ஈழத்துக் கவிஞர் மறைந்த தீட்சண்யன் (எஸ்.ரி.பிறேமராஜன்) அவர்களது 92 கவிதைகள் அடங்கிய “தீட்சண்யம்” என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த 22-11-2009 ஞாயிறு அன்று லண்டன் என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலய மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. சண்முகநாதன் அவர்கள் மங்கள விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தார். செல்வி.தர்ஷியா இரவீந்திரகுமாரன் அவர்களின் இறைவணக்கப் பாடலைத் தொடர்ந்து அகவணக்க நிகழ்வு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து செல்வி தர்ஷியா இரவீந்திரகுமாரன் அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தினார்.

விழாவிற்குத் தலைமை தாங்கிய கவிஞர் பாலரவி அவர்கள் தன் தலைமை உரையோடு நிகழ்ச்சிகளைத் தொடங்கினார். அவர் தன் தலைமை உரையிலே “தாயகத்தின் விடிவிற்காய் தீட்சண்யன் தந்த பங்கு வாயுரைத்துக் கூறிட முடியாது….” என்று தன் காத்திரமான கருத்துக்களைக் கவி வடிவில் வடித்து கவிதை நயத்தோடு விழாவை சிறப்பாக நடாத்தினார்.

அதனைத் தொடாந்து என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயப் பிரதம குருக்கள் சிவஸ்ரீ கமலநாதக் குருக்கள் அவர்கள் தனது ஆசியுரையிலே தீட்சண்யன் அவர்களின் கவிதைகளை சிலாகித்துப் பேசி அவரின் கவிதைகளை நூல் வடிவில் கொண்டு வந்து இந்த வெளியீட்டு விழாவினூடாக அவற்றை உலகிற்கு அறிமுகப்படுத்திய கவிஞர் தீட்சண்யன் அவர்களின் தங்கைகள் இருவருக்கும் மற்றும் கவிஞரின் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள் கூறி நல்லாசிகள் வழங்கினார்.

ஆசியுரையைத் தொடர்ந்து கவிஞர் கந்தையா இராஜமனோகரன் அவர்கள் மிகவும் விரிவான ஒரு சிறப்புரையை ஆற்றினார். அவர் கவிஞர் தீட்சண்யன் அவர்களின் உள்ளம் கவர்ந்த கவிதைகளை நயத்தோடு எடுத்துரைத்து அதன் வீச்சங்களைச் சுட்டிக்காட்டி மறைந்த கவிஞர் தீட்சண்யனின் கனவுகள் நனவாக வேண்டும் என்ற ஆதங்கத்தோடு தீட்சண்யனின் தங்கை சந்திரா இரவீந்திரன் அவர்களின் இந்த நூல் வெளியீட்டு விழா முயற்சியைப் பாராட்டி தன் உரையைத் தாயக விடிவின் பிரார்த்தனையோடு நிறைவு படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து ஆய்வாளர் திரு.பற்றிமாகரன் அவர்களின் ஆய்வுரை சிவஸ்ரீ கமலநாதக் குருக்கள் அவர்களால் வாசித்தளிக்கப்பட்டது. உடல் நிலைக் குறைவின் காரணமாக திரு.பற்றிமாகரன் அவர்களால் கடைசி நிமிடம் விழாவிற்கு நேரில் சமூகமளிக்க முடியாமல் போன காரணத்தால் அவரின் நூல் பற்றிய விரிவான ஆய்வுரை எழுத்து வடிவில் அவரால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அந்த ஆய்வுரையில் கவிஞர் தீட்சண்யன் அவர்களின் தாயக மீட்புத் தாகமும் விடியல் பற்றிய அவரின் கனவுகளும், காத்திரமான யதார்த்தமான அவரின் கவிதைப் படைப்புகளும், களத்தில் நின்று கவிதை சொன்ன அவரின் நெஞ்சார்ந்த தாய் மண் நேசமும், அவரின் மனித நேயமும் படைப்புளூடாய் அலசி ஆராயப்பட்டு கவிதைகளின் கனம் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

அடுத்து தமிழ்ப் பாடசாலை அதிபரும் தமிழ் மொழிப்பற்றாளருமான திரு.சுந்தரம்பிள்ளை சிவச்சந்திரன் அவர்கள் தனது ஆய்வுரையிலே கவிஞரின் படைப்புகளையும் நூலின் அட்டைப்பட ஓவியம் மற்றும் அழகான பிரசுரம் பற்றியும் தன் கருத்துக்களைக் கூறி மற்றும் கவிஞர் மறைந்தாலும் அவரின் உயிருள்ள கவிதைகள் தாயக விடியலுக்கு உரம் சேர்க்கும் என்ற திடமான கருத்தோடு கவிஞரின் தங்கைகளது நன் முயற்சியையும் பாராட்டி ஜெர்மனியிலிருந்து வருகை தந்திருந்த கவிஞரின் தாயாரை வாழ்த்தி வணங்கியும் தன் விரிவான ஆய்வுரையை நிறைவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து புலவர் சிவநாதன் அவர்கள் தன் சிறப்புரையைக் கவிமழையாகப் பொழிந்தார். கவிஞர் தீட்சண்யன் பற்றிக் கூறுகையில் “தன்னை நம்புபவன் தாய் நாட்டை நம்புபவன். தன் மக்கள் துயரத்தைத் தாங்கி முழங்குபவன்…” என்று உண்மைக் கவிஞர்களின் உளம் பற்றியும் எடுத்தியம்பி கவிதையால் சிறப்பு மழை பொழிந்து தாயகத்தின் விடிவிற்கான தன் கருத்தை தன் நம்பிக்கையை தெளிவாகத் தெரிவித்து கவிஞர் தீட்சண்யன் அவர்களின் குடும்பத்தினரையும் இதயம் நிறைய வாழ்த்தி தன் கவிதை மழையை நிறைவு செய்தார்.

அவரின் உரையைத் தொடர்ந்து ஜேர்மனியிலிருந்து வருகை தந்திருந்த மறைந்த கவிஞர் தீட்சண்யன் அவர்களின் தாயார் சிவா தியாகராஜா அவர்கள் “தீட்சண்யம்” நூலின் முதற் பிரதியை வெளியிட்டு வைத்தார்.

திரு.கைலாயபதிவாகன் அவர்கள் முதற் பிரதியைப் பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் சிறப்புப் பிரதிகளை ஜிரிவி தொலைக்காட்சி இயக்குனர் திரு.கருணைலிங்கம் அவர்களும் டாக்டர் சிவா அவர்களும் 'ஒரு பேப்பர்'- கோபி அவர்களும் பெற்றுக்கொண்டு வெளியீட்டு நிகழ்வைச் சிறப்பித்தார்கள்.

இறுதியாக கவிஞர் தீட்சண்யன் அவர்களின் தங்கை சந்திரா இரவீந்திரன் அவர்கள் பதிலுரையும் நன்றி உரையும் வழங்கினார். பதிலுரையில் கவிஞர் தீட்சண்யனுடனான அண்ணன் தங்கை உறவின் வாழ்வனுபவங்களை கவிதை வடிவிலே கண்ணீர் மல்கக் கூறி, தன் தாயின் மனஉறுதியும் நம்பிக்கையுமே தம் எல்லோரினதும் துயரங்களை துடைத்தெறிந்து வாழவைக்கும் சக்தியைத் தமக்குத் தருவதாகவும் தன் அண்ணன் தீட்சண்யன் அவர்களின் கனவுகள் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடும் விழாவில் உரையாற்றிய பேச்சாளப் பெருமக்களுக்கும் சபையோருக்கும் நன்றி கூறி, இறுதியில் பலரது வேண்டுகோளுக்கு இணங்க இந் நூல் வெளியிடப்படும் இந்நன்நாளிலே “தீட்சண்யன்” இலக்கிய வட்டம் என்ற ஒரு தாயக இலக்கியம் நோக்கிய ஒரு அமைப்பை அறிமுகப்படுத்தி அந்த இலக்கிய வட்டத்தின் தலைவராக சிவஸ்ரீ கமலநாதக் குருக்கள் அவர்களையும் திருமதி சந்திரா இரவீந்திரன் அவர்கள் அதன் செயலாளராகவும் திரு கைலாயபதிவாகன் அவர்கள் பொருளாளராகவும் செயற்படுவார்கள் என்ற செய்தியையும் அறிவித்து விழாவை இனிதே நிறைவு செய்தார்.

அனைவரும் இராப்போசனம் அருந்தி விடைபெற்றுக் கொண்டார்கள்.

“தீட்சண்யம்”

படைப்பாக்கம் :- மறைந்த கவிஞர் தீட்சண்யன் (எஸ்.ரி.பிறேமராஜன்).

நூல் உருவாக்கம் - சந்திரவதனா செல்வகுமாரன்..

நூல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்:- சந்திரா இரவீந்திரன்

“தீட்சண்யம்” நூலைப் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு விபரம்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

- சந்திரா இரவீந்திரன் 

Pin It