நேர்காணல் : க.காமராசன், ஜி.சரவணன்

தஞ்சை மாவட்டக் கிராமமொன்றில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ச.சுபாஷ் சந்திரபோஸ் தமிழ்த்துறையில் பயின்று முனைவர் பட்டம் பெற்று, இலக்கண மொழியியல் ஆய்வுகள், படைப்பிலக்கியங்கள், நாட்டார் வழக்காறு, களஆய்வுகள் எனப் பல்வேறு தளங்களில் இயங்கிக் கொண்டிருப்பவர்.  திருவையாறு அரசர் கலைக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், ‘மாவீரன் வாட்டாக்குடி இரணியன்’, ‘சாம்பவான் ஓடைச் சிவராமன்’, ‘மலைப் பாம்பு மனிதர்கள்’ ஆகிய புதினம் உட்பட 64 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். ஓய்வுக்குப் பிறகும் மொழியியல் நூல்களை வெளியிடத் திட்டமிட்டு அதற்கான தயாரிப்பில் அவர் இயங்கிக் கொண்டிருக்கும் இச்சமயத்தில் நேர்காணலுக்காக அவரைச் சந்தித்தோம். இனி அவருடனான உரையாடல்.

எப்போது, எங்குப் பிறந்தீர்கள் என்பவை தொடங்கி உங்கள் குடும்பச் சூழல் பற்றிச் சொல்லுங்கள்?

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு வட்டத்தைச் சார்ந்த ஒக்கநாடு கீழையூர் பிறந்த ஊர். ஒக்கூர் என்று தான் பேச்சு வழக்கில் கூறப்படும். புது ஆற்றுப் பாசனம் வருவதற்கு முன் ஒரு வானம் பார்த்த பூமி தான். காலங்காலமாக உழைப்பு, உழைப்பு என்று உழைப்பைத் தவிர வேறு ஒன்றையும் அறியாதவர்கள் எங்கள் பகுதி மக்கள்.

புஞ்சைச் சாகுபடியைச் செய்து விட்டுப் பத்துப் பேர், இருபது பேருக்குக் குறையாத கூட்டுக் குடும்ப மக்கள் அந்த மண்ணில் கிடந்துதான் உழல்வார்கள். இப்போது குத்துக் கடலை என்று ஒன்று சாகுபடி செய்யப்படுகின்றது. அந்தக் காலத்தில் கொடிக் கடலை என்பது சாகுபடி செய்யப்படும். மிதி பாகல் கொடி போலப் பூமியில் பரவி வளரும். அதைக் கையாடும்போது கொடியில் வரும் கடலையை விடப் பூமியில் தங்குவதே அதிகம். அதைக் குடும்பமே சீய்த்து எடுக்கும்! ‘உழுதவன் கணக்குப் பாத்தா ஒழக்குக்கூட மிஞ்சாது’ என்பது பொதுவான சொலவச் சொல்லாக இருந்தாலும் கடலையைச் சீய்த்து எடுப்பதற்கு மிகவும் பொருத்தமானது.

புழுதியில் போட்டதைத் தேடுவதைப் போலக் களைக் கொட்டால் கொல்லையை வெயிலிலும் வேனலிலும் நெற்றி வியர்வை நிலத்தில் கொட்டச் சீய்ப்பார்கள். பத்துப் பேர் சீய்த்து எடுத்தாலும் ஒரு நாளைக்கு அரை மூட்டை அளவுக்குக்கூடச் சேராது. அவர்களுடைய உழைப்புக்கும் அதனால் கிடைக்கும் பலனுக்கும் தொடர்பே இருக்காது. விற்கப் போனால் வியாபாரி கொடுப்பதுதான் விலை.

1930களில் புது ஆற்றுப் பாசனம் வந்தும் மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வர வில்லை. காலங்காலமாக இருந்த மரமட்டைகள், மூலிகைச் செடிகள் எல்லாம் அழிந்தன. புஞ்சைக் காட்டை நஞ்சையாக்க முயன்ற அந்நியரைப் பாராட்ட வேண்டும். அவர்கள் பிள்ளையாராகப் பிடித்துக் கொடுத்து விட்டுப் போனார்கள். நம்ம வர்கள் காலத்தால் அது குரங்காகிப் போனது. பழைய ஆற்றுப் பாசனப் பகுதியில் காவிரி நீர் வராமல் போன பிறகுதான் காவிரிப் பிரச்சினை பெரிதாகப் பேசப்பட்டது. ஆனால் புதாற்றின் கடைமடைப் பகுதியில் எப்போதுமே தண்ணீர்த் தட்டுப்பாடு தான்.

புதாற்றுப் பாசனத்தில் விவசாயம் செய்பவர் களுக்கு ஐந்து மா, பத்து மா, ஒரு வேலி என நிலம் இருந்தது. ஆனால் நீர் தட்டுப்பாடு.  எங்கள் பகுதிக்குக் கிழக்கே தான் கீழத் தஞ்சை.  தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட திருவாரூர், நாகப்பட்டிண மாவட்டங்கள் கீழத்தஞ்சையைச் சார்ந்தவை. பழைய ஆற்றுப் பாசனத்தில் பத்து லட்சம் ஏக்கருக்கு மேல் சாகுபடி நிலம் இருந்தது. காவிரியின் பல கிளை நதிகளும் அந்தப் பகுதியில் தான் பாய்ந்தன.

‘நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளை யாடும் தஞ்சை’ என்னும் வாசகத்தை முன்பு மேடைப் பேச்சுகளில் அடிக்கடி கேட்கலாம். புஞ்சை கொஞ்சி எனப் பேசுப்படுவது எதுகை மோனைக்குத்தான். ஆனால் நஞ்சை கொஞ்சி விளையாடியது உண்மைதான். ஆனால் அதில் பாடுபட்ட பாட்டாளி மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் இரங்கத்தக்கது; கொடுமையானது. ஆய கலைகளும் வளர்க்கப்பட்ட இந்தப் பகுதியில்தான் பாட்டாளி மக்களுக்குச் சாணிப்பால் கொடுக்கும் அவலங்களும் நிகழ்ந்தன.

பெரும்பாலான பகுதி நிலங்கள் பண்ணை, கோயில், மடங்களுக்கு உரிமை உடையவையாக இருந்தன. பாட்டாளி மக்களின் உறைவிடம் சுரைக் கொடி படர்ந்த கோழிக் குடாப்புப் போன்ற குடிசைகள்; உண்டி கால் வயிற்றுக்குக் கஞ்சி. உடையைப் புதுக்கவிதை போன்ற பாடல் அடி களில் காணலாம்.

கதிரோன் தோன்றினான்

கவலை கொண்டு ஏங்கினோம்

உடையோ கோமணம்

உணவோ நீராகாரம்.

‘சோழ நாடு சோறுடைத்து’ என்பது உண்மை தான். ஆனால் அது யாருக்கு உடைத்து என்பது தான் வினாவே. அமெரிக்காவில் நீக்ரோக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். வேறு பல நாடுகளிலும் அடிமைத்தனம் இருந்தது. ஆனால் சோழ நாட்டில் இருந்த அடிமைத்தனத்தைப் போல வேறு எங்கும் இல்லை எனச் சமூகவியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளுக்கு அதிகமாகப் பிழைப்புத் தேடிப் போன மக்கள் வளங்கொழித்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் வளம் குன்றிய இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் என்பார்கள்.

சுரண்டலாலும் வறட்சியாலும் பாதிக்கப் பட்டுப் பிழைப்புத் தேடித் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குத் தமிழர்கள் சென்றார்கள். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய இராணுவத் திற்குத் தலைமை ஏற்ற போது அதில் கலந்து கொண்டு அந்நியருடன் போராடியவர்களும் அந்நாடுகளில் வாழ்ந்த தமிழர்களே.

சிவசாமி - சிந்தாமணி தம்பதியினருக்கு ஒரு ஆண்பிள்ளை, மூன்று பெண் பிள்ளைகள். ஒரு வேலி நிலமிருந்தும் சரியான வருவாய் இல்லை. மகள்களுக்குத் திருமணம் செய்ய வேண்டும். மகனை நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதிச் சிங்கப்பூர் அனுப்புகின்றார்கள். வீட்டுக்காகப் பாடுபடச் சென்ற மகன் நாட்டுக்காகப் பாடுபட இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்துவிட்டார். கடிதப் போக்குவரத்தும் இல்லை. போரில் மரணம் அடைந்துவிட்டார் என்பது செவி வழிச் செய்தி.

கல் இல்லாத சோறும் முள் இல்லாத மீனும் கிடைக்கும் பர்மாவில் ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருந்தன. இரண் டாவது உலகப் போர் முடிந்ததும் பெரும்பாலான வர்கள் பர்மாவிலிருந்து தாயகத்திற்கு அகதி களாகத் திரும்பினார்கள். அவ்வாறு திரும்பிய குடும்பங்களுள் ஒக்கநாடு கீழையூரைச் சேர்ந்த குடும்பமும் ஒன்று.

இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து நேதாஜியின் மெய்க்காப்பாளர்களுள் ஒருவராக இருந்தார். வெறுங்கையோடு போனவர் போர் முடிந்ததும் வீரமிக்க கையோடு மகன் பிறந்தால் தலைவரின் பெயர் சுபாஷ் சந்திரபோஸ் என்றே வைப்பேன் என்னும் சபதத்தோடு வந்தார் சிவசாமி சண்முகம். இவருக்கும் பர்மா அகதியாக வந்த குடும்பத்தில் பிறந்த பாக்கியம் என்பவருக்கும்

13-03-1949இல் பிறந்ததே சுபாஷ் சந்திரபோஸ் என்னும் குழந்தை.

பல்வேறு பட்டங்களைப் பெற்றுள்ள உங்கள் கல்விச் சூழலைப் பற்றி...?

அந்நியர்கள் ஆட்சிக் காலத்தில் அம்மை நோய்க்கு ஊசி போடும் முறை அறிமுகப்படுத்தப் பட்டது. அழும் பிள்ளை வாயை மூட, ‘இந்தா அம்ம குத்துறவன் வாரான், என்றால் போதும்; பிள்ளைகள் காத தூரம் ஓடி ஒளிவார்களாம். அதே போல் பெற்றோர்கள் வெள்ளைக்காரன் காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் பள்ளிக் கூடங்கள் தொடங்கியபோது பயந்தார்களாம்.

பிள்ளைகள் பள்ளிக்கூடம் போய் விட்டால் ஆடு மாடு மேய்க்க ஆள் இருக்காது; உழ ஆள் குறையும்; வயற்காடு, கொல்லைக் காடு புல்மண்டிப் போய்விடும் என்பதே பயத்திற்குக் காரணம். காலங் காலமாகவே ஆளும் வர்க்கமும் வியாபாரிகளும் வேளாண் மக்களைச் சுரண்டினாலும் வேளாண் தொழில் மக்களின் ஊனோடும் உயிரோடும் கலந்திருந்ததை ஐயப்பட முடியாது.

என்னைப் போன்றோர் பள்ளிக்கூடம் போகத் தொடங்கிய காலத்தில் பெற்றோர்களிடம் கல்வியைப் பற்றிய ஒரு புரிதல் ஏற்பட்டது. வேளாண் தொழிலைச் செய்யாமல் பிற தொழில்களைச் செய்பவர்கள் தம்மை ஏமாற்றுவதாகப் புரிந்து கொண்டார்கள். பெரும்பான்மையான மக்கள் படிக்கவில்லை என்றாலும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. விவசாயிகள், பிற தொழிலாளர்கள் என அனை வருமே கல்வியின் அருமையை உணர்ந்தார்கள்.

கள்ளுக் கடைகள் மூடப்பட்ட போது அந்த இழப்பை ஈடுகட்டப் பள்ளிக்கூடங்கள் பல மூடப் பட்டன; மூதறிஞரால் குலக் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. சிலர் நல்ல திட்டம் என்றார்கள். யாருக்கு என்னும் கேள்வி இங்கும் எழும்.

படிக்காத மேதை என்று போற்றப்பட்ட காமராசர் பட்டிதொட்டி எங்கும் பள்ளிக்கூடங் களைத் திறந்தார். நிலஉரிமையாளராக இருந்த குடியானவர்கள் வாழ்ந்த ஊர்களில் பொது வுடைமைக் கோட்பாடு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வில்லை.  இருந்தபோதிலும் காங்கிரஸ் விடுதலையை வாங்கித் தந்தாலும் அது மக்களுக்குத் தெரிந் தாலும் தெரியாவிட்டாலும் தமிழகம் மூவருக்கு நன்றிக் கடன் பட்டிருக்கின்றது. பொதுவுடைமைக் கட்சி, தந்தை பெரியார், காமராசர்.

பதினோராம் வகுப்பு வரை ஒக்கநாடு கீழையூர், கீழவன்னிப்பட்டு, ஒரத்தநாடு எனப் பல ஊர்களில் படிக்க முடிந்தது. பதினோராம் வகுப்புக்குப் பிறகு புகுமுக வகுப்பு (P.U.C) என்பதைக் கல்லூரியில் படிக்க வேண்டும். அது ஒரு கண்டம்; குறிப்பாகக் கிராமப்புற மாணவர்கள் அதைத் தாண்டினால் கரையேறலாம். இல்லாவிட்டால் அப்பன் தொழில் களாகிய முழங்கால் தண்ணீரில்தான் நீச்சல் அடிக்க வேண்டும்.

புகுமுக விருப்பின் தேக்கம் அப்படி ஒரு நிலையை உருவாக்கியது. சாகுபடியில் ஒரு நாட்டம் வந்த போது, கடன் பட்டதை அடைக்க மறுபடியும் சிங்கப்பூருக்குக் கப்பல் ஏறிய அப்பா நிலத்தில் இறங்க விடவில்லை. ‘ஒரு பட்டப் படிப்பை முடித்துவிட்டு, விருப்பப்பட்டால் வந்து விவசாயம் செய்’ என்று எழுதி விட்டார். வேறு வழியில்லை.

மகன் மருத்துவம் படிக்க வேண்டும் என்பது அப்பாவின் ஆசை; அது கிட்டாத போதும் கவலைப் படவில்லை. உலகத்தை அறிய நாலு எழுத்தைப் படிக்க வேண்டும். எந்தப் பட்டத்தை வாங்கினாலும் கவலை இல்லை என்பது தான் அப்பாவின் கல்வியியல் கோட்பாடு.

அம்மா பாக்கியம் பர்மாவில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவர். எதிலும் அதிகம் ஆசைப்படாதவர்; புத்தர் கோட்பாடு பின்பற்றப் பட்ட மண்ணில் பிறந்தது ஒரு காரணமாக இருக்குமோ என்னவோ? மண் தான் காரணமாக இருந்திருக்கும். கண்டிப்பாக மக்கள் காரணமாக இருந்திருக்க மாட்டார்கள். மதங்களை வைத்துக் கொண்டு ஆதி காலம் முதல் அண்மைக் காலம் வரை மதவாதிகள் அடிக்கும் கூத்தைத் தான் காண்கிறோமே? அது ஒரு தனிக் கதை.

‘விருப்பம் இருந்தால் படி; படிக்க விருப்பம் இல்லாவிட்டால் விவசாயத்தை செய்;’ என்று முடிவுகளை என் விருப்பத்திற்கு விட்டு விட்டார். பிறகு புகுமுக வகுப்பை முடித்துப் பழனியில் இந்தியப் பண்பாட்டுக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பு. அங்குப் படிக்கும் போது ஒரு திருப்புமுனை; யாரென்றே தெரியாதவர்கள்கூட, அறிமுகம் இல்லா மலேயே நல்ல புத்தகங்களைப் போலத் திருப்பு முனையாக அமைவார்கள்.

இளங்கலையில் முதல் பிரிவாகிய தமிழில் கல்லூரி அளவில் முதல் மதிப்பெண் பெற்றதால் முருகேச முதலியார் அறக்கட்டளை அமைப்பு நூறு ரூபாய் மதிப்புள்ள தூக்க முடியாத அளவுக்குப் புத்தகங்களை வழங்கித் தமிழ் முதுகலை படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது.

காலங்காலமாகத் தரிசு கிடந்த நிலம் வாய்ப்புக் கிடைக்கும் போது வளைத்துப் பிடித்து விளையும். கட்டியே கிடக்கும் மாட்டை அவிழ்த்து விட்டால் அது இங்கும் அங்கும் ஓடி மேய்வதைப் பார்க்க வேண்டும். கல்வி, இசை, நிர்வாகம், மேம்பட்ட சிந்தனைகள் என எல்லாவற்றையும் முற்பட்ட இனங்களுக்குப் பட்டா போட்டுக் கொடுக்கப் பட்டவை போன்று பட்டா போட்டுப் பேசு வார்கள். கல்வி பரவலாக்கப்பட்ட பிறகு இவற்றில் கொடிகட்டிப் பறப்பவர்களைப் பார்க்கலாம். இடஒதுக்கீடு போன்ற வாய்ப்புகளைப் பயன் படுத்திக் கொண்டு கிணற்றில் போட்ட கல்லைப் போன்று கிடக்கும் கருப்பு ஆடுகளும் உண்டு. அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டிய தில்லை. வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களாவது வளர்ந்தார்களே என்று ஆறுதல் அடையலாம்.

தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் எனப் புத்தகங்கள் பரிசு பெற்ற பிறகு கால்கள் பூமியில் தரிக்கவில்லை; இளங்கலை மூன்றாமாண்டு படிக்கும் போதே முதுகலைத் தமிழை மதுரை தியாகராயர் கல்லூரியில் படிக்க வேண்டும் என்று முடிவு செய்யப் பட்டது. பல அறிஞர்களை உருவாக்கிய கல்லூரி; வ.சுப.மாணிக்கம் போன்ற பேராசிரியர்கள் பணி யாற்றிய கல்லூரி.  இடம் கிடைக்குமா? கிடைக் காதா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் முன்னோட்டமாகக் கல்லூரியைப் பார்க்கும் படலமும் முடிந்து விட்டது.

இளங்கலை தேர்ச்சி பெற்று முதுகலைத் தமிழில் சேர விண்ணப்பிக்கும் போது இன்னொரு திருப்புமுனை. பாடத்தில் மாற்றம் இல்லை. அரசியல்வாதிகள், அறிஞர்கள் என அனைவரும் முழங்குவது போலத் தமிழ் நம்முடைய மூச்சல்லவா? மைய, மாநில அரசுகளின் மொழிக் கொள்கை, ஆளும் வர்க்கங்களின் இரட்டை வேடம், மக்களின் என்றும் தணியாத ஆங்கில மோகம் போன்ற வற்றால் தமிழ் தன்னுடைய பழங்காலத் தெம்பால் வாழ்ந்து கொண்டிருப்பது தனிக்கதை.

முதுகலைத் தமிழைத் தியாகராயர் கல்லூரியில் படிக்க, இடத்திற்குப் பரிந்துரைக் கடிதம் கேட்ட போது அனுபவம் மிக்கவர் மடையை மாற்றி விட்டார். மதுரைப் பல்கலைக் கழகம் தொடங்கிய போது அதன் முதல் பதிவாளர் இரா.பெருமாள் மதுரைப் பல்கiலைக் கழகத்தில் படிக்குமாறு அறிவுறுத்தினார். இடம் கிடைக்கவும் முனைவர் மோ.இசரயேல் என்னும் பேராசிரியருக்குப் பரிந்துரைக் கடிதம் கொடுத்தார்.

பல்கலைக்கழகம் என்றால் அங்குக் கல்லூரி களுக்கான நிர்வாகம் மட்டும் தான் நடக்கும் என்பது பொதுவான எண்ணம்.  முன்னாள் பதிவாளர் சொல்லிய பிறகுதான் அங்குப் பல துறைகள் இருக்கின்றன என்பது தெரிய வந்தது. அங்குப் போய்ச் சேர்ந்த பிறகு தான் தெரிய வந்தது.

காலங்காலமாகப் படிப்பறிவு இல்லாத சமுதாயத்திலிருந்து முதல் தலைமுறையாகப் படிக்க வருகின்றவர்களின் அனுபவம் சொல்லி மாளாது. கல்வி, அதன் வழிக் கிடைக்கும் அறிவு, வாய்ப்பு, வசதிகள் போன்றவற்றால்தான் அது பெரும்பாலான மக்களுக்கு மறுக்கப்பட்டதோ? என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

தமிழ், மொழியியல் போன்ற பாடங்களைப் படிக்க ஏற்பட்ட ஆர்வம், பாடம் நடத்திய பேராசிரியர்கள் பற்றிக் கூற முடியுமா?

இளங்கலையில் தமிழை முதன்மைப் பாட மாக எடுத்துப் படிக்கவில்லை; பகுதி ஒன்றில் தமிழ்ப் படித்ததால்தான் முதுகலைத் தமிழ்ப் படிக்க இடம் கிடைத்தது. ஒவ்வொருவரும் அமர, தனி இருக்கை, விடுதியில் தனி அறை, அன்றைய மதுரைப் பல்கலைக்கழகத்தின் கம்பீரமான தோற்றம், குறைவான மாணவர்கள், நிறைவான பேராசிரியர்கள், பெரிய நூலகம் எனக் கல்வி கற்பதற்கான சூழல் நன்றாக இருந்தது.

கிராமப்புறத்தில் ஒரு வகையான கல்வி, நகர்ப்புறத்தில் ஒரு வகையான கல்வி இருப்பதைப் போன்று கல்லூரி வகுப்புகளில் நிறைய மாண வர்கள், பல்கலைக்கழகத் துறைகளில் குறிப்பிட்ட அளவு மாணவர்கள் எனப் படிக்க உள்ள வசதி களில் வேறுபாடு இருக்கின்றது; இருப்பினும் படிக்கும் பாடம் ஒன்றே.

தற்போது மருத்துவம், பொறியியல் போன்ற வற்றுக்குப் பொது நுழைவுத் தேர்வு பற்றி நிறைய விவாதங்கள் வருகின்றன. மாநிலத்திற்கு மாநிலம் பாடத்திட்டம் மாறுபடுகின்றது. ஒரே முறையில் எப்படிப் பொதுத் தேர்வை எழுத முடியும்? இந்திய அளவில் பொதுப் பாடத் திட்டத்தைக் கொண்டு வந்து பொதுத் தேர்வை வைத்தால்தான் வாய்ப்புகள் பரவலாக்கப்படும்.

முதுகலை முதலாமாண்டில் முதல் நாள் முதல் வகுப்பு; விருப்பப் பாடம் பிரிக்கிறார்கள் அருகில் அமர்ந்துள்ள மாணவர்கள் யாரும் தெரிந்த வர்கள் இல்லை. புதினம் (Novel), மொழியியல்  (Linguistics) என்பவை விருப்பப் பாடங்கள். விருப்பப் பாடத்தைப் பற்றி எதுவுமே தெரியாமல் தேர்வு செய்தது ஒரு திருப்புமுனை.

நாவல் என்றால் பொருள் புரிகின்றது. இளங்கலைப் படிக்கும்போது மு.வ., ஜெயகாந்தன், சாண்டில்யன் போன்றோரின் பல புதினங்களைப் படித்ததால் அது பற்றிய ஒரு சிறு புரிதல் இருந்தது. ஆனால் Linguistics என்னும் சொல்லுக்குத் தமிழில் என்ன பொருள் என்றே தெரியவில்லை. இடம் வலம் அமர்ந்திருந்தவர்களிடம் கேட்டால் அவர் களுக்கும் தெரியவில்லை.

பேராசிரியர் வந்து விருப்பப் பாடம் படிப்பவர் களை இரண்டு பிரிவாகப் பிரிக்க முதலில் புதினத்தைக் குறிப்பிடுகின்றார். மகளிரில் ஒருவரும் ஆடவரில் பலரும் கையைத் தூக்குகின்றார். மதில் மேல் பூனை போலத் தான் மனநிலை இருந்தது. மொத்த மாணவர் களே பத்தொன்பது பேர் தான். ஏழு பேர் புதினத்தை விருப்பப் பாடமாக எடுத்தார்கள். மற்றவர்கள் மொழியியலை விருப்பப் பாடமாக எடுத்தார்கள். இருவரைத் தவிர மற்றையவர் மகளிர்.

ஒரு தடத்தில் போகும் போது இருவழிகள் பிரிகின்றன. அறிவிப்பும் இல்லை; கேட்க ஆளும் இல்லை; தொடு குறி போலப் போகிறவர் விருப்பம் தான். அது போகக்கூடிய இடத்தின் வழியாகவும் இருக்கலாம் வேறு வழியாகவும் இருக்கலாம்.

இடநெருக்கடியால் விடுதியில் தனிஅறை கிடைக்கவில்லை. முதுகலை இரண்டாமாண்டு படிக்கக் கூடியவர் தோள் கொடுத்தார். வெள்ளரிப் பழம் போன்ற நிறம். பட்டிக்காட்டில் பிறந்தவர் தான். ஒவ்வொருவருக்கும் ஒரு பழக்கம் இருக்கும். அவர் உடம்பில் அழுக்கைத் திரட்டிக் கொண்டே படிப்பார். அவர் படித்த புத்தகத்தை புரட்டினால் பக்கத்திற்குப் பக்கம் சிறுசிறு அழுக்குத் திரட்டு, படித்ததற்கு அடையாளமாக இருக்கும்.

வியப்பாக இருக்கும்! ஒரு மனிதன் உடம்பில் இவ்வளவு அழுக்கு இருக்குமா? அதுவும் அவருடைய உடம்பு சிவந்த உடம்பு. வகுப்புக்குப் போன நேரம் போக மற்றைய நேரத்தில் படிப்பு! படிப்பு!! படிப்பு!!! தான். லெனின் கூறியதைப் படித்திருப் பாரோ? இந்தச் சூத்திரத்திற்கு இலக்கியமாகவே திகழ்ந்தார்.

இப்படித் தான் படிக்க வேண்டுமா? நிறையப் படிக்க வேண்டும் என்பதற்கு மனதிற்குள் ஒரு பெரிய வினாவைக் கோலிக் காட்டியவர் அவர் தான். சிலப்பதிகாரத்தில் ஒரு காண்டம் பாடமாக இருக்கும். அதை மட்டும் படிக்க மாட்டார். சிலப்பதிகாரம் தொடர்பாக வந்துள்ள நூல்களை எல்லாம் தேடிப் பிடித்துப் படிப்பார். வசதியான குடும்பத்தில் பிறந்தவரில்லை; இருந்தாலும் மற்ற செலவுகளைத் தவிர்த்துக் கொண்டு புத்தகம் வாங்குவார்.

படிக்க வேண்டும் என்றால் நிறைய நேரம் படிக்க வேண்டும்; நிறையப் புத்தகங்களைப் படிக்க வேண்டும்; நிறையப் புத்தகங்களைச் சொந்தமாக்க வேண்டும் என்பவற்றைச் செயலால் கற்பித்த அவர் தான் படிப்புக்கு முதல் குருநாதர்!

திண்டுக்கல், காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றுள்ள பேராசிரியர் முனைவர் அ.பிச்சை என்பவர் தான் அந்தச் சகோதரர்.

புதினத்தை நாமாகப் படித்துக் கொள்ளலாம், மொழியியலைப் படித்துப் பார்ப்போம் எனக் குழப்பத்திலும் ஒரு சிறு தெளிவோடு எடுத்தது தான் மொழியியல் விருப்பப் பாடம். இலக்கணம் மொழியியல் சார்ந்து கிட்டத்தட்ட இருபத்தைந்து நூல்களும் பல கட்டுரைகளும் எழுத, இன்னும் எழுத வாய்ப்பைக் கொடுத்தது அந்தத் திடீர்த் திருப்பமே!

விருப்பப் பாடத் தேர்வுக்குப் பிறகு வகுப்பை விட்டு வெளியே வந்தால் வகுப்பு நண்பர்கள் குழப்புகின்றார்கள். மொழியியல் புரியாத படிப்பு, அதைப் படித்தால் அதுவும் விளங்காது, தமிழும் விளக்காது என்றார்கள். பெரும்பாலானவர்கள் இளங்கலையில் முதன்மைப் பாடமாகத் தமிழைப் படித்தவர்கள். அவர்களுக்குப் பாடம் நடத்திய பேராசிரியர்கள் குழப்பியதாகத்தான் இருக்கும்.

சொர்க்க லோகம், கைலாசம், இந்திரலோகம் பற்றிய வருணனை போலத் தங்களுக்குத் தெரியாத அல்லது புரியாததைப் பற்றிப் பேசப் பேராசிரி யர்கள் குறிப்பாகத் தமிழ்ப் பேராசிரியர்கள் வல்ல வர்கள் என்பதைப் பிற்காலத்தில்தான் புரிந்து கொள்ள முடிந்தது.

தமிழையும் மொழியியலையும் நன்கு கற்றவர்கள் இலக்கண ஆய்வு மேற்கொள்ளத் தலைப்பட்ட பிறகு தமிழ் இலக்கணத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நூல் கட்டுரைகள் எழுதியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த நூலாசிரியர் அதைச் சொன்னார், இந்த உரையாசிரியர் இதைச் சொன்னார் என்று சொல்ல முடியுமே தவிர, எழுதுபவர் என்ன சொன்னார் என்பதைச் சொல்ல இடமிருக்காது.

பழைய தமிழ்ப் பேராசிரியர்கள் மு.வரத ராசனார் மொழியியல்பால் மிகுந்த ஈடுபாடுள்ளவர். வ.அய்.சுப்பிரமணியம் மொழியியல் துறையில் எழுதியதைவிட வளர்த்ததில் குறிப்பிடத்தக்கவர். தெ.பொ.மீனாட்சிசுந்தரத்தைத் தொடர்ந்து பேரா சிரியர்கள் ச.அகத்தியலிங்கம், மோ.இசரயேல், செ.வை.சண்முகம், பொன்.கோதண்டராமன், இரா.கோதண்டராமன், இராம.சுந்தரம், கி.அரங்கன் என மொழியலுக்கு நல்ல பல ஆய்வு நூல்கள், கட்டுரைகள் எழுதியவர்களின் பட்டியல் நீளும்.

ஏழெட்டு நூற்பாக்களைக் கொண்டு முந்நூறு பக்க அளவில் ஒரு நூல் (வினைப் பாகுபாட்டில் எச்சங்கள் 2005) எழுதவும் இரண்டு நூற்பாக் களைக் கொண்டு இருநூறு பக்க அளவில் ஒரு நூல் (பழந்தமிழ் வினைகளில் எதிர்மறை) எழுதவும் துணை நின்றது மொழியியலே.

மதுரைப் பல்கலைக்கழகம் தொடங்கியபோது அதன் முதல் துணைவேந்தர் பேராசிரியர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் தமிழைப் படிப்பவர்கள் மொழி யியலையும் அறிந்திருக்க வேண்டும் என்னும் நோக்கத்திலேயே முதுகலைத் தமிழில் விருப்பப் பாடத்தைச் சேர்த்திருந்தார். அவருடைய முயற்சி யால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழி யியல் உயராய்வு மையம் தனியாகவே இயங்கிக் கொண்டிருக்கின்றது.

மதுரைப் பல்கலைக்கழகத்தில் தமிழோடு மொழியியலும் வரை வித்திட்டவர்கள் பேராசிரி யர்கள் முத்துச் சண்முகனார், மோ.இசரயேல், விஜய வேணுகோபால் போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

மொழியியலின் அரிச்சுவடியைக் கற்றுத் தந்தவர் பேராசிரியர் ஜெ.நீதிவாணன்.  இலக்கியம், இலக்கணம் நடத்துவது போலவே மொழியியலை நடத்துவார். பேராசிரியர்கள் விருப்பப் பாடமான மொழியியலை நடத்திய விதமே, முதுகலை மொழி யியல் படிக்கத் தூண்டியது. 1975-77இல் மொழி யியலை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முடித்து, தொடர்ந்து மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil.,) முனைவர் (PG.D..) போன்ற ஆய்வுகளை மொழியியல் தொடர் பாக ஒரே மூச்சில் செய்ய மொழியியல் பெருந் துணை புரிந்தது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழி யியல் படிக்கும் போது திராவிட மொழியியலைக் கற்றுத் தந்த பேராசிரியர் முனைவர் பி.எஸ்.சுப்பிர மணியம் அவர்களை வாழ்நாளில் மறக்க முடியாது. ஒருநாள் ஒரு பேராசிரியர் வராத போது அந்த வகுப்பை முன்கூட்டியே அவரை எடுக்கச் சொல்லி விட்டார்கள். நூலகம் போனதால் அந்த வகுப்பு எடுப்பது தெரியவில்லை.

அந்த ஒரே ஒரு வகுப்புக்குப் போக முடியாதது இன்று கூடக் குறையாகவே தெரிகின்றது. அந்த வகுப்பில் நடத்தியதைக் குறிப்பு எடுத்துக்கொண் டாலும் மனநிறைவு இல்லை. பேச்சில் ஆடம்பரம் இருக்காது; நேற்று என்ன நடத்தினோம் என்னும் கேள்வி இருக்காது. திராவிட மொழியியல் என்பது இந்தியா முழுவதும் பேசப்படும். தமிழ், மலை யாளம், கன்னடம், தெலுங்கு போன்ற இருபத் தைந்து மொழிகளின் களம். ஒரே திராவிடச் சொல் எல்லா மொழிகளிலும் ஒலி நிலையில் வேறுபட்டிருக்கும். அவற்றை எல்லாம் குறிப்பு இல்லாமலேயே சொல்லிப் பிரமிக்க வைத்து விடுவார்.

திராவிட மொழியியலின் தந்தை இராபர்ட் கால்டுவெல். பேராசிரியர்கள் டி.பர்ரோ, எம்.பி. எமனோ என்னும் மேலை நாட்டுப் பேராசிரி யர்கள் தமிழுக்கும் பிற திராவிட மொழிகளுக்கும் செய்துள்ள பணியின் அருகே கூட நாம் போக முடியாது. திராவிட மொழிகளின் சொல்லியல் அகராதி (A Dravidian Etymological Dictionary) என்ற ஒன்றை இரண்டு பேராசிரியர்களும் தொகுத்துத் தந்துள்ளார்கள். திராவிட, தமிழ் மொழியியல் ஆய்வுக்கு அந்த அகராதி ஊற்றுக்கண் என்றால் மிகையாகாது.

1982இல் முனைவர் பட்ட ஆய்வை முடித்த பிறகு ‘இன்னும் மேலே படி’ என்று கூறிய தந்தை ஊனோடும் உயிரோடும் கலந்தவர். அதற்கு மேல் படிப்பு இல்லை. வேலைக்குப் போக வேண்டும். அதைப் பற்றியெல்லாம் அவர் நினைக்கவில்லை. மேலும் படிக்க வேண்டும். நிலமிருந்தும் போது மான வருமானம் இல்லை. ‘ஆடு கிடக்கும்போது கீதாரியை என்ன செய்யப் போகிறான்’ என்பார். பரம்பரையாக இருந்த நிலம், தியாகிக்காகக் கொடுத்த நிலத்தை எல்லாம் படிப்பதற்காக விற்றார். இருநூறு ரூபாய் பணம் அனுப்பச் சொன்ன போது வண்டி மாட்டை விற்று எழுநூறு ரூபாய் அனுப்பிய தந்தை. ஒரே ஒரு பிள்ளையை மட்டும் பெற்றுக்கொண்டு, கோழி அடித்துப் போட்டும் ஆட்டை வெட்டி வற்றல் போட்டும் வளர்த்த பெற்றோரைப் போல நம்மால் இருக்க முடியாது என்பதை வாழ்க்கையே காட்டுகின்றது.

ஆய்வாளர், பேராசிரியர் பணி தொடர்பாக மறக்க முடியாத செய்திகள் ஏதேனும் உள்ளதா?

1982இல் முனைவர் பட்ட ஆய்வு முடிந்தது. 1979இல் திருமணம் நடந்து குழந்தைகளும் பிறந்து விட்டன. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறை ஆரம்பிக்கப்பட்டதால் வேலைக்கு வாய்ப்பு இருந்தது. அப்போது தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. மிகுந்த எதிர்பார்ப்போடு தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு வருவது ஒரு பக்கம் இருந்தாலும் பெற்றோருடன் வாழ வேண்டும் என்பதே தஞ்சாவூர் வருவதற்கு முக்கியமான காரணம்.

பெற்றவர்கள் குளமாக இருந்து ஒரு விரால் மீனாக மகனை வளர்த்தவர்கள். வயதான காலத்தில் பேரப் பிள்ளைகளுடன் வாழ்வதை எழுத முடியாது. வாழ்ந்தால்தான் தெரியும். நான்கு பேரப் பையன் களுடன் வாழ அவர்களுக்குக் கொடுத்து வைத் திருந்தது.

1982இல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிரந்தர மில்லாத ஒரு தொகுப்பூதிய - மனதிற்குப் பிடிக்காத ஒரு வேலை; பணி என்று சொல்லக்கூடாது. படித்தவை தமிழ், மொழியியல்.  ஒரத்தநாடு வட்டத்தில் அந்த நேரத்தில் முனைவர் பட்டம் பிறர் பெற்றிருக்க வாய்ப்பில்லை.

ஊராய்வுத் திட்டம் என்றால் ஊர்களைப் பற்றி ஆராய்வது, யாருக்கும் எதுவும் தெரிய வில்லை என்பதை அந்தத் திட்ட அறிக்கையே வெளிப்படுத்தியது. அது ஒரு பெரிய கூத்து; ஒரு புத்தகமாகவே எழுதலாம்.

தமிழ் - மொழியியல் ஆய்வுக் கனவுகளோடு வந்ததற்கு ஒரு பெரிய அடி. உடனே வேலையையும் விட முடியாது. தொகுப்பூதியத்தை விட அப்பாவின் தியாகிகளுக்கான ஓய்வூதியமே குடும்பத்தைக் காப்பாற்றியது.

அங்குச் சேர்ந்த இளைஞர்கள் அனைவருக்குமே நிரந்தரமில்லா வேலை. அங்குப் பணிக்கு வந்த பெரும்பாலானோர் பணி ஓய்வு பெற்று ஓய்வில் இருந்தவர்கள். இளைஞர்கள் பெரும்பாலா னோருக்கு திறமை இல்லை என்பது தலைமை ஏற்றிருப்பவரின் கணிப்பு.

வேறு ஏதாவது ஒரு சந்து கிடைத்தால் இந்தப் பொந்திலிருந்து போய் விடலாம் எனப் பல இளைஞர்கள் காத்திருந்தனர். வாய்ப்புக் கிடைத்த போது கிளம்பியும் போய் விட்டார்கள்.

நூற்றாண்டுப் பழமை வாய்ந்த திருவையாறு அரசர் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பணி 1985இல் கிடைத்தது. பல்லாண்டுகள் ஆசிரியப் பணிக்காகவே படித்து, ஆய்வு மேற்கொண்டதற்குப் பலன் கிடைத்தது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பார்த்த ஊராய்வுத் திட்டம், சொல் திரட்டுநர் போன்ற வேலைகளை நினைத்துப் பார்க்கும் போது கவிக்கோ அப்துல் ரகுமானின் கருத்துத்தான் நினைவில் வரும். நீங்கள் ஏன் திரைப்படத்திற்குப் பாடல் எழுதுவதில்லை என்றதற்குச் சொன்னா ராம். ‘அம்மிக் கொத்தச் சிற்பி தேவையில்லை.’

தமிழ் இலக்கணத்தோடு மொழியியல், இலக்கியம் போன்றவற்றைப் பாடம் நடத்தவும் மேலும் படிக்கவும் எழுதவும் திருவையாறு அரசர் கல்லூரி மனம் நிறைந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.

நூற்றாண்டைத் தாண்டிய திருவையாறு அரசர் கல்லூரி குறித்து...?

தமிழ் மண்ணின் விளைச்சலைத் தின்று, அதில் ஊறும் நீரைக் குடித்துக் கொண்டு ஆட்சி, அதிகாரங்களைச் செலுத்தியவர்கள் தமிழைக் கல்வி நிறுவனங்களில் கற்பிக்க முடியாது என்று கூறியது இங்கு மட்டுமா அல்லது வேறு எங்கும் இப்படிப்பட்ட சூழல் இருந்திருக்குமா? என்பது தெரியவில்லை.

ஏறக்குறைய ஆங்கிலத்தை எல்லோரும்

பட்டுக் கம்பளத்தை விரித்து வரவேற்று ஏற்றுக் கொண்டு தமிழைப் புறக்கணித்திருக்கிறோம். முன்பு சமஸ்கிருதம் என்னும் வடமொழியை ஆளும் வர்க்கம் ஆதரித்துப் பாடசாலைகளை அமைத்துக் கொடுத்தது. வேதபாட சாலையில் என்ன கற்பிக்கப்படும்? யார் கற்பார்கள்? யார் கற்பிப்பார்கள்? என்பவை எல்லாம் வேதம் என்றாலே விளங்கிவிடும்.

பிறகு சர் ஏ.டி.பன்னீர்செல்வம், தமிழவேள் உமா மகேசுவரனார் எனப் பலரின் பெரு முயற்சி யால் தமிழ் வித்துவான் படிப்பு வேத பாட சாலையில் கொண்டு வரப்பட்டது. தேவ பாடை கற்பிக்கும் இடத்தில் நீச மொழிக் கற்பிக்க இடமா? என்று தீட்டுப்பட்டு விடாமல் புனிதமாக இருக்க பிள்ளைகளைப் படிக்க விடாமல் அழைத்துப் போன புண்ணியவான்கள் வாழ்ந்த வாழ்கின்ற - வாழும் மண் இது.

இந்தியாவின் முன்னேற்றத்திற்கு விவேகானந்தர் நூறு இளைஞர்களைக் கேட்டார். ஆனால் தமிழகத்தில் ஒருவரே முன்னின்று ஒரு பெரிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டினார். அவர் இன்று தேவைப்படுவதாகப் பலரும் கூறு கின்றார்கள். அவர்களால் செய்ய முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். சமூக மாற்றத்தைக் கொண்டு வந்தவர் தந்தை பெரியார்.

வித்துவான் போன்ற கல்வி முறை மாற்றப் பட்டுத் தமிழில் இளங்கலை முதுகலைப் பட்டப் படிப்புகள் இருந்தன. நூற்றாண்டுப் பழமை வாய்ந்த திருவையாறு அரசர் கல்லூரியில் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள அனுமதி பெறக் கல்லூரியில் ஒரு பேராசிரியர் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அந்த வாய்ப்பு என்னுடைய முனைவர் பட்டத்திற்குக் கிடைத்த பேறாகும்.

ஒரு கிராமத்தின் வளர்ப்பு, கிராமியச் சூழலில் ஒரு கல்லூரி, கிராமப்புறத்தைச் சார்ந்த மாணவர் என கிராமங்களின் கலவையில் அறிந்து கொள்ள பெரும் வாய்ப்பு ஏற்பட்டது.

பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி, தி.வே. கோபாலையர், எச்.வேங்கடராமையர் எனப் பலர் பணிபுரிந்த இடம். அங்குப் பணிபுரிந்ததே பெருமை யாக இருக்கிறது.

தமிழ்ப் பல்கலைக்கழகம் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. வாய்ப்புகள் நிறைய வரும். திருவையாறு எல்லாம் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவது போல இருக்கும் என்றார்கள்.

பாடம் நடத்துவது, படிப்பது, எழுதுவது போன்றவை தனிப்பட்ட ஒருவரைச் சார்ந்தவை. நம் கடமையைச் செய்ய வேண்டும். பெரும் நிறுவனம் நம்மைத் தாங்கிப் பிடித்துக் கொள்ளாது. சிறு நிறுவனம் தள்ளியும் விட முடியாது. குறிக்கோளுடன் ஒன்றைச் செய்யும் போது தோல்வியும் வரலாம்; துவண்டு போக வாய்ப்புண்டு. கடமையை இலாபம், நட்டத்தைப் பாராமல் செய்தால் கண்டிப்பாக ஒரு பலன் கிடைக்கும்.

கி.பி. 8-10ஆம் நூற்றாண்டுகள் வாங்கில் ஒக்க நாடு கீழையூர்க்குத் தெற்கில் ஒரு ஊரும் வடக்கில் ஒரு ஊரும் இருக்கின்றன. கலப்பு மணத்தால் சாதியின் தரம் தாழ்ந்துவிட்டது என இரண்டு ஊர் மக்களும் தீமூட்டி அதில் விழுந்து எரிந்து போனார்கள். சிறுவனாக இருக்கும்போதே உள்ளத்தில் கிடந்து நீறுபூத்த நெருப்பாக இருந்து எழுந்தது ‘அக்கினிக் குழந்தைகள்’ என்னும் புதினம்.

காங்கிரஸ் விடுதலைக்காகப் பாடுபட்ட போது கொடுத்த வாக்குறுதிகளை விடுதலை பெற்ற பிறகு நிறைவேற்றவில்லை. அவற்றைப் பொதுவுடைமைக் கட்சி நினைவுபடுத்தியது. அதற்குக் கிடைத்த பரிசு தோட்டாக்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் பலர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்; நஞ்சு ஊட்டிக் கொல்லப்பட்டார்கள். களப்பால் குப்பு, வாட்டாக்குடி இரணியன், சாம்புவான் ஓடைச் சிவராமன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம், ஏ.எம்.கோபு போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

மாவீரன் வாட்டாக்குடி இரணியன் (1999) சாம்புவான் ஓடைச் சிவராமன் (1999) பொது வுடைமைப் போராளி ஏ.எம்.கோபு (?) புதினங்கள், பல சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்தன. பெரும்பாலான நூல்கள் தமிழகத்தின் மாபெரும் புத்தக நிறுவனமான நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வழி வெளிவந்தன.

2001இல் தமிழறிஞர்களுக்கான இடஒதுக் கீட்டில் மகனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. இந்த நேரத்தில் நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தில் எனது நூல்கள் பதிப்பிக்கப்பட்டதன் அடிப் படையில் தமிழறிஞர்களுக்கான ஒதுக்கீட்டில் எனது மகனுக்கு மருத்துவக் கல்லூரியில்  இடம் கிடைத்தது.

நான் எழுதிய நூல்களைப் பதிப்பகத்தார் என்னும் முறையில் வெளியிட்டார்கள். தமிழ் இலக்கிய வரலாறு ஐம்பதாயிரம் படிகளுக்குமேல் விற்பனை ஆனது. நியூ செஞ்சுரி நிறுவனத்திற்கு என்னாலும் அதனால் எனக்கும் பலன் கிட்டியது எதார்த்தமே. எதிர்பார்ப்பு இல்லாமல் செய்யப் படும் செயலுக்கு இப்படி எதிர்பாராத பலன் கிடைப்பது மகிழ்ச்சியைத் தரும். இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய நண்பர்கள் சிலரும் தமிழறிஞர்களுக்கான இடஒதுக்கீட்டுக்கான மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பித்துக் கிடைக்க வில்லை. பணியாற்றும் இடம் பெரிது, சிறிது என்பது இல்லை. நம்முடைய பணி தான் உரத்துக் குரல் கொடுக்கும்.

படைப்பிலக்கியங்கள், பதிப்புப் பணி, ஆய்வு எனப் பல பணிகளுக்குத் திருவையாற்று அரசர் கல்லூரி உந்து சக்தியாக இருந்ததைப் பெருமை யுடன் நினைத்துப் பார்க்கிறேன். என்னுடைய வழிகாட்டுதலில் ஐம்பதுக்கு மேற்பட்டோர் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், பதினேழு பேர் முனைவர் பட்டமும் பெற்றிருப்பது மனநிறைவைத் தருகின்றது.

படைப்பிலக்கியங்கள், இலக்கண - மொழியியல் ஆய்வுகள் என ஏறக்குறைய அறுபது நூல்கள் எழுத ஒரு பூங்காவாகத் திருவையாற்று அரசர் கல்லூரி இருந்தது என்பதை நெஞ்ச நெகிழ்வோடு தெரிவிக் கின்றேன்.

பதிப்புப் பணி பற்றிக் கூறினீர்கள்; அது பற்றி விளக்கமாகக் கூற முடியுமா?

இலக்கண - மொழியியல் ஆய்வைத் தவிர்த்து, புதினம், சிறுகதைத் தொகுப்பு, வரலாறு, நாட்டுப் புறவியல், சிறுவர் இலக்கியம், சுற்றுச்சூழல் எனப் பல வகையில் என்னுடைய எழுத்துக் களம் விரிகின்றது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் ஒரு புலவர் வானம் பார்த்த பூமியாகிய ஒக்கநாட்டில் பிறந்துள்ளார். பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் செல்லியம்மன் திருவிழாவின் போது அவரின் கும்மிப் பாடல்களைப் பாடிக் கும்மி அடிப்பார்கள். மெல்ல மெல்ல அந்த நடை முறை குறுகி, உயிர் போக இன்றோ, நாளையோ, மறுநாளோ என்று கிடப்பவர்களை வைகுந்தம் அனுப்புவதற்காகப் பாடுவார்கள்.

முதுகலைத் தமிழ்ப் படிக்கும்போது இராமாயணக் கும்மி எழுதப்பட்டிருந்த ஓலைச் சுவடி கிடைத்தது. அதில், ஒக்க நாடன் வீர பத்திரன் நான் - இதை ஓதுவேன் கும்மிக்கு ஒப்பனையாய் என்னும் தொடர் இருக்கிறது. அதைப் படித்த போது உடம்பு சிலிர்த்தது. பிறந்த பொன்னாடு ஒக்கநாடு அல்லவா? விடியவிடியப் படியெடுத்தேன். வான்மீகி, கம்பர், அருணாசலக் கவிராயர் என மூவரையும் படித்து எழுதி இருக் கின்றார். கம்பராமாயணம் பத்தாயிரம் என்றால் வீரபத்திரர் ஐயாயிரத்துச் சொச்சம் கண்ணிகளில் எழுதி இருக்கின்றார். சரபோஜி மன்னர் ஆண்ட காலத்தில் வாழ்ந்திருக்கிறார். மதுக்கூர் நிலக்கிழார் துரைச்சாமி கோபாலகர் உதவியதை நன்றியோடு பல கண்ணிகளில் நினைவு கூர்கின்றார். நூல் அரங்கேறியதாகத் தெரியவில்லை.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர் பழனி அரங்கசாமி அவர்களிடம் காட்டிய போது வியப்படைந்தார். அவருடைய பொறுப்பில் வெளி வந்த மதுரைத் தமிழ்ச் சங்க இதழ் செந்தமிழில் வெளியிட ஒப்புக் கொண்டார். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை என்றும் கூறினார். பல இதழ்களில் தொடராக வெளிவந்தது. படிப்பு, பணி, குடும்பம் எனப் பொறுப்புகள் அதிகரித்த போது தொடர்ந்து பதிப்பிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட இருபத்து ஐந்து ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது; ஆனால் மறக்கவில்லை.

பல்வேறு பணிகளுக்கிடையில் இரண்டா யிரத்தில் தொடங்கி இரண்டாயிரத்து நான்கில் வீரபத்திர இராமாயணக்கும்மி சொந்தப் பதிப்பில் இரண்டு தொகுதிகளாக வெளிவந்தது. கம்பரைத் தொடர்ந்து இராமாயணம் தொடர்பாகக் கும்மி, சிந்து, அம்மானை, வெண்பா எனப் பல பாவடிவங் களில் நூல்கள் வந்துள்ளன. கம்பருக்கு அடுத்துத் தோன்றிய நூல்களில் வீரபத்திரர் எழுதிய இராமாயணக் கும்மிதான் பெரிய நூலாகத் தெரிகிறது.

பதிப்புத் துறையின் முன்னேற்றம், பணவசதிக்குக் குறைவில்லை; இருந்தாலும் நூல் விற்குமா என முதலீடு செய்யப் பலருக்கு மனம் வரவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அதுவும் ஒரு பட்டிக்காட்டில் பிறந்த வீரபத்திரர் எவ்வளவு கனவு கண்டிருப்பார்! அரங்கேற்ற முயற்சி செய் திருப்பார். கும்மியில் பிடித்த கண்ணிகளைப் பொறுக்கி எடுத்து வீரபத்திர இராமாயணக்கும்மி உரைநடை என்னும் மூன்று நூல்களையும் வெளியிட இரண்டு லட்சம் செலவானது. கால வெள்ளத்தில் கறையான் தின்னாமல் காப்பாற்றியதில் ஒரு மன நிறைவு.

இலக்கண - மொழியியல் துறைகளில் பயணிக்கும் உங்களால் எப்படி படைப்பிலக்கியத்திலும் பயணிக்க முடிகின்றது?

படைப்பிலக்கியங்கள் எவையாக இருந்தாலும் அவற்றுக்கு மொழி ஆளுமை அடிப்படையானது. ஒரு நல்ல கதைக் கருவை மோசமான மொழிப் பயன்பாடு சிதைத்து விடும். நல்ல மொழி நடை சாதாரண கதைக் கருவுக்கும் மெருகு சேர்த்து விடும். தமிழ்ப் பாடத்தை மட்டும் படித்திருந்தால் ஒருவேளை படைப்பிலக்கியம் சாத்தியம் இல்லாமல் போய் இருக்கலாம்.

மொழியியல் என்பது எழுத்து மொழிக்கு மட்டும் அல்லாமல் பேச்சு மொழி ஆய்வுக்கும் முக்கியம் கொடுக்கக்கூடிய துறை. கல்கி, தி.ஜானகி ராமன், கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம் போன்றவர்கள் நிறைய எழுதி இருக்கின்றார்கள். சி.எம்.முத்து இனம் சார்ந்த படைப்புகளைத் தந்துள்ளார். சோலை சுந்தரபெருமாள் பழைய ஆற்றுப் பாசனப் பகுதி மக்களைப் பற்றி நிறைய எழுதியுள்ளார்.

சு.தமிழ்ச்செல்வி ஒன்றிணைந்த தஞ்சாவூர் மாவட்டக் கடற்கரைப் பகுதி மக்களைப் பற்றி மனதில் பதியும்படி எழுதியுள்ளார்.

என்னுடைய படைப்புகள் புதாற்றுப் பாசனப் பகுதி, கீழத் தஞ்சை என விரியும் படைப்புகள் என்பவை வரலாற்று நிலையில் பார்த்தாலும் சமகால நிலையைப் பார்த்தாலும் மக்களைப் பற்றியதாகவே இருக்க வேண்டும். காலம் மாறி னாலும் மக்களுடைய பிரச்சினைகள் ஒன்றாகவே இருக்கும்.

சாம்பவான் ஓடைச் சிவராமன் (1999), பொது வுடைமைப் போராளி ஏ.எம்.கோபு போன்ற புதினங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்களுக்காக இரத்தம் சிந்திய போராளிகளைப் பற்றியவையாகும்.

பயிர் முகங்கள் (2000) என்னும் புதினம் வேளாண் குடிமக்களின் சிக்கல் நிறைந்த வாழ்க்கையை விவரிக்கின்றது. மலைப் பாம்பு மனிதர்கள் (2004), கால வெள்ளம் (2005), கூத்தாயி (2010) போன்ற புதினங்கள் புதாற்றுப் பாசன மக்களின் பொது வான வாழ்க்கையை விவரிக்கக் கூடியவை. விடுதலை, வேளாண்மை, பொதுவுடைமை, பெண்ணியம், தலித்தியம் எனப் பல்வேறு தளங்களின் நடை முறை, நெருக்கடி முதலானவை புதினம், சிறுகதை களில் காணலாம்.

வழக்கு அழிந்து கொண்டிருக்கும் தாலாட்டு, ஒப்பாரி, பழமொழி, உவமை, விடுகதை வட்டார வழக்குச் சொற்களும் படைப்புகளில் நிறையப் பதிவாகி இருக்கும். கருவிற்கு இடையூறு இல்லாமல் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதும் முக்கிய நோக்கமாகும்.

உங்களுடைய ஆய்வுகளில் குறிப்பாக இலக்கண - மொழியியல் ஆய்வுகளின் போக்கைக் கூற முடியுமா?

மரபிலக்கணத்தைத் தெளிவாக அறிந்து கொள்வதற்குக் கண்டிப்பாக மொழியியல் அறிவு தேவை. இலக்கண உரைகளைப் படிக்கும் போது பல உரையாசிரியர்களின் கருத்து நம்மை வியக்க வைக்கும். மொழியியலில் புதிதாகச் சொல்லப்படும் கருத்து உரைகளிலேயே சொல்லப் பட்டிருக்கும்.

மாணவர்கள் இலக்கணத்தைப் புரிந்து கொள் வதற்குக்கூட மொழியியல் அணுகுமுறை மிகவும் முக்கியமானதாகும். இந்த அடிப்படையில் மாணவர் பயன்பாட்டை முதன்மையாகக் கொண்டு தொல் காப்பியம், நன்னூல், அகப்பொருள், புறப்பொருள், தண்டியலங்காரம். யாப்பருங்கலக்காரிகை போன்ற ஒன்பது நூல்கள் வெளிவந்துள்ளன. பேராசிரியர்க்கும் மாணவர்க்கும் நன்றாகப் பயன்படுகின்றன.

எழுத்தியல், சொல்லியல் களங்களில் ஆய்வு நோக்கில் பத்துக்கு மேற்பட்ட நூல்கள் விரைவில் வெளிவர உள்ளன. மொழியியல் திராவிட மொழி யியல் தொடர்பான நூல்களும் அச்சில் உள்ளன. காலங்காலமாக உள்ள பல இலக்கணக் கோட் பாடுகள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன. இலக்கண - மொழியியல் தொடர்பான ஆய்வுகள் நினைத்துப் பார்க்க முடியாத சிந்தனையின் வெளிப்பாடு என்று கூறுவதில் எனக்கு மிகையாகத் தெரியவில்லை. ஆய்வாளர்கள்தான் கருத்துக் கூற வேண்டும்.

பழந்தமிழ் இலக்கியங்களில் நிறையத் தரவுகள் இருக்கின்றன. ஆனால் இலக்கண நூலாரும் உரை யாசிரியர்களும் அவற்றை முழுமையாக விளக்க வில்லை; மாறுபட்ட விளக்கம் கொடுக்கிறார்கள் என்னும் கருதுகோளுடன்தான் மேற்கூறிய ஆய்வு நூல்கள் எழுதப்பட்டுள்ளன.

உங்களுடைய படைப்புகள், ஆய்வுகளுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நம்புகிறீர்களா?

மனதிற்குள் என்னுடைய படைப்புகளுக்கும் ஆய்வுகளுக்கும் நல்ல அங்கீகாரம் கிடைத்துள்ளது. இல்லை என்றால் எழுதவே முடியாது. ‘இந்தப் புத்தகத்தை எதுக்கு எழுதினேன்னே தெரியல’ என்று சிலர் புலம்பியதைக் கேட்கும் நமக்கு ஓர் ஆறுதல்.

‘வாட்டாக்குடி இரணியனைப் படிச்சுட்டு பதினஞ்சு நாளை என்னால் தூங்க முடியல’ என்று ஒரு தோழர் எழுதியதே பெரிய அங்கீகாரம் தானே. மாவீரன் வாட்டாக்குடி இரணியனுக்குத் தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றம் பரிசு வழங்கி யுள்ளது. ஒட்டுமொத்தப் படைப்புகளைப் பாராட்டிச் செங்கமலத் தாயார் அறக்கட்டளை விருது வழங்கி யுள்ளது. முத்தமிழ் மன்றம் ‘ஜீவா விருது’ வழங்கி யுள்ளது. பல்வேறு அமைப்புகள் படைப்புகளையும் ஆய்வுகளையும் பாராட்டி விருதுகளை வழங்கி யுள்ளன.

தமிழக அரசு (2001) தமிழறிஞராகத் தேர்வு செய்து மகனுக்கு மருத்துவம் படிக்க இடம் ஒதுக்கியது. காலங்கள் (2001) என்னும் இலக்கண - மொழியியல் ஆய்வு நூலுக்கு தமிழக அரசு பரிசு வழங்கியது.

பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு (2007-2010) பேராய்வுத் திட்டத்தில் ஆய்வு செய்ய நிதி வழங்கியது. மைய அரசின் செம்மொழி ஆய்வு நிறுவனம் (2011-2012) ஆய்வு செய்ய நிதி வழங்கியது. பல்கலைக் கழக நிதி நல்கைக்குழு (2014-2016) தகைசால் பேராசிரியர் (நுஅநசவைரள குநடடடிற) எனத் தேர்வு செய்து ஆய்வு செய்ய நிதி வழங்கியது. இவை எல்லாம் மனதிற்கு மகிழ்வைத் தரக்கூடியவை.

உலகப் பொதுமறையை வழங்கிய வள்ளுவரும் மகாகவி பாரதியாரும் எதிர்கால அங்கீகாரத்தை எண்ணியா எழுதினார்கள்? இவர்களுடைய பணிகள் பனையைப் போன்றவை. பரம்பரைகள் அனுபவிக் கின்றன. தந்தை பெரியாரின் பணி தென்னை-பனையைப் போன்றது. பலனை அவரும் பார்த்து மகிழ்ந்தார். வரும் காலத்திற்கும் விட்டுச் சென்றார்.

படைப்பாளர், ஆய்வாளர் என்னும் இரு தளங்களில் நிற்கும் உங்களுடைய கருத்துகள் இளந்தலை முறைக்கு எவ்வாறு பயன் அளிக்கும்?

ஆற்றல் பொங்கித் ததும்பும் பருவம் இளுமை. அறிவு நிரம்பி அடங்கி இருக்கும் பருவம் முதுமை. விதிவிலக்குகள் நிறைய இருக்கும். அவற்றுக்குச் சமுதாயத்தின் பங்கும் உண்டு. சாதிப்பதற்கு வயது தடையாக இருக்காது.

படைப்பாளர்களுக்கு மொழி ஆளுமை வேண்டும். அந்த ஆளுமையைப் பெற நிறையப் படிக்க வேண்டும். தமிழில் பட்டம் பெற வேண்டும் என்பதில்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர்கள் தொழிலை எப்படிச் செய்தார்களோ தெரியவில்லை; வழக்குரைஞர்கள் தமிழுக்குச் செய்துள்ள தொண்டு எண்ணிப் பார்க்கத்தக்கது.

இப்போது பல இளைஞர்களின் படைப்புகள் அவர்களின் வயதை மிஞ்சியவையாக இருக்கின்றன விநாயகமுருகன்... எனப் பலரைக் கூறலாம். படைப் பாளராக விரும்புவோர் நிறையப் படிக்க வேண்டும்; நிறையப் பார்க்க வேண்டும்; கவனிக்க வேண்டும். எந்த எழுத்தும் சமுதாயம் சார்ந்ததாகவே இருக்க வேண்டும். பிரச்சினைகள் கடை விரித்து வைக்கப் பட்டுள்ளன.

அந்தக் காலத்தில் பல சான்றோர்களின் எழுத்துகளும் பேச்சுகளும் உலகத்தையே புரட்டிப் போட்டதாகக் கூறுவார்கள். அண்மைக் காலத்தில் அப்படிப் புரட்டிப் போட்டதாகத் தெரியவில்லை. மக்களிடம் நல்லதைச் செய்வதாக இருந்தாலும் அல்லதைச் செய்வதாக இருந்தாலும் விழிப்புணர்வு தெளிவாக இருக்கின்றது. கோலம் போடாத வீட்டைக் கண்டறிந்து பூட்டை உடைக்கும் முறையே ஒரு விழிப்புணர்வு தானே.

தந்தை பெரியார் சங்கை ஊதினார்; அதன் எதிரொலியை அவரே கேட்டார். அதனால் சங்கு ஊதுவதை மட்டும் நிறுத்தக்கூடாது. கண்டிப்பாக விடியும். மக்கள் விரும்பியவற்றை விட வேண்டாத வற்றைச் செய்யவே அரசுகள் ஆர்வம் காட்டு கின்றன. ஜல்லிக்கட்டு, மதுக்கடை திறப்பு, எரிவாயு எடுப்பது போன்றவற்றில் மக்கள் காட்டிய எதிர்ப்பே சான்றுகள்.

இலக்கியம், இலக்கணம், நாட்டுப்புறவியல், பிற துறைகள் என எல்லாவற்றிலும் சாதிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அவர் சொன்னார். இவர் சொன்னார் என்பது மட்டும் ஆய்வாகாது. நாம் என்ன சொல்கிறோம் என்பதே முக்கியம். நான் என்ன சொல்லிவிடறப் போகிறேன். லெனின் சொன்னது தான். படி! படி!! படி!!!

Pin It