திராவிட இயக்கம் ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக இருந்தது என்னும் குற்றச்சாட்டை இன்னும் கூடச் சிலர் கூறிக்கொண்டுள்ளனர். நீதிக்கட்சித் தலைவர்கள், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகிய அனைவரின் மீதும், இவர்கள் அனைவருக்கும் முந்திய கால கட்டத்தில் வாழ்ந்த மகாத்மா ஜோதிராவ் பூலே மீதும் இது போன்ற பழிசுமத்தல்கள் உண்டு.
சில தருணங்களிலும், சில கோணங்களிலும், மேலே குறிப்பிடப் பெற்றுள்ள அனைவரும் ஆங்கிலேயரைப் பாராட்டியுள்ளனர் என்பது உண்மைதான். குறிப்பாக, ஆயிரம் ஆண்டுகளாகக் கல்வி மறுக்கப்பட்ட, பார்ப்பனர் அல்லாத சமூகத்திற்குக் கல்விக்கூடக் கதவுகளைத் திறந்தவர்கள் என்னும் அடிப்படையில் அந்த ஆதரவு அமைந்திருந்தது.
‘ நமக்குச் செல்வத்தையோ, நில புலன்களையோ கொடுத்திருந்தால் கூட இவ்வளவு வருத்தப்பட மாட்டார்கள். ஆங்கிலேயர்கள் கல்வியைக் கொடுக்க முன்வந்ததால்தான், அவர்கள் மீது பார்ப்பனர்கள் இவ்வளவு கோபப்படுகின்றனர் ’ என்று ஜோதிராவ் பூலே கூறியுள்ளார்.
எல்லோருக்கும் கல்வி கொடுக்க முனைந்தனர் என்பதற்காகச் சில வேளைகளில் இவர்கள் ஆங்கிலேயரை ஆதரித்தனர். அதே காரணத்திற்காகவே, பார்ப்பனர்கள் அவர்களை வெறுத்தனர், எதிர்த்தனர்.
1836ஆம் ஆண்டு முதல், பொதுக் கல்வித் திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டாலும், பார்ப்பனரல்லாத, ஒடுக்கப்பட்ட மக்கள், மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே கல்விக் கூடங்களுக்கு வந்தனர். அப்போதும் அங்கிருந்த ஆசிரியர்கள் மிகப் பலர் பார்ப்பனர்களாகவே இருந்ததால், நம்மவர்களுக்குச் சரியான கல்வி தரப்படவில்லை.
‘உங்களுக்கெல்லாம் எங்கேடா படிப்பு வரும்? சும்மா மாடு மேய்க்கப் போங்கடா ’ என்பது, அன்றையப் பெருவழக்கு. வணிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வருவதைப் பார்த்துவிட்டு, ‘ நீங்களெல்லாம் தராசையும், படிக்கல்லையும் விட்டுவிட்டு ஏன் சட்டமன்றத்திற்கு வருகிறீர்கள்?’ என்று திலகர் கேட்ட மாதிரி, பார்ப்பன ஆசிரியர்கள், உழைக்கும் மக்களைப் பார்த்து இழிவாகப் பேசினர்.
1910ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலைக் கழகத்தில், சாதிவாரியாக எப்படி அனுமதி கிடைத்துள்ளது என்னும் புள்ளி விவரம், அன்றைய நிலையை நமக்கு அப்படியே உணர்த்தும். அந்த ஆண்டில் 592 பேர் பல்கலைக் கழகத்தில் படிக்கச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அவர்களுள்,
பார்ப்பனர் ‡ 433 பேர்
பார்ப்பனர் அல்லாதோர் ‡ 95 பேர்
கிறித்துவர் ‡ 52 பேர்
முகமதியர் ‡ 6 பேர்
பிறர் ‡ 6 பேர்
இப்புள்ளி விவரத்தை வெளியிட்ட அன்றைய அரசு, கல்வித் துறையில் உள்ள சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சுட்டிக் காட்டியது. இந்நிலை பற்றிச் சிந்திப்பதற்காக ஒரு கல்வி மாநாட்டையும் தலைமை ஆளுநர் (கவர்னர் ஜெனரல்) கர்சான் கூட்டினார்.
லார்டு கர்சான் மீது பார்ப்பனர்களுக்குக் கடும் கோபம் மூண்டது. அதனால்தான், ‘வங்காளத்தைத் துண்டாடிய கர்சான்’ என்பது மட்டுமே நம் பாடநூல்கள் தரும் செய்தியாக உள்ளது. கல்வி வளர்த்த கர்சான், கல்வியை அனைவருக்கும் பொதுவாக்க முயன்ற கர்சான் என்பதெல்லாம் நமக்குச் சொல்லப்படுவதில்லை.
மருத்துவம், பொறியியல், உழவு, நெசவு, கால்நடை முதலான பல்துறைக் கல்வியை அவரே அறிமுகப்படுத்தினார். ஆடு, மாடுகளைப் பற்றியும், ஏரோட்டுவது, தறியோட்டுவது பற்றியும் கல்லூரிகளில் படிக்கச் சொல்கிறார்கள் இந்த வெள்ளையர்கள் என்று கேலி பேசினர் பார்ப்பனர்.
கோபால கிருஷ்ண கோகலே போன்ற ஓரிரு பார்ப்பனத் தலைவர்கள் விதிவிலக்காக இருந்தனர். அதனால்தான் ‘ நல்ல பார்ப்பனர்கள் யாரேனும் இருந்தால் சொல்லுங்கள்’ என்று பெரியார் கேட்டபோது, சில நிமிடங்கள் சிந்தித்துவிட்டு,
‘ஏன், நம் கோகலே இல்லையா? ’ என்று காந்தியார் கேட்டிருப்பார் போலும் ! (நல்ல பார்ப்பனரைக் கண்டுபிடிக்க, காந்தியாருக்கே சில நிமிடங்கள் தேவைப்பட்டுள்ளன)
அந்தப் பெருமகனார் கோகலே, ‘ இந்திய மக்கள் அனைவருக்கும் இலவசமாகக் கல்வி தரப்பட வேண்டும் ’ என்ற தீர்மானத்தை, 1910 மார்ச் 19ஆம் நாள், இந்தியச் சட்டமன்றத்தில் கொண்டு வந்தார்.
இவ்வாறெல்லாம், அனைவருக்கும் கல்வி என்ற கோணத்தில் சிந்திக்க, முதன் முதலில் லார்டு பென்டிங் வழி வகுத்தார். லார்டு கர்சான் கூடுதல் ஊக்கம் அளித்தார். ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும் நூலகம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தவரும், வைசிராயின் செயற்குழுவில் கல்வி அங்கத்தினர் ஒருவர் உறுதியாக இருக்க வேண்டும் என்று ஆணையிட்டவரும் கர்சான்தான்.
இதே காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட ‘இந்தியத் தொழிற்சாலைச் சட்ட முன்மொழிவு’ (Indian Factory Bill) தொடர்பாகத் திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவரான டி.எம்.நாயர், ஒர் அரிய கருத்தை முன்மொழிந்தார். தொழிற்சாலைச் சட்டம் என்பது, தொழிலாளி - முதலாளி உறவு, வேலை நிறுத்தம், ஊதிய உயர்வு போன்றவைகளைப் பற்றி மட்டும் பேசுவதாக இருக்கக் கூடாது. தொழிலாளர்களின் பிள்ளை களுக்குத் தொழிற்சாலைகளின் அருகிலேயே, தொடக்கப்பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், தொழிலாளர்களின் பிள்ளைகள் அனைவரும் எதிர்காலத்தில் கல்வி கற்றவர்களாக விளங்க வழி செய்ய வேண்டும் என்றும் தன் கருத்தை அவர் ஆங்கில அரசிடம் எடுத்துச் சொன்னார். கோகலே, நாயர் ஆகியோரின் கருத்துகள் உடனடியாக நடைமுறைக்கு வந்துவிட வில்லை என்றாலும், அவற்றை வெள்ளையர் அரசு, நிராகரிக்காமல் உள்வாங்கிக் கொண்டது என்பதும், அவை பின்னாளில் மெல்ல மெல்ல நடைமுறைக்கு வந்தன என்பதும் வரலாறு காட்டும் உண்மைகள்.
வெள்ளையர் அரசைச் சில தருணங்களில், திராவிட இயக்கத்தினரும், அவர்தம் முன்னோடிகளும் ஆதரித்ததற்கும், பார்ப்பனர்கள் கடுமையாக எதிர்த்ததற்கும் இப்படிப் பல காரணங்கள் இருந்தன என்னும் உண்மை நமக்குச் சொல்லப் படுவதில்லை.
ஆங்கிலேய அரசு, கல்விக்கான செலவை ஒவ்வொரு ஆண்டும் கூட்டிக் கொண்டே வந்தது. கல்விக்காக 1911-1912ஆம் நிதியாண்டில் 1,35,65,102 ரூபாயை ஒதுக்கிய அரசு, 1912-1913ஆம் நிதியாண்டில் அதனை 2,16,87,896 ரூபாயாக உயர்த்தியது.
1915 ஆம் ஆண்டில் தோல்தொழில் தொடர்பான படிப்பும், 1916இல் சென்னைத் தொழிற் பள்ளியும் (Madras Trades School) தொடங்கப்பட்டன. அந்தத் தொழிற்பள்ளியே வளர்ச்சியடைந்து, பிற்காலத்தில் பல்தொழில் கல்வியகமாக (Polytechnic ) நாடெங்கும் உருப்பெற்றது.
1913ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலைக் கழகம் வெளிக்கொண்டு வந்த தமிழ்ப் பேரகராதிக்கு (Tamil Lexicon) ஒப்புதலும், நிதியுதவியும் அரசினால் வழங்கப்பட்டன. மேலும் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கென்று தனியாக ஒரு பெரிய நூலகம் கட்டப்பெறுவதற்கும் அரசு ஊக்கம் அளித்தது. பார்ப்பனர்கள் தாங்கள் மட்டுமே பொத்திப் பொத்தி வைத்துப் படித்த நூல்களையயல்லாம், நூலகங்களுக்குள் கொண்டு வந்து, அனைவருக்கும் பொதுவாக்கிய கல்விப் புரட்சியை யார் செய்தாலும் நாம் பாராட்டத்தானே வேண்டும்.
அதைத்தான் செய்தனர் அய்யா பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் !