தந்தை பெரியார் அவர்கள் ஊட்டிய பகுத்தறிவு நம்மை நாம் திருத்திக் கொள்வதற்கும் மற்றவர்களைத் திருத்து வதற்கும் பயன்படுத்துவதற்கேயாகும். 1926 முதல் அவர் ஊட்டிய பகுத்தறிவினால் அவருடைய தொண்டர்களும் மற்றும் பொதுமக்களுள் சிலரும் எதையும் பகுத்தறிந்து பார்க்கும் கண்ணோட்டத்தைப் பெற்றனர். ஆனால் பெரியார் மேற்கொண்ட எண்ணற்ற வேலைத் திட்டங்களால் மனித உணர்வையும் மான உணர்வையும் பெற்ற நாம், இதுவரை செய்த செயல்பாடுகளால் எதில் எதில் உண்மையாகவே கோரிய பலனைப் பெற்றிருக்கிறோம் என்று மதிப்பீடும் அளவீடும் செய்தோமா என எண்ணிப் பார்க்கக் கடமைப்பட்டிருக் கின்றோம்.
இயக்கம் பற்றி இப்படி எண்ணிப் பார்க்க வேண்டும்; அதற்கு அனுமதி கொடுங்கள் என 1971 மார்ச்சில் பெரியாரிடம் நான் ஒப்புதல் பெற்றேன். அந்த ஒப்புதலின்படி “திருச்சி மாவட்ட - தஞ்சை மாவட்ட தி.க. தொண்டர்கள் கருத்தரங்கு” என்கிற ஒரு சிறப்பு நிகழ்ச்சியை 1971 ஏப்ரல் 3, 4 தேதிகளில் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் நாகம்மையார் கட்டடத்தில் 300 தோழர்களைக் கூட்டி நடத்தினோம். அக்கருத்தரங்கில் 64 பேர் இயக்கத்தின் தவறான போக்கைக் கண்டனம் செய்து பேசினர். நீடாமங்கலம் அ. ஆறுமுகம் மற்றும் இருவர் அந்தக் கருத்தரங்கு, மணியம்மையார்க்கும் வீரமணிக்கும் விரோதமாக நடத்தப்படுகிறது என்று ஏற்பட்டாளர்களுக்கு உள்நோக்கம் கற்பித்துப் பேசினர். அதை முடித்து வைக்க வேண்டும் என்றும் ஏற்கெனவே தந்தை பெரியாரிடம் ஒப்புதல் பெற்றிருந்தோம். அவரும் மனமுவந்து வருகை தந்தார்.
அக்கருத்தரங்கை முடித்து வைக்கும் நிகழ்ச்சியைத் தொடங்கியவுடன், முதலில் யாரையாவது பேசச் சொல்லுங்கள் என்று பணித்தார். தஞ்சை இரா. இராசகோபால், திருத்துறைப்பூண்டி வங்கிச் செயலாளர் இரா. கணபதி ஆகியோரைப் பேச வேண்டினேன்.
கணபதி பேசும்போது, “நாம் பகுத்தறிவுவாதிகள், நம்மை நாம் சுயவிமர்சனம் செய்து கொள்வது எப்படிச் சரியாகும்? இதற்குத் தந்தை பெரியார் எப்படி அனுமதி கொடுத்தார்” என்று காட்டமாகப் பேசினார். பெரியாரின் முகம் சுளித்தது. எனக்குப் பகீர் என்று ஆயிற்று.
பெரியார் அந்த இடத்துக்கு வரும் வரையில் பேசப்பட்ட செய்திகளை எல்லாம் நிரல்படுத்தி, ஓர் அறிக்கையாக எழுதி அவரிடத்தில் தந்திருந்தேன். அவர் அதை முழுவதுமாகத் தனிமையில் படித்துவிட்டுத்தான் கட்டிலில் வந்தமர்ந்தார்.
பெரியார் அவர்கள், “இந்த ஏற்பாட்டைச் செய்தவர்களை மனமாரப் பாராட்டுகிறேன், இதை 5, 6 ஆண்டுகளுக்கு முன்னாலேயே செய்திருக்க வேண்டும். இனிமேல் எல்லா மாவட்டங்களுக்கும் சென்று இப்படிப்பட்ட விவாதங்களை இவர்கள் செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டுத் தொடர்ந்து உரையாற்றினார்.
இதை நான் இப்போது குறிப்பிடுவதற்குக் காரணம் தந்தை பெரியார் காப்பாற்றித் தந்த கல்வியில் வகுப்புவாரி உரிமை, வேலையில் வகுப்புவாரி உரிமை என்பது பற்றியும்; அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என 1969இல் அவர் முன்வைத்த கோரிக்கை பற்றியும், வருணாசிரமப் பாதுகாப்பு ஒழிப்புப் பற்றியும், சுயமரியாதைத் திருமணத்துக்குச் சட்டப் பாதுகாப்பு பற்றியும் நாம் எந்த எந்த அளவில் வெற்றி பெற்றிருக்கிறோம். உண்மை யில் அது வெற்றியா எனச் சிந்தித்தோமா? - அப்படிச் சிந்திக்க வேண்டாமா என்பதை உணர்த்துவதற்காகத் தான், 1. தந்தை பெரியார் காலத்தில் தி.மு.க. ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 31 விழுக்காடும் பட்டியல் வகுப்பாருக்கு 18 விழுக்காடும் பெற்றுத் தந்தார். மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி தனிப் பட்ட முறையில் மேற்கொண்ட அறிவார்ந்த முயற்சி யால் - 19.8.1979 முதல் 7.10.1979 வரை அ.தி.மு.க. ஆட்சிக்குக் கொடுத்த அழுத்தத்தால் பிற்படுத்தப்பட்டோருக் கான 31 விழுக்காடு 1.2.1980இல் 50 விழுக்காடாக உயர்த்திப் பெறப்பட்டது. 1989இல் தி.மு.க. ஆட்சியில் பட்டியல் பழங்குடி வகுப்புக்குத் தனியாக ஒரு விழுக்காடு ஒதுக்கித் தரப்பட்டது. 1992 வரையில் தமிழ் நாட்டில் மட்டும் 69 விழுக்காடு இடஒதுக்கீடு தரப்பட்டது.
16.11.1992இல் மண்டல் குழு பரிந்துரையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, “இடஒதுக்கீட்டுக்கான மொத்த அளவு 50 விழுக்காட்டுக்குக் குறைவாகவே இருக்க வேண்டும்” என்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் அமலில் இருக்கும் 69 விழுக் காடு இடஒதுக்கீட்டுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை மை ஏற்பட்டது. இதைப் பாதுகாப்பதற்கென்று திராவிடர் கழகம் வரைந்தளித்த சட்டவரைவை அ.தி.மு.க. ஆட்சி நிறைவேற்றியது. அது நாடாளுமன்றத்திலும் நிறை வேற்றப்பட்டு, அரசமைப்புச் சட்டத்தின் 9ஆவது அட்ட வணையில் வைக்கப்பட்டது. அதுவே போதிய பாது காப்பு என்று எல்லோரோலும் நம்பப்பட்டது. அந்தச் சட்டத்தை எதிர்த்து சென்னையில் உள்ள மேல்சாதி வழக்குரைஞர் தொடுத்த வழக்கினால், 1994 முதல் மருத்துவக் கல்லூரிகளில் முதலில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு இருப்பதாக நினைத்து இடங்களைப் பிரித் தளித்த பிறகு, மொத்த இடஒதுக்கீடு 50 விழுக்காடாக மட்டும் இருந்தால் பொதுப் பிரிவினருக்கு எத்தனை இடங்கள் கிடைக்குமோ அத்தனை இடங்களை ஒவ்வோ ராண்டும் உண்டாக்கி அவர்களுக்குத் தரவேண்டும் என உச்சநீதிமன்றம் 1994இல் தீர்ப்பளித்தது. மருத்துவப் படிப்பில் அது நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனால் மருத்துவப் படிப்பில் 19% இடங்கள் கூடுதலாகப் பொதுப் பிரிவினருக்கு ஒவ்வோர் ஆண்டும் தந்தே தீர வேண் டியதாயிற்று. தமிழ்நாட்டில் அதே இடஒதுக்கீட்டு நடை முறையைப் பொறியியல் கல்லூரிகளின் சேர்க்கை யிலும் பின்பற்ற வேண்டும் என 2004இல் உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது. எனவே அதுவும் பின்பற்றப்படு கிறது. 69 விழுக்காடு செல்லாது என்று தொடுத்த மூல வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இடஒதுக் கீட்டில் உண்மையான அக்கறையுள்ள எல்லோரும் இவையெல்லாம் சரிதானா என்று ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோமா என்றால், இல்லை.
மேலும் 16.11.1992இல் அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி மய்ய அரசின் வேலைகளிலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கும்போது அவர்களுள் பொருளாதாரத்தில் வளர்ந்த பிரிவினரை நீக்கி விட்டுத்தான் மற்றவர்களுக்கு இடஒதுக்கீடு தர வேண்டும் என்று கூறியது. பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் ஓரவஞ்சனையாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த ஏற்பாட்டை இந்திய அரசு நீக்க வேண்டும் என்று கூறுகிறோமே அல்லாமல், அதை நீக்குவதற்கு இந்திய அரசு என்ன செய்ய வேண்டும்; எப்படிச் செய்ய வேண்டும் என்பதில் எந்த முன்னெடுப்பையும் நாம் செய்யவில்லை. இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வாக “100 விழுக்காடு இடங்களையும் எல்லா வகுப்புகளுக் கும் பங்கிட்டுக் கொடு! பொதுப் போட்டிக்கான இடங்கள் என்பதை நீக்கிடு” என 1993 திசம்பரில் கோரிக்கை வைத்து அன்று முதல் தொடர்ந்து பாடுபடுகிற மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி பற்றிச் சிந்திக் கவும் ஆய்வு செய்யவும் எவரும் முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை.
இந்தச் சூழலில் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக வந்த கே.ஜி. பாலகிருஷ்ணன், பதவி ஏற்ற உடனேயே பட்டியல் வகுப்பினரிலும் பழங்குடியினரி லும் உள்ள வளர்ந்த பிரிவினரை நீக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தார். நாடு முழுவதிலும் உள்ள பட்டியல் வகுப்பாரும் பழங்குடியினரும் கொதித்தெழுந்து அம்முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போதைக்கு அது அடங்கிற்று.
இப்போது இந்திய அரசின் சட்டத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவரும் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவருமான ஒ.பி. சுக்லா என்பவர் 23.8.2011இல் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக் கொன்றைத் தொடுத்து, “பட்டியல் வகுப்பினரிலும் பழங்குடியினரிலும் உள்ள பொருளாதாரத்தில் வளர்ந்த பிரிவினரை நீக்கி விட்டுத்தான் அவர்களுக்கு இடஒதுக் கீடு வழங்க வேண்டும்” எனத் தீர்ப்பளிக்கக் கோரி முறையீடு செய்துள்ளார். ஏற்கெனவே 1965இல் அமர்த்தப்பட்ட லோக்கூர் குழு அப்படிக் கூறியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆழ் கிணற்றில் 50 அடிக்குக் கீழே கிடக்கிற பிற்படுத்தப் பட்டோருக்கே பொருளாதார வரம்பு கூடாது என்கிற போது, 100 அடி ஆழத்தில் கிடக்கிற பட்டியல் வகுப்பாருக்கும் பழங்குடியினருக்கும் அதே பொருளாதார அளவுகோல் வந்தே தீரவேண்டும் என்பது கொடு மையிலும் கொடுமையானதாகும்.
இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு என்ன என்பது பற்றி நாம் பகுத்தறிந்து பார்ப்போமானால் இந்திய அரச மைப்புச் சட்டத்தில் உள்ள விதிகள் 15(4), 16(4), 16(4)(B), இவற்றை அடியோடு திருத்தி - கல்வியிலும் வேலையிலும் இந்திய அரசிலும் மாநில அரசுகளிலும் மொத்தம் உள்ள 100 விழுக்காடு இடங்களையும்,
(1) இந்து மற்றும் சிறுபான்மை வகுப்புகளைச் சேர்ந்த முற்பட்ட வகுப்பினர்
(2) பட்டியல் வகுப்பினர்
(3) பழங்குடி வகுப்பினர்
(4) இந்து மற்றும் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த பிற்பட்ட வகுப்பினர்
ஆகியோருக்கு அவரவர் மக்கள் தொகையின் எண் ணிக்கை விழுக்காட்டின் அளவுக்கு ஒதுக்கீடு செய்ய சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்வதுதான் பகுத் தறிந்து பார்க்கும் ஒவ்வொருவருக்கும் புலப்படும். அதை நாம் செய்ய வேண்டும்.
அப்போதுதான் 01.11.2008 கணக்குப்படி இந்திய அரசின் முதல்நிலைப் பதவிகளில் மக்கள் தொகையில் வெறும் 17.5 விழுக்காடு உள்ள முற்பட்ட சாதியினர் 77 விழுக்காட்டு இடங்களைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத் துவது இன்னும் பத்தாண்டுகளில் ஒழியும், அவர்களே 2ஆம் நிலைப் பதவிகளில் 78 விழுக்காடு அளவு பெற்று ஆதிக்கம் பெற்றிருப்பது விரைவில் ஒழியும். இக்கோரிக்கையை யார் முன்வைத்தாலும் இக்கோரிக் கையில் உண்மையான அக்கறை உள்ள ஒவ்வொரு வரும் இதை வெற்றி பெற வைக்க ஒரே வழியாகும்.
இடஒதுக்கீட்டில் நாம் கோரியதை அடைவதற்கு முன்னாலேயே, சட்டப் படிப்பு, பொறியியல் படிப்பு, மருத்துவப் படிப்பு ஆகிய எல்லாவற்றுக்கும் இந்திய அளவில் பொதுத் தேர்வு எழுதித்தான் சேர வேண்டும் என்றும்; வழக்குரைஞர் பட்டம் பெற்றவர்கள் வழக் குரைஞர் ஆகப் பணியாற்றுவதற்கு இன்னொரு தேர்வு எழுத வேண்டும் என்றும்; மருத்துவர் பட்டம் பெற்றவர்கள் மருத்துவராகப் பணியாற்றுவதற்கென்று பட்டயத் தேர்வு எழுத வேண்டும் என்றும் இந்திய அரசின் கல்வித் துறை, அமைச்சர் தானடித்த மூப்பாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக அறிவிப்புச் செய்து வருகிறார்.
மருத்துவப் பட்டப் படிப்புக்கு இந்தியா முழுவதிலும் உள்ள மொத்த இடங்கள் 35 ஆயிரம் மட்டுமே. இதற்கு அனைத்திந்திய அளவில் நுழைவுத் தேர்வு வைத்தால் இந்தியிலும் ஆங்கிலத்திலும் நுழைவுத் தேர்வு எழுதி மேல்சாதிக்காரர்களும் இந்திக்காரர்களும் மட்டுமே 25 ஆயிரம் இடங்களைக் கைப்பற்றிக் கொள்வார்கள். நாம் பெற்றுள்ள இடஒதுக்கீட்டு ஆணைகளால் நாக்கை வழித்துக் கொள்ள வேண்டியதுதான்.
மருத்துவக் கல்விக்கு அனைத்திந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்துவதைக் கண்டித்து, மாண்பு மிகு தமிழக முதலமைச்சர் செயலலிதா இந்திய அரசுக்கு மடல் எழுதியுள்ளார். அவரை அடுத்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும், குஜராத் முதல மைச்சர் நரேந்திர மோடியும் இந்திய அரசைக் கண்டித்து மடல் எழுதியுள்ளனர். இவர்களை நாம் மனமாரப் பாராட்ட வேண்டும். நாம் வெகுமக்களிடமும் இளைஞர் களிடமும் மாணவர்களிடமும் இக்கொடுமையை எடுத்துச் சொல்லி அவர்கள் தெருவுக்கு வந்து போராடச் செய்ய வேண்டும்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், “தந்தை பெரியார் தொடங்கி வைத்த சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகச் சட்டம் செய்வேன்” என்று முதல மைச்சர் அறிஞர் சி.என். அண்ணாதுரை 7.6.1967 அன்று தந்தை பெரியார் முன்னிலையில் திருச்சி பெரியார் மாளிகையில் நடந்த திருமணத்தில் அறிவிப்புச் செய்தார். அதை நிறைவேற்றத்தக்க வகையில், 1968 இலேயே சட்டம் செய்தார். அந்தச் சட்டம் நடப்புக்கு வந்து இன்று 43 ஆண்டுகள் ஆகிவிட்டன. சட்டம் நிறைவேற்றப்பட்டது மாபெரும் சாதனை என்று பெருமை பேசிக் கொண்டிருக்கும் நாம், 43 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் நடக்கிற 100 திருமணங்களில் எத்தனைத் திருமணங்கள் சுயமரியாதைத் திருமணம் எனக் கணக்கெடுத்தோமா? தி.மு.க. ஆட்சியோ, அ.தி.மு.க. ஆட்சியோ, சமூக ஆய்வு நிறுவனங்களோ, திராவிடர் கழகமோ, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியோ, பெரியார் திராவிடர் கழகமோ, பகுத்தறிவாளர்கள் கழகமோ சொந்தப் பொறுப்பில் கணக்கெடுப்புச் செய்ததா என்றால் இல்லை.
பொத்தாம் பொதுவில், தந்தை பெரியாரின் சுயமரியாதைத் திருமண முறையை வியந்து பேசி மன நிறைவடைந்து நம் மன அரிப்பைத் தீர்த்துக் கொள்ளுகிறோம். இதில் குறிப்பிடத்தகுந்த அளவு முன்னேற்றம் அடைந்தோமா என்று சிந்தித்தோமா என்றால் இல்லை. பெரியார் குறிப்பிட்டபடி அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவர் முன்னிலையிலோ ஊராள்வோர் (V.A.O.) முன்னிலையிலோ இரண்டு சான்றினருடன் பதிவு செய்து கொள்ளும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்பதை நாம் மனம் கொண்டோமா என்றால் இல்லை. உரிமையியல் பற்றிய இத்தகைய சட்டத்தைச் செய்வதற்குத் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கோ வேறு மாநிலச் சட்டமன்றங்களுக்கோ அதிகாரம் உண்டா என்றால் இல்லை.
மூன்றாவதாக, பெரியார் அவர்கள் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற போராட்டத்தை 1969இல் அறிவித்த உடனேயே, அன்றைய தி.மு.க. அரசு முன்வந்து உரிய சட்டத்தை இயற்றியது. பார்ப்பனர்கள் அதை எதிர்த்து வழக்குத் தொடுத்தனர். அதனால் ஏற்பட்ட தடையை நீக்கும் தன்மையில் மீண்டும் ஒரு சட்டத்தை தி.மு.க. அரசு 2006இல் நிறைவேற்றியது. அப்படி நிறைவேற்றிய போது வழக்கச் சட்டம், பழக்கச் சட்டம் இவையெல் லாம் இருந்தாலும் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று குறிப்பிட்டு ஆணை பிறப்பிக்கப் பட்டது. (“In a radical move, the then DMK Government issued a government order in May 2006 declaring, that suitably trained and qualified Hindus, without ‘discrimination of caste, creed custom or usage’ were to be appointed as archakas (priests) to any of the 36000 temples administer by the HRCE department in the state.”) (G.O. dt.23.5.2006) பழக்கச் சட்டம், வழக்கச் சட்டம் இவற்றை மாற்றுவதற்கான அதிகாரம், இந்திய நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உண்டு. அதை உள்வாங்கிக் கொள்ளாமல் தமிழ்நாடு அர சாங்கம் சட்டம் செய்தது. அதன்படி 300 பேர்களுக்கு - பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடி யினர், மேல்சாதியினர் ஆகியோருக்கு அர்ச்சகர் பயிற்சி கொடுத்தது. ஆனாலும் இந்துக் கோயில்களுக்கு அர்ச்சகர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ் நாடு இந்து அறநிலையத் துறை விளம்பரப்படுத்தும் போது, “பார்ப்பனர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்” என விளம்பரப்படுத்தியது. ஏன் எனில் ஏற்கெனவே இதுபற்றி நீதிபதி மகாராஜன் குழு அளித்த அறிக்கையில் பார்ப்பனர் மட்டுமே அர்ச்சகர் ஆக முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அரசியல் சட்ட விதி 25, 26இல் உள்ளபடி வழக்கச் சட்டம், பழக்கச் சட்டம் இவற்றை மாநில அரசு மாற்ற இயலாது என்பதே உண்மையாகும். இதை நாம் எப்படி அறிகிறோம்? இதுபற்றி நாம் கவலைப்பட்டோமா?
இதைச் சரியாகப் புரிந்து 1948இலேயே கவலைப் பட்டவர் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களே ஆவார். அவர் அரசமைப்புச் சட்டக் குழுவின் தலை வராக 1947இல் பொறுப்பேற்றார். அப்போதே, ஏற்கெனவே எழுதி வைக்கப்பட்டிருந்த அரசமைப்புச் சட்டத்தின் முதலாவது வரைவு என்கிற, பி.என். ராவ் எழுதிய அரசியல் சட்ட வரைவு 17.10.1947இல் அம்பேத்கரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் வேலையில் இடஒதுக்கீடு பற்றிய விதியில் “to any class of citizens” என்றே பி.என். ராவ் எழுதியிருந்தார். அவருடைய தீய உள்நோக்கத்தை உடனே உணர்ந்த மேதை அம்பேத்கர், “to any Backward Class of citizens” என்பதைச் சேர்த்தார்.
அதேபோல் அந்த வரைவு பழக்கச் சட்டம், வழக்கச் சட்டத்தைப் பாதுகாக்கிறது என்பதை அறிந்த அம்பேத்கர், இந்தச் சட்டத்தைத் திருத்துவதற்கென்று 1948இல் அவர் முன்மொழிந்த இந்துச் சட்டத் திருத்த மசோதாவில், மிகத் தெளிவாக ஒரு திருத்தத்தை முன்மொழிந் தார். அது பின்வருமாறு அமைந்திருந்தது:
“4. Overriding effect of Code. - Save as otherwise expressly provided in this Code, any text, rule or interpretation of Hindu Law, or any custom or usage or any other law in force immediately prior to the commencement of this code shall cease to have effect in respect of any of the matters dealt within this code.”
இதன் பொருள் என்ன?
“இந்தச் சட்டத்தில் சொல்லப்பட்ட எதுவும் இந்தச் சட்டம் நடப்புக்கு வருவதற்கு முன்னால் இந்துச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிற எந்தச் சட்ட வாசகமும், விதியும் அல்லது சட்ட விளக்கமும் அல்லது எந்தப் பழக்கமும் எந்த வழக்கமும் அல்லது இந்தச் சட்டத் துக்கு முன்னால் இருந்த எச்சட்டமும் இந்த இந்துச் சட்ட மசோதா நடப்புக்கு வந்த பின்னர் செல்லுபடியாகாது.”
அம்பேத்கரின் இந்தத் திருத்தத்தை எதிர்த்தவர் பாபு இராசேந்திர பிரசாத். அடுத்ததாக அதை எதிர்த்தவர் காஞ்சி மறைந்த சந்திர சேகரேந்திர சரசுவதி ஆவார். அவரே வென்றார்.
அரசமைப்புச் சட்ட விதிகள் 13, 19, 25, 26, 372(1) இவற்றில் “பழக்கச் சட்டம்”, “வழக்கச் சட்டம்” (Custom and Usage) என்பதற்குக் கெட்டியான பாதுகாப்பு இருக்கிறது. இது இந்துக்கள், பார்சி, பவுத்தர், சீக்கியர் ஆகியோரைக் கட்டுப்படுத்துகிறது. மேலே கண்ட ஐந்து விதிகளில் உள்ள இந்தப் பாதுகாப்பை டாக்டர் அம்பேத்கர் முன்மொழிந்த சட்டத் திருத்தத்தைப் போன்ற ஒரு விதியை அரசமைப்புச் சட்டத்தில் சேர்ப்பதன் மூலமே - நால்வருண வேறுபாட்டை ஒழிக்க முடியும். அதன்படி உரிமை மறுக்கப்பட்டோருக்கு அப்போதுதான் உரிமை வந்து சேர முடியும். பகுத்தறிவாளர் ஒவ்வொருவருக்கும் இந்தப் புரிதல் வரவேண்டும் என விரும்புகிறோம்.