தந்தை பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்களின் மகளும் ஈ.வெ.கி. சம்பத்தின் அக்காவுமான மிராண்டா, தந்தை பெரியாரின் வளர்ப்பில் வளர்ந்தவர்.

அகவை 90-ஐ நிறைவு செய்து, 27.05.2014 அன்று 91இல் அடி எடுத்து வைக்கும் அவர் பெரியார் குறித்த தமது நினைவுகளையும், இயக்கத்தில் தம்முடைய பங்களிப்பு, ஈடுபாடு குறித்தும் ஒரு மணிநேரம் நம்மிடையே உரையாடினார். அந்த உரையாடலின் பிழிவு இங்கே வெளியிடப் படுகிறது.

தங்களது இளமைக்காலம் குறித்து...

நான் முழுக்க முழுக்க என் சின்னப்பா தந்தை பெரியாரால் வளர்க்கப்பட்டவள். எனக்கு எனது குடும்பத்தில் தீனதயாளு என்று பெயர் வைத்தார்கள். ஈரோடு மகா ஜனம் பள்ளியில் என்னுடைய தொடக்கக் கல்வியைத் தொடங்கினேன். எனக்கு ஏழு வயது இருக்கும் போது என்னை சென்னையில் இருந்த குருசாமி-குஞ்சிதம் குருசாமி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.

ஈரோட்டிலிருந்து என்னை சென்னைக்கு அனுப்பும் போதே எனக்குக் கிராப் வெட்டி, பிராக் போட்டு அனுப்பி வைத்தார்கள். அங்குச் சென்றவுடன் தீனதயாளு என்ற என் பெயரை குருசாமியும் குஞ்சிதமும் சேர்த்து மிராண்டா என மாற்றி சென்னையில் லேடி வெலிங்டன் மற்றும் மயிலாப்பூரில் சேர்த்தார்கள். பின்னர் செயின்ட் தாம° கான்வென்டில் படிக்க வைத்தார்கள்.

என்னை ஒரு மகளைப் போல அவர்கள் வளர்த்தார்கள். அங்கு வகுப்புக்கு ஒன்றி ரண்டு மாணவிகள் மட்டுமேதான் இருப்பார்கள். அதிலும் கிராப் வெட்டி, கவுன் போட்டு வகுப்புக்குப் படிக்கப் போன ஒரே மாணவி நான் மட்டும்தான். அதன் பின்னர் இண்டர் மீடியேட் படிப்பை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தேன்.

அங்கு நான் படித்த போதுதான் அன்பழகன், நெடுஞ் செழியன், கணேசன், மதியழகன் போன்றவர் கள் படித்துக் கொண்டிருந்தார்கள். அண்ணாமலையில் நான் பி.ஏ. இலக்கியமும் பொருளியலும் முடித்து, பின்னர் பி.டி. முடித் தேன். நான் படிக்க வேண்டும்; குறிப்பாகப் பெண்கள் படிக்க வேண்டும்; சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதற்காக என் சித்தப்பா என்பால் மிகக் கூடுதலான கவனம் செலுத்திப் படிக்க வைத்தார். பின்னர் நான் சென்னையிலுள்ள மாந கராட்சிப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இணைந் தேன். பின்னர் தலைமை ஆசிரியர், உதவிக் கல்வி அதிகாரி என்ற பல நிலைகளில் கல்விப்பணி ஆற்றினேன். பின்னர் பெரியாரிடம் உதவியாளராகவும், “துரளவiஉவைந” பத்திரிகையில் எழுதி வந்தவருமான சுயமரியாதைக் குடும்பத்தைச் சேர்ந்த கசேந்திரனைச் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டேன். நான் தான் எங்கள் பகுதியின் முதல் பெண் பட்டதாரி.

தங்கள் குடும்பமே அரசியல் குடும்பம். தங்கள் இல்லமே கட்சி அலுவலகமாக இருந்தது. அந்தச் சூழ்நிலை எப்படி இருந்தது?

எங்கள் இல்லம் எப்பொழுதும் கூட்டத்தால் நிரம்பியே இருக்கும். பெரியாரைக் காண அவரது கட்சித் தொண்டர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். அவருடன் ஒரு பக்கம் அவரது இயக்கத்துக்காரங்க பேசிட்டு இருப்பாங்க. மறுபக்கம் நாகம் மையார் மற்றவர்களுக்குச் சாப்பாடு பரிமாறிக் கொண்டு இருப்பார்கள். இந்த நேரத்துலதான் பெரியார் இயக்கத்துக் காரங்களப் பார்க்கிறதுன்றதுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அவரு ஊருல இருந்தா இயக்கத்துக்காரங்க வந்துட்டே இருப்பாங்க... பெரியாருக்குப் பகல்ல தூங்கற பழக்கம் இல்லாத தால எந்நேரமும் விவாதம், கருத்துப்பரிமாற் றம்தான். எங்க சின்னம்மா ரொம்ப நல்ல மனசு உள்ளவங்க. அதனால இயக்கத்துக்காரங்க எந்த நேர முன்னாலும் உபசரிப்பாங்க. எப்பவும் விவாதம், அரசியல்னு வீடு கூட்டமாகவே இருக்கும்.

அந்தக் காலக்கட்டத்தில் இயக்கத்தில் பெண்கள் பங்களிப்பு எப்படி இருந்தது...

பெரியார் எதைச் செய்ய விரும்புகிறாரோ அதைத் தன் குடும்பத்திலிருந்தே தொடங்க வேண்டும் என நினைப்பார்; அதையே அவர் செயல்படுத்துவார். அதிக அளவில் இயக் கத்தில், சமூகப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என அவர் விரும்பினார். அதனால் அவர் பங்கேற் கும் எல்லாக் கூட்டங்களுக்கும் எங்களையும் கூடவே அழைத்துச் செல்வார். நான், பெரியாரின் தங்கை கண்ணாம்மா, காந்தி அப்படி எங்க குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் அவர் பேசும் கூட்டங்களுக்கு உடன் அழைத்துச் செல்வார். எங் களையும் இயக்கத்தின் நடவடிக்கைகளில் போராட்டங்களில் கலந்துகொள்ளச் சொல்வார்.

தாங்கள் கலந்துகொண்ட இயக்க நடவடிக்கைகள்... பேராட்டங்கள்...

காந்தியின் கதர் போராட்டத்திற்கு ஆதரவாக நாங் கள் எங்கள் பட்டுப்புடவைகளை எல்லாம் தீயிட்டுக் கொளுத்தி னோம். எங்கள் சின்னம்மா நாகம்மையார் தனது பத்துக்கு மேற்பட்ட பட்டுப்புடவைகளைத் தீயில் போட்டு எரித்தார். தென்னை மரங்களை வெட்டுவதற்கும் எங்களை முன்னிறுத்தியே போராட்டம் நடத்தப் பட்டது. நான் 1945இல் திருச்சி மாநாட்டில்  கொடி யேற்றி உரை நிகழ்த்தி இருக்கிறேன். இப்படி, பெரியாரின் பல நிகழ்வுகளிலும் தன்னிச்சையாகவே நாங்கள் பங்கேற்றுள்ளோம். எங்கள்  வீட்டில் போராட்டத்தில் -கூட்டத்தில் பங்கேற்க ஆண் பெண் பாகுபாடெல்லாம் கிடை யாது. பெண்கள் கல்வி பெற வேண்டும்; விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்னு பெரியார் தொடர்ந்து வலியுறுத்துவார்.

பெரியாரின் கூட்டங்களுக்கு மக்களிடையே எத்தகைய வரவேற்பு இருந்தது?

எல்லாக் கூட்டங்களுக்கும் குறித்த நேரத்திற்கு முன்பே கூட்டம் நடக்கும் இடத்திற்குப் போய்விடுவார். தமக்காக யாரும் காத்திருக்கக் கூடாது என நினைப்பார். கூட்டத்தில் மணிக்கணக்கில் பேசுவார். அவர் பேசத்தொடங்கும் போது கூட்டம் குறைவாக இருக்கும். பின்னர் படிப்படியாகக் கூட்டம் சேர ஆரம்பிக்கும். பாமர மக்களுக்குப் புரிகிற மாதிரி ரொம்ப எளிமையாகப் பேசுவார். மக்கள் ரொம்ப ஆர்வமா பேச்சைக் கேப்பாங்க. சில கூட்டங்கள்ல தக்காளி வீசுவாங்க... சில கூட்டங்கள்ல முட்டை வீசுவாங்க... ஆனா அவரு எதுக்கும் கவலைப்படவே மாட்டாரு. அவரு தொடர்ந்து கூட்டத்துல பேசிக்கிட்டே இருப்பார்.

தக்காளி; முட்டையை யெல்லாம் ரொம்பச் சாதாரணமாக எடுத்துக்கொள்வார். ‘வீட்டுக்கு வந்து இன்றைக்குக் கூட்டத்தில் முட்டை, இன்றைக்குக் கூட்டத்தில் தக்காளின்னு’ சிரிச்சுக்கிட்டே சொல்வார். பெரியாரைப் பார்க்க இயக்கத்துக்காறங்க சிறுவர் சிறுமியர்களுடன் வந்தால், அவர்களைப் பார்த்து “என்னா உங்க அப்பன் சாமி கும்பிடுன்னு சொல் றானா வேணாம்னு சொல்றானான்னு சிரிச்சிக்கிட்டே கேப்பாரு... யாராவது சாமி கும்பிடறோம்னு சொன்னா, சாமி ‘நீ பாசாவன்னு’ சொல்லுதா, இல்ல பெயிலா வன்னு சொல்லுதா உன் சாமி என்னா சொல்லுதுன்னு கேப்பாரு...”

பெரியாரின் தனிப்பட்ட தருணங்கள் எப்படி இருக்கும்?

அவர் பெரும்பாலும் தனியாக இருப்பதில்லை. எப்பவும் யாராவது கூட இருந்திக்கிட்டே தான் இருப்பாங்க. குடும்பத் துக்கெனத் தனியாக நேரம் ஒதுக்குவதென்பதெல்லாம் அவரிடம் இல்லை. அவருடைய அம்மா-எங்கள் பாட்டி சின்னத்தாயி மரணப்படுக்கையில் இருந்தப்பக் கூட, பெரியார் கூட்டத்திற்குத்தான் போயிட்டு இருந்தாரு. அன்றைக்கு அம்மாவின் கட்டில் அருகில் வந்த பெரியார் ‘அம்மா சோலையார் பேட்டையில் கூட்டம்-போயிட்டு வந்துடறன்னு’ சொன்னாரு. அதற்கு அவங்க அம்மா ‘எண்ணெய் மிஞ்சுதோ, திரி மிஞ்சுதோ போயிட்டு வா’ன்னாங்க... பெரியார் கூட் டத்திற்குப் போய்ச் சேரும் முன்பே எங்கள் பாட்டி இறந்து விட்டார். திரும்பி வந்த பெரியார் வாசற்படியிலேயே அமர்ந் திருந்தார்.

அய்யாவின் மன உறுதி பற்றி...

அவர் எதற்குமே கவலைப்படமாட்டார். இந்த மக்கள் எவ்வளவு சொன்னாலும் திருந்தமாட்டேங்கறாங்களே என்று மட்டும் அடிக்கடி வருந்துவார். அவரை, பெல்லாரி சிறையில் அடைத்து வைத்திருந்த போது நாங்கள் அவரைப் போய்ப் பார்த்தோம். ‘நீங்களெல்லாம் இங்க எதுக்கு வந்தீங்க; நான் நல்லா இருக்கேன்... சாப்பாடு தர்றான், பேப்பர் தர்றான், வேறென்ன வேணும்னு’ அவர் சிரிச்சுகிட்டே சொன்னதக் கேட்டு நாங்க அமைதியா திரும்பி வந்துட்டோம். என் தம்பி சம்பத் மீது பெரியார் ரொம்பப் பாசமாக இருந்தார். தனக்குப் பிறகு தன் பணியைச் சம்பத் தொடர வேண்டுமென விரும்பினார்.

ஆனால் என் தம்பி சம்பத் பெரியாரை விட்டுப் பிரிஞ்சு போனப்ப... அவரைப்பற்றி கடுமையாக மேடை களில் பேசிய போதும்... அவர் கலங்கவில்லை. இதெல்லாம் நடக்கத்தான் செய்யும்னு சாதாரணமாகச் சொன்னார். சிறைக்குப் போய் வீட்டிற்கு வந்தால், ஓய்வு என்பதெல்லாம் இல்லை; உடனே கூட்டத்திற்குக் கிளம்பிவிடுவார். பெரியாரிடம் ஒளிவுமறைவு என்பதே இருக்காது; எல்லாமே வெளிப்படையாகத்தான் இருக்கும்.

பெரியாரின் கொள்கைகளில் தங்களுக்குப் பிடித்தது...

அவர் வலியுறுத்திய சமத்துவ உரிமை எனக்கு ரொம்பப் பிடித்த அம்சமாகும். பாலின சமத்துவம், சமூக சமத்துவம் என எல்லா நிலைகளிலும் சமத்துவம் வேண்டும் என்பார். அது எனக்கு ரொம்பவும் பிடித்த மான ஒன்றாகும்.

சந்திப்பு : இரா. மணிமுகிலன், செ.ஆனையப்பன்

Pin It