எல்லை மீறுகிறார் ஆர்.எஸ்.எஸ் துணைவேந்தர்

‘பெரியாரின் போர்க்களங்கள்’ ‘மெக்காலே பழமைவாதக் கல்வியின் பகைவன்’ என்ற நூல்களை எழுதியதற்காக சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் சுப்பிரமணிக்கு பல்கலை துணைவேந்தர் ‘மெமோ’ அனுப்பியுள்ளார்.

பெரியார் குறித்து நூல் எழுதியதற்காக, சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியருக்கு மெமோ வழங்கியதற்கு, பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சேலம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. சேலம் உள்பட 4 மாவட்டங்களைச் சேர்ந்த கலை, அறிவியல் கல்லூரிகள் இணைவு பெற்று செயல்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக சமயம் சார்ந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தமிழக அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு ஆதரவாகவும் நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், பெரியார் குறித்து நூல் எழுதியதற்காக, பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம், அங்கு பணிபுரிந்து வரும் பேராசிரியருக்கு மெமோ வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை இணை பேராசிரியரான சுப்பிரமணி, அங்குள்ள பெரியார், அண்ணா, கலைஞர் ஆய்வு மையங்களின் இயக்குநராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். சமீபத்தில் இவரை, பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக உயர்கல்வித்துறை நியமித்தது. பெரியாரின் போராட்டங்கள் தொடர்பாக இவர் எழுதிய `பெரியாரின் போர்க்களங்கள்’ என்ற புத்தகம் கடந்த ஆண்டு வெளியானது.

தொடர்ந்து, ஏற்கனவே இவர் எழுதிய “மெக்காலே ‘பழமைவாதக் கல்வியின் பகைவன்’” என்ற நூலின் மறுபதிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. நிர்வாக அனுமதி பெறாமல், இந்த நூல்களை எழுதியதற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு சமீபத்தில் பல்கலைக் கழக நிர்வாகம் பேராசிரியர் சுப்பிரமணிக்கு மெமோ வழங்கியது. கலை, இலக்கியம், அறிவியல், கல்வியியல் மற்றும் கலாச்சாரம் குறித்த கட்டுரைகள், நூல்கள் வெளியிட எந்தவித முன் அனுமதியும் பெறத் தேவையில்லை என்ற விதி உள்ளது. ஆனால், பெரியார் குறித்த புத்தகம் எழுதியதற்காக பேராசிரியருக்கு மெமோ வழங்கப்பட்டிருப்பது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பல்வேறு தரப்பினர், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். விசிக பொதுச் செயலாளர் வன்னிஅரசு வெளியிட்டிள்ள அறிக்கையில், “பேராசிரியர் பணி என்பது மாணவர்களுக்கு வகுப்பெடுப்பது, வாசிப்பது, எழுதுவது தான். தற்போது அதையே செய்யக்கூடாது என பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் முட்டுக் கட்டையாக இருப்பது கண்டனத்திற்குரியது,” என்று தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் துணைவேந்தர் அத்துமீறல் - கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டனம்

கழகத் தலைவர் இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

kolathoor mani 377பேராசிரியர் சுப்பிரமணி சேலம் பல்கலையில் பெரியார், அண்ணா, கலைஞர் இருக்கையின் தலைவராக உள்ளார். இதழியல் துறை பேராசிரியரும் கூட. தமிழ்நாடு அரசு அண்மையில் அவரை சிண்டிகேட் உறுப்பினராக நியமித்துள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜெகநாதன் என்ற ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளரை துணைவேந்தராக நியமித்துள்ளார். அவர் பல்கலை வளாகத்தையே ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக மாற்றிவருகிறார். ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான ‘அகில இந்திய வித்தியார்த்தி பரிசத்’ அமைப்பில் சேருங்கள் என்று விளம்பரப் பலகை மட்டும் வளாகத்தில் மாட்டப்பட்டுள்ளது. இதற்கு துணைவேந்தர் அனுமதி வழங்கியுள்ளார்.

கடந்த 25 ஆண்டுகளாக பதிப்பு துறை என்ற ஒரு துறையும் இயங்கிவருகிறது. 2008ம் ஆண்டு பெரியார் பெயரில் இயங்கும் இந்த பல்கலையில் பெரியார் இருக்கை உருவாக்கப்பட்டது. இதுவரை 60 பக்க அளவில் பெரியார் குறித்த ஒரு சிறு நூல் மட்டுமே வெளியிடப்பட்டது. வேறு எந்த நூலும் வெளியிடப்படவில்லை. பல்கலைப் பேராசிரியர்கள் பல்கலை சார்பில் பல ஆய்வு நூல்களை வெளியிடுவது வழக்கமானது தான். திருச்சி பாரதிதாசன் பல்கலையில் பெரியார் துறை தலைவராக இருந்த எஸ்.வி.ஆர் பேராசிரியர் சக்குபாய் பெரியார் குறித்த ஆய்வரங்குகளை நடத்தி ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளனர். எம்.அய்.டி பேராசிரியர்களான எம்.எஸ்.எஸ் பாண்டியன், முனைவர் வெங்கடாசலபதி முறையே பெரியார், பாரதி, வ.உ.சி குறித்து ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளனர். இதற்கெல்லாம் பல்கலை துணைவேந்தரிடம் முன் அனுமதி பெற தேவையில்லை. துணைவேந்தர் ஜெகநாதன், பேராசிரியர் சுப்பிரமணி உரிய அனுமதி பெறவில்லை என்று காரணம் கூறுகிறார். பெரியார், மெக்காலே குறித்த ஆய்வுகள், இதழியல் சார்ந்தவை, இதழியல் சார்ந்த வெளியீடுகளுக்கு முன் அனுமதி பெறத் தேவையில்லை என்று பல்கலை விதிகள் தெளிவாக்குகிறது.

ஆர்.எஸ்.எஸ் கொள்கை எதிரிகளாக ஆபத்தான 5 பேரில் மெட்டீரியலிஸ்ட் (பொருள்முதல்வாதம், கடவுளை மறுப்போர்) மெக்காலே ஆகியோரும் அடங்குவர். அந்தக் கண்ணோட்டத்தில் தான் துணைவேந்தர், முறைகேடாக பல்கலை விதிகளுக்கு நேர்முரணாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். பெரியார் பெயரில் இயங்கும் பல்கலையில் பெரியார் இருக்கையின் தலைவராக இருக்கும் பேராசிரியர் பெரியார் பற்றிய வரலாற்றை இதழியல் கண்ணோட்டத்தில் எழுதுவதற்கு தடை போடுவது என்பது வன்மையான கண்டனத்திற்குரியது, தமிழ்நாடு உயர்கல்வித்துறை இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கழகத் தலைவர் கூறினார்.

பெரியார் பல்கலை துணைவேந்தருக்கு இராமதாஸ் கண்டனம்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: சமூக அநீதிக்கும், மூட நம்பிக்கைகளுக்கும் எதிராக தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள் மற்றும் அவற்றின் பயனாக ஏற்பட்ட சமூக மாற்றங்கள் ஆகியவற்றை தொகுத்து ‘பெரியாரின் போர்க்களங்கள்’ என்ற தலைப்பில் நூல் வெளியிட்டதற்காக இரா.சுப்பிரமணி என்ற பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. அவர், இதழியல் துறை இணைப் பேராசிரியராகவும், பெரியார் இருக்கையின் பொறுப்பு இயக்குநராகவும் உள்ளார்.

மக்கள் நலன் மற்றும் சமத்துவத்தை ஏற்படுத்தவே பெரியாரின் போராட்ட வரலாறுகளை தொகுத்திருக்கிறார். அதை பாராட்டுவதற்கு மாறாக அவரை பழிவாங்க பல்கலைக்கழக நிர்வாகம் துடிப்பது தவறு. இது தந்தை பெரியாருக்கு எதிரானது. பெரியார் பெயரிலான பல்கலை நிர்வாகிகளாக இருந்து கொண்டு, பெரியாருக்கு எதிராக செயல்படும் இவர்கள் யாருடையாக கருவிகளாக இருப்பார்கள் என்ற ஐயம் எழுகிறது. எனவே பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அந்த பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

- பெ.மு. செய்தியாளர்

Pin It