று பிரிவாகப் பகுத்து கூறுகின்றனர். ‘பொய்யங்காது’ என்றும் காதிலுள்ள சிறு பகுதியைக் கூறுகின்றனர். கருவிழியை கருப்பு லாலி என்றும் வெள்ளை விழியை ‘வெள்ளெ லாலி’ என்று அழைக்கின்றனர். ‘லாலி’ என்ற சொல் தாலாட்டுப் பாடலில் வருவதைக் கவனிக்கலாம்.
8) நச்சு பிடிக்காதீங்க
குழந்தை உறங்கிக் கொண்டிருக்கும்போது யாராவது சப்தம் போட்டாலோ, பேசினாலோ அமைதியாக இருக்க வலியுறுத்துவோம். சத்தம் போடாதே என்ற சொல்லுவோம். குழந்தை தூங்குகிறது என்று சொல்லுவோம். மலைப்புலயர் பாஷையில் நச்சு பிடிக்காதீங்க என்று கூறுகிறார்கள். கொளந்தெ தூங்குது நச்சு புடிக்காதடா என்று கூறுவர்.
9) சாட்டு கட்டுதல்
சாட்டு என்ற சொல் தமிழில் உள்ளது. மற்ற வருக்கு மாற்றி விடுதல் என்பது அச்சொல்லின் பொருள். ஒருவர் பெற்ற கடனை மற்றவருக்குச் சாட்டி விடுதல் என்றால் கடனை மற்றவருக்கு மாற்றிவிடுதல் என்று பொருள். சாட்டில்லாமற் சாவில்லை என்ற தொடர் வின்சுலோ அகராதியில் (ப. 429) காணப்படுகின்றது. இங்கே சாட்டு என்பதற்குக் காரணம் என்று பொருள். காரணமில்லாமல் சாவில்லை என்பது அதன் பொருள். அவன் கோவிலைச் சாட்டி வயிறு வளர்க்கிறான் என்றால் கோயிலை வைத்து உயிர் வாழ்கிறான் பிழைக்கிறான் என்று பொருள் (வின்சுலோ, ப.429). இலங்கைத் தமிழில் சாட்டு என்ற சொல் சாக்கு போக்கு என்ற பொருளில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது (காண்க கிரியா அகராதி, ப. 559). ‘திருவிழாவைச் சாட்டாக வைத்துச் சேர்த்த பணத்தை அவர் தன் வீட்டுக்கே கொண்டு சென்றுவிட்டார்.’
ஆனால் மலைப்புலயர் தமிழில் ‘சாட்டுகட்டுதல்’ என்ற சொல் பெருவழக்காகக் காணப்படுகிறது. ஆண்டு தோறும் பங்குனி, சித்திரை மாதங்களில் ஒவ்வொரு புலயர் குடியிலும் நோன்பு (நோம்பி) கொண்டாடப் படும். நோன்பு தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக குடியில் சாட்டு கட்டப்படும். ஊருக்கு எல்லையில் மாவிலை, வேப்பிலைத் தோரணங்கள் கட்டி சாட்டு கட்டியிருப்பதைக் குறிப்பர். சாட்டு கட்டிய பிறகு குடியிலுள்ளோர் தூய்மையைப் பேண வேண்டும். மாதவிடாய் வந்த பெண்டீர் ஊருக்கு வெளியே சென்றுவிட வேண்டும். இரவு நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடலாம். சாட்டு கட்டுதலின் தொடக்கத்தை சாட்டு குத்துது என்றும் இறுதி நிகழ்ச்சியை சாட்டு புடுங்குது என்றும் கூறுகின்றனர்.
10) சொல்லுருவாக்க முறை
காட்டில் ஏராளமாக செடி கொடிகளும் மரங்களும் காணப்படுகின்றன. ஏராளமான வன விலங்குகளும் பறவைகளும் பாம்பு வகைகளும் காணப்படுகின்றன. இவற்றைக் குறிக்க அவர்கள் சொற்கள் உருவாக்கும் முறை ஆழமான மொழியியல், மொழி ஆராய்ச்சிக்கும் உரியது. தும்பைச் செடியில் இரண்டு மூன்று வகைகள் உள்ளன. இவற்றுள் பெரிய வகை தும்பையை ஆனெத் தும்பை என்று பெயரிட்டு அழைக்கின்றனர். அணில் களில் இருவகை ஒன்று சின்னது மற்றொன்று பெரியது. முதல் வகையைச் சிட்டணலு என்றும் இரண்டாவது வகையைப் பேரணலு என்று பெயரிட்டு அழைப்பர். பேரணலை மலெஅணலு என்றும் சொல்வர். ஆனை, மலை போன்ற சொற்களைப் பெரிய வகையை குறிக்கப் பயன்படுத்துகின்றனர்.
முயல் காது போல இலையுள்ள கீரை வகையை மொச காதங்கீரை என்று அழைக்கின்றனர். இன்னொரு கீரைக்குப் பெயர் கோளி கொடலம் கீரை என்பதாகும். ஒரு பூவுக்குப் பெயர் எலிகாதம்பூ. ஒரு செடியின் பெயர் அம்மா பத்னி செடி. இப்படி விலங்குகளின் பெயர் களையும் மனிதர்களைக் குறிக்கும் சில சொற்களையும் புதிய சொற்கள் உருவாக்கப்படுவது மிகவும் சுவாரஸ்ய மாக உள்ளது.
காடு என்ற சொல்லாக்க பின்னொட்டு
காடு என்ற சொல் வனம் என்ற பொருளைத் தரும் சொல். -காடு என்றொரு பின்னொட்டும் தமிழில் உண்டு. நோ/நோக்காடு, வே-வேக்காடு போன்ற சொற் களில் இதனைக் காணலாம். நோ (நோதல்), வே (வேதல்) போன்ற வினைச் சொற்களைப் பெயர்ச் சொற் களாக்க -காடு என்ற பின்னொட்டு பயன்படுகின்றது. பெயர்ச் சொற்கள் சிலவற்றோடும் இப்பின்னொட்டு சேர்ந்து வரும். பூ-பூக்காடு என்ற எடுத்துக்காட்டில் இதனைக் காணலாம். பூக்காடு என்பதற்கு ஏராளமான பூக்கள் என்று பொருள் கொள்ளலாம். மலைப்புலயர் மொழியில் -காடு என்ற பின்னொட்டு பல சொற் களோடு வருகின்றது.
தாரு - மரக்கிளை
தாருகாடு - ஏராளமான கிளைகள்
கொத்து - (மாங்) கொத்து
கொத்துக்காடு - ஏராளமான கொத்துகள்
கசம் - ஆற்றின் ஆழமான பகுதி
கசம்காடு - ஏராளமான கசங்கள்
கல்லு - கல்
கல்லங்காடு - கற்களும் பாறைகளும் நிறைந்த பகுதி
கடை - பொருள்கள் விற்கும் இடம்
கடெ காடு - ஏராளமான கடைகள்
மலெ - மலை
மலங்காடு - ஏராளமான மலைகள்
சப்பு - புதர்
சப்புக்காடு - ஏராளமான புதர்கள்
தாரு என்ற சொல் நம் வழக்கில் வாழைத்தார் என்று பொருள்படுகின்றது. மலைப்புலயர் மொழியில் கிளைகள் என்ற பொதுச்சொல்லாக வேறு பொருளில் வருகின்றது. மலை + அம் + காடு என்று சாரியை ஏற்று மலங்காடு என்று வருவதனையும் கவனிக்கலாம்.
லு என்ற ஆக்கம்
நம்முடைய கிளைமொழியில் காணப்படும் சில சொற்களோடு -லு என் ஆக்கவிகுதி சேர்த்து வழங்கும் நிலை மலைப்புலயர் கிளைமொழியில் காணமுடிகிறது.
கதவு - கதவுலு / அடுப்பு - அடுப்புலு / எருக்கு - எருக்கலு (எருக்கலஞ்செடி)
கதவு என்ற சொல்லோடு -லு விகுதி சேர்த்து வழங்குவது நமக்குப் புதுமையாக இருக்கிறது. ஜன்னல் > ஜன்னலு, மூங்கில் > மூங்கிலு என்று பேச்சுத் தமிழில் மாறுவதைப் போலவே இதனைக் கொள்ளலாமா?
படுதா - படுதாவு / அண்டா - அண்டாவு
11) பழந்தமிழ்ச் சொற்கள்
பழந்தமிழில் வழங்கிய சில சொற்கள் இன்றும் மலைப்புலயர் பேச்சில் காணப்படுகின்றன. அவை நம்முடைய வழக்கில் தற்போது பயன்படுத்தப்படு வதில்லை அவை நமக்கு அருகிய வழக்காகிவிட்டன. எடுத்துக்காட்டாகச் சில சொற்களைக் குறிப்பிடலாம். ‘வெள்ளி’ என்ற சொல் நட்சத்திரங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. இது பொதுவான சொல். தற்காலத் தமிழில் வெள்ளி என்பது உலோகத்தையும் காலையில் உதிக்கும் ஒரு நட்சத்திரத்தையும் மட்டும் குறிக்கின்றது. ‘வெருகு’ என்ற சொல் காட்டுப் பூனையைக் குறிக்கும். இச்சொல் தொல்காப்பியத்தில் பயின்று வந்துள்ளது (காண்க: தொல்காப்பியச் சொற் பொருளடைவு, ப. 374). மலைப்புலயர் தமிழில் ‘வெருகு’ பயன்படுத்தப்படுகின்றது. வெருகு வகையில் பொட்டுவெருகு, கரும்வெருகு, வெள்ளவெருகு என்று மூன்று வகைகள் உள்ளன என்று தகவலாளி தெரி வித்தார். ‘மெய்’ என்ற சொல்லுக்குப் பழந்தமிழில் வடிவம், உடல் போன்ற பொருள்கள் உள்ளன (காண்க: தொல்காப்பிய சொற்பொருளடைவு, ப. 337). மலைப்புலயர் மொழியில் மெய் என்றால் உடல், உடம்பு என்ற பொருள் தரும்.
மலைப்புலயர் மொழியில் ‘கசம்’ என்றொரு சொல் உள்ளது. ஆற்றில் மிகவும் ஆழமான இடத்தை கசம் என்று கூறுவர். கசத்தில் குளித்து விளையாடுவர். கசத்தில் மீன் பிடிப்பர். சிறுவர்கள் சில வேளைகளில் கசத்தில் இறங்கி குளிக்கும்போது மூழ்கி இறந்து விடுவதும் உண்டு. இச்சொல் பழந்தமிழில் கயம் என்று வழங்கியுள்ளது. ‘கயமூழ்கு மகளிர் கண்ணின்மாணும்’ என்பது சங்கப் பாடல் வரியாகும். அளை என்ற சொல் சங்கத் தமிழில் குகையைக் குறிக்கும். புலிசேர்ந்து போகிய கல்லளை போல என்பது புறநானூற்றுப் பாடல் வரி. அளை என்ற சொல் மலைப்புலயர் மொழியிலும் குகையைக் குறிக்கும். அளைத்தேன், அளைவாய், இருட்டளை போன்ற சொற்கள் புலயர் மொழியில் காணப்படுகின்றன. இருட்டளைக்குடி என்ற பெரியரில் முதுவான்குடி ஒன்று உள்ளது. அளைத்தேன் என்பதும் ஒரு வகையான தேன். அதுபோலவே பெருந்தேன் என்ற சொல்லும் பழந்தமிழில் உள்ளது. பொழுது என்ற சொல் சூரியனைக் குறிக்கும். பீலி என்ற சொல் பறவைகளின் இறகினைக் குறிக்கிறது. இவையாவும் பழந்தமிழ்ச் சொற்களாகும். புலம் என்ற சொல் நாடு என்ற பொருளில் தொல்காப்பியத்தில் (காண்க: தொல் காப்பியச் சொற் பொருளடைவு, ப.291) வந்துள்ளது. மலைப்புலயர் என்ற சொல்லே மலைநாட்டில் வாழ் வோர் என்ற பொருளைக் குறிக்கலாம். மலைப்புலயர் பேசும் மொழியை ஆழமாக ஆராய்ந்தால் பழந்
தமிழ்ச் சொற்களையும் கண்டறியலாம். தமிழ்நாட்டில் வாழும் மலைப்புலயர்களைக் குறித்து ஆய்வு செய்த சி.மகேஸ்வரன் (2017, ப.42), புலயன் இனக்குழுவினரின் பேச்சுத் தமிழில் இனங்காணலாகும் சங்கத் தமிழ் சொல்லாட்சிகள் இவர்தம் பேச்சு மொழியானது தமிழின் சிறப்பானதொரு கிளைமொழியாக அடையாளப் படுத்துகின்றது என்று கூறுகிறார்.
ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இங்கு ஒரு சில சொற்களே விவரிக்கப்பட்டன. மலைப்புலயர் மொழியில் காணலாகும் எல்லாச் சொற்களையும் கண்டறிந்து சேர்த்தால் தமிழுக்குப் புதிய வரவாக வளம் சேர்க்கும்.
துணை நூல்கள்
1) மகேஸ்வரன்,சி. சங்க கால வாழ்வியலைக் காட்டும் புலயன் இனக்குழு வரைவியல், சமூக விஞ்ஞானம் காலாண்டிதழ் (பக். 30-44), சென்னை. (2017).
2) பாலசுப்பிரமணியம்,க. தொல்காப்பியச் சொற்பொருளடைவு, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
3) க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி. சென்னை (மறுபதிப்பு 2009)
4) வின்ஸ்லோவின் தமிழ்-ஆங்கில அகராதி. ஏசியன் எஜுகேசனல் சர்வீஸ், புது டெல்லி. (மறுபதிப்பு 1979).